அன்புமிக்க தோழனே,

வணக்கம், நலமாக இருப்பதால், நாமும், நாடும் நலம்பெற வேண்டும் என்ற காரணத்தால், மீண்டும் சில கருத்து பரிமாற்றத்தை முன் வைக்கிறோம். தமிழகத்தில் “படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்” என்று ஒரு பழமொழி உண்டு. அது போல் காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்திய அரசின் செயல்பாடும் இருக்கிறது. டாக்டர் அர்ஜூன் சென் குப்தா என்பவர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்தது. அதன் மூலம் 77.4 சதமான இந்திய மக்கள், நாளன்றுக்கு ரூ.20/ மட்டுமே செலவிடக் கூடியவர்களாக இருக்கிறார்கள், என்பதை பகிரங்கப்படுத்தினர். அர்ஜூன் சென் குப்தாவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 3 ஆண்டுகள் முடிந்த பின்னும் ரூ. 20/ செலவிடுகிற இந்திய மக்களின் வருமானத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், அலவன்ஸ் போன்றவற்றை இனைத்து ரூ. 1 லட்சம் என அறிவித்து விட்டனர். கூட்டத் தொடரின் போது, கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அலவன்ஸ் தொகையை ரூ. ஆயிரத்திலிருந்து ரூ. 2 ஆயிரமாக அறிவித்துள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பென்சன் ரூ. 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

விலைவாசி உயர்வு பெட்ரோல்_டீசல் விலையுயர்வு போன்றவற்றை, சில இடதுசாரி எம்.பிக்களைத் தவிர மற்றவர்கள், ஆதரிக்கிற காரணத்தால், இந்த பம்பர் பரிசா? என நண்பர் கேட்டார். இன்னொரு தோழர் “அணு உலை விபத்து இழப்பீடு மசோதா மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான லாபத்தையும், இந்திய மக்களுக்கு சுடுகாட்டையும் காட்ட நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கான ஏற்பாடு’’ என்று பதில் கூறினார்.

இந்த பதிலோடு, சம்பள உயர்வு செய்தி அறிவிப்பின் போது வெளிவந்த இன்னொரு செய்தியின் அரசியலும் அதை உறுதிப்படுத்தியது. ஆம் தோழா சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சி எம்.பிக்கள் சம்பள உயர்வை கேட்டதாகவும் அதனால் கருணை பிரவாகம் எடுத்து பொங்கியதாகவும் கருத்து பிரச்சார அரசியல் நடைபெறுகிறது. அப்படியானால் இடதுசாரி எம்.பிக்களைத் தவிர காங்கிரஸ் உள்ளிட்ட யாரும் சம்பள உயர்வை எதிர்க்க வில்ல¬யே ஏன்? நாட்டையும், நாட்டு மக்களையும், பன்னாட்டு பகாசூரர்களிடம் அடமானம் வைப்பதை, காட்டிக் கொடுக்காமல் இருக்கவே இத்தகைய அறிவிப்புகள். இல்லையென்றால் அணு உலை இழப்பீட்டு மசோதாவின் சாராம்சத்தை நாடாளுமன்ற செலக்ட் கமிட்டி பார்வையிட்டபின் திருத்துவார்களா? மக்களின் பிரதிநிதிகளாகச் சென்றிருப்போர், இது குறித்தெல்லாம் கேள்வி எழுப்பாமல், திசை திருப்பும் அரசியலுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

பணக்காரர்களின் காவலனாம்

அந்த அரசனை சபிக்கிறோம்;

ஏழைகளின் துயரம்

அவர்களுக்கு சலிப்பூட்டுகிறது.

ஆட்சியாளர்கள் குடிசைகளில் இருந்தும்

குட்டைகளில் இருந்தும்

வரி வசூலிப்பவர்கள்!

_ஹென்ரிச் ஹெய்னே

இந்தக் கவிதை வரிகள் இந்திய மண்ணில் இன்றைக்கும் பொருந்துவதாகவே இருக்கின்றன.

