கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- இரா.சிவசந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
வன்னிப்பிரதேச குடித்தொகை வளர்ச்சியும் குடித்தொகைப் பண்புகளும். 1871 - 1981
இலங்கையின் வன்னிப்பிரதேசம் 7859.3 சதுரக் கிலோமீற்றர் (2924 சதுரமைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடும் தீவுகளும் தவிர்ந்த வடமாகாணப்பகுதியே வன்னிப் பிரதேசமென வழங்கப்படும். இதற்குத் தெற்கேயும் கிழக்கேயும் உள்ள சில பகுதிகள் வன்னிப் பிரதேசத்தினுள் அடங்குவனவெனக் கொள்ளப்படுகின்ற போதிலும் இக்கட்டுரை மேற்படி பிரதேசத்தையே வன்னிப் பிரதேசமெனக் கொள்கிறது. இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 11 வீதத்தையும் வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 87.2 வீதத்தையும் கொண்டுள்ளது. மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், என்பன இதனுள் அடங்கும். இவை நிர்வாக வசதிக்காக பதினைந்து உதவி அரசாங்கஅதிபர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மன்னாரில் நான்கும், முல்லைத்தீவில் நான்கும், வவுனியாவில் நான்கும், கிளிநொச்சியில் மூன்றுமாக அமைந்துள்ளது.
குடித்தொகை வளர்ச்சி 1871 முதல் 1981 வரை
இலங்கையின் முதலாவது ஒழுங்கமைக்கப்பட்ட நாடு முழுவதற்குமான குடித்தொகைக் கணிப்பு 1871-இல் இடம்பெற்றது. இதன்பின் 1881, 1891, 1901, 1911, 1921, 1931, 1946, 1953, 1963, 1971, 1981 ஆகிய ஆண்டுகளில் குடித்தொகைக் கணிப்புகள் இடம்பெற்றன. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறவேண்டிய இக்கணிப்புகள் 1941இல் தடைப்பட்டமைக்கு இரண்டாம் உலக மகாயுத்த நெருக்கடி காரணமாக அமைந்தது. எனினும் இக்கணிப்பீடு 1946இல் இடம்பெற்றது. 1951இல் இடம்பெறவேண்டிய கணிப்பு 1953இல் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1963இல் அடுத்த கணிப்பு இடம்பெற்றது. இதன்பின் இலங்கை தமது வழக்கமான கணிப்பாண்டிற்கு 1971இல் திரும்பியுள்ளது. 1991, 2001 இல் இடம்பெற வேண்டிய குடித்தொகைக் கணிப்பு வன்னிப் பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெறவில்லை. 2011 ஆம் ஆண்டு தேசியக் குடித்தொகைக் கணிப்பீட்டுடன் கணிப்பிடுவதற்கான ஆரம்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வன்னிப் பிரதேசக் குடித்தொகை 1981 முதல் மூன்று தசாப்தங்களாக யுத்த சூழ்நிலையால் உள்ளுர் குடிநகர்வுகள், வெளியூர் குடிநகர்வுகள், வெளிநாட்டு குடிப்பெயர்வுகள் என இடம்பெற்று வந்துள்ளன. இவை எவையும் கால ரீதியான முறையான கணிப்பீடுகளுக்குள் வரவில்லை. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற வன்னியின் இறுதி யுத்தத்தின் போது வன்னியின் மொத்தக் குடித்தொகையும் அகதிகளாக வெளியேறி வவுனியா முகாம்களில் முடக்கப்பட்ட நிலை தோன்றிற்று. உலக வரலாற்றில் குறுங்காலப்பகுதியில் குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து முழுமையாக குடித்தொகை வெளியேற்றப்பட்ட நிகழ்வு இங்கேயே இடம்பெற்றுள்ளதெனலாம். அம் மக்கள் இப்பொழுது தான் மீளவும் குடியேறி வருகின்றனர். மீள் குடியேற்றம் முற்றுப்பெறவில்லை. 2011 பெறப்படவுள்ள உத்தியோகபூர்வ குடித்தொகை கணிப்பீட்டின் ஊடாகவே இவைபற்றி முறையாக ஆராயமுடியும். அதுவரை 1981 ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட குடித்தொகைக் கணிப்பீடுகளையே உத்தியோக ரீதியாக பயன்படுத்தப்பட வேண்டுமாகையால் அவ் ஆண்டுவரையான தரவுகள் ஊடாகவே இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
வன்னிப் பிரதேசத்திற்குரிய குடித்தொகை விபரங்களை 1871 தொடக்கம் 1981 வரை இலங்கைக் குடித்தொகைக் கணிப்பு அறிக்கைகளிலிருந்து பெற முடிகின்றது. தரவுகளின்படி வன்னிப்பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகை 1891 இ 46,774 ஆக இருந்து 1971இல் 2,24,735 ஆக அதிகரித்துள்ளதைக் காணலாம். இது 300 வீத அதிகரிப்பாகும். இதே காலப்பகுதியில் இலங்கையின் மொத்தக்குடித்தொகை 323 வீதமாக வளர்ச்சி கண்டது. வன்னிப் பிரதேசத்தை பாகுபடுத்தி நோக்கும்போது 1891இல் யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியில் 6916ஆக இருந்த குடித்தொகை 1981 இல் 77200 ஆக அதிகரித்துள்ளது. இது 648 வீத அதிகரிப்பாகும். இதே காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தின் அதிகரிப்பு 570 வீதமாகவும் மன்னார் மாவட்டத்தின் அதிகரிப்பு 203 வீதமாகவும் அமைந்துள்ளது.
குடித்தொகை மாற்றங்கள்
வன்னிப் பிரதேசத்தின் குடித்தொகை சில காலங்களில் குறைவாகவும் இன்றும் சில காலங்களில் அதிகமாகவும் வளர்ச்சி கண்டது. பொதுவாக 1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் குடித்தொகை வளர்ச்சி குறைவாகவே இருந்தது. வன்னிப்பிரதேசத்தின் வருடச்சராசரி வளர்ச்சி வீதம் 1931 ஆம் ஆண்டுவரை 0.5 வீதத்திற்கு மேலாக அதிகரிக்கவில்லை. 1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் சில குடிமதிப்பீட்டாண்டிடைக் காலங்களில் வன்னிப் பிரதேசம் முழுவதும் குடித்தொகை இழப்பு ஏற்பட்டது. மன்னார் மாவட்டத்தில் இவ் இழப்பு அதிகளவு ஏற்பட்டுள்ளது. 1881 - 1901 இடையிலும் 1911 – 1921 இடையிலும் குடித்தொகை இழப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற குடித்தொகை இழப்புகளுக்கும், குடித்தொகையின் மெதுவான அதிகரிப்பிற்கும் மலேரியா, கலரா போன்ற தொற்று நோய்கள் இப்பகுதிகளில் அக்காலங்களில் பரவியமையே காரணமாகும். அக்காலங்களில் மருத்துவ, விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றக்குறைவினால் சிசு மரண வீதம், பிரசவத்தாய்மார் மரணவீதம் என்பன அதிகமாக காணப்பட்டன. மேலும் அன்றைய மக்கள், கல்வியறிவுக் குறைவின் காரணமாகச் சுகாதாரமற்ற வாழ்வு வாழ்ந்தனர். ஆரோக்கிய வாழ்வை வழங்கக்கூடிய சுகாதார நிறுவனங்களும் குறைவாகவே காணப்பட்டன. இக்காரணங்களால் 1946 இன் முன்பு இறப்புவீதம் அதிகமாக இருந்தது. எடுத்துக்காட்டாக 1906-1923 வரை தேசிய இறப்புவீதம் 1000 பேருக்கு 30 – 38 என்றவாறு உயர்ந்து காணப்பட்டது. 1946இல் இது 20 ஆகவும் 1947 இல்14 ஆகவும் வீழ்ச்சிகண்டது. 1946 இல் சிசு மரண வீதம் 1000 பிறப்புக்கு 141 ஆக இருந்தது. 1947 இல் 82 ஆக வீழ்ந்தது. பிரசவத்தாய்மார் மரணம் 1946 இல் 1000 பேருக்கு 16 ஆக இருந்தது. 1950 இல் 6 ஆக வீழ்ச்சி கண்டது. எனவே 1946 ஆம் ஆண்டு குடித்தொகை வளர்ச்சிப் போக்கில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
வன்னிப் பிரதேசக் குடித்தொகை 1946 – 1953 குடிமதிப்பிட்டாண்டிடைக் காலத்திலே 48.7 வீதமாக அதிகரித்துள்ளது. இது 7.0 வருடச் சராசரி வளர்ச்சி வீதமாகும். இவ்இடைக்காலத்திலே தேசிய வருடச்சராசரிக் குடித்தொகை வளர்ச்சி வீதம் 3.1 ஆக மாத்திரமே காணப்பட்டது. 1946 – 1953 இடைப்பட்ட கால குடித்தொகை வளர்ச்சியானது வன்னிப் பிரதேசம் முழுவதும் சடுதியானதோர் அதிகரிப்பபைக் காட்டுகின்றது. யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியில் 78.3 வீத அதிகரிப்பும், வவுனியா மாவட்டத்தில் 51 வீதமான வளர்ச்சியும் மன்னார் மாவட்டத்தில் 39 வீத வளர்ச்சியும் 1946 – 1953 குடிமதிப்பீட்டாண்டைக் காலத்தே ஏற்பட்டது. 1931 1946 குடிமதிப்பீட்டாண்டைக் கால வளர்ச்சி ஓரளவு அதிகமாக காணப்படுவதற்கு பத்தாண்டுக்கொருமுறை எடுக்கப்படவேண்டிய குடிமதிப்பு இக்காலத்தே பதினைந்து வருட இடைவெளியில் எடுக்கப்பட்டதே காரணமாகும்.
1946 இன் பின்னர் ஏற்பட்ட சடுதியான குடியதிகரிப்புக்கு பிறப்பு வீதம் நிலையாக இருக்க இறப்புவீதத்திலேற்பட்ட வீழ்ச்சியே காரணமாகும். இவ் இறப்பு வீத வீழ்ச்சிக்கு 1946 இல் மலேரியா நோய்த்தடைக்காக நாடு முழுமைக்கும் டி.டி.ரி மருந்து தெளிக்கும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதே உடனடிக் காரணமாகும். இதனைத் தவிர நாட்டின் சுகாதார சேவையில் ஏற்பட்ட துரித அபிவிருத்தியும் காரணமாக அமைந்தது. இக்காலத்திலே கிராமங்கள் தோறும் சுகாhதாரவசதிகள் அதிகரிக்கப்பட்டன. சுற்றுப்புறச் சூழ்நிலைகளைச் சுத்தமாக வைத்திருக்கச் செய்வதில் அரசு கவனம் செலுத்தியது. பாடசாலைப் பிள்ளைகளுக்கு இலவச பால், மதிய உணவு விநயோகம் என்பன குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க துணைபுரிந்தன.
பொதுவாக இலங்கை மக்களது ஆரோக்கியம் பேணப்பட்டதற்கு உணவு மானிய முறை இக்காலத்திலே அறிமுகப்படுத்தப்பட்டமையும் முக்கிய காரணமாகும். இம் முறையினால் மக்கள் அரிசியையும் ஏனைய உணவுப்பொருட்களையும் மலிவாகப் பெறமுடிந்தது. இதனால் மக்களது உணவில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கவே ஆயுட்காலம் அதிகரித்ததோடு ஆரோக்கியமான வாழ்வால் இறப்பு வீதத்திலும் அதிகளவு வீழ்ச்சி ஏற்பட்டது. இக் காலத்திலே இலவசக்கல்விமுறை அறிமுகத்தால் கல்வியறிவு வளர்ந்தமையும், தொற்றுநோய்த்தடை மருந்துகள் பழக்கத்திற்கு வந்தமையும் இறப்புவீத வீழ்ச்சிக்குரிய மேலும் சில காரணங்களாகும். வன்னிப் பிரதேசம் குடித்தொகை 1946 இன் பின்னர் வேகமாக அதிகரித்தமைக்கு இயற்கை அதிகரிப்பு மாத்திரம் காரணமன்று, பெருமளவு இடம்பெற்ற குடிநகர்வும் முக்கிய காரணமாக அமைகின்றது. இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து 1950 ஆம் 1960 ஆம் ஆண்டுகளில் வன்னிப் பிரதேசத்தில் பழைய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்து திட்டமிட்ட குடியேற்றங்கள் பெருமளவு ஏற்படுத்தப்பட்டன.
யாழ்ப்பாணக் குடாநாடு அதனைச் சேர்ந்த தீவுகள் என்பவற்றிலிருந்தும் ஏனைய அண்மைய பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து குடியேற்றத்திட்டங்களில் குடியேறினர். இதனாலும் குடித்தொகை அதிகரிப்பு ஏற்பட்டது. 1953-1963 குடிமதிப்பீட்டாண்டிடைக் காலத்திலே வன்னிப்பிரதேசக் குடித்தொகையின் வளர்ச்சி 72.4 வீதமாக அதிகரித்திமைக்கு இதுவே முக்கிய காரணமாகும். யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியிலும், வவுனியா மாவட்டத்திலும் அதிகளவு குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்பட்டமையால் இப்பகுதிகளின் குடிவளர்ச்சி 1953-1963 குடிமதிப்பீட்டாண்டிடைக் காலத்திலே முறையே 117.1 வீதமாகவும் 95.4 வீதமாகவும் காணப்படுகின்றது. 1963-1971 இடைப்பட்ட காலத்திலே குடியதிகரிப்பில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகின்றது. குடும்பக்கட்டுப்பாட்டுத்திட்டத்தால் இயற்கை அதிகரிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இக்காலத்திலே அதிகளவு குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படாமையும் இதற்கான காரணங்களெனலாம். எனினும் இவ் இடைக்காலத்திலே தேசிய குடித்தொகையின் வருடச் சராசரி வளர்ச்சி வீதம் 2.2 ஆகக் காணப்பட, வன்னிப் பிரதேசத்தின் குடித்தொகையின் வருடச்சராசரி வளர்ச்சி 4.7 ஆகக் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
குடியடர்த்தியும் பரம்பலும்
வன்னிப் பிரதேசத்தின் 1971 ஆம் ஆண்டுக்குரிய சராசரிக்குடியடர்த்தி சதுரமைலுக்கு 77 பேராகும். இலங்கையின் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியான 508 பேருடன் யாழ்ப்பாணக்குடாநாட்டின் குடியடர்த்தியான 1513 பேருடனும் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். வன்னிப்பிரதேசத்தின் பெருமளவு பரப்பில் காடுகள் பரந்திருப்பதே இதற்குரிய முக்கிய காரணமாகும்.
குடித்தொகைத் தரவுகளின்படி 1891 முதல் 1946 வரையான ஜம்பத்தைந்தாண்டு காலத்தில் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியில் 6 பேரே அதிகரித்திருந்தனர். 1946 முதல் 1971 வரையான இருபத்தைந்து ஆண்டு காலத்தில் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியில் 55 பேர் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு இயற்கையான குடியதிகரிப்பும், குடிநகர்வால் ஏற்பட்ட குடி அதிகரிப்பும் இவ் இடைக்காலத்தில் அதிகரித்தமையே காரணமாகும். 1946 இன் பின் வன்னிப் பிரதேசக்குடியடர்த்தி வேகமாக அதிகரித்துவரும் போக்கை காட்டுகின்றது. எனினும் 1971 இல் வன்னிப்பிரதேசத்தின் குடியடர்த்தி யாழ்ப்பாணக் குடாநாட்டுக் குடியடர்த்தியை விட இருபதுமடங்கு குறைவாகவும் உள்ளது. இது 1963 இல் முறையே இருபத்தைந்து மடங்கு குறைவாகவும் எட்டு மடங்கு குறைவாகவும் காணப்பட்டது.
வன்னிப்பிரதேசத்தின் புவியியல் ரீதியான குடிப்பரம்பல், பொதுவாக தொட்டம் தொட்டமாகக் குடிச்செறிவு அமைந்திருப்பதையே காட்டுகின்றது. இவை பெரும்பாலும் குளங்களை அண்டிய குடியிருப்புகளாகவே அமைந்துள்ளன. மன்னார் தீவு, கட்டுக்கரை குளத்தையண்டிய பகுதிகள், வவுனியா நகரம், கிளிநொச்சி குடியேற்றத்திட்டப்பகுதிகள், முள்ளியவளைப்பகுதி, முல்லைத்தீவு நகரம், என்பனவே குறிப்பிடத்தக்ககுடிச்செறிவு கொண்ட பகுதிகளாகும். குடிச்செறிவு குறைந்த பகுதிகள் குளங்களற்ற பகுதிகளாகவும், காடுகள் அடர்ந்த பகுதிகளாகவும், பெருமளவு பயன்படுத்தப்படாத நிலத்தையடக்கிய பகுதிகளாகவும் காணப்படுகின்றன.
1981ஆம் ஆண்டு குடித்தொகைப் பண்புகள்
1981 ஆம் ஆண்டுக் குடித்தொகை கணிப்பீட்டின்படி இங்கு ஆய்வுக்குட்பட்ட வன்னிப் பிரதேசக் குடித்தொகை 2,78,800 ஆகும். இது இலங்கையின் மொத்தக் குடித்தொகையின் 1.8 வீதமாகவும், வடமாகாணக்குடித்தொகையின் 25.7 வீதமாகவும் உள்ளது வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் யாழ்ப்பாணக்குடாநாடு 12.8 வீதத்தை உள்ளடக்கியுள்ள போதிலும் இங்கேயே அதிகளவு குடித்தொகை காணப்படுகின்றது. இதற்கு மாறாக வன்னிப் பிரதேசம் வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 87.2 வீதத்தை கொண்டிருந்த போதிலும் இங்கு குறைவான குடித்தொகையே உள்ளது. 1981 இல் வடமாகாணக்குடித்தொகையில் 74 வீதத்தினர் குடாநாட்டிலும் 26 வீதத்தினர் வன்னிப்பிரதேசத்திலும் காணப்பட்டனர். 1963 ஆம் ஆண்டுக் குடித்தொகை மதிப்பீட்டின் போது இத்தொகை முறையே 77 வீதமாகவும் 23 வீதமாகவும் காணப்பட்டது. 1901 முதல் 1953 வரை இடம்பெற்ற குடித்தொகை மதிப்புகளின் தரவுகளின்படிசராசரியாக 86 வீதத்தினர் குடாநாட்டிலும் 14 வீதத்தினர் வன்னிப் பிரதேசத்திலும் காணப்பட்டனர்.
கிராம, நகரக் குடித்தொகை
வன்னிப் பிரதேசத்தின் 1981 ஆம் ஆண்டுக்குரிய நகரக்குடித்தொகை 39427 ஆகவும், கிராமக் குடித்தொகை (பெருந்தோட்டம் உட்பட) 185308 ஆகவும் உள்ளது. இது முறையே 17.5 விதமும் 82.5 வீதமுமாகும். இலங்கையின் நகரக்குடித்தொகை வீதமான 22.4 உடன் ஒப்பிடுகையில் இது குறைவாகவே உள்ளது. இலங்கையில் மாநகரசபை, பட்டிகசபை, நகரசபை, என நகரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந் நிர்வாகப் பிரிவின் எவ்லைக்குள் வாழ்பவர்கள் நகரவாசிகளெனக் கணிக்கப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தில் 89 கிராமசேவகர் பிரிவுக்குட்படும் கிராமங்களும் நான்கு நகரங்களும் உள்ளன. இவற்றுள் வவுனியா நகரசபை அந்தஸ்தையும் ஏனைய மூன்றும் பட்டின சபை அந்தஸ்தையும் பெற்றுள்ளன. நான்கு நகரங்களுள் மன்னார், முல்லைத்தீவு என்பன கரையோரமாகவும் வவுனியா, கிளிநொச்சி என்பன நடுவேயும் அமைந்துள்ளன. வன்னிப் பிரதேசத்தின் மொத்த நகரக் குடித்தொகையில் 52 வீதத்தை வவுனியா மாவட்டம் அடக்கியுள்ளது. வவுனியா பட்டினம் தனியாக 40 வீத நகரக்குடித்தொகையில் மன்னார் மாவட்டம் 28 வீதத்தையும் யாழ்ப்பாண மாவட்டம் வன்னிப்பகுதி 20 வீதத்தையும் அடக்கியுள்ளது.
