இந்திய தேசத்தின் நிழல் கருமையாய் இருப்பதை காவியாய் மாற்ற நூற்றாண்டுகளாக இந்துத்துவ சக்திகள் முயன்றுகொண்டே இருக்கின்றனர். இந்தியாவை இந்துக் களின் நாடாக மாற்ற அவர்கள் செய்யும் கலவரங்களும், படுகொலைகளும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் செய்யும் நேரடிக் கலவரங்கள் உடனடியாக மதச்சார்பற்ற சக்திகளால் கண்டிக்கப்படுகிறது. எதிர் வினையாற்றப்படுகிறது. ஆனால் இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தில் அவர்கள் ஊடுருவி சட்டப்பூர்வமாய், நீதியின் பெயரால், அதிகாரத்தின் பெயரால், அறத்தின் பெயரால்  செய்யும் கொலைகளும் தவறுகளும் வெளியில் தெரிவ தில்லை. இது காவி அதிகாரிகள் மீதான விசாரணைக் காலம். அதிகார அடுக்குகளில் மறைந்து நின்று பல்லிளிக் கும் இந்துத்துவம் குஜராத் துவங்கி கோவை வரை நடத்திய அராஜகத்தின் அம்பல காலம் இது.

“குற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடும் போது இந்தியாவில் செயல்படும் குற்றவாளிக் கும்பல் களில் எதுவும் நிறுவனப்படுத்தப்பட்ட குற்றவாளிக் கும்பலாகிய இந்திய போலிசின் அருகே கூட நெருங்க இயலாது. ரொம்பவும் பொறுப் புணர்வுடன் இதை நான் சொல்கிறேன்” இது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.முல்லா அவர்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாகாபாத் காவல்துறையினர் குறித்த தீர்ப்பில் 1961 ஆம் ஆண்டு குறிப்பிட்ட வாசகங்களாகும். இந்தத் தீர்ப்பை பார்த்து அதிர்ந்த உத்தரப்பிரதேச அரசு காவல்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் பொருட்டாவது இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்தது. இந்த முறை யீட்டை தள்ளுபடி செய்த நீதியரசர் முல்லா கூறினார் “ஒரு கூடை நாறிய மீன்களில் நல்லமீனை தேடும் முட் டாள் நானல்ல” என்றார்*. பாவம் இன்றைய காவல் துறையின் வளர்ச்சியை அறியாதவர். நீதியரசர் இன்று தீர்ப்பளித்திருந்தால் “நல்ல மீன்களே இல்லாத நாறிய கூடையில் நல்ல மீனை தேடச் சொல்லாதே” என்று கோபப்பட்டிருப்பார்.

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான புகார்களில் 60 சதம் காவல்துறையின் மனித உரிமை மீறல்கள்தான் பதிவாகிறது. பதிவானவைகள்தான் 60 சதம் பதிவாகாமல் இன்னும் எத்தனையோ? காவல் நிலையக் கொலைகள், கடுமையான சித்திரவதைகள், பாலியல் கொடூரங்கள், மூன்றாம்தர சித்திரவதைகள், என்கவுண்டர் கொலைகள் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. அதைவிட மிகப்பெரிய அவலம் குஜராத்தில் தங்களது பதவி உயர்வுக்காக இஸ்லாமிய மக்களை போலி என் கவுண்டரில் படுகொலை செய்வது அதிகரித்துக்கொண்டே இருப்பது.

யாருக்காக? எதற்காக?

கடந்த 2010 ஜூலை மாதம் 22 ஆம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் ஒரு முன்னாள் அமைச்சர் வீட்டின் கதவில் விசாரணை சம்மன் ஒட்டப்பட்டது. அந்த அமைச்சரின் வீட்டுக் கதவில் அது ஒட்டப்பட்ட காரணம் அதை அவர் வாங்காததுதான். அந்த அமைச்சர் அமித் ஷா. குஜராத்தின் நரேந்திர மோடி அரசின் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர். மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய் யப்பட்ட இவர் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு 3 நாள் விசாரனை செய்யப்பட்டார். இவர்மீது மத்திய புலனாய்வுத் துறை விசாரணை செய்யும் காரணத்தை அறிய  2005 நவம்பர் 26 தேதியில் நடந்த சம்பவத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அன்றைய தினம் சொராபுதின் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோர் அன் றையதினம் ஆந்திரப் பிரதேச அரசு வாகனத்தில் மகா ராஷ்ட்ராவில் குஜராத் காவல்துறையால் விசாரணை என்ற பெயரில் கடத்தப்படுகின்றனர். இருவரும் பிணங்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.

அந்த என்கவுண்டர் கொலையை பார்த்த ஒரே சட்சி துள்சி பிரஜாபதி அவரும் மார்ச் 2006 ஆம் ஆண்டு என்கவுண்டரில் காவல்துறையால் படுகொலை செய்யப்படுகிறார். சொராபுதின் ஷேக் மரணத்திற்கு நீதி கேட்டு, சொராபுதின் ஷேக் தீவிரவாதி அல்ல என சொல்லி அவரது அண்ணன் ரபாபுதின் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டுகிறார். உச்சநீதி மன்றம் மத்திய புலனாய்வுத் துறையை இவ் வழக்கை விசாரணை செய்யச்சொல்லி பணிக்கிறது. மத்திய புலனாய்வுத்துறை இந்த என்கவுண்டர் கொலைகள் திட்டமிட்ட கொலை என்றும் இதில் அந்த மாநில முன்னாள் உள்துறை துணை அமைச்சர் சம்பந்தபட்டிருக்கிறார் என அவரை கைது செய்தது. மற்றொரு சம்பவம்.

2004 ஜூன் 15 இஸ்ரத் ஜஹன், ஜாவீத் ஷேக், சீஷன் ஜோஹர், அம்ஜத் அலி ரானா ஆகிய நண்பர்கள் அகமதாபாத் அருகில் உள்ள நரோடாவில் காரில் பயணம் செய்யும் போது குஜராத் காவல்துறையால் என் கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு லஷ்கர்இதொய்பா என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக காவல்துறை திரைக்கதை எழுதியது.

ஆனால் இதுவும் போலி என்கவுண்டர் கொலைகள் என மத்திய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதற்கு கொல்லப்பட்ட இளம் பெண் இஸ்ரத்தின் தாயார் ஷமீமா நீதிமன்றத்தின் கதவை தட்டியதுதான் காரண மாகும். இப்படி குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளில் 34 என்கவுண்டர் கொலைகள் நடந்துள்ளது. இவைகள் ஒவ் வொன்றையும் விசாரித்தால்தான் இன்னும் உண்மைகள் வெளிவரும். இந்தப் படுகொலைகள் நடந்திட காரணம், ஆட்சியில் உள்ள இந்துத்துவ மதவெறியர்கள் மத்தியில் தங்களது பராக்கிரமங்களைக் காட்டி பதவி உயர்வு பெறத் துடிக்கும் அதிகார வர்க்கத்தின் பதவி வெறியாகும். மற் றொன்று இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதத்தை காட்டி இந்துத்துவ வெறியை முடிந்த அளவு மக்கள் மனங்களில் விதைப்பது. இந்த மதவெறிதான் ஆர்.எஸ்.எஸ் காணும் அகண்டபாரதம் என்பதை உருவாக்கும் என நினைக் கின்றனர். பாட்னா, அஜ்மீர், கான்பூர், மலேகாவ், தானே, கோவா, நாந்தட், ஹைதராபாத் அகிய இடங்களில் இந்து மதவெறியர்கள் வைத்த வெடிகுண்டுகள் குறித்த விசா ரணை ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில் அவர்கள் அம்பலப்பட்டு நிற்கும் நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதம் குஜராத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் பயன்படுத்தப்பட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் பழிவாங்கப்பட்டதும் நடந்தது.