தமிழகமோ, சில சலுகைகள் மூலம் ஆட்சியை வலுப்படுத்த நினைக்கிறது. என்னற்ற சமூக கொடுமைகள் அரங்கேறுகிற நிலையில், அற்ப அரசியல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தமிழக முதல்வர் இச்செயலுக்கு கதாநாயகனாகி விட்டார். திங்கன்று அவரே அவரை பாராட்டுவார். செவ்வாய் அன்று அவர் அரசு, சிறுதாவூர் நிலத்தை கையகப்படுத்தாததைக் கண்டித்து, அவர்கட்சி போராடும் என அறிவிப்பார். புதன் அன்று இலங்கைத் தமிழருக்காக உண்ணாவிரதம் இருப்பார். பிரணாப் வந்து சந்திப்பார். நிருபமாராவ் வந்து சந்திப்பார், திமுக எம்.பிக்கள் கூட்டத்தைக் கூட்டுவார். வியாழன் அன்று, திரையுலக பிரமுகர்களைக் கொண்டு தன்னைப் பாராட்டி விழா எடுப்பார். நடிகர்களுக்கு வீடு கட்ட இடம் வழங்குவார். அவர்களின் கறுப்பு பண விவகாரத்தை கேப்டனை மிரட்டுவது போல் சுட்டிக்காட்டுவார். நடவடிக்கை எடுக்க மாட்டார் வெள்ளியன்று பிற கட்சிகளில் இருந்தெல்லாம் விலகி லட்சக்கணக்கில் தங்கள் கட்சியில் இணைந்ததாகவும், கட்டித்தழுவி உறவு கொண்டாடி புகைப்படங்களுடன் செய்தி வெளியிடுவார். சனியன்று கனிமொழி மூலம் வேலை வாய்ப்பு சந்தையும், மு.க.ஸ்டாலின் மூலம் கூட்டு குடிநீர் திட்ட அறிவிப்புகளும், மு.க. அழகிரி மூலம் பதவிச் சண்டை இருப்பது போலவும், உதயநிதி, தயாநிதி, அறிவுநிதி போன்ற பேரன்களையும், சன்பிக்சர்ஸ் மூலம் மாறன் பிரதர்ஸையும் திரையுலகில் இறக்கி விட்டு உற்சாகமடைவார். ஞாயிறன்று தனக்கு இருக்கும் எல்லாக் குடும்பத்துடனும் அமர்ந்து செம்மொழி மாநாடு நடத்துவார். இப்படிப்பட்ட அரசியல் நடவடிக்கைகளைப் பார்த்து, பார்த்து பொதுஜனம் தனது நேரமான 24ஜ்7 ஐ வீணாக்கிக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

இந்தாண்டு தமிழக வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை 70 லட்சத்தைக் கடந்து செல்லும் என்கிறார்கள். அரசு வேலை பாதுகாப்பானது, என்ற எண்ணத்தில் 2000 வி.ஏ.ஓ பணியிடங்களுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்கின்றனர். இதன்மூலம் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைத்திற்கு சுமார் 10.5 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆண்டுக்கு 3 அல்லது 4 தேர்வுகள் மூலம் சுமார் 40 கோடி ரூபாயை அரசு வேலையில்லா இளைஞர்கள் மூலம் சம்பாதிக்கிறது. இதோடு 50 கோடி ரூபாயை சேர்த்து வேலையில்லாக் கால நிவாரணம் வழங்குகிறது.

திமுக அரசு, இளைஞர்களுக்கு அரசாணை எண். 170ஐ வெளியிட்டு துரோகம் செய்தது. 70 லட்சத்தை வேலைவாய்ப்பு அலுவலகம் நெருங்கி விட்ட நிலையில், ஓய்வு பெற்றோருக்கு மீண்டும் வேலை, என்ற அராஜகத்தை எதிர்த்த போது டி.ஒய்.எப்.ஐ இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள்.

