தமிழத்தில் கடந்த சில மாதங்களாய் பல சாமியார்கள் தொடர்ந்து அம்பலப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இருப்பினும் புதிய சாமியார்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். ஏற்கனவே நிறைய அம்மாக்கள் தமிழகத்தில் உண்டு நாராயணி அம்மா தங்கக் கோயில் நடத்துகிறார்! மேல்மருவத்தூர் அம்மா கல்லூரிகளை நடத்துகிறார் இதுவன்றி அடிக்கடிகேரளாவிலிருந்து அமிர்தானந்தமாயி அம்மா வருகிறார்! லோக்கல் சாமிகளாக பீடி சாமியார், பீர் சாமியார், சாக்கடை சாமியார், கஞ்சா சாமியார், குவாட்டர் சாமியார், பாம்பு சாமியார், வாழைப்பழத்தை வாயில் ஊட்டும் சாமியார் என வித விதமான, வகை வகையான சாமியார்கள் உள் ள னர். இதுவன்றி ரவிசங்கர், நித்தியானந்தம், கல்கி, ஜக்கி வாசுதேவ் போன்ற சாமி யார்கள் கதவை திறகாத்துவரட்டும் மனசே ரிலாக்ஸ் பிளீஸ் போன்ற தலைப்புகளில் மேல், நடுத்தர வர்க்கத்தை வசியப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள் மேலும் சங்கராச்சாரி வகையறாக்கள் மடாதிபதிகளாக, மதத்தலைவர்களாக தங்களால் முடிந்த சேவைகளை செய்து வருகின்றனர் அவாள் சேவைகளை நாடு அறியும் இதுவன்றி தொலைக்காட்சிகளில் அருளாசி வழங்கும் நபர்கள் தனி.

மற்றொருபுறம்... ரோமன் கத்தோலிக், தென்னிந்திய திருப்பை, ஆதிபெந்த கோஸ்தே சபை, தி பெந்தகோஸ்தே சபை, கிருபாசனம் பெற்த கோஸ்தேசபை, பூர்ண சுவிசேஷ சபை, ஏசு அழைக்கிறார் சபை, இரட்சண்ய சேளைபபை, கல்வாரி ருத்ரன் அசம்பளி ஆப்காட்,நல்லமேய்ப்பன் மிஷன்சபை, சீயோன் அசம்ப்ளி சபை, ஏழாம் நாள் அற்புத சபை, யோகோவா சபை என்ற பெயர்களில் இயங்கும் இவர்களின் அப்ரோச்சே  தனிதான்.....

குருடர்கள் பார்க்கிறார்கள்,முடவர்கள் நடக்கிறார்கள் ,ஊமைகள் பேசுகிறார்கள், ஆவிகளுக்குரிய கூட்டம் என இவர்கள் அடிக்கும் கூத்து சொல்லி மாளாது,  தொலைக்காட்சி சேனல்களில்காலை நேரத்தில் கண்களை  முடிக் கொண்டு நேயர்களை பாவிகளே என்று இவர்கள் ஆசீர்வதிக்கும்காட்சிகள் நகைச் சுவை மிக்கதாக இருக்கும். துவக்கத்தில் நல்ல நோக்கத்துடன் கல்வியை கொடுத்த மிசனரிகள் உண்டு.ஆனால் தமிழகத்தில் இவர்களால் நடத்தப்படும் கல்வி நிலை யங்கள் கல்வி வியாபார நிறுவனங்களாக மாறி உள்ளது .இதில் இவர்கள் செய்யும் அநீதிகளை பட்டியலிட்டால் அது தனி கட்டுரையாக விரியும்.

மேலும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற தலைப்பிலும் இன்னும் பல பெயர்களிலும் நபிகள் நாயகத்தின் புகழை பரப்புவதாகச் சொல்லி தொலைக்காட்சி உட்பட பல ரூபங்களில் அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்து வருகிறார்கள். அவர்களின் மத பிரச்சாரம் தனி ரகமாய் சென்று கொண்டிருக்கிறது.

அடிப்படையில எந்த மதமும் மாற்று மதத்தின் மீதும் மாற்று மதத்தை நம்பும் மக்கள் மீதும் வன்மத்தை விதைப்பதில்லை. அன்பை மட்டுமே போதிக்கின்றன. வாழ்வில் அல்லலுற்று ஆற்றாமையால் வாடி நிற்கிற மனிதனுக்கு, சுமைதாங்கியாய் மதங்களின் அடிப்படை திகழ்கிறது .ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களும் மதத்தை தங்களுடைய அரசியல் சுய பொருளாதார லாபத்திற்காக பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே மாற்று மதத்தின் மீது வன்மங்களை விதைத்து, பிரச்சனைகளை அறுவடை செய்கின்றனர். ஆனால் அனைத்து மதங்களிலும் உள்ள அடிப்படைவாதிகளும்  ஒன்றாய் கரம் கோர்த்து நிற்பார்கள். அது முற்போக்கு ஜனநாயக சக்திகளை வேரறுப்பதில் உதாரணத்திற்கு கேரளாவில் உள்ள இடதுசாரி அரசாங்கம் மதமாற்ற மனிதன் என்ற சிறுகதையை பாடநூலில் சேர்த்த போது கேரளா சந்தித்த கலவரத்தை நாடறியும்.

