பிப்ரவரி 10, 2010 - கிட்டத்தட்ட பள்ளி இறுதித் தேர்வு முடிவு அறிவிக்கப்படும் நாள் போன்ற படபடப்பு நம்மை தொற்றிக் கொண்டிருந்தது. பரபரப்பான முந்தய தினத்தில் (பிப்ரவரி 9) தொடர்ந்து பல குறுந்த்கவல்கள், இணையத்தில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒவ்வொரு அனுமானங்கள். திடீர் செய்தியாய் நாளை இல்லை, இன்றே அதுவும் இப்போதே 4.30க்கு முடிவு அறிவிக்கிறார் என்றது ஒரு புதிய தகவல். நாமும் பதறிப்போய் CNN IBN, NDTV சானல்களை வேகவேகமாய்த் திருப்பி நிற்க, மாலை 4.31க்கு மத்திய அரசு அறிவித்தது: பி.டி.கத்தரியை நிறுத்தி வைக்கிறோம். உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள 40க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் நாடுகள் ஆர்வமாய் எதிர்பார்த்திருந்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, சூழலைக் காக்க முனையும் முடிவு வெளியானது.

ஆம், உணவுத் தீவிரவாத்தின் முதல் சுற்றில் வீழ்த்தப்பட்டுள்ளது மான்சாண்டோ. பி.டி.கத்தரி அனுமதி மறுக்கப்பட்டதன் மூலம் நீண்ட நாளைக்குப் பின் ஜனநாயக அரசின் மீதுகூட கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது.

என்ன நடந்தது?

இந்தியாவெங்கும் 9 மாநகரங்களில் நடத்தப்பட்ட பொதுவிசாரணையில் பரவலாக எழுந்த அனைத்து தரப்பினரது எதிர்ப்பு, தமிழகம் உட்பட 10 மாநிலங்கள் பி.டி.கத்தரியை அனுமதிக்க மாட்டோம் என்று எடுத்த நிலைப்பாடு போன்றவை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை இந்த முடிவை நோக்கித் தள்ளினாலும், என்ன இறுதி முடிவு எடுப்பார் என்பது இறுதி வரை யூகிக்க முடியாமல் இருந்தது உண்மை.

தில்லியில் அவரை Doctors for food safety and biosafety குழும பிரதிநிதியாக அவரை கடைசி நேரத்தில் சந்தித்து நாங்கள் உரையாடியபோது, அந்த அமைச்சர் வெறும் அரசியல்வாதியல்ல; ஒரு பெரும் கல்வியாளர்; இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், இந்திய மேலாண்மை நிறுவனம், அமெரிக்க, இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் பயின்ற, அடித்தட்டு, கிராம நிதர்சனங்கள் அறிந்திராதவர் என்பதும் ரொம்பவே புரிந்தது. எடுத்த எடுப்பில், “நம் விஞ்ஞானிகள் என்ன முட்டாள்களா? உங்களுக்கு என்ன தெரியும்?அமெரிக்கனே தினம் மரபணு மாற்றப்பட்ட சோளம் சாப்பிடறான். அப்புறம் உங்களுக்கென்ன? இந்த ஆயுர்வேதம், சித்தம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை; உண்மையில் அவையெல்லாம் வேலை செய்யுமா என்ன?“ என அமில வார்த்தைகளை அள்ளி வீசினார். அதற்கு மருத்துவர் மீரா சிவா அளித்த அடுக்கடுக்கான பதில்களால் கொஞ்சம் அமைதியாகி, “ம்ம்...சொல்லுங்கள்” என்று நிதானித்தார்.

சொன்னோம், அத்தனையையும். எப்படியெல்லாம் உடல்நலக் கேடு தரும்? மகளிர் - குழந்தை நலம் எப்படி கேடுறும்? ஆயுர்வேதம், சித்தம் எப்படி இதன் வரவால் கேடுறும் என்பதையெல்லாம் விளக்கினோம். நாங்கள் சொல்லச்சொல்ல தன் கணிணியில் தட்டச்சு செய்தவர், “உங்கள் கருத்துக்களை எடுத்துக் கொண்டேன்; நீங்கள் புறப்படலாம்“ என்றவர், நாங்கள் அளித்த சான்றுகளைப் பத்திரமாகக் கோப்பில் சேர்க்கச் சொன்னார். பிறகு அவர் வெளியிட்ட 20 பக்க தடை அறிக்கையிலும், 548 பக்க தரவுகளிலும் நாம் அளித்த சான்றுகள் அப்படியே உள்ளன!

