சென்ற இதழின் தொடர்ச்சி...

உகாண்டாவில் உள்ள பிவாண்டி தேசியப்-பூங்காவில் பட்வா (இவர்கள் பிக்மிகள் என்று வெள்ளையர்களால் அழைக்கப்படுகின்றனர்) என்ற பழங்குடி இன மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். கூடவே மனிதக்குரங்குகளும் வாழ்ந்து வந்தன. இந்த மக்கள் காடுகளோடு ஒன்றிப்போன தங்கள் வாழ்க்கை முறையின் காரணமாக  காடுகளின் ஒரு பகுதி என்றே கருதப்பட்டனர். 1994ல் பிவாண்டி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. குளோபல் என்விரான்மெண்ட் பெசிலிடி (ஜி.ஈ.எப் GEF) பணம் வெள்ளமாகப் பாய காடு தொடர்பான ஒரு புதிய அதிகார வர்க்கம் உருவானது. விரைவிலேயே பட்வா பழங்குடிகள் கொரில்லாக் குரங்குகளை வேட்டையாடி உண்கிறார்கள் என்ற வதந்தி பரவியது.

இந்த கொரில்லாக் குரங்கு அருகி வரும் உயிரினம் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மிகப்பெரிய அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதுமாகும். பட்வா மக்கள் என்ன சொல்லி என்ன பயன்? ஒரு பாவமும் அறியாத அப்பாவிகளான 3000  பட்வாக்கள் ஊடுருவல்காரர்கள் என்று காடுகளிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். நஷ்ட ஈடாகக் கொடுப்பதற்கு ஒதுக்கப்பட்ட தொகை பங்குச் சந்தையில் தொலைந்துவிட்டதாம். தற்போது அவர்களது பாடல்கள், சடங்குகள், மருத்துவம் கதைகள், நடனங்கள் அனைத்தும் அழியும் நிலையில் உள்ளன. பார்க்க நமது புலிக்கதை போலவே உள்ளது அல்லவா?

அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் காட்டெருமைகளைக் கொன்று குவித்தது உலகமறிந்த செய்தி. ஆனால் 19 ஆம் நூற்றாண்டு சூழல்வாதிகள் தேசியப் பூங்காக்களில் செவ்விந்தியர்கள் காட்டெருமைகளைக் கொன்று குவிக்கின்றனர் என்று கூசாமல் புழுகினர்.

அமெரிக்காவுக்கு காட்டெருமை, ஆப்பிரிக்காவுக்கு கொரில்லாக் குரங்கு, இந்தியாவுக்கு புலி.

tiger_370காடு வளர்ப்பு போன்ற பல திட்டங்களை வெளிநாட்டு என்.ஜி.ஓக்களின்  நிதியுதவியோடு வனத்துறை செயல்படுத்தி வருகிறது. வனத்துறைக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே நடத்தப்படும் கூட்டங்களில் டபிள்யூ. பிள்யூ. எப் போன்ற வெளிநாட்டு என்.ஜி.ஓக்களின் உள்ளூர் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். பழங்குடி கிராமங்களின் கால்நடைகளின் எண்ணிக்கை குறித்து தொடர்ந்து புகார்கள் அனுப்பி வரு கின்றனர். பழங்குடி கிராமங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள் ஒரு அஞ்சத்தக்க மனிதராகக் கருதப்படுகின்றனர். இவர்களின் செயல்களால் கிராம மக்கள் தங்களை வெறுக்கின்றனர் என்று வனத்துறை யின் கீழ்மட்ட ஊழியர்களே சங்கடப்படும் அளவில் நிலைமை உள்ளது.

வன அதிகார வர்க்கம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு, நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளதோடு பழங்குடி மக்கள் காடுகளில் இருப்பது தங்கள் அதிகாரத்திற்கு கேடு என்று கருதுகின்றது, அதுவும் வன உரிமைச் சட்டம் வந்த பிறகு.  எனவே ஏற்கனவே நெருக்கமான உறவு கொண்டுள்ள இந்த இரண்டு பிரிவினரும் காடுகளில் இருந்து பழங்குடிகளை வெளியேற்ற இணைந்து செயல்படுகின்றனர்.