குஜராத் வடிவம் மாறி கோவையில்...

2006 ஜூலை மாதம் கோவையில் வெடி குண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது, தொடர் குண்டு வெடிப்பு நடத்தி தமிழகத்தில் நாசவேலைக்கு சதி, கோவையை அடுத்து சேலத்துக்கும் ஆபத்து, போலிஸ் அலுவலகங்களை தகர்க்க சதி என்று பத்திரிகைகள் கொட்டை எழுத்துகளில் செய்திகளை வெளியிட்டன.1998 பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த கொடூர குண்டு வெடிப்பு சம்பவத்தின் ரணங்கள் இன்னும் மக்கள் மனங்களில் இருந்ததால் மக்கள் அதிர்ந்து போனார்கள். மேலும் நமது ஊடகங்கள் தங்கள் வசதிக்கும் கற்பனைக்கும் தகுந்தவாறு செய்திகளை முந்தித்தந்தனர். இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட சதி, கோவையில் கைதான தீவிரவாதிக்கு கேரள குண்டு வெடிப்பில் தொடர்பு, மும்பை தீவிரவாதிகளுடன் தொடர்பு, என்று அடுத்த நாளும் தொடர்ந்தது. ஒசாமா பின்லேடன் கோவை வந்து தீவிரவாதிகளுக்கு திட்டம் தீட்டி தந்தார் என்று மட்டும்தான் எழுதவில்லை. நீண்ட தாடி, தலப்பாக்கட்டுடன் யாரும் கண்ணில் தட்டுப்படாத காரணத்தால் இதை எழுதவில்லை போலும்.

தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதால் சதி அனைத்தும் முறியடிக்கப்பட்டது என்று ஊடகங்கள் கூறி முடித்தன. என்ன நடந்தது? 2006 ஜூலை 22 அன்று நள்ளிரவில் ஹாரூன் பாஷா, மாலிக் பாஷா, அதீக்குர் ரஹ்மான் (எ) போலேசங்கர், ரவி (எ) திப்புசுல்தான், சம்சுதீன் உள்ளிட்ட ஐந்து பேரை கோவை போலிசார் கைது செய்தனர். பைப் குண்டுகள், மேப்புகள் கைப்பற்றப்பட்டன. சதியை திறமை யாக முறியடித்த உளவுத்துறை உதவி ஆணையர் ரத்தின சபாபதி, போத்தனூர் பி13 இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோருக்கு கமிஷனர் கரண் சின்கா பாராட்டு.

அப்போது தமிழகத்தின் அனைத்து செய்திகளும் பின்னுக்குப் போய் மீடியாக்களில் இந்த வெடிகுண்டு குறித்த விவாதங்களே ஆக்கிரமித்திருந்தது. ஆனால் காவல்துறையினர் தயாரித்த கதையில் ஆங்காங்கு ஓட்டை இருந்ததால், காவல்துறையின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பத்திரிகைகள் மறுபக்கத்தை தேட ஆரம்பித்தன. சில தகவல்களைத் திரட்டின. ஆனாலும் சதியின் முழுபரிமாணத்தையும் அவர்களால் காணமுடியவில்லை. அதே நேரத்தில் கைதான ஹாருன் பாஷா குறித்து இருந்த நன்மதிப்பு முறையான நீதிவேண்டும் என கோவை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புகள் களம் இறங்கிவிட்டது.

கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடமும் முறை யிட்டன. அதிகார வர்க்கத்திற்கு மனு போட்டனர். எதிர்ப்புக் குரல் வலுக்கவே, முதலில் உதவிகமிஷனர் நிஜாமுதீன் தலைமையில் விசாரணை நடந்தது. சில சந்தேகங்களை எழுப்பியதோடு விடை காணாமலே அவரும் விடைபெற் றார். வழக்கு சிபிசிஐடியின் வசம் போனது. அதன் சிறப்புப் புலனாய்வுக்குழு தலைவராக ஆர்.பாலன் களமிறங்கினார். ஏறத்தாழ 15 மாதகாலம் கடுமையான விசாரணையை மேற்கொண்டார். நிதானமாக உண்மைகளை உறுதி செய்துகொண்டார். அவர் எடுத்திருக்கும் வழக்கு மிகவும் நுட்பம் வாய்ந்தது மட்டுமல்ல, தேசபாதுகாப்போடு சம்பந்தபட்டது. எனவே அறிவியல் பூர்வமான தரவுகளையும் சேமித்துக்கொண்டார். அவரது விசாரணையின் துவக் கத்திலேயே தமிழக காவல்துறையின் கேவலமான வன்மம் மிகுந்த அணுகுமுறை தெரிந்தது. இருப்பினும் நீண்ட விசாரணைக்குப் பின் தன்னுடைய இறுதி அறிக்கையில், கீழ்வருமாறு எழுதி முடித்தார் “பி13 போத்தனூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 1067/2006 இல் இந்திய தண் டனை சட்டப்பிரிவு 120 (பி) 2/இ வெடிபொருட்கள் சட்டம் 1908, பிரிவு5இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவலறிக்கை  மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட தாகச் சொல்லப்பட்டு, அதற்காக தயாரிக்கப்பட்ட கைப் பற்றல் மகஜர்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை, பொய் யானவை என்று என்னுடைய விசாரணையில் தெரிய வந்தது. மேலும் என்னால் பதிவு செய்யப்பட்ட சாட்சி யங்களும், வாக்குமூலங்களும் மேற் கூறப்பட்ட தகவல் களை அறுதியிட்டு உறுதிப்படுத்துகின்றன. எனவே, இது பொய் வழக்கு என்று கூறி இவ்வழக்கை நான் முடிக்கிறேன்.’’

அவர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் மேலும் கூறுகிறார் “காவல்துறை அதிகாரிகளைத் தவிர, மற்ற சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த அனைத்து சாட்சியங்களும், மேற்படி வழக்கும் முற்றிலும் பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பதையும், மேலும் இந்த வழக்கில் கூறப்பட்டதைப் போல வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தும் விதமாக உண்மைகள் வெளிவந்துள்ளது” என்று கூறு கிறார். அதாவது காவல் துறையினர் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிகுண்டு கைப் பற்றப்படவில்லை. அப்படியாயின் ஏது அந்த வெடி குண்டு? யார் செய்தது? யார் போலிஸ் வசம் கொடுத்தது? வெடிகுண்டு செய்பவர்களோடு காவல்துறைக்கு உறவா? அல்லது அவர்களே வெடிகுண்டுகளை செய்தார்களா? தமிழக அரசாங்கம் விசாரித்ததா? விசாரிக்க வேண் டாமா? உண்மை வெளிவந்துவிட்டதால் வெடிகுண்டே இல்லை என்று கூறுவார்களா? அப்படியெனில் வெடி குண்டு வழக்கு ஏன் புனையப்பட்டது?

அடுத்து காவல்துறையினர் எப்படி திருட்டுத்தனமாக நடந்துக்கொண்டனர் என்பதற்கு அசைக்க முடியாத அத்தாட்சியை தருகிறார். குற்றம்சாட்டபட்டு கைது செய் யப்பட்ட 5 நபர்களின் வீட்டுக்கும் ஆய்வாளர் பால்ராஜ் என்பவர் தன்னுடன் ஒரு உதவி ஆய்வாளர், எட்டு தலைமைக் காவலர்கள், ஒரு காவலர், ஒரு கிராம நிர்வாக அலுவலர், ஒரு வருவாய் அலுவலருடன் சென்று கைது செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார். ஆனால் அவை அனைத்தும் பொய்யானவை யாகும். எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா. இவர்கள் அனைவரும் சென்று கைது செய்யப்பட்டதாக கூறும் நேரத்தில்  காவல்நிலையங்களில் நடக்கும் வருகைப் பதிவு நிகழ்வில் (ரோல் கால்) போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் காவல் நிலையங்களில் கலந்துகொண்டதாக காவல் நிலைய பொது நாட்குறிப்பில் பதியப்பட்டுள்ளது. ஆக இவர்கள் கைது செய்யச்சென்றது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது காவல் நிலையத்தில் பொய்யாக எழுதி இருக்க வேண்டும். இரண்டும் உண்மையாக இருக்க முடியாது. இது அப்பட்டமான விதிமீறல். அதே போல கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலருடன் சென்றதாகச் சொன்னதும் பொய்யானதுதான். இதை விசாரணையில் அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். இன்னும் நிறைய விபரங்கள் காவல்துறையை அம்பலப்படுத்துகிறது அந்த அறிக்கை.

