கற்பு பற்றி கருத்து கூறியதற்காக நடிகை குஷ்பு பட்ட பாட்டை நாம் பார்த்தோம். அது நடந்தது மிகச்சமீபத்தில்தான். ஆனால் இன்றைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மிகுந்த கட்டுப்பெட்டித்தனமும், கல்லாமையும், பழைமையும் சாதி ஆதிக்கமும் கோலோச்சிய காலத்தில் யாரும் நினைத்தும்கூட பார்த்திராத அளவுக்கு புரட்சிகரமான கருத்துக்களைப் பேசியும் எழுதியும் பரப்பியும் வந்த நிஜமான புரட்சியாளர் தந்தை பெரியார். ‘‘ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றிவிடும். பிறகு கஷ்டமே இருக்காது’’ என்றவர் அவர்.

கணவனே கண்கண்ட தெய்வம் என்று போதிக்கப்பட்ட காலத்தில், ‘‘திருமணம் என்பது மனிதத்தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமைகொள்ளவே ஏற்பட்டது. அது ஆண்களுக்கு நன்மையாகவும் பெண்களுக்குக் கேடாகவும் இருக்கிறது’’ இதுவும் பெரியார்தான்.

பெரியார் சாதி ஒழிப்பு, விதவைகள் மறுமணம், பெண்ணுரிமை போன்ற கொள்கைகளை வலியுறுத்திப் பேசிவந்திருக்கிறார். சாதிகள் என்ற அடிப்படைக் கட்டமைப்பு, இன்னும் ஒழியவில்லை என்றாலும் கொள்கை அளவில் சாதிகள் ஒழிக்கப்படவேண்டும் என்பது எல்லாவிதங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. சாதியின் பெயரால் ஒடுக்குதல் முழுமையாக மறையவில்லை. ஆனால் பெரியார் கொளுத்திய சாதி ஒழிப்பின் கனலில் கதகதப்படையாத நபரே இல்லை. விதவைகள் மறுமணத்தை வலியுறுத்தி அவர் செலவிட்ட உழைப்பின் எதிரொலிதான் இன்று அது சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது. அவர் பேசிய பெண்ணுரிமைதான் இன்று பெண் கல்வியாக, பெண் அதிகாரமாக மாறியிருக்கிறது. வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைக்கும் விந்தைகள் இல்லை.

சமூகநீதிக்காக அவர் நடத்திய போராட்டம்தான் இடஒதுக்கீட்டுக்காக இந்திய அரசை முதல் சட்டத்திருத்தம் கொண்டுவரச் செய்தது. 1950களில் வகுப்புவாரி உரிமைகளுக்காக அவர் செய்த கிளர்ச்சிகளின் பங்கு முக்கியமானது. இன்றைக்கு சமூகநீதியைப் பேசாமல் யாரும் இந்தியாவில் எதுவும் செய்துவிடமுடியாது. தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களில் இரண்டு விஷயங்களைத் தவிர்த்து அனைத்தும் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டன. ஒன்று தனித்தமிழ்நாடு. இரண்டாவது நாத்திகம். தனித்தமிழ்நாட்டுக்காக பெரியாரைக் குற்றம் சொல்லமுடியாது. அவர் வாழ்ந்த காலம் அப்படி. இரண்டு உலகப்போர்களின் இடையில், ஆங்கில ஆதிக்கத்தில், குழம்பிப்போயிருந்த தேசத்தில் இருந்தார். உண்மையில் பிரிவினைவாதம் என்பது 1962 வரை சட்டரீதியாக ஏற்றுகொள்ளப்பட்டதாகவே இருந்தது. அம்பேத்கர்கூட ‘‘நாட்டின் நலனா, தீண்டப்படாதோர் நலனா என்று வருகையில் நான் நாட்டின் நலனைவிடத் தீண்டப்படாதோரின் நலனையே தூக்கிப்பிடிப்பேன்’’ என்கிறார். அதேதான் பெரியாரின் நிலைப்பாடு.