ஏன் புலி?

1972ல் புலிகள் அழிவதைத் தடுக்க புராஜெக்ட் டைகர் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது 1827 புலிகள் இருந்தன. இந்தியாவும் நேபாளமும் புலிகளைக் காக்க முனைந்து செயலாற்றின. உல்லாஸ் கரந்த் சொல்கிறார் “இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இயற்கை வரலாற்றில் ஆர்வமுடையவராக இருந்ததாலும் நேபாளத்தில் மன்னர் மகேந்திரர் வேட்டையில் ஆர்வமுடையவராக இருந்ததாலும் காட்டுயிர் பாதுகாப்புக்கு இந்த நாடுகளில் ஆதரவு இருந்தது. இந்தியாவில் நூறு வருடங்களாக இயங்கி வந்த வனத்துறையிடம் சட்ட திட்டங்களை அமல்படுத்தும் திறனும் இருந்தது. நேபாள அரசு தன்னிடமிருந்த திறன்மிக்க கூர்க்காப்படையைப் பயன்படுத்தியது.... நேபாளத்தில்  ஸ்மித் சோனியன் நிறுவனத்தின் மூலமாக காட்டுயிப் பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டது” (கானுறை வேங்கை பக் : 131)

அப்புறமென்ன பிரச்சினை?

இப்போது புலிகளின் எண்ணிக்கை 1411 ஆகக் குறைந்துவிட்டது. முப்பது ஆண்டுகளில் பல நூறு கோடி ரூபாய் செலவிற்குப் பிறகு புலிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இது இப்போது திடீரென்று என்.ஜி.ஓக்களின் கவனத்துக்கு வந்துவிட்டது. எனவே புலிகளைக் காக்க தனி காப்பகங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் விஷயம் இவ்வளவு எளிமையானதல்ல. வன உரிமைச் சட்டம் செயல்படுத்தப்படுவதைத் தடுக்கக் கண்டுபிடிக்கப்பட்ட வழிதான் புலிகள் காப்பகம். புலி நட்டின் எல்லா இடங்களிலும் இருக்கிறது. எனவே இந்த ஒரே காரணத்தை சொல்லி பழங்குடிகளை வெளியேற்றி விடலாம். வன உரிமைச் சட்டத்தின் கீழ் பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களின் மீது உரிமை பெறுவதற்கு முன் அவர்கள் வாழும் பகுதிகளை புலிகள் காப்பகங்களுக்குள் கொண்டு வந்து மொத்தமாக வெளியேற்றிவிடவெண்டும் என்பதே இப் புலிப் பாதுகாவலர்களின் உண்மை நோக்கம் என்று பழங்குடி மக்களின் நலன்களில் ஆர்வம் கொண்டவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த என்.ஜி.ஓ. அறிவியலாளர்கள் திரும்பத்திரும்ப கூறுவது ஒரே ஒரு விஷயத்தைத் தான். விவசாயம் கால்நடை வளர்ப்பு, வனப்பொருட்கள் சேகரித்தல் ஆகியவை புலிகளின் வாழிடங்களைச் சீரழிக்கின்றன. பழங்குடி மக்கள் காடுகளை அழிக்கிறார்கள். கானுறை வேங்கை என்ற புத்தகத்தில் புலி எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்று ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. (பக்கம் 125) அதில் பழங்குடிகள் விறகு பொறுக்குகிறார்கள், முயல் பிடிக்கிறார்கள் தேன் எடுக்கிறார்கள், விவசீயிகள் மாடு மேய்க்கிறார்கள், புலி திக்கற்று நிற்கிறது. சேகர் தத்தாத்ரியின் படத்திலும் இதேபோன்ற ஒரு காட்சி உண்டு. பழங்குடிகள் நெல்லிக்காய் விற்கிறார்கள், அதை ஏதோ ஒரு விலங்கு தின்கிறது. அதை புலி தின்கிறது. எனவே நெல்லிக்காய் இல்லாமல் புலி பாதிக்கப்படுகிறது.