யார் குற்றவாளிகள்...

பொய்வழக்கு புனையப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்ட அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் அந்த நேரத்தில் அடைந்த துன்பத்தை வார்த்தைகளால் வடிக்க முடியாது. ஒரு மாதகால சிறைவாசம், விசாரணையில் பட்ட மன உலைச்சல். அந்த ஐந்து குடும்பங்களும் அடைந்த வேதனை. சமூகத்தில் பட்ட அவமானங்கள். குண்டு மீண்டும் வெடிக்குமோ என்ற பீதி. அதனால் அதிர்ந்து போன அப்பாவி மக்கள். இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை? இந்த காயத்திற்கு மருந்திடுவது யார்? சி.பி. சி.ஐ.டி அறிக்கை அளித்து இரண்டு மூன்று ஆண்டுகளாகியும் பொய்யான குற்றச்சாட்டு புனைந்து பீதியை உண்டாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எந்த தண்டனையுமின்றி வெடிகுண்டு தயாரிப்பாளர் ரத்தினசபாபதி அதே கோவையில் மது விலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக தொடர்கிறார்.

இந்த சம்பவம் நடந்தது கலைஞர் ஆட்சியில்தான். காவல் துறையின் மீது குற்றம்சாட்டப்பட்டதும் அவர் ஆட்சியில் தான். சிறுபான்மையினர் நலன் காப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கலைஞர் இதுவரை மவுனம் சாதிப் பது எதனால். மைனாரிட்டி திமுக என அதிமுக தலைவி பேசியதை பார்த்து கொதித்தெழுந்து கோவையில் பேசிய முதல்வர் “ஆமாம் நாங்கள் மைனாரிட்டிதான் அதாவது மைனாரிட்டியை ஆதரிக்கும் மைனாரிட்டிகளின் ஆட்சி” என்று வார்த்தை ஜாலங்களை வீசுகிறார். வார்த்தைகளை அடுக்கி விளையாடும் எளிதான காரியமல்ல இது. குஜராத்தைப் போல அதிகாரத்தின் அடுக்குகளில் மறைந்து தனது கோரமுகத்தை இந்துத்துவா நிறுவுவதை எதிர்த்து சமர் புரிய வேண்டிய தருணம் இது. பெரியாரின் சுண்டு விரலை பிடித்து வந்ததாக தம்பட்டம் அடிப்பவர் என்ன செய்ய போகிறார்?

(ஆதாரம்: கோவை போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம். இலக்கிய சோலை 25, பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை600003)

Pin It

மனித உடலில் எழுபது சதம் தண்ணீர் இருப்பதும், இரத்தத்தில் தொண்ணூரு சதம் தண்ணீர் இருப்பதும், மனிதனுக்கு காற்றுக்கு அடுத்து, உடலியல், உயிரியல் தேவையாக மிக,மிக அவசியமானதாக தண்ணீர் இருந்து வருகிறது. நம் உடலின் தண்ணீர் தேவையை சமன் செய்யவும், உடம்பை வெப்பம் அடையாமல் உடலின் தட்டை சமன்செய்யவும் தண்ணீரால் மட்டுமே முடியும். நம் உடலின் உள்ளேயும், வெளிப்புறமாகவும், தினந்தோறும் சுத்தம் செய்வதும் பராமரிப்பதும், என தண்ணீர் தினந்தோறும் நமக்கு தேவைப்படுகிறது.

தண்ணீர் உடம்பில் உயவு பொருளாகவும், உடம்பை நெகிழ்வு உடையதாக வைத்துக் கொள்ளவும் தண்ணீர் உதவுகிறது. இதன் மூலம் மனிதன் தன் இருப்பை தக்கவைத்துகொள்கிறான். உடம்பில் ஒரு சதம் நீர் குறைந்தால் தாகம், வறட்சி ஏற்பட்டு விடும். தண்ணீர் தேவையை ஈடுசெய்ய தண்ணீர் அருந்தாவிட்டால், மயக்கமும், சோர்வும் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது. எனவே, மனிதன் தண்ணீர் இல்லாமல் வாழ இயலாது என்பது நமக்கு தெளிவானது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை உலக மனிதர்கள் தினந்தோறும் தங்கள் பயன்பாட்டிற்கென சென்னையில் 60 லிட்டரும், தில்லியில் 160 லிட்டரும், சீனாவில் 500 லிட்டரும், அமெரிக்காவில் 1000 லிட்டரும் பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலி போன்றவகைளில் 1700 லிட்டரும் சராசரி அளவாக ஒவ்வொரு மனிதனால் உபயோகபடுத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு வகையான உணவு பொருட்களை விவசாயத்தில் உற்பத்தி செய்யவும், நுகர்வு பொருட்களை உற்பத்தி செய்கின்ற நவீன தொழிற்சாலைகளிலும் தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய ஆயிரம் டன் தண்ணீர் தேவைப்படுகிறது. உலகின் பல கோடி மக்களுக்கு உணவு தேவையை நிறைவு செய்ய பல ஆயிரம் டி.எம்.சி (ஒரு டி.எம்.சி ஆயிரம் கோடி கன அடி நீர்) தண்ணீர் தினந்தோறும் தேவைப்படுகிறது. இச்சூழலுக்கு ஏற்றாற் போல் உலகின் நீர்வளம் இல்லை எனலாம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீர் உலகில் எழுபது சதம் இருந்தாலும் மனித பயன்பாட்டில் இருப்பது பெரும்பாலும் ஆற்று நீர் தான். உலக ஆறுகளின் நீர் வளம் உலகின் ஒட்டுமொத்த நீர்வளத்தில் பத்து லட்சத்தில் இரண்டு பங்காக இருந்து வருகிறது.

உலக நீர் வளத்தில் தொண்ணூற்றி ஏழு சதம் உப்பு நீராக உள்ளது. மூன்று சதம் மட்டுமே நன் நீராக உள்ளது. 3.5 சதம் உப்புள்ள நீர் நன்னீராகவும் இருக்கிறது. மூன்று சதம் நன்னீர் 68.7 சதம் பனிக்கட்டியாகவும் 30.1 சதம் பயன்படுத்த முடியாத நிலத்தடி நீராகவும், 0.3 சதம் மேற்பரப்பு நீராகவும் இருந்து வருகிறது. மேற்பரப்பு நீரில் 87 சதம் ஏரிகளிலும், 11 சதம் சதுப்பு நிலங்களிலும் உள்ளது. உலக நீர்வளத்தில் பத்து லட்சத்தில் இரண்டு பங்காக உள்ள மனிதன் பயன்படுத்தக்கூடிய நீரின் அளவு 48000 கன கிலோ மீட்டராகும். ஒரு கன கிலோ மீட்டர் நீர் 353 டி.எம்.சிக்கு சமமாகும். ஒரு டி.எம்.சி நீர் 1000 கோடி கன அடிக்கும் ஒரு கன அடி நீர் 28 லிட்டர் என கொள்ளலாம்.

