அழிவை’ என் இரு கண்களால் காண வேண்டும்!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட நாகசாகி மற்றும் ஹிரோஷிமா நகரங்கள் கொடுரங்களை எதிர்கொண்டு நிமிர்ந்து நின்றுள்ள நகரங்களாகப் பார்க்கிறோம். ஆனால் வெறும் சடங்காக இந்த இரு நாட்களின் நிகழ்வுகள் இருந்துவிடக்கூடாது என்று அந்த நகர மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆகஸ்டு 4 முதல் 6 ஆம் தேதி வரை ஹிரோஷிமா நகரில் நடந்த உலக மாநாடு அதை உறுதிப்படுத்தியது. மேற்கத்திய ஊடகங்களால் மறைக்கப்பட்ட இந்த மாநாடு ஏ மற்றும் எச் ரக அணுகுண்டுகளுக்கு எதிராக நடத்தப்பட்டதாகும். ஜப்பானின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 400 பிரதிநிதிகள் இதில் பங்கேற்றார்கள். 85 வயதாகும் ஹிபாகுஷா சுபோய் சுனாவ் இந்த மாநாட்டில் சிறப்பு உரையாற்றியவர்களில் ஒருவராவார். அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவராக அவர் இருக்கிறார். வயதைப் பொருட்படுத்தாமல் உணர்ச்சிகரமான உரையை அவர் இந்த மாநாட்டில் ஆற்றினார்.

எனது இரண்டு சொந்தக்கண்களால் அணுஆயுதங்கள் அழிவதைப் பார்க்காமல் நான் சாக மாட்டேன் என்று கர்ஜித்தார். அவரது எண்ணத்தில் இளமை தெரிந்தது. முகத்தில் உறுதி இருந்தது. அவரது கருத்தை அடுத்தபடியாகப் பேசிய அனைவருமே வழிமொழிந்தனர். இந்த மாநாட்டுப் பிரதிநிதிகளிடமிருந்த கருத்துகளில் பிரதானமானதே, அமெரிக்காவுடனான அணுஆயுதக்குடை உடன்பாட்டை ரத்து செய்ய வேண்டுமென்பதாகும். அணுஆயுதங்களின் நேரடிப் பாதிப்பினை உணர்ந்துள்ள நாடு இத்தகைய உடன்பாட்டிற்கு போகாமல் ஒட்டுமொத்த அணுஆயுத ஒழிப்பிற்காகப் பாடுபட வேண்டுமென்பதுதான் மாநாட்டின் பொதுக்கருத்தாக இருந்தது.

நிறைவு நிகழ்ச்சியில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஷி கசுவோ பங்கேற்று சிறப்புரையாற்றினார். சர்வதேச அரசியல் நடவடிக்கைகளின் மூலமாக அணுஆயுதங்களை அழித்தொழிக்கலாம் என்று பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர். நிறைவாக உலக மக்களுக்கு அறைகூவல் ஒன்றும் விடப்பட்டது. அணுஆயுதமற்ற உலகை உருவாக்கும் இலக்கை நோக்கி ஹிபாகுஷா முதல் உலகின் அனைத்து இளைஞர்கள் வரை கைகோர்த்து செல்வோம் என்று அந்த அறைகூவல் அழைப்பு விடுத்தது.

அமெரிக்காவின் கனஜோர் ஆயுத விற்பனை

சவூதி அரேபியாவின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. நவீன தொழில்நுட்பம் வாய்ந்த போர் விமானமான எப்15 சவூதி அரேபியாவில் வந்து இறங்கியுள்ளது. ஒன்றல்ல.. இரண்டல்ல... 84 எப்15 ரக போர் விமானங்களை சவூதி அரேபியாவிடம் அமெரிக்கா விற்கப்போகிறது. சவூதி அரேபியாவுக்கு போர் விமானங்களை விற்றால் அந்நாட்டின் எதிரிநாடான இஸ்ரேலுக்கு கோபம் வராதா...? வந்தது. ஆனால், தொலைதூர இலக்கைக் குறிவைத்துத் தாக்கும் திறன் இந்த போர் விமானங்களில் அளிக்கப்படவில்லை என்று கூறி இஸ்ரேலிடம் சொல்லி விட்டார்கள். இதில் இரண்டில் யாரோ ஒருவர் ஏமாந்துள்ளார். நவீன விமானம் என்று சொல்லி வந்தவர்கள் தாக்குதலுக்கான முக்கியமான வசதியை எடுத்து விட்டார்கள் அல்லது எடுத்து விட்டதாக பொய் சொல்லியிருக்கிறார்கள். இந்த இரண்டில் ஒன்றுதான் நடந்திருக்க வேண்டும். சவூதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள் மீது அமெரிக்காவின் கண்கள் வலுவாகப் பதிந்துவிட்டதுதான் இந்த விற்பனைக்குக் காரணமாக உள்ளது. பொதுவான எதிரி இஸ்ரேல் கிடையாது, ஈரான்தான் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான எதிரி என்ற கருத்தைத் திணிக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளது. அந்த எதிரியைக் காட்டி அனைத்து நாடுகளின் தலைகளிலும் போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை திணித்து வருகிறார்கள்.

