சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தீவிர இடதுசாரியாக எளிமையான தோற்றத்தோடு இன்றும் மக்களின் கோரிக்கைகளுக்காக களத்திலும் நீதிமன்றத்தின் படிகளிலும் குரல் எழுப்பி வரும் தோழர் நல்லக்கண்ணு அவர்களை இளைஞர் முழக்கத்துக்காக சந்தித்தோம். மணல் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போர்க்குரல் எழுப்பி வரும் தோழர் நல்லக்கண்ணு இப்பேட்டியில் தற்போதைய சமூக நிலவரங்கள் மற்றும் அதனை எதிர்கொள்வது குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

நாம் கேட்கத் தொடங்கும் முன்பே அவர் தற்போது தீவிரமாக போராடிவரும் தமிழகத்தின் மணல் கொள்ளை பிரச் சனையைப் பற்றி பேச ஆரம்பித்தார். ஜே.சி.பி எனக் கூறப்படும் மணல் அள்ளும் இயந்திரங்கள் 2001ல் கேரளாவிலும், 2006ல் கர்நாடகாவிலும் தடை செய்யப்பட்டுவிட்டன. தமிழகததில் காவேரி, பாலாறு போன்ற ஆறுகளிலும் இதைத் தடை செய்துள்ளனர். மணல் 1 மீட்டர் தான் அள்ள வேண்டும் அதாவது தரையில் இருந்து 3 அடி மட்டும் தான். ஆனால் அவ்வாறு அள்ளப்படுவது கிடையாது.

1 லாரி ஒரு நாளைக்கு ஒரு லோடு தான் அள்ள வேண்டும். அதுவும் ஒரு முறை தான் அவ்வாறு அள்ளும் போது லோடு 600 ரூபாய். வரி 26 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரே லாரி பலமுறை வெறும் 626 ரூபாய் மட்டும் வரி செலுத்திவிட்டு அளவுக்கு அதிகமாய் கொள்ளை அடிக்கின்றனர். ஒரு லோடு மணல் கேரளாவில் 23,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த மணல் மாலத்தீவு, மொரீசியஸ் போன்ற தீவுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இயற்கை வளங்களை சுரண்டுகின்றனர். அதனால் ஏற்படும் விளைவுகள் இவர்களுக்குத் தெரிவதில்லை. விளைவுகளுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளை சான்றாகக் கூறுகிறார். உயிர்க் கோலம் எனக் கூறப்படும் சூழல் இந்தியாவில் அதிகம் இருந்தன. ஆனால் தற்சமயம் குறைந்து கொண்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் 3200 நெல் வகைகளுக்கு மேல் இருந்தன. வற்றாத நதியாக பாலாறு திகழ்ந்தது. 33 ஆற்றுப்படுகைகள் இருந்தது. இப்பொழுது இதன் நிலையும் பரிதாபம் தான்.

நல்ல நீர் கடல் நீரோடு கலக்கும் போதுதான் மீன் வளம் அதிகரிக்கும். 1136 மீன் வகைகள் எண்ணூரில் மட்டும் காண முடிந்தது. சென்னை, பாண்டி, கடலூர், நாகை, பழையாரு, தூத்துக்குடி, இராமேஸ்வரம், குளச்சல் வரை மீன்வளம் நல்ல நிலையில் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் தேக்க வசதி இருந்தது இருந்தாலும் அவர்கள் இராணுவம், வரி, காவல்துறை ஆகிய மூன்று துறைகளில் மட்டுமே கவனம் செலுத்தி பொதுப்பணித் துறையை கைவிட்டனர்.

பிற்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் என்கிற பேரில் நமது இயற்கை வளங்கள் தாரைவார்க்கப்பட்டன. ஏற்றுமதி, இறக்குமதி முறையால் தான் இந்தியாவில் ஊழல் முதல் அடி எடுத்து வைத்தது. இதனால்தான் இயற்கை சுரண்டல்கள் நடந்தன.

மனிதவளம், கனிமவளம் நிறைந்து கிடக்கும் இந்த நாட்டில் அதைப் பாதுகாத்து நாம் வாழ்வதற்கு தகுந்த சூழலை ஏற்படுத்தி கொள்ள நாம் தவறவிட்டுவிட்டோம். இதைப் பயன்படுத்தி முதலாளித்துவ சுரண்டல்கள் கிராம மக்கள் மீதும், கடலோர மக்கள் மீதும் அதிகம் நடைபெற்றது. ஆகையால் இவர்கள் தாங்கள் வாழ்ந்த கிராமங்களை விட்டுவிட்டு வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர்.