பண்டைய சிந்துவெளி நாகரிக மக்களும், எகிப்து, அமேரியா, ரோம், மாயன் கலாச்சார மக்கள், அதீத தண்ணீர் நுகர்வு மற்றும் தவறான முறை களில் தண்ணீரை வீணடித்ததன் வழியாக தங்களின் நாகரிகங்களுக்கு தங்களுக்கு தாங்களே சவக்குழி தோண்டிக் கொண்டனர் என்பதை கவனத்தில் கொண்டால் நவீன நாகரிக மக்கள் ஆகிய நாம் தண்ணீரை பயன்படுத்துவதிலும், உபயோகப்படுத்துவதிலும் அதிக எச்சரிக்கை உணர்வோடு இருப்பது மிக அவசியமாகியுள்ளது. இல்லையெனில் அப்பண்டைய மக்களுக்கு ஏற்பட்ட கதிதான் நவீன மனிதனுக்கும் ஏற்படும்.

உலகில் தண்ணீரின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்ய பல நாடுகள் முயற்சி செய்வதால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. உலகின் தானிய உற்பத்தியில் சரிபாதிக்கும் மேல் உற்பத்தி செய்துவரும் சீனா, இந்தியா, அமெரிக்க நாடுகள் தங்களின் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவை வெகுவாக குறைத்துகொண்டே வருகின்றன. இந்நாடுகளில் ஆண்டுதோறும் சுமார் மூன்று அடி நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே செல்கிறது. இந்தியாவில் பாசனத் திட்டங்கள் மூலமே பஞ்சு£ப், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிக அளவு  தண்ணீரை உறிஞ்சுவதால், இங்கு நீலத்தடி நீர்மட் டம் ஆண்டுக்கு ஒரு மீட்டர் வீதம் குறைந்து கொண்டே வருகிறது. அமெரிக்காவில் தானிய உற்பத்தியில் பெருமளவு ஈடுபடும் மாநிலங்களான டெக்சாஸ், ஒக்லகாமா, காந்சாஸ் ஆகியவற்றில் நிலத்தடி நீர் மட்டம் 30 மீட்டர் வரை தற்போது குறைந்து போயுள்ளது.

சீனாவிலோ நீர் மட்டம் ஆண்டுக்கு 3 மீட்டர் வரை குறைந்துகொண்டே வரு கிறது. பாகிஸ்தானிலுள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆண்டு தோறும் 3.5 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. 15 ஆண்டுகளில் தண்ணீர் துளியும் கிடைக்காமல் அல்லாடும் நிலைமையில் இருக்கிறது. வரும் 50 ஆண்டுகளில் தண்ணீரே தன் நாட்டில் இல்லாமல் போகச் செய்யும் அளவுக்கு சௌதி அரேபியா மிக அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது, ஆப்பிரிக்கா, அராபியா, நாடுகளில் மறு நிரப்பீடு செய்ய இயலாத நூற்றுக்கணக்கான நீர் நிலைகளைக் கொண்டு உள்ளது. இவை தீர்ந்து போகும் பட்சத்தில் அந்நாடுகள் தீராத தண்ணீர் பஞ்சத்தில் மாட்டிக் கொள்ள இருக்கின்றன. உலகம் தழுவிய அளவில் வறட்சியான ஒதிபடுகைகளைமட்டும் விட்டுவிட்டு தண்ணீரை பாசனத்திற்காக உறிஞ்சுவதும், பின் வரும் ஆண்டுகளில் மனிதகுலம் சந்திக்கின்ற மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும்.

உலகின் மனிதன் பயன்பாட்டிற்கான நீரின் அளவு 48000 கன கிலோ மீட்டர்கள் எனில், தமிழ்நாட்டில் 4.8 கனகிலோ மீட்டர்கள் தான் உள்ளது. உலக அளவில் பத்தாயிரத்தில் ஒரு பங்கே உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் மக்கள் தொகை நூறில் ஒரு பங்காக இருப்பதை நினைவில் கொண்டால் உலக மாந்தனுக்கு கிடைக்கும் நீரில் நூறில் ஒரு பங்கு நீரே தமிழ் மக்களுக்கு கிடைத்து வருகிறது. எனவே, தமிழ்நாடு மிகமிக அதிக நீர் பற்றாக்குறையோடு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் பிரம்மபுத்திராநதி 1000 கனகிலோ மீட்டர் நீரையும், மகாநதி 500 கன கிலோ மீட்டர் நீரையும், ஒவ்வொரு ஆண்டும் வீணாக கடலில் சென்று கலப்பதை ஒப்பிட்டால் தமிழ்நாட்டின் தேவையைப் போல 30 மடங்கு நீரை நாம் வீணாக்கி வருகிறோம். இவ்வகையான அதிகபட்ச உபரி நீர்கள், நதிகள் அனைத்தையும் தேசியமயமாக்கினால் தான் தமிழ்நாட்டைப் போல நீர் பற்றாக்குறை மாநிலங்களை பாதுகக்க முடியும்.

தமிழ்நாட்டின் ஆறுகளின் மேற்பரப்பு நீர் 830 டி.எம்.சியும், மற்ற மாநிலங்களிலிருந்து வரும் நீரின் அளவு பயன்பாட்டிலுள்ள நிலத்தடி நீரின் அளவு 440 டி.எம்.சியும் சோர்த்து 1700 டி.எம்.சி நீரையும் தமிழ்நாடு ஆண்டு தோறும் பெற்று வருகிறது. தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை அளவு சுமார் 1000 மில்லிமீட்டராகும். இதன் மூலம் நமக்கு 4,343 டி.எம்.சி மழை நீர் கிடைத்தாலும் இவற்றை சேமித்து பயன்படுத்த எந்தவித உருப்படியான நடவடிக்கையும் எடுக்காததாலும் இருக்கின்ற ஏரிகள், குளங்களை ஒழுங்காக பராமரிக்காததாலும,அனைத்தும் கடலில் சென்று வீணாக கலந்துவிடுவதால் நமக்கு கிடைக்கும் சொற்ப அளவான  83 டி.எம்.சி நீரே, அதாவது மொத்த மழை அளவில் 20 சதம் மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம்.

தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 325 லட்சம் ஏக்கர் நிலமாகும். இதில் நிளங்கள், தரிசு நிலங்கள் 48 சதமாகும் பிற வகைகள் 12 சதமாகும். மீதியுள்ள 40 சதமானமான 130 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. 75 லட்சம் ஏக்கர் நீர்ப்பாசன வசதியுடையவை. ஆற்று கால்வாய்கள் மூலம் 20 லட்சம் ஏக்கரும், ஏரிகள் மூலம் 15 லட்சம் ஏக்கரும், கிணறுகள் மூலம் 40 லட்சம் ஏக்கரிலும் பாசனம் நடைபெறுகின்றன. இதில் 45 லட்சம் ஏக்கரில் நெற்பயிர், கரும்பு, தென்னை பயிர்களும், பிற பயிர்கள் அனைத்தும் சுமார்30லட்சம் ஏக்கர் பரப்பளவிலும் பயிரிடப்படுகின்றன. இதற்கு தேவைப்படும் நீரின் அளவு 1500 டி.எம். சி மொத்தமுள்ள 1700 டி.எம்.சி யில் மீதியுள்ள 200 டி.எம்.சி நீர், குடிநீர் தொழில் துறைஎன பயன்படுத்தப்படுகிறது.