பின்னணி...

சரி, இத்தகைய சூழலில் மீண்டும் மீண்டும் கடவுள் நம்பிக்கை சார்ந்த மக்கள் கூட்டம் அதிகமாக அலைமோதுவதன் காரணம் என்ன ? மத அமைப்புகள் பின்னால் மக்கள் திரளகாரணம் என்ன? இதற்கு மிக எளிதாக வாழ்வியல் பிரச்சனையே காரணம் என்று கூற முடியும்,

இந்திய நாட்டில் 1990களில் தீவிரமாக அமலாகத் துவங்கிய உலகமயம் ஒட்டுமொத்தமாய் இந்திய சமூக வாழ்க்கையில் தலைகீழ் மாற்றத்தை விதைக்கத் துவங்கியது சமூகப் பாதுகாப்பு என்பதும்எதிர்கால நம்பிக்கை என்பதும் கேள்விக் குறியாய் மாறியது லாபம் மட்டுமே நோக்கம் என்பதை தாரக மந்திரமாய் கொண்ட முதலாளித்துவத்தின் புதிய பரிணாமமான நிதி மூலதனத்தின் உலகமயம் தொழிற்சாலைகளை தொழிளாளர்கள் இல்லாமல் நடத்தத் தூண்டியது எந்திரங்கள், விஞ்ஞான தொழில் நுட்பம் மனிதர்களின், இட.ங்களை பிடித்துக் கொண்டன சமூக வெளி எங்கும் வேலையில்லாப் பட்டாளம் வீங்கி புடைக்கத் துவங்கியது. அரசு தனக்கான சமூகப் பொறுப்பை தட்டிக்கழிக்கத் துவங்கியது. வேலை கொடுப்பது அரசின் கடமை இல்லை என்றானது கிராமப் புறங்களின் விவசாயம் அடியோடு அழிக்கப்படுகிறது நிலங்களில் வேலை செய்பவர்கள் நகரங்களை நோக்கி வேறு வேறு, இடங்களைத் தேடி அலையத் துவங்கினர் கணினித் துறையில் வேலை செய்தால் கூட பாதுகாப்பு இல்லாத சூழலில் மக்களின் மனநிலை மாற்றம் அடைகிறது.

தன் குடும்பத்திலிருந்து அந்நியப்பட்டு இதுவரை தனக்கு பழக்கமான முகங்களுடன் உள்ளூரில் வாழ்ந்து. குடும்பம் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த தனி மனிதன்,தனக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத நகர்புறத்திற்கு வரும்பொழுது அந்நியமானவனாக குடும்பத்திலிருந்தும் உறவுகளிலிருந்தும் துண்டிக்கப்படுகிறான்.

தன் பணியிடத்திலிருந்து அந்நியப்பட்டு தன் சக தொழிலாளிக்கோ, தனக்கோ ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற அணிதிரண்டு குரல் எழுப்பும் நிலையில் இல்லாமல் இருக்கிறான்.

தனது சொந்த கிராமத்தில் என்ன வேலை செய்வது என்று திகைத்து நிற்கிறான், இந்த நேரங்களில் மனிதனின் மனதை அலைகழிக்கும் கேள்விகள் அதுவும் விடைகானா கேள்விகள் எழுகிறது

இத்தகைய நெருக்கடியான சூழலில் தனி மனித உறவு பல மாற்றங்களை சந்திக்கின்றது பிறருடனான தனி மனித உறவுகளில் பல மாற்றங்கள் நடக்கிறது தனிமனிதனுக்கும் குடும்பத்திற்குமான உறவில் மாற்றங்கள் நடக்கிறது.தனிமனிதனுக்கும் வேலைக்கு மான உறவில் மாற்றங்கள் ஏற்படுகிறது.இந்த மாற்றங் களில் ஏற்படும் மன அழுத்தம், அமைதியை, நிம்மதி யைத் தேடி அலைகிறது.அந்த நிம்மதியும் ஒருவித பாதுகாப்பு உணர்வும், மத அடையாளம் மூலம் அவருக்கு கிடைப்பது எளிதாக இருக்கிறது.