குடித்தொகை கூட்டு (1981)
குடித்தொகைக் கட்டினுள் அடங்கும் வயதமைப்பு, ஆண் பெண் விகிதம், இனப்பிரிவு, மதப்பிரிவு, வேலைப்பகுப்பு என்பன பற்றிய ஆய்வுகள் சமூக, பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன.
வயதமைப்பு
வன்னிப் பிரதேசக் குடித்தொகையில் வயதமைப்பை நோக்கும் போது இளம்வயதுப் பிரிவினர் அதிகமாகக் காணப்படுவதை முக்கிய அம்சமாகக் கொள்ளலாம். 1981 ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பின்படி இங்கு 42.5 வீதத்தினர் 14 வயதிற்குட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். 52.7 வீதத்தினர் தொழில் புரியக்கூடிய 15 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டோராவர். மகப்பேற்று வளம்மிக்க 15 – 44 வயதுப் பிரிவினர் 43 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். 60 வயதிற்கு மேற்பட்டோர் 4.8 வீதத்தினராக உள்ளனர். 15 வயதிற்கு குறைந்தவர்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் சார்ந்திருப்போர் தொகையில் அடங்குவர். தொழில்புரியும் ஒவ்வொரு 100 பேரில் இங்கு 90 பேர் தங்கி வாழ்கின்றார்கள். நாடு முழுவதற்குமான தரவின்படி 100 பேரில் தங்கிவாழ்வோர் 84 பேராகும். தங்கிவாழும் இப்பிரிவினர் பெருமளவு செலவினங்களை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர். இலங்கையிலும் ஏனைய வளர்முக நாடுகளிலும் குடித்தொகையில் 40-50 வீதத்தினர் 15 வயதிற்குக் குறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ் வயதுப் பிரிவினர் 20 33 வீதத்தினராகவே உள்ளனர்.
இலங்கையிலன் குடித்தொகையில் இளம்வயதுப் பிரிவினர் அதிகம் காணப்படுவதினால் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, கல்வி, சுகாதார வசதிகள் என்பவற்றிற்காக அரசுக்குப் பெருமளவு செலவினம் ஏற்படுகின்றது. இது இலங்கை எதிர்நோக்கும் பாரிய பொருளாதார பிரச்சனைகளுக்கு முக்கியத்துவமானதொரு காரணமாகவும் அமைகிறது. 1981 ஆம் ஆண்டு இலங்கையின் குடித்தொகையில் 39.3 வீதத்தினர் 15 வயதிற்குட்பட்டவர்களாக காணப்பட்டனர். பொதுவாக வன்னிப் பிரதேசக் குடித்தொகையிலும் இவ் வீதம் தேசிய வீதத்திலும் சற்று அதிகமாக காணப்படுகின்றது.
ஆண், பெண் விகிதம்
குடித்தொகையில் ஆண்,பெண் பாகுபாடு பற்றிய ஆய்வும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டமிடலுக்கு இவ்விபரங்கள் அவசியம் வேண்டப்படுகின்றன. ஆண், பெண் வயதமைப்பும், விகிதாசாரமும் குடித்தொகை வளர்ச்சிக்கான காரணத்தைத் தேடுவோர்க்கு முக்கியமானதாகும்.
வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில்(1981) 1,23,594 ஆண்களும் 1,01,141 பெண்களும் காணப்படுகின்றனர். இதிலிருந்து 22,453 ஆண்கள் பெண்களைவிடக் கூடதலாக இங்கு உள்ளதை அவதானிக்கலாம். ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 122 ஆண்கள் என்ற விகிதத்தில் பால் விகிதம் இங்கு அமைந்துள்ளது. இலங்கைக்குரிய அவ் விகிதம் 100 பெண்களுக்கு 106 ஆண்கள் என்றவாறு அமைகின்றது. எனவே தேசிய விகிதத்திலும் இங்கு அதிகமாக காணப்படுகின்றது.
குடித்தொகைத் தரவின்படி யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியிலேயே ஆண், பெண் விகிதம் ஆண் சார்பாக அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தை வவுனியா மாவட்டம் வகிக்கின்றது. இப்பகுதிகளில் அண்மைக்காலங்களில் அதிகளவு விவசாயக் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டமையால் அதிகளவு ஆண்கள் குடிநகர்ந்து வந்தமையே இதற்கு முக்கிய காரணமெனலாம். காடுகளால் சூழப்பட்ட குடியேற்றத்திட்டப்பகுதிகளில் பாதுகாப்பு உறுதியிருப்பதாலும், கல்வி வசதி, சுகாதாரவசதி, போக்குவரத்துவசதி என்பன குறைவாக இருப்பதாலும் குடும்பத்தலைவன் தனது மனைவி பிள்ளைகளை பிறந்த ஊரில் விட்டு வருவதையே விரும்புகின்றான். இதுவே குடியேற்றத்திட்டப் பகுதிகளில் ஆண்கள் குடித்தெகை அதிகமாக இருப்பதற்குரிய முக்கிய காரணமாகும்.
குடியேற்றத்திட்டத்திற்கு மாத்திரமன்றி வர்த்தகம், போக்குவரத்துப் போன்ற தொழிற்றுறைக்காகவும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளுக்காகவும் ஆண்கள் குடிநகர்வு இங்கு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதனைச் சேர்ந்த தீவுப்பகுதிகளிலுமிருந்தே அதிகளவு குடிநகர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1981 ஆம் ஆண்டுக் குடித்தொகை மதிப்பு அறிக்கை தரும் பிறந்த இடம் பற்றிய தரவுகளிலிருந்து வவுனியா மாவட்ட குடித்தொகையில் 58 வீதத்தினரும் மன்னார் மாவட்டக் குடித்தெகையில் 71 வீதத்தினரும் அம் மாவட்டங்களுக்கு வெளியே பிறந்தவர்களாகவே உள்ளனர். எனவே வன்னிப் பிரதேசக் குடித்தொகை வளர்ச்சியில் குடிநகர்வு முக்கிய இடத்தை வகிக்கின்றது. குடித்தொகை ஆண் சார்பாக இருப்பதற்கு குடிநகர்வு மாத்திரம் காரணமன்று. பிறப்பில் ஆண்களின் பிறப்பு அதிகமாக இருப்பதும், இறப்பு விகிதத்தில் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பதும் மேலதிக காரணங்களெனத் தேசிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இனம்
இலங்கை பல இன மக்கள் வாழும் நாடென்பதை வன்னிப்பிரதேசத்திலும் பிரதிபலிக்கின்றது. எனினும் இங்கு சில இனத்தவர்களே செறிந்து வாழ்கின்றனர். இலங்கையில் வாழ்கின்ற ஒவ்வொரு இனத்திற்கும் வித்தியாசமான வரலாற்று, சமூக மதப் பின்னனிகள் உண்டு. 1911 ஆம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பீட்டிலிருந்தே தற்பொழுது குறிக்கப்படும் இனப்பிரிவுகளின் அடிப்படையில் தரவுகள் பெறப்பட்டு வருகின்றன. மொழி, மத புவியியற் பின்னணிகள் இனப்பாகுபாட்டில் முக்கியத்துவம் வகிக்கின்றது.
வன்னிப் பிரதேசம் அதிகளவில் தமிழர் வாழும் பகுதியாகும். தமிழர்களுக்கு வன்னி நிலத்துடன் ஒன்றிய நீண்ட வரலாற்றுப் பின்னணி உள்ளதால் இப்பிரதேசம் தமிழரது பாரம்பரியத் தாயகத்தின் ஒரு பகுதியெனக் கொள்ளப்படுபகின்றது. வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் 62.2 வீதமானவர்கள் இலங்கைத்தமிழர்களாவர். இவ் வீதம் யாழ்ப்பாண மாவட்ட வன்னிப் பகுதியில் 79.8 ஆகவும் வவுனியா மாவட்டத்தில் 51 ஆகவும் உள்ளது. வன்னிப் பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் இந்தியத் தமிழர் 16.1 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். மலையகப்பெருந்தோட்டங்களுக்குக் கூலித்தொழிலாளர்களாகப் பிரித்தானியரால் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களின் வழித்தோன்றல்களே இவர்களாகும்.
இன்று பெருந்தோட்டத்தில் நிலவும் வேலையில்லாப் பிரச்சனை இனப்பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் வன்னிப்பிரதேசத்திற்குக் குடிநகர்ந்து வந்து விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இவர்கள் வாழ்கின்றனர். இண்மைக்காலங்களில் இவ்வாறு குடிநகர்ந்து வருவோர் தொகை அதிகரித்துள்ளது. இலங்கை, இந்தியச் சோனகர் வன்னிப் பிரதேச மொத்தக்குடித்தொகையில் 12.5 வீதத்தினராவர். இவர்கள் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரிலும், அண்மைய பல கிராமங்களிலும் செறிந்து வாழ்கின்றனர். மன்னார் மாவட்ட மொத்தக் குடித்தொகையில் இவர்களின் பங்கு 26.8 வீதமாகும். மன்னார் வர்த்தகத்துறைமுகமாக விளங்கிய காரணத்தால் இவர்களது குடியிருப்புகள் இங்கு அதிகம் ஏற்பட்டன.
வன்னிப் பிரதேச இனம், வன்னிப்பிரதேசக் குடித்தொகையில் தமிழ் பேசும் மக்கள் 90.9 வீதத்தினராவர். இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர், இலங்கைச்சோனகர், இந்தியச்சோனகர், ஆகியோர் தமிழ் மொழி பேசும் மக்களாகும்.வவுனியா தெற்கு சிங்கள உ.அ.அ பிரிவைத்தவிர ஏனைய பகுதிகளில் தமிழ்மொழி பேசும் மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தில் சிங்கள மொழி பேசும் மக்கள் மொத்தக் குடித்தொகையில் 9 வீதத்தினராகும். வவுனியா மாவட்டத்தில் மொத்தக்குடித்தொகையில் இவர்களது பங்கு 16.3 வீதமாகவுள்ளது. மன்னார் மாவட்டத்தின் குடித்தொகையில் 4.6 வீதத்தினர் சிங்கள மக்களாவர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம், மடுறோட் ஆகிய பகுதிகளில் இவர்களது பரம்பல் காணப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தில் மாமடுவ, மடுக்கந்தை. ஈரப்பெரியகுளம், உலுக்குளம், ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் சிங்கள மக்கள் செறிவாக வாழும் பகுதிகளாகும். 1963 ஆம் ஆண்டுக் குடித்தொகை கணிப்பீட்டை ஒப்பிட்டு நோக்கும் போது வன்னிப் பிரதேசத்தில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தின் மொத்தக் குடித்தொகையில் சிங்களமக்களின் வீதம் அதிகரித்துள்ளதைக் காணலாம்.
மதம்
வன்னிப் பிரதேசம் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பழரதேசமாக இருப்பதால் தமிழரது முக்கிய மதமான இந்துமதத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் இந்துக்கள் 58.2 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். யாழ்ப்பாண மாவட்ட வன்னிப் பகுதியில் இந்துக்கள் 87.4 வீதத்தினராகவும், வவுனியா மாவட்டத்தில் 65.4 வீதத்தினராகவும் உள்ளனர். தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளுள் மன்னார் மாவட்டத்திலேயே இந்துமதத்தினர் குறைவாகக் (30 வீதம்) காணப்படுகின்றனர். மன்னார் சர்வதேச வர்த்தகத்துறையாக விளங்கியதும், போர்த்துக்கேயரது கெல்வாக்கின்கீழ் இது நீண்ட காலமாக இருந்து வந்ததும் இங்கு முஸ்லீம், றோமன்கத்தோலிக்க மதங்கள் அதிகளவு பரவ ஏதுவாயிற்று.
மன்னார் மாவட்டத்தின் மொத்தக்குடித்தொகையில் 37.8 வீதத்தினர் றோமன்கத்தோலிக்கர்களாகக் காணப்படுவதற்கு போர்த்துக்கேயரது செல்வாக்கே காரணமாகும். இவர்கள் மன்னார் தீவுப்பகுதி, முசலிப்பகுதிகளில் பெரும்பான்மையினராக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தில் மொத்தக் குடித்தொகையில் றோமன்கத்தோலிக்கரும், ஏனைய கிறீஸ்தவர்களும் 20.6 வீதத்தினராக உள்ளனர். வவுனியாவின் மொத்தக் குடித்தொகையில் 12 வீதத்தினராகவுள்ள றோமன்கத்தோலிக்கர்கள் மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாக மீன்பிடிக் குடியிருப்புகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் பெரும்பான்மையினராக உள்ளனர்.
இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் இந்திய, இலங்கைச்சோனகர்களும் மலாயர்களும் முஸ்லீம்களென அழைக்கப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் இவர்கள் 13.2 வீதத்தினராவர். முஸ்லீம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் ஒன்றாக மன்னார் மாவட்டமும் கொள்ளப்படுகின்றது. ஒரு மதப்பிரிவினர் தனிப்பெரும்பான்மையினராக இல்லாதமை முக்கி பண்பாகும்.
சிங்களம் பேசும் மக்களிற் பெரும்பான்மையானோர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாவர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் பௌத்த மதத்தைச் சேர்ந்தோர் 7.9 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தில் வவுனியா மாவட்டமே அதிகளவு (14.8 வீதம்)பௌத்தர்களைக் கொண்டுள்ளது. வவுனியா தெற்கு சிங்கள உ.அ.அ பிரிவே பௌத்த மதத்தினரை அதிகளவிற் கொண்ட பகுதியாகும். வன்னிப்பிரதேசத்தின் நகரப்பகுதிகளில் இவர்கள் ஓரளவு செறிந்துள்ளனர். ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே பரந்து காணப்படுகின்றனர்.
வேலைவாய்ப்பு
வன்னிப் பிரதேச மொத்தக் குடித்தொகையில் 32.1 விதத்தினரே தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தொழில்வாய்ப்பு பெற்றவர்களில் ஆண்களின் பங்கு 93.3 வீதமாகவும் பெண்களின் பங்கு 6.7 வீதமாகவும் காணப்படுகின்றது. தொழில் வாய்ப்புப் பெற்றவர்களில் 65 வீதத்தினர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டவர்களாகவும் 35 வீதத்தினர் விவசாயமல்லாத பிற துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இப்பிரதேசத்தின் முக்கிய தொழிற்றுறை விவசாயமாக இருந்த பொழுதிலும் மொத்தக்குடித்தொகையில் 20.2 வீதத்தினரே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டிருப்போரில் ஆண்களின் பங்கு 94 வீதமாக உள்ளது. ஆண் உழைப்பாளர்களில் தங்கிவாழ்வோர் தொகை அதிகமாக இருப்பதை இவை உணர்த்துகின்றன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், ஆகியோர் உழைப்பவர்களில் தங்கிவாழ்வோராகக் காணப்படுகின்றனர். இப்பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் 45 வீதத்தினராகக் காணப்படும் பெண்கள் வீட்டு வேலைகளுடனும் பகுதி நேர வேலைகளுடனும் திருப்தியடைவதால் குறைந்தளவே தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மொத்தப் பெண் குடித்தொகையில் 4.6 வீதத்தினரே தொழில்வாய்ப்பை பெற்றவர்களாவர். இதில் 57.3 வீதத்தினர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருக்க 42.7 வீதமானோர் விவசாயமல்லாத தொழில்களில் அமர்ந்துள்ளனர்.
முடிவுரை
வன்னிப் பிரதேசக் குடித்தொகைக் கணிப்புகள் உத்தியோக பூர்வமாக 1981 இன் பின்னர் இடம்பெறவில்லை. வன்னியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய யுத்த சூழ்நிலைகளே இதற்கான காரணமாகும். இலங்கை அரசு இப் பிரதேசத்தில் தனது நிர்வாகக் கட்டுப்பாடுகளை இழந்திருந்தது. மக்களிற்கான வாழ்வாதார விடயங்களைக் கவனிப்பதற்கான சில கணிப்பீடுகள் இடம்பெற்றன. எடுத்துக்காட்டாக உணவு விநியோகம், மருத்துவ சேவை போன்றவற்றை மேற்கொள்ள சில கணிப்பீடுகளை செய்து வந்துள்ளது. தேசிய மட்டத்தில் 1991, 2001 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட குடித்தொகைக் கணிப்பீடு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவில்லை. 1981 ஆம் ஆண்டு குடித்தொகைக் கணிப்புகளில் இருந்தே வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான உத்தேச மதிப்பீடுகள் பெறப்பட்டு நிர்வாகத் தேவைக்காககப் பயன்படுத்தப்பட்டு வந்தன.
வன்னி யுத்தத்தின் இறுதிக் காலகட்டமான 2009 மே மாதம் வன்னி மக்கள் யாவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதிக்கு ஒதுக்கப்பட்டனர். 2009 மே 18 இன் பின் இவர்கள் அனைவரும் வவுனியா இடைத்தங்கல் முகாம்களின் இடம்பெயர்ந்த அகதிகளாக தங்கவைக்கப்பட்டனர். அகதி முகாம்களில் எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி அங்கு 3,17,000 மக்கள் பதிவு செய்யப்பட்டனர்.
வன்னியின் உக்கிர யுத்தம் நடந்த காலமாகிய 2009 மார்ச், ஏப்ரல் மாதங்களில் இங்கு 4,20,000 மக்கள் காணப்பட்டதாக கிளிநொச்சி முல்லைத்தீவு அரசஅதிபர்களும், ஜ.நா நிறுவனத்தின் அறிக்கைகளும் குறிப்பிட்டதோடு இக் கணிப்பீடுகளையே மக்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுக்கும் பயன்படுத்தினர்.
வன்னி யுத்தம் முடிவடைந்து இரு வருடங்களாகியும் மீள் குடியேற்றம் முறையாக இடம்பெறவில்லை. பெருந்தொகையான மக்களது வீடுகள், பயன்தரு மரங்கள் போன்ற வாழ்வாதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில் மீள் குடியேற்றம் மெதுவாகவே இடம்பெற்று வருகின்றது. மீள் குடியேற்றம் முறையாக இடம்பெற்று முற்றுப் பெற்ற பின்னரே 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய குடித்தொகைக் கணிப்பீடுகள் இடம்பெற வேண்டும். இக் கணிப்பீடுகளில் இருந்தே வன்னிக் குடித்தொகையில் 1981 ஆம் ஆண்டின் பின் 30 வருட காலம் நிகழ்ந்த பாரிய மாற்றங்கள், குறிப்பாக குடிமனை அழிவுகள், குடிநகர்வுகள் போன்ற அம்சங்கள் தெரியவரும்.