வரும் ஆண்டுகளில் தொழிற் சாலைகள் பெருகி வருவதால் அதனின் தண்ணீர் தேவை500 டி.எம்.சி யாக உயர வாய்ப்புள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீரின் அளவும் மாறுபடக் கூடும். விவசாய நிலம் அதிகரிக்குமாணால் அங்கு நீரின் தேவை அதிகரிக்கும். இந்த நிலைமையில் நம் தண்ணீர் தேவையை ஈடுகட்ட நவீன உத்திகளை பயன்படுத்த வேண்டி உள்ளது. இவைகளை பயன்படுத்தி 2040ஆம் ஆண்டுகளுக்கு பிறகு நமது தண்ணீர் தேவையான சுமார் 2600 டி.எம்.சி அளவை எட்ட வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு மேலதிக தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. அதற்கான குறைந்தபட்ச முன் தயாரிப்பு பணிகளை நாம் இப்போத துவங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நம் முன்னோர்கள் மழை நீரை சேமிக்க கட்டிய 39200 ஏரிகளை மிகச்சரியாக பயன்படுத்துவதன் மூலம், நம் தண்ணீர் தேவைகளில் சுமார் 80 சதம் பூர்த்தி செய்து கொள்ள முடியும். எனவே வரும் காலங்களிலாவது ஏரிகளில் வீட்டு மனைகள் வணிக வளாகங்கள், நீதி மன்றங்கள் பேருந்து நிலையங்கள் கட்டுவதை நாம் தவிர்க்க வேண்டும். (எ.கா) முன்னூறுஏரிகள் மீது தற்போது உள்ள சென்னை மாநகரம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலதிக தொழில் நுட்பங்களோடு வாங்கவுள்ள இடங்களில் அணைகள் கட்டுவதும், காட்டாறுகளில் தரம்வாய்ந்த தடுப்பணைகள் கட்டுவதும் மிக அவசியம்.

நெல் உற்பத்திக்கு தற்போது பயன்படுத்தப் படும் அதிகபட்ச அளவான ஒரு டன் நெல்லுக்கு ஆயிரம் டன் தண்ணீர் என குறைக்கப்பட வேண்டும். நூறுடன் நீரே போதும் என்பதே நவீன விஞ்ஞானத்தின் முடிவு.

சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காசோளம், திணை, வரகு போன்ற பயிர் வகைகளை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்கப்பட வேண்டும். இதனால் பாசனத்திற்கு என செலவாகும் தண்ணீரை பெரும் அளவில் சேமிக்க  முடியும்.

மக்கள் தற்போது பிரதானமாக அரிசி உணவையே நம்பி உள்ள நிலைமையை மாற்றி மற்ற உணவு வகைகளுக்கு பெரும் அளவில் மாற வழி காண வேண்டும்.

சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறைகளை கைகொள்வது.

நீர் வளத்தை பாதுகாத்திடவும், பராமரிப்பு, சேமிப்பு, பயன்படுத்துவது போன்றவற்றில் தமிழக மக்களுக்கு போதிய அளவில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

தனியார் மயத்தை தடுத்து நிறுத்தி, அரசே நீர் நிலைகளை ஏற்று நடத்த வழி காணுதல் வேண்டும். நீர் நிலைகளை பொதுவில் வைத்தல்.

நீர் நிலைகளை பராமரிக்க, பாதுகாக்க மக்கள் குழுக்களை உருவாக்குவது என நாம் செயல்பட வேண்டி இருக்கிறது.இதன் மூலம் மட்டுமே தமிழகத்தின் தண்ணீர் தேவையை வருங்காலத்தில் ஈடுசெய்ய முடியும்.

(உதவியவை: யுனஸ்கோவின் “தண்ணீர் நெருக்கடி” பிரசுரம் 1995

விக்கி பிடியாக இணையதளம்.

தமிழ்நாடு அரசு இணையதளம்.

சமூக ‘விஞ்ஞானம்’ காலண்டு இதழ்கள்.

‘உன்னதம்’ மாத இதழ்கள்)

Pin It

அழிவை’ என் இரு கண்களால் காண வேண்டும்!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட நாகசாகி மற்றும் ஹிரோஷிமா நகரங்கள் கொடுரங்களை எதிர்கொண்டு நிமிர்ந்து நின்றுள்ள நகரங்களாகப் பார்க்கிறோம். ஆனால் வெறும் சடங்காக இந்த இரு நாட்களின் நிகழ்வுகள் இருந்துவிடக்கூடாது என்று அந்த நகர மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆகஸ்டு 4 முதல் 6 ஆம் தேதி வரை ஹிரோஷிமா நகரில் நடந்த உலக மாநாடு அதை உறுதிப்படுத்தியது. மேற்கத்திய ஊடகங்களால் மறைக்கப்பட்ட இந்த மாநாடு ஏ மற்றும் எச் ரக அணுகுண்டுகளுக்கு எதிராக நடத்தப்பட்டதாகும். ஜப்பானின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 400 பிரதிநிதிகள் இதில் பங்கேற்றார்கள். 85 வயதாகும் ஹிபாகுஷா சுபோய் சுனாவ் இந்த மாநாட்டில் சிறப்பு உரையாற்றியவர்களில் ஒருவராவார். அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவராக அவர் இருக்கிறார். வயதைப் பொருட்படுத்தாமல் உணர்ச்சிகரமான உரையை அவர் இந்த மாநாட்டில் ஆற்றினார்.

எனது இரண்டு சொந்தக்கண்களால் அணுஆயுதங்கள் அழிவதைப் பார்க்காமல் நான் சாக மாட்டேன் என்று கர்ஜித்தார். அவரது எண்ணத்தில் இளமை தெரிந்தது. முகத்தில் உறுதி இருந்தது. அவரது கருத்தை அடுத்தபடியாகப் பேசிய அனைவருமே வழிமொழிந்தனர். இந்த மாநாட்டுப் பிரதிநிதிகளிடமிருந்த கருத்துகளில் பிரதானமானதே, அமெரிக்காவுடனான அணுஆயுதக்குடை உடன்பாட்டை ரத்து செய்ய வேண்டுமென்பதாகும். அணுஆயுதங்களின் நேரடிப் பாதிப்பினை உணர்ந்துள்ள நாடு இத்தகைய உடன்பாட்டிற்கு போகாமல் ஒட்டுமொத்த அணுஆயுத ஒழிப்பிற்காகப் பாடுபட வேண்டுமென்பதுதான் மாநாட்டின் பொதுக்கருத்தாக இருந்தது.

நிறைவு நிகழ்ச்சியில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஷி கசுவோ பங்கேற்று சிறப்புரையாற்றினார். சர்வதேச அரசியல் நடவடிக்கைகளின் மூலமாக அணுஆயுதங்களை அழித்தொழிக்கலாம் என்று பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர். நிறைவாக உலக மக்களுக்கு அறைகூவல் ஒன்றும் விடப்பட்டது. அணுஆயுதமற்ற உலகை உருவாக்கும் இலக்கை நோக்கி ஹிபாகுஷா முதல் உலகின் அனைத்து இளைஞர்கள் வரை கைகோர்த்து செல்வோம் என்று அந்த அறைகூவல் அழைப்பு விடுத்தது.

அமெரிக்காவின் கனஜோர் ஆயுத விற்பனை

சவூதி அரேபியாவின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. நவீன தொழில்நுட்பம் வாய்ந்த போர் விமானமான எப்15 சவூதி அரேபியாவில் வந்து இறங்கியுள்ளது. ஒன்றல்ல.. இரண்டல்ல... 84 எப்15 ரக போர் விமானங்களை சவூதி அரேபியாவிடம் அமெரிக்கா விற்கப்போகிறது. சவூதி அரேபியாவுக்கு போர் விமானங்களை விற்றால் அந்நாட்டின் எதிரிநாடான இஸ்ரேலுக்கு கோபம் வராதா...? வந்தது. ஆனால், தொலைதூர இலக்கைக் குறிவைத்துத் தாக்கும் திறன் இந்த போர் விமானங்களில் அளிக்கப்படவில்லை என்று கூறி இஸ்ரேலிடம் சொல்லி விட்டார்கள். இதில் இரண்டில் யாரோ ஒருவர் ஏமாந்துள்ளார். நவீன விமானம் என்று சொல்லி வந்தவர்கள் தாக்குதலுக்கான முக்கியமான வசதியை எடுத்து விட்டார்கள் அல்லது எடுத்து விட்டதாக பொய் சொல்லியிருக்கிறார்கள். இந்த இரண்டில் ஒன்றுதான் நடந்திருக்க வேண்டும். சவூதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள் மீது அமெரிக்காவின் கண்கள் வலுவாகப் பதிந்துவிட்டதுதான் இந்த விற்பனைக்குக் காரணமாக உள்ளது. பொதுவான எதிரி இஸ்ரேல் கிடையாது, ஈரான்தான் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான எதிரி என்ற கருத்தைத் திணிக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளது. அந்த எதிரியைக் காட்டி அனைத்து நாடுகளின் தலைகளிலும் போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை திணித்து வருகிறார்கள்.

