கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஒரு வெட்டி வேலையைச் செய்ய உட்கார்ந்து எத்தனை மணி நேரம் வெட்டியாகப் போனது என்று கணக்கிட்டுப் பார்க்கிறேன். நேரத்தைக் கணக்கிடச் செலவிட்ட 24 மணித்துளிகளும் சேர்த்து பாட்டா செருப்பு விலையைப் போல முழுதாக 18 மணி நேரம் 59 மணித்துளிகள்.

இத்தனை மணி நேரம் வெட்டியாக வேலை செய்து எழுதிய வெட்டிக் கட்டுரையை வெட்டியோ வெட்டாமலோ பிரசுரிப்பதும் பிரசுரிக்காததும் உங்கள் இஷ்டம். "இணைய தள வெட்டிப் பத்திரிகைகளில் வெட்டிப் பயல்கள் எழுதும் கட்டுரைகளுக்கெல்லாம், வெட்டிப் பிடுங்கிக் களையெடுத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்ற பதிலே இந்தக் கட்டுரைக்கும் கிடைக்கும் என்று மட்டும் வெட்டொன்று துண்டொன்றாக சொல்லி வைத்து விடுகிறேன் அல்லது “தோழர்கள் இது போன்ற அவதூறுகளை எதிர்த்து போராட வேண்டும்” என்ற அறைகூவல் விடப்படலாம். அல்லது இங்கே தப்பித் தவறி விழும் ஓரிரு வெட்டி வார்த்தைகளை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு வெட்டிச் சண்டைக்கிழுத்து ஓரிரு புத்தி சிகாமணிகள் குதிக்கவும் செய்யலாம். 

புலம் பெயர்ந்து அகதியாக வாழும் நாட்டில் குடியுரிமை கூட பெறாமல், வேலை வெட்டி இல்லாமல், அரசியலே மூச்சாக வாழ்வதாக வெட்டித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு இலக்கியவாதி (ஆனால், அவருக்கு உலகின் பல நாடுகளுக்கும் இஷ்டப்படி சென்று வர விசாவும் பணமும் கொடுக்கும் ஆபீசர்களும் புரவலவர்களும் எங்கே கிடைக்கிறார்கள் என்ற மர்மம் மட்டும் தொங்கிக் கொண்டே இருக்கிறது) எழுதிய சிறுகதைத் தொகுப்பிற்கும், அவர் அடித்த ஒரு வெட்டி அரசியல் விவாதப் புத்தகத்திற்கும் இன்று மாலை நடக்க இருக்கும் விமர்சன அரங்கில் கலந்து கொள்ளவோ கட்டுரை வாசிக்க அழைக்கப்படவோ வாய்ப்பே இல்லாத ஒரு வெட்டிப் பயல் எழுதும் விமர்சனங்களடங்கிய முன்குறிப்பு இது.

வாசிக்க நேர்ந்த அந்த சிறுகதை தொகுப்பின் தலைப்பு “எம்.ஜி.ஆர். கொலை வழக்கு”. எழுதிய இலக்கியவாதி ஷோபா சக்தி.

இலக்கியத்தில் யதார்த்தவாதம், சோஷலிச யதார்த்தவாதம், பெண்ணிய இலக்கியம், தலித் இலக்கியம், ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்று வகைப்பாடுகள் பல இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், புலி எதிர்ப்பு இலக்கியம் என்று ஒன்று இருப்பதை அறிந்திருக்கிறீர்களா? அப்படியொரு புதிய இலக்கிய வகைப்பாட்டை தன்னந்தனியனாக நின்று தோற்றுவித்து வளர்த்த ஒர்ர்ரே இலக்கியவாதி என்ற பெருமைக்குரியவர் என இலக்கிய வரலாற்றுப் புத்தகங்கள் வருங்காலத்தில் ஷோபாசக்தியைப் பெருமையாகக் குறிப்பிடலாம்.  

