மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் “குட்டி ஜப்பான்’’ என்றழைக்கப்பட்டது சிவகாசி. பட்டாசும், தீப்பெட்டியும், அச்சுத் தொழிலும் 1923 க்குப் பிறகு பிரதானத் தொழிலாக மாறி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3,50,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்துளளது. 1922இல் சிவகாசி அய்யநாடார், சண்முக நாடார் ஆகிய இருவரும் கல்கத்தாவிலிருந்த தீப்பெட்டி ஆலையில் தொழிலாளிகளாக வேலை செய்து தொழில் கற்று வந்தனர். 1923இல் சிவகாசியில் “தீ சௌத் இந்தியா லூசிபர் மேச் இண்டஸ்டரீஸ்’’என்கிற கம்பெனியைத் துவக்கினர். ஏனெனில் இந்தியாவில் அப்போதிருந்த தொழில்நுட்பத்தில் தீப்பெட்டி, பட்டாசு தயாரிக்க போதிய தட்பவெப்பநிலை, குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்கும் இடமாக இருந்தது. சிவகாசி. ஜப்பானிய குடும்பத்தினரிடம் கற்ற பாடத்தின் படி பட்டாசு தயாரிக்க ஆரம்பித்தனர்.
1923இல் 2 பட்டாசு தொழிற்சாலைகள் துவங்கப்பட்டது. 1977இல் இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்த மொரார்ஜியின் ஆட்சிக்காலத்தில் சிறு தொழில்களுக்கு மத்திய அரசு கொடுத்த உற்சாகத்தின் காரணமாக பட்டாசுத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து இன்று 620க்கு மேலும் உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் 1. வெடிக்கும் வகைகள் 2. ஒளிரும் வகைகள் 3. நகரும் வகைகள் 4. வெடித்தல், நகர்தல், ஒளிர்தல் ஆகிய இம்மூன்றையும் இணைத்து “பேன்ஸி’’ ரகப் பட்டாசுகள் என பல வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
வருடம்
1923 1942 1980 1986 1990 1994 1997 2001 2008
பட்டாசுத் தொழிற்சாலை எண்ணிக்கை
2 2 189 260 316 324 350 450 620
வருடத்திற்கு சுமார் 3000 கோடி ரூபாய் இத்தொழிலில் புழங்குகிறது. மாவட்டத்தின் வருவாயில் 60% என்பதும் ரயில்வே துறையின் சிவகாசி கிளைக்கு மட்டும் வருடத்திற்கு 1,50,00,000 கோடி ரூபாய் வருமானமும் இத்தொழிலில் கிடைக்கிறது. பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டவர்களில் 90% பேர் 40 வயதிற்குட்பட்ட இளம் பெண்களும், ஆண்களும் தான். 10% பேர் தான் 40 வயதைத் தாண்டியவர்கள். 40 வயதிற்கு மேல் பெரும்பாலானோர் இரத்தச்சோகை, ஆஸ்த்மா உள்பட பல்வேறு நோய்காளல் பாதிக்கப்பட்டு வேலை செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெடி விபத்துக்களில் உயிரிழப்பவர்களும், உடல் ஊனமடைபவர்களும் இளம் வயதினரே அதிகம் என்பது வேதனையான விசயம்.
