சுற்றுச்சூழல் குறித்த வழக்குகளில் இந்திய நீதி மன்றங்கள் பெரும்பாலான நேரங்களில் நடந்து கொள்ளும் முறை வியப்புக்கு உரியதாகவே இருக்கும். பொதுவான சந்தர்ப்பங்களில் சூழல் பாதுகாப்பு குறித்து உயரிய கருத்துக்களை எடுத்துக்கூறும் நீதிபதிகள், குறிப்பிட்ட திட்டம் குறித்த வழக்குகளை விசாரிக்கும்போது அவர்கள் கூறிய கருத்துகளுக்கு எதிரான நிலையை எடுப்பதை வாடிக்கை.

குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை அல்லது அந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை போன்றவற்றை கணக்கில் எடுத்து விவாதித்து குறிப்பிட்ட எந்தப் பிரசினையிலும் திட்டவட்டமான தீர்ப்பைச் சொல்லாமல் இருப்பதே நடைமுறையாக இருந்தது.

ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பே தர்மாராவ், பால் வசந்த குமார் ஆகியோர் அளித்த “ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும்!” என்ற தீர்க்கமான தீர்ப்பு சூழல் ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் ஒரு சிறு நம்பிக்கை கீற்றை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 15 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கின் இறுதி விசாரணையை நடத்திய நீதிபதிகள் இருவரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை கேட்ட நீதிபதிகள் அவற்றின் சாரத்தை தீர்ப்புரையில் தேவையான அளவு குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய சூழலியல் சட்ட வரலாற்றில் முக்கியத் துவம் வாய்ந்த இந்த தீர்ப்பில் கீழ்க்கண்ட  முக்கிய அம்சங்கள் சுட்டிக்காட்டப்பட்டு தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது:

கடந்த 1998ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மையம் சமர்ப்பித்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலை, தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசுத்துறையினர் செய்த அத்துமீறல்கள் சுட்டிக் காட்டப்பட்டன.

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள விவரங்கள்: சுற்றுச்சூழல் விதிமுறைகளை ஸ்டெர் லைட் நிர்வாகம் மட்டுமின்றி மத்திய அரசும், மாநில அரசும் அப்பட்டமாக மீறியிருக்கின்றன. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும் மிக அவசரமாகவும், அரைகுறையாகவும்தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிற்குள்ளாகவே, விதிமுறைகளுக்கு மாறாக இந்த ஆலை அமைவதற்கு அரசு அமைப்புகள் அனுமதி அளித்துள்ளன. மேலும், தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆய்வு மையத்தின் இந்த அறிக்கை சட்டம் மற்றும் தவறான செய்திகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையை இங்கு அமைக்கக்கூடாது என்ற தூத்துக்குடியைச் சேர்ந்த பல்வேறு தரப்பு மக்களின் பெருத்த எதிர்ப்புகளுக்கும், போராட்டங் களுக்கும் இடையில்தான் இந்த ஸ்டெர்லைட் ஆலை இங்கு அமைக்கப்பட்டது  என்பதில் ஐயம் இல்லை.

தாவரங்கள் மற்றும் நீர்வாழ் விலங்குகள் வளம் நிறைந்ததும், மத்திய அரசால் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டதுமான மன்னார் வளைகுடாவிலிருந்து ஸ்டெர்லைட் ஆலை 25 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அமைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து மன்னார் வளைகுடாவைச் சேர்ந்த வந்தீவு 6 கி.மீ. தொலைவிலும், காசுவார் 7 கி.மீ. தொலைவிலும், சாரைச்சல்லி மற்றும் விலாங்குச்சல்லி ஆகியவை 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. சுற்றுச்சூழல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே ஆதாரமாகும்.

50 கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீட்டில் ஒரு திட்டம் தீட்டப்படும்போது அத்திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பிடப்பவேண்டும் என்பதும், அதன் ஒரு கட்டமாக அப்பகுதி மக்களின் கருத்தறியும் கூட்டம் நடத்தப்படவேண்டும் என்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகள் தெளிவாக கூறுகின்றன. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்கத் திட்டமிட்டதிலிருந்து எந்த சந்தர்ப்பத்திலும் மக்கள் கருத்தறியும் கூட்டம் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தத் திட்டம் முழுவதிலும் அரசுத்துறை அதிகாரிகள் தேவையற்ற அவசரகதியில் அனுமதிகளை வாரி வழங்கியுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை.

இதே ஸ்டெர்லைட் நிறுவனம் மஹாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி பகுதியில் இந்த ஆலையை நிறுவும் முயற்சியில் சுமார் 200 கோடி ரூபாய்களை செலவழித்திருந்தபோதிலும், அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக இந்த ஆலைக்கு வழங்கிய அனுமதியை மஹாராஷ்டிர மாநில அரசு ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழ்நாட்டிலோ மக்களின் கருத்தறியும் கூட்டத்தைக்கூட நடத்தாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அனைத்து விதிமுறை களையும் புறக்கணித்துவிட்டு செயல் பட்டிருப்பதை புரிந்து கொள்ள ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.

இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சுற்றுச்சூழல் குறித்த அம்சங்களை கவனத்துடன் கையாள வேண்டும். காற்றையும், நீரையும் மாசுபடுத்தும் விவகாரங்களை நீதிமன்றங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. பொதுச்சுகாதாரத்திற்கு ஆபத்து விளையும் வகையில் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகளை நதிகள், நீர்நிலைகளிலும், காற்றிலும் கலந்து மாசுபடுத்துவோரை மிகுந்த கண்டிப்புடன் கையாள வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுக் கழிவுகளால் காற்று மாசுபட்டு அப்பகுதி மக்கள் பாதிக்கப் பட்டிருப்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. எனவே இத்தீய செயலை இப்போதாவது தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் அருகே வசிப்பவர்கள் பாதிக்கப்படுவதைவிட அதிகமாக, அந்த ஆலையில் பணியாற்றுபவர்களும்பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஆலையின் உரிமத்தை ரத்து செய்தால் இந்த ஆலைப்பணியாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. ஆலைப் பணியாளர் களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை தெரிவித்தும் ஸ்டெர்லைட் நிர்வாகம் அவற்றை புறக்கணித்துள்ளது.

மேற்கண்ட உண்மைகளை பரிசீலித்து ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்படுகிறது.

இந்த ஆலையின் பணியாளர்கள் தொழில் தகராறு சட்டப்படி உரிய இழப்பீட்டை ஸ்டெர்லைட் நிர்வாகத்திடமிருந்து பெற தகுதி பெற்றவர்கள். மேலும் இந்த ஆலைப் பணியாளர்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் அனுபவத் தகுதிகளை கருத்தில் கொண்டு மாற்று வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்படுகிறது. 

***

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல் செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்துள்ளது. இது ஒரு வகையில் எதிர்பார்க்கப்பட்டதுதான்!

எனினும் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை முழுவதுமாக ரத்து செய்துவிடாமல் இருப்பதற்கான கூறுகள் நீதிபதிகள் எலிப்பே தர்மாராவ், பால் வசந்தகுமார் ஆகியோர் அளித்த தீர்ப்பில் இருக்கின்றன. இதை மீறி என்ன நடந்தாலும் நம்மிடம் ஒரு நம்பிக்கைக் கீற்று துளிர் விட்டிருப்பதை மறுக்க முடியாது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய இந்த நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் மக்களுக்கு விரோதமான தீர்ப்புகளை வழங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான் அது!

Pin It