மீனவர்களை அரசு பாதுகாக்காமல் கடலோர மேலாண்மை மண்டலம் என்ற பெயரில் அவர்களை காப்பாற்றாமல் பெரிய ட்ராயில் வைத்து மீன் பிடிக்கும் முதலாளிகளை ஆதரிக்கிறது. அந்நிய முதலாளிகள் மலைகளில் கிரானைட் கற்களை கொள்ளையடித்தனர். எந்த ஒரு மூலதனமோ அல்லது தொழிற் கூடமோ இல்லாமல் நமது இயற்கை வளங்களை வைத்தே கொள்ளை லாபம் அடித்தனர். சுதந்திரப் போராட்டம் என்பது நமது தேசத்தின் வளங்களை பாதுகாப்பதோடு சேர்ந்ததுதான். இன்றும் நம் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. அந்நிய முதலாளிகளை இந்திய சந்தைக்கு தங்கு தடை இல்லாமல் வரவழைக்க சிறப்பு பொருளாத மண்டலங்களுக்கு இடங்களை வாரி வழங்குகிறது.

நமது நாடு சிறு விவசாயிகளையே முழுக்க முழுக்க நம்பியுள்ளது. இந்நிலையால் விலைவாசி உயர்வாலும் ஊக வணிகத்தாலும் விவசாயிகள் நிரந்தர கடனாளிகளாக உள்ளனர். இவ்வாறு இருக்கும் தங்கள் வாழ்வாதாரத்துக்கு நகரங்களை முற்றுகை இடுகின்றனர். இப்பொழுதோ பெரு விவசாயிகள் கூட நிலங்களை விற்றுவிட்டு நகரங்களுக்கு வந்து விட்டனர். மீதம் உள்ள 60 சதவீதம்பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டம் என்னை பொறுத்தவரை ஒரு சமூக மாற்றமே. முன்பெல்லாம் எந்த வேலைக்கும் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் இத்திட்டத்தின் மூலம் அனைத்து சாதியினரும் ஒன்றாக பழக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சம்பளப் பிரச்சனை மற்றும் சில பிரச்சனை உள்ளதை நான் மறுக்கவில்லை. இன்றைய கிராமப்புற இளைஞர்கள் விவசாயத்தை விரும்பவில்லை வேறு வேலைக்குச் செல்வதுதான் மரியாதை என நம்பி கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர்.

தற்போது படித்த இளைஞர்கள், சமூக சிந்தனையாளர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். இடதுசாரிகளுக்கு அதிக வாய்ப்புள்ளது. பெண்களும் முன்பு மாதிரி இல்லாமல் படித்து எந்த நேரத்திலும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அனைவர் மத்தியிலும் ஒருதேடல் உள்ளது. குவியல் குவியலாக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் தேடலுக்கு நாம்தான் பதில் தர வேண்டும். இன்றைய உலகமயமாக்கல் தான் லஞ்சத்திற்கு முக்கிய காரணம். இந்திய நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு முதலாளித்துவமும் அதனால் ஏற்பட்ட சமூக மாற்றமும் தான் காரணம். சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்கள் நடவடிக்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் சிந்தனையில் பேச்சில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கூட்டாக செயல்படும் போது இந்த மாற்றங்கள் அவர்களை சமூகத்தை பார்க்க உதவுகிறது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திட்டமிட்டு இவர்களை இணைக்கவேண்டும் இல்லையென்று சொன்னால் திசைமாறிச் செல்ல அதிக வாய்ப்புள்ளது. நம் நாட்டில் வளர்ச்சி உள்ளது. ஆனால் எவ்வகையான வளர்ச்சி யாருக்கான வளர்ச்சி என்ற கேள்வியும் நம் முன் எழுகிறது. ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பது இல்லை. நிலையான வளர்ச்சி என்பதும் இல்லை. வளர்ச்சி எல்லோருக்கும் பயன்படும் வகையில் இல்லை. அதே சமயம் ஒரு நாளைக்கு 20 ரூபாய் மட்டுமே ஊதியம் கிடைப்பவரும் இந்நாட்டில் உள்ளனர். தொழில் நிரந்தரம் இல்லாமல் பென்ஷன் இல்லாமல் வேலை பார்ப்பவர்களும் உள்ளனர்.

1965 ம் ஆண்டுகளில் விவசாயிகள் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் திரளாக அணி திரண்டனர். தொழிற்சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் விவசாயிகளை அணிதிரட்டினர். பஞ்சாலையில் ஏற்பட்ட பிரச்சனைகளை மக்கள் கண்டனர் படிப்பு குறைவானவர்களே ஆலையில் அதிகம் சேர்ந்தனர். இவ்வாறு பல தொழிலாளர்களை ஒன்றிணைக்க வேண்டும். இதைத்தான் கார்ல் மார்க்ஸ் “தொழிலாளர்களின் புரட்சி விவசாய நாட்டில் விவசாயிகளின் பங்கேற்பில்லாமல், ஆதரவில்லாமல் நடந்தால் அது தனிமையில் பாடப்படும் கீதமாகவே சோகத்தில்தான் முடியும்” என்று குறிப்பிடுவார். பி.சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி, ஜீவா போன்ற முக்கியத் தோழர்கள் ஊழியர்களை உருவாக்குவதில் முக்கிய கவனம் செலுத்தினர். அவர்களுடன் பழகி அவர்கள் சூழலில் தங்களை பழகிக்கொண்டனர்.

