இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால் படித்தவர்கள் விவசாயம் பார்க்க வருவார்களா? இன்றைய இளைஞர்கள் ஏ.சி. அறையில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை பார்ப்பதைத்தானே விரும்புகிறார்கள். "ஆர்கானிக் ஃபார்மிங்...! வாட் இஸ் தட்?" என்று கேள்வி கேட்பவர்களே அதிகம். இதெல்லாம் நம்மிடையே நிலவும் நம்பிக்கைகள். ஆனால் இந்த நம்பிக்கைகள் எவ்வளவு தூரம் உண்மை? இவற்றை பொய்யாக்கிக் கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் பிச்சினிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏங்கல்ஸ் ராஜா. 2004ல் எம்.பி.ஏ. படித்து முடித்தாலும் அவருக்கு விவசாயம் செய்வதில்தான் ஆர்வம் இருந்தது. ஆனால் பலரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. பெரிய படிப்பு படித்தவர்கள் ஏன் இப்படி சேற்றில் கால் வைக்க வேண்டும் என்று கேள்விதான் கேட்டார்கள்.

"விவசாயம்தான் செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தாலும், எனக்கு நவீன வேளாண்மையிலேயே ஆர்வம் இருந்தது. எங்க அப்பாவோ இயற்கை விவசாயத்தை சிறப்பா செஞ்சுக்கிட்டிருந்த முன்னோடி விவசாயி. ஆரம்பத்தில் இயற்கை விவசாயத்தின் மீது எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை. அதனால் வேதி உரங்களை வைத்து விவசாயம் பார்த்துக் கொண்டு இருந்தேன். இதனால் எனக்கும் எங்கப்பாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும்" என்கிறார் இந்த இளைஞர்.

உலகமே வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது, நாம் மட்டும் இயற்கையை பின்பற்றுவது மகசூலை குறைத்தே கொடுக்கும். இயற்கை முறைகள் பத்தாம்பசலித்தனமானவை, வேலைக்கு உதவாதவை என்ற கருத்தில பிடிவாதமாக இருந்த ஏங்கல்ஸ் ராஜா, பலமுறை அதை கிண்டலும் செய்திருக்கிறார்.

2005 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய ஆழிப் பேரலை ஏங்கல்ஸ் ராஜாவின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது. எதிர்மறையாக அல்ல, நேர்மறையாக. நாகப்பட்டினத்தின் ஆழிப்பேரலையில் கடல்நீர் புகுந்த விளைநிலங்களை அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியாது என்று கூறி வேளாண் கல்லூரி கைவிரித்து இருந்தது. இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் அக்கருத்தை மூன்றே மாதங்களில் பொய்யாக்கினார்கள்.

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வளப்படுத்த நமது பாரம்பரிய விவசாயிகள் பலரும் களம் இறங்கினார்கள். நாகப்பட்டினம் கடற்கரை பகுதியில் உள்ள நிலங்களை வளப்படுத்துவதற்காக நம்மாழ்வார் வந்தார். அவரிடம் கொண்டு போய் என்னை ஒப்படைத்தார் அப்பா. பாழ்பட்ட நிலத்தில் வழக்கமாகக் கிடைக்கும் மகசூலை நம்மாழ்வார் அந்த முறையும் எடுத்துக் காட்டினார். இந்த பரிசோதனை முயற்சியில் பங்கேற்றதை பெருமையாகக் கருதுகிறார் ஏங்கல.

"நம்மாழ்வாரைச் சந்திக்கும் வரை எனக்கு இயற்கை வேளாண்மையில் நம்பிக்கையில்லை. நாகப்பட்டினத்தில் எங்களது களப்பணிக்கு கிடைத்த வெற்றி, மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. நவீன வேளாண்மையை புரிந்து கொள்வது கடினம். அதுமட்டுமில்லாமல் செலவும் அதிகம். இயற்கை வேளாண்மை எளிமையானது. லாபகரமானது என்பதை ஆதாரப்பூர்வமாகப் புரிந்து கொண்டது என்னை தலைகீழாக மாற்றியது" அவர் என்கிறார்