இந்த வியாக்கியானங்கள் எல்லாம் ஏதோ நுணுக்கமாகப் பார்ப்பது போலவும் இயற்கையின் மெல்லிய ஒருங்கிணைப்பை நமக்கு உணர்த்துவது போலவும் பாசாங்கு செய்கின்றன. ஆனால் கண்முன் தெரியும் மாபெரும் பேரழிவை இந்த அறிவுஜீவிகள் அப்பட்டமாக மூடிமறைக்கிறார்கள். இந்தப் படத்தில் ஏன் பெருந்தோட்டங்களும், அணைகளூம், சுரங்கங்களூம், ஈகோ டூரிஸம் ரிசார்ட்டுகளூம் இடம்பெறுவதில்லை?

புலியின் கபால அளவு, சினைக்காலம், இரையின் அளவு குறித்தெல்லாம் புள்ளிவிவரங்கள் அளித்து இவர்கள் நம் மூளையைக் குழப்ப முயன்றாலும் இந்தக் கேள்விகள் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்த அறிவுஜீவிகள் காட்டின் இயற்கைச் சுழற்சியில் பழங்குடி மக்களுக்கு இடமே இல்லை என்று பிடிவாதமாகச் சாதிக்கிறார்கள். எப்படி இல்லை ஏன் இல்லை என்பது குறித்து இதுவரை எந்த ஆய்வும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

புலிகள் காப்பகம் என்பது மிகவும் லாபகரமான ஒரு வணிகமாகும். பல்லாயிரம் கோடி ரூபாய் புலிகளைக் காக்க கொட்டிக் கொடுக்கப்படுகிறது. இது தவிர மக்களோடு தனது அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய தேவையிலிருந்து தப்பித்துக் கொள்ள வனத்துறைக்கும் வன அதிகார வர்க்கத்திற்கும் வாய்ப்பளிக்கிறது. வன உரிமைச்சட்டம் காடுகளில் மக்கள் கௌரவமாக வாழ வழி செய்கிறது. புலிகள் காப்பகம் அவர்களை விரட்டியடிக்க வழி செய்கிறது. வனத்துறை இரண்டாவதை விரும்புகிறது.

சரிஸ்கா மற்றும் பன்னா வனவிலங்கு சரணாலயங்களில் புலிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. ஆனால் அதைப் புலிகள் காப்பகமாக தக்கவைத்துக் கொள்ள அங்கு புலிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. எனவே புலிகள் காப்பகங்கள் என்பவை புலிகளை காக்க அல்ல, அதனால் கிடைக்கும் வேறு நலன்களுக்காகவே துக்கிப் பிடிக்கப்படுகின்றன.

புலியைக் காப்பாற்ற வனத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்துத்தான் ஆகவேண்டும் என்றால் வன நில உரிமை சட்டதிலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியை  critical wildlife habitat என்று அறிவிக்க பிரிவு 4(2)(f) வழிவகை செய்கிறது. ஆனால் அதற்குப் பிறகு அந்தப் பகுதியை வேறு எந்த பணிக்கும் பயன்படுத்துவதை இச் சட்டம் கண்டிப்பாகத் தடை செய்கிறது. உண்மையிலேயே புலிகளைக் காப்பதுதான் நோக்கம் என்றால் இப்பிரிவின் கீழ் புலிகள் காப்பகங்களை அறிவித்திருப்பார்கள். ஆனால் அரசு (wild life (protection) Actல் ஒரு திருத்தம் கொண்டு வந்து புலிகள் காப்பகங்களை அமைக்க வழி செய்தது. அது டைகர் திருத்தம் எனப்படுகிறது.

இத்திருத்தத்தில் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பகுதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்த தடை இல்லை. எனவே அரசின் நோக்கம் தெளிவாகிறது என்கிறார் சி. ஆர். பிஜாய். புலிகளின் நல்வாழ்வையே தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதைக் ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற மர்மத்தை புலிகளின் காதலர்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.  வன உரிமைச் சட்டம் செயல் படுவதைத் தடை செய்ய வேண்டும். காடுகளில் மக்கள் இருக்கும் வரை இச் சட்டப்படி மக்களது நில உரிமை அங்கீகரிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து கொண்டுதான் இருக்கும். அதை முறியடிக்க காடுகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதுதான் ஒரே வழி.

