சுயமரியாதைத் திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் 1928 முதல் தமிழ்நாட்டில் நடத்தி வந்ததை அனைவரும் அறிவோம். சுயமரியாதை திருமணத்திற்கான தேவை ஏன் வந்தது என்றால் நமக்கு (சூத்திரர்களுக்கு) பார்ப்பன சாத்திரப்படி திருமணம் செய்துகொள்ள தகுதி இல்லை என்பதாலும், பார்ப்பான் நம்மை அவமரியாதையாக நடத்துவதாலும், நம்முடைய மொழியைஅவன் புறக்கணிப்பதாலும் சுயமரியாதைத் திருமணத்திற்கான தேவை ஏற்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள் 1928 முதல் சுயரியாதை திருமணங்களை நடத்தி வந்தாலும், அவற்றில் பார்ப்பனர்கள் இல்லையயன்பதைத் தவிர சடங்குகள் இடம் பெற்றிருந்தன. முதன்முதலாக தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் குத்தூசி குருசாமிக்கும்-குஞ்சிதம் அம்மையாருக்கும் 8.12.1929இல் நடத்தி வைத்ததே சடங்குகளற்ற சாதி மறுப்பு திருமணம் ஆகும், அதன் பிறகு, தமிழகத்தில் வேகமாக சுயமரியாதைத் திருமணங்கள நடைபெற ஆரம்பித்தன.

சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் ஏன் தேவைப்பட்டது?

இன்றைய திராவிடர் கழகத் தலைவரான கி. வீரமணியின் மாமனாரின் (சிதம்பரம் செட்டியார்) முதல் மனைவியின் பிள்ளைகளுக்கும், மூன்றாம் மனைவியின் பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக வழக்கு நடைபெற்று வந்தது.

அது என்னவென்றால், வீரமணியின் மாமனார் சிதம்பரம் செட்டியார் அவருடைய முதல் மனைவியின் பெயர் நாச்சியம்மை, இவர்களுக்கு ஒரு மகள் இருந்தார். அவர் பெயர் தெய்வ யானை, முதல் மனைவி இறந்தவுடன் வள்ளி யம்மை என்பவரை இரண்டாவது மனைவியார் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு மக்கள் இல்லை. அவரும் இறந்துவிட்டார். மூன்றாவது மனைவியாக திருவண்ணா மலையைச் சேர்ந்த ரெங்கம்மாள் என்ற ரெட்டியார் சாதியைச் சார்ந்த விதவையை 14.7.1934 இல் பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் சிதம்பரம் செட்டியாரின் முதல் மனைவியின் மகள் தெய்வயானை ஆச்சி என்பவர் தேவ கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவ்வழக்கில் தன் தந்தை சிதம்பரம்-ரெங்கம்மாள் என்பவரை சுய மரியாதைத் திருமணம் செய்துகொண்டனர். அத் திருமணம் செல்லாது, அவர்களது வாரிசுகளுக்கு என் தந்தை யின் சொத்தில் இருந்து பாகப்பிரிவினை செய்து கொடுக்கக் கூடாது என்பதே அவ் வழக்கு. சிதம்பரம் செட்டியார் தன் சொந்த உழைப்பில் வந்த சொத்தை யாருக்கு வேண்டு மானாலும் எழுதி வைக்கலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அத் தீர்ப்பை எதிர்த்து 28.9.1948இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

நீண்ட நாட்கள் விசாரணை செய்யப்பட்டு 20.8.1953 அன்று சென்னை உயர்நீதி மன்றம் 25 பக்கத் தீர்ப்பை வழங்கியது. அத் தீர்ப்பில் புரோகித ஒழிப்புச் சங்கம் மூலம் செய்யப்பட்ட திருமணம் ஏற்புடையது அல்ல. சிதம்பரம் செட்டியாராக இருந்தாலும் அவருக்கு வைசியருக்கான தகுதி கிடையாது. அவர் சூத்திரர்தான், செட்டியார் சாதிக்கான சடங்கும் செய்யாமல், ரெங்கம்மாளின் ரெட்டியார் சாதிக்கான சடங்கும் செய்யாமல் இத் திருமணம் நடைபெற்றிருப்பதால் இதை, சட்டபூர்வத் திருமணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதுடன், இவர்களுக்குப் பிறந்த குழந்தை சட்டப்படியான வாரிசு அல்ல என்ற போதிலும் ஆதிகாலம் தொட்டே இந்துக்கள் வைப்பாட்டிகளின் பிள்ளைகளுக்கு சொத்து எழுதிவைக்கும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது. சிதம்பரம் செட்டியார் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம் என்று தீர்ப்புக் கூறப்பட்டது. இதனால்தான் சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் சட்டம் தேவைப்பட்டது. இந்தத் தீர்ப்பு வந்த உடனே அன்றைய இராசாசி அரசு சுயமரியாதைத் திருமணம் செல்லுபடிச் சட்டம் கொண்டுவர முயற்சி மேற்கொண்டது. சட்டமன்றத்தில் மசோதா முன்மொழியப் பட்டது. ஆனால் குலக்கல்வித் திட்டம் எதிர்ப்புப் போர் காரணமாக இராசாசி விரைவிலேயே ஆட்சியை விட்டு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

