சர்க்கரையைச் சுவைத்தால் தான் இனிக்கும், சர்க்கரை என்று எழுதி நக்கினால் நிச்சயம் இனிக்காது. அதுபோலதான் கலைஞரின் உயிர்காக்கும் உயர்சிகிச்சைத் திட்டமும். உயர் சிகிச்சை என்றாலே குறைந்தபட்சம் ஒரு லட்சத்தை தாண்டியதாகத்தான் இருக்கும். அதிலும் உயிர் காக்கும் உயர் சிகிச்சை என்றால் எத்தனை லட்சங்களைத் தாண்டும் என்பதைப் பார்ப்பதற்கு பூதக்கண்ணாடியெல்லாம் தேவையில்லை.

ஒரு கோடி ஏழை எளிய மக்களுக்கு இதயம், புற்றுநோய் உள்ளிட்ட 51 வகையான நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ரூபாய் ஒரு லட்சம் வரை மருத்துவக் காப்பீடு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதற்கான காப்பீட்டுத் தொகையாக 517 கோடி ரூபாய் மற்றும் சேவை வரியான 48 கோடியும் சேர்த்து, ஆண்டிற்கு 565 கோடி ரூபாயென, நான்கு ஆண்டிற்கு ஆக மொத்தம் 2260 கோடி ரூபாய் பன்னாட்டு தனியார் நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தாரைவார்க்கும். நமது மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனம் கலைஞரின் கண்களுக்குப் புலப்படவில்லையா? அல்லது, இந்த ஸ்டார் ஹெல்த் நிறுவனம் வெறும் 105 கோடி முதலீட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் ஏழை நிறுவனம். அதனால் அந்த நிறுவனத்திற்கு நாம் காப்பீடு கொடுப்போம் என்று நினைத்தாரா?

 ஏற்கனவே, மாநில அரசு ஊழியர்களுக்கும் மாநில பொதுத்துறை ஊழியர்களுக்கும் மேற்கண்ட ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் மருத்துவக் காப்பீட்டில், காப்பீட்டாளர்களுக்கு முழுப்பணம் கிடைப்பதில்லை என்ற புகார்களும், ‘உங்களுக்கு வந்திருக்கும் நோய் எங்கள் பட்டியலில் இல்லை’ என காப்பீட்டுத் தொகையை நிராகரிப்பதும் என பல முறைகேடுகள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட புகார்களுக்கு உள்ளான ஒரு பன்னாட்டு தனியார் நிறுவனத்திடம் இத்திட்டத்தை ஒப்படைத்திருப்பது கலைஞரின் தனியார் மய தாகத்தைக் காட்டுகிறது.

 தங்களுக்கு வந்திருப்பது உயிருக்கு ஆபத்தான நோய் என்று கண்டறியவே கிட்டத்தட்ட அரை லட்சத்திற்கும் மேல் செலவு செய்ய நேரிடும். இந்த நிலையில் இதய மாற்று அறுவை சிகிச்சையோ, பைபாஸ் சர்ஜரியோ, மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையோ தனியார் மருத்துவமனைகளில் செய்வதென்றால் ஒரு லட்சம் ரூபாயில் முடிகிற விஷயமா? காப்பீட்டுத் தொகையான ஒரு லட்சத்திற்கும் மேல் எவ்வளவு பணத்தை நோயாளிகளிடம் பறிக்க முடியுமோ அவ்வளவையும் பறித்துக்கொண்டு அனுப்பிவிடும். மேலும், ஒரு ரூபாய் மதிப்புடைய ஒரு மருந்து நோயாளியின் கைகளில் கிடைக்கும் போது அதன் விலை 20 ரூபாயாக இருக்கும் சூழலில் மருந்து, மாத்திரைகள், மாதாந்திர செக்கப் போன்ற தொடர் சிகிச்சைக்கு கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் உதவுமா? ஆனால், அரசு மருத்துவமனைகளில் செய்துகொள்ளும் சிகிச்சைகளுக்கு மருந்து, மாத்திரைகள், மாதாந்திர செக்கப் போன்றவைகளும் இலவசமாக கிடைக்கும்.