அதோடு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பகுதியை பின்பு சுரங்கம் போன்ற வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்துவதற்கு சட்ட ரீதியிலான தடை ஒன்றும் வந்துவிடக்கூடாது! 

120 கோடிப் பேர் வாழும் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில்  5 சதவீத பகுதியை புலிகள் காப்பகமாக ஆக்க வேண்டுமாம். அங்கிருந்து மக்களை வெளியேற்றிவிட வேண்டும். இப்போது உள்ள மொத்தப் புலிகளின் எண்ணிக்கை 1500.

வன உரிமைச் சட்டப்படி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்திய பின்பே இக்காப்பகங்கள் அமைக்கப்படிருக்க வெண்டும். ஆனால் அத்தைகய சட்டபூர்வ நடவடிக்கைகள் எதுவும் நடத்தப்படாமலேயே இக் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வன உரிமைச் சட்டம் என்ற ஒன்றே இல்லாதது போல இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பாசாங்கு செய்கின்றன.

மக்களற்ற காடுகளில் என்.ஜி.ஓக்களும் வனத்துறையும் என்ன செய்யப் போகிறார்கள்?

முதுமலை புலிகள் காப்பகத்தில் என்ன நடக்கிறது என்பது இக்கேள்விக்கு விடை சொல்லும்.

முதுமலை வனவிலங்கு சரணாலயம் சுமார் 350 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இப்பகுதி புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டதும் இந்தப் பகுதி காப்பகத்தின் மையப்பகுதியாக மாற்றப்பட்டது. இதைச் சுற்றிலுமுள்ள 9 பஞ்சாயத்துகள் பஃப்பர் ஜோன் எனப்படும் புலிகள் காப்பகத்தின் சுற்றுப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் அதாவது கோர் ஜோனில் 350 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள். கடந்த 60 ஆண்டுகளில் முதுமலை சரணாலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடிகள் ஒரு தனி இனக்குழுவாகவே மாறி சுற்றியுள்ள பகுதிகளில் கொடும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். பப்பர் ஜோன் எனப்படும் சுற்றுப் பகுதியில் இரண்டுலட்சம் பேர் வசிக்கிறார்கள். இந்தப்பகுதி பப்பர் ஜோன் ஆக அறிவிக்கப்பட்டதும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கெடுபிடிகள் மக்கள் மீது திணிக்கப்பட்டன. இன்னின்ன பயிர்களை விளைவிக்கலாம், விளைவிக்கக் கூடாது என்று வனத்துறை உத்தரவிட்டது. புதிய சாலைகள் அமைப்பது தடை செய்யப்பட்டது. புதிய கட்டடங்கள் கட்டுவது தடை செய்யப்பட்டது. புதிய மின் இணைப்புகள் தரப்படவில்லை. இன்னும் எத்தனையோ கட்டுப்பாடுகள்... மக்கள் வாழ்க்கை தலைகுப்புற கவிழ்த்துப் போடப்பட்டது. அவர்களே கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிவிடவேண்டும் என்பதுதான் வனத்துறையின் திட்டம் என்று மக்கள் கருதினர். கொதித்துப் போன மக்கள் ஒரு லட்சம் பேர் கூடலூர் நகரில் திரண்டு ஊர்வலம் நடத்தினர். தற்காலிகமாக வனத்துறை பின் வங்கியுள்ளது. எவ்வளவு நாட்களுக்கு என்பது கேள்விக்குறி.

ஆனால் கோர் ஜோன் எனப்படும் மையப்பகுதியில் என்ன நடக்கிறது தெரியுமா?

சீசன் நேரத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 6000 சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். குறைந்தது 50,000 சதுர அடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பல புதிய வாகனங்களை வனத்துறை வாங்கியுள்ளது. இன்னும் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும் அவர்கள் தங்குவதற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்கிறார் நீலகிரி விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ்.