1990க்கு முன்பு வரை வெடிவிபத்துகளின் எண்ணிக்கை குறைவு. 1981, 1982ஆம் வருடங்களில் நடைபெற்ற வெடி விபத்தில் “டான்’’ பயர் ஒர்க்ஸ் கம்பெனியில் ஏற்பட்ட வெடி விபத்தில் தான் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் உருத்தெரியாமல் தெரித்தோடிக்கிடந்த சதைகளாகக் கிடந்தனர். விபத்தில் பிய்த்தெறியப்பட்ட ஒருவரின் கையோடு சேர்ந்து இதயப்பகுதியும், குடல்பகுதியும் மரத்தில் தொங்கியது. அத்தனை கோரவிபத்து அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களே நேரில் பார்வையிட்டார். 1990க்குப் பிறகு புதிய பொருளாதார கொள்கையின் பாதிப்பால் மூலப்பொருட்கள் விலையேற்றம் போன்ற காரணங்களால் தொழில் நெருக்கடிக்குள்ளாகியது. லாபம் பாதித்தது. அதிக இலாபம் பெற தரம் குறைந்த வீரியம் அதிகமான அனுமதியில்லாத வெடி மருந்து பொருட்களை பயன்படுத்தினர். லாபத்தை அள்ளித்தரும் “பேன்ஸி’’ ரகப் பட்டாசுகளுக்கு பயன்படுத்தும் “மணிமருந்து’’ முறையாக, அறிவோடு தயாரிக்கப்படுவதில்லை. விதிமுறைகள் மீறப்படாமல் தடுத்திட வேண்டிய வெடிப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள், தொழிற்சாலை ஆய்வாளர், தொழிலாளர் நல அலுவலர்கள், லாபவெறிக்கு துணை நிற்கிறார்கள்.
அதனால் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தைரியமாக காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. சட்டங்கள் சப்தமின்றி கிடக்கின்றன. வெடிப் பொருள்களுக்காக 4 வகையான சட்டங்கள் உள்ளன. 1. படைக்கல சட்டம் 1959 2. படைக்கலன் விதிகள் 1962 3. வெடிபொருள் சட்டம் 1984 4. வெடிபொருள் விதிகள் 1993. மேலும், ஒரு பட்டாசு தொழிற்சாலை எனில் கீழேயுள்ள குறைந்தபட்ச விதிகள் கடைபிடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
1. பட்டாசு தயாரிக்கும் அறை ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 10 அடிக்கு 10 அடி என்ற கணக்கில் 4 வழிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. ஒரு அறையில் 4 பேர் மட்டுமே வழிகளில் அமர்ந்து வேலை செய்திட வேண்டும்.
3. திரி அறுப்பது முதல் வெடி மருந்து பொருட்கள் எடைபோடுவது வரை எந்த ஒரு இடத்திலும் இரும்பு பொருட்கள் பயன்படுத்தக் கூடாது.
4. இரவு நேரங்களில் வேலை செய்யக்கூடாது.
5. மின்சாரம் பயன்படுத்தக் கூடாது.
6. வெடிமருந்து பொருட்கள் இருக்கும் இடத்திற்கும், பணிசெய்யும் இடத்திற்கும் குறைந்தபட்சம் 500 அடி தூரம் இருத்தல் வேண்டும்.
7. தொழிற்சாலை அனுமதிக்கு 4 அறைகள் வரை வட்டாசியரும், 8 அறைகள் வரை மாவட்ட வருவாய் அலுவலரும், 12 அறைகள் வரை மாவட்ட ஆட்சியரும் 12க்கும் மேற்பட்ட அறைகள் என்றால் நாக்பூரில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாடு ஆணையரும் அனுமதி வழங்கிட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
இந்த குறைந்தபட்ச விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை நேரடியாக அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தால் பெருமளவு விபத்துக்கள் தவிர்த்திருக்க முடியும்.
விபத்துக்கள் நடைபெற்ற இடங்களில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதை அப்பட்டமாக காணமுடியும். சமீபத்தில் 1. மதுரை மாவட்டம், வடக்கப்பட்டியில் வெடிவிபத்து நடைபெற்ற தொழிற்சாலை அறைகள் அனைத்துமே இருவழி பாதைகளாகவே இருந்துள்ளன. 4 பேருக்கு பதிலாக 8 பேருக்கு மேல் அறைக்குள் அமர்ந்து வேலை செய்துள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். 2. சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் கிருஷ்ணா பயர் ஒர்க்ஸ் வெடிவிபத்தில் 60க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்துச் சிதறியுள்ளன. இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நடைபெற்றுள்ள இரண்டு தொழிற்சாலைகளுக்கு எப்படி அனுமதி வழங்கினார்கள்? விதிமுறைகள் மட்டுமல்ல விபத்து தடுப்பு நடவடிக்கைகளும் கூட பின்பற்றப்படவில்லை. கிருஷ்ணா பயர் ஒர்க்ஸ் 65 அறைகள் கட்டுவதற்கு உரிய பாதுபாப்பு நடவடிக்கைகள் உளளதா? என்பதை கண்காணித்த அதிகாரிகள் யார்? அனுமதி வழங்கியவர்கள் யார்?