பத்து சிறுகதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பை ஒரே மூச்சில் வாசித்து முடித்ததும் எழுந்த முதல் மனப்பதிவு இதுதான். “ரம்ழான்”, ”வெள்ளிக்கிழமை”, “திரு. மூடுலிங்க” இந்த மூன்று சிறுகதைகள் தவிர்த்து தொகுப்பில் உள்ள மற்ற ஏழு சிறுகதைகளும் ஷோபசக்தி அரசியல் களத்திலே செய்து வரும் புலி எதிர்ப்பு பிரச்சாரத்தின் இலக்கியச் சாயம் பூசிக் கொண்ட கதைகள் என்பதற்கு மேலாக எந்தத் தகுதியும் உடையவை அல்ல. மேலே சொன்ன மூன்று கதைகளை உத்தி பரிசோதனைக் கதைகள் என்ற நோக்கில் பார்த்தாலும் அசட்டுச் சிறுபிள்ளைத்தனமான பரிசோதனைகள் என்பதற்கு மேலாக எழுபவையும் அல்ல. மற்ற ஏழும் விஷம் தடவிய இனிப்பு.

மொத்த தொகுப்பின் நாடித் துடிப்பையும் உரத்து ஒலிக்கும் கதை ”பரபாஸ்”. நாகரீகத்தின் வாசனை படாத ஒரு காலத்திலே ஒரே ஒரு ஊர், அலைக்கழிக்கும் வாழ்க்கை இல்லாது சோம்பித் திரியும் மக்கள், அவர்களுக்கு ஒரே ஒரு பிரச்சினை, அந்த ஊரிலே ஒரு சிறு திருடன். சின்னக் கள்ளனின் சிறு திருட்டுகளை கையும் களவுமாக பிடித்தாலும் மன்னித்து விட்டுவிடும் பெருந்தன்மை மிக்க கிராமத்து மக்கள்.

நாகரீகத்தின் வாசனை எட்டிப் பார்க்கும் காலத்தில் இன்னொரு திருடன். சற்றே பெரிய திருட்டுகள். பிரச்சினை இப்போது போலீசுக்குப் போகிறது. கள்ளனிடம் பறிகொடுத்ததைக் காட்டிலும் போலீசுக்கு அதிகமாகப் பறிகொடுத்து வாய்மூடி மௌனியாக கைகட்டி நிற்கும் கிராமம்.

அடுத்த வருகை ”இயக்கம்”. இயக்கத்தின் வருகையோடு திருடனின் குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது. கிராமத்தின் குறியீடாக நிற்கும் ஆலயமே களவுக்கு உள்ளாகிறது. கிராமத்தின் ஆன்மா ஊரைவிட்டே போய்விடுகிறது. கதையின் தொடக்கத்தில் விவரிக்கப்படும் பொட்டல் காடாக அழிகிறது. 

சந்தியாப்புலம், சந்தியோகுமையர் தேவாலயம், ஒரு மாய யதார்த்தவாதம் போலத் தொனிக்கும் அதிகாலைப் பொழுதுகளில் புரவியில் வலம் வரும் சந்தியோகுமையர் என்ற கிராமத்து மக்களின் ஐதீகம், கள்ளக் கபிரியல் என்ற வயதான நோஞ்சான் சிறு திருடன், வில்லியம் என்ற நாகரீக – படிப்பு வாசனை கிட்டிய சற்றே பெரிய கள்ளன், இவர்களைச் சுற்றிய ஒரு கதைப் புலம், வட்டார வழக்கு, இத்யாதி இத்யாதியான இலக்கியப் பூச்சுகள்.

சிறு திருட்டு பெரிய திருட்டாகும் போதோ, போலீஸ் வந்து மிரட்டிப் பறித்துக் கொண்டு போகும்போதோ ஊரை விட்டுப் போகாத கிராமத்தின் ஆன்மா, இயக்கம் வந்தபின் ஊரை விட்டு கடலுக்குள் கரைந்துவிடுகிறது.

