நமது நாட்டின் முதுகெலும்பாக இருப்பது வேளாண்மை. பண்டையத் தமிழ் மக்கள் வேளாண்மைத் தொழிலை உயிர்த்தொழிலாகவும் உயரிய தொழிலாகவும் வணங்கி வந்தனர். மதுரைக் காஞ்சி நச்சினார்க்கினியர் உரையில் ‘உலகத்துத் தொழில்களில் மேலாகச் சொல்லும் உழவு, வாணிகம் என்கிற இரண்டு கூற்றாலே அகலம் பொருந்துதலையுடைய சீரிய செல்வத்தாலே புகழ் நிறைந்த குடிமக்கள் பொருந்தின நான்கு நிலத்து வாழ்வாருடனே’1 என உழவை முதன்மைத் தொழிலாகக் கொண்டனர். அவர்கள் விவசாயம் செய்த முறை, பயிர் வகைகள், அவர்களது காலத்திலிருந்த தொழில் நுட்ப நுணுக்கங்கள், அதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை சங்க இலக்கியங்களிலும் அதனைத் தொடர்ந்து வந்த இலக்கியங்களின் நீட்சியாக நாவல்களிலும் காணமுடிகிறது. ஆதித்தொழிலான விவசாயமும் மாற்றத்திற்குத் தன்னை உட்படுத்திக் கொள்வது தவிர்க்க முடியாத மானுடத்தின் அடையாளம் என்பதை இப்புனைவு மூலம் நிறுவுகிறார் கன்யூட்ராஜ்.
இயற்கை விவசாய காவலர்கள்:
உழவார அடிகள் இயற்கை விவசாயம் செழிக்கக் காடுமேடாய் அலைந்து திரியும் இயற்கை காவலர். ஒரு சாதாரண விவசாயி கூப்பிட்டால் அவர் நிலத்திற்கே சென்று பயிற்சியளித்துக் கொண்டிருப்பார். அவரின் வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு மனதுக்குத் திருப்தியான இப்பணியினை மேற்கொள்கிறார். நாவலின் மையக் கதாபாத்திரமான ஆழ்வானும் அமெரிக்கா சென்று மிகப்பெரிய நிறுவனத்தில் வருவாய் ஈட்டிக்கொண்டிருக்கும் போது, அவர் மனம் தான் அக்கரைப் பசுமை நாட்டில் உட்கார்ந்து என் வாழ்வை மட்டும் வளமாக்கிக் கொண்டிருக்கிறேன் என்ற கேள்வியின் புரிதலுடன் தன் பணியினை ராஜினாமா செய்து நாட்டுப்பற்றுடனும் ஏதாவது மனதிற்குப் பிடித்த பணி செய்யவேண்டும் என்ற எண்ணத்துடனும் சொந்த ஊர் திரும்புகிறார் என்பது ‘இயற்கையில் இருந்து மக்கள் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறார்களோ, அவ்வளவு தூரம் அதன் மையத்தில் இருந்து சுழற்றி எறியப்படுகிறார்கள். அதே சமயம் குவிமைய விசையால் இயற்கைக்குத் திரும்பும் ஆசை அவர்களுக்கு வருகிறது’2 என்ற மசானபு ஃபுகோகா கூற்றுப்படி இயற்கை விவசாயம் ஆழ்வானை வரவேற்பதாக அமைகிறது.
உழவார அடிகளைச் சந்தித்தபிறகு அவரின் அயராத இயற்கை விவசாய பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டு இவர்களால் தான் நம் உணவுத்தட்டை நிறைகிறது, இவர்களைப் பற்றிய பிரக்ஞை இல்லாமலே நான் இருந்திருக்கிறேன். இயற்கை முறையில் விவசாயம் செய்யத் தன்னை அர்ப்பணித்து வேளாண்மையை தன் நண்பன் நாதனின் நிலத்தைப் பெற்றுத் தொடங்குகிறார். பாஷ்யம் ஐயங்கார் ஆழ்வானைக் கண்டு என்ன தொழில் செய்யப்போகிறாய் என்றவுடன் தயங்காமல் விவசாயம் செய்கிறேன் எனக் கூறுகிறார். பின் பிராமணாளுக்கு விவசாயம் சரிப்பட்டு வருமா? எனக் கேட்க ஆழ்வான் ‘பிராமணன் சாப்பிடுகிறான் இல்லையா? தன் உணவை அவன் உற்பத்தி செய்வதில் என்ன தப்பு இருக்க முடியும்?’3 பிறப்பால் மனிதர் உயர்ந்தவரில்லை. வட இந்தியாவில் பிராமணர்கள் விவசாயம் செய்கிறார்கள். தஞ்சாவூர் ஜில்லாவில் பிராமணர்கள் விவசாயம் செய்திருக்கிறார்களே என விவசாயம் அனைவருக்குமானது என நிறுவுகிறார். இங்கு ஆழ்வான் “இந்த ஒற்றை வைக்கோலில் இருந்து ஒரு புரட்சியை துவங்கலாம்”4 ஃபுகோகா கூற்றுப்படி இயற்கை விவசாயத்தில் இணைகிறார்.