அவர் திராவிட இனத்தின் நலனையே விரும்பினார்; அதையே தூக்கிப்பிடித்தார். அதற்குத்தான் தனித்தமிழ்நாடு கோரினார். அதை அந்த காலகட்டத்துடன் சேர்த்துத்தான் பார்க்கவேண்டும். அதேசமயம் இன்று ‘திராவிட தேசியக் கட்சியாக’ மாறியிருக்கும், பக்கத்தில் இனஅழிப்பு நடந்தபோதும் இந்திய இறையாண்மையையே பெரிதாகக் கருதிய தி.மு.க., திராவிடர் கழகத்திலிருந்து முளைவிட்டதே என்பதையும் கவனிக்கத்தான் வேண்டும்.

நாத்திகமென்பது உலகத்தில் மனித இனம் தோன்றியதிலிருந்தே இருக்கிறது. பெரியாரின் நாத்திகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சார்வாகன ரிஷிகளின் தொடர்ச்சியே. இது இன்னும் தொடரவே செய்யும். ஆனால் அவரது நாத்திகம் இந்த நூற்றாண்டின் மூடநம்பிக்கைகளைக் குறிவைத்துத் தகர்த்தது. இன்னும் தகர்த்துக் கொண்டிருக்கிறது. எத்தனையோ ஏமாளிகளை கறுப்புச்சட்டைதான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நாடே, உலகமே பெரியாரை ஏற்றுக் கொண்டிருக்கிறது, அவரது கொள்கைகளைக் கடைப்பிடிக்காதவர்கள்கூட அவற்றை ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்த இதழில் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதுவதுபோல, ‘‘அவர் உலகப் பெருஞ்சொத்து, உலகக்கருத்தாளர்.’’ மேலும் இதே இதழில் எழுத்தாளர் பாமரன் கூறுவது போல, ‘‘பெரியார் ஒரு இயக்கத்துக்கோ கட்சிக்கோ சொந்தமானவர் அல்ல.’’ காலம்பூராவும் தன் கொள்கைகளைப் பரப்புவதையே தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்துவந்த ஒரு மனிதரை காப்புரிமைச் சட்டத்தில் பூட்டுவது என்ன நியாயம்?

அய்யா வீரமணி அவர்கள் மூலமாகவே என்னைப் போன்ற பல புதிய தலைமுறையினர் தந்தை பெரியாரை அறிந்தோம் என்பது உண்மையே. நீதிமன்றத் தீர்ப்புகள் யாருக்கு சாதகமாக வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் இன்னும் உலகில் பெரியார் சிந்தனைகள் துளைக்காத மதிற்சுவர்கள் எத்தனையோ இருக்கின்றன. அதை, ஓர் இயக்கத்துக்கு மட்டுமே அவரைச் சொந்தம் கொண்டாடுவதன் மூலம் சாதிக்க இயலாது. அவர் ஊர் கூடி இழுக்கவேண்டிய தேர் (இந்த உவமை பெரியாருக்கு உவப்பானதல்ல என்றாலும்கூட

முடக்கப்படும் புரட்சிக் கருத்துக்கள்?
- சுந்தரபுத்தன்

பெரியார் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் அவரது எழுத்தும் பேச்சும் சகோதர மோதலில் சிக்கியுள்ளது. ‘குடியரசு’ இதழ்களில் வெளிவந்த அவரது கட்டுரைகளையும் பேச்சுக்களையும் தொகுத்து பெரியார் திராவிடர் கழகம் நூல்களாக வெளியிட முயன்று வருகிறது. ஆனால் இதற்கு திராவிடர் கழகம் மறுப்புத் தெரிவித்ததுடன் வழக்கும் தொடர்ந்தது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றம், ஜூலை 27&ஆம் தேதியன்று வழங்கிய தீர்ப்பில் பெரியார் எழுத்துக்களை வெளியிடுவதற்கு எந்தத் தடையுமில்லை என¢று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மேல் பெஞ்சுக்கு சென்று காப்புரிமை பெறாமல் நூலை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தடையாணை பெற்றுள்ளார்.