இராக் ஆக்கிரமிப்பின்போது ஜோர்டானின் மன்னர் அமெரிக்காவின் பக்கத்தில் நின்றார். அந்த நாட்டுக்கு ஏராளமான உதவியைச் செய்கிறோம் என்று அமெரிக்க அரசுத்தரப்பில் உறுதி தரப்பட்டது. உதவி என்றால் வேறொன்றுமில்லை, ஏற்கெனவே இருக்கும் போர் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டன. ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இதுதான் அமெரிக்கா சொன்ன உதவி. தரப்பட்ட இந்த அழிவாயுதங்களுக்கு பணமும் வாங்கிக் கொண்டார்கள். அப்புறம் என்ன உதவி? ஒரு திரைப்படத்தில் தாயத்து தந்து ஏமாற்றுவார் போலி மந்திரவாதி. 600 ரூபாயை வாங்கிக்கொண்டு அந்தத் தாயத்தை வடிவேலு கையில் கட்டுவார். இது எதுக்குப்பா..ன்னு வடிவேலு கேட்க, ராத்திரி 12 மணிக்குக்கூட சுடுகாட்டுக்கு தைரியமாப் போகலாம் என்பார் மந்திரவாதி. ராத்திரி எதுக்குப்பா தனியா சுடுகாட்டுக்குப் போகணும் என்று கேட்பார் வடிவேலு. போலி மந்திரவாதிபோல்தான் அமெரிக்கா நடந்து கொள்கிறது. ஆயுதங்களை விற்றுவிட்டு இனி தைரியமாக ஈரானை எதிர்கொள்ளலாம் என்கிறது. எதற்கு ஈரானை எதிர்கொள்ள வேண்டும் என்பது புரியாமல் சவூதி அரேபியா முழிக்கிறது. மந்திரவாதியின் வியாபாரம் நடப்பது போல அமெரிக்காவின் ஆயுத விற்பனை கன ஜோராக நடக்கிறது.

சூடு பிடிக்கிறது தேர்தல்

செப்.26 அன்று நடக்கப்போகும் வெனிசுலா தேசிய சபையின் தேர்தல் சூடுபிடித்துள்ளது. 165 இடங்கள் இந்த சபையில் உள்ளன. தற்போது ஜனாதிபதியாக இருக்கும் சாவேஸ் ஆதரவு பெற்ற ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியும், ஐக்கிய ஜனநாயக வட்டமேசை என்ற பெயரில் இணைந்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணியும் எதிரெதிர் நிற்கின்றன.

ஒரே ஒரு அம்சம் குறித்தே இந்த இரண்டு அணிகளும் பெரும்பாலும் விவாதித்து வருகின்றன. சாவேஸ் முன்னிறுத்தும் 21ஆம் நூற்றாண்டு சோசலிசம் நல்லதா, கெட்டதா என்பதுதான் அது. 1998 ஆம் ஆண்டுக்கு முன்பாக மோசமான கொள்கைகளைக் கடைப்பிடித்து மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்தவர்கள்தான் தங்களுக்குள் இருந்த பல வேறுபாடுகளை மறந்துவிட்டு சோசலிசம் வேண்டாம் என்று கொடி பிடிக்கிறார்கள்.

மறுபுறத்தில், சோசலித்தை நோக்கிச் செல்லும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள சாவேசின் வழிகாட்டுதலில் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி தனது கருத்துக்களை எடுத்து வைக்கிறது. அமைப்பு ரீதியான செயல்பாடுகளே நாட்டின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத்தீர்வை முன்வைக்கும் என்கிற சாவேசின் வலுவான நம்பிக்கைதான் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி உருவாவதற்கு வழிவகுத்தது.

ஒரு கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வெனிசுலாவில் உள்ளனர். தற்போதுள்ள நிலையில் மொத்தமுள்ள 165 இடங்களில் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சிக்கு 124 இடங்கள் கிடைக்கலாம் என்றும், எதிர்க்கட்சிகளுக்கு 41 இடங்கள் கிடைக்கலாம் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள எட்டு மாகாணங்களில், நான்கில் உள்ள அனைத்து இடங்களையுமே ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாவேசின் 21ஆம் நூற்றாண்டு சோசலிசம் என்ற முழக்கத்திற்கு மக்கள் ஆதரவு என்பதுதான் தற்போதைய நிலை.

Pin It

பகீரத பிரயத்தனம் செய்து இந்திய மக்களின் உயிருக்கு விலை நிர்ணயித்து விட்டது காங்கிரஸ்  திமுக கூட்டணி அரசு. விலை அப்படியன்றும் அதிகமில்லை. வெறும் ரூ.1,500 கோடி மட்டுமே. கோடிக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் அணுஉலை விபத்து ஏற்பட்டு அழிந்து போனால் விசாரணையெல்லாம் முடிந்து சில பல ஆண்டுகள் கழித்து அவர்களது குடும்பத்தினருக்கு கிடைக்கப் போகிற இழப்பீடு இது.

இந்தியர்களின் உயிர் இவ்வளவு மலிவானதுதான் என்பதை உலகுக்கு உணர்த்தியதால் மன்மோகன்சிங்கிற்கு வாஷிங்டனில் பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இதற்காகத்தான் காத்திருந்தோம் இராஜகுமாரா என்று கைகொட்டி சிரிக்கும் மிகப்பெரும் அணுசக்தி கம்பெனிகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு படையெடுக்க தயாராகிவிட்டனர். இதற்கு முத்தாய்ப்பாக, ஜனாதிபதியே வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகிறார். இந்தியா என்றும் எங்கள் பக்கமே என்ற பெருமித உணர்வை ஒபாமா அடைவதற்கான அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டது மன்மோகன்சிங் அரசு.

அணு விபத்து பொறுப்பு மசோதா 2010ஐ மக்களவையில் ஆகஸ்ட் 25 புதனன்று நிறைவேற்றியதன் மூலம், 2005 ஜூலை 18ஆம் தேதி வாஷிங்டனில் டாக்டர் மன்மோகன்சிங்கும், அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சும் சந்தித்துக் கொண்டபோது, உருவான இந்திய  அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் மிக முக்கிய கட்டம் நிறைவு பெற்றுள்ளது.

இந்தியா  அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக, அணு விபத்து பொறுப்பு மசோதாவை மன்மோகன்சிங் அரசு உருவாக்கியது. இந்த மசோதாவை அமெரிக்காவின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காகத்தான் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியபோது, சீறி பாய்ந்தார் நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் பிருதிவி ராஜ் சவாண். பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளுடன் கூடத்தான் அணுசக்தி உடன்பாடு மேற்கொண்டுள்ளோம். எப்படி அமெரிக்காவின் நிர்ப்பந்தம் என சொல்கிறீர்கள் என்று அவர் கேட்டார்.