முதுமலை, அதையட்டியுள்ள கேரளத்தின் முத்தங்கா, கர்நாடகத்தின்  பந்திப்பூர் ஆகிய மூன்று சரணாலயங்களிலும் சேர்த்து 80 புலிகள் இருப்பதாக மதிப்பிட்டு இருக்கிறார்கள். இதற்காக தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு லட்சம் பேரின் வாழ்க்கை கேள்விக் குறியாக்கப்படும் நிலைமை உள்ளது. மொத்தத்தில் புலிகள் காப்பகங்கள் ஆயுதமேந்திய சில வனக் காவலர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் தவிர வேறு யாரும் தலை காட்ட முடியாத பிரதேசங்களாக மாற்றப்படும்.

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத விடுதிகள் அமைத்து சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத சுற்றுலா நடத்துவார்கள். இந்த ஈகோ டூரிஸம் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஒரு மிகப்பெரிய லாபகரமான தொழில். இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காடுகள் என்றால் அங்கு மனிதர்கள் இருக்கக் கூடாது என்று மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். இந்த சுற்றுலா மூலம் நாகரிகமான பயணிகள் காட்டுக்கு வந்து விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்து செல்வார்கள். இதற்கு முன்நிபந்தனையாக ஏற்கனவே காடுகளில் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்து வருபவர்கள் விரட்டியடிக்கப்படவேண்டும் என்கிறார் பிஜாய். (The great Indian tiger show EPW 22.1.2011).

sanarappan-mandu_1_370இது பழைய மொந்தையில் புதிய கள் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார் அவர். சுதந்திரத்திற்கு முன்பு சமஸ்தான மன்னர்களும் ஆங்கில ஆட்சியாளர்களும் வேட்டையாட தனி பிரதேசங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. அங்கு மற்றவர்கள் செல்வது தடை செய்யப்பட்டிருந்தது. சுதந்திரத்திற்குப் பின்பு வேட்டை தடை செய்யப்பட்டது. இந்தப் பகுதிகள்தான் பின்பு வனவிலங்கு சரணாலயங்களாக மாற்றப்பட்டன.   இப்போது அவர்களே ஈகோ டூரிஸ்டுகளாக திரும்ப வருகிறார்கள். இப்போதேகூட வனவிலங்கு சரணாலயங்களில் விலங்குகளைப் பார்க்கிறோமோ இல்லையோ வெள்ளைக்காரர்களைக் கட்டாயம் பார்க்கலாம்.

ஈக்கோ டூரிஸம் மூலம் கிடைக்கும் தொகையில் ஒருபகுதி உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்படுமாம். எவ்வளவு கிடைக்கும் என்று இந்த ஈக்கோடூரிஸத்தில் முன்னணியில் இருக்கும் நேபாளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

சுற்றுலாப் பயணிகள் செலவழிக்கும் தொகையில் 69 சதவீதம் நேப்பாளத்திற்கே வருவதில்லை. சுற்றுலா ஏற்பாடு செய்யும் ஐரோப்பிய அமைப்புகளுக்கே போய்விடுகிறது. 31 சதவீதம் காட்மண்டுவில் இருக்கும் கம்பெனிகளுக்குப் போகிறது. 1.2 சதவீதமே உள்ளூர் வந்து சேர்கிறது. (Conservation Refugees பக். 255). ஆனால் இதற்கு உள்ளூர் மக்கள் கொடுக்கும் விலை?

பழங்குடி மக்கள் காடுகளை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்!

காடுகளில் பழங்குடி மக்களுக்கு கல்வி, மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. மக்கள் காடுகளைவிட்டு வெளியேற விரும்புகின்றனர். அவர்களை நம்மைப்போல் வாழவைப்பது நமது கடமையில்லையா என்கின்றனர் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள். பழங்குடி மக்கள் இப்படி விரும்புகிறார்கள் என்பதற்கு ஆதாரமாக தாங்கள் வழக்கமாகத் தருவது போல ஒரு கண்துடைப்பு புள்ளிவிவரம் கூடத் தருவதில்லை.

பழங்குடிகள் அல்லாத மந்தடஞ்செட்டிகள் என்ற மக்கள் காட்டை விட்டு வெளியேற தங்களை அனுமதிக்கும்படி கோருவதை பழங்குடிகள் கோருவதாக இவர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். மந்தடஞ்செட்டிகள் கேட்பதற்கும் காரணம் உண்டு. அவர்கள் வாழும் பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டால் போக்குவரத்து போன்ற அனைத்து வசதிகளும் நிறுத்தப்பட்டுவிடும். அவர்கள் வியாபாரம் செய்பவர்கள், வசதியானவர்கள். நகரங்களோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். எனவே தங்கள் அன்றாட வாழ்க்கையை தொடர முடியது என்பதால் இந்தக் கோரிக்கை.