அந்நியப்படுத்தப்பட்ட தலைமுறை:
வயல் குடும்பம் போன்றது, விளைவிக்கும் பயிரை தன் சொந்தக் குழந்தையாகப் பார்க்கும் கண்ணோட்டத்துடன் இயங்கி வருபவராக நாதன் உள்ளார். இக்காலகட்டத்தில் பள்ளிப்படிப்பும், ஆலைமுறை வேலையும், வருங்காலத் தலைமுறையை இயற்கையிடமிருந்து நம்மை அந்நியப்படுத்துகிறது. இதன் விளைவாக வியர்வையும் சகதியும் கேவலப் பொருட்களாகிவிட்டன. மானுடம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு விஞ்ஞானம் தந்துவிடும் என நம்மில் பதிந்து விட்டது. ஆனால் இயற்கை சார்ந்த, வயல் சார்ந்த, வாழ்வு சார்ந்த அனைத்து பிரச்சனைக்கும் விஞ்ஞானத்தின் அற உணர்வற்ற, முழுமையான பார்வை இல்லாமையே காரணமாகும்.
பூமிக்குத் தன்னைப் புதுப்பிக்க அவகாசம் தர மறுக்கிறது விஞ்ஞானம் என்ற இயற்கை சார்ந்த புரிதல்கள் நாதனை இயற்கை விவசாயத்திற்கு அடிக்கோலிடச் செய்கிறது. அதற்கான நிலம் இருந்தும் அரசியல் தலைவர்கள், அடியாட்களின் மிரட்டல்களும் அவரை நிலைகுலையச் செய்யும் காலகட்டத்தில் ‘மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் “விவசாயப் புரட்சியே” நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டத்தின் மையமாகும்’5 என்ற எழுச்சியுடன் உழவார அடிகளே காப்பாற்றுகிறார். அவர் விவசாயிகள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்றும் ‘இன்று உருவாகிவரும் நகரமயம், விவசாயிகளை வேரோடு பிடுங்கி அவர்களை நகரக் கூலிகளாக மாற்றுகிறது. அதன் கையாட்கள்தான் இவர்கள். விவசாயி, மண்ணோடும் பயிரோடும் நெருங்கி, உயிருள்ள தொடர்பு கொண்டு வாழ்பவன். அந்த உறவு அழிந்துவிடக் கூடாது. அது உலகுக்கும் நமக்கும் வரும் அழிவின் தொடக்கம்’6 என உரைப்பது விவசாயத்தால் மானுடம் உயரும் என்பதை அறிய முடிகிறது.
தன் மகனின் நலனுக்காக தன் நிலத்தை நண்பன் ஆழ்வானிடம் கொடுத்து சென்னையில் வீடு வாங்குகிறார். சென்னை வாழ்க்கை என்பது அவருக்கு சலித்துப் போகிறது. விவசாயியான நாதன் ஏதாவது இயற்கை சார்ந்த மரம், செடி வளர்க்க விரும்பும்போது, அதற்கான சூழலை சென்னையில் வசிக்கும் மக்கள் எதிர்த்தும், ஏளனம் செய்தும் வருகின்றனர். ‘ஒவ்வொரு நாளும் ஒரு மரக்கன்றைக் குமரன் குன்றம் செல்லும் மலைப்பாதை ஓரத்தில் வைத்து வளர்க்கலாமே என்று அவருக்குத் தோன்றியது. உடனே வண்டிக்காரரிடம் நான்கு வேப்ப மரக்கன்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். அந்த மரக்கன்றுகள் அவருக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தன. புது பொம்மையைப் பெற்ற குழந்தை மகிழ்வதுபோல நாதன் மகிழ்ந்து போனார்’7.