ஏன் இந்த திடீர் அவசரம்?

பிப்ரவரி 10ம் தேதிதான் இது பற்றிய முடிவை அறிவிக்கப் போகிறோம் என்று கூறி, அனைவரையும் காத்திருக்க வைத்துவிட்டு, தடாலடியாக முந்தைய தினம் அறிவித்ததன் பின்னணி என்ன? பல ஊகங்கள் உலாவுகின்றன. அவற்றில் சில உண்மையும்கூட. அமெரிக்க உள்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனின் அறிவியல் தொழில்நுட்ப ஆலோசகரும், மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உலகெங்கும் கொண்டுசெல்லும் தூதுவருமான ஃப்ளிண்டாஃப் எனும் பெண் அதிகாரி அமெரிக்காவில் இருந்து பறந்து வந்து நமது பிரதமர் அலுவலகத்தை நெருக்கி, பி.டி.க்கு அனுமதிக்கக் கோரிதாக ஒரு செய்தி உண்டு. பிரதமரும் திட்டக் குழுத் தலைவர் அலுவாலியாவுமே ஜெயராம் ரமேஷின் முடிவை தள்ளிப்போட சொன்னதாகவும் தில்லில் செய்திகள் உலாவின. போதாக் குறைக்கு தமிழக நீதிமன்றத்தில் மருத்துவர் திருத்தணிகாசலம் தொடுத்த வழக்கை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் 10ஆம் தேதி விசாரிக்க முடிவு செய்திருந்தனர். எங்கே தானெடுத்த முடிவு முடக்கப்படுமோ என்ற அச்சத்தில் ரமேஷ் திடுதிப்பென முந்தைய தினமே முடிவை அறிவித்துப் பெருமூச்சு விட்டார்.

இனி?

20 முக்கிய காரணங்களையும் காட்டி, புஷ்ப பார்கவா, எம்.எஸ்.சுவாமி நாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத் தலைவர், தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர்களின் பரிந்துரை, உலகெங்கும் உள்ள பேராசிரியர் செரலினி முதலான பேராசிரியர்கள் ஆகியாரின் கூற்றுக்களின்படியும், Doctors for food safety and biosafety பிரதிநிதிகளின் அறிக்கையின் படியும், ஆந்திராவில் 14 லட்சம் ஹெக்டேர் முழுக்க பூச்சிக்கொல்லி மருந்தின் பிடியில் இருந்து வெளியேற்றிய விஜயகுமார், கேரளத்தின் உயிர்தொழில்நுட்ப அமைப்புத் தலைவர் விஜயன் இவர்களின் நிரூபிக்கப்பட்ட மாற்று வழி உத்திகளை சுட்டிக்காட்டி எந்த காலக்கெடுவோ, அவசரமோ இல்லாமல் முழுமையாக ஆராய்ந்து, பி.டி. கத்தரி குறித்து முடிவெடுக்க வேண்டும் என்கிறது அவரது அறிவிப்பு.

ஆனால் இந்த அறிவிப்பு வந்த அடுத்த நாள் முதலே தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள். இந்த அனுமதி மறுப்பு பி.டி.கத்தரிக்கு மட்டும்தான். பின்னால் வரப்போகும் பி.டி. கடுகு, உளுந்தம் பருப்புக்கு எல்லாம் கிடையாது என்ற ரீதியில் அவர் சார்ந்த துறையிலிருந்து அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. “இது தடையல்ல. அனுமதி மறுப்பு மட்டுமே. மாநில முதல்வர்கள், விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்துடன் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் சீக்கிரம் வந்தே தீரும்“ என்ற அமைச்சரின் நேரடி அறிவிப்பு வேறு வந்தது. “முட்டாள்கள் சொன்னதை வைத்து அமைச்சர் முடிவெடுத்துவிட்டார்“ என்றபடி நாட்டின் ’அறிவுஜீவிகள்’ ஆவேசப் பேட்டிகள் கொடுத்தார்கள் என பல்வேறு பத்திரிக்கைகளும் பி.டி. கத்தரியை பாரட்டி சீராட்டி வருகின்றன.