எந்த ஆயுதக் கருவிகளை

இயக்கும் போது,

முன்பு மனிதர்கள் செத்து மடிந்தார்களோ

அதே ஆயுதக் கருவிகளை இயக்க

ஆட்சியாளர்கள் வருகிறார்கள்

என்ற மாயா காவஸ்கியின் கவிதை வரிகளே நினைவுக்கு வருகிறது. அடக்குமுறை நமக்கும் புதிதல்ல. திமிரி எழுந்த வரலாறு நம்முடையது என்பதை திமுக அறிய வாய்ப்பில்லை.

தனியார் துறையை இளைஞர்கள் விரும்புவதில்லை என்றும், 3 அல்லது 4 ஆண்டுகளில் தனியார் துறையில் பணியாற்றும் இளைஞர்களின் மனநிலை பாதிப்படைகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் ஓய்வற்ற வேலைநேரம், பணிச்சுமை, நிர்வாகத்தின் அடக்குமுறை என பட்டியல் நீண்டு செல்கிறது. இவை தமிழகத்தில் உள்ள திமுகவும், மத்தியில் உள்ள ஐ.மு கூட்டணியும் உலகமயம் காட்டுகிற கொள்கைகளை பின்பற்றுவதால் வந்த விளைவு ஆகும்.

மற்றொரு புறம் தமிழகத்திற்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் சேது கால்வாய் திட்டதை 2400 கோடி ரூபாயை கடலில் கொட்டி தீர்த்த பின், முடக்கிப் போட்டுள்ளனர். இதை எதிர்த்தும், திட்டத்தை விரைந்து அமலாக்கவும் டில்லியில் உண்ணாவிரதம் அதுவும் 24 மணிநேரம், நடத்திய பெருமை டி.ஒய்.எப்.ஐ க்கு உண்டு.

சமூகப் பாதுகாப்புடனான வேலை, சமச்சீர் கல்வி, சுகாதாரம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மூன்று முனைகளில் இருந்து சென்னை நோக்கிய சைக்கிள் பிரச்சாரத்தையும், இக்காலத்தில் நடத்தியுள்ளோம். இவையனைத்தும் தமிழக திமுக அரசை பல வழிகளில் அம்பலப்படுத்திய காரணத்தாலேயே டி.ஒய்.எப்.ஐ அமைப்பிற்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் திமுக ஆட்சிக்கு எழுந்தது.

தலித் மக்களின் மேம்பாடுக்கென உட்கூறு திட்டத்தை தமிழக அரசு கேலிக் கூத்தாக்குகிறது. கல்விக்கடன், வேலைவாய்ப்பு, வீட்டு வசதி போன்ற சுயதேவையை நிறைவேற்றுவதற்கு உட்கூறுத் திட்ட நிதி பயன்படுவதில்லை. மாறாக திமுக அறிவித்த வண்ணத் தொலைக்காட்சி, எரிவாயு அடுப்பு போன்றவற்றையும்,  பெரியார் சமத்துவபுர வீடுகளுக்கும் மாநில அரசு பயன்படுத்துகிறது. இது எந்த வகையில், தலித்துகளை மட்டும் மேம்பாடு செய்திருக்கிறது? என்பது யாரும் புரிந்து கொள்ள முடியாத சிதம்பர ரகசியம்.