 லஞ்சம், ஊழல், முறைகேடு, அலட்சியப் போக்கு, சுகாதாரமின்மை என இப்படி பல குறைகளையும் மீறிதான் அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது. அனைவருக்கும் மருத்துவம் அரசால் எப்படி கொடுக்கமுடியும் என்ற தனது கையாலாகாத்தனத்தை நியாயப்படுத்திக் கொண்டிருப்பதை விட ஒவ்வொரு ஆண்டும் தனியார் மருத்துவமனைக்கு கொடுக்கும் 565 கோடி ரூபாயில் மாவட்டம் தோறும் அனைத்து வசதிகளுடன் மருத்துவமனைகளும், தேவையான எண்ணிக்கையில் மருத்துவர்களும், ஊழியர்களும், அனைத்து விதமான அறுவை சிகிச்சை உபகரணங்களும், தரமான மருத்துவ சேவையும் அரசு கொடுக்குமேயானால், இந்த மருத்துவ காப்பீடு அவசியமில்லை.

 அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனையில்தான் சென்று சிசிச்சை பெற்றுகொண்டார். ஆனால், கலைஞர் தனக்கு முதுகுவலி கொஞ்சம் அதிகமானால் கூட அரசு மருத்துவமனைக்கு வராமல் அப்போலோவிலோ ராமச்சந்திராவிலோ சென்றுதான் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். அவர்களது எம்.எல்.ஏ.க்கள் கூட (ஏதாவது விழாக்கள் நடந்தால் தவிர) அரசு மருத்துவமனைகளுக்குள் நுழைவதில்லை.

 வளர்ந்த நாடான அமெரிக்காவில் மருத்துவ சேவைகள் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் சிக்கியுள்ளதால் நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் இருப்பதுபோன்ற பொதுமருத்துவ சேவையை அமல்படுத்த சட்டங்களைக் கொண்டுவருவதில் அவர்கள் தீவிரமாக இருக்கின்றபோது, அவர்கள் நிராகரித்து, கைவிடத் துடிக்கும் மருத்துவக் காப்பீட்டு முறையை தமிழகத்தில் அமல்படுத்தியிருக்கிறார் கலைஞர்.

 இந்தத் திட்டத்தால் இன்சூரன்ஸ் நிறுவனமும், தனியார் மருத்துவமனைகளும் காப்பீட்டில் ஏற்படும் பிரச்சனைகளால் வழக்கறிஞர்களும்தான் பயனடைவார்களே தவிர மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை.

 சின்னச்சின்ன எழுத்துக்களில் பாமர மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளைச் சுட்டிக்காட்டி காப்பீட்டுத் தொகையை நிராகரிக்கவும் இந்நிறுவனங்கள் தயங்காது.

 எதிர்காலத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு மட்டும் செலவழித்தால் போதுமென அரசு மருத்துவமனைகளை மூடிவிட நினைக்கும். அப்போது இக்காப்பீட்டிற்கான தொகை அதிகரிக்கும். சாதாரண தலைவலி, காய்ச்சலுக்கு கூட பல ஆயிரங்கள் செலவு பிடிக்கும். நோய் இருப்பவருக்கு மருத்துவம் கிடைக்காது. காப்பீடு இருப்பவருக்கே மருத்துவம் கிடைக்கும் நிலை ஏற்படும்.

 1983ல் வெறும் 139 கோடியாக இருந்த, நோய்களுக்கெல்லாம் தாயான மதுபான டாஸ்மாக் விற்பனை இன்று 15 ஆயிரம் கோடியை எட்டிவிட்டது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை இலவசங்களாகவும் இதுபோன்ற திட்டங்களுக்காகவும் செலவு செய்து பெரிய வள்ளல் என பெயர் வாங்கி, ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியைக் கைவிட்டு, மக்களுக்கான உண்மையான சேவைகளை கலைஞர் செய்வாரா?

 ஆக, தனியார் மருத்துவமனைகளில்தான் தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற நிலைக்கு உளவியல் ரீதியாக அப்பாவி ஏழை எளிய மக்களை, இத்திட்டத்தின் மூலம் தயார் செய்வது ஒருபுறம், மக்களுக்கான பொதுமருத்துவ சேவையை கைக்கழுவுவது மறுபுறம். எனவே, இது கலைஞரின் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டம் என்பதைத் தவிர வேறல்ல!

- இரா.சரவணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It