நாதனைக் கண்ட பணியாளர் வேப்பமரம் நட இது கோயில் இல்லை என அவமானம் செய்யும் தோரணையில் பேசுவது மற்றும் தன்னை விவசாயி என அறிமுகம் செய்தும், ஊரிலிருந்து பிழைக்க வந்துள்ளாயா? இங்குச் சாப்பாடு ஒன்றும் இப்போது போட மாட்டார்கள். மத்தியானம் அன்னதானம் உண்டு எனக் கூறுவது என்பது காலந்தோறும் விவசாயிகள் நிலைமை மாறி வந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. விவசாயம் செய்கிறவனுக்கு எல்லாம் தெரியும் என்று ஊரில் நினைத்து வாழ்ந்த நாதனுக்குப் பட்டண வாழ்வானது விவசாயி உலகம் தெரியாதவன் என்பதை உணர்த்துகிறது. நாதன் சொந்த மாநிலத்திலே புலம் பெயர்ந்தும் நிம்மதியற்ற வாழ்விலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மீண்டும் தன் ஊருக்குத் திரும்பி, தான் விரும்பும் இயற்கை வேளாண்மையில் ஈடுபடுகிறார்.
பெண்ணிய வேளாண் எழுச்சி:
தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் பற்றிய புதிய எழுச்சி உருவாகி வருகிறது. ஆழ்வானின் காதலியான கல்லூரி ஆசிரியை நீலா காலச்சூழல் காரணமாக வேளாண்மை சார்ந்த அறிவை பெருக்கிக் கொள்கிறாள். ‘இப்போது என்னவோ விவசாயம் சார்ந்த புத்தகத்தைப் படிப்பது இயல்பாகி விட்டது. அப்போது அதில் எழுந்த ஒரு கேள்வி என் முகத்தில் அறைந்தது போன்றிருந்தது. ‘எந்த ஒரு உயர்ந்த ஜாதி பெண்ணும் ஏன் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை? பெண் இயற்கையோடு, விவசாயத்தோடு நெருங்கியவள். அவள் எப்படி கலாச்சார மாற்றத்தால் விவசாயத்திலிருந்து அந்நியப்பட்டுப்போனாள்?’8 என நீலா ஆழ்வானிடம் உரையாடுவது பெண்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற அவசியத்தைக் குறிப்பிடுகிறது.
நீலாவின் மாணவியாகிய அருள்செல்வி ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள விரும்புகிறாள். அவ்விருப்பினை நீலாவிடம் பகிர்கின்றாள் “மேடம், நான் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவள். விவசாயத்தை இன்றைய அதிகார, ஆதிக்க வர்க்கம் புறக்கணிக்கிறது. விவசாயத்தை, விவசாயிகளை, அதில் பணிபுரியும் மனிதர்களைக் கீழானவர்களாக, பார்க்க சமூகமும் மதமும் சொல்லிக் கொடுத்திருக்கிறது. இன்றைக்கு ஒடுக்கப்பட்டவர்கள் விவசாயிகள்தான். சமூகத்தின் விளிம்பில் நின்று இங்கும் அங்குமில்லாமல் அல்லாடுபவர்கள். இன்றைய வளரும் விஞ்ஞான, தொழில்நுட்ப சமூகம், அவர்களை நுகர்பவர்களாக மட்டும் பார்த்து அவர்களுக்கு வளர்ச்சியின் பயனை மறுக்கிறது. இன்றைய விஞ்ஞானத்தின் பயன் இந்த விவசாயிகளுக்கு மடைமாற்றம் செய்யப்படவில்லை. அதனால் விவசாயி போராடுகிறார். அவர் பார்வையில் பிரச்சினையைப் பார்க்க நாம் பழக வேண்டும். அவருக்கு நாம் துணை நிற்க வேண்டும்.” இந்த உரையாடல் மூலம் கல்லூரி படிக்கும் மாணவ சமூகத்திடம் எத்தகைய வேளாண் புரிதல்கள் உள்ளதென அறிய முடிகிறது.
சங்க காலத்தில் ‘பெண்கள் குடும்ப கடமைகளைச் செய்ததோடு தினைப்புனம் காத்தல், நூல் நூற்றல், உழவுத் தொழில் முதலியன செய்தனர்’10 என்ற கூற்றுப்படி வீட்டுப் பூந்தோட்டத்தை மட்டும் பராமரித்து வந்த பிலோமினா, நீலாவின் தஞ்சை விவசாயிகள் மாநாட்டு வேளாண் உரையைக் கேட்ட பின், பெண் அடுப்படியைச் சுற்றிக்கொண்டு, புடவை, அணிகலன் என இவற்றின்மீது மட்டும் அக்கறை கொண்டிருந்தால், அவளால் பட்டுப்பூச்சி உலகைத்தான் உருவாக்க முடியும். பட்டுக்கூடு, என்னதான் பளபளப்பாக இருந்தாலும் அது அவள் சிறகைத் தடை செய்யும் கூடுதானே. பெண் தன் காலில் நின்று தன் சிறகை அசைத்தால்தான் அவள் விழையும் உண்மையான விடுதலையின் வாயில் அவளுக்குத் தெரியும்.
