தலையை சொரிந்து கொண்டு அரசு ஊழியர்களில் சிலர் வாங்கும் அஞ்சு பத்து இருபது அம்பது எரிச்சலூட்ட, இக்கட்டத்தில் அது பற்றி எழுதத் தோன்றியது. அதன் நீட்சியாக யோசிக்க யோசிக்க எங்கெல்லாம் யார் யாருக்கெல்லாம் 20 ரூபாய் 10 ரூபாய் என்று காசு தந்திருக்கிறேன் என்று கணக்கு போட்டேன்.

அது.... நீள்கிறது...!

பல்லிளிக்கும், தலை சொரியும் அருவருப்பை சுமந்து கொண்டு அது தன் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. 20 ரூபாயில் என்ன வந்து விடப் போகிறது என்பது தான் அதன் அலட்சியம். ஆனால் என் வீதியில் இருக்கும் 20 வீடுகளில் வீட்டுக்கு 20 ரூபாய் என்று இன்று வாங்கிச் சென்ற துப்புரவுத் தொழிலாளி ஒருவர் அதற்கு நிகராக செய்த வேலை, டெங்கு வராமலிருக்க தண்ணீர்த் தொட்டிக்குள் மருந்து ஊற்றிச் சென்றது மட்டும் தான். மருந்து தெளிப்பது அவர்களின் வேலை தானே. அதற்கு அவர்களுக்கு சம்பளம் தரப்படுகிறதே. அதன் பின்னும் மெதுவாக 'டீ செலவுக்கு' என்று தலை சொரிகையில்.... கிசுகிசுக்கையில்.... அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நாமும் கொடுத்து விடுகிறோம். ஆனால் ஒரு கட்டத்தில் ஏன் அவர்கள் அப்படி கேட்கிறார்கள் என்று கேள்வி எழும்புகிறது. நான் ஒரு முறை கூட அவர்கள் கேட்கையில் இல்லை என்று கூறியது இல்லை. அவர்களுக்குத் தர வேண்டிய மரியாதையில் ஒரு துளி குறைத்தது இல்லை. ஆனால் எல்லாம் முடியும் போது பட்டென்று கை நீட்டி கேட்டு விடுவது எதனால். எல்லாருக்குமே அவரவர் வேலைக்கு தகுந்த கூலி இல்லை என்பது தான் பொதுக் கருத்து. ஆக சம்பளம் போதவில்லை.....கூலி போதவில்லை என்பது சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்வியே தவிர நுகர்வோரிடமும்.... பொதுமக்களிடமும் கையேந்துவது சரியானது அல்ல.

bribe policeஅதைத் தாண்டி வந்தால், எங்கள் வீதியில் தண்ணீர் திறந்து விடும் ஆள் ஒருவர் இருக்கிறார். அவரும் அப்படித்தான் வாரம் ஒரு முறை வந்து வீட்டு வாசலில் நின்று கொண்டு பார்ப்பார். எந்த நேரம் என்றெல்லாம் கிடையாது. அவர் வரும் நேரம் தான். அந்தப் பார்வையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உடனே, 20 ரூபாய்க்கு மேல் எவ்ளோ வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதற்கு குறைவு என்றால் வாய்க்குள்ளேயே முன‌ங்குவார். முன‌ங்குவது நமக்கு நல்லாவே கேட்கும். நமக்குக் கேட்க வேண்டும் என்று தான் முன‌ங்கலில் கூடுதல் வால்யூம் வைத்திருப்பார். அதையும் மீறி ஏதாவது கேள்வி கேட்டு விட்டால் நம் ஏரியாவுக்கே தண்ணீர் திறந்து விடும் நேரம் குறைந்து விடும். இதனால் ஏரியா மக்கள் சாபத்தையும் ஏற்க வேண்டி வரும்.

நம் வீட்டுக்கு மட்டும் ஏதோ காரணத்தால் பவர் கட் ஆகி விடும் சூழலில் மின்சார அலுவலகம் சென்று எழுதி வைக்க வேண்டும். அவர்கள் வருவதும், தாமதமாக வருவதும், வராமலே போவதும், முன் நாம் எப்படி அவர்களிடம் நடந்து கொண்டோம் என்பதைப் பொறுத்து தான் இருக்கிறது. அவர்கள் இஷ்டப்பட்ட நேரத்தில் வந்து சரி செய்து விட்டு, வீட்டு வாசலில் எங்கோ பார்த்துக் கொண்டு நிற்பார்கள். அல்லது டீ செலவுக்கு என்பார்கள். நாம் 50க்கு குறையாமல் கொடுக்க வேண்டும். அது எழுதப்படாத கரண்ட் விதி. நான் ஒரு முறை நியாய தர்மம் பேசி, அந்நியனாகி சண்டை போட்டிருக்கிறேன். சம்பந்தப்பட்டவர் சிரித்துக் கொண்டே சென்று விட்டார். அதன் பிறகு பல முறை இருட்டில் அமர்ந்திருக்கிறேன். அதனால் இப்போதெல்லாம் சண்டை இடுவதில்லை. கேட்பதற்கு முன்பே கொடுத்து விடுகிறேன்.