தமிழகத்தில் பாரதியார் தொடங்கி பல படைப்பாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. அவற்றை யாரும் வெளியிடுவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு சமூகத்தையே தன் எழுத்தால் பேச்சால் விழிப்புணர்வு பெறவைத்த சமூகச் சிந்தனையாளரான தந்தை பெரியாரின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்கப்படுமா? அவை ஏன் நாட்டுடைமையாக்கப்படவில்லை என்ற கேள்வி இன்று தமிழ்ச் சிந்தனைக் களத்தில் எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களாக திராவிடர் கழக நாளிதழான ‘விடுதலை’யில் பெரியாரின் எழுத்துக்களை வெளியிடுவதற்கான உரிமை யாருக்கு இருக்கிறது என்பது பற்றிய தொடர் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின¢றன. ''மாபெரும் புரட்சியாளரின் கருத்துக்களில் ஓர் அரைப்புள்ளியை மாற்றினால்கூட கருத்துகள் மாறுபட்டுவிடும். புத்தருக்குப் பின் தோன்றிய ஜாதகக்கதைகள் என்கிற அனுபவம் ஏற்கெனவே எச்சரித்துக் கொண்டு இருக்கிறது. பெரியாரின் கொள்கைகளில் அக்கறையும் மதிப்பும் உடையவர்கள் அவரது கருத்துக்குத் திரிபுவாதம் வந்துவிடக்கூடாது; இடைச்செருகல் வந்துவிடக்கூடாது என்பதிலே கவனமாக இருப்பார்கள்'' என்றும் தசஇயிடம் பேசும்போது திக. பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் சுட்டிக்காட்டினார்.

பெரியார் நூல்களை யாரும் வெளியிடலாம் என்று அதிகாரபூர்வமாக திறந்துவிட்டால் என்ன ஆகும்? ஈ.வி.ராமசாமி நாயக்கர் வரலாற்று நூல் என்று சிப்பி புக்ஸ் வெளியிட்டுள்ளது. 1927 ஆம் ஆண்டிலேயே தம் பெயரிலிருந்து சாதி அசிங்கத்தைத் தூக்கியெறிந்தவரை இதைவிட எப்படி கொச்சைப்படுத்தமுடியும். இப்படித்தான் நூல்கள் வெளிவரும் என்று சான்றுகாட்டுகிறார் அவர்.

சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான அ.மார்க்ஸ் இக்கருத்தை மறுக்கிறார்:

"திராவிட இயக்கத்தின் நிறுவனரான பெரியாரின் எழுத்துக்கள் முப்பது வருடங்களுக்கும் மேலாக முடங்கிக்கிடப்பது வருத்தத்திற்குரியது. அவரது எழுத்தைத் திரித்துவிடுவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. திராவிடர் கழகம் தயாரித்த பெரியார் படத்தில் ‘பார்ப்பனர்’ என்கிற வார்த்தையையே பயன்படுத்தாத இவர்கள் இப்படிப் பேசுவதற்கு எந்த உரிமையுமில்லை. சிலர் திட்டமிட்டு உருவாக்கிய பெரியார் ஒரு தலித் விரோதி என்ற பிம்பம் வடநாடுகளில் பரவியிருக்கிறது. அதை முறியடிப்பதற்கு பெரியாரின் தீண்டாமை ஒழிப்பு மற்றும் தலித்துகள் குறித்த எழுத்துக்கள் ஆங்கிலத்தில் பெரிய அளவில் வெளியிடப்படவேண்டும். பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடைமையாக்குவதில் தமிழக அரசுக்கு மிகப் பெரிய கடமை இருக்கிறது. இந்திய மரபில் தோன்றிய மிக முக்கியமான சிந்தனையாளர்களான புத்தர், அம்பேத்கர், பெரியார் ஆகியோர்தான் மாற்றுச் சிந்தனை மரபை உருவாக்கியவர்கள். அதில் மிக முக்கியமாக தமிழ்நாட்டு அரசியலின் முகத்தை மாற்றிய பெரியாரின் சிந்தனைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்" என்றார்.