- விவரங்கள்
- பேரா.வி.முருகன்
- பிரிவு: புவி அறிவியல்
இன்று தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளி மாணவர்களின் கனவும் ஒன்றுதான். எப்படியாயினும் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பட்டம் ஒன்று வாங்குவதுதான். எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், கணினி, சிவில், மெக்கானிகல் என்று பலவிதமான பொறியியல் பாடங்கள் உள்ளன. இப்போது உலக அளவில் ஒரு புதிய பொறியியல் உருவாகிக் கொண்டுள்ளது. இதற்குப் பெயர் புவிப்பொறியியல். ஆங்கிலத்தில் ஜியோ என்ஜினீயரிங் என்று சொல்கிறார்கள். இது இன்னமும் பாடத்திட்டமாக வரும் அளவிற்கு வளர்ச்சி பெறவில்லை.
புவிப்பொறியியல் என்றால் என்ன? பொறியியல் என்றாலே இயற்கையிலேயே பல மாற்றங்களை உருவாக்கி நமக்கு சாதகமாக இயற்கையைப் பயன்படுத்தும் திறன் என்றுதான் பொருள். உதாரணமாக, ஆற்றில் ஓடிக்கொண்டிருக்கும் நீரை ஓடவிடாமல் தடுத்து தேக்கி வைப்பது, அப்படி தேக்கிய நீரைக் கொண்டு நமக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வது. அப்படிப் பார்த்தால், புவிப்பொறியியலில் என்ன செய்யப் போகிறார்கள்? இயற்கையின் எந்தப் பகுதியை எப்படி மாற்றப் போகிறார்கள்? அதனால் நாம் அடையப்போகும் பயன் என்ன? புவிப்பொறியியல் உலகின் வானிலையே மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு மாற்றியமைத்து, நமது தேவைக்கேற்ப புதிய வானிலையை உருவாக்குவது. இது எதற்காக? மனிதர்களால் கட்டுப்பாடற்ற முறையில் தொடர்ந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவால் பூமியின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே போகிறது. அவ்வாறு பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பது மனித குலம் உட்பட அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ முடியாத ஒரு சூழ்நிலையை அடிப்படையாக உருவாக்கிக் கொண்டுள்ளது.
பூமியின் இந்த வெப்பமடைதலை எப்படியேனும் குறைக்க வேண்டும். அதுவும் குறிப்பாக, கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கு பதிலாக வெப்பநிலை உயர்வை மட்டும் எப்படி குறைப்பது என்பதுதான் நோக்கம், சூரியனில் இருந்து பூமிக்கு வந்தடையும் ஒளியை எப்படி குறைப்பது அல்லது மனிதர்களால் கட்டுப்பாடில்லாமல் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடை வளிமண்டலத்தில் தங்கவிடாமல் எப்படி எடுப்பது. இந்த வழிக்கான முயற்சிதான் புவிப்பொறியியல் என்பது,தொழிற்புரட்சி ஏற்பட்ட காலங்களில் இருந்து நமது பூமியில் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இது இயற்கையாக நடைபெறும் நிகழ்வு அல்ல. இதற்கு முக்கிய காரணம் வரம்பு முறையின்றி அதிகளவில் பெட்ரோலிய எரிபொருள்களை மனிதர்கள் எரிப்பதுதான் தொழிற்சாலைகள் இயங்க எரிபொருள்கள் தேவை, வாகனங்களுக்கும் பெட்ரோலிய எரிபொருட்கள் தேவை. மின்சாரம் உற்பத்தி செய்ய அவை தேவை. இப்படி நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். சொல்லப்போனால் ஒரு நாட்டின் வளர்ச்சியே பெட்ரோலியப் பொருள்களை நம்பித்தான் உள்ளது. பெட்ரோலிய எரி பொருள்களை எரிக்கும் போது, கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. இப்படி வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடு தான் இன்று நமக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்களால் வெளியிடப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகளின் பெரும் பகுதி பூமியின் வளி மண்டலத்திலேயே தங்கிவிட்டன. தொழிற்புரட்சி தொடங்கிய காலத்திற்கு முன் வளிமண்டலத்தில் இருந்த கார்பனின் அளவு 180 பி.பி.எம், (இந்த எண் என்னவென்று புரியாவிட்டால் பரவாயில்லை, பிபிஎம் என்பது PRTS PAR MILLION என்பது. அதாவது வளிமண்டலத்தில் உள்ள அனைத்து வாயுக்களையும் எடுத்துக் கொண்டு அதை 10 லட்சம்பங்குகளாய் பிரித்தால் அதில் 180 பங்கு கார்பன் என்பது இந்த எண்ணில் பொருள், இன்று இந்த வாயுவின் அளவு 380 பிபிஎம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இன்னமும் தொடர்ந்து அதிகரிக்கும் 300 பிபிஎம் க்கு மேலிருந்தால் பூமியின் இன்றிடுக்கு சுற்றுபுறச் சூழல்கள் பெரிதும் மாறிவிடும் நிலை ஏற்படும். கடந்த 65,000 ஆண்டுகளாக பூமியின் வளிமண்டலத்தில் இந்த அளவிற்கு கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகளின் அளவு எப்போதும் இருந்ததில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. பூமியின் வெப்பநிலை இதனால் அதிகரித்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து பூமியின் வெப்பநிலை ஏறிக்கொண்டே போனால் பூமியின் உயிரினங்கள் வாழ்வதே கேள்விக்குறியாகிவிடும்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுவதை குறைப்பதுதான் தீர்வு. ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. தீர்வு என்னவென்று தெரிந்தபிறகு அதைச் செய்வதில் என்னச் சிக்கல்? இரண்டு வழிகளில் கார்பன் வாயு வெளியிடப்படுவதைக் குறைக்கலாம். முதல்வழி தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இரண்டாவது வழி புதிய தொழில் நுட்பத்தை உபயோகித்து வெளியிடப்படும் கார்பனின் அளவை குறைக்க வேண்டும்.
முதல் வழியைப் பின்பற்றினால் ஒரு நாட்டின் வளர்ச்சியே குறைந்து விடும். இரண்டாவது வழி அதிகமாக செலவாகும் வழி யார் இந்த செலவை ஏற்றுக்கொள்வது? தொழில்வளர்ச்சியின் பயன்களை நுகர்வோர் என்ற முறையில் பொதுமக்கள் மீது ஏற்றிவிட்டால் பொதுமக்களின் கோபத்தையும், அதிருப்தியையும் ஒரு அரசு சம்பாதிக்க நேரிடும். மாறாக தொழிற்சாலைகளின் உரிமையாளர்களான பன்னாட்டு முதலாளிகள் இந்த செலவை ஏற்றுக்கொண்டால் அவர்களின் லாபம் பெருமளவு குறைந்துவிடும். இந்த இரண்டிற்கும் வளர்ந்த நாடுகள் ஓப்புக் கொள்ளவில்லை.
கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை அதிகமாக வெளியிடும் நாடுகள் வளர்ந்த நாடுகள்தான். குறிப்பாக உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் உள்ள அமெரிக்கா தான் சுமார் உலகின் 25 சதவீத கார்பன் வாயுவை வெளியிடுகிறது. சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் பலமுறை கூடியும் இதற்கு ஒரு நல்ல செயல்திட்டத்தை எட்ட முடியவில்லை. காரணம் பொருளாதாரச் சிக்கல்தான்.
தொழிற்புரட்சி தொடங்கிய காலத்திற்கு முன்பிறந்த அளவிற்கு கார்பன் டை ஆக்ஸைடு குறைய வேண்டுமானால் வருடத்திற்கு 1 டிரில்லியன் டாலர்கள் (சுமார் 50 லட்சம் கோடி ரூபாய்கள்) செலவழிக்க வேண்டும். இந்த அளவிற்கு செலவு செய்யாமல் மிகக் குறைந்த அளவு செலவிலேயே பூமிவெப்பமடைவதை நிறுத்த முடியுமா? அப்படி ஒரு வழி இருப்பதாக வளர்ந்த நாடுகளில் சிலர் நம்புகின்றனர். அந்த வழிதான் இந்த புவிப்பொறியியல் அல்லது ஜியோ என்ஜினீயரிங்.
கார்பன் டை ஆக்ஸைடு கட்டுப்பாடற்ற முறையில் வெளியிடப்படுவதால் பூமியின் வெப்பநிலை உயர்கிறது. பூமியின் வெப்பநிலை உயரக்கூடாது அவ்வளவு தானே, கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுவதை கட்டுப்படுத்துவது என்ற முயற்சியை விட்டு சமாளிப்பது என்று பாருங்கள். அதற்கு என்ன வழி உள்ளது? இரண்டு வழிகள் நம்பப்படுகின்றன. ஒன்று பூமியை வந்தடையும் சூரிய ஒளியைக் குறைப்பது, மற்றொரு வழி வெளியிடப்பட்ட கார்பனை வளிமண்டலத்தில் தங்கவிடாமல் எடுத்து விடுவது. இந்த வழிகளை செய்துவிட்டால், கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளிப்படும் அளவை நாம் கட்டுப்படுத்த தேவையில்லை.
இதற்கு பல வழிகள் சொல்லப்படுகின்றன. சூரியனில் இருந்து பூமியை வந்தடையும் ஒளியில் 2 சதவீதம் குறைத்து விட்டால் போதும், பூமியின் வெப்பநிலையை பழைய நிலைக்கே கொண்டு வந்துவிடலாம். இதற்காக பிரம்மாண்டமான மேகங்களை உருவாக்கலாம். 300 கப்பல்களைக் கொண்டு தொடர்ந்து மாபெரும் புரொப்பெல்லர்களின் உதவியுடன் கடல் நிலத் துகள்களை வானில் தெளிப்பது. அவை வளிமண்டலத்திற்கு சென்று பெரும்மேகங்களாக மாறிவிடும், பூமிக்கு ஒரு மாபெரும் குடையாக மாறிவிடும். மற்றொரு வழியில் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள துப்பாக்கிகள் (ஹோஸ் பைப்புகள்) மிக உயர்ந்த இடங்களில் நிறுவுவது. ஒவ்வொரு துப்பாக்கி மூலமும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 8 லட்சம் சிறிய தகடுகளை வானில் செலுத்துவது. இதுசுமார் 10 வருடங்களுக்கு தினமும் 24 மணிநேரம் செய்வது. இந்தத் தகடுகள் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் மிதக்கும் இவையும் குடைபோல் சூரிய ஒளியை தடுத்து நிறுத்திவிடும். மற்றொரு வழி வானில் பெரும் அளவில் விமானங்களின் துணைகொண்டு கந்தகத்துகள்களை தூவுவது. இந்த கந்தகத் துகள்கள், பூமியை வந்தடையும் ஒளியை விண்ணுக்கே திருப்பி அனுப்பிவிடும். மாலை நேரத்தில் வானம் ரத்த சிவப்பாக இருக்கும். பகல் வேலையும் நீலநிற வானத்திற்குப் பதிலாக நல்ல வெண்மையான மேகமாக இருக்கும். இவையெல்லாம் சூரிய ஒளியை தடுப்பதற்கான வழிகள்.
மனிதர்களால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் தங்கவிடாமல் எடுப்பது எப்படி? இதற்கும் பல வழிகள் கூறப்படுகின்றன. கடலில் பிளாங்டன் என்ற ஒருவகை உயிரினம் உள்ளது. அவை கார்பன் டை ஆக்ஸைடை அதிகளவில் உண்ணக்கூடியவை. அவை வளர்வதற்கு இரும்புச்சக்தி தேவை. எனவே கடலில் பெரிய அளவில் இரும்புத் துகள்களைத் தூவுவது.
இந்த வழிகள் நடைமுறையில் சாத்தியமா? இப்படி செய்வது சரியா? பெரும்பாலான அறிவியல் வல்லுநர்கள் இந்த முறைகளை ஏற்றுக் கொள்வதில்லை. வானிலை, தட்ப வெப்பநிலை இவைபற்றிய நிறைய விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. இந்த நிலையில் புவிப்பொறியியலில் செயல்படும் முறைகளை அமல்படுத்தினால் அவை என்ன விளைவுகள் உண்டாக்கும் என்று தெரியாது. ஆகவே இந்த முயற்சிகளை கைவிட வேண்டும், என்றுதான் பெரும்பாலான அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்ற வழிகளை சிந்திப்பதற்குக் காரணம் என்ன? ஒன்று மிகக் குறைந்த செலவு. மற்றொன்று இந்த வழிகளை செயல்படுத்த அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பும் தேவையில்லை. ஒவ்வொரு நாடும் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப செயல்பட முடியும். அரசே தேவையில்லை, தனியார் நிறுவனங்களே இச்செயல்களை செய்ய முடியும் என்று நம்புகின்றனர். இதில்தான் வேறொரு ஆபத்து உள்ளது.
ஒரு காலக்கட்டம் வரை, புவி வெப்பமடைதலை தவிர்ப்பதற்கு கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியிடுவதைக் குறைப்பதுதான், ஒரே வழி என்று கருதப்பட்டது. அதற்கு மாறாக சூரிய ஒளியைக் கட்டுப்படுத்துவதோ அல்லது வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடை வளிமண்டலத்தில் இருந்து எடுப்பது என்ற சிந்தனைகளே தவறு என்று கருதப்பட்டது. வானிலையை தங்கள் விருப்பத்திற்கு மாற்றலாம் என்ற கருத்தே அருவருப்பாகப் பார்க்கப்பட்டது. ஆனால் சமீப காலத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிலும், ஐரோப்பியாலும் அறிவியல் வல்லுனர்களின் மதிப்பை பெருமளவில் பெற்றுள்ள அறிவியல் அமைப்புகளே, சற்று இந்தக் கருத்துகளுக்கு ஆதரவாக வருகின்றன. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி செய்யும் அரசு நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கின்றன. பல தனியார் நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியில் ஆதரவும் காட்டுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், பன்னாட்டு முதலாளிகளின் சார்பாக புவிவெப்பமடைதல் என்பதே உண்மையில்லை, என்று வாதிட்டவர்கள்.
உதாரணமாக அமெரிக்க எண்டர்பிரைசஸ் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் ஒன்றுள்ளது. புவிவெப்பமடைதலைப் பற்றியும், அதனால் ஏற்படும் வானிலை மாற்றங்களைப் பற்றியும் சர்வதேச அமைப்பு வெளியிடும் அறிக்கையை எதிர்த்து எழுதப்படும் ஒவ்வொரு ஆராய்ச்சிக், கட்டுரைக்கும் 10,000 டாலர்கள் தரப்படும் என்று கூறிய நிறுவனம் இது. இந்த நிறுவனம் புவிப்பொறியியலில் பெரும் ஆர்வம் காட்டுகிறது. ஆக இந்தப் புவி பொறியியலுக்கு பெருகிவரும் ஆதரவு வேறு கோணத்தில் இருந்து வருகிறது. புவிப் பொறியியல் இருந்து வரும் அனைத்து தீர்வுகளும் ஒரு தனியார் நிறுவனமே செய்யக்கூடியவை. நிச்சயமாக சில நாடுகள் மட்டுமே செய்யக்கூடியவை அதாவது, உலக வானிலையைக் கட்டுப்படுத்துவது என்பது கைக்குள் வந்துவிடும் சொல்லப்போனால் அணுகுண்டுகளைப் போல் வானிலையும், மேலைநாடுகளுக்கு ஒரு ஆயுதமாக மாறும் நிலை உண்டு.
***
கட்டுரையாளர் சென்னை விவேகானந்தா கல்லூரி, இயற்பியல் துறை பேராசிரியர்
(இளைஞர் முழக்கம் ஜூன் 2011 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- இரா.சிவசந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
வளங்களின் வரையறை, வகைப்பாடு, வள அபிவிருத்தி என்பதன் பொருள் மற்றும் தமிழர் நிலத்தின் வளங்களும் பயன்பாடும்.
1.0 மனித வாழ்வுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படுபவை யாவற்றையும் வளங்கள் எனலாம். இயற்கையாகக் கிடைப்பவற்றை மனிதன் தன் அறிவாலும் தெழில்நுட்ப விருத்தியாலும் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் போது அவை வளங்களாகக் கருதப்படுகின்றன. மனிதனது தேவைகள் அளப்பரியன. அவற்றை நிறைவு செய்வதற்கு மனிதன் பல்வேறுபட்ட வளங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. தனி மனித தேவைகள் போன்றே ஒரு நாட்டினதும் பிரதேசத்தினதும் சமூகத்தினதும் தேவைகள் வரையறை அற்றவை. ஆனால் வளங்கள் வரையறைக்கு உட்படுபவை. இதனால் பொருளியலாளர்கள் வளங்கள் அருமை, தெரிவு, பரிமாற்றம் எனும் அம்சங்களைக் கொண்டுள்ளன என்பர்.
1.1 பொதுவாக வளங்களை இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம்.
01) பௌதிகவளம் அல்லது இயற்கை வளம் (Physical resource or Natural Resource)
02) மனித வளம் அல்லது பண்பாட்டு வளம் (Human Resource or Cultural Resource)
1.2 பௌதிக வளத்தை இரசாயனவியலாளர்கள்
01) உயிரியல் வளம் (Organic Resource)
உதாரணம்:- (காடுகள்,விலங்குகள்)
02) உயிரற்ற வளம் (Inorganic Resource)
உதாரணம்:- (நீர், கனிமங்கள்)
என வகுப்பர்
1.3 பொருளியலாளர்கள் வளங்களை நுகர்வுத்தன்மை அடிப்படையில்
01) புதுப்பிக்கக் கூடிய வளம் (Renewable Resource)
உதாரணம:-(நீர்,வளி)
02) புதுப்பிக்க முடியாத வளம் (Non-renewable Resource)
உதாரணம்:- (கனிமம்,காடுகள்)
என வகைப்படுத்துவர்.
1.4 சூழலியலாளர்கள் பௌதிகவளத்தை
01) நில மண்டல வளம் (Lithosphere Resource)
உதாரணம் (மண்,கனிமம்)
02) நீர் மண்டல வளம் (Hydrosphere Resource)
உதாரணம்:- (ஏரி,சமுத்திரம்)
03) வளிமண்டல வளம் (Atmosphere Resource)
உதாரணம்:-(காற்று,மழை)
04) உயிர் மண்டல வளம் (Biosphere Resource)
உதாரணம்:-(காடுகள்,விலங்குகள)
என வகைப்படுத்துவர்.
பௌதிக வளங்களும்(சூழல்), பண்பாட்டு வளங்களும்
2.0 புவியியலாளர்கள் மனித இனத்தின் வளர்ச்சி வரலாறானது சூழலுக்கும் மனிதனின் அறிவு வளர்ச்சிக்குமிடையே நிகழ்ந்த போராட்ட வரலாறு என்று கூறுவதோடு சூழலை முதன்மைப்படுத்தும் சூழலாதிக்கவாதக் கோட்பாடுகளையும் மனித நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தும் மானிடஆதிக்கவாத கோட்பாடுகளையும் முன் வைக்கின்றனர். மனித இனத்தின் அறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி படிப்படியாக எவ்வகையில் வளத்தைப் பயன்பாட்டிற்கு உட்படுத்தி வந்ததென்பதையும் வருகின்றதென்பதையும் முறைப்படி விளக்குகின்றனர். புவியியலாளர் சூழலை அமைவு, அமைப்பு, தரைத்தோற்றம், காலநிலை, மண், இயற்கைத்தாவரம், விலங்கினவாழ்வு என வகைப்படுத்தி மனிதன் இவற்றில் செல்வாக்கு செலுத்துவதனையும் இவற்றால் மனிதன் செல்வாக்கிற்கு உட்படுத்தப்படுவதனையும் விபரிப்பதோடு இரண்டிற்கு இடைப்பட்ட நிலையும் உண்டு எனவும் விளக்குகின்றனர்.
