தில்லியில் நடைபெற்ற தேர்தலில் மிகப் பெரிய, அதிர்ச்சி தரக்கூடிய செய்தியான 104 சட்ட விரோத குடியேறிகளை அமெரிக்க ராணுவ விமானத்தில் கொண்டு வந்து அமிரிஸ்தர், பஞ்சாப் மாநிலத்தில் இறக்கியது என்று நேற்று நாம் அனைவரும் கடந்து சென்றோம். இப்படியான நிகழ்வுகள் இனி தொடர்ந்து நடைபெறும் என்பது தான் நமக்கெல்லாம் வேதனை.இப்போது அமெரிக்காவில் அதிபர் ஆகி இருக்கும், நம் நாட்டு பிரதமர் மோடியின் நண்பர் டிரம்ப், மோடியின் CAA கொள்கையைப் போன்ற ஒரு கொள்கையை வைத்து அனைத்து நாட்டு பிரஜைகளையும் பந்தாடி வருகிறார். ஆம், சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை அவரவர் நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
டிரம்ப் சொல்லும் (Illegal Migrants) சட்ட விரோதமாக குடியிருப்போர் என்றால் என்ன? எப்படி உருவானது? கடந்த கால நிலைகள் என்ன என்பதைப் பற்றி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சட்ட உரிமைகளை வழங்கும் பிரவாசி லீகல் செல் https://pravasilegalcell.in/ அமைப்பின் ஆப்பிரிக்க கண்டத்தின் (53 நாடுகள்) ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் விளக்கமாக எழுத வேண்டி இருக்கிறது.
சட்ட விரோத குடியேறிகள் எப்படி உருவானார்கள்?
பொதுவாக ஒரு நாட்டின் குடிமகன் இன்னொரு நாட்டுக்குள் தரை, ஆகாயம், கடல் மார்க்கமாக நுழைய வேண்டுமெனில் அந்த நபர், தனது நாட்டின் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருக்க வேண்டும். செல்ல இருக்கும் நாட்டுக்கான விசாவை முன்னரே விண்ணப்பித்து அந்த அனுமதியை தனது கடவுச்சீட்டில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
விசா என்பது ஒரு நாடு இன்னொரு நாட்டு குடிமகனுக்கு சில கால வரம்புடன், அந்த நபர் வரும் நோக்கத்தின் அடிப்படையில் STUDENT VISA, TOURIST VISA, BUSINESS VISA, EMPLOYMENT VISA, TRANSIT VISA, DEPENDENT VISA என்று வழங்கப்படும்.
அதன் பின்னர் அந்த குடிமகன், தனது நாட்டில் இருந்து செல்ல வேண்டிய நாட்டுக்குப் புறப்படும்போது, அவரது நாட்டில் இருக்கும் குடியேற்ற அதிகாரிகள், பயணத்திற்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது என்று பார்த்த பின், அவரது பாஸ்போர்ட்டில் அந்த நாட்டில் குடியேற்ற அதிகாரிகளால் (IMMIGRATION OFFICERS) EXIT வெளியேற்ற முத்திரை குத்தப்படும்.
அதன் பின்னர் அடுத்ததாக எந்த நாட்டுக்குள் நுழைகிறாரோ, அந்த நாட்டில் இறங்கியதும், அந்த நாட்டின் குடியேற்ற அதிகாரிகளால் (IMMIGRATION OFFICERS) ஆவணங்களை சரி பார்த்த பின்னர் ENTRY நுழைவு முத்திரை அவரது பாஸ்போர்ட்டில் குத்தப்படும்.
எல்லாம் முறையாக தானே செய்து இருக்கிறார்கள். எப்படி சட்ட விரோத குடியேறிகள் (ILLEGAL IMMIGRANTS) என்று திருப்பி அனுப்பினார்கள் என்ற ஐயம் எழலாம்.
இந்த நபர்கள், அந்த நாட்டில் விசா குறிப்பிட்ட கால வரம்புக்கு காலாவதி ஆன பின்னர் முன் அனுமதி பெறாமல், கால நீட்டிப்பு செய்யாமல் இருப்பது, விசாவின் தன்மை மாறி அங்கே பணியில் இருப்பது போன்றவை தான் சட்ட விரோதக் குடியேறிகள். இது தவிர்த்து நாட்டின் அண்டை நாட்டிலிருந்து எல்லை வழியாக முறையின்றி சட்டவிரோதமாகக் குடியேறி வருபவர்களும் சட்டவிரோதக் குடியேறிகளாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது.
