பாலங்கள் யாருடைய காசில், யாருக்காக கட்டப்படுகின்றன?

சென்னையின் ஒரு பகுதியை அழிக்கும் ஆபத்தான பாலம் பற்றி ஒரு அலசல்.

ரூ. 1000 கோடி செலவில் சென்னையி்ல் ஒரு புதிய பாலம் கட்ட திட்டம் வருகிறது என்று சமீபத்தில் கேள்விப்பட்டோம். கடற்கரை ஓரத்தில் 10 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள இந்த மேம்பாலம் சென்னை நொச்சிக்குப்பம் கலங்கரை விளக்கம் அருகே தொடங்கி அடையாறு ஆற்றைக் கடந்து திருவான்மியூரை அடுத்த கொட்டிவாக்கம் வரை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தப் பாலம் அடையாறு வரை ஆறு வாகன சாலையாகவும், அதற்குப் பின்னர் நான்கு வாகன சாலையாகவும் இருக்குமாம். முதல் கட்டமாக ரூ. 450 கோடி செலவில் பெசன்ட் நகர் வரை இந்தப் பாலத்தைக் கட்டத் திட்டமிட்டுள்ளார்கள். இந்த விவரங்கள் அனைத்தையும் அரசு வெளிப்படையாக வெளியிடவில்லை. ஏதோ ராணுவ ரகசியம் போல் மறைத்து வைத்திருந்தது. தகவல் உரிமைச் சட்டம் மூலம் மனு செய்து விண்ணப்பித்த பிறகே மேற்கண்ட தகவல்கள் தெரிய வருகின்றன.

இத்தனை கோடிகள் செலவிட்டு, இப்படியொரு பாலம் கட்ட வேண்டியன் அவசியம் என்ன என்று விசாரித்தபோது, அடையாறு லேட்டிஸ் பிரிட்ஜ் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காகத்தான் இவ்வளவு பெரிய பாலத்தைக் காட்டப் போகிறார்கள் என்று தெரிய வந்தது. பிரச்சினை எங்கோ இருக்க, போகாத ஊருக்கு வழி சொல்லும் திட்டமாக இது இருக்க வேண்டும். அதாவது கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்து வருபவர்கள் பாரிஸ் போன்ற வடசென்னைப் பகுதிகளுக்குச் செல்வதற்கு, அடையாறு உள்ளிட்ட நகரின் சில பகுதிகளைக் கடக்காமல், புதிய பாலத்த்ின் வழியாக சென்று மெரினா பகுதியை அடைந்துவிடலாம் என்று கூறுகிறார்கள். நல்ல விஷயம்தானே என்று நீங்கள் கேட்கலாம். இந்தத் திட்டத்தில் நன்மை தீமைகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் நமக்கே உண்மை தெரியவரும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

1. சென்னையில் கடந்த 10 ஆண்டு காலத்தில் ஏகப்பட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட பின் சாலையில் நெருக்கடி குறைந்துள்ளதா என்றால், கண்டிப்பாக இல்லை என்பதே பதில்.

மிகவும் நெருக்கடியான இடங்களி்ல் மேம்பாலம் கட்டியதால் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காணப்படாமல், அந்த நெருக்கடி அருகிலுள்ள வேறொரு இடத்துக்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு சிறந்த உதாரணம், அடையாறு ஜங்ஷனில் ஏற்படும் நெருக்கடியைக் குறைப்பதற்காக என்று கூறி அடையாறு மேம்பாலம் கட்டப்பட்டது. இப்பொழுது அடையாறி்ல் போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது. ஆனால் அதற்கு எதிர்விளைவாக மத்திய கைலாஷ் பகுதியிலும் ஆந்திர மகிள சபா உள்ள அடையாறு பாலத்தின் தொடக்க முனைக்கும் போக்குவரத்து நெருக்கடி இடம்பெயர்க்கப்பட்டுவிட்டது. ஓரிடத்தில் பிரச்சினையைத் தீ்ர்க்க கட்டப்பட்ட பாலத்தால் இரண்டு இடங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சபாஷ், இது போன்று திட்டமிடும் அரசைத் தானே நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்!

அத்துடன் சில மேம்பாலங்கள் தவறான இடங்களில் கட்டப்பட்டதால் எந்த நேரமும் பயன்படுத்தப்படாமல் காலியாகவே இருக்கின்றன. ஆக மொத்தம் மேம்பாலங்கள் என்பவை அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் பெற்றுத் தரும் அமுதசுரபிகளாகவும், அரசியல் கட்சிப் பின்னணி கொண்ட ஒப்பந்ததாரர்கள்-முதலாளிகளுக்கு பெரும் லாபம் ஈட்டித் தருபவையாகவும் இருக்கின்றன. நம் ஒவ்வொருவரிடமிருந்தும் பல வகைகளில் பெறப்படும் வரிப்பணம்தான் பாலம் கட்டப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் எந்த நேரத்திலும் மறந்துவிடக் கூடாது.