இன்னொரு பக்கம் மத்திய வேளாண் அமைச்சரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள இந்தப் பயிர்களை BRAI (அடக்குமுறை) சட்டத்தின் வாயிலாக உள்ளே நுழைக்கலாம் என வேகமாய் இயங்கி வருகிறது அமைச்சர் சவானின் தலைமையில் உள்ள அறிவியல் தொழில்நுட்பத் துறை. ஒரு வேளை சோனியாவின் தலைமையிலான காங்கிரஸ் அரசு, தேசியவாத காங்கிரசைச் சார்ந்த சரத்பவாரின் அரசியல்/மக்கள் ஆதரவை முடிந்த வரைக் குலைத்து, ஜெயராம் ரமேஷின் மூலமாக, அவர் தம் அறிவார்ந்த சனநாயக ஆலோசனைகள் மூலமாக மக்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தித் திசை திருப்பி, பின் BRAI (அடக்குமுறை) சட்டத்தின் மூலமாக மெதுவாக மரபணு மாற்றியப் பயிர்களை இந்திய சந்தையில் நுழைக்கும் ராஜதந்திரமோ இந்த அறிவிப்பு என்பது தற்போது தெரியவில்லை.

பி.டி. கத்தரி என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நமது சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணியில் இருந்து புரிந்து கொள்ள சமூகப் போராளி விநாயக் சென் சொன்ன கருத்துகள் உதவும். 

சமூக அநீதியின் இன்னொரு வடிவம்

நாடறிந்த சமூகப் போராளி விநாயக் சென்னுக்கு அறிமுகம் தேவையில்லை. ஒடுக்கப்பட்ட சமூகங்களில் வாடும் குழந்தைகளுக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை மருத்துவ நிபுணர். அவரது சமூகஉதவியைப் பொறுத்துக் கொள்ளாத அரசால், ’நக்சலைட்’ என்று முத்திரை குத்தி கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலேயே இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்தது.

இன்றும் தொடர்ந்து மருத்துவப் பணியையும் சமூகப் பணியையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே செய்துவரும் சென் சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற மனித உரிமைக்கான ஆணையத்தின் பி.டி. கத்தரி குறித்த விவாத கருத்தரங்கில் ஆழமான கருத்தை கூறிச் சென்றார்.

“இந்த பி.டி. கத்தரி பிரச்சினை புதிதல்ல. பிரச்சினைகளின் புதிய வடிவம் இது. அதன் தொழில்நுட்பம் குறித்த அதிக விஞ்ஞான விபரங்கள் எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் சமூகத்தில் அது விளைவிக்கப் போகும் அபாயங்களை என்னால் அறிய முடிகிறது. நம் இந்தியாவின் அடிப்படை பிரச்சினைகள் மூன்று.

1. 50 சதவீதத்துக்கு அதிகமான குழந்தைகளுக்கு அடிப்படை ஆரோகியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்து இன்னும் கிடைக்கவில்லை.

2. 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் இன்னமும் வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்தும், இந்தியா வளர்கிறது; மிளிர்கிறது என்று தொடர்ந்து நாம் ஏமாற்றப்படுவது.

3. புதிய தொழில் வளர்ச்சி, தொழில்நுட்பம் என்ற பெயரில், பெருவாரியான அடித்தள மக்களை இடம்பெயரச் செய்வது.

இந்த மூன்று பிரச்சினைகளும்தான் ஒவ்வொரு முறையும் புதியபுதிய வடிவங்களில் அடித்தட்டு மக்களை குறிவைத்து, பாதிப்பை விளைவிக்கின்றன. அத்துடன் இந்த நாட்டின் ஆதிக்க வர்க்கம் மட்டும் வசதியாக வாழ்வதற்கு தேவையானவற்றையும், அதற்கு துணை நிற்கும் மேற்கத்திய வளர்ந்த நாடுகளின் அடிவருடியாகத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவும் இந்த புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுகின்றன.