இலக்கிய இனிப்பு தடவி ஷோபாசக்தி கொடுக்கும் மெசேஜ் இதுதான்.

இதிலே ஷோபாசக்தி நாசூக்காக வைக்கும் விஷம் என்ன?

இயக்கம் எதிலே வருகிறது தெரியுமோ? வெள்ளை வேனில் வருகிறதாம். இதுதான் விஷம். ஈழத்து நடப்புகள் அறிந்தோருக்குத் தெரியும் வெள்ளை வேனில் வருவோர் யாரென்று. சிங்க‌ள‌ பாசிச‌ அர‌சுக்கு எதிரானவ‌ர்க‌ளுக்கு முடிவு க‌ட்ட‌ பிள்ளையான் அனுப்பும் வேனை, இய‌க்க‌த்தின் வேனாக‌ திரித்துக் காட்டுகிறார்.

ஷோபாசக்தியின் கதைகளின் நாடித்துடிப்பு இதுதான்.

இடையிலே ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் இன்னொரு சிறு நாடியும் இருக்கிறது. அதே கதையில் வரும் ஒரு விவரிப்பில் அது பல் இளித்துக் காட்டி நிற்கவும் செய்கிறது. அது பின்வருமாறு:

“கபிரியலுக்கு எழுபது வயதிருக்கும். நல்ல வாட்டசாட்டமான உடலும் தீர்க்கமான கண்களும் கம்பீரமான நடையும் வெண்ணிறத் தாடியுமாக ஆள் பார்ப்பதற்கு சுந்தர ராமசாமி போலவேயிருப்பார்.”

கதைப் புலத்திற்கு ஒட்டு சம்பந்தமில்லாத சுந்தர ராமசாமி எதற்குக் கதைக்குள் வருகிறார்? கபிரியல் ஒரு காமெடி காரக்டர். காமெடி காரக்டரோடு முடிச்சு போட்டு சுந்தர ராமசாமியை ஒரு இடி இடித்து செல்கிறாராம் புத்திசாலி கதை சொல்லி ஷோபாசக்தி. இதை “பகிடி பாருங்கோ பகிடி பாருங்கோ” என்று கூவிக் கெக்கலித்துச் சிரித்து அல்ப சந்தோஷம் கொள்ள ஒரு சிறு கும்பல். பரம சந்தோஷம் கொள்வார் அ. மார்க்ஸ்.

ஈழப் புலம் பெயர் இலக்கியப் பரப்பில் ஷோபாசக்தி அவிழ்த்துக் கொட்டியுள்ள கதைப்புலக் குப்பையின் சாரம் இதுதான்: ”இயக்கத்தின்” (விடுதலைப் புலிகள்) மீதான சூசகமான பழிப்புகள், ஈழக் கள அரசியல் யதார்த்தத்திற்குப் புறம்பான அப்பட்டமான திரிப்புச் செய்திகள், வரலாற்றுப் பொய்கள். தான் சார்ந்த இலக்கிய கேம்பிற்கு எதிரான கேம்ப் மீதான பழிப்புக் காட்டல்கள்.

இந்தச் சிறுகதை தொகுப்பில் உள்ள பிற கதைகளையும் எடுத்து விலாவாரியாக குடலாபரேஷன் செய்து இதைக் காட்ட முடியும். ஷோபாசக்தியின் மொத்த இலக்கிய output ஐயும் எடுத்து மொத்தத்தையும் இது போல குடலாபரேஷன் செய்து காட்டவும் முடியும்.  

ஷோபாசக்தி போடும் ”மொக்குப் போடு” style –ல் சொல்வதென்றால் “It is just a beginning” என்று இப்போதைக்கு சொல்லி வைப்போம்.