கிராமங்களில் கட்சி கட்டும் போதுதான் நமக்கு புரிகிறது. நாம் கற்பனையில் கிராமத்தை ஒரு விதமாக உருவகப்படுத்தி வைத்திருந்தோம். அதுவே நாம் களத்தில் நின்று பிரச்சனைகளை சந்திக்கும் போதுதான் கிராமங்களின் நிலை நமக்கு புரிகிறது. நாம் கூப்பிட்டவுடன் வரமாட்டார்கள். அவர்களுடன் நின்று பழகவேண்டும். படிப்படியாக அழைத்து வரும் போதுதான் அவர்கள் நமக்குள் நிலைத்து நிற்கிறார்கள்.

சுதந்திரப் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்றது,மற்றும் உங்கள் அனுபவம் குறித்து சொல்லுங்கள்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது மாவட்ட கல்வி அதிகாரி பள்ளியை பார்வையிட வரும்போது காண்பிப்பதற்காக காப்பி நோட்டில் பகத்சிங் பற்றி எழுதினேன். அதற்கு ஆசிரியர் என்னை பெஞ்சில் ஏற்றினார். 1940 களில் நடந்த யுத்தத்திற்கு நிதி அளிக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்தோம். போலீசை விட்டு அடித்தனர். தேசிய அளவில் இருந்த இயக்கமான காங்கிரசில் இருந்துதான் அப்போதைய சுதந்திரப் போராட்டத்தில் முதலில் ஈடுபட்டேன். அதைத் தொடர்ந்து பள்ளியில் ஸ்ட்ரைக் அடித்தோம். அதன் பின் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைத்துக் கொண்டேன். கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டு இருந்த காலத்தில் பல கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸுக்குள் இருந்துதான் செயல்பட்டு வந்தனர். மாணவனாக இருக்கும் போதே விவசாய சங்கத்தில் இணைந்து மாவட்ட அளவில் பொறுப்பேற்று வேலை பார்த்தேன். உப்பு சத்தியா கிரகத்தில் பங்கேற்கும் தலைவர்களை வாழ்த்துவது சிறைவரை சென்று வழி அனுப்புவது. தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் பங்கு கொள்வது போன்று அளவிலே சுதந்திரப் போராட்டத்தில் பங்கு இருந்தது. நெல்லை சதி வழக்கில், 120ஏ 120பி போன்ற வழக்குகளில் அதாவது “Conspiracy to over through the government by violence” என்ற சட்டத்தின் படி கைது செய்யப்பட்டேன். (சிறையில் 350 பக்கங்கள் கொண்ட இரண்டு நோட்டுப் புத்தகத்தில் படித்த புத்தகங்கள் குறித்த குறிப்புகள் எடுத்துள்ளார் அதை இன்றும் பத்திரமாக வைத்துள்ளார். தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் மொத்தம் 7 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்)

இளம் சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிரீர்கள் ?

இன்று தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சம் இந்த மனித சக்தியை முழுமையாக பயன்படுத்த அரசை நிர்பந்திக்க வேண்டும். இயற்கை வளமும். மனித வளமும் வற்றாமல் இருப்பதை தேசத்திற்கு பயன்படுத்திட வேண்டும். இன்று நாடு பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. அன்று இருந்த சூழல் இன்று இல்லை. இந்த சமூகத்தில் ஒரு உணர்வை ஏற்படுத்தியதில் கம்யூனிஸ்ட்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் அதன் பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நமது தன்மை சிந்தனை மாறவேண்டும். மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பிரச்சனைகளுக்கு விடை கொடுக்கும் வகையில் நம் சிந்தனை உயர வேண்டும். இந்த கோட்டில் தான் சமூகம் செல்ல வேண்டும் என்று இல்லை. திட்டமிட்ட கொள்கை இல்லாமல் எழும் எழுச்சிகளை நோக்கி மக்களை முதலாளித்துவமும், முதலாளித்துவ ஊடகங்களும் திட்டமிட்டு தள்ளுகின்றன. அதுதான் அண்ணா அசாரே போன்றோர் நடத்தும் போராட்டங்களில் நாம் காண்கிறோம். எனவே நாம் நம்மை தயார்படுத்தி கொண்டு பயணிக்கவில்லை என்றால் முதலாளித்துவம் மக்களை திசை திருப்ப தயாராக நிற்கிறது. எனவே நாம் மேலும் வேகமாக களம் காண வேண்டிய கடமை நமக்கிருக்கிறது என்பதை கவனப்படுத்துகிறேன்.

Pin It