இவை அதிக விளைச்சலையோ, நீடித்த உற்பத்தியையோ ஒருபோதும் தரப் போவதில்லை; மாறாக, நம் பல்லுயிர் வளத்தைப் பாதித்து, பெயர் தெரியாத நோய்களை எதிர்பாராதபடி வரவழைக்கும் ஆபத்தும் கொண்ட இந்த தொழில்நுட்பங்களை அனுமதித்தால், வேளாண் வளம், விதை உரிமை பறிபோவதுடன், இன்னும் அதிக அளவில் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளை இந்தியாவில் விரைவில் பெற்றுவிடுவோம்.

இந்த புதிய தொழில்நுட்பம் பெருவாரியான அடித்தட்டு விவசாய மக்களைக் குழப்பி, அவர்கள் வாழ்வாதரத்தைப் பறித்து, வறுமையை புகுத்தி நகரக் கூலிகளாக இடம்பெயரச் செய்துவிடும் என்பதற்கு விதர்பாவைவிட வேறு எந்த சாட்சி வேண்டும்.?

எதிர்கால இந்தியாவுக்கு தட்டுப்பாடில்லாமல் அடிமைகளும், குறைந்த கூலியில் கிடைக்கும் அவர்களின் உழைப்பும் அதிகம் தேவைப்படுகிறது. ஆதிக்க வர்க்கத்திற்கு அடிமை சாசனம் செய்யவும், வசதி படைத்தவர்கள் மட்டும் மீண்டும்மீண்டும் தன்னை, தன் சுற்றத்தின் வளத்தை பெருக்கிக் கொள்ளவும் இந்த ஒடுக்கப்பட்ட வர்க்கம் தேவை. அதற்காகவே, இது போன்ற புதிய தொழில்நுட்பம் என்ற போலி உத்திகளால் திட்டமிடப்படுகிறது.

இனி என்ன செய்ய வேண்டும்?

சூழலியல் போராளிகளுக்கு தற்போது கால அவகாசம் கிடைத்துள்ளது. பி.டி. பயிர் குறித்தும், இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்தும் மக்களிடையே கூடுதல் விழிப்புணர்வு கிடைத்துள்ளது. சில அரசு இயந்திரங்கள் அக்கறை காட்டுவது போல் தெரிகிறது. இதை முழுதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது சூழலியல் அக்கறை கொண்ட நமது பொறுப்பு. பன்னாட்டு உணவுப் படையெடுப்பின் சூழ்ச்சியை, அதனால் விளையும் கேடுகளை வேகமாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசர வேலையில் நாம் முதல் படியில் கால் எடுத்து வைத்துள்ளோம்.

இயற்கை விவசாய உத்திகள் மூலமே காய்ப்புழுவை கட்டுப்படுத்தி, கத்தரியின் விளைச்சலையும் பெருக்கிக் காட்டுகிறோம் என்ற சவாலை அவர்கள் சொல்லும் பன்னாட்டு அறிவியல் இதழ்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் திட்டவட்டமான ஆய்வு நடத்தி வைத்திருக்க வேண்டும். “நாங்கள் சமூக அக்கறையுள்ள விஞ்ஞானிகள்; உணர்ச்சிவசப்படும் சாமனியர்களல்ல” என்று அறிவியல் அரங்கில் முழங்க வேண்டும். இன்னும் வர இருக்கும் அத்தனை மரபணு தொழில்நுட்பங்களும் “தேவையில்லை“ என சத்தமாகச் சொல்ல, மாற்று உத்திகளை அறிவியல் தரவுகளுடன் தயாராக வைத்திருப்பது அவசியம். இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாட நமக்கு ஓய்வைக் காட்டிலும், தொடர் பயிற்சியும் கூடுதல் பலமும் தேவை. ஏனென்றால் அந்த ஆட்டத்தில் அம்பயரும் சேர்ந்து எதிரணியுடன் விளையாடப் போகிறார்.