2. மற்றொரு கண்ணோட்டத்தில் இதைப் பார்த்தால் சாலைகள், பாலங்கள் அதிகரிக்க அதிகரிக்க வாகனங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. தில்லியில் கடந்த 40 ஆண்டு காலத்தில் மக்கள்தொகை நான்கு மடங்காக உயர்ந்தது. அதே காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 22 மடங்காக உயர்ந்துள்ளது!

வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினால்தான் நெருக்கடியை குறைக்க முடியும் என்பதே அடிப்படை உண்மை. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக இந்த வழியையே பின்பற்றி வருகின்றனர். நமது சாலைகளும் பொது இடங்களும் எல்லோருக்கும் சொந்தமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டுபவர்கள், நடந்து செல்பவர்கள், பஸ் போன்ற பொதுப் போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துபவர்கள் என அனைவருக்குமே சாலைகள் சொந்தம். ஆனால் பாலம் கட்டுவது போன்ற திட்டங்கள் மூலம் வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமே சாலைகள் சொந்தம் என்று அரசு மறைமுகமாக வலியுறுத்துகிறது.

ஒரு கார் குறைந்தபட்சம் 40 சதுர அடி இடத்தை ஆக்கிரமிக்கிறது. அதில் ஒருவரோ, இருவரோதான் செல்கிறார்கள். ஆனால் ஒரு 240 சதுர அடி பேருந்தில் குறைந்தபட்சம் 60 பேர் செல்வதற்கான இடம் உள்ளது. மக்கள்தொகை வரையறை இன்றி உயர்ந்து கொண்டிருக்கும் நம் நாட்டில் பொதுப் போக்குவரத்து முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தனியார் வாகனங்களுக்கு இடம் கொடுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.

3. சென்னை நகரத்தின் வயது சுமார் 350 ஆண்டுகள். மீனவர்களோ 10,000 ஆண்டு காலமாக மீன்பிடித்து வருகின்றனர். 100 வருடங்களுக்கு முன்கூட சென்னை சின்னச்சின்ன கிராமங்களாகவே இருந்திருக்கிறது. அந்த கிராமங்களிலும் மீனவ கிராமங்கள் மிகமிகப் பழைமையானவை. மீனவர்கள் தொன்றுதொட்டு அவர்களுக்கே உரித்தான குடிசைகளில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதைப் போன்ற திட்டங்கள் அவர்களது வாழ்க்கைக்கு சிறிதளவும் முக்கியத்துவம் கொடுக்காமல், மாடி வீடுகளில் வசதியாக வாழ்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மீனவர்களை மட்டும் வேறு இடத்துக்கு இடம்பெயர்க்க முயற்சிக்கப்படுகிறது.

மீனவர்களின் வேலையிடம் கடல். அவர்கள் அங்குதான் வாழவேண்டும் என்று ஒரிடத்தில் நான் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு மத்தியதர வர்க்க நபர் கூறினார், "நமது அலுவலகங்கள் எல்லாம் அருகிலேயேவா இருக்கின்றன. எல்லோரும் பயணம் செய்துதானே செல்கிறோம். அது போல் அவர்களும் செல்ல முடியாதா?" என்று கேட்டார். நாம் வேலைக்குச் செல்லும்போது 100 கிலோவுக்கு மேல் எடை கொண்ட வலைகளையும் மோட்டார்களையும் எடுத்துச் செல்கிறோமா? இல்லை அவர்களைப் போல் இரவில் 2 மணிக்கு வேலைக்குச் செல்கிறோமா?

நகர்ப்புறங்களில் வாழ்ந்தும்கூட இயற்கையைச் சார்ந்தும், இயற்கையின் வரம்புகளுக்கு உட்பட்டும் வாழும் மக்கள் மீனவர்கள். அதைச் சிறிதும் மதிக்காமல் நாம் அவர்களை மரியாதையின்றி நடத்துகிறோம். அவர்களது வாழ்க்கையை ஒடுக்க முயற்சிக்கிறோம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நான்கு மீனவ கிராமங்கள் மிக மோசமாக பாதிக்கப்படும். நூற்றுக்கணக்கான மீனவர்கள் இடம்பெயர்க்கப்படுவார்கள். இது எந்த வகையிலும் அநியாயமானது. அவர்களது குரலை புறக்கணிப்பது அராஜகம்.