பெரியார் எழுத்துக்களை முழுமையாக வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டை திராவிடர் கழகம் மறுக்கிறது. கடவுள், மதம், பெண்ணுரிமை, சாதி, தீண்டாமை என்ற தலைப்புகளில் பெரியார் களஞ்சியம் என்ற பெயரில் 31 தொகுதிகளை கொண்டு வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு நூலும் 300 பக்கங்களைக் கொண்டது. ஒரு நூலின் விலை 50 ரூபாய். ஆனால் இப்படி திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளதாகச் சொல்லும் பெரியார் களஞ்சியம் நூல்களைக்கூட, நாங்கள் குடியரசு இதழ்த் தொகுப்பு பற்றிய அறிவிப்பைச் செய்த பின்னர்தான் அவசர அவசரமாக வெளியிட்டனர் என்று தசஇயிடம் பேசும்போது பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்தார்.

முதலில் 2003 ஆம் ஆண்டுதான் பெரியார் தி.க. வினர் 1925 ஆம் ஆண்டைய ‘குடியரசு’ இதழில் வெளிவந்த பெரியார் எழுத்து மற்றும் பேச்சுக்களைத் தொகுத்து 250 பக்க நூலாகக் கொண்டுவந்தனர். அதன்பின் 2005 இல் குடியரசு இதழ்களில் வெளிவந்த பெரியாரின் எழுத்துக்களை நானூறு பக்க அளவில் இரு தொகுப்புகளாக வெளியிட்டனர். ஆண்டுக்கு ஒரு நூல் என்ற அளவில் வெளியிட்ட பெரியார் திக.வினர், அடுத்தடுத்த ஆண்டுகளில் (2006, 2008 ) கிடைக்காத குடியரசு இதழ்களையும் சேர்த்து திருத்திய பதிப்பாக 27 தொகுதிகளாக வெளியிட திட்டமிட்டனர். இதுதான் சர்ச்சையின் ஆரம்பப் புள்ளி. அதோடு பெரியார் ஆங்கிலத்தில் 1928&29 ஆண்டில் நடத்திய ‘ரிவோல்ட்’ இதழ்களின் கட்டுரைகளையும் தொகுத்து 650 பக்கங்களில் வெளியிட பெரியார் தி.க. திட்டமிட்டது. அவர்களுக்கு 55 இதழ்களில் 42 இதழ்களே கைக்குக் கிடைத்தன. இந்நூல்கள் பற்றிய அறிவிப்பை அவர்கள் 2008 ஜூலையில் வெளியிட்டனர். இதைக்கண்ட திராவிடர் கழகம் தடையாணை வாங்கியது.

இச்சர்ச்சை பற்றி விரிவாகப் பேசிய கொளத்தூர் மணி, "1978 ஆம் ஆண்டு மணியம்மையார் தலைவராக இருந்தபோது பெரியார் கடவுள் பற்றி பேசிய கருத்துகளையெல்லாம் தொகுத்து நூலாக வெளியிட்டார். 1995 இல் நான்கு தொகுப்புகளை வெளியிட்டார்கள். அதன்பிறகு பல ஆண்டுகள் எந்தத் தொகுப்பும் வெளிவரவில்லை. கால வரிசைப்படி எழுத்துக்களை வெளியிடும் போதுதான் பெரியார் சிந்தனைகளின் பரிணாம வளர்ச்சியை அடையமுடியும். 1983 இல் பல ஆய்வாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு பெரியார் எழுத்துக்களை தொகுக்கும் பணி நடந்தது. ஆனால் இதுவரையில் ஏன் அவற்றை வெளியிடவில்லை? முதல் குடியரசு இதழ்கூட திராவிடர் கழகத்திடம் இ¢ல்லை. இப்படி பல இதழ்கள் இல்லை. அதற்கான முயற்சிகளையும் செய்யவில்லை" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘ஏற்கெனவே ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பெரியாரின் குடியரசு இதழ்களைத் தொகுக்க ஒப்புதல் பெற்றது. ஆனால் அப்போது அதிமுகவிடம் நெருக்கமாக இருந்த கி.வீரமணி அந்தப் பணியை நடைபெறவிடாமல் தடுத்துவிட்டார். பதிப்புரிமை சட்டவிதிகள்படி பொதுஇடங்களில் ஆற்றிய உரைகள் காப்பிரைட் சட்டத்திற்குள் வராது என்று அறிவிக்கிறது. இச்சட்டப்பிரிவுகளைக் கொண்டே நாங்கள் மீண்டும் நீதிமன்றம் செல்வோம்" என்று உறுதியான குரலில் வாதிடுகிறார்.

சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் நூல்களை அரசின் தன்னாட்சி நிறுவனமான அம்பேத்கர் பவுண்டேஷன் வெளியிடுகிறது. வி.பி. சிங் பிரதமராக இருந்த காலத்தில்தான் அவரது பெயரில் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது. "ஆனால் வெளியில் பலரும் அம்பேத்கரின் நூல்கள் வெளியிட்டாலும் நம்புவதற்குரியதாகவே அவை இருக்கின்றன. பெரியாரின் எழுத்துக்கள் எல்லோராலும் வெளியிடப்படும்போது, அவரது அடிப்படையான கொள்கைகள் திரிபுபடுத்தப்படும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. பெரியாரது நூல்களை அரசு முறையாக வெளியிடும் என்று அறிவித்தால் அதை வரவேற்கலாம். ஆனால் எதார்த்தத்தில் நாட்டுடமையாக்கிய எல்லோரது நூல்களையும் அரசு வெளியிடுவதில்லை" என்று மாற்றுக்கருத்தை வைக்கிறார் ‘தலித் முரசு’ இதழின் ஆசிரியர் புனித பாண்டியன்.

பெரியார் மறைந்து 36 ஆண்டுகள் கடந்தபின்பும் அவரது கொள்கைகள் சமுதாயத்தின் பலதரப்பிடமும் போய்ச்சேரவும், சிந்தனைகள் மக்களை அடையவும் முழுமையான முயற்சிகள் செய்யப்படவில்லை என்பதும், அதோடு காந்தி, நேரு, அம்பேத்கர், விவேகானந்தரின் நூல்களைப்போல கால வரிசைப்படி பெரியாரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் கிடைக்கவில்லையே என்பதும் பலரது கவலையாக மிஞ்சியிருக்கிறது.

தமிழகத்தின் ஞானத்தந்தை
அவர் ஒரு எரிநெருப்பு. அதைப் பொட்டலம் கட்டமுடியாது
- பிரபஞ்சன், எழுத்தாளர்

பெரியார், பெரியாரியத்தை அவருடைய தந்தையின் மண்டிக் கடையிலிருந்து தொடங்கினார். அப்பா, வீட்டில் பிராமண போஜனம் செய்வித்து, நடமாடும் தேவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தபோது, அந்த அக்கப்போர்ச் செலவைக் கடையில் அமர்ந்தபடி விமர்சித்தார் அவர். பெரியாரின் கருத்துக்கள், மொழியும் மொழிப் பரவல் கொண்ட பூகோள வரம்புக்குள்ளும், அதாவது தமிழ், தமிழினம் என்ற எல்லைக்குள்ளும்கூட அடங்கிக்கொள்ளாதவை. மாறாக, எங்கெல்லாம் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு பேதம் நிலவுகிறதோ, நிறத்தாலும் பிறப்பாலும் வரலாற்றாலும், ஒடுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும் மனிதகுலம் நிலைபெற்றிருக்கிறதோ அங்கெல்லாம் எடுத்துச் செல்லத்தக்க கருத்துக்கள். அவர் உலக மனிதராக, உலகப் பெருஞ்சொத்தாக, உலகக் கருத்தாளராக விளங்குகிறார். பெரியாரியத்தை மலையாளத்திலும், ஏனைய இந்திய மாநிலங்களுக்கும் கறுப்பர் இனச் சூழ்நிலைகளுக்குள்ளும் கொண்டு செல்லலாம்.

