இந்தியாவின் விவசாயத்தை முழுமையாக பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணியில் அரசுத்துறைகள் ஈடுபட்டுள்ளதாகவே தோன்றுகிறது. விவசாயம் தொடர்பாக அமெரிக்காவும், இந்தியாவும் அறிவு முனைப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் போட்டுக்கொண்ட ஒப்பந்தம், அமெரிக்க வேளாண் நிறுவனங்களை இந்தியாவில் விஸ்தரிப்பதற்கான ஏற்பாடாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில், “தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம்” (TamilNadu State Agricultural Council) என்ற அமைப்பை நிறுவுவதற்கான சட்ட முன்வடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ மன்றம், இந்திய வழக்கறிஞர் மன்றம் போன்று வேளாண்மைத் தொழிலை நெறிப்படுத்தும் அமைப்பாக இந்த அமைப்பு செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண்மை தொடர்பான பட்டங்கள், சென்னை மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்த தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றத்தில் உறுப்பினராக முடியும். இவர்கள் மட்டுமே வேளாண்மை ஆலோசனை தொழிலை செய்ய முடியும். இந்த அமைப்பில் உறுப்பினராக இல்லாதவர்கள் வேளாண்மை ஆலோசனை வழங்கினால் அவர்களுக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

மேலோட்டமாக பார்த்தால் இது மிகவும் நல்ல திட்டமாகவே தோன்றும். ஆனால், இந்த சட்டத்திற்கான தேவை என்ன என்று பார்த்தால் இதன் உள்நோக்கம் புரிய வரும்.

பசுமைப் புரட்சியை இந்தியாவிற்கு கொண்டுவந்ததில் முக்கிய பங்கு வகித்த எம்.எஸ்.சுவாமிநாதன், தற்போது இயற்கை வேளாண்மைக்கு திரும்புங்கள் என்று கிடைத்த மேடைகளில்அனைத்திலும் முழங்கி வருகிறார். பசுமைப்புரட்சி உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்கள் நீண்டகால நோக்கில் விவசாயிகளின் தற்கொலைக்கே வழிவகுத்திருப்பதை வரலாறு உணர்த்துகிறது.

ஆனால் இந்த உண்மைகளை புறக்கணிக்கும் அரசு நிறுவனங்கள், இந்திய விவசாயத்தை மேலும் பன்னாட்டு நிறுவனங்களில் கட்டுப்பாட்டில் கொண்டு சேர்க்கும் விதமாக மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் போன்ற யுக்திகளை மிகத்தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. இதற்கு ஏற்ற வகையில் விதைச்சட்டம், காப்புரிமை சட்டம் போன்றவை திருத்தப்படுகின்றன.

இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில், விவசாய பட்டதாரிகள் மட்டுமே விவசாய ஆலோசனை வழங்கமுடியும் என்ற நிலையை ஏற்படுத்த தமிழக அரசு முனைந்து செயல்படுகிறது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் தன்னிச்சையாகவும், சில முன்னோடி விவசாய தலைவர்களின் முயற்சிகளாலும், சில பத்திரிகைகளின் செயல்பாடுகளாலும் இயற்கை வேளாண்மை குறித்து பரவிவரும் விழிப்புணர்வை தடுக்க தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது.

பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் ஆய்வு உதவித் தொகையில் உருவாக்கப்படும் வேளாண்மை கல்வியை பயின்ற மாணவர்கள்தான் அந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்வார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த தமிழ்நாடு மாநில விவசாய மன்றம் அமைக்கப்படுகிறது.

கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் இந்த முடிவு மிகவும் கண்டனத்திற்குரியது.

இது தமிழ்ச்சான்றோர்களின் வேளாண்மை குறித்த அனுபவத்தையும், அறிவையும் கேவலப்படுத்தும் செயலாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் வேளாண்மை என்பது ஒரு தொழிலாக பார்க்கப்பட்டதில்லை. அது சமூகத்திற்கு உணவளிக்கும் ஒரு சமூக நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களின் தவறான கொள்கைகள் காரணமாகவே வேளாண்மை என்பது லாபமற்ற அம்சமாக மாறியது. இதனால்தான் விவசாயிகள் பலரும் அந்த தொழிலை விட்டு விலகினர்.

மருத்துவம் படித்தவர்களில் பெரும்பான்மையினர் மருத்துவத்தொழிலையே செய்து வருகின்றனர். அதேபோல சட்டம் படித்தவர்களிலும் பெரும்பான்மையினர் வழக்கறிஞராகவோ அல்லது சட்டம் சார்ந்த வேறு தொழில்களையோ மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்களில் எத்தனை பேர் விவசாயத்தை தொழிலாக செய்து வருகின்றனர் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பல்கலைக்கழகங்கள் கொடுத்த அறிவை, அந்த மாணவர்கள் சொந்த வாழ்வில் சோதித்து பார்க்க விரும்புவதில்லை. அதற்கு பதிலாக அரசுப் பணிகளிலோ, தனியார் நிறுவனங்களின் பணிகளிலோ சேர்ந்து அப்பாவி விவசாயிகளின் வாழ்வில் விளையாடவே இந்த வேளாண்மை பட்டதாரிகள் முன் வருகின்றனர்.

சுனாமிப் பேரலை இந்தியாவை தாக்கியபோது உப்புநீர் புகுந்து மாசடைந்த நிலங்களின் இயல்பு நிலையை மீட்பதில் வேளாண் பட்டதாரிகள் யாரும் செயல்பட்டதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக அந்த நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு மலிவு விலையில் கைமாற்றிவிட முனைந்த தரகர்களாக சில வேளாண் துறை அதிகாரிகள் செயல்பட்டதாக செய்திகள் வந்தன. அன்றைய நிலையில் இயற்கை வேளாண்மை ஆலோசகர்களே கடலோர கிராமங்களில் தீவிரமாக செயல்பட்டு அந்த விளை நிலங்களின் இயல்பு நிலையை மீட்டனர். மேலும் இந்த இயற்கை வேளாண்மை நிபுணர்கள்தான் இலங்கை, இந்தோனேசியா போன்ற அண்டை நாடுகளுக்கும் சென்று கடல் உப்பால் பாதிக்கப்பட்ட நிலங்களின் இயல்பு நிலையை மீட்டனர்.

வேளாண்மை பல்கலைக்கழகங்களில் படித்த பட்டதாரிகள் மூலமாகதான் எண்ணெய்ப் பனை, எண்ணெய் ஆமணக்கு எனப்படும் ஜாட்ரோஃபா போன்ற பயிர்களை இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தின பல தனியார் நிறுவனங்கள். அந்த நிறுவனங்களையும் தற்போது காணவில்லை. அதில் பணியாற்றிய வேளாண்மை பட்டதாரிகளையும் தற்போது காணவில்லை. அந்த பயிர்களை விளைவித்து ஓட்டாண்டிகளான விவசாயிகள்தான் இப்போது பெருநகரங்களில் பிச்சைக்காரர்களாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் மீதமுள்ள விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கையளிக்கவும், விவசாயிகளை பன்னாட்டு நிறுவனங்களின் கூலிகளாக மாற்றுவதற்கும் ஏற்ற ஒரு ஏற்பாட்டை தமிழ்நாடு மாநில விவசாய மன்றம் என்ற பெயரில் கொண்டுவர தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இது விவசாயிகளுக்கான பிரசினை மட்டுமல்லை. விவசாயிகள் விளைவிக்கும் உணவை உட்கொள்ளும் அனைவரின் பிரச்சினையாகும்.

Pin It