3.0 பண்பாட்டு வளம் (மனித அறிவும் தொழில்நுட்பமும்)
வளங்கள் பற்றி விபரிக்கும் அறிஞர்கள் பலர் மனித வளமே உலகிலே கிடைக்கும் எல்லா மூல வளங்களையும் விடச் சிறந்தது என்கின்றனர். வளம் என்பது அறிவியல் கலாசாரத்தின் செயற்பாடே என சில அறிஞர்கள் குறிப்பிடுகின்;றனர். புவியில் பரந்துள்ள இயற்கை நிலைமைகளை வளங்களாக மாற்றுவதற்கு மனிதஅறிவு வளர்ச்சி இன்றியமையாதது. மனிதஅறிவு எனும் போது கல்விகற்ற தொழில்நுட்ப அறிவு கொண்ட சமூகத்தை குறித்து நிற்கின்றது. ஒரு நாடு அபிவிருத்தியடைய அந்நாட்டு மக்கள் இயற்கைவளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற அறிவு கொண்டவர்களாக இருத்தல் அவசியம். இல்லாதுவிடின் அந்நாட்டில் காணப்படும் வளங்கள் மறைவளங்கள் (LATENT RESOURCES) என்ற நிலைமையிலேயே காணப்படும். உதாரணமாக, கிறீஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே பெற்றோலியம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் தொழில்நுட்ப விருத்தியால் பெற்றோல் வடிகட்டும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் வாகனங்கள் இயக்குவதற்கு அதனை எரிபொருளாக பயன்படுத்தலாம் என்ற தொழில்நுட்ப அறிவின் விருத்தியின் பின்னருமே அவை வளமாக மாற்றப்பட்டன.
இறப்பர் மரம் அமேசன் காடுகளில் இயற்கையாக வளரும் தாவரம். இறப்பர் மரத்திலிருந்து பால் பெற்று தொழில்நுட்ப முறைகளைப் புகுத்தி ரயராக, ரியூப்பாக பயன்படுத்தலாம் என்ற அறிவு வளரும் வரை அவை மறைவளமாகவே இருந்துள்ளன. இவ்வாறு இன்றும் பல வளங்கள் எமது அறிவு விருத்தியின்மையால் பயன்பாட்டிற்கு உட்படாது இருத்தல் கூடும். எதிர்காலத்தில் மேலும் வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பங்களால் அவற்றின் பயன்பாடு கண்டுபிடிக்கப்படலாம். அது வரை அவ்வளம் ஒரு மறைவளமாக அல்லது உள்ளார்ந்த வளமாகவே இருக்கும். இதிலிருந்து மனித அறிவு, தெழில்நுட்ப விருத்தி என்பனவே முக்கியமான வளம் என்பது பெறப்படுகின்றது. ஒரு நாட்டின் அபிவிருத்தி அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைத்தர நிலமைகளைக் கொண்டும் அளவிடப்படுகின்றது. இதன்படி பின்வரும் சூத்திரம் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை வளத்துடனும் தொழில்நுட்ப அறிவுடனும் இணைந்த கலாசார மேம்பாட்டுடன் தொடர்புபடுத்தி விளக்குகின்றது.
SL = RxC / P
இதில் R என்பதில் விவசாயம், கைத்தொழில், சேவைகள் என்பவற்றின் அபிவிருத்திக்குரிய வளங்கள் உள்ளடங்குகின்றன. C என்பது தெழில்நுட்பத்தின் இணைந்த மனித கலாசாரத்தைக் குறிக்கின்றது. P என்பது நாட்டின் மொத்த மக்கள் தொகையையும் SL என்பது தனிநபர் வாழ்க்கைத்தரத்தையும் குறிக்கின்றது. புதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலோ, புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டாலோ மொத்த உற்பத்தி அதிகரிக்கும் என்பதைச் சூத்திரம் விளக்குகின்றது.
3.1 மனிதன் வளங்களின் உற்பத்தியாளனாகவும், நுகர்வோனாகவும் விளங்குகின்றான். இயற்கை, வளமாக மாறவேண்டுமாயின் மனிதனின் உழைப்பு இன்றியமையாதது. அவ் உழைப்பு உளஞ் சார்ந்ததாகவோ, உடல் சார்ந்ததாகவோ அமையலாம். உழைப்பினால் பெறும் அனுபவங்கள் உற்பத்தியை வினைத்திறன் மிக்கதாக்கின்றன. இவ்வாறே மனித நாகரிகங்கள் வளர்ந்துள்ளன. நாகரிக வளர்ச்சியில் மனித உடல் உழைப்புக் குறைய உள உழைப்பே அதிகரித்து வந்துள்ளதை காண்கின்றோம். உள சக்திவள அதிகரிப்பிற்கு உடல் உறுதியானதாகவும் ஆரோக்கியம் உள்ளதாகவும் இருத்தல் அவசியம். உள ஆரேக்கியத்துக்குக் கல்வியும் தொடர்ந்த பயிற்சிகளும் அவசியம். மனித வள அபிவிருத்தியானது மனிதனின் நல் ஆரோக்கியத்திலும் முறையான கல்வியிலுமே தங்கியுள்ளது.
3.2 மனிதன் உழைப்பது நுகர்வுக்காகவே. எனவே மனிதனின் தேவைகளை இரு வகையாகப் பிரிக்கலாம்.
01) அடிப்படைத் தேவைகள்
02) ஏனைய தேவைகள்
அடிப்படைத் தேவைகள் எனும் போது உணவு, உடை, உறையுள் என்பனவாக அமையும். இவ் அடிப்படை தேவைகளுடன் மனிதன் திருப்தியடைவதில்லை. மனிதனுக்கு ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழும் விருப்பு உண்டு. மனித அறிவு வளர வளர இதுவும் வளரும். “அடிப்படைத் தேவைகள் நிறைவுற்றதும் மனித மனம் மேலதிக தேவைகளை உருவாக்கிக் கொள்ளும்” என்கிறார் ஒரு அறிஞர். இதனாலேயே மனிதன் தனது அறிவை மேலும் விருத்திசெய்து வினைத்திறனுள்ள வளஉற்பத்தியாளனாக மாறுகின்றான். இவ்வாறே உற்பத்தி நுகர்வு என்பவற்றின் இயக்கம் ஒரு தொடர்சங்கிலி போன்றதே - இதனை மனிதஅறிவின் வளர்ச்சியே துரிதப்படுத்துகின்றது.
4.0 பௌதிக வளமும் குடித்தொகையும்
குடித்தொகையின் தரத்திற்கு (Ouality) முக்கியத்துவம் கொடுக்கும் போது அதனை மனிதவளம் எனவும், தொகையைக்; (Quantity) கணக்கெடுக்கும் போது அதனைக் குடித்தொகை எனவும் கூறலாம். மேற்படி குடித்தொகையை பௌதிக வளங்களுடன் ஒப்பிடும் போது உலகளாவிய ரீதியில் அல்லது நாடு பிரதேசம் என்ற ரீதியில் மூன்று குடித்தொகை நிலமைகள் உருவாகின்றன. அவையாவன.
01) மிதமான குடித்தொகை (OPTIMUM POPULATION)
02) குறைவான குடித்தொகை (UNDER POPULATION)
03) மிகையான குடித்தொகை (OVER POPULATION)
குடித்தொகையின் அளவு, பரம்பல், அமைப்பு, கல்விநிலை, தொழில்நுட்பம், என்ற அம்சங்கள் ஒரு நாட்டின் குடித்தொகை எனும் போது கவனம் கொள்ள வேண்டியவையாகும். ஒரு நாட்டின் குடித்தொகை எவ்வாறு அந்த நாட்டிலுள்ள பௌதிக வளத்தைப் பயன்படுத்துகின்றது என்பதைப் பொறுத்தே அந்த நாடானது மிதமான, குறைந்த, மிகையான குடித்தொகை நிலையைக் காட்டுகின்றதா என்பதைத் தீர்மானிக்க முடியும்;.
மிதமான குடித்தொகையெனில் நாட்டிலுள்ள மொத்தக் குடித்தொகை நல்ல வாழ்க்கைத் தரத்தைப் பெற்று வாழக் கூடிய அளவிற்கு அந்நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி வரும் நிலையினைக் குறிப்பதாகும். இம்மிதமான தன்மை புதிய வளங்களை கண்டுபிடிக்கும் போது அல்லது தொழில்நுட்பத்தின் தரம் அதிகரிக்கும் போது மாற்றத்திற்கு உட்படும். வளமும் தொழில்நுட்பமும் நிலையாக இருக்கும் போது குடித்தொகை அதிகரிப்பின மக்கள் வாழ்க்கைத் தரம் குறையும். இது மிகையான குடித்தொகை நிலையைத் தோற்றுவிக்கும். வளங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட தொழில்நுட்பமும் வளரந்துவர அதற்கேற்ப குடித்தொகை அதிகரிக்காது விடின் அது குறைவான குடித்தொகை நிலையைத் தோற்றுவிக்கும். அதாவது அந்நாடு இருப்பதைவிட கூடிய குடித்தொகையைத் தாங்கக் கூடியதான நிலமையில் இருக்கும்.
(உதாரணம்:- பிறேசில், கனடா, அவுஸ்ரேலியா. போன்ற நாடுகள் பெருமளவு வளங்களைப் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு குடித்தொகை அளவினைக் கொண்டிருக்கவில்லை.)
மேற்படி நிலமைகள் ஒரு நாட்டிற்கு மாத்திரம் உரியனவல்ல. நாட்டிற்குள்ளேயுள்ள பிரதேசம், குறிச்சி போன்ற சிறு அலகுகளுக்கும் பொருந்தும்.
5.0 மனிதனும் அபிவிருத்தியும்
அபிவிருத்தியின் அடிப்படைகள்
மைக்கேல் ரொறாடோ (Michal Torado) எனும் பொருளியல் அறிஞர் உண்மையான அபிவிருத்தியெனில் பின்வரும் மூன்று அம்சங்களில் கவனம் கொள்ள வேண்டுமென்கிறார்.
01) வாழ்வின் தேவை (LIFE SUSTENANCE)
மனிதனுக்குச் சில அடிப்படைத்தேவைகள் நிறைவு பெறவேண்டும். இவை இன்றி அவன் வாழ முடியாது. அவையாவன உணவு, உடை, உறையுள், சுக நலன், பாதுகாப்பு என்பனவாகும். இவை இல்லை எனில் அல்லது குறைவாக இருப்பின் அங்கு குறைவிருத்தி நிலவுகின்றதென்றே கூற வேண்டும். இவற்றை முதலாளித்துவ நாடு என்றால் என்ன? சோஷலிச நாடு என்றால் என்ன? கலப்புப் பொருளாதார நாடு என்றால் என்ன? மனிதனுக்கு வழங்கியே தீர வேண்டும் என்றார். இவ்வாறான அடிப்படை பொருளாதார தேவைகளை வழங்க முடியாத எந்த ஓர் நாடும் அபிவிருத்தி அடைந்ததாக கொள்ளமுடியாது.
02) சுய மதிப்பு (SELF RESPECT)
ஒருநாடோ, தனிமனிதனோ இருக்கும் சூழலில் சுயமதிப்பு, கௌரவம், (RESPECT, DIGNITY, HONOUR) நிலவவேண்டும். இவை இல்லையெனில் அபிவிருத்தி இல்லையென்றே கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்.
03) சுதந்திரம் (FREEDOM)
இது குறிப்பது அரசியல் கருத்துச் சுதந்திரத்தையாகும். சமூக நெருக்குதல், அறியாமை, மேலாதிக்கம் என்பன இல்லாதிருத்தல் வேண்டும். மேலும் எந்தச் சித்தாந்தத்தையும் பின்பற்றும் சுதந்திர உரிமை நாட்டிற்கும் மனிதனுக்கும் இருக்;கவேண்டும். இவை இல்லையாயின் அங்கு அபிவிருத்தி இல்லை என்றே கொள்ள வேண்டும்.
மேற்படி அம்சங்களையும் மனிதவள அபிவிருத்தி பற்றிப் பேசுவோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என மக்கேல் ரொடாறோ வலியுறுத்திக் கூறுகின்றார்.
டட்லி சியர்ஸ்;]; (Dudely Seers )எனும் பொருளியல் அறிஞர் அபிவிருத்தி பற்றி பிரஸ்தாபிக்கும் போது பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றார்.
ஒரு தேசம் அபிவிருத்தி அடைந்துள்ளதெனக் கருதுவதாயின் அங்கு
1. வறுமையைப் போக்க என்ன நடந்தது?
2. வேலை இன்மையைப் போக்க என்ன நடைபெற்றது?
3. அங்கு நிலவும் பல்வேறுபட்ட சமமின்மையான நிலமைகளை நீக்குவதற்கு என்ன நடந்தது?
என்ற கேள்விகளை எழுப்பவேண்டுமென்றும் கணிசமான அளவில் இவை குறைவடைந்து வந்தால் சந்தேகத்திற்கிடமின்றி அந்நாடு அபிவிருத்திப் பாதையில் செல்கின்றதென்று கூறலாம் எனக் கூறுகின்றார். இவற்றுள் ஒன்றோ, இரண்டோ பாதகமாக இருக்குமாயின் அந்த நாட்டின் தலா வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்திருந்தாலும் அந்நாடு அபிவிருத்தி அடையவில்லையென்றே கூற வேண்டும் என்கிறார். இதன் மூலம் தனியே பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி அல்ல. அபிவிருத்திக்கு பல்பரிமாணம் உண்டு என வலியுறுத்துகின்றார்.
பிலிப்ஸ் எச்.ஹோம்ஸ் (Philip. H.Coombs)
01) பொது அல்லது அடிப்படைக்கல்வி விருத்தி
(எழுத்தறிவு பெறுதல், ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர் கல்வியை அபிவிருத்தி செய்தல்.)
02) கல்வியால் குடும்ப மேம்பாடு காணல்(குடும்ப வாழ்வின் தரத்தை உயர்த்துதல், சுகநல வாழ்வு, ஊட்டச்சத்து மேம்பாடு, மனைப்பராமரிப்பு, குழந்தைப்பராமரிப்பு, குடும்பத்திட்டமிடல்)
03) சமூக மேம்பாட்டு கல்விவளர்ச்சி
(உள்ளுர், சர்வதேச நிறுவனங்களின் வளர்ச்சி, அரசாங்க அரசசார்பற்ற நிறுவனங்களின் வளர்ச்சி, கூட்டுறவு வளர்ச்சி, சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்)
04) தொழில்சார் கல்வி வளர்ச்சி
(பயிற்சி அதிகரித்தல், கருத்தரங்குகள், பயிலரங்குகள், தொழில்சார் பயிற்சிகளை பல மட்டங்களிலும் வழங்குதல்)
கல்வி அபிவிருத்தியின் ஊடான அபிவிருத்தி அம்சங்களில் ஒரு நாடோ பிரதேசமோ கவனம் செலுத்தும் போ மனித வள அபிவிருத்தி ஏற்படுமென எச்.ஹோம்ஸ் வலியுறுத்துகின்றார்.
தமிழர் நிலத்தின்; வளங்களும் பயன்பாடும்.
விவசாயத்திற்குரிய பௌதிக வளம்.
நிலவளம், நீர்வளம், மண்வளம் போன்றன விவசாயப் பயன்பாட்டிற்கு இன்றியமையாத பௌதிக வளங்களாகும். தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் தரைத்தோற்றம் அதிக உயர வேறுபாடற்ற சமநிலமாகவே காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டிலிருந்து படிப்படியாக உயரத்திற் குறைந்துவரும் இலங்கையில் வடசமவெளி மற்றும் கிழக்கு சமவெளிகளிற் பெரும்பாகத்தை இப் பிரதேசம் அடக்கியுள்ளது. பொதுவாக இப்பிரதேசத்தின் தரைத்தோற்றத்தை கரையோரத் தாழ்நிலமென்றும் உள்ளமைந்த மேட்டுப்பாங்கான நிலமென்றும் பிரிக்கலாம். கரையோரத் தாழ்நிலம் ஏறத்தாழ 100 அடிக்குட்பட்ட உயரத்தைக் கொண்டு இப்பிரதேசத்தின் பரந்த பரப்பை அடக்கியுள்ளது. உள்ளமைந்த மேட்டுநிலம் 100 அடிக்கு மேற்பட்டும் 300 அடிக்கு உட்பட்டும் காணப்படுகிறது. இது வடக்கே அகன்றும் கிழக்கே ஒடுங்கியும் உள்ளது. இம் மேட்டுநிலத்தில் குறிப்பிடக்கூடிய மலைகள் இல்லாவிடினும் ஆங்காங்கே பல எச்சக்குன்றுகளும் வெளியரும்பு பாறைகளும் காணப்படுகின்றன.
தரைத்தோற்ற அமைப்புக்கேற்ப உயர்ந்த பகுதிகளிலிருந்து உற்பத்தியாகிவரும் ஆறுகள் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்குத் திசைகளை நோக்கிப் பாய்கின்றன. இப்பிரதேசத்தில் 61 ஆறுகள் காணப்பட்ட போதிலும் மகாவலி கங்கையைத் தவிர ஏனையவற்றில் வருடம் முழுவதும் நீரோட்டம் இருப்பதில்லை. இங்கு காணப்படும் ஆறுகளில் பெரும்பாலானவற்றில் மழைகால நீரோட்டம் காணப்படுவதால் இவை பருவகால ஆறுகளென வழங்கப்படுகின்றன. இதனாலேயே ஆற்றை மறித்து அணைகட்டி நீர்த்தேக்கங்கள் உருவாக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தும் பாசனமுறை இப்பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக நிலவி வருகின்றது. அண்மைக்காலங்களில் பழைய குளங்கள் பல புனரமைக்கப்பட்டும், புதிய குளங்கள் பல உருவாக்கப்பட்டும் இப்பகுதிகளில் விவசாய குடியேற்றத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான அபிவிருத்திக்குரிய வாய்ப்புகள் அம்பாறை, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நிறைய உள்ளன.
இப் பிரதேசத்திலே யாழ்ப்பாணக்குடாநாடு உள்ளடக்கிய வடமேற்கு பகுதியின் புவி அமைப்பு மயோசின் கால சுண்ணாம்புப் பாறைப்படையைக் கொண்டுள்ளதால் தரைக்கீழ் நீர்வளம் மிக்க பகுதியாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் குடித்தொகை செறிவாக இருப்பதற்கு தரைக்கீழ் நீர்வளமே பிரதான காரணமாகும். வருடம் முழுவதும் கிணற்று நீர் பெற்று இங்கு விவசாயம் செய்தல் நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றது. இப்பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியின்(வன்னி) கிழக்கு,மேற்கு கரையோர மணற்பாங்கான பகுதிகளிலும் உள்ளமைந்த வண்டல்மண் பகுதிகளிலும் ஓரளவு தரைக்கீழ் நீர்வளம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாடு போலன்றி குளங்களில் நீர் இருக்கும் காலங்களிலேயே வன்னியில் ஓரளவு தரைக்கீழ் நீரை பெறமுடிகிறது.பெருமளவுக்கு குடிநீர் பெறுவதற்கே இவை பயன்படுத்தப்படுகின்றன.