அவர் கருத்துக்கள் மனிதகுலம் அத்தனைக்கும் பொது. இன்னும் சொன்னால், பெரியார் கருத்துக்கள், படைப்புகள் பெரியாருக்கே சொந்தமானது கூட இல்லை. இதை அவரே ஒப்புக் கொள்வார். கடவுள் மனித குலத்தை உருவாக்கினார் என்கிற புராணத்தைப் புதைகுழிக்கு அனுப்பிய டார்வின், உழைக்கும் வர்க்கத்துக்கு, இழக்க ஒன்றுமற்ற மனித குலத்துக்குப் பொன்னுலகைக் காட்டித் தந்த மார்க்ஸ், எங்கெல்ஸ், மனித மனசுக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனிதரைக் கண்டுபிடித்துச் சொன்ன பிராய்ட் மற்றும் யுங் போன்றவர்களின் படைப்புகள் அவர்களின் சொத்துக்களைப் பாதுகாத்த மானேஜர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றால், அது எவ்வளவு பெரிய நகைச்சுவையோ, அப்படியேதான் நம் மண்ணுக்குப் பெரியாரின் படைப்புகள்.

வளமான செழுங்குடிச் செல்வர் இராமசாமி. ஒரு மைனரைப் போல் தன் இளமையில் சுற்றித்திரிந்த அந்த இளைஞர், சமூக வாழ்க்கைக்குள் வந்து தன் சொத்துக்களையும், சற்றேறக்குறைய ஒரு கருமிபோல சொத்து சேர்த்து ஓர் இயக்கத்தை உருவாக்கி, மூத்திரவாளியைச் சுமந்துகொண்டு பிரச்சாரம் செய்து, தன்னையும் தன் அறுபது ஆண்டுகால அறிவுச் சொத்தையும் கொடுத்துச் சென்றது, தன் கருத்துப் பரவலுக்கும் பரப்புக்கும்தான் இருக்க முடியுமே தவிர வேறு எதற்காக இருக்கமுடியும்? பெரியார் படைப்புகளைத்தானே தந்து சென்றார். பூட்டுகளையும் சாவிகளையுமா தந்து சென்றார்?

1967க்குப் பிறகு திராவிட இயக்கங்கள்தானே ஆட்சியில் இருந்தன. அல்லது அப்படிச் சொல்லிக் கொண்டவைதானே அதிகாரத்தில் இருந்தன. பெரியாரின் வாரிசுகளாகத் தம்மை இப்போது முன் நிறுத்திக்கொள்பவர்கள், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டுக்குமே ஆதரவளிக்கத்தானே செய்தார்கள். அந்த அரசுகள் துணை கொண்டு, சாமி சிதம்பரம் விட்ட இடத்திலிருந்து தொடங்கிப் பெரியாரின் வரலாற்றை முழுமை செய்து மிகக்குறைந்த விலையில் வெளியிட்டுப் பரவச் செய்திருந்தால், சகல இந்திய மொழிகளிலும் வெளியிட்டு, ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் கொண்டு சென்றிருந்தால் - பெரியார் திராவிடர் கழகம் செய்வதற்கு வேலையே இருந்திருக்காதே.

பெரியார் இறந்து சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அதைச் செய்யாதவர்கள் செய்ய முன்வருபவர்களையும் மறிக்க நினைப்பது பெரியாருக்குச் செய்யும் தொண்டாகக் கருத முடியுமா? வெளியேறியவர்களாலும், வெளியேற்றப்பட்டவர்களாலுமே எஞ்சிய இன வரலாறுகள் எழுதப்படுகின்றன என்பதே உலக வரலாறு. கல்கி அவர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்க, அவர் மகன் ராஜேந்திரன் சம்மதிக்கவில்லை என்கிறார் தமிழக முதல்வர். கல்கி ராஜேந்திரனும், காந்தி கண்ணதாசனும் அவர்களின் தந்தையர்களின் படைப்புகளை நாட்டுடமை ஆக்கச் சம்மதிக்காதது, அவர்கள் சொந்த, குடும்பப் பிரச்னை மற்றும் அதற்கு அவர்களிடம் நியாயமான காரணங்கள் இருக்கக்கூடும். தந்தையரின் சொத்துக்கள் பிள்ளைகளுக்கு என்பது அவர்களுக்குச் சரி. பெரியாருக்கு அது பொருந்துமா என்றால் நூறு சதம் பொருந்தாது.