1880லிருந்து இன்றுவரை பல்லாயிரம் பழங்குடிகள் காடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். நஷ்ட ஈடு கொடுப்பதாக உறுதியளிக்கப் பட்டுத்தான் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் செங்கல் சூளைகளிலும், கோவை, திருப்பூர் மில்களிலும், வயநாட்டின் விபச்சார விடுதிகளிலும் கொத்தடிமைகளாக வதைபடுகின்றனர்.

இந்த என்.ஜி.ஓக்களின் பொலிரோ வாகனங்கள் கோவை தடாகம் செங்கல் சூளைகளைத் தாண்டித் தான் மலைகளுக்குச் செல்ல வேண்டும்.அங்கு இரத்தம் சுண்ட மண் சுமக்கும் ஆதிவாசிகள் நம்மைப் போல் வாழ இவர்கள் என்ன செய்தார்கள்? அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? எதை நம்பி வெளியே வருவது? வெற்றிகரமாக பழங்குடி மக்களுக்கு மறு வாழ்வு அளித்ததற்கு நாகர் ஹோலே புலிகள் காப்பகத்தை சொல்லி வைத்தாற்போல் எல்லோரும் உதாரணம் காட்டுகின்றனர். இதில் வழக்கம்போல உல்லாஸ் கரந்த்தும் சேகர் தத்தாத்ரியும் ஒருவரை ஒருவர் முன்மொழிந்து வழிமொழிகிறார்கள். காட்டைவிட்டு வெளி யேறிய அந்த மக்கள், இப்போது மகிழ்ச்சியாக வாழ்கிறார்களாம். அதற்கு ஆதாரமாக சேகர் தத்தாத்ரி மக்கள் பம்ப் அடித்து தண்ணீர் எடுப்பதை காட்டுகிறார்.

இந்தப் படம் தொடர்பாக திருவண்ணாமலையில் நடந்த விமர்சனக் கூட்டத்தில் “ஓடைகளுக்கும் அருவிகளுக்கும் நடுவே வாழ்ந்த மக்களை அடி பம்ப்பில் தண்ணீர் எடுக்க வைத்ததைத் தவிர வேறு எதையும் சாதனையாகக் காட்ட அவரால் முடியவில்லை” என்று ஆர். ஆர். சீனிவாசன் பேசினார்.

நாகர் ஹோலே சரணாலயம் 1983ல் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சுமார் 35,000 பழங்குடிமக்கள் ஜெனு குரும்பர்கள், சோளி கர்கள், பெட்ட குரும்பர்கள், யெரவர்கள் இக் காட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்து வந்தனர். இந்த அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படுவதற்கு முன்பே 1970களிலேயே அரசு மக்களை வெளியேற்றத் தொடங்கியது. சுமார் 6000 பேர் வெளியேற்றப்பட்டனர். கடுங்கோபமும் அதிருப்தியும்ம் கொண்ட பழங்குடி மக்கள் அமைப்பாகத் திரண்டு போராடத் தொடங்கினர். 20 ஆண்டுகளுக்கு மேல் நடந்த ஓய்வற்ற போராட்டங்களுக்குப் பிறகே அரசு வன்முறையை கொஞ்சம் குறைத்துக் கொண்டு மக்களை வெளியேற்ற முயன்று வருகிறது. இதைத்தான் உல்லாஸ் கரந்தும், சேகர் தத்தாத்ரியும் ஏதோ மிகச் சிறந்த முறையில் பழங்குடி மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.  