நாடாளுமன்றத்தில் இவர்கள் உண்மை பேசுவது அரிது. உண்மையில், அணுவிபத்து பொறுப்பு மசோதா உதயமானதே அமெரிக்க அமைச்சரின் மூளையில்தான். அணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்தும்போது அமெரிக்காவிலிருந்து ஏராளமான பன்னாட்டு அணுசக்தி கம்பெனிகள் இந்தியாவுக்கு வரும். அவர்களது அணுஉலைகள் இங்கு நிறுவப்படும். 40க்கும் மேற்பட்ட அணு உலைகள் அமைப்பதற்கான திட்டத்தை ஏற்கெனவே அவர்கள் தயாரித்துவிட்டார்கள். அப்படி வந்து, இந்தியாவில் அணு உலைகளை நிறுவிய பின்னர் எப்போதேனும் திடீரென விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? இந்த கேள்விக்கு விடை சொல்லியே ஆக வேண்டுமென இந்திய அரசுக்கு கிடுக்கிபிடி போட்டது அமெரிக்க வெள்ளை மாளிகை.

2008 செப்டம்பர் 10ஆம்தேதி வாஷிங்டன் சென்றிருந்த வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கரமேனனிடம் அமெரிக்க வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர்களில் ஒருவரான வில்லியம் பர்ன்ஸ் இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டேயிருந்தார். விபத்து ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பில்லை என்று சொன்னால்தான் உங்களுக்கு அணு உலைகள் கிடைக்கும் என்று கிட்டத்தட்ட அவர் மிரட்டினார். ஒருவேளை, பொறுப்பேற்க வேண்டுமென்று சொன்னால், போனால்போகட்டும் என்று ஒரு சிறு தொகையை மட்டுமே கொடுப்பதற்கு சம்மதிக்கலாம் என அணுசக்தி கம்பெனி முதலாளிகள் வற்புறுத்துவதாக பர்ன்ஸ் சொன்னார். இதற்கு விடைகாண அமெரிக்காவின் வழிகாட்டுதலில் மன்மோகன்சிங் அரசு உருவாக்கிய இந்தியச் சட்டம்தான் அணு விபத்து பொறுப்பு மசோதா.

இந்த மசோதா, அணு உலையை நிறுவும் கம்பெனி, ஏதேனும் விபத்து ஏற்பட்டு பேரழிவு நேரிட்டால் ரூ.1500 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று வரையறை செய்துள்ளது. அதாவது 300 மில்லியன் டாலர்.

போபாலில் விஷவாயுக் கசிவால் சுமார் 25 ஆயிரம் பேர் பலியானார்கள். அவர்களது மரணத்திற்கு 25 ஆண்டு காலம் கழித்தும் கிடைத்த இழப்பீடு 470 மில்லியன் டாலர். போபாலில் நடந்தது அணு விபத்து அல்ல. வெறும் விஷவாயு கசிவே. விஷவாயு கசிந்ததற்கே 25 ஆயிரம் பேர் பலியென்றால், அணு விபத்து ஏற்பட்டால் எத்தனை பேர் என்பதை எளிதில் உணர முடியும். விஷவாயு கசிவு விபத்திற்கே 470 மில்லியன் டாலர் எனும்போது, அதைவிட மிகப் பெரும் அழிவு ஏற்படும்போது வெறும் 300 மில்லியன் டாலர் மட்டுமே இழப்பீடு என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது அரசு. அதனால்தான் அமெரிக்க அணுசக்தி கம்பெனிகள் மன்மோகன்சிங்கை கொண்டாடுகின்றன.

முதலில், இந்த மசோதாவை முன்வைத்தபோது, இதைவிட கேவலமான ஒரு தொகையையே வெறும் ரூ.500 கோடி  இழப்பீடாக அரசு வரையறை செய்தது. இடதுசாரிக் கட்சிகள் கொந்தளித்தன. எதிர்க்கட்சிகளை அணிதிரட்டின. பிறகு இந்த மசோதா மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்விற்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழு ஆய்வு செய்து, பல்வேறு முக்கிய திருத்தங்களை பரிந்துரை செய்தது. அணு உலையை இந்தியாவுக்கு சப்ளை செய்யும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கம்பெனிகள் எப்படிப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அவர்கள் அளிக்கும் அணு உலையில், அதற்கான சாதனங்களில் குறைபாடுகள் இருந்தால், அதன்மூலம் விபத்து ஏற்பட்டால் எப்படியெல்லாம் அவர்கள் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இடதுசாரிக் கட்சிகளும் பல்வேறு முக்கிய திருத்தங்களை முன்வைத்தன. குறிப்பாக, இழப்பீடு என்று வரும்போது, ரூ.15 ஆயிரம் கோடி நிர்ணயிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா திருத்தம் கொண்டு வந்தார். ஆனால் பாசுதேவ்வின் திருத்தம் மட்டுமல்ல, நாடாளுமன்றநிலைக் குழுவின் திருத்தங்களையே கூட புறந்தள்ளிவிட்டு, அமெரிக்க கம்பெனிகளுக்கு மேலும் சலுகை அளிக்கும் விதமாக தானே புதிய திருத்தங்களை செய்து நிறைவேற்ற முயன்றது அரசு.

ஆனால், முதலில் சமரசம் செய்து கொண்ட பாஜக, அணு உலையை நிறுவும் அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு தனியார் நிறுவனங்களும் 'உள்நோக்கத்துடன்' அணு உலை விபத்து ஏற்படுத்தியிருந்தால் மட்டுமே இழப்பீடு தர வேண்டும் என்று மன்மோகன் அரசு மசோதாவை புதிதாக திருத்தியதால் அதை எதிர்ப்பதாக அறிவித்தது. அணு விபத்து ஏற்பட்டு எல்லாம் அழிந்து போன பிறகு, அதில் உள்நோக்கம் இருந்ததா? இல்லையா? என்பதை எவராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணமே, இப்படிப்பட்ட திருத்தத்தை  செய்வதற்கான அடிப்படைக்காரணம். இந்த திருத்தத்தோடு மசோதா நிறைவேற்றினால், அமெரிக்க கம்பெனிகள் எந்த பொறுப்பும் ஏற்காமல் மிக எளிதாக தப்பித்துவிட முடியும்.

இதை இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். பாஜகவும் எதிர்ப்பதாக அறிவித்தது. வேறு வழியின்றி அரசு இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. உள்நோக்கம் என்ற வார்த்தையுடன் கூடிய திருத்தத்தை கைவிடுவதாக மன்றாடியது. எனினும், இடதுசாரிகள் மசோதாவை உறுதிப்பட எதிர்த் தனர். மசோதா அப்பட்டமாக அமெரிக்க கம்பெனிகளுக்கு ஆதரவானது; இந்திய மக்களின் உயிருக்கு ஆபத்தானது என்பதை உரத்து முழங்கினர்.

எனினும், காங்கிரஸ், திமுக,  மம்தா கட்சியின் எம்.பி.க்கள் ஆதரவு மட்டுமல்லாமல், துவக்கத்தில் எதிர்ப்பதுபோல் நாடகமாடிய பாஜகட்சியும், இதர சில சுயேட்சைகளது ஆதரவுடன் மசோதா மக்களவையில் நிறைவேறிவிட்டது. இந்த மசோதா நிறைவேறிய தருணம் இந்திய மக்களின் உயிருக்கு விலையும் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.