“அரிவாளைத் தூக்கிக்கொண்டு காந்தி தோட்டத்துக்குள் ஓடிய அன்றிலிருந்து அவளுக்கு ஒரு எண்ணம் வந்துகொண்டேயிருந்தது. தன்னால் அரிவாளைத் தூக்கிக்கொண்டு ஓடி அந்நியர்களைத் துரத்த முடியும் என்றால், மண்வெட்டி பிடித்து வேலை செய்யவும் முடியும் என்று தோன்றியது’11. நீலாவிடம் பிலோமினா பெண்கள் விவசாயத்தில் பெரிய அளவில் ஈடுபடுவதில்லை. அது தீண்டத்தகாத ஒன்றாகவே இருக்கிறது. உங்கள் பேச்சால், அதை உடைத்து பெண்கள் அதில் புக வேண்டும் என உரையாடுதல் வீட்டுத் தோட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டு முழுமையாக விவசாயியாக மாற வேண்டும் என்ற புரட்சியை உண்டாக்குகிறது.
நாவலின் புனைவானது முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தையும் இயற்கைக்கு திரும்புவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மிகப்பெரும் வேலையிலிருந்த ஆழ்வான் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுதல், விவசாயியான நாதன் சென்னை வாழ்வை வெறுத்து மீண்டும் ஊருக்கு வந்து விவசாயத்தை மகிழ்வுடன் மேற்கொள்ளுதல், ஆசிரியை நீலா விவசாய போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல், வாழைப்பழ வியாபாரி பால்ராஜ் காந்தி தோட்டம் வாங்கி விவசாயம் செய்தல், கல்லூரி மாணவியான அருள் செல்வியின் விவசாய நலன் சார்ந்த போராட்டம், அடுப்படியே வாழ்வென்று இருந்த பிலோமினாவின் விவசாய முன்னெடுப்பு, ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில் ஊழியரான சுந்தரராஜன் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து பின் காந்தி தோட்டத்திற்கு காவலாளியாகி இயற்கை மீது கவனம் செலுத்துதல், கொள்ளிடக்கரை நீரைப் பாதுகாக்க ஸ்ரீரங்கத்தில் வெளிநாட்டுக் குளிர்பான ஆலை திறப்பதை பாஷியம் ஐயர் முதல் ஊரே எதிர்த்துப் போராடி வெற்றி பெறுதல் என்பது மனிதர்கள் நவீனத்திலிருந்து விடுபட்டு இயற்கைக்கு திரும்புகின்றனர் என்பதை நிறுவ முடிகிறது.
மனிதருக்கு வாயும் வயிறும் இருக்கும் வரை வயலும் பயிரும் விவசாயமும் இருந்தே ஆக வேண்டும் என்னும் மையக்கருத்தை எத்தனை தொழில் நுட்ப யுகமும் தடுக்க முடியாது.
தோட்டக்காரன் / கன்யூட்ராஜ் /
வெளியீடு: என்சிபிஎச், சென்னை. / விலை: ரூ.750/-
அடிக்குறிப்புகள்:
1. பக்கம்:160, தமிழர் சால்பு -சு.வித்தியானந்தன்- குமரன் புத்தக இல்லம்- 2014.
2. பக்கம்: 50, ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகாகோ - வம்சி / பூவுலகு வெளியீடு - டிசம்பர் 2009.
3. பக்கம்:315, தோட்டக்காரன் - கன்யூட்ராஜ், NCBH, டிசம்பர் - 2022
4. பக்கம்: 228, ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகாகோ - வம்சி / பூவுலகு வெளியீடு - டிசம்பர் 2009.
5. பக்கம்:76, வர்க்கம்- சாதி- நிலம்- கெய்ல் ஓம்வெட், அலைகள் வெளியீட்டகம்- 2019
6. பக்கம்:123, தோட்டக்காரன் - கன்யூட்ராஜ், NCBH, டிசம்பர் - 2022
7. மேலது, பக்கம்:223
8. மேலது, பக்கம்:223
9. மேலது, பக்கம்:253,
10. பக்கம்:61, தமிழ்ப் பண்பாடு - த.அருள் பத்மராசன், மலர் புக்ஸ் வெளியீடு, நவம்பர்- 2022
11. பக்கம்:365, தோட்டக்காரன்- கன்யூட்ராஜ், NCBH, டிசம்பர் - 2022
- ஜெ.ராஜா, உதவிப்பேராசிரியர், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி, சென்னை - 600072.