தமிழர் பாரம்பரியப் பிரதேசம், வருடம் ஏறத்தாழ 1800 மி.மீ (75 அங்குலம்) இற்கு குறைந்த மழைவீழ்ச்சி பெறும் வறண்ட வலயத்தின் பெரும் பாகத்தை உள்ளடக்கியுள்ளது. பொதுவாக இங்கு வருடம் முழுவதும் சராசரியாக உயர்வான வெப்பநிலையான 28 பாகை சென்ரிகிறேட் அளவு நிலவுகிறது. வருடாந்த வெப்ப ஏற்றத்தாழ்வு 21 – 32 பாகை செ.கி ஆக அமைகின்றது. இங்கு வருடத்தின் நான்கு மாதங்களுக்கே குறிப்பிடக்கூடிய மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெறுகின்றது. இப்பிரதேசத்தின் வருட சராசரி மழைவீழ்ச்சி 1500 மி.மீ ஆகும். மழைவீழ்ச்சிப் பரம்பலில் பிரதேச வேறுபாடுகள் உள. மன்னார், அம்பாறை மாவட்டங்களின் தென்பகுதிகள் குறைந்தளவிலான 1200 மி.மீ தொடக்கம் 1500 மி.மீ வரை மழை பெற, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள் உயர்ந்தளவான 1800 மி.மீ அளவு மழையைப் பெறுகின்றன. எனினும் 1200 மி.மீ தொடக்கம் 1800 மி.மீ வரை மழைபெறும் பரப்பளவே அதிகமாகும். யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மாவட்டங்கள் முழுவதும் மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிற் பெரும்பாகமும் 1200 மி.மீ தொடக்கம் 1500 மி.மீ மழை பெறும் பகுதிகளாக உள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மாவட்டங்கள் முழுவதும் மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு, மாவட்டங்களிற் பெரும்பாகமும் வருடத்திற்கு சராசரியாக 1200 மி.மீ தொடக்கம் 1800 மி.மீ மழை பெறும் பகுதிகளாகவே அமைகின்றன.
இப் பிரதேசம் வடகீழ் மொன்சூன் காற்றினாலும், சூறாவளி நடவடிக்கைகளினாலும் ஒக்டோபர் முதல் ஜனவரி வரையான காலப்பகுதியிலேயே அதிகளவு மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. வருடம் முழுவதும் கிடைக்கப்பெறும் மொத்த மழைவீழ்ச்சியின் 70வீதம் நான்கு மாத காலத்தினுள்ளேயே பெறப்படுவது முக்கிய அம்சமாக உள்ளது. இம் மழைவீழ்ச்சியே இப் பிரதேசத்தின் காலபோக விவசாயச் செய்கைக்கு உதவுகின்றது. மார்ச் முதல் மே வரை மேற்காவுகையினாலும் குறைந்தளவு சூறாவளி நடவடிக்கையினாலும் சிறிதளவு மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. சிறுபோகச் செய்கைக்கு இம் மழைவீழ்ச்சி ஓரளவுக்கு உதவுகின்றது. யூன் முதல் ஆகஸ்ட் வரை இங்கு அதிக வறட்சி நிலவுகின்றது. இக் காலத்தே வீசும் தென்மேற்கு மொன்சூன் இலங்கையின் ஈரவலயத்திற்கு மழையைக் கொடுத்து இப்பகுதிகளில் வறண்ட காற்றாக வீசுகின்றது. இவ் வறண்ட காற்றை வடக்கே சோழகக் காற்று என்றும் கிழக்கே சோழகக்கச்சான் காற்று என்றும் வழங்குவர்.
இப் பிரதேசத்தில் யாழ்ப்பாணக்குடாநாடு தவிர ஏனைய பகுதிகளில் பெரும்பாகத்தில் வறண்ட பிரதேசத்தின் முறையான மண் வகையான செங்கபில நிற மண் பரந்துள்ளது. இம் மண் வகை தொல்காலப் பாறைகளிலிருந்து விருத்தியடைந்ததாகும். விவசாயச் செய்கைக்குப் பொருத்தமான வளமான மண்ணான இது மன்னார், மட்டக்களப்பு மாவட்டங்களில் ஓரளவுக்கும் வவுனியா, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் பெருமளவுக்கும் பரந்துள்ளது. மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரை கரையோரத்திற்கு சிறிது உள்ளாக சிவந்த மஞ்சல் லட்சோல் மண், செங்கபில நிறமண் என்பன உள்பரப்பிற்கும் கரையோரப் பகுதிக்கும் இடையே பரந்துள்ளன. யாழ்ப்பாணக்குடாநாட்டின் மத்திய பகுதியிலும் பரந்துள்ள இம்மாதிரியான மண்வகை செம்மண் என வழங்கப்பட்டு குடாநாட்டில் வளமான மண்ணாக கருதப்படுகின்றது. மன்னார் தொட்டு முல்லைத்தீவுக்கு கரையோரமாகவும், யாழ்ப்பாணக்குடாநாட்டின் கரையோரமாகவும் உவர்மண் பரந்துள்ளது. புல் வளருவதற்கே பொருத்தமான இம் மண்வகை விவசாயத்திற்குப் பயன்பட அதிக இரசாயன உரம் பயன்படுத்தப்பட வேண்டும். மட்டக்களப்புக்கு வடக்கேயும் திருகோணமலைக்குத் தெற்கேயும் சுண்ணாம்புக்கலப்பற்ற கபில நிற மண் பரந்துள்ளது. வளம் குறைந்த இம்மண் பரந்தளவு புல் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இவை தவிர வடக்கேயும், கிழக்கேயும் காணப்படும் ஆற்றுப்படுக்கைகளிலும் அவற்றின் வெள்ளச்சமவெளிகளிலும் வளம் மிக்க வண்டல் மண் படிவுகள் பரந்துள. மன்னார்தீவு, பூனகரிமுனை, யாழ்ப்பாணக்குடாநாட்டின் கிழக்குப்பகுதி, முல்லைத்தீவிலிருந்து பொத்துவில் வரையான கிழக்கு கரையோரப் பகுதி ஆகியவற்றில் அண்மைக்கால மணற்படிவுகள் பரந்துள்ளன. பொங்குமுகப் படிவுகளான இவை தென்னைச் செய்கைக்குப் பொருத்தமானவை.மணற் குவியலாகக் காட்சி தந்த இவை கட்டுமான வேலைக்காக பெருமளவு அகழப்பட்டுவருவதால் கடல்நீர் தரையினுள் புகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.
நிலப்பயன்பாடு
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் உழைக்கும் மக்களில் 60வீதத்தினர் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இப்பகுதிகளில் பாரம்பரியமாக விவசாயமே முக்கிய பொருளாதார நடவடிக்கையாக இருந்து வருகின்றது. விவசாயத் துறையில் புகுத்தப்பட்ட புதிய தொழில்நுட்ப முறைகள் இப்பகுதி விவசாயிகளிடையே வேகமாகப் பரவியுள்ளன. இப்பிரதேசம் அடங்கியுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலப்பயன்பாட்டை இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். தோட்டச்செய்கையோடு தொடர்பான நிலப்பயன்பாடு எனவும், நெற்செய்கையோடு தொடர்பான நிலப்பயன்பாடு எனவும் இவற்றை வகைப்படுத்தலாம்.
இப்பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 6.1 வீதத்தையும் மொத்தக் குடித்தொகையில் 36 வீதத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதியே தோட்டச் செய்கை அதிகளவுக்கு வளர்ச்சி பெற்ற பகுதியாக உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கப்பெறும் தரைகீழ் நீர் வளத்தைப் பயன்படுத்தி இப்பகுதி வாழ் மக்கள் வருடம் முழுவதும் பயிர் செய்கின்றார்கள். மிகவும் சிறிய அளவிலான துண்டு நிலங்களில் செறிவான முறையில் தோட்டப் பயிரச் செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வேறு எப்பாகத்திலும் இவ்வகையான செறிந்த பயிர்ச்செய்கை முறை மேற்கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதி செறிவான குடித்தொகையை கொண்டுள்ளது. தோட்ட நிலங்கள் அதிகளவு கொண்ட பகுதிகளில் சதுரமைலுக்கு 3000 இற்கு மேற்பட்டோர் வாழ்கின்றனர்.
யாழ்ப்பாணக் குடாநாடு ஏறத்தாழ 1025 சதுர கி.மீ பரப்பைக் கொண்டது. இதில் 60 வீதமான பகுதியே மக்கட் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகின்றது. ஏனைய 40 வீதமான பகுதி மணல், பாறை ஆகியவற்றையும் சதுப்பு நிலங்களையும் கொண்டுள்ளதால் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமையவில்லை. மக்களுக்குப் பயன்படுகின்ற 60 வீதமான நிலப்பகுதியில் மூன்றிலொரு பகுதி குடியிருப்பு நிலங்களாக உள்ளன. பனை, தென்னை ஆகிய மரப்பயிர்கள் மற்றொரு மூன்றிலொரு பகுதியிற் காணப்படுகின்றன. எஞ்சிய பகுதியே நெற்பயிரும், தோட்டப் பயிரும் செய்கை பண்ணப்படும் விவசாயப்பகுதியாகும். அண்மைக்காலங்களில் விவசாய நெல்வயல் நிலங்கள் தோட்டநிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் தோட்ட நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் அவதானிக்க முடிகின்றது.
இப்பகுதித்தோட்டங்களில் புகையிலை, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், திணை வகைகள், வாழை ஆகியன பெருந்தொகையாக விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உபஉணவுத் தேவையின் கணிசமான பங்கு யுத்தத்திற்கு முன்னர் யாழ்ப்பாணக்குடாநாட்டு உற்பத்தியாலேயே பூர்த்தி செய்யப்பட்டது. உதாரணமாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்குட்பட்ட பரப்பளவில் 38 வீதத்தையும், மிளகாய்ச் செய்கைக்குட்பட்ட பரப்பளவில் 15 வீதத்தையும் யாழ்ப்பாணக்குடாநாடே உற்பத்திசெய்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் விவசாயிகள் புதிய தொழில்நுட்ப முறையினை புகுத்துவதில் பேரார்வம் கொண்டவர்கள். தோட்டச்செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரம,; செயற்கை உரம், கிருமிநாசினி என்பனவற்றை பெருமளவு பயன்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரித்துள்ளார்கள். குடித்தொகை அதிகரிப்பும், தோட்டச் செய்கை அதிகரிப்பும் தரைக்கீழ் நீர் வளத்தை மிகையாகப் பயன்படுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளன. தரைக்கீழ் நீரின் மிகையான பயன்பாட்டினால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் உவர்நீர் பகுதிகள் அதிகரித்து வருகின்றன. தரைக்கீழ் நீர்வளத்தை பேணுவதற்கு கிடைக்கும் மழை நீரில் பெரும்பகுதி தரையின் கீழ் செல்வதற்கு வழி காணவேண்டும். இதற்கு இப்பகுதிகளின் நீர்த் தேக்கங்கள் ஆழமாக்கப்படுதலும், நீர்த்தேக்கங்களில் தூர் அகற்றுதலும், புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படுதலும் அவசியம். மேலும் இங்கு காணப்படும் பல கடனீரேரிகள் நன்னீர் ஏரிகளாக மாற்றப்படுவதாலும் நற்பயன் விளையும். இந்நடவடிக்கையால் நீர், நிலவளம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.
யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளின் (வன்னி) நிலப்பயன்பாட்டை தாழ்நிலப்பயன்பாடு மேட்டுநிலப்பயன்பாடென வகைப்படுத்தலாம். மேட்டுநிலப்பயன்பாடு இப்பகுதியில் அதிகம் விருத்தியடையவில்லை. தாழ்நிலப்பயன்பாட்டில் நெற்செய்கையே முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆற்றுவடிநிலப்பகுதிகளிலும் நீர்த்தேக்கத்தினை அண்டிய பகுதிகளிலும் வண்டல்மண், களிமண் படிவுகள் காணப்படும் தாழ்வான பகுதிகளிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இப்பகுதிகளில் பழைய பாரம்பரிய கிராமிய விவசாய நிலப்பயன்பாடும், புதிய குடியேற்றத்திட்ட நிலப்பயன்பாடும் வௌ;வேறான பண்புகளைக் கொண்டமைந்துள்ளன. மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை,மட்டக்களப்பு பகுதிகளின் கரையோரமாக பழைய விவசாய நிலப்பரப்புகள் பரந்துள. முன்னர் காடு சூழ்ந்திருந்து நில அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்ட உள்ளமைந்த பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் அமைக்கப்பட்டு அபிவிருத்தி அடைந்துள்ளன.
1935ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நில அபிவிருத்திச் சட்டத்தின் பின்னர் இப்பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பலநோக்கு குடியேற்றத்திட்டம், பாரிய குடியேற்றத்திட்டம், கிராமவிஸ்தரிப்புத் திட்டம், மத்தியவகுப்பார் குடியேற்றத்திட்டம், இளைஞர் குடியேற்றத்திட்டம் ஆகியனவாக இவை அமைக்கப்பட்டுள்ளன. குடியடர்த்தி மிக்க பகுதிகளில் இருந்து மக்களை நகர்த்தவும் நிலமற்றோருக்கு நிலமளிக்கவும் வேலையற்றிருப்போருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் குடியேற்றத்திட்ட உருவாக்கம் ஓரளவு உதவியுள்ளது. அம்பாறையில் கல்லோயாத்திட்டம், மட்டக்களப்பில் உன்னிச்சைக் குளத்திட்டம், மன்னாரில் கட்டுக்கரைக்குளத்திட்டம், கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்திட்டம், வவுனியாவில் பாவற்குளத்திட்டம், என்பன மாவட்டத்திற்கொன்றான உதாரணங்களாகும். இப்பகுதிகளிலே படித்த இளைஞர்களுக்கென உப உணவு உற்பத்தித் திட்டங்கள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த முத்தையன்கட்டு இளைஞர்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்த விஸ்வமடு, திருவையாறு இளைஞர் திட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கன. ஏனைய குடியேற்றத்திட்டங்கள் போலன்றி இளைஞர் திட்டங்கள் பொருளாதார ரீதியில் திருப்தியைத் தருவதாக விருத்தியடைந்துள்ளன. பொதுவாக இப்பிரதேசத்திலே குள நீர்ப்பாசன அடிப்படையில் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் நிறைய உள. இந் நடிவடிக்கைகள் குடியடர்த்தி மிக்க யாழ்ப்பாணக்குடாநாடு, மற்றும் வன்னிக் கரையோரப் பகுதிகளிலிருந்து இப்பகுதிகளுக்கு மக்களை நகர்த்தவும் உதவும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் மொத்த நிலம் ஏறத்தாழ 202 977 (2007) கெக்டர் ஆகும். இது இலங்கையின் மொத்த நெல் விளைபரப்பில் 25வீதமாக அமைகின்றது. இப்பிரதேசத்தின் மொத்தநெல் விளைபரப்பில் 75 வீதத்தைக் கிழக்கு மாகாணம் உள்ளடக்கி உள்ளது. மொத்த நெல்விளைநிலத்தில் 44.4 வீதம் பருவகால மழையை நம்பிய மானாவாரி நிலங்களாக உள்ளன. ஏனையவை நீர்ப்பாசன வசதியுடைய குளங்களை அடுத்துள்ளன. பாசனவசதியுடைய நிலங்களில் வருடத்தில் இரு தடவை நெல் விளைவிக்கப்படும். இவ்வாறான விளை நிலப்பரப்பு 28 வீதமாக அமைகிறது. பொதுவாக இப்பிரதேசத்தில் அதிகளவு நெல்விளைபரப்பு பருவமழையை நம்பியதாகையால் பருவமழை பிழைத்துவிடும் காலங்களில் நெல் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. நெற்செய்கையில் நிலவும் இந்த நம்பிக்கையற்ற நிலையை மாற்றவும் சிறு போகத்தின்போது அதிகளவு நெல்லை விளைவிக்கவும் ஏலவேயுள்ள விளைநிலப்பரப்பிற்கு பாசனவசதிகள் அதிகரிக்கப்படுதல் அவசியம்.
இப்பகுதி நெற்செய்கையில் புதிய தொழில்நுட்ப முறைகள் புகுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேசங்களில் உழவு இயந்திரப் பாவனையே பெருமளவு நிலவுகின்றது. சிறந்த கலப்பின உயர் விளைச்சல் தரும் நெல்லினங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் இரசாயன உரம், கிருமிநாசினி, களைகொல்லி, என்பனவற்றின் உபயோகம் நிறைய உள்ளது. விவசாயிகளின் நலனை உத்தேசித்து அரசாங்கமும் பல உதவிகள் அளித்து வருகின்றது. கடன் உதவி, உத்தரவாத விலைத்திட்டம், சந்தைப்படுத்தும் வசதி, விவசாய ஆலோசனை பெறக்கூடிய அமைப்புகளை உருவாக்குதல் என்பன இவற்றுட் குறிப்பிடத்தக்கன. இவை காரணமாக இப்பகுதிகளில் நெல் விளைச்சல் வருடாவருடம் அதிகரித்து வருகின்றது. சராசரி நெல் விளைச்சல் ஏக்கருக்கு 42 புசலேயாகும்.
மன்னாரில் ஏக்கருக்கு 60 புசல் வரை கிடைக்கின்றது. பொலனறுவையில் ஏக்கருக்குரிய சராசரி உற்பத்தி 80 புசலாக உள்ளது. பாசன வசதிகள் அதிகரிக்கப்படுவதாலும் புதிய தொழில்நுட்ப முறைகளைக் கடைப்பிடிப்பதனால் விளையக்கூடிய பயன்களை விவசாயிகளுக்கு உணரவைப்பதாலும் ஏக்கருக்குரிய உற்பத்தியை இரண்டு மூன்று மடங்காக அதிகரிக்க இயலும். இப்பிரதேச விவசாய செய்கையில் நீர்ப்பற்றாக்குறையே முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதனைத் தீர்ப்பதற்கு புதிய நீர்த்தேக்கங்கள் வாய்ப்பான இடங்களில் அமைக்கப்படுதலும் தூர்ந்த நிலையிலுள்ள குளங்களை புனரமைத்தலும் ஏலவேயுள்ள குளங்களின் நீர்க் கொள்ளளவை கூட்டுதலும் அவசியம். மகாவலி திசைதிருப்புத் திட்டம் கிழக்கே மாதுறுஓயா சார்ந்த பகுதிகளின் விருத்திக்கு வாய்ப்பாக அமையும். வடக்கே திசை திருப்ப திட்டமிட்டுள்ள மகாவலிகங்கை நீர் வடபகுதி நிலங்களுக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுமாயின் இப்பகுதிகளின் விவசாயம் பெருமளவு விருத்தியுறும் என்பதில் ஜயமில்லை.
கனிப்பொருள் வளம்.
இலங்கையில் கனிப்பொருள் வளம் பொதுவாகக் குறைவாகவே காணப்படுகின்றது. இதனைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சிகளும் குறைவே, தமிழர் பாரம்பரியப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் சில வாய்ப்பான நிலைமைகள் காணப்படுகின்றன. இப்பிரதேசத்தில் சுண்ணக்கல், களி, உப்பு, இல்மனைற் - மொனசைற், சிலிக்கா, மணல் முதலான கனிப்பொருட்கள் காணப்படுகின்றன. நிலநெய் பெறக்கூடிய சாத்தியக் கூறும் ஆராயப்பட்டு வருகின்றது. புத்தளம் தொடக்கம் பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு வடமேற்கேயுள்ள பகுதிகள் மயோசின் காலத்தே தோன்றிய சுண்ணக்கல் படிவுகளைக் கொண்டு காணப்படுகின்றன. ஏறத்தாழ 2000 கி.மீ பரப்பில் பரந்துள்ள இப்படிவுகள் பலநூறு மீற்றர் ஆழம் வரை காணப்படுகின்றன. புத்தளம், மன்னார் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குப் பகுதிகளில் இவை மேற்பரப்புப் படிவுகளாக அமைந்துள்ளன. இச் சுண்ணக்கல் படிவுகள் பெருந்தொகையாக அகழப்பட்டு காங்கேசன்துறை, புத்தளம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆலைகளில் சீமேந்து உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டன.
யுத்தத்திற்கு முன் நாட்டின் மிகப்பெரிய சீமேந்து ஆலை காங்கேசன்துறையிலேயே அமைந்திருந்தது. சீமேந்து உற்பத்தி தவிர கண்ணாடி உற்பத்தி, கடதாசி உற்பத்தி, சீனி சுத்திகரிப்பு, நீர் சுத்திகரிப்பு, தோல் பதனிடல் போன்றவற்றுக்கும் சுண்ணக்கல் பயன்படுகின்றது. இப்பிரதேசத்தில் பெருந்தொகையாகக் காணப்படும் இன்னொரு கனிப்பொருள் களியாகும். ஆற்றுப்பள்ளத்தாக்குகள், குளங்களை அண்டிய பகுதிகள், கழிமுகங்கள் ஆகிய பகுதிகளில் களிப்படைகள் பரவலாக உள. செங்கட்டி, ஓடு முதலியவற்றை உற்பத்தி செய்யவும், சீமேந்து உற்பத்திக்குரிய துணைப்பொருளாகவும் களி பயன்படுத்தப்படுகின்றது. முல்லைத்தீவு கல்லோயா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆலைகள்; செங்கட்டி, ஓடு ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகின்றன. களியைப் பயன்படுத்தி மட்பாண்டப் பொருட்களும் குடிசைத்தொழில் அடிப்படையில் பரவலாகப் பல கிராமங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இப்பிரதேசம் நெடிய கடற்கரையையும் பல குடாக்களையும் கடலேரிகளையும் கொண்டிருப்பதோடு வறண்ட பகுதியாகும், நாட்டின் வேறு எப்பாகத்திலுமில்லாதவாறு பல உப்பளங்கள் இப்பிரதேசத்தில் பரந்துள. ஆனையிறவு, நிலாவெளி, சிவியாதெரு, இருபாலை, கரணவாய், கல்லுண்டாய், முல்லைத்Pவு முதலிய இடங்களில் உப்பு உற்பத்தி செய்யமுடியும். இப்பகுதியிலுள்ள உப்பளங்களில் ஆனையிறவு உப்பளமே மிகப் பெரியதாகும். இவ் உப்பள உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலை ஒன்றும் இயங்குகிறது. இல்மனைற் படிவுகளும் ஓரளவு மொனசைட், றூரைல், சேர்க்கன் படிவுகளும் புல்மோட்டை, குதிரைமலை, திருக்கோவில் முதலிய கடற்கரையோரப் பகுதி மணற் பரப்புகளில் பரந்துள்ளன. இவை அகழப்பட்டு அங்குள்ள ஆலையில் சுத்தம் செய்யப்பட்டு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிகழ்வு நீண்டகாலமாக இடம்பெற்று வருகிறது. இல்மனைற் படிவுகளோடு சிறிதளவு றூரைல் சேர்க்கன் படிவுகள் கலந்து காணப்படுகின்றன. சிலிக்காமணல் சாவகச்சேரியிலும் பருத்தித்துறை தொட்டு திருகோணமலை வரை கடற்கரையோரமாகப் பரந்தும் காணப்படுகின்றது.
சிலிக்கா மணலைப் பயன்படுத்தி கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று நாகர் கோயிலில் அமைக்கப்படுவதற்கான ஆரம்ப ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை தவிர கட்டிடத் தேவைக்கு வேண்டிய கல், மணல் முதலியன இப்பகுதிகளில் பெருமளவுக்குப் பெறக்கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட புவிச்சரித ஆய்வுகள் இப்பகுதிகளில் நிலநெய்வளம் இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டென தெரிவிக்கின்றன. அரசாங்கமும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றும் சேர்ந்து இதற்கான அகழ்வாராய்ச்சி களை அண்மைக்காலத்தில் ஆரம்பித்துள்ளன. இவ் ஆய்வுகள் வெற்றியளிப்பின் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இது அமையக்கூடும்.
மேலே குறிப்பிட்ட கனிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட சீமேந்துக் கைத்தொழில், இரசாயனக் கைத்தொழில், மட்பாண்டக் கைத்தொழில், ஓட்டுக் கைத்தொழில், கண்ணாடிக் கைத்தொழில் ஆகியவற்றை விஸ்தரிப்பதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் இன்னும் பல பகுதிகளில் புதிய ஆலைகள் அமைப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் இப்பிரதேசத்தில் உள்ளன.
இப் பிரதேசத்தில் விவசாய வள அடிப்படையிலான பல கைத்தொழில்களும் நிறுவப்படலாம். வாழைச்சேனை கடதாசி உற்பத்தி ஆலை, கந்தளாய், கல்லோயா சீனி உற்பத்தி ஆலைகள், திருகோணமலை மா அரைக்கும் ஆலைகள் என்பன குறிப்பிடத்தக்கன. யாழ்ப்பாணக் குடாநாடு சுருட்டுக் கைத்தொழிலுக்கு பெயர் பெற்ற இடமாக நீண்ட காலமாக விளங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இங்கு பனை, தென்னை, வளங்களைப் பயன்படுத்தி கிராமங்கள் தோறும் குடிசைக்கைத்தொழில் அடிப்படையில் பலவகையான பாவனைப் பொருட்களும், அலங்காரப் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இலங்கையில் தென்னைச் செய்கைக்குட்பட்ட நிலப்பரப்பில் 6வீதத்தை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடக்குகின்றன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களும் இப்பிரதேசத்தின் தென்னைச்செய்கைக்குட்பட்ட நிலப்பரப்பில் 60வீதத்தை அடக்கியுள்ளன. பனைவளம் இப்பிரதேசத்தின் முக்கிய வளங்களுள் ஒன்றாக அமைகின்றது. இலங்கையில் மொத்தம் 70,000 ஏக்கர் பரப்பில் பனைவளம் உள்ளது. இதில் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் 57,00 ஏக்கர் (82 வீதம்) பரப்பைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் மாத்திரம் 42,000 ஏக்கர் பரப்பில் (60 வீதம்) பனைவளம் காணப்படுகிறது. யாழ்ப்பாணக்குடாநாட்டு பகுதிவாழ் மக்கள் பாரம்பரியமாக பனை வளத்திலிருந்து அதிக பயன் நுகர்ந்து வருகின்றனர்.
வளமற்ற நிலங்களில் வளரக்கூடிய இப்பனையில் இருந்து 80 இற்கு மேற்பட்ட பயன்கள் பெறலாமென தாலவிலாசம் எனும் நூல் கூறும். அக்கால மக்களின் உணவு, குடிபானத் தேவைகளின் ஒருபகுதியை பனைமரம் பூர்த்தி செய்தது. வீடு கட்டுவதற்கு மரமும் ஓலையும் பனைமரத்திலிருந்தே பெறப்பட்டன. விறகாயும் இதுவே பயன்பட்டது. ஆகவே அன்றைய யாழ்ப்பாணத்துக் கிராம மக்கள் பனையுடன் ஒன்றித்த வாழ்வை மேற்கொண்டிருந்தனர். பிற்காலத்தில் ஓரளவுக்கே பனைவளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. பனைவளப் பயன்பாட்டினை விருத்தி செய்வதற்காக இலங்கை அரசு பனம்பொருள் அபிவிருத்திச் சபை என்றதோர் அமைப்பினைத் தோற்றுவித்துள்ளது. இவ் அமைப்பு பனைவளப்பயன்பாடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதோடு பல வேலைத்திட்டங்களை கிராமங்கள் தோறும் உருவாக்கி வருகின்றது. பனைவள அடிப்படையிலான குடிசைக்கைத்தொழில் வளர்ச்சிக்கு இந் நிறுவனம் பெரும் பணியாற்றும் என எதிர்பார்க்கலாம். பனைவளத்தைப் பயன்படுத்தி கைவண்ணப் பொருள் உற்பத்தி, சீனி உற்பத்தி, மதுபான உற்பத்தி, போன்றன அண்மைக்காலத்தில் நன்கு விருத்தியடைந்து வருகின்றன.
கடல் வளம்
கடல் வளத்தைப் பல்வேறு வகையில் பயன்படுத்தலாமாயினும் இங்கு மின்பிடித்தலுக்காகவே இவ்வளம் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. எதிர்காலத்திலே மனிதனின் உணவுத் தேவையில் கணிசமான பங்கினை கடல் வளமே அளிக்குமென நம்பப்படுகின்றது. இலங்கையின் மீன்பிடித்தொழிலின் விருத்திக்கு அடிப்படையான பௌதிக வாய்ப்புகளை வடக்கு கிழக்கு மாகாணங்களே பெருமளவு கொண்டுள்ளன. 1100 மைல் நீள நெடிய கடற்கரையோரத்தை கொண்ட இலங்கையின் கண்டத்திட்டின் பரப்பளவு 12,000 சதுரமைல்களாகும். இதில் 73 வீத பரப்பளவு வடகிழக்கு மாகாணம் சார்ந்துள்ளது. தென்னிந்தியா வரை பரந்துள்ள வடபகுதி கண்டத்திட்டு மட்டும் நாட்டின் மொத்தக் கண்டத்திட்டுப் பரப்பளவில் 57 வீதத்தைக் கொண்டுள்ளது. வட கண்டத்திட்டில் அமைந்துள்ள பேதுரு கடல்மேடை, முத்துக் கடல்மேடை, உவாட்ஸ் கடல்மேடை, என்பன மீன்வளம் மிக்க பகுதிகளாகும். ஆழமற்ற இக்கடல் மேடைகளில் சூரிய ஒளி அடித்தளம் வரை ஊடுருவிச் செல்ல இயல்வதால் மீனுணவான நுண்ணுயிர்களின் வளர்ச்சி இப்பகுதிகளில் அதிகமாகும். இதுவே மீன்வளம் அதிகளவு காணப்படுவதற்குக் காரணமாய் அமைகின்றது. இப்பிரதேசக் கடற்கரையோரங்கள் குடாக்களையும், கடனீரேரிகளையும், பெருமளவு கொண்டுள்ளதால் மீன்பிடித்துறைமுகங்கள் ஏற்படுத்தவும் வசதியை அளிக்கின்றன. தென்மேற்கு மொன்சூன் வேகமாக வீசும் திசைக்கு ஒதுக்குப்புறமாக இப்பிரதேசம் அமைந்துள்ளதாலும் வடக்கு மொன்சூன் மென்மையாக வீசுவதாலும் வருடம் முழுவதும் இப்பகுதிகளில் மீன்பிடித்தல் இடம்பெறுவதற்குரிய சாதகமான நிலை உண்டு.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் வருடத்திற்கு 12,56980 அந்தர் உடன் மீனும் 1,10099 அந்தர் பதனிடப்பட்ட மீனும் பெறப்படுகின்றது. இலங்கையின் மொத்த உடன் மீன் உற்பத்தியில் இப்பிரதேசம் 52வீதத்தையும் பதனிடப்பட்ட மீன் உற்பத்தியில் 90வீதத்தையும் யுத்த காலத்திற்கு முன்னர் வழங்கிற்று. மீன்பிடித்தொழில் தவிர மன்னாரில் முத்துக்குளித்தலும், மட்டக்களப்பு பகுதிகளில் இறால் பிடித்தலும, யாழ்ப்பாணப் பகுதிகளில் கடலட்டை பதனிடுதலும் குறிப்பிடக்கூடிய வருமானத்தையளித்து வருகின்றன. கடலுணவு உற்பத்தியிலும் மீன்பிடித் தொழிலுக்கு வேண்டிய உபகரண உற்பத்தியிலும் காரைநகரில் அமைந்துள்ள சீநோர் நிறுவனம் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகின்றது.
இப்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலின் புராதன முறைகளே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நவீனமயப்படுத்தப்படின் மீன்பிடித் தொழில் பெருமளவு விருத்தியடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இயந்திர வள்ளங்களின் பாவனையை அதிகரித்தல், மீன்பிடித்தலில் புதிய முறைகளை பயிற்றுவித்தல், புதிய மீன்பிடி உபகரணங்களை மீன்பிடி தொழிலாளர்கள்; இலகுவில் பெற வழிவகை செய்தல், மீன்பிடித் துறைமுகங்களை அதிகரித்தல், மீனைப் பழுதடையாது பாதுகாக்கும் வசதிகளையும் போக்குவரத்து வசதிகளையும் அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படின் மீன்பிடித் தொழில் இப்பகுதியின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததோர் தொழிலாக அபிவிருத்தியுறுமென்பது திண்ணம். இது தவிர விலங்கு வேளாண்மையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள. பால் உற்பத்தி, இறைச்சி உற்பத்தி, தோல் பதனிடுதல் போன்ற தொழிற்றுறைகள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அதிகளவு விருத்தியடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்திலே கல்வித்திறன், தொழில்நுட்ப ஆற்றல் கொண்ட பண்பாட்டில் சிறந்த மக்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் இப்பிரதேசம் கொண்டுள்ள பொருளாதார வளங்களைத் திட்டமிட்ட முறையில் முறையாகப் பயன்படுத்தினால் விவசாயமும், கைத்தொழிலும் பெருமளவு விருத்தியுறும். தமிழர் தம் பிரதேச அபிவிருத்தியில் ஆர்வம் கொண்டு அயராது உழைப்பார்களேயாயின் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தை சுயநிறைவுப் பொருளாதார வளம் கொண்ட பகுதியாக மாத்திரமன்றி பல்வேறு மேலதிக உற்பத்திகளை ஏற்றுமதி செய்யக்கூடிய பூமியாக மாற்ற முடியும்.
ஆக்கம்: பேராசிரியர் இரா.சிவசந்திரன்
(புவியியற்றுறை பேராசிரியர்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்
E-mail:
Mobile: 0777 266075
- விவரங்கள்
- இரா.சிவசந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
சூழலைப் பேணுவதற்குரிய புதுப் பொருளாதார ஒழுங்கினை உலகலாவிய ரீதியில் கடைப்பிடிக்க வேண்டுமென்பது அண்மைக்காலத்தில் சூழலியலாளர்கள் வலியுறுத்தும் சிந்தனையாக உள்ளது. இச்சிந்தனைக்கான அடிப்படைக் காரணிகளையும், புதுப்பொருளாதார ஒழுங்கமைப்பில் விவசாயத்துறையிலே இயற்கை வேளாண்மை முறையைப் பின்பற்றக்கூடிய சாத்தியப்பாட்டையும் எமது பிரதேச சூழலில் இதனைப் பின்பற்றும் ஏதுநிலை பற்றியும் இக்கட்டுரை ஆராய்கிறது.
உலக சூழல் பிரச்சனைகள் எனும் போது பொதுவாக சுற்றுப்புறம் பற்றியும், சுற்றுப்புற சுகாதாரம் பற்றியும் பலர் பேசுவதுண்டு. ஆனால் சூழல் பிரச்சனைகளை புவிக்கோளம் சார்ந்த உலகளாவிய ரீதியில் அணுகுதல் வேண்டும். இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு புவிக்கோளம் சார்ந்த சூழல் அம்சங்கள் பற்றிய விளக்கங்கள் முதற்கண் அவசியம்.
சூழற்பாகுபாடும் பிரச்சனைகளும்.
புவிச்சூழலை கற்கும் வசதிகருதி நான்கு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம் நிலமண்டலம் (Lithosphere)> நீர்மண்டலம் (Hydrosphere), வளிமண்டலம் (Atmosphre), உயிரியல் மண்டலம் (Bioshpre) என்பன அவையாகும். இவை ஒவ்வொன்றும் சில துணைப்பிரிவுகளையும் கொண்டுள்ளன. நிலமண்டலத்தினுள் புவிச்சரிதம்(Relief), மண்(Soil), ஆகியனவும், நீர்மண்டலத்தில் மேற்பரப்பு நீர்(Surface water), தரைக்கீழ் நீர்(Under ground water), சமுத்திரங்கள்(Oceans) ஆகியனவும் அடங்கும். வளிமண்டலம் எனும்போது அதனுள் வானிலை காரணிகளும் (Climate) அடங்கும். உயிரியல் மண்டலத்தினுள் இயற்கைத்தாவரம் (Natural Vegetation), விலங்கினங்கள், பறவையினங்களின் வாழ்க்கை (Animals life) ஆகியனவும் மனிதனின் வாழ்வும் அடங்கும்.
உயிரினப் பாரம்பரியத்தின் பரிணாமத்தில் இன்றைய நிலையில் உள்ள மனிதன் தோற்றம் பெற்று மனித வாழ்வை ஆரம்பித்ததிலிருந்து புவித்தொகுதியின் சகல கூறுகளின் மேலும் அவன் தன் ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றான். மனித வாழ்வின் வரலாற்றுப் போக்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவன் வெவ்வேறுபட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே புவித்தொகுதிக் கூறுகளை தன் தேவைக்குரிய வளங்களாக மாற்றிப் பயன்படுத்தி வந்தமையை அறியமுடிகின்றது. புவித்தொகுதியும் மனித தேவைக்குரிய வளங்களை நீண்ட நெடுங்காலமாக அவனது வாழ்வுக்காக எப்பிரச்சனையுமின்றி வழங்கி வந்தது. மனித குலத்தின் இயற்கைக்கு மாறான அதிகரிப்பும் அவனது பேராசைக்குரிய தொழில்நுட்ப வளர்ச்சியும் புவித்தொகுதி வளங்களை பெருமளவு சுரண்டின. வீண்விரயமாக்கின. இதனால் வளங்கள் அழிந்தன. தேவைக்கு அதிகமாக வளங்கள் பயன்படுத்தப்பட்டதால் வளப்பற்றாக்குறை ஏற்பட்டது.
முறையற்ற வளப்பாவனையும் வீண் விரயமும் புவித்தொகுதிகளின் சகல கூறுகளையும் சிறிதுசிறிதாகப் பாதித்து புவித்தொகுதிச் சூழல் மாசடையும் நிலையை தோற்றிவித்தது. இம் மாசடைபு நிலை கி.பி 1700 முதல் கி.பி 1900வரை மேற்குலகில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சிக்காலத்தே துரித கதியில் அதிகரித்தது. நவீனயுகத்தின் ஆரம்பம் என பலராலும் கூறப்படும் கைத்தொழில் புரட்சிக்காலத்திலே தான் சூழல் மாசடைதல் மனித வரலாற்றில் என்றுமில்லாத வகையில் துரிதப்பட்டதென்பதிலிருந்து நவீனயுகத் தொழில்நுட்பத்தின் பல்வேறு கூறுகள் சூழலின் எதிரி என்பது புலனாகும். இதனால் அண்மைய சூழலியல் வாதிகள் சூழலுக்கு ஊறுவிளைவிக்காத சூழல் நட்பார்ந்த தொழில்நுட்பமே எதிர்கால உலகிற்கு அவசியம் என வலியுறுத்தி வருகின்றார்கள். குறிபப்பாக மனித வாழ்வை மாத்திரமல்ல, உயிரின வாழ்வையே நிலைநிறுத்துவதற்கான 21ஆம் நூற்றாண்டிற்கான தொழில்நுட்பம், சூழலைப் பேணுகின்ற அதனைப் பெருமளவு பாதிக்காத தொழில்நுட்பமாக விளங்கவேண்டுமென உலக சமூகத்திடம் விண்ணப்பித்து வருகின்றார்கள். இக் கோரிக்கைகள் உலக சூழல்மாநாடுகள் ஊடாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
புவிஉச்சி மாநாடு
சூழல் பற்றிய பன்முகப்பார்வையை ஜ.நாவின் கிளை நிறுவனங்கள் பல உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தி வருகின்றன. இந்தவகையில் 1992இல் இடம்பெற்ற புவிஉச்சி மாநாடு முக்கியத்துவம் பெறுகின்றது. இம்மாநாடு 1992 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பிறேசில் நாட்டின் றியோடிஜெனிரோ நகரில் இடம்பெற்றது. இவ் உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக சுவீடன் தலைநகரான ஸ்ரொக்காமில் 1972இல் ஒரு மாநாடு இடம்பெற்றது. இதிலே 113 நாடுகள் பங்குகொண்டன. 1992இல் இடம்பெற்ற றியோ மாநாட்டில் 160 உலகநாடுகள் பங்குகொண்டன. 18.000 இற்கு மேற்பட்டோர் பங்குபற்றுனர்களாக கலந்துகொண்ட இம் மாநாட்டில் ஏறத்தாழ 400.000 பேர் பல்வேறு நவீன தொலைத்தொடர்பு ஊடகங்கள் வழியாக பார்வையாளர்களாகப் பங்கு கொண்டனர். 8000ற்கு மேற்பட்ட பத்திரிகைகள் இம்மாநாடு பற்றி எழுதின. இம்மாநாட்டின் இறுதியில் செயற்றிட்டம் -21 (Agenda-21) எனும் நிகழ்ச்சித்திட்டம் முன்வைக்கப்பட்டது.