1957இல் தி.மு.க.வைச் சேர்ந்த களம்பூர் அண்ணாமலை சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீவிரமாகப் பேசினார், அரசு செவி சாய்க்கவில்லை. தி.மு.க.வைச் சேர்ந்த செ. மாதவன் சுயமரியாதைத் திருமணச் சட்டம் தொடர்பாக ஒரு தனியார் மசோதாவை கொண்டுவந்து நிறைவேற்றும்படி வேண்டினார். அப்போதைய காங்கிரசு சட்ட அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் என்கிற பார்ப்பனர் அம் மசோதாவை தோற்கடித்தார்.

1967இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி யாகும்படி சட்டம் செய்ய தீவிர முனைப்பு காட்டி சட்ட மன்றத்திலும் 27.11.1967இல் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். இதற்கு 17.1.1968 அன்று குடிஅரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்தது. 20.1.1968 நாளிட்ட அரசிதழில் இச்சட்டம் வெளியிடப்பட்டது.

இந்த சட்டம் முழு வெற்றியா என்பதுதான் என்னுடைய வினா?

முதலில் இந்தச் சட்டத்திற்கு பெயர் சுயமரியாதைத் திருமணம் செல்லுபடிச் சட்டம் (Self Respect Marriage Validaity Act) என்று இருந்திருக்க வேண்டும். வேறு எந்தச் சட்டத்திலும் இதை பிணைத்திருக்கக்கூடாது. ஆனால் தமிழக அரசின் சட்டமோ இச்சட்டம் “1967ஆம் ஆண்டு இந்து திருமணச் (தமிழ்நாடு திருத்த) சட்டம்'' எனப் பெயர். 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் (மத்திய சட்டம் 25/1955) 7ஆவது பிரிவுக்கு பின்னர் ‘7-A’ என்ற புதிய பிரிவை சேர்த்துக்கொள்வது என்கிற தன்மையில் அமைந்துள்ளது.

இந்து திருமணச் சட்டம்

சாதி வழக்கம் உள்ளூர் வழக்கம் போன்றவற்றிற்கு இடமுண்டு. இவறறை பயன்படுத்தி இது நீண்டகாலமாக நடப்பதால் 1928முதல் Local custom என்ற அடிப்படையில் இதில் நுழைக்கப்பட்டுள்ளது.

ஆரியச் சட்டங்கள் மிகவும் வலிமையானவை. சதபதி என்கிற மணவலம் 7 தப்படி வைக்கவில்லை என்றால்கூட திருமணம் செல்லாது என்று உச்சநீதிமன்றமே பல தீர்ப்புகளை வழங்கி உள்ளது. ஆனால் நம்முடைய சட்டமோ பலவீனமானது இதையும் ஒன்றாக அதில் சேர்த்துக் கொள்ளுங்களேன் என கெஞ்சுவது போன்றது. நாம் பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்க்க வழி செய்யாமல் சந்து பொந்து ஆளை தேடி ஓடி ஒளிந்து கொள்ளுகிறேன்.

எந்த இந்துச் சட்டம் நம்மை காலம் காலமாக சூத்திரனாக வைத்துக்கொண்டு இருக்கிறதோ அதே இந்து சட்டத்தில், இந்து திருமணச் சட்டத்தின் உட்பிரிவில் இதைச் சேர்த்திருப்பது எப்படி சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளுக்கு வெற்றியாகும். ஏற்கெனவே இந்து திருமணச் சட்டத்தில் எட்டு வகை திருமண முறை உள்ளது. இது ஒன்பதாவது வகை இந்து திருமண முறையாகும். அதற்கு மேல் இதில் என்ன உள்ளது?

மணமேடையில் பார்ப்பான் சூத்திரத் தன்மை இருக்காதே ஒழிய சட்டப்படி இத்திருமணம் செய்து கொண்டாலும் சூத்திரப்பட்டம் ஒழியப் போவது இல்லை. குறைந்த பட்சம் இந்தச் சட்டத்தை சிறப்புத் திருமணச் சட்டப் பிரிவிலாவது சேர்ந்திருக்க வேண்டும் (Special Marriage ACt 1882) இல் இயற்றப்பட்டது. இரண்டு வேறு வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் இத் திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்துகொள்ள வழிவகை உண்டு. எந்த இந்துச் சட்டம் நம்மை சூத்திரனாக வைத்திக்கிறதோ அதே இந்துச் சட்டத்தில் சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி சட்டத்தைச் சேர்த்திருப்பதின்மூலம் அறுவை சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி பலி என்பது போன்றதுதான் அது.

பகுத்தறிவாளர்கள் இதுபற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டுகிறேன்.

Pin It