Pin It

தேசத்தின் மாதிரிக் குழந்தைகளை, விமான விளம்பரம் துவங்கி, சாதாரண ஜட்டி விளம்பரம் வரை தினமும் தொலைக்காட்சிகளில் சுமார் 200 முறை காட்டுகிறார்கள். பார்த்தால் மட்டும் போதுமா, எதுவும் தாய்மார்களுக்குப் புரிந்தபாடில்லை. குழந்தைகளை இப்படியா வளர்ப்பது?. உலகின் எடை குறைந்த குழந்தைகளில் 5 சதம் நைஜீரியா வில் வாழ்கிறார்கள். மக்கள் தொகையில் நம்மை விஞ்சும் சீனா உட்பட எல்லா வளரும் நாடுகளையும் சேர்த்துக் கூட்டினாலே 53 சதம் தான் வருகிறது, இந்தியாவில் மட்டும் 43 சதம் (2009, யுனிசெஃப்). இந்தியாவின் வளர்ச்சியைப் பாருங்கள், 9 புள்ளிகள் வளர்ந்திருக்கிறது. 11 லட்சம் கோடிக்கு வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறது மத்திய அரசு. இப்படி உண்மை இருக்கையில், தாய்மார்கள் பொறுப்பற்று நடந்துகொண்டால் உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்வது எப்படி?.

மேற்சொன்ன வாசகம் கற்பனைதான், ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் அனைத்தும் உண்மை. குளிரூட்டப்பட்ட கார்களில் பவனி வரும் நமது நாட்டின் அமைச்சர்கள் வரும் நாட்களில் இப்படியும் பேசலாம்.

இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகளே .., இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சுதந்திரத்திற்கு முன்னரும், இப்பொழுதும் நம் குழந்தைகளில் பெரும்பாலோர் சவலைக் குழந்தைகளாகவே தொடர்கிறார்கள். அவர்கள் எடை குறைவானவர்களாக, உயரம் குறைந்தவர்களாக சத்துக் குறைபாட்டுடன் வாழ்கிறார்கள். சத்துக்குறைவு மூளையின் செயல்பாட்டை தடுக்கிறது. இதனால் அவர்களின் கல்வியில், சமச்சீரற்ற போட்டி நிலை  ஏற்படுகிறது. மேலும், அவர்கள் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

சத்துக்குறைவினால் இந்தியாவில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் வருடத்திற்கு 2 லட்சம் பேர் செத்து மடிகிறார்கள். அதாவது, ஒரு சிறு நகரமே பூண்டோடு அழிக்கப்பட்டு, மயானங்களில் புதைக்கப்பட்டு விடுகிறது. எங்கோ தூர தேசத்தில் நடக்கும் கொலை பாதகங்களை கண்டு துடிக்கும் நம் நாட்டு மக்களுக்கு, சொந்த நாட்டில் நடைபெறும் இதுபோன்ற உண்மைகள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. நமது வருங்காலத்தை நோஞ்சானாக்கும் இந்த தாக்குதல் தற்செயலானதல்ல.

உலகமய காலத்தில்தான், இந்தியாவின் கிராமப்புற மக்களும், பழங்குடி மக்களும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்கள். பட்டினியும், வறட்சியும் வரலாறு காணாதவகையில்  அதிகரித்துள்ளது. இது தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பை குறைத்துள்ளது. இரண்டாவது,  பொது விநியோகத்திட்டத்தில் ஏற்பட்ட சீர்குலைவானது மக்களுக்கு கிடைத்துவந்த குறைந்தபட்ச உணவு உத்திரவாதத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நிலைமை இத்தனை மோசமாகியுள்ள போதும், மத்திய அரசு 100 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்புக்காக ஒரு வருடம் முழுக்க செலவிடும் தொகை எவ்வளவு? வெறும் ரூ.450 கோடி. இந்த தொகையை அதிகரிக்கக் கேட்டால், நிதிச்சுமையை அரசு தாங்காது என நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

மற்றொரு புறம், இந்தியாவின் சொத்தான இந்திய ஜவுளிக் கழகத்திற்கு சொந்தமான நிலங்கள் ஆன் லைனில் ரூ.5000 கோடிக்கு ஏலம் விடப்படுகிறது. மத்திய அமைச்சரே இதனை முன்நின்று நடத்துகிறார். இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியின் பங்குகளை விற்க அரசு அவசர அவசரமாக சட்டம் இயற்றுகிறது. ஆனால் இந்திய உணவுக் கழகத்தில், புளுத்துப்போய், எலிகளுக்கு இறையாகிக் கொண்டிருக்கும் சுமார் 6 லட்சம் டன் தானியங்களை உச்சநீதிமன்றமே உத்தரவிட்டபோதிலும் அதனை மக்களுக்கு விநியோகிக்க மனமின்றி முகம் திரும்பிக் கொள்கிறார்கள், ஆட்சியாளர்கள்.

இப்போது ஒரு சட்டம் கொண்டுவரப்போவதாக தம்பட்டம் அடிக்கிறது. இந்த சட்டம் மக்களின், உணவுப் பாதுகாப்பை (?) உத்திரவாதப்படுத்தும் என்று சொல்கிறார்கள் . உண்மையில், அது மக்களுக்கு கிடைத்துவரும் உணவுப் பொருளின் அளவைக் குறைப்பதுடன், பொது விநியோகத்தையும் தனியாருக்கு தாரை வார்ப்பதாக உள்ளது. மத்தியில் ஆட்சி தொடர இடதுசாரிகள் ஆதரவு தேவைப்படாத ஆளும் வர்க்கங்கள் ஏழைகள் மீது அப்பட்டமான தாக்குதலைத் தொடர்கின்றன.

உணவுக்கும், உடைக்கும் இருப்பிடத்திற்கும் அல்லாடும்  மக்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிகிறார்கள். ஆனால், முதலாளித்துவ அரசியல் கட்சிகளோ, நிலைமையை மாற்றத் தயாரில்லை. தேர்தல்களில் அவர்கள், மக்களையும், வாக்குகளையும் விலைக்கு வாங்க கோடி கோடியாய் பணம் செலவிட தயாராய் இருக்கிறார்கள். இந்த நிலை ஏன்?. நம்  நாட்டின் தலைமை இன்றளவிலும் பெருந் தன்மையானவர்களிடம் இருந்ததில்லை. மாறாக பொதுவாழ்க்கையின் எச்சங்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். மக்கள் விடியலுக்கான அரசியல் இன்னும் பெரும்பாலான மக்களைச் சென்றடையவில்லை.

மேற்சொன்னதெல்லாம் நாம் குறிப்பிட்டது, ஆம், அரசியல் ஒரு சாக்கடை எனும் நடுத்தர வர்க்க  மனநிலைக்கு ஒத்து ஊதுவதற்காக அல்ல. அந்தச் சாக்கடையை சுத்தம் செய்யாமல் சமூக முன்னேற்றம் சாத்தியமில்லை என்பதை அறிவிக்க.

நமது நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும், ஆளும் வர்க்கத்தின் இரக்கமற்ற தாக்குதலில் இருந்து காப்பாற்றவேண்டும். அதற்கான சூத்திரமும் மக்களிடம்தான் அடங்கியிருக்கிறது. பசியில் துடிக்கும் மக்களின் பாதுகாப்பை, பணக்காரர்களின் ஆட்சி ஒருபோதும் ஏற்படுத்தாது. என்ன செய்வது? என்ற கேள்வியுடன் மக்கள் கையைப் பிசைகிறார்கள்.

....அதிகரித்துவரும் நெருக்கடிக்கு காரணத்தை அரசு தெரிந்துகொள்ளவில்லை. மக்களின் ஸ்தாபன ரீதியிலான ஒற்றுமையின் முன் அது இணங்க வேண்டியதுதான்... நிலையை மாற்ற அவர்கள் முன்வர மாட்டார்கள். நெருக்கடியை தாக்கி தகர்க்க வேண்டியவர்கள் நாம், நமது மக்கள். (மாற்றத்தை ஏற்படுத்தும்) சக்தி நமது கையில் இருக்கிறது.  (9.6.1943) ப.ஜீவானந்தம். மேற்சொன்ன வாசகம் நமக்கு கட்டளையிடுகிறது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டமாய், வலுப்பெறட்டும் எதிர்த் தாக்குதல்.

Pin It