21ஆம் நூற்றாண்டில் உலக சூழலைப் பேணுவதற்கு உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி இது விரிவாக குறிப்பிடுகின்றது. மேற்படி மாநாடு வலியறுத்திப் பல்வேறு விடயங்களைச் சுருக்கமாக தொகுத்து நான்கு தலைப்புகளின் கீழ் ஆராயலாம்.
01. உயிரியல் பன்முகத் தன்மையைப் பேணுதல்
02. உயிரினங்களுக்கு ஆதாரமான காடுகளைப் பேணுதல்
03. பச்சைவீட்டுத் தாக்கமுள்ள வாயுக்களின் வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான சர்வதேச சட்டங்களை இயற்றுதலும் அவற்றை நடைமறைப்படுத்துதலும்.
04. உலகில் புதிய பொருளாதார ஒழுங்கை உருவாக்குதல்.
உயிரியல் பன்முகத் தன்மையைப் பேணுதல் எனும் போது விரைவாக அழிவடைந்துவரும் புவியிலுள்ள விலங்குகளை மற்றும் தாவர ஜீவராசிகளை அழியவிடாது பேணிப்பாதுகாப்பதை வலியுறுத்துவதாக அமைகின்றது. உலகின் ஏறத்தாழ 50-100 இலட்சம் வரையிலான உயிரின வகைகள் உள்ளனவெனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய விஞ்ஞானயுகத்துள் இவற்றுள் 10 வீதமான உயிரினவகைகளே ஆய்வுக்குட்பட்டுள்ளன. இவற்றுள் 1 வீதமானவையே நுண்ணாய்வுக்குட்பட்டவை. ஏனையவை மறைவளங்களாக (Latent Resource) உள்ளன. எதிர்கால சந்ததியினர் இவற்றை முறையாக ஆராய்ந்து பல்வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்த முடியம். ஆய்விற்குட்படாமலேயே இவை அழிவடைந்துவிடின் எதிர்கால மனித குலத்திற்கு இன்றைய மனிதன் துரோகமிழைத்தவனாவான். மேலும் உயிரினங்களின் பாரம்பரிய மரபுக்கூறுகளைப் பிரித்தெடுத்து தேவையான வகையில் வளர்க்கும் மரபுக்கூற்றுப் பொறியியல் அண்மைக்காலங்களில் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. உலகம் எதிர்நோக்கும் உணவு நெருக்கடிக்கு இத்துறை வளர்ச்சி தீர்வாக அமையுமென விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள். உயிரினப் பன்முகத் தன்மையை இன்றைய மனிதகுலம் பேணிக்காத்திடல் இன்றியமையாத தேவை எனலாம்.
புவிஉச்சி மாநாடு வலியுறுத்திய இரண்டாவது அம்சம் உலகின் காடுகளைப் பேணுவதாகும். உலகை பசுமையாக வைத்திருப்பது: மழையை வருவிப்பதற்கும் வெப்பத்தை மட்டுப்படுத்தி புவியை பாலைவனமாகாது பாதுகாப்பதற்கும் உயிர்மண்டலத்தை பேணுவதற்கும் அவசியமாகும். மண்-தாவரம் ஏனைய உயிரினவாழ்வு என சூழலியல் முறைமை செயற்படுகின்றது. உலகில் காடுகள் இயற்கையாகவும், செயற்கையாகவும் தினம் தினம் பெருமளவு அழிவடைந்து வருகின்றன. மேலும் உலக நிலப்பரப்பில் இன்று 6வீத பரப்பளவில் பரந்துள்ள அயனக்காடுகளில் உலகின் மொத்த உயிரின வகைகளில் 60 வீதமானவை காணப்படகின்றன. இத்தரவுகள் காடுகளைப் பேணவேண்டிய தன் அவசியத்தை உணர்த்தப் போதுமானவை.
பச்சைவீட்டுத் தாக்கமுள்ள வாயுக்களின் வெளியேற்றம், கைத்தொழில் புரட்சியை தொடர்ந்து அதிகரித்துவந்து இன்று புவியை ஒரு ஆபத்தான கட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. புவியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எடுத்துக்காட்டாக குளோரோ புளோரோ காபன் எனும் வாயு வெளியேற்றத்தால் வளிமண்டலத்தில் 15 -30 மைல் உயரத்திலுள்ள ஓசோன் வாயுப்படையில் துவாரங்கள் உருவாகியுள்ளன. புவியில் தீங்குவிளைவிக்குமென கருதப்படுகின்ற புறஊதாக் கதிர்வீச்சுத் தாக்கத்தை ஓசோன் படையே பாதுகாக்கின்றது. புவியில் தற்போது புறஊதாக் கதிர்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் தான் சருமநோய்கள், புற்றுநோய்கள் என்பனவும் இனம்காணமுடியாத வேறுநோய்களும் அதிகளவில் காணப்படுகின்றன என மருத்துவவியலாளர்கள் எச்சரிக்கை செய்கின்றார்கள். பச்சைவீட்டுத் தாக்கமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த 85வீத வாயுக்களை கைத்தொழில் நாடுகளே வளியில் பரவவிடுகின்றன. உலகில் 30வீதக் குடித்தொகையைக் கொண்ட இந்நாடுகளின் வர்த்தக நோக்கம் கொண்ட அபரிமிதமான தொழில் உற்பத்திகளின் விளைவாக புவியின் வளிமண்டலம் முழுவதும் நச்சுப்புகையால் கனத்துவருகின்றதெனலாம்.
விவசாயம், கைத்தொழில் சேவைகள் எனும் பொருளாதார உற்பத்தி துறைகளில் சூழல் நட்பார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்கால அபிவிருத்தியை மேற்கொள்ளவேண்டுமென்பதே சுருக்கமாகப் புதுப் பொருளாதார ஒழுங்கின் அடிப்படை எனலாம். இவை பொதுவாக நிலைத்துநிற்கக்கூடிய அல்லது பேண்தகு அபிவிருத்தியாக (Sustainable Development) விளங்கவேண்டுமென்பதே சூழலியலாளர்களின் எதிர்பார்ப்பாகும். இவர்கள் கைத்தொழில்துறையின் எரிசக்தியாக சூழலைப் பேணுவதும் நிலைத்துநிற்கக்கூடியதுமான ஞாயிற்றுச் சக்தி, காற்றுச்சக்தி, அலைசக்தி போன்றவற்றைப் பயன்படுத்துவதை விரும்புகின்றார்கள். விவசாயத்துறையைப் பொறுத்தவரையில் இரசாயன உள்ளீடுகளைத் தவிர்த்து நிலைத்து நிற்கும் வேளாண்மை அபிவிருத்தியை அல்லது இயற்கை வேளாண்மை அபிவிருத்தியை வேண்டிநிற்கின்றார்கள்.
இயற்கை வேளாண்மை
பசுமைப்புரட்சியால் விவசாயத்துறையில் துரிதஎழுச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்க அதன் எதிர் விளைவாக உயிர் சூழல்மண்டலம் நஞ்சாகிக் கொண்டிருந்தது. பசி பட்டினியால் உலகில் சிவப்புப்புரட்சி ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவியபோது மூன்றாம் உலகின் உணவு உற்பத்தியை அதிகரிக்க மேற்குலகத்தால் பசுமைப்புரட்சி அவசரமாக புகுத்தப்பட்டது எனவும் விமர்சிப்பர். றொக்பெல்லர் போட் ஆகிய பல்தேசிய நிறுவனங்கள் பசுமைப்புரட்சி என்ற நடவடிக்கைகளுக்கு உதவிவந்தமை இவ் ஜயுறவை வலியுறுத்தும். இவ் ஆய்வின் பெறுபேறான பசுமைப்புரட்சியின் வித்தான புதிய இனவிதைகளைக் கண்டுபிடித்தமைக்காக 1970 ஆம் ஆண்டில் நோர்மன் போர்லாங் அவர்களுக்கு நோபல்பரிசு கிடைத்தது.
பசுமைப்புரட்சி நடவடிக்கைகள் விவசாயத்துறையில் இரசாயனத்தொழில்நுட்ப மாற்றங்களையும் பொறிமுறைத் தொழில்நுட்ப மாற்றங்களையும் புகுத்தின. இவை மூன்றாம் உலக நாடுகளுக்குப் புதியன என்பதோடு இந்நாடுகளின் பாரம்பரிய விவசாயத்துறையை மேற்கு நாடுகளின் நவீன உற்பத்திகளின்றி வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியாத நிலைமைகளையும் தோற்றுவித்தன. இரசாயன உரப்பாவனை, களைகொல்லிப் பாவனை, கிருமிநாசினிப் பாவனை என்பன மண், நீர் நிலைகள், தாவரம் என்பனவற்றையும் நஞ்சாக்கிற்று. இதனால் எழுபதுகளில் உச்சம்பெற்றிருந்த பசுமைப்புரட்சி நடவடிக்கைகள் எண்பதுகளில் விமர்சனத்தை எதிர்நோக்கி தொண்ணூறுகளில் மாற்றத்தை வலியுறுத்தி நிற்கின்றன. இதனாலேயே இன்று உலகம் மீண்டும் இயற்கைவேளாண்மை பற்றி சிந்திக்கத் தலைப்பட்டுள்ளது.
இயற்கைவேளாண்மையை நிலைத்துநிற்கக்கூடிய வேளாண்மை, நிலையான வேளாண்மை, பேண்தகு வேளாண்மை என்று பலவாறு வழங்குவர். இயற்கை வேளாண்மை பழமைக்குத் திரும்புதல் எனப் பொதுவாக கூறப்பட்டாலும் இன்றைய உலக நிலவரங்களை அதாவது குடித்தொகை அதிகரிப்பு, உணவுப் பற்றாக்குறை, சூழல் நெருக்கடி என்பனவற்றை மனங்கொண்டு புதுப்பொருளாதார ஒழுங்கின் அடியாகச் சிந்தித்ததன் விளைவே இது எனலாம். இயற்கை வேளாண்மையின் தந்தை என ஜப்பானியக் காந்தி மாசானபு ஃபுகாகோ (Masanabu Fukuoka)வைத் தரிசிக்கலாம். இவர் இயற்கைவேளாண்மையை வலியுறுத்தி எழுதிய “ஒற்றை வைக்கோல் புரட்சி” (One Straw Revolution -1975) என்ற நூலும் “இயற்கைக்கான வழி” (The road to nature – 1977) என்ற நூலும் மிகவும் பிரபலமானவை. இந்நூல்கள் பலமான ஆதரவையும் கடும் விமர்சனத்தையும் எதிர்கொண்டவை. இவர் வழியில் இன்றும் பலர் சிந்தித்து வருகின்ற போதிலும் பில் மோலீசின் (Bill Mollision) டேவிட் ஹம்ரன் (David Homton) ஜே.ஜே றோடேல் (J.J.Rodale) என்பவர்களும் மூன்றாம் உலகைச் சேர்ந்த இன்னும் சிலரும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
மாசானபு ஃபுகாகோ இயற்கை வேளாண்மை பற்றி வெறும் போதனை செய்யவில்லை. அதன் சிறப்பை செயல்முறையூடாகக் காட்டுகின்றார். ஜப்பானில் ஹிகோதீவின் மலைச்சாரலில் இவரது 15 ஏக்கரளவான விவசாயப் பண்ணை அமைந்துள்ளது. இது முற்றுமுழுதான இயற்கை விவசாயப் பண்ணையாக விளங்குகின்றது. நுண் உயிரியலாளராகவும் விவசாய சுங்க அதிகாரியாகவும் பணியாற்றி இவர், 25 வயதில் அவற்றைத் துறந்து இயற்கை வழி விசாயத்தில் நாட்டம் கொண்டார். இவர் ஒரு பொளத்த மதத்தினராக விளங்கியமையும் இயற்கையில் அதிகம் நாட்டம் கொள்ள வைத்ததெனலாம். அவரது இயற்கை நேசிப்பினை அவரது நூலில் விரவிவரும் பின்வரும் கூற்றுக்களால் உணர்ந்து கொள்ளமுடியும்.
மனிதர்களால் எதையும் அறிந்துகொள்ளமுடியாது என்பதையும் இயற்கையைப் புரிதல் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட விடயம் என்பதையும் இறுதியில் அறிவதற்காகவே நாம் கடினமாக கற்கவேண்டியுள்ளது,
வாழ்க்கை என்பது இயற்கையிலிருந்து விலகிய ஒன்றாக இருக்கக்கூடாது. வேளாண்மையின் இறுதி இலட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல. மனித இனத்தை வளர்த்து முழுமையடையச் செய்வதே….
மனிதன் தனது சொந்த விருப்பத்தைவிட்டு, இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் இயற்கை அவனுக்குச் சகலதையும் அளிக்கும். மக்கள் இயற்கை உணவை விட்டு எப்போது செயற்கை உணவைத் தேர்ந்தெடுத்தார்களோ அன்றே அவர்கள் தம் அழிவுக்கான தேதியைக் குறித்துவிட்டார்கள்.
Masanobu Fukuoka,(1975) one straw Revolution.
இயற்கை வேளாண்மையை ‘ஒன்றும் செய்யாமல் ஒரு வேளாண்மை’ என்று குறிப்பிடும் மாசானபு ஃபுகாகோ தான் தன் வயலில் வேலை செய்யும் போது ‘இதனையும் செய்யாமல் இருந்தால் என்ன?’ என்ற கேள்வியைத் தன் மனதில் கேட்டுக்கொண்டே செய்வதால் இயற்கை வழியில் அனைத்தையும் விட்டுவிட முடிகின்றது என்கிறார். தன் பண்ணையில் உலாவரும் போது இயற்கையாக வளர்ந்த நெற்கதிர் ஒன்று நவீமுறையில் பயிராகும் நெல்லைவிட மிக்க ஆரோக்கியமாகவும், அதிக கதிர்களைக் கொண்டதாகவும் விளங்கியதைக் கண்டே தான் இயற்கைவழி விவசாயத்தின்பால் அக்கறை கொண்டதாக கூறும் இவர், புவியிலிருந்து வரும் அனைத்தும் புவிக்கே திரும்பிவிட வேண்டும். நெற்கதிர்களை எடுத்துக்கொண்டு ஏனையவற்றை அப்படியே விட்டுவிட வேண்டும் எனக் கூறுகின்றார். அவர் முன்வைக்கும் இயற்கை வேளாண்முறையில் நான்கு அம்சங்கள் முக்கியமானவை.
மண்வளம் பேணுதல் பற்றிக் கூறும் போது பயிர்வளர்ச்சிக்கு பண்ணையை உழ வேண்டியதில்லை. தாவரங்களின் வேர்களும், மண் புழுக்கள், முயல் மற்றும் ஏனைய சிறு விலங்கினங்கள் என்பன இயற்கையாகவே மண்ணை உழுகின்றன. உக்கவைக்கும் நுண்ணங்கிகளின் பெருக்கம் மண் வளத்தையும் பெருக்கும் என்கின்றார்.
பயிர் வளர்ச்சிக்குரிய உரம் பற்றிக் குறிப்பிடும் போது நிலத்தை அதன் போக்கில் விடுவோமாயின் இயற்கையாகவே அது மண்ணில் உரச்சத்தை நிர்வகித்துக்கொள்ளும். பண்ணையில் வளரும் மிருகங்களும், பறவையினங்களும் இயற்கையாக உரத்தை வழங்கும். வைக்கோலை வெளியேற்றாது விட்டால் அது உக்கி உரத்தை வழங்கும் எனக் கூறும் அவர், காட்டில் செழித்து வளரும் மரங்களுக்கு நாம் உரமிடுகின்றோமா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றார்.
களைகளின் வளர்ச்சி இயற்கை சமச்சீர்த்தன்மையைப் பேணும் ஒரு நடவடிக்கையே. அதனை உழுது அழிக்க எண்ணினால் அது பெருகுமேயன்றிக் குறையாது. பருவப்பயிர்களுக்கிடையே ஊடுபயிர்களை வளர்ப்பது வைக்கோலால் நீண்டகாலம் வயல் பரப்பை மூடிவைத்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகள் களையைக் கட்டுப்படுத்தும் என்கின்றார்.
பூச்சிக்கட்டுப்பாடு பற்றிக் குறிப்பிடும் போது மாசானபு ஃபுகாகோ இயற்கையான சுற்றுச் சூழலில் வளரும் பயிர்க்ள் ஆரோக்கியமானவையே. இயற்கையில் பூச்சிகளுக்கு எதிர்ப் பூச்சிகள் உண்டு. நாம் கிருமிநாசினி தெளிப்பதால் அனைத்துப் பூச்சிகளும் அழிந்து இயற்கைச்சமநிலை அற்றுப்போகின்றது. சிலந்திவலை பின்னி என் பண்ணை முழுவதையும் பாதுகாப்பதை நீங்கள் நேரில் வந்தால் பார்க்க முடியம். எனது பண்ணை சிலந்திவலைப் பரவலால் மின்னிக்கொண்டிருப்பதை பார்ப்பீர்கள். மயிர் கொட்டிகளை செம்பகம் அழிக்கும். எலிகளை ஆந்தைகள் அழிக்கும். தவளை, தேரை என்பனவும் பூச்சிகளிலிருந்து பயிர்களைக் காக்கும். இயற்கையின் விந்தைகளை எம்மால் பூரணமாக விளக்க முடியாது என்று வலியுறுத்துகின்றார்.
மாசானபு ஃபுகாகோவின் பண்ணையின் பெரும்பரப்பு பல்வகை பழ மரங்களைக் கொண்டதே. இவை ஒன்றுடன் ஒன்று இயற்கையாக இணைந்து அற்புதமாக வளர்ந்துள்ளன. இங்கு உற்பத்தியாகும் பழங்கள் இயற்கையாக ஒழுங்கற்ற வடிவங்களில் காணப்படும். சில சுருக்கம் விழுந்தும் வாடியும் இருக்கும். இவ் இயற்கைப்பழங்களுக்கு நவீனமுறையில் உற்பத்தியாகும் பழங்களைவிட ஜப்பானில் நல்ல சந்தை வாய்ப்புகள் உண்டு. நவீமுறையில் உற்பத்தியாகும் பழங்கள் கவர்ச்சியாக இருப்பதற்காக மெழுகு கூடப் பூசுகின்றார்கள். வாடாது இருக்க இரசாயன கலவைகளைத் தெளிக்கின்றார்கள். இவை எல்லாம் மக்களின் உணவை நஞ்சாக்கும் நடத்தைகள் என மாசானபு ஃபுகாகோ சாடுகிறார்.
இவரது பொருளாதார சிந்தனைகள் நவீனபொருளிளயலாளரது சிந்தனையிலிருந்து மாறுபட்டவை. விவசாய நடவடிக்கைகளில் குறைந்தளவு மக்கள் இருப்பது ஒரு அபிவிருத்தி குறிகாட்டியென நவீன பொருளியலாளர் கூற இவர் 80-90 வீத மக்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டுமெனக் கூறுகின்றார். பொருளாதார வளர்ச்சி வீத அதிகரிப்பைப் பற்றி அலட்சியப்படுத்தும் இவர் வளர்ச்சி வீதம் 0 ஆக இருப்பதே நிலையான பொருளாதார வளர்ச்சி என வாதிடுகின்றார். மாசானபு ஃபுகாகோ நவீன உலகில் பழமையைப் பேணுவதன் மூலம் புதுப்பொருளாதார ஒழுங்கை உருவாக்கமுடியுமென்று சொல்லாலல்ல செயல்மூலம் நிரூபித்து வருகின்றார்.
சூழலுக்கு ஊறுவிளைவிக்காத நிலைத்து நிற்கும் வேளாண்மை பற்றிய கருத்துக்களை உலகிற்கு பரப்பி வரும் இன்னொரு முக்கியமானவர் பில் மோலீசன் (Bill Mollisipon) ஆவார் இவரும் டேவிட் ஹோம்ரன் என்பவரும் இணைந்து ‘ஃபோமா கல்சர்’ என்ற நூலை 1978 இல் வெளியிட்டனர். இதன் அர்த்தம் நிலைத்துநிற்கும் பயிர்ச்செய்கை (Permnanent Culture) என்பதாகும். இவர்கள் இந்நூலில் மாசானபு ஃபுகாகோ சிந்தனைகளால் கவரப்பட்டுள்ளமை நன்கு வெளிப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் டயால்கம் (Taylgum) என்ற இடத்தில் நிலைக்கும் பயிர்ச்செய்கை நிறுவனம் (Perma Culture Institute) என்ற அமைப்பினை நிறுவி அதனூடாக மேற்படி வேளாண் முறைகளை உலகிற்குப் பரப்பி வருகின்றார்கள். உலகில் இவர்களுக்கு 54 நாடுகளில் கிளை நிறுவனங்கள் உண்டு. இந் நிறுவனங்களின் மூலம் நிலைக்கும் வேளாண்மையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. முறையான பாடத்திட்டம் மூலம் வழங்கப்படும் இப்பயிற்சியில் விவசாயச் செய்முறை அத்துடன் இணைந்த தோட்டக்கலை, கட்டிடக்கலை, போக்குவரத்து, நிதி, சமூக அபிவிருத்தி திட்டங்கள், விரயமற்ற உற்பத்தி, சுற்றுவட்ட முறையில் வளங்களைப் பயன்படுத்துதல். உள்ளுர் பாரம்பரிய தாவர வித்துக்களை மீண்டும் அறிமுகப்படுத்துதல், தரிசான நிலங்களை வேளாண்மைச்செய்கை மூலம் சீர்செய்தல் என்பன அடங்கும். இவற்றை ஒழுக்கநெறியுள்ள திட்டமிட்ட விஞ்ஞானமாகக் கொண்டே பயிற்றிவிக்கின்றார்கள்.
நிலைக்கும் பண்பு புவியின் பாதுகாப்புக் குறித்த ஒழுக்கநெறி மாத்திரமன்றி மனிதபாதுகாப்புக்குறித்த ஒழுக்கநெறியுமாகும். இவர்களது போதனையில் நுகர்வது போக எஞ்சிய அனைத்தும் மறுமுதலீடாக புவிக்கே திரும்பி விடவேண்டும். புவியைப் பேணும் ஒழுக்க நெறி தார்மீக நெறியாகவும் கல்வி நெறியாகவும் போற்றப்படவேண்டும் என்பது இவர்களது வேண்டுகோளாகும். எந்த ஒரு அரசுக்கும் அல்லது அரசியல் அமைப்புக்கும் அழிந்துவரும் புவிபற்றி அக்கறையே இல்லை. நிலம் என்றால் அதில் எந்தளவு பணம் பெறலாமென்றே திட்டமிடுகின்றார்கள் என இவர்கள் சாடுகின்றார்கள்.
பில் மோலீசின் நவீன விவசாயத்தை இறந்து கொண்டிருக்கும் விவசாய முறை என சாடுவதோடு நவீன விவசாயம் வர்த்தக நோக்கத்தைக்கொண்ட, அழிவுக்கு வழிகோலும் முறைகளை உள்ளடக்கிய, எரிபொருளை வீணடிக்கின்ற விவசாயம் என்கின்றார். மேலும் அவர் நவீன விவசாயம் முட்டாள் தனமான நோக்கங்களுக்காக தேவையற்ற பயிர்களை வளர்க்கின்றது. சோயா பயிர் உற்பத்தி கால்நடைக்கு உணவாகின்றது. மீனைப் பொடிசெய்து பன்றிகளை வளர்க்கின்றார்கள். மாட்டிறச்சி வர்த்தகத்தால் உலகின் புல் நிலங்கள் அழிந்து பாலைநிலம் பரவி வருகின்றது என்கிறார். மேலும் நவீன விவசாயச் செய்கை தொழிற்சாலை உற்பத்திக்கான மூலப்பொருளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதே தவிர மக்களுக்கு உணவு வழங்குவதையல்ல. புவியின் மொத்த நிலப்பரப்பில் 4வீத பரப்பளவில் உணவு உற்பத்தி முறையாகச் செய்யப்பட்டாலே உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படமாட்டாது என உறுதிபடக் கூறுகின்றார்.
நவீன முறையில் விவசாயம் செய்தவர்கள் இம் மாற்றுமுறைக்கு வரும் போது ஆரம்பத்தில் உற்பத்தி குறையும் என்றாலும் பின்னர் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கும். நவீனமுறையில் இரசாயனப் பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்ததன் காரணமாக 5 ஆண்டுகள் நிலைமாறும் நிலை நிலவும். ஆறாவது ஆண்டிலிருந்து உற்பத்தி இருமடங்காக உயரும். வேளாண்மையுடன் காடுவளர்ப்பும் இணைந்துள்ளதால் நைட்ரசன் சத்து நிலங்களுக்கு ஊட்டத்தை வழங்கும். தானியங்கள், பழங்கள், காய்கறிகள், கூடவே மரக்கறிகள் நிறைந்த வேளாண்பண்ணை முறைகளையே பில் மோவீசின் குழுவினர் வலியுறுத்துகின்றனர். இவர்களது பண்ணை சுயநிறைவு கொண்டது. உரத்தின் தேவையோ, களை பூச்சி நாசினிகளின் தேவையோ எழுவதில்லை. இவர்களது பயிர்ச்செய்கை முறை பரந்துபட்டு பயிர்ச்செய்கை முறை (Extensive Agriculture) ஆகும்.
எவ்வளவு மோசமான தரிசு நிலம் என்றாலும் அந்நிலத்தை பசுமையாக்கக்கூடும் என கூறும் இவர்கள் பாறை நிலம், அதிக ஈரம் கொண்டநிலம், உவர்நிலம், வரண்ட பாலைநிலம், என்பனவற்றில் வேளாண் பண்ணைகளை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர். ஜ.நாவின் உணவு விவசாய நிறுவனத்தின்( F.A.O) பயிற்சியாளர் தொகையைவிட தங்கள் நிறுவனத்தின் பயிற்சியாளர் தொகை அதிகமென பெருமைப்படும் பில் மோலீசன் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 1000 கிராமங்களில் ஃபேமாகல்சர் பயிற்சியாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள் என்கின்றார். ஏறத்தாழ ஒரு இலட்சம் இந்திய விவசாயிகள் பில் மோலிசனின் பண்ணைத்திட்ட முறைகளைப் பின்பற்றி பயனடைந்து வருகின்றார்கள். மூன்றாம் உலக நாடுகளுக்கு இவரது வேளாண் முறைகள் பொருத்தமானவை என கருதப்படுகின்றது. நிலைத்து நிற்கக்கூடிய இவ்வகை வேளாண்முறைகள் மீது நிஜமான அக்கறை செலுத்தும் காலம் வருமெனக்கூறும் இவர் 2000 ஆம் ஆண்டின் பின் நவீன விவசாய முறை மெல்லமெல்ல இறந்து நிலைத்துநிற்கும் விவசாயமே நிலைபெறும் என சூளுரைக்கின்றார்.
அமெரிக்காவிலிருந்தும் ஒரு குரல் இயற்கை வேளாண்மையில் அக்கறை கொண்ட ஒலிப்பு ஆச்சரியத்தை அளிப்பதே. அக்குரல் “றோடேல் நிறுவனத்தின்” குரலாகும். ஜே.ஜே. றோடேல் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிறுவனத்தை அவரது மகன் ஜோன் றோடேல் தற்போது நடத்தி வருகின்றார். அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் எம்மாமவுஸ் என்ற இடத்தில் இத்தொண்டு நிறுவனம் அமைந்துள்ளது. இயற்கை வேளாண்மையின் சிறப்பை உலகிற்கு பரப்புவது மாத்திரமன்றி மூன்றாம் உலக வசதிகுறைந்த ஏழைமக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான சமூகநலத் திட்டங்களையும் இந்நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
சூழலுக்கு ஊறுவிளைவிக்காத வேளாண் செய்கையை அடிப்படையாகக்கொண்ட சுயநிறைவு பெறத்தக்க அபிவிருத்தித்திட்டங்களிற்கு இந்நிறுவனம் உதவி வழங்கி வருகின்றது. மூன்றாம் உலகநாடுகளில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் மக்கள் பயன்பெறும் பொருட்டே பெரும்பாலும் இவ் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
றோடேல் நிறுவனத்தினர் உலகில் பரப்பிவரும் வேளாண்முறைக்கு “புனர் ஜென்ம வேளாண்மை” (Rebirth Agriculture) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர்களது நிறுவனமே மாசானபு ஃபுகாகோவின் ஒரு வைக்கோல் புரட்சி ( One Straw Revolution) என்ற நூலையும் இயற்கைக்கான வழி (The Road to nature) என்ற நூலையும் ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் மூலம் நூலாசிரியரை அனைத்துலகத்திற்கும் அறிமுகமாக்கியது.
றோடேல் நிறுவனம் நிலைத்து நிற்கும் வேளாண்மைப் பண்புகளை உலகத்தவர் அறிதல் பொருட்டு “உயிர்ப்பு வேளாண்மை” (Organic Farming) என்ற சஞ்சிகையினையும், புதிய பண்ணை (New Farm) என்ற செய்திப்பத்திரிகையையும் வெளியிட்டு வருகின்றது. மேலும் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தத்தக்க பல்வேறு நூல்களையும் இந்நிறுவனம் காலத்துக்கு காலம் வெளியிட்டு வருவதோடு சர்வதேச கருத்தரங்குகளையும் ஒழுங்கு செய்து வருகின்றது.
இயற்கை வேளாண்மை பற்றி முதலாம் உலக நாட்டைச் சேர்ந்தவர்களைவிட மூன்றாம் உலகநாட்டினரே கூடிய அக்கறை கொள்ளவேண்டும். யதார்த்த நிலை கவலை தருவதாக உள்ளது. அரசாங்க மட்டத்தில் திட்டமிடுவோரும் இதுபற்றி அலட்சியமாகவே இருக்கின்றார்கள். இங்குள்ள அரசசார்பற்ற நிறுவனங்களும் நிதி நெருக்கடியாலும் நிபுணத்துவக் குறைபாட்டாலும் இவ்விடயம் தொடர்பாக அதிகளவில் அக்கறை செலுத்த முடியாதுள்ளது. இருப்பினும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நிலைத்து நிற்கும் வேளாண்மையால் சில நிறுவனங்கள் கவனம் கொள்கின்றன.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதபாத் நகரில் கலாநிதி அனில்குப்தாவின் நிறுவனம் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகின்றது. இவர்கள் ‘நம்வழி வேளாண்மை’ என்ற மகுடவாசகத்தை முன்வைத்து சூழல்பேண் வேளாண் அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிறுவனத்தின் கிளைகள் தமிழ்நாட்டில் மதுரை, ஒரிஸ்ஸாவில் புவனேஸ்வர், கேரளாவில் கோட்டயம், பூட்டானில் திம்பு, உத்தரப்பிரதேசத்தில் சஹாரன்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இவர்கள் காந்திய நிறுவனங்களுடனும் இணைந்தும் பணியாற்றி வருகின்றார்கள். அனில் குப்தாவின் நிறுவனத்தினர் நம்வழி வேளாண்மை பற்றி பிரசாரம் செய்யும் அளவிற்கு மாதிரிப்பண்ணைகளை அமைத்து செயல்முறையில் காட்டும் தன்மை குறைவாகவே உள்ளது.
தமிழ்நாட்டில் மனீந்தர்பால் என்பவர் பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்தின் துணையுடன் நடத்தும் 100 ஏக்கர் பரப்பளவுள்ள குளோரியாப்பண்ணை, புதுவையில் அமைந்துள்ள ஏ.எஸ் சட்டார்ஜியின் இயற்கைப்பண்ணை, கீரானூரில் நாம்மாழ்வார் நடத்தும் லெய்சா (Leisa) பண்ணை, உடுமலைப்பேட்டையில் சி.ஆர் ராமநாதனின் விவசாய காட்டியல் (Agro Forestry) பண்ணை, எம்.எஸ் சுவாமிநாதன்ஆராய்ச்சி நிறுவனத்தினர் நடத்தும் சில பண்ணைகள், வீரனூர் சுற்றுச்சூழல் சங்கப் பண்ணை என்பன இந்தியாவில் இயற்கை வேளாண்முறைகளை முன்னெடுப்போருக்க வழிகாட்டும் பண்ணைகளாக விளங்குகின்றன.
இலங்கையில் கலாநிதி ஆரியரத்தினாவின் சர்வோதய இயக்கம் நடத்தும் சில விவசாயப் பண்ணைகளும் மன்னாரிலுள்ள “ஸ்கந்தபாம்” எனும் பண்ணையும் இயற்கை வேளாண்வழியை பின்பற்றத் தூண்டுதலளிக்கும் எம்மவரின் முயற்சியெனக் குறிப்பிடலாம்.
முடிவுரை
எமது பிரதேசத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிவந்த யுத்த நெருக்கடியால் நாம் பல இன்னல்களை எதிர்நோக்கினாலும் சில நன்மைகளும் விளைந்துள்ளன. எரிபொருள் உரம், களை நாசினி, கிருமிநாசினி என்பவற்றின் தட்டுப்பாட்டால் எமது விவசாய நிலங்கள் நஞ்சாகாது பேணப்பட்டு வந்துள்ளமை குறித்துரைக்கத்தக்க நல்விளைவுகளாகும். இந்நிலங்கள் நிலைத்துநிற்கும் பண்பு கொண்ட இயற்கை வேளாண்மைக்குரிய அடிப்படைகளை கொண்டுள்ளன. வலிகாமத்தில் வடபகுதிச்செம்மண் வலயம், தீவுப்பகுதி பிரதேசம் என்பன மக்கள் புலம்பெயர்ந்ததால் இரு தசாப்தங்களாக பலவழிகளில் இயற்கைவழி மாற்றத்தி;றகுள்ளாகி சீர்பெற்றுள்ளன. இவ் இடங்களில் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளும் இக்காலகட்டத்தில் அரசும், அரசசார்பற்ற நிறுவனங்களும் 21ஆம் நூற்றாண்டுக்குரிய சூழல்பேண் இயற்கைவேளாண் வழிமுறைகளை மேற்குறித்த பகுதிகளில் அறிமுகப்படுத்துதல் அறிவுடைமையாகும்.
பொதுவாக யாழ்ப்பாண விவசாய மக்கள் மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தகாலத்தில் உரம், நாசினிப்பாவனையின்றி அதிகளவு விவசாய உற்பத்திகளைப் பெற்றமை கவனத்திற்குரியது. தீவுப்பகுதியை பொறுத்தவரையில் மீள்குடியமர்ந்தோர் குறைவு. ஆனால் விவசாய நிலங்கள் அதிகம் உள. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி சூழல்பேண் இயற்கை வேளாண் பண்ணைகளையும், விலங்கு வளர்ப்பு பண்ணைகளையும் அங்கு உருவாக்குதல் சாத்தியமே. இக்கட்டுரையாளர் தீவுப்பகுதியை சேர்ந்த வேலணைக்கிராமத்தில் “இராசரத்தினம் உருக்குமணி” பசுமைக்கிராமம் ஒன்றை உருவாக்கி வருவதையும, அங்கு இயற்கை வேளாண்மை முறையில் உபஉணவு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதையும் முன்னுதாரணமாக கொள்ளலாம்.
யாழ்ப்பாண நகரச்சந்தையில் உடன் விற்பனை செய்யக்கூடிய காய்கறி உற்பத்தி, விலங்கு வேளாண் உற்பத்தி, மீன்பிடி உற்பத்தி என்பனவற்றை தீவுப்பகுதியில் மேற்கொள்ள உதவி வழங்குவதன் மூலம் தீவுப்பகுதியை அபிவிருத்தி செய்வதோடு யாழ்ப்பாண நகர மக்களில் ஒருபகுதியினரின் உணவுத் தேவையினையும் பூர்த்தி செய்ய முடியும்.
பொதுவாக வடகீழ் மாகாண புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் என்பவற்றிற்காகத் திட்டமிடுவோரும் ஆலோசனை வழங்குவோரும் இப்பிரதேசங்களில் நிலைத்து நிற்கும் பண்பு கொண்ட 21ஆம் நூற்றாண்டிற்குரிய சூழல் பேண் வேளாண் அபிவிருத்தியை முன்னெடுத்தல் பயன்தருமா என்பது பற்றியும் எவ்வெவ் இடங்களில் எந்தெந்த வழிகளில் இதனை அமுல் நடத்த முடியுமென்பது பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டு தெளிந்த நல்லறிவைப் பெறுதல் வேண்டும்.
ஆக்கம்:- பேராசிரியர் இரா.சிவசந்திரன்
E mail –
- இலங்கையின் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் - விவசாயத் தொழிற்றுறைக்கான விரிவாக்கம்
- இலங்கைத் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் - விவசாய அபிவிருத்தியும் நீர்வளப் பயன்பாடும்
- இலங்கையின் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் மாற்றுச் சக்தி வளங்கள்
- வானம் ஏன் நீல நிறத்தில் தோற்றமளிக்கின்றது?
- மார்கழி மாதம் ஓசோன் ரகசியம் - உங்களுக்குத் தெரியுமா?
- நிலாவினால் பூமியில் நிலநடுக்கம்
- 'கடி' மன்னன் மனிதனே
- பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
- சூறாவளி எப்படி உருவாகிறது?
- நிறம் காண திணறும் மூளை
- ஏறு பூட்டாமல் சோறு சாப்பிடலாம்
- வெறுங்கால் ஓட்டம்.....வேகமான ஓட்டம்
- மனிதன் தோன்றியது எப்படி?
- ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?
- இனிக்கும் ஒயினில் கசக்கும் மூலிகை
- சுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து
- சமையலும் இரசாயன மாற்றமும்
- வாயில் வாழும் பாக்டீரியாக்கள்
- உரோமம் நரைப்பது ஏன்?
- உறக்கமும் நினைவாற்றலும்