ஈழக் கள அரசியல் நடைமுறை யதார்த்தத்திற்குப் புறம்பான ஷோபாசக்தியின் ஒரு திரித்தலைச் சுட்டிக் காட்டினேன் (வெள்ளை வேன் பற்றிய குறிப்பு). வரலாற்றுத் திரிப்பிற்கு இரு உதாரணங்கள்.

தொகுப்பின் முதல் சிறுகதை “Cross Fire”. ஒரு அரசியல் படுகொலை நிமித்தமான நினைவஞ்சலிக் கூட்டத்தில் பேசும் இடதுசாரி சிங்கள இதழாளரின் உரையாக நீளும் கதை. இரண்டாம் பத்தியிலேயே விஷம் தோய்ந்த வரலாற்றுத் திரிபு. அந்த ‘இடதுசாரி’ சிங்கள இதழாளர் பேசுகிறார்:

“இங்கே பேசிய தோழர் ரகுநாதன் முஸ்லீம் மக்களை ஒடுக்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய இனத்தில் பிறந்ததற்குத் தான் வெட்கப்படுவதாகச் சொன்னார். அவரை அடியொற்றிச் சொன்னால் பெரும்பான்மைச் சிங்கள இனத்தில் பிறந்ததற்காக நான் குற்றவுணர்வு கொள்கிறேன்.”

எவ்வளவு பிரமாதமான அரசியல் நிலைப்பாடு என்று இடதுசாரிப் போக்குள்ள வாசகர்களுக்கு எடுத்த எடுப்பில் தோன்றும். ஷோபாசக்தியின் ’வெற்றி’யின் ரகசியமும் அதுதான். ஒரு சரியான அரசியல் நிலைப்பாட்டை வாய்ப்பாடாக கற்றுவைத்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல வரலாற்றைத் திரித்து ஒரு கதைக்களனை வடித்துக் கொள்வது.

இங்கே திரிக்கப்பட்டுள்ள வரலாற்றுக் களன் என்ன?

சிங்களவர்கள் தமிழர்களை ஒடுக்குகிறார்கள். தமிழர்கள் இஸ்லாமிய மக்களை ஒடுக்குகிறார்கள். இது சரிதானே?

சிங்கள இனவெறி முஸ்லிம் மக்களை ஒடுக்கவில்லை என்ற பொருள் இதில் ஒளிந்து கொண்டிருப்பதுதான் விஷம் தடவிய வரலாற்றுத் திரிப்பு. அதை ஒரு சிங்கள இடதுசாரி கதாபாத்திரத்தின் கூற்றாகச் சொல்வது இன்னும் நுட்பமான திரிப்பு.

கிழக்கில் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பகைப்புலத்தை சிங்கள இனவெறி அரசு திட்டமிட்டு வளர்த்துப் பரப்பியது ஒரு தனிக்கதை. இஸ்லாமியர்கள் ஏன் அதற்குப் பலியானார்கள் என்ற கேள்வி இதில் முக்கியமானது.

1915 –ல் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு தென்னிலங்கை முழுதும் பரவலாக அரங்கேற்றப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் பெரும் கலவரங்கள் இலங்கை முஸ்லிம் அரசியல் போக்கில் தீர்மானகரமான ஒரு திருப்பு முனையாக அமைந்த வரலாற்று நிகழ்வு. சிங்கள இனவெறியர்களின் மூர்க்கத்தனமான தாக்குதலால் நிலைகுலைந்து போன தென்னிலங்கை முஸ்லீம்கள் அந்த வரலாற்று நிகழ்விலிருந்து எடுத்துக் கொண்ட இரு பாடங்கள் – எக்காரணம் கொண்டும் ஆதிக்கத்தில் இருக்கும் சிங்கள இனத்தவரைப் பகைத்துக் கொள்ளக் கூடாது; அரசு எந்திரத்தைக் கைக்குள் வைத்திருக்கும் தரப்பை எக்காரணம் கொண்டும் பகைத்துக் கொள்ளக் கூடாது. 