அதே நேரம் நாகர்ஹோலேவில் நடந்த இன்னொரு சம்பவம் குறித்து இவர்கள் இருவரும் ஒரு சொல்லும் பேசுவதில்லை. அரசு மக்களை வெளியேற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில் உலக வங்கி நிதியுதவியோடு ஈகோ டூரிஸம் விடுதி ஒன்றை தாஜ் குழுமம் நாகர்ஹோளேவில் கட்டத் தொடங்கியது. பழங்குடி மக்கள் இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். ஒரு பந்த்தும் நடத்தப்பட்டது. பின்பு நீதிமன்றம் இந்த விடுதி கட்டுவதற்குத் தடைவிதித்தது. இன்றும் அறை குறையாக நின்று போன தாஜ் ஹோட்டலின் கட்டடங்களை நாகர்ஹோளேவில் காணமுடியும்.

இதற்குப் பிறகு சரணாலயத்தில் மீதி இருந்தவர்கள் மீது பெரும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. விவசாயம் முற்றிலும் தடை செய்யப்பட்டது.   சிறுவனப் பொருட்கள் சேகரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது. கோவில்களுக்கும் சுடுகாடுகளுக்கும் மக்கள் செல்வது தடை செய்யப்பட்டது. இத்தனைக்கும் பின்புதான் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த சாதனையைப் பற்றி இவர்கள் இருவரும் வாய் திறப்பதே இல்லை.

காடுகளில் பழங்குடி மக்கள் அனுபவிக்கும் ‘துயரம்’ பற்றி கூறும்போது NGOக்கள் ஒன்றை மறக்காமல் குறிப்பிடுகின்றனர். காட்டில் எப்படி கல்வி அளிக்க முடியும்? மருத்துவ வசதி அளிக்க முடியும்?

பழங்குடி மக்களிடம் கல்வியை ஒப்படைத்த மிஸோரம் மாநிலம் கல்வியில் கேரளாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இப்படி ஆடு நனைகிறது என்பவர்கள் பழங்குடி ஆசிரியர்களை, பழங்குடி மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்று வாயளவிலாவது பேசியிருப்பார்களா? காடுகளில் இருக்கும் மின்சார இலாகா வனத்துறை விடுதிகளில் சுற்றுலா விடுதிகளில் இல்லாத வசதிகளா? இவற்றை ஏன் மக்களுக்குக் கொடுக்க முடியாது என்று கேட்கிறார் கவிஞர் லட்சுமணன்.

NGO அறிவியல்

இந்த ழிநிளிக்கள் மிகவும் விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வுகள் மேற்கொள்வதாகவும், அறிவுபூர்வமாகப் பேசுவதாகவும் காட்டிக் கொள்கிறார்கள். ஜெர்மன் ரயில்வே போல 1411 புலிகள் உள்ளன, 89 புலிகள் உள்ளன என்று துல்லியமாகச் சொல்கிறார்கள். ஆனால் வேடிக்கை என்னவென்றால் எத்தனை புலிகளுக்கு அவற்றின் நடமாட்டத்தை காண உதவும் கருவி பொருத்தியிருக்கிறார்கள் என்று சொல்வதே இல்லை. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறை முன்பு புலிகளை கணக்கிட்ட முறை தவறு என்று கூறுகிறார்கள். முன்பு புலிகளின் கால்தடம் போன்றவற்றை வைத்து எண்ணிக்கையைக் கணக்கிட்டார்கள். இப்போது காட்டில் ரகசியக் கேமராக்கள் பொருத்தியிருக்கிறார்கள். இதில் புலி விழுந்ததாக சொல்லி வைத்தாற்போல எல்லாச் சரணாலயங்களிலும் படங்களை வெளியிடுகிறார்கள். இந்தக் கேமராக்கள் வனத்துறையால் பொருத்தப்பட்டவை.  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒருபோதும் பக்கச் சார்பற்ற ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை.

