சமூக மாற்றம் இல்லாமல் அரசு பின் பற்றும் கொள்கை மாறாது. கொள்கை மாறாமல் வேலை வாய்ப்பை அரசு உத்தர வாதம் செய்யாது. எனவே தான் இன்றைய முதலாளித்துவ நெருக்கடிக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமூகப் பிரச்சனைகள் தீர்க்கப் பட வேண்டும் என்றாலே, தற்போதைய முதலாளித்துவ நிலப் பிரபுத்துவ அமைப்பு முறை மாற வேண்டும் என்பதை டி.ஒய்.எஃப்.ஐ வலியுறுத்துகிறது.

படித்த மற்றும் படிக்காத, திறன் கொண்ட மற்றும் திறன் பெற வேண்டிய என அனைத்துப் பிரிவினருக்கும் வேலை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுப்பது கொள்கையாக்கப் பட வேண்டும். பிழைப்புக்கான அல்லது உயிர் வாழ்வதற்கான ஊதியம் என்ற நிலையில் இல்லாமல், சமூகத்தில் வாழ்வதற்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பெறுவதற்கு வசதி கொண்ட ஊதியம் மற்றும் தொழிலாளர் என்ற அந்தஸ்த்தை உருவாக்குவதாக இத்தகைய வேலைவாய்ப்பு இருக்க வேண்டும். இதற்கான சாத்தியம் கிராமப் புறங்களில் இருந்து துவங்கப் பட வேண்டும்.

ஒன்று நிலச் சீர்திருத்தம் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகும். இன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் துவங்கப் பட்டாலும், ரியல் எஸ்டேட் தொழில் துவங்கப் பட்டாலும், நிலக் குவியலுடன் இணைந்தே செயல் படுகிறது. பழைய நிலப் பிரபுக்களிடம் இருந்து, புதிய முதலாளிகளிடம் நிலம் குவிக்கப் படுகிறது. இத்தகைய நிலக்குவியல் பெருமுதலாளித்துவமயம் அல்லது நிறுவனமயமாவது என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். இச்செயல் கிராமப் புற வேலை வாய்ப்பை அழித்து இடம் பெயரச் செய்வதுடன், உணவுப் பஞ்சத்தையும் கொணருகிறது. எனவே நிலச்சீர்திருத்தம் மூலம் நிலமில்லா விவசாயத் தொழிலாளருக்கு நிலம் கிடைப்பதும், அதன் மூலமாக கிடைக்கும் உறுதியான வருமான மும், குறைந்த பட்ச வாழ்க்கை உத்திரவாதத்தைக் கொடுக்கும். இதன் காரணமாக கிராமப் புறத்தில் வாங்கும் சக்தி அதிகரிக்கும். பொருள்: வாங்குவோரின் எண்ணிக்கை கோடான கோடி உயரும் போது, தேங்கி நிற்கும் உற்பத்திகள் விற்பனை ஆவதும், இப்போதைய அடிப்படைத் தேவைகளுக்கான பொருள் உற்பத்தி அதிகரிப்பதும் நடைபெறும்.. அது புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும்.

இரண்டு அரசு மற்றும் பொதுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதாகும். இன்று நமது நாட்டில் சுமார் 40 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது. உலகமயமாக்கல் கொள்கை துவங்கிய பின்னர் பெரும் எண்ணிக்கையிலான ஆளெடுப்பு சம்பவங்களை பார்க்க முடியவில்லை. எனவே மேற்படி 40 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டால், அவர்களுடைய வாங்கும் சக்தி அதிகரிக்கும் போது, அவர்களின் பயன்பாட்டிற்கான உற்பத்திப் பொருள்களும் அதிகரிப்பதும், புதிய வேலை வாய்ப்புகளைக் கொண்டுவரும்.

மூன்று, 1980களில் இருந்த மக்கள் தொகை கணக்குப் படி அரசு அலுவலகங்கள், சேவை நிறுவனங்கள் அமைந்து இருக்கின்றன. அதன் பிறகு இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது. அதற்கேற்ற புதிய அலுவலகங்களைத் துவக்குவது, அரசின் அடிப்படைக் கடமை.

நான்கு, அரசே சில பொதுத் துறை நிறுவனங்களை துவக்கிட முடியும். மிக சமீபத்தில் ஒரிசா மாநிலத்தில் இரும்பு உருக்குத் தொழிற்சாலை துவக்குவது குறித்த செய்திகள் வருகின்றன. இதை பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு முதலீடு செய்யும் வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது. 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாக கருத்துப் பிரச்சாரம் செய்யப் படுகிறது. இதை ஏன் அரசு செய்யக் கூடாது என்ற கேள்வியை அரசு எழுப்பிப் பார்ப்பதில்லை. தமிழ் நாட்டில் கஞ்ச மலை, தீர்த்தமலை ஆகியவற்றில் இரும்பு இருப்பது குறித்து எண்ணற்ற தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அரசு ஜிண்டால் நிறுவனத்திடம் பேரம் பேசுகிறதே ஒழிய, அரசு பொதுத் துறையை ஈடுபடுத்த முன்வரவில்லை. ஆகவே தான் டி.ஒய்.எஃப்.ஐ அரசே இவற்றைத் துவக்குவதில் ஆர்வம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.