கலவரத்தைத் தொடர்ந்த ஆண்டுகளில் தென்னிலங்கை இஸ்லாமியச் சமூகம் பிரிட்டிஷ் அரசின் இருப்பு மட்டுமே தனக்குப் பாதுகாப்பானது என்று உணர்ந்து காலனிய அரசோடு நெருக்கமாக தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டது. இலங்கைக்கு அரசியல் சுதந்திரம் கிடைத்த கையோடு அரசு எந்திரம் சிங்களப் பெரும்பான்மையரின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. சிங்கள இனவெறியின் மூர்க்கத்தனத்தை 1915 -ல் அடிபட்டு உணர்ந்திருந்த தென்னிலங்கை இஸ்லாமியச் சமூகத்தினர் இன்னொரு சிறுபான்மைச் சமூகமான தமிழர்களின் அரசியலோடு அடையாளப்படுத்திக் கொள்வது மீண்டும் சிங்கள இனவெறியின் மூர்க்கத்தனத்திற்கு பலியாவது என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். அச்சமயம் யாழ் மைய அரசியலாகவிருந்த தமிழர் அரசியல் கோரிக்கைகளோடு முறித்துக் கொண்டு சிங்கள இனவெறியர்களின் கட்டுக்குள் வந்திருந்த அரச நலன்களோடு அய்க்கியமாயினர்.

Rohana_Wijeweeraதென்னிலங்கை இஸ்லாமியச் சமூகம் கிழக்கு முஸ்லீம்களையோ யாழ்ப்பாண முஸ்லீம்களையோ தமது சமூகத்தினராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவும் இல்லை முயற்சிக்கவும் இல்லை. தமக்கு இணையானவராகக் கூட கருதவில்லை. இலங்கை முஸ்லீம்கள் என்று அவர்கள் கட்டமைத்த அடையாள அரசியல் கிழக்கு மற்றும் யாழ் முஸ்லீம்களை முற்றாக விலக்கி வைத்த அடையாளமாகவே இருந்தது.

சிங்கள இனவெறி நலன்களுக்கும் தமிழர் நலன்களுக்கும் இடையிலான மோதல்கள் கூர்மையடைந்த வரலாற்றுப் போக்கில் சிங்கள அரசு கிழக்கில் இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பகைப்புலத்தை திட்டமிட்டு வளர்த்ததற்கும் இத்தென்னிலங்கை முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஊக்கமாகப் பங்குபெற்றதற்கு ஈழப் போராட்ட வரலாற்றில் நிரம்ப சான்றுகள் உண்டு.

இந்த வரலாற்றுப் பின்புலத்தை மறைத்து விட்டு, இஸ்லாமியர்கள் மீது கொலைவெறியோடு பாய்ந்த குதறிய சிங்கள இனவெறி குறித்து மௌனிக்கும் ஒரு சிங்கள ’இடதுசாரி’ கதாபாத்திரத்தின் ஊடாக,  தமிழர்கள் முஸ்லீம்களை ஒடுக்குகிறார்கள் என்று சொல்ல வைப்பது அரசியல் களவானித்தனம் என்றல்லாமல் எப்படிச் சொல்வது!

புத்தகத்தின் சமர்ப்பண வாசகத்திலேயே இந்தக் கயவாளித்தனம் முகத்தில் அறைந்து நிற்கிறது.

“தோற்றுப்போன புரட்சியாளன் ரோகண விஜேவீரவிற்கு” நூலை காணிக்கை செய்திருக்கிறார் ஷோபாசக்தி.

பிரபாகரன் பாசிஸ்ட், ரோகண விஜேவீர புரட்சியாளன்!

இலங்கை அரசியலின் நுட்பங்கள் அறியாதவர்களுக்கு இங்கு சில வரலாற்றுத்  தகவல்கள் அவசியம்.