கடவுள் சார்ந்த நம்பிக்கையும்,கோயில் திரு விழாக்களும் மிகவும் அதிகமாக மக்களை திரட்ட, மேற்கண்ட அரசியல், பொருளாதாரப் பின்னணி மிகவும் உதவுகிறது: இந்த இடத்தை பயன்படுத்தும் மதவாதிகள், வாழ்வின் இறுதித் தீர்வு என்பது கடவுளை சரணடைதல் என்ற வேதாந்தத்தை பல ரூபங்களில் மீண்டும்,மீண்டும் அடித்து இறக்கி வருகின்றனர், நவீன அறிவியல் தொழில் நுட்பத்தை தனக்கு சாதகமாக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் தொலைக்காட்சி ஊடகம் இவர்களுக்கு முழுமையாக பயன்படுகிறது,

சர்வதேச நிதி மூலதனத்திற்கும்,இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் மக்கள் வாழ்வியல் சார்ந்து,கோரிக்கை சார்ந்து போராடாமல்  இருப்பதே பாதுகாப்பானது. எனவே, சாதி, மத, இன, மொழி அடையாளம் சார்ந்து பிரிந்து நிற்க முழு ஒத்துழைப்பையும் நல்குகின்றனர். பிரதமர் முதல் வட்டச் செயலாளர் வரை சாமியார் களின்காலில் விழுவது,மந்திரிகள் கூட கோயில் திருவிழாக்களில் பங்கேற்பதையும், புதிய புதிய சாதிய இயக்கங்களின் எழுச்சியினையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

எனவே....

இந்திய சர்வதேச ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு நமது நாட்டின் ஊடகங்கள் தங்களால் முடிந்த அளவு மக்கள் மனதை பண்படுத்துகின்றனர், அனைத்து தொலைக்காட்சிகளிலும், அச்சு ஊடகங் களிலும் மதம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து இடம் பெறுவது இதனால்தான், சாமியார்களை, கடவுள் நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கும் இவர்கள் நித்தியானந்தா, பிரேமானந்தா, சந்திராசாமி, சங்கரன் போன்ற சாமியார்கள் மட்டும் போதும்

அந்த சம்பவங்களை வெறும் தனி நபர்களின் கொல்லைகள் மற்றும் கற்பழிப்பு, சல்லாபம், காமம் சார்ந்த நிகழ்வுகளுடன் சம்பந்தப்படுத்தி பரபரப்பு செய்திகளாக்கி அடிப்படிடையை கேள்வி எழுப்ப மறுக்கின்றன அல்லது அப்படி எழும் கேள்விகளை மறைக்கின்றன.

உதாரணத்திற்கு நித்தியானந்தா சம்பவத்தில் அவனது காம உணர்வு இயல்பானது தன்னை கடவுளாக அறிவித்து லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றிய ஆபாசத்தைவிட, அய்யோக்கிய தனத்தைவிட ரஞ்சிதாவுடன் இயற்கை உணர்வை தனித்தது தவறுபோல் சித்தரிக்கப்பட்டது ஏன் ?  கடவுள் சார்ந்த அவதாரங்கள் சார்ந்த நம்பிக்கைளை கேள்விக் குள்ளாக்காமல் காம களியாட்டங்கள் முதன்மை பெற்றது எதனால் ? தன்னை பத்தாவது அவதாரம் என்று அறிவித்த கல்கி, போதையில் கட்டுண்டு கிடக்கும் படங்கள்  மட்டும் அச்சாவது எதற்காக?

பதில் மிகவும் முக்கியமானது .நமது ஊடகங்களுக்கு இரண்டு நோக்கம் இருக்கிறது இந்த நபர்கள் அம்பலப்பட்டால் நாளை வேறு சாமியார்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.. ஆனால் கடவுள் நம்பிக்கை சிதைந்தால் வியாபாரம் பாதிக்கும். அடுத்து காமம்.. போதை என்ற மனித மனதை கிளர்ச்சியூட்டும் சம்பவங்களை வெளிப்படுத்தினால் வியாபாரம் அதிகரிக்கும் எனவே ஒரே கல்லில் இரண்டு கொய்யா என்பது போல மூட நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை சார்ந்த கேள்விகளை பின்னுக்குத் தள்ளி ஆபாச வியாபாரம் நடத்த இந்த சம்பவங்களை பயன்படுத்துகின்றன.

சமூக நெருக்கடி, உளவியல் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது. அவதாரங்களிடம் இல்லை. எளிய மனிதர்களின் போராட்டத்தில்தான் உள்ளது என்ற உண்மையை மறைக்கும் அபத்தங்களை அம்பலப்படுத்துவது நம் முன் கடமையாய் உள்ளது.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

Pin It