கபாலம், கடைவாய்ப்பல் அளவுகள் குறித்து துல்லியமாகச் சொல்வதால் எல்லாமே துல்லியமாகத்தான் இருக்கும் என்று நாம் நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.இவர்களின் அதிமேதாவித்தனத்திற்கு ஒரு அற்புதமான உதாரணம் ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயம். அங்குள்ள நீர்நிலைகளில் புற்கள் மண்டியிருக்கும். அவற்றில் பழங்குடி மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பது வழக்கம். யாரோ ஒரு அதிமேதாவிக்கு இது உறுத்தியது. மக்கள் கால்நடை மேய்ப்பதால் பறவைகள் பதிக்கப்படுகின்றன என்றார் அவர். மக்கள் கால்நடை மேய்ப்பது தடை செய்யப்பட்டது. பறவைகள் வருவது உடனடியாக நின்று போய்விட்டது. கால்நடைகள் மேய்க்கப்படாததால் புற்கள் மண்டி கீழே நீர்நிலைகள் இருப்பது பறவைகளுக்குத் தெரியவில்லை எனவே அவை வரவில்லை என்பது பின்பு கண்டுபிடிக்கப்பட்டது. பல்லாயிரம் ஏழை எளிய மக்களின் வாழ்வை பாதிக்கக் கூடிய முடிவுகள் எப்படி அலட்சியமாக எந்த ஆய்வும் இன்றி எடுக்கப்படுகின்றன என்பதற்கு பரத்பூர் தான் சரியான உதாரணம்.

இன்னொரு உதாரணமும் சொல்லலாம். ரந்தம் போர் தேசியப் பூங்கா ராஜஸ்தானில் உள்ளது. இங்கு யுவராஜ் என்ற ஆண் புலி இருந்தது. 2007ல் இதை வேட்டையாடிக் கொன்றுவிட்டதாக மோல்யா மோக்யா என்பவர், அவர் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இப்போது யுவராஜ் உயிருடன் உள்ளது என்று டைகர் வாட்ச் அமைப்பின் தர்மேந்திர கண்டல் என்பவர் கூறுகிறார். விரல்விட்டு எண்ணக் கூடிய புலிகள், கோடிக்கணக்கான ரூபாய் பராமரிப்புச் செலவு கணக்கிட மிகச் சிறந்த தொழில்நுட்பம்(?) சர்வ வல்லமை வாய்ந்த வனத்துறை... வேடிக்கைதான். பாவம் வேட்டைக்காரர்களும் அயோக்கியர்களும் புலி வேட்டைக்காரர்களுமான பழங்குடிகள். (டைம்ஸ் ஆப் இந்தியா 11.6.2011)     

NGOக்களின் ஆய்வுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபமளிக்க வேண்டும் என்பதையே குறிக் கோளாகக் கொண்டு செய்யப்படுகின்றன. காடுகளி லிலிருந்து மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற மேற்கத்திய அரசியலையே அவை முன் வைக்கின்றன.  இவற்றில் விஞ்ஞானமுமில்லை துல்லியமும் இல்லை. கார்ப்பரேட் நலன்கள்தான் உள்ளன. எனவே இவர்கள் சொல்வதை அப்படியே நம்புவது கார்ப்பரேட் நலன்களுக்கு உதவுவதோடு மிச்ச மீதியிருக்கும் காடுகளை அழிப்பதற்கும் பல லட்சம் பழங்குடி மக்களை உள்நாட்டு அகதிகளாக்குவதற்குமே உதவும்.

நகர்ப்புற மக்களுக்கு உள்ள இயற்கை மீதான ஆர்வத்தை திட்டமிட்டு கார்ப்பரேட் நலன்களுக்குப் பயன்படுத்துவதே இவர்களது நோக்கம். இதற்கு நூற்றாண்டு காலமாக மக்கள் மீது அதிகாரம் செலுத்திப் பழகிப்போய், அதை கைவிட விரும்பாத வன அதிகரவர்க்கமும், நாட்டின் எல்லாச் செல்வ வளங்களையும் மூலதனத்தின் லாப வெறிக்குத் திறந்துவிட வேண்டும் என்று துடிக்கும் அரசுகளும் துணைபோகின்றன.

இதுவரை பழங்குடி மக்கள் சந்தித்து வந்திருக்கும் வேதனைகளைவிட மாபெரும் அவலத்திற்கு அவர்களை உள்ளாக்கப் போகின்றன இந்த புலிகள்  காப்பகங்கள். இவற்றிற்கு எதிராகப் போராடி வரும் மக்களை ஆதரிப்பதும் இரவுப் பகலாக ஓய்வின்றி நடந்துவர்ம் போய்ப் பிரச்சாரத்திற்கு மாற்றாக உண்மைகளை முன்னிறுத்துவதும் நமது கடமையாகும்.

Pin It