பெரியார் தமிழ்ச் சமுதாயத்தின் தமிழர்களின் ஞானத் தந்தை. அவர் ஒருபோதும் குடும்பத் தந்தையாக, பிள்ளைகளின் தந்தையாக இருந்தது இல்லை. தமிழக மண்ணில் அவர் நிலைபெற்றதால், பாடுபட்டதால் தமிழர்கள் அனைவருமே அவர் உடமைக்கு உரியவர்களாகிறார்கள். பெரியார் எவ்வாறு சமூகச் சொத்தோ அங்ஙனமே அவர் படைப்புகளும் சமூகச் சொத்தே ஆகும்.

சகல பார்ப்பனீய ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக, சாதி இழிவுகளுக்கு எதிராக, சமநீதி மானுடத்துக்கு ஆதரவாக, உண்மை ஜனநாயகம் பேசும் கருத்தாயுதர்கள், இந்தியாவுக்குள் இருவரே உளர். ஒருவர் அம்பேத்கர், மற்றவர் பெரியார். இவர்களது புத்தகப் பக்கங்களிலேதான் ஆதிக்கக் கோட்டைச் சுவர்களைத் தகர்க்கும் மருந்துகள் இருக்கின்றன. இவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே நம் முதல் பணியாக இருக்கமுடியும்.

பெரியார் ஒரு எரி நெருப்பு. அதைப் பொட்டலம் கட்ட முடியாது.

பகுத்தறிவின் நீட்சி
பெரியார் சிந்தனைகள் முடக்கப்படுவது வரலாற்றுத் துயரம்.

- பாமரன், கட்டுரையாளர்

உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்கள் அக்கறையும், ஆதங்கமும் கொண்டு அளித்த அந்தத் தீர்ப்பினை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்க்கிறேன். உண்மையிலேயே பெரியார் என்கிற அந்த எளிய மனிதர்மீது அவர் வைத்திருக்கிற அளவிடற்கரிய நேசமும், மரியாதையும் அவரது ஒவ்வொரு வார்த்தைகளிலும் துளிர்விடுகிறது.

வழக்கு மன்றத்திற்கு வந்துள்ள விஷயம் இதுதான்: 1925 இல் இருந்து 1938 வரையிலும் பெரியாரின் உழைப்பில் விளைந்த ‘குடியரசு’ இதழ்களை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் தொகுத்து வெளியிடுவதா அல்லது பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதா என்பதுதான். தான் பயணப்படுவதற்கு மூன்று மாதம் முன்புகூட "எனக்கு அரசியல் வாரிசு என்று எவரும் கிடையாது. எனது கொள்கைகளும் தத்துவங்களுமே எனக்கான வாரிசுகள்" என்று ஆணித்தரமாக அறிவித்திருந்தார் பெரியார்.

தடைகோரும் இந்த வழக்கு மீதான தீர்ப்பை வாசிக்கும்போதுதான் பெரியார் குறித்த தனது தீர்க்கமான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் நீதிபதி. பெரியாரது ‘குடியரசு’ எழுத்துக்கள் இரண்டு உலக யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் வந்தவை. இதற்காக காலனியாதிக்க ஆட்சியாளர்களால் பலமுறை சிறைப்படுத்தப்பட்டார்... பிணையாக கொடுக்கப்பட்ட தனது அச்சகத்தையும் தண்டனையாக எண்ணற்ற முறை இழந்திருக்கிறார்... இந்துமதப் பழமைவாதிகளால் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்... சமூக நீதி என்னும் லட்சியத்திற்காகப் போராட தேசிய இயக்கத்திலிருந்தே வெளியேறி சக்திவாய்ந்த காங்கிரஸ் கட்சியினது கடும்கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்... இவற்றுக்கெல்லாம் பதிலாக எந்தவித பிரதிபலனையும் ஒருபோதும் எதிர்நோக்காது தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டு தொடர்ந்தார். பெருமளவு எழுத்தறிவே பெருகாத அக்காலத்தில் கற்றவர்கள் மத்தியில் தனது கருத்துக்கள் போய்ச்சேர வேண்டும் என்கிற எண்ணத்தில் குடியரசு இதழ்களை இலவசமாகக்கூட விநியோகித்திருக்கிறார் பெரியார்.

