2010 ஆம் ஆண்டின் புத்தாண்டு பரிசாக கலைஞர் அரசு இளைஞர்களுக்கு சாட்டையடியை கொடுத்துள்ளது. தமிழகத்தில் எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதை யாரும் கேட்காமல் தானே யோசித்து அமலாக்கம் செய்யும் திமுக அரசு “ஒக்காந்து யோசித்து” போட்டுள்ள அரசாணை அப்படிதான் உள்ளது.

தமிழகத்தில் அரசுத்துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் ஒப்பந்த கூலி அடிப்படையில் வேலைகளில் அமர்த்தாலாம் என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கிட்டதட்ட 62 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கும் போது இந்த அறிவிப்பு அவர்களது தலையில் பேரிடியாக இறங்கி உள்ளது. இப்படி ஓய்வு பெற்றவர்களை மீண்டும் ஒப்பந்த கூலி அடிப்படையில் வேலைக்கு அழைப்பது மறைமுகமான வேலை நியமன தடை சட்டத்தை அமலாக்கம் செய்வதற்கு ஒப்பாகும்.

தங்கள் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலைக்கொடுப்பதக மார்தட்டும் திமுக அரசின் இந்த அறிவிப்பு தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை கேவலப்படுத்துவதாக உள்ளது. தமிழக அரசில் உள்ள இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யாமல் அத்துக்கூலி முறையில் வேலைக்கு ஆட்களை எடுப்பதன் நோக்கம் என்ன? இதுதான் இந்த அரசின் இளைஞர்கள் சம்பந்தமான வேலைவாய்ப்பு கொள்கையா? நிரந்தரப்பணிகளை உலகமய தாளத்திற்கு ஏற்ப ஒழித்திட இந்த ஆணை முதல் படியா?

கடந்த ஆண்டுக்கு முன் தமிழகத்தில் உள்ள பன்ரென்டாயிரத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்களில் அய்யன் திருவள்ளுவர் நூலகம் துவக்கப்பட்டபோது, அத்துனையாயிரம் பணிகளுக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமித்து நூலகத்தை பாதுகாக்கும் திறமைகூட தமிழக இளைஞர்களுக்கு இல்லை என சொல்லாமல் சொன்னதும் இதே திமுக அரசுதான். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஒப்பந்த கூலி அடிப்படையில்  gt;170 ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த கூலி அடிப்படையில் இணைத்ததும் இவர்கள்தான்.

தாங்கள் ஆட்சிக்கு வந்த பின் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாகி உள்ளதாக கூறும் அரசின் கூற்று உண்மையானதல்ல. மாறாக ஒப்பந்த கூலி முறையில் பணிநியமனம் செய்தவர்களையெல்லாம் இந்த கணக்கில் கொண்டு வந்துள்ளனர். ஆக உண்மையில் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை தீர்த்திட ஆட்சியாளர்கள் தயாரில்லை.

ஆனால் நகர்ப்புறம், கிராமப்புறம் என்று வேறுபாடில்லாமல் தமிழக இளைஞர்களின் வாழ்வியல் நிலை மிகவும் மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மத்திய மாநில ஆட்சியாளர்களின் உலகமய கொள்கையின் தவிர்க்கமுடியாத தாக்கத்தின் விளைவாக கிராமப்புற வேலைவாய்ப்பு முற்றிலும் அழிக்கப்பட்டு நகர்ப்புறத்தை நோக்கி இளைஞர்கள் துரத்தப்படுகின்றனர். அப்படி நகர்புறத்தில் இளைஞர் கூட்டம் குவிந்து போவதால் வேலையை தேடும் இளைஞர்களும், வேலையில் உள்ள தொழிலாளிக்கும் தங்களது பேரம் பேசும் உரிமையை இழக்கும் நிலை உருவாகி உள்ளது. “சமூக பாதுகாப்பான வேலை” என்பது சமூக இயக்கங்களின் வார்த்தைகளில் மட்டுமே இருக்கிறது. எவ்வித பாதுகாப்பும் அற்ற வேலைகளில் இளைஞர்கள் சிக்கி த விக்கின்றனர்.

ஆளும் கட்சியை சார்ந்த மந்திரிகள் மற்றும் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் மாவட்டம் மாவட்டமாக சென்று வேலைவாய்ப்பு முகாம் என்ற பெயரில் பிரும்மாண்டமான மேளாக்களை நடத்துகின்றனர். அதுவும் நமது ஊடகங்களில் ஏதோ அந்த இளைர்களுக்கு வாழ்க்கையில் ஒரு பொன்னான வாய்ப்பு கிடத்ததைப்போல சித்தரிக்கின்றன. ஆனால் வேலைவாய்ப்பு மேளாக்களில் நகை கடைக்கும், பைனான்ஸ் கம்பெனிக்கும் ஆள் எடுக்கும் கூத்து நடத்தியதை கடலூர் மாவட்ட மக்கள் பார்த்து நகைத்து சென்றனர்.

எனவே தமிழக அரசு பிரச்சனைகளை குறுக்கு வழியில் திசைதிருப்புவதை விடுத்து, தமிழக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வேலைக்காக காத்திருக்கும் இளஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஆக்கபூர்வமான பணிகளை செய்திட வேண்டும். அரசு காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வது, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிப்பது, கிராமப்புற நூறுநாள் வேலை உறுதி சட்டத்தை சரியான முறையில் அமலாக்கம் செய்வது, சுயத்தொழில் துவக்க உதவி செய்வது என்ற வழியில் செல்லவேண்டும். இல்லையெனில் “சாலையோரத்தில் வேலயற்றதுகள், வேலையற்றதுகள் மூளையிலே விபரீத எண்ணங்கள்” என்று அறிஞர் அண்ணா சொன்ன விபரீத எண்ணங்கள் ஆட்டம் போடத்துவங்கும். அது சமூக அமைதியை கெடுத்திடும் என்பது திண்ணம்.

- இளைஞர் முழக்கம் ஆசிரியர் குழு

Pin It