ஐந்து, இவை அனைத்தையும் மேற்கொள்ள அரசிடம் பணம் ஏது என்கிற கேள்வி பெரியளவில் எழுப்பப் படுகிறது. டி.ஒய்.எஃப்.ஐ நீண்ட நெடுங் காலமாக முன்வைக்கிற அதே கருத்தை இங்கேயும் குறிப்பிட வேண்டியுள்ளது. அரசுக்கு வர வேண்டிய வருமான வரியை முறையாக வசூலித்தாலே, சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை சேகரிக்க முடியும். அதேபோல் அரசு வங்கிகளில் கடன் வாங்கித் திரும்பத் தராத பணம், பொதுத் துறை வங்கிகள் அவற்றை வாராக்கடன் எனக் குறிப்பிடுகிறது. அந்த தொகையின் அளவு சுமார் ஒன்னரை லட்சம் கோடி. இதன் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இந்திய முதலாளிகள் போட்டு வைத்துள்ள 175 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இவைகள் இல்லாத கறுப்புப் பணம் யாரும் அளவிட்டு இருக்காத பெரும் தொகையாகும். இந்த தொகைகள் அனைத்தையும் வெளிக்கொணர்ந்தால், அரசு முதலீடு செய்வதற்கு யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதை ஒரு முதலாளித்துவ அரசே செய்து விட முடியும். கம்யூனிச அரசாங்கமோ, சோசலிச சமுதாயமோ மலர வேண்டும் என்ற தேவை இல்லை. ஆனாலும் ஏன் இந்திய அரசுக்கு இந்த துணிச்சல் இல்லை. உலகில் இன்று வளர்ந்து வரும் நாடுகளில் பிரதான இடத்தைப் பிடித்துள்ள வெனிசூலா அனுபவம் இங்கே கணக்கில் கொள்ளப் பட வேண்டும். வெனிசூலாவை இன்று ஆட்சி செய்வது, ஹ¨கோ சாவேஸ் என்ற சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர். அவர் தலைமையிலான அமைச்சரவை, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அந்த நாட்டின் பெட்ரோலிய எண்ணெய்க் கிடங்குகளை அரசுடமையாக்கியது. இதற்கு முதலாளிகளும், அமெரிக்காவும் கடும் எதிர்ப்பை தெரிவித்தாலும், உறுதியாக அந்த அரசு அமலாக்கியது.

இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியது. ஆனால் மக்கள் அமெரிக்காவை நிராகரித்து, சாவேஸை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்கள். அதன் பின் நிலச்சீர்திருத்தத்தை அமலாக்கியது, கல்வி வேலை வாய்ப்பில் பல முன்னேற்றங்களைக் கொணர்ந்தது. இச்செயல்கள் அனைத்தும் முதலாளிகளை நிராகரித்து செய்யப்பட்ட முதலாளித்துவக் கட்சியின் செயல் பாடாகும். எண்ணெய் வளம் குறித்த உலகப் பட்டியலில், வெனிசூலா 5 ம் இடத்தில் இருக்கிறது. எனவே உடனடியாக வெனிசூலா, இது போன்ற சாதனைகளை நிகழ்த்த முடிந்தது, எனச் சிலர் கூறுகின்றனர். இந்தியாவிலும் கணக்கிலடங்காத வளங்கள் குவிந்து கிடக்கின்றன. இந்தியாவில் உள்ள இயற்கை வளங்களை அரசு பயன்படுத்தத் துவங்கினால், பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இந்தியாவில் கடந்த 1968இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, வங்கிகளைத் தேசியமயமாக்கிய நிகழ்ச்சியும், தமிழ்நாட்டில், கருணாநிதி முதல் முறையாக முதல்வரான போது தனியார் பேருந்துகளை அரசுடைமை ஆக்கியதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். இன்று ஏன் அந்த துணிச் சல் அதேகட்சிகளுக் கும் தலைவர்களுக்கும் இல்லை, என்பதையும் சிந்திக்க வேண்டும். இன்று முன்னுக்கு வந் துள்ள உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும், தனியார்மயமாக்கலும் ஏற்படுத்தியுள்ள தாக் கமே பிரதான காரணம். 2ஜி அலைக்கற்றையை வாங்கவே பல லட்சம் கோடிகளை இழக்கத் தயாராக உள்ள அரசுகள் தான் இன்று நமது நாட் டில் உள்ளன. எனவே இவர்களிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பது, ஏமாற்றம் அளிக்கும் செயல் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இத்தகைய வளர்ச்சிப் போக்கில் இன்று உள்ள முதலாளித்துவ அரசுகள், வெனிசூலாவின் தரத்திற்கு வாய்ப்பில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியும். ஆகவேதான் அரசியல் மாற்றத்துடன் கூடிய சமூக மாற்றம் தேவைப்படுகிறது. அது சோசலிசத்தை நோக்கிப் பயணிக்கத் தக்கதாக இருப்பது இன்றியமையாதது.

(முற்றும்)

Pin It