அவரது 130வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவரது எழுத்துக்களின் உரிமை யாருக்கென சட்டச்சண்டையில் ஈடுபட்டிருப்பது வேதனையின் உச்சம். இந்தச் சகோதர சர்ச்சையில் சிக்கி அவரது சிந்தனைகள் நீதிமன்றப் பதிவேடுகளில் ஒருபோதும் மூழ்கடிக்கப்பட்டு விடக்கூடாது. நமது உறுதியான குறிக்கோள் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். அது: நூறு பூக்கள் மலரட்டும். ஆயிரம் கருத்துக்கள் மோதட்டும்’’ என்று தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியிருக்கிறார் நீதிபதி.

காப்புரிமைச் சட்டங்களால் பெரியாரை முடக்கி வைத்துவிட இயலாது என்று வந்திருக்கிற இந்தத் தீர்ப்பை எதிர்த்துத்தான் மேல்முறையீடு செய்து மீண்டும் பெஞ்ச் விசாரணைக்குக் கொண்டு சென்றிருக்கிறார் மானமிகு. வீரமணி. வழக்குரைஞர் குமாரதேவன் அனுப்பியிருந்த இந்தத் தீர்ப்பின் நகலை ஒருமுறைக்கு பலமுறை வாசித்து மெய்சிலிர்த்துப் போனேன்.

தந்தை பெரியாரை தலைவர்கள் பின்பற்றுகிறார்களோ இல்லையோ ஆனால் மக்கள் பின்பற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் அவரைப் பின்பற்றுவதன் வெளிப்பாடுதான்... பால்ய "திருமணங்களுக்கு" முடிவுகட்டி "பெண்ணின் திருமண வயது 21" என்று ஆட்டோக்களில்கூட எழுதிவைத்திருப்பது... அவரைப் பின்பற்றுவதன் வெளிப்பாடுதான்... "25 வயது இளம் விதவைக்கு மணமகன் தேவை. சாதி தடையில்லை" என்று விளம்பரங்களில் அறிவிப்பது... அவரைப் பின்பற்றுவதன் வெளிப்பாடுதான்..

"நாமிருவர் நமக்கெதற்கு இருவர்?" என்கிற குடும்பக்கட்டுப்பாட்டு அறிவிப்புகள்... அவ்வளவு ஏன் இன்றும் அவர் எந்த இனத்துக்கு எதிராகச் சித்தரிக்கப்படுகிறாரோ, அதே இனத்தைச் சேர்ந்த கைம்பெண்கள் மொட்டையடிக்கப்பட்டு மூலையில் அமர வைக்கப்பட்ட துயர்மிகும் காலங்கள் துடைத்தெறியப்பட்டு, இன்றைக்கு மரியாதைக்குரிய மானுடர்களாய் உலா வருகிறார்களே, அதில்கூட அடங்கி யிருக்கிறது அவரது அறிவுப் பிரச்சாரத்தின் பலன்.

"அறிவு எவருக்கும் சொந்தமில்லை. அது உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு செல்லப்பட்டாக வேண்டும்" உரத்துக்குரல் கொடுத்தவனின் சிந்தனைகள் "அறிவுசார் சொத்துரிமைகளின்" பெயராலும் காப்புரிமை சட்டங்களின் பெயராலும் முடக்கி வைக்கப்படுவதென்பது மாபெரும் வரலாற்றுத் துயரம். அவரின்றி 36 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில் உலகின் நிலை பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இன்றைக்கு அவர் இருந்திருந்தால் உலகமயமாக்கலையும், தனியார் மயமாக்கலையும், கேடுகெட்ட இந்த அறிவுசார் சொத்துரிமையையும் எப்படி எதிர் கொண்டிருப்பார்... எத்தகைய விமர்சனங்களை வைத்திருப்பார் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அதுதான் அவர் சொன்ன பகுத்தறிவின் நீட்சி.

தந்தை பெரியார் ஒரு குறிப்பிட்ட இயக்கத்துக்கோ... கட்சிக்கோ... இனத்துக்கோ சொந்தக்காரரில்லை. இந்த ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான உன்னத சொத்து அவர்.

(நன்றி: த சன்டே இந்தியன் – செப்டம்பர் 2009)

Pin It