அடுத்து டெலிபோன் டெட் அல்லது நெட் பிரச்னை என்று தொலைபேசி அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வந்தால் அதுவும் அப்படித்தான். முன்வினைப்படியே முறை செய்யப்படும். அதுவும் பெண் அதிகாரிகள் மொக்கைத்தனத்தில் உச்சம் பெற்றவர்கள். நின்று நிதானமாக ஒற்றை விரலில் தட்டச்சு செய்வது போல ஆற அமர, இரண்டு நாட்களுக்குப் பின் ஒரு வயதானவரை அனுப்புவார்கள். அவரும் ஏதேதோ செய்து விட்டு தலையை சொரிந்து கொண்டு நிற்பார். ஆனால் வேலையை கச்சிதமாக முடித்திருப்பார். ஒன்று பெரியவர். இன்னொன்று வேலை முடிந்து விட்ட சந்தோசம். ஆக நமக்கு 50 ரூபாய் பெரிதாகப் படாது. அடுத்த நொடிகளில் ஐம்பது ரூபாய் அவர் கையில் திணித்திருப்போம். இது டீ செலவுக்கு தருவது. லஞ்சம் எல்லாம் இல்லை என்று எப்படியோ நம் மனதிலும் லஞ்சத்தின் மறுபதிப்பு வேரூன்றி இருக்கிறது.

இதெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம். வீட்டு வாசலில் குழி தோண்டி விட்டு அதை மூடுவதற்கு தலையை சொரிந்து கொண்டு நின்றவனை வெட்டி அதே குழிக்குள் மூடலாம் என்ற காமன்மேனுக்கு உண்டான கோபம் எனக்கும் வந்தது. அந்நியனாக மாற முடியாத தரித்திரம் இங்கே மிடில் கிளாஸாக நம்மை வைத்திருக்கிறது. 100 ரூபாய் கொடுத்த பிறகு தான் மூடினான். ஆனால் இப்போது வரை அந்த குழியை எதற்குத் தோண்டினார்கள், எதற்கு மூடினார்கள் என்று எனக்குத் தெரியாது. எங்கள் வீதியில் யாருக்குமே தெரியாது. வாயுள்ள பிணங்கள் நாங்கள். எல்லாக் குழிகளிலும் தேங்கி நிற்கும் நீரைத் தாண்டி தாண்டி தவளைகளைப் போல தவ்வி தவ்வி அல்லது நீர் பாம்பைப் போல ஊர்ந்து ஊர்ந்து சென்று விடுவோம். கண்ணாடியில் என்னை நானே துப்பிக் கொள்ளும் தருணங்கள் இது போல நிறைய வாய்த்திருக்கிறது.

'சே' பிறந்த போது பிறப்பு சான்றிதழ் வாங்க பியூனுக்கு 70 ரூபாய் கொடுத்திருக்கிறேன். கடவுச் சீட்டு சரிபார்த்தலுக்கு சென்று காவல் நிலையத்தில் 285 ரூபாய் கொடுத்திருக்கிறேன். ( அவ்வளவு தான் அன்று இருந்தது)

தங்கையின் கடவுச் சீட்டு சரிபார்த்தலுக்கு வீட்டுக்கே வந்து விட்ட காவல் அதிகாரி, "இவ்ளோ தூரம் பெட்ரோல் செலவு பண்ணி வந்திருக்கோம்மா" என்று அவளிடம் 250 ரூபாய் வாங்கிச் சென்றதெல்லாம் நேர்மைக்கு பிளாஸ்திரி போட்ட செயல்கள்.

கடந்த இருபது வருடங்களாக நான் செல்லும் சாலையில், ஏதோ திருடனைப் பிடித்து விட்டது போல கடந்த வாரம் என்னையும் எனக்கு முன்னால் சென்ற ஒரு பெரியவரையும் பிடித்து நிறுத்திக் கொண்டு லைசென்ஸ் மற்றும் இன்ன பிற இதர காகிதங்கள் எல்லாவற்றையும் கேட்டார் ஒரு போக்குவரத்துத் துறை அதிகாரி. நான் ஹெல்மெட் இல்லையென்றால் வண்டியை எடுக்கவே மாட்டேன். லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஆர் சி புக் இல்லாமல் வண்டியைத் தொடக் கூட மாட்டேன். எல்லாமே ஒரிஜினல் வைத்துக் கொண்டு பயணிப்பவன் நான். என்னிடம் அவருக்கு தேற்ற ஒன்றுமேயில்லை. அதுவே அவருக்கு என் மீது வெறுப்பை உமிழ வைத்தது.