இந்த சட்ட விரோதக் குடியேறிகள் அமெரிக்காவிலே ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து சராசரி ஊதியத்தை விட குறைந்த ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்த உழைப்பார்கள். இவர்களிடம் விசா ஆவணம் இல்லாததால் வெளியே பொதுவாக செல்வதில்லை. அப்படி சோதனையில் போதிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அந்த நபரை அங்கே இருக்கும் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பார்கள் அல்லது அந்த நாட்டின் சிறையில் அடைப்பார்கள். இப்படி தான் கடந்த காலங்களில் நடந்து இருக்கிறது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் காலங்களில், இப்படி சட்ட விரோத குடியேறிகளை அந்த நாட்டின் பிரஜைகளாக மாற்றுவதற்கு சில சலுகைகளை அந்த வேட்பாளர் தனது தேர்தல் அறிக்கையிலே வைப்பதுவும், அதன் பின்னர் வெற்றி பெற்ற பின்னர் இப்படி இருப்பவர்களுக்கு கால நீட்டிப்பு அல்லது குற்ற மன்னிப்பு போன்றவற்றை கடந்த காலங்களில் செய்து வந்தனர்.
இந்த முறை நம் பிரதமர் மோடியின் நண்பர் டிரம்ப் ஆட்சிக்கு வந்த உடன், இந்த சட்டவிரோதக் குடியேறிகளை அவரவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றி வருகிறார்.
அந்த அடிப்படையில் தான், நேற்றைய தினம் நம் நாட்டு பிரஜைகளை கை, கால்கள் விலங்கு இடப்பட்டு போதிய வெளிச்சம், இருக்கைகள், கழிவறைகள் இல்லாத ராணுவ விமானத்தில் அமெரிக்காவில் இருந்து ஏற்றி அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்து இறக்கியிருக்கிறார்கள்.
இதே போன்ற நிலையை கொலம்பிய பிரஜைகளுக்கு அமெரிக்க செய்த பொது அந்த நாட்டின் அதிபரும் இடதுசாரியுமான தோழர் குஸ்தாவோ பெட்ரோ,
“எங்கள் நாட்டு பிரஜைகளை மரியாதையுடன் மனிதாபிமானத்துடன் நடத்துங்கள். அவர்களை ராணுவ விமானத்தில் கொண்டு வராமல், பயணிகள் விமானத்தில் அனுப்புங்கள். உங்கள் நாட்டுக்கு எங்கள் பயணிகள் விமானத்தை அனுப்புகிறேன். அதிலே ஏற்றி அனுப்புங்கள்” என்று டிரம்ப்பிடம் வேண்டுகோள் வைத்ததோடு, ராணுவ விமானத்தை தரை இறங்க விடவில்லை. அதன் பின்னர் பயணிகள் விமானத்தில் அந்த பிரஜைகள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
அதுமட்டுமல்ல, "அமெரிக்காவில் உள்ள ஆவணமற்ற கொலம்பியர்கள் உடனடியாக அந்த நாட்டில் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு விரைவில் கொலம்பியாவுக்குத் திரும்புமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக உங்களுக்கு வெகுமதி அளிக்கப்படும். செல்வம் உழைக்கும் மக்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில் சேரும் நாடு திரும்புபவர்களுக்குக் கடன்களை வழங்க கொலம்பிய சமூக வளத் துறை முயற்சிக்கும். கொலம்பியாவில் சமூக செல்வத்தை கட்டியெழுப்புவோம்" என்று அவர் எழுதினார்.
இப்படி இடதுசாரி அதிபர் தனது நாட்டு மக்களை நாகரீகமாக நடத்துவதற்குப் போராடியது மட்டுமல்ல, அவர்களுக்கான மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.
நம் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் “இந்தியாவுக்கு வர வெளிநாட்டினர் வரிசையில் நிற்கும் நிலை உருவாகப் பாடுபடுவேன்" என்றார். ஆனால் என்ன பாடு பட்டார் என்பதுவும் புரியாத புதிராகவே உள்ளது.
இன்று திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தான் மோடி, அமெரிக்கா சென்ற பொது "மோடி! மோடி!!" என்று கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தியவர்கள். இவர்கள் அனைவரும் அமெரிக்க நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்காக உழைத்தவர்கள். இவர்களை நாகரீகமாக மனிதாபிமானத்துடன் அமெரிக்கா நடத்த வேண்டும். அதற்காக இந்திய அரசு வேண்டுகோள் வைக்க வேண்டும்.
பாசிச டிரம்ப்பிடம் பாசிச மோடி அரசு கேட்குமா? கேட்டால் அதை பரிசீலிப்பார்களா?
- ஆர்.எம்.பாபு