இராக் ஆக்கிரமிப்பின்போது ஜோர்டானின் மன்னர் அமெரிக்காவின் பக்கத்தில் நின்றார். அந்த நாட்டுக்கு ஏராளமான உதவியைச் செய்கிறோம் என்று அமெரிக்க அரசுத்தரப்பில் உறுதி தரப்பட்டது. உதவி என்றால் வேறொன்றுமில்லை, ஏற்கெனவே இருக்கும் போர் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டன. ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இதுதான் அமெரிக்கா சொன்ன உதவி. தரப்பட்ட இந்த அழிவாயுதங்களுக்கு பணமும் வாங்கிக் கொண்டார்கள். அப்புறம் என்ன உதவி? ஒரு திரைப்படத்தில் தாயத்து தந்து ஏமாற்றுவார் போலி மந்திரவாதி. 600 ரூபாயை வாங்கிக்கொண்டு அந்தத் தாயத்தை வடிவேலு கையில் கட்டுவார். இது எதுக்குப்பா..ன்னு வடிவேலு கேட்க, ராத்திரி 12 மணிக்குக்கூட சுடுகாட்டுக்கு தைரியமாப் போகலாம் என்பார் மந்திரவாதி. ராத்திரி எதுக்குப்பா தனியா சுடுகாட்டுக்குப் போகணும் என்று கேட்பார் வடிவேலு. போலி மந்திரவாதிபோல்தான் அமெரிக்கா நடந்து கொள்கிறது. ஆயுதங்களை விற்றுவிட்டு இனி தைரியமாக ஈரானை எதிர்கொள்ளலாம் என்கிறது. எதற்கு ஈரானை எதிர்கொள்ள வேண்டும் என்பது புரியாமல் சவூதி அரேபியா முழிக்கிறது. மந்திரவாதியின் வியாபாரம் நடப்பது போல அமெரிக்காவின் ஆயுத விற்பனை கன ஜோராக நடக்கிறது.

சூடு பிடிக்கிறது தேர்தல்

செப்.26 அன்று நடக்கப்போகும் வெனிசுலா தேசிய சபையின் தேர்தல் சூடுபிடித்துள்ளது. 165 இடங்கள் இந்த சபையில் உள்ளன. தற்போது ஜனாதிபதியாக இருக்கும் சாவேஸ் ஆதரவு பெற்ற ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியும், ஐக்கிய ஜனநாயக வட்டமேசை என்ற பெயரில் இணைந்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணியும் எதிரெதிர் நிற்கின்றன.

ஒரே ஒரு அம்சம் குறித்தே இந்த இரண்டு அணிகளும் பெரும்பாலும் விவாதித்து வருகின்றன. சாவேஸ் முன்னிறுத்தும் 21ஆம் நூற்றாண்டு சோசலிசம் நல்லதா, கெட்டதா என்பதுதான் அது. 1998 ஆம் ஆண்டுக்கு முன்பாக மோசமான கொள்கைகளைக் கடைப்பிடித்து மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்தவர்கள்தான் தங்களுக்குள் இருந்த பல வேறுபாடுகளை மறந்துவிட்டு சோசலிசம் வேண்டாம் என்று கொடி பிடிக்கிறார்கள்.

மறுபுறத்தில், சோசலித்தை நோக்கிச் செல்லும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள சாவேசின் வழிகாட்டுதலில் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி தனது கருத்துக்களை எடுத்து வைக்கிறது. அமைப்பு ரீதியான செயல்பாடுகளே நாட்டின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத்தீர்வை முன்வைக்கும் என்கிற சாவேசின் வலுவான நம்பிக்கைதான் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி உருவாவதற்கு வழிவகுத்தது.

ஒரு கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வெனிசுலாவில் உள்ளனர். தற்போதுள்ள நிலையில் மொத்தமுள்ள 165 இடங்களில் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சிக்கு 124 இடங்கள் கிடைக்கலாம் என்றும், எதிர்க்கட்சிகளுக்கு 41 இடங்கள் கிடைக்கலாம் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள எட்டு மாகாணங்களில், நான்கில் உள்ள அனைத்து இடங்களையுமே ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாவேசின் 21ஆம் நூற்றாண்டு சோசலிசம் என்ற முழக்கத்திற்கு மக்கள் ஆதரவு என்பதுதான் தற்போதைய நிலை.

Pin It