"சார் ஒன்னும் தேறாது போல' என்று அவர்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டது சீ என்று ஆனது. அந்த பெரியவர் முன்னிரவில் குடித்ததற்கு 150 ரூபாய் கப்பம் கட்டிப் போனார். அதிகபட்சம் 250 ரூபாய்க்குள் இருக்கும் இந்த தலை சொரியல்... அதட்டல்... விகார சிரிப்பு....வில்லங்கப் பார்வை எல்லாமே அரசு ஊழியர்களின் மீதான மதிப்பை இழக்கச் செய்கிறது. இன்னும் ஒற்றை விரலில் டைப் செய்து கொண்டு நீண்டிருக்கும் வரிசை பற்றி கவலைப்படாமல் கொட்டாவி விடும் சில அரசு ஊழியர்களின் பொறுப்பற்ற பழக்க வழக்கத்துக்கு யார் பொறுப்பு? வெறும் 50 ரூபாயில் அவர்களின் பேச்சும் பார்வையும் மாறி விடும் நிலைக்கு யார் முகமூடி போட்டு விட்டது. தனி மனித ஒழுக்கமின்மையா, காலப் போக்கில் மாறி விட்ட பழக்க வழக்கமா, அந்த இடத்தில் அப்படி ஒரு பௌதீக மாற்றம் இயல்பானதா....ஒன்றும் விளங்கவில்லை.

மணியார்டர் கொண்டு வரும் தபால்காரர்களும் அப்படித்தான்...!

"ஏம்மா உங்க ஒருத்தருக்காகத்தான் இவ்ளோ தூரம் வந்துருக்கோம்" என்று கட்டளையிடும் தொனியில் சொல்லும் தபால்காரரை நான் அறிவேன். நாமும் பணம் வந்த சந்தோஷத்தில் 50 ரூபாயை எடுத்து நீட்டி விடுவோம். அப்படி அவ்ளோ தூரத்தில் இருந்து வருவது தான் அவர் வேலை. அதற்கு தான் அவருக்கு அரசு சம்பளம். இதையெல்லாம் நாம், பாவம் பரிதாபம், அவங்களும் என்ன பண்ணுவாங்க என்ற தொனியில் பொதுப் புத்தியை இட்டு நிரப்பிக் கொள்கிறோம். மாற்றி சிந்தித்துப் பார்த்தால் நாம் அவர்களின் நிலைமைக்கு கீழ் தான் இருக்கிறோம். அவர்களுக்காவது அரசு வேலையென்று ஒன்று இருக்கிறது. வாடகை வீட்டில் இருக்கும் தனியாரில் வேலை செய்பவனுக்கு 50, 100 ரூபாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அவரவர் வாழ்வில் அவரவர் பணியில் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அரசு பணிக்கு என்று வந்து விட்ட பிறகு, தான் ஏற்ற வேலையை செய்து முடிப்பது தானே கடமை. அதற்கு தானே அரசு சம்பளம் தருகிறது. இந்த வெயிலுக்குள்ள அங்கிருந்து இங்க வந்தேன். இந்த மழையில நனைஞ்சுகிட்டே வந்தேன் என்று சொல்வதெல்லாம் சரி தான். அதற்கு தான் சம்பளம். எப்போது, நாம் செய்வது பணியில்லை, மக்கள் சேவை என்று புரிந்து கொள்கிறார்களோ அன்று தலையை சொரிய மாட்டார்கள். டீ செலவுக்கு என்று முன‌ங்கிக் கொண்டு நிற்க மாட்டார்கள். ஒரு நாளில் முடிக்க வேண்டிய வேலையை ஒரு வாரத்துக்கு இழுத்தடிக்க மாட்டார்கள். ஆனால் எப்போது புரிந்து கொள்வது. எப்படி புரிந்து கொள்வது. யார் புரிய வைப்பது. எல்லாம் புரிந்தும் காலப்போக்கில் கல்ப்ரிட் ஆனவர்களை என்ன செய்வது. இங்க எல்லாமே இப்படித்தான் என்று தேங்கி விட்டவர்களைக் கொண்டு என்ன மாற்றத்தை செய்து விட முடியும்...?

இக் கட்டுரை இத்துறைகளில் வேலை செய்யும் எல்லாரையும் குறித்துப் பேசவில்லை. தலை சொரிந்து, டீ செலவுக்கு என்று யாரெல்லாம் முன‌ங்குகிறார்களோ அவர்களைப் பற்றி மட்டும் தான் பேசுகிறது. தேவை இருக்கும் பட்சத்தில் இன்னும் இன்னும் பேசும். பூனைக்கு யார் தான் மணி கட்டுவது. நல்ல பூனையாக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சுரண்டுவது தவறுதானே....!

மேலிட பாரபட்சம்....... சாதி ரீதியான......மத ரீதியான பாகுபாடு... தனி மனித வறுமை... சம்பளப் பற்றாக்குறை என்று இதற்குப் பின் அலச வேண்டியது நிறைய இருப்பினும்... தனி மனித ஒழுக்கம் முதன்மையாகப் பட்டது.

- கவிஜி

Pin It