60 –களின் மத்தியில் சண்முகதாசனின் இயக்கத்தில் இருந்து பிரிந்த ரோகண விஜேவீர JVP இயக்கத்தைத் தொடங்குகிறார். சிங்கள ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கத் தொடங்கி 1971 –ல் பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைப் பலிகொண்ட அரைவேக்காட்டு ஆயுத எழுச்சி நிகழ வித்திடுகிறார் (அப்பாவித் தமிழ் மக்களை பலிகொண்ட கொலைவெறி ஆயுதப் போராட்டத்தை நடத்திய கொடூரன் பிரபாகரன் என்று வசைபாடுவதைப் போல ரோகண விஜேவீரவை ஷோபாசக்தி பழிக்கவில்லை; புரட்சியாளன் என்கிறார்).

1977 வரை சிறைவாசம். இக்காலத்தில் JVP -யின் பொதுச் செயலாளராக இருந்த Lionel  Bopage –ன் செல்வாக்கில் தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கை என்ற நிலைப்பாட்டை அரைமனதோடு ஏற்றுக்கொள்கிறார். 1982 தேர்தலையொட்டி தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை அங்கீகரிப்பதாக முன்வைத்து JVP தமிழர் பகுதிகளிலும் போட்டியிடுகிறது.

தேர்தலில் படுதோல்வி அடையும் ரோகண விஜேவீர தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்ததால்தான் சிங்களவர்களிடையே தாம் செல்வாக்கு இழந்ததாக முடிவுக்கு வருகிறார். தமிழர்களின் கோரிக்கை மீதான JVP யின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும், அதை மறுக்கும் அறிக்கையை கட்சிக்குள் சுற்றுக்கு விடுகிறார். 1986 –ல் இந்த சுற்றறிக்கை “Solutions to Tamil Eelam Struggle” என்ற நூலாக வருகிறது. அதில் ஈழ விடுதலைக் கோரிக்கை இலங்கையைத் துண்டாட அமெரிக்கா செய்யும் சதி என்று காரணத்தை முன்வைத்து ஈழ விடுதலையை மறுக்கிறார். சிங்கள இனவெறி நிலைப்பாட்டைத் தழுவுகிறார். ஜேவிபியின் இன்றைய‌ இன‌வாத‌ அர‌சிய‌லுக்கு மூல‌வித்து ரோக‌ண‌தான்.

1989 –ல் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்ட எழுச்சியைத் தொடங்கிய ரோகண விஜேவீர சிங்கள அரசால் படுகொலை செய்யப்படுகிறார்.

இறுதிவரை களத்தில் நின்று தன் பெண்டு பிள்ளைகளையெல்லாம் பலிகொடுத்தும் உறுதி குலையாமல் போராடிய பிரபாகரன் ஷோபாசக்திக்கு பாசிஸ்ட். தன் வாழ்நாளிலேயே சிங்கள இனவெறி நிலைப்பாட்டை எடுத்த ரோகண விஜேவீரே ஷோபாசக்திக்கு புரட்சியாளன். இனவெறி நிலைப்பாடு கொண்டவருக்கு இலக்கியம் சமர்ப்பணம்!

ஷோபாசக்தி அடிக்கடி விடும் அதிரடி அரசியல் ஸ்டேட்மெண்டுகளில் மட்டுமல்ல இலக்கியம் என்ற பெயரில் கழித்திருக்கும் அஜீரணக் குப்பையிலும் இதே மொக்கு அரசியலே ஒளிந்திருக்கிறது.

சான்றுகள்:

1.http://issues.lines-magazine.org/Art_May03/bopagefull.htm

2.Sinusoidal nature of the JVP Policy on the National Question

3.Feature article: The JVP’s campaign among the Tamils, 1977-1982 by Lionel Bopage who was a former General Secretary of the JVP

4.Rohana Wijeweera's killing - still a mystery By K T Rajasingham

- நடராசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)