நம்மாழ்வாரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். எடுத்துக்காட்டுக்கு மண்புழு உரம் தயாரிப்பவர்கள் பெரிய கொட்டகை போட்டு பந்தோபஸ்தாகப் பண்ணுவார்கள். ஆனால் தென்னை மர நிழலிலேயே எளிமையாக மண்புழு உரம் தயாரிக்க முடியும். அதற்குப் பிறகுதான் இயற்கை விவசாயத்தின் அருமை புரிந்தது. பிறகு நம்மாழ்வார் கூடவே தமிழகம் முழுக்க போக ஆரம்பிச்சேன். இன்றைக்கு இயற்கை விவசாயத்தை பல விவசாயிகளுக்கு கற்றுத் தந்து வருகிறேன்.

ஒரு காலத்தில் தானே நம்பாத இயற்கை வேளாண்மையை இன்று ஆயிரக்கணக்காணவர்களுக்கு அவர் பயிற்றுவித்துக் கொண்டுள்ளார். அவரைப் போலவே இயற்கை வேளாண்மை மீது நம்பிக்கையின்றி இருந்த எண்ணற்ற விவசாயிகள் இன்றைக்கு அவர் சொல் வதை ஏற்றுக் கொள்கிறார்கள், செயல்படுத்துகிறார்கள். காரணம், அவர் இயற்கை வேளாண்மை மட்டும் செய்யவில்லை. நிர்வாகவியலும் படித்திருக்கிறாரே.

2007ல் திருச்சி மாநகராட்சியில் இருந்து குப்பை பிரச்சினையைத் தீர்க்க நம்மாழ்வாரிடம் கேட்டுக் கொண்டார்கள். இப்போது அந்த குப்பைகளைப் பயன்படுத்தி உரம் உற்பத்தி செய்கிறோம். சுயஉதவிக் குழு பெண்கள் அவற்றை வாங்கிச் சென்று வீட்டிலேயே காய்கறி உற்பத்தி செய்து விற்கிறார்கள். நம்மாழ்வாருடன் இணைந்து வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் இயற்கை வேளாண்மையைப் பரப்பி வருகிறேன். இன்றைக்கு 5,000 விவசாயிகளை வேதி உரங்களில் இருந்து மீட்டெடுத்து, இயற்கை வேளாண்மையில் இவர் பயிற்சி அளித்துள்ளார். இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மாநில அளவில் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தையும் அவர் செயல்படுத்தி வருகிறார்.

"இன்றைய இளம் சமுதாயத்தினரிடையே விவசாயம் குறித்த தெளிவான பார்வை இல்லை. சர்வதேச நிறுவனங்கள் தரும் அளவுக்கு அதிகமான விளம்பரங்களால் மயக்கப்படும் அவர்கள், அனுபவ பாடத்தையும் நம்பகத்தன்மையையும் அடிப்படையாகக் கொண்ட இயற்கை வேளாண்மையை சுத்தமாக நம்புவது இல்லை. வேதி உரங்களைப் பயன்படுத்தி, விவசாயம் செய்து ஆபத்திலிருக்கும் விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும். விலை உயர்ந்த வேதி உரங்களைப் பயன்படுத்தி அடிமேல் அடிவாங்கி சரிவைச் சந்தித்து வரும் விவசாயத்தில் முதலீட்டைக் குறைக்க இயற்கை வேளாண் முறையே சிறந்தது. இது தொடர்பான விழிப்புணர்வு அத்தியாவசியம்" என்கிறார் ஏங்கல்ஸ்.

நமது பாரம்பரிய விவசாய வரலாற்றில், இடையில் புகுத்தப்பட்ட வேதி உரங்களையும், வளம் குன்ற வைக்கும் நவீன வேளாண் முறைகளையும் முற்றிலும் களைய வேண்டும் என்பது அவரது பெருங்கனவாக மாறியிருக்கிறது. இதற்காக மண்வெட்டி, கலப்பை சகிதமாக வலம் வரும் இந்த எம்.பி.ஏ. பட்டதாரி, இயற்கை வேளாண்மையை பிரபலப்படுத்துவதிலும், பயிற்சி அளிப்பதிலும் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு முன்னுதாரணமாக மாறி இருக்கிறார்.

- இனியன் 

Pin It