4. சென்னையின் அழகே அதன் கடற்கரைதான். மெரினா உலகப் புகழ்பெற்றது. மிக மோசமாக மாசடைந்து வரும் இந்த நகரத்தில் மக்கள் இயற்கையை ரசிக்க பெருமளவில் கடற்கரைக்குத்தான் வருகின்றனர். சிறுவர்கள், இளைஞர்கள் விளையாடும், பொழுதுபோக்கும் மிகப் பெரிய திறந்தவெளிக் கூடமாகவும் கடற்கரை திகழ்கிறது.

இதுதவிர, இந்தக் கடற்கரைக்குத்தான் பங்குனி ஆமை என்று தமிழில் அழைக்கப்படும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை முட்டையிட வந்து செல்கின்றன. மாணவர் கடல் ஆமை பாதுகாப்பு குழு (எஸ்.எஸ்.டி.சி.என்) என்ற தன்னார்வ அமைப்பு இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆமைகளைக் காப்பாற்ற முயற்சித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 5,000 ஆமைக் குஞ்சுகளை இந்த அமைப்பு கடலில் விட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 1,00,000 குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இந்த இனத்தின் பிழைக்கும் சதவீதம் ஆயிரம் குஞ்சுகளுக்கு ஒன்று என்பதால், இந்த இனம் இன்னமும் அழியும் தருவாயிலேயே உள்ளது. புலிகள், இன்னும் பல அரிய விலங்குகளைப் போல, பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் பட்டியல்-1 என்ற தலைப்பின் கீழ் இந்த ஆமை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மென்மையான, அழகிய உயிரினம் இன்னும் எத்தனை ஆண்டுகள் நமது தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டு உயிர் பிழைக்கும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே.

180 லட்சம் ஆண்டுகளாக உலகில் வாழ்ந்து வரும் ஆமை இனம், கடந்த ஐம்பது ஆண்டுகளில் வீரியம் பெற்ற தொழிற்புரட்சியின் பின்விளைவுகளால் அதிவேகமாக அழிந்து வருகிறது. மாணவர் கடல் ஆமை பாதுகாப்புக் குழு 20 ஆண்டுகளுக்கு மேல் காப்பாற்றி வரும் கடற்கரையிலேயே மேலே கூறப்பட்ட பாலம் அமைய இருக்கிறது. இப்பாலம் கட்டப்பட்டால் இந்த அமைப்பின் 20 ஆண்டு முயற்சியும் வீணாகிவிடும். ஆமைகளின் எதிர்காலமும் மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும் என்று அஞ்சப்படுகிறது.

உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று நாம் மார்தட்டிக் கொள்கிறோம். ஆனால் "இந்த நாட்டு மக்களுக்காக" என்ற பெயரில் வகுக்கப்படும் திட்டங்கள், முதலாளி-மேல்தட்டு வர்க்க மக்களுக்கு மட்டுமே பயனளிப்பதாக உள்ளன. ஜனநாயக நாட்டில், மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கக் கூடியனவாக இருக்க வேண்டும். ஒரு தரப்பினருக்கு பயனளிப்பவை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.

சாதாரண, ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். இந்தியா பின்பற்றும் பொருளாதார முறையில் சிலர் பெரும் பணக்காரர்கள் ஆகின்றனர். கோடிக்கணக்கானோர் வறுமைக்கோட்டுக்கு கீழே தொடர்ந்து தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்த மேம்பாலமும் அடித்தட்டு மக்களை புறக்கணிக்கிறது. ஏழைகளை மேலும் பராரிகளாக ஆக்கக் கூடியது.

இதுபோன்ற ஒரு சார்புத் திட்டங்களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பினால்தான், இந்தத் திட்டத்தையும், இதுபோன்ற வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன் அரசு நிதானித்து யோசிக்கும். இன்னும் பாலப் பணிகள் ஆரம்பிக்காத நிலையில், நாம் வலுவான எதிர்ப்பை உருவாக்கினால், இத்திட்டத்தை இந்தக் கட்டத்திலேயே நிறுத்திவிட முடியும். கண் கெட்ட பின் சூரியனை வணங்குவதைவிட, கண்ணைக் காக்க இப்பொழுதே குரல் கொடுப்போம்.

****

(கட்டுரையாளர் - பொறியியல் படித்த அருண் ஒரு ஆசிரியர். மாணவர் கடல் ஆமை பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர். மக்களைப் புறக்கணிக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் இவர் திருவண்ணாலையில் ஒரு மாற்றுப் பள்ளியை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்