தமிழகத்தைச் சார்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், உத்தப்புரத்தின் அடிப்படைத் தேவைக்காக நிதி ஒதுக்கீடு செய்தால், அதை ஏற்க முடியாது என மாவட்ட ஆட்சியர் திருப்பி அனுப்புகிற செயல், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அரங்கேறி இருக்காது. திருப்பி அனுப்பியது ஏன்? என கேள்வி கேட்கும் போராட்டத்தை நடத்தினால் காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை ஏவி ஜனநாயகம் பேசும் செயலை திமுக செய்யும். டி.ஒய்.எப்.ஐ 2009 டிச 25 தீண்டாமைக்கு எதிரான நேரடி நடவடிக்கையை மேற்கொண்ட மாநில அரசு ஒரு நாள் முழுவதும் பதில்சொல்ல வேண்டிய அளவிற்கு தாக்கத்தை டி.ஒய்.எப்.ஐ ஏற்படுத்தியது. அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்க முடியாதிருந்த நிலையை, கடலூர் மாவட்டம், பழைய பட்டிணம் கிராமத்தில், மாற்றிக்காட்டியது. டி.ஒய்.எப்.ஐ மாவட்ட காவல்துறை, ஆட்சியர் அரசு ஆகியோரை அம்பலப்படுத்தியது டி.ஒய்.எப்.ஐ. அதேபோல் இக்காலத்தில், ரேசன் கார்டுக்கான மனுகொடுக்கும் போராட்டத்தை டி.ஒய்.எப்.ஐ வேறு. வேறு தேதிகளில்  நடத்தி இருந்தாலும், மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் மக்களை ஈடுபத்திய இயக்கமாக அமைந்தது. இது டி.ஒய்.எப்.ஐ  வரலாற்றில் மிகப்பெரிய திரட்டுதலை கொண்ட போராட்டம் என்றால் மிகையல்ல.

எனவே தோழா, நாம் தொடர்ந்து போராடுவதால், அரசின் கொள்கைகளைத் தாக்குவதால், அரசை சில தடுமாற்றங்களுக்கு ஆளாக்கி இருக்கிறோம். சற்று ஓய்வு எடுத்து அதன் பின் வலுவாக தாக்கலாம், என நினைத்தால் அரசு தனது செல்வாக்கை கொண்டு நம்மை விட பல மடங்கு பலப்படுத்திக்கொள்ள வாய்ப்பளிப்பதாக மாறிவிடும். ஒரு அறிஞன் சொன்னான் ஓய்வு மந்த புத்தியை பிரசவிக்கிறது என்று. நமக்கு ஓய்வு தேவை இல்லை புத்துணர்ச்சியை உருவாக்க சுயகல்வி, அசைபோட்டு பார்ப்பது தேவை.

இப்போது நடைபெறும் டி.ஒய்.எப்.ஐ யின் ஸ்தாபன மாநாடுகள், நமது புதிய ஊழியர்களை மேலும் செழுமைப்படுத்தி இருக்கிறது. புரிதலை உருவாக்கி இருக்கிறது. மக்கள் விலைவாசி உயர்வால், எம்.பிக்களின் சம்பள உயர்வால் சினிமா நடிகர்களுக்கு வீடு கட்டும் ஏற்பாட்டால் ஆள்வோர் மீது அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். நமது தாக்குதல் வீறு கொண்டால் அதற்காக நமது அமைப்பை வலுப்படுத்தினால் சாத்தியம். மாநிலத்தின் அனைத்து திசைகளில் இருந்தும் சுடர் பயணங்கள் வருகிறது. தியாகிகளின் நினைவாக இன்னும் அடங்காத சுடர் வலம் வர இருக்கிறது. வெண்மணியிலும், வீதிகளிலும் எரிந்தவர்கள் நம் தோழர்கள், ஆனால் எழுந்தவர்கள் நம் தலைமுறை என்பதை உரத்துச் சொல்வோம். மாபெரும் மாநாடுகள் மூலம் அல்ல, மாபெரும் பேரணி மூலம் இளைஞர்களைத் திரட்டினால் மாற்றத்தை நோக்கி முன்னேறலாம். ஆம். செப் 27 பகத்சிங்கின் பிறந்த நாளில் கோவை மாநகர் இளைஞர்களின் எழுச்சி கொண்டு நிறைத்திடுவோம். வா! தோழா சங்கமிப்போம்! நமது தலைமுறையிலேயே முன்னேறுவோம்!

- எஸ்.கண்ணன்

மாநிலச் செயலாளர்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

தமிழ்நாடு மாநிலக்குழு

Pin It