விபத்தை தடுத்திட ஆலோசனைகள்:
1. லாப வெறியோடு, வேலை பளுவை திணித்து இரவு நேரங்களிலும் வேலை செய்திட நிர்பந்திக்கின்றனர். காரணம், காண்ட்ராக்ட் முறையினால் வேலைப்பளு அதிகரிக்கிறது. விபத்து தவிர்க்க முடியாததாகிறது. ஆகவே காண்ட்ராக்ட் முறை என்பது தயவு தாட்சண்யமின்றி ஒழிக்கப்பட வேண்டும்.
2. பட்டாசுத் தொழிற்சாலை அறைகளில், குறிப்பிட்ட வெப்பநிலை அடைந்தவுடன் தானியங்கி தண்ணீர் பீய்ச்சியடிக்கும் குழாய்கள்அமைத்திட வேண்டும். (இது பெட்ரோலிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளது.)
3. அரசு அதிகாரிகள், தொழிற்சாலைப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கொண்ட கண்காணிப்புக்குழு அமைத்து, விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்திட வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வறிக்கை சமர்ப்பித்து விவாதித்திட வேண்டும்.
4. தரமற்ற, வீரியமான மருத்துகளும், அனுமதியற்ற வேதிப் பொருட்களும் பயன்படுத்துவதை தடை செய்திட வேண்டும்.
5. இரவு நேரங்களிலும், மரத்தடிகளிலும், வெளியிடங்களிலும் வேலை செய்வதை தடுத்திட வேண்டும்.
6. வெடிபொருள் பற்றிய ஞானத்தையும், பயிற்சியையும் வெடிமருந்து கையாள்பவருக்கும் வழங்கிட வேண்டும். அத்தகையப் பயிற்சி பெற்றவரை மட்டுமே வெடிமருந்துகளை கையாள அனுமதித்திட வேண்டும். பயிற்சியும், அத்தாட்சியும் அரசே வழங்கிட வேண்டும்.
7. பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலச்சட்டங்கள் முறையாக அமல்படுத்திட வேண்டும்.
8. பணிபுரியும் அனைவருக்கும் வருடம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
9. விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகளின் உரிமம் ரத்து செய்திட வேண்டும். மேலும் விபத்து நடைபெற்றால் கிரிமினல் வழக்குப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திட வேண்டும். விதிமுறைகள் மீறலுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது துறைவாரியாக நடவடிக்கைகளும், வழக்குகளும் தொடுக்கப்பட வேண்டும்.மேலும் ஆலோசனைகளைப் பெற்றிட அரசு அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இளைஞர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கொண்ட கருத்தரங்குகளை நடத்துவது, விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்வது என்ற முறையில் அரசுத் தரப்பில் முன் முயற்சி எடுக்கப்பட வேண்டும்.“சாவின் விளிம்பில் வாழ்விற்காய்’’ போராடும் இளைஞர்களை காத்திட இந்த அரசை நிர்பந்திக்கும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பட்டும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
இளைஞர் முழக்கம் - ஆகஸ்ட் 2009
சாவின் விளிம்பில் வாழ்விற்காய்...
- விவரங்கள்
- எம்.தாமஸ்
- பிரிவு: இளைஞர் முழக்கம் - ஆகஸ்ட் 2009