கீற்றில் தேட...
புவி அறிவியல்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
“அவன் கிடக்கிறான் வெங்காயம்” என்று அலட்சியமாக சொல்லிவிடலாம். ஆனால் கண்ணீர் விடாமல் அந்த வெங்காயத்தை வெட்டுவது முடியாது.
வெங்காயம் Allium குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தாவரம். வெங்காயத்தை வெட்டும்போது செல்கள் உடைபடுகின்றன. வெங்காயத்தில் உள்ள alliinases என்னும் என்சைம்கள் சிதைவடைந்து amino acid suphoxides களை உற்பத்தி செய்கின்றன. அமினோ ஆசிட் சல்பாக்ஸைடுகள் மேலும் சிதைவடைந்து சல்ஃபீனிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. சல்ஃபீனிக் அமிலம் நிலையற்றது. எனவே இவை syn-propanethial-S-oxide என்னும் வாயுவாக மாறி காற்றில் பரவுகிறது. கண்களை அடையும் இந்த வாயு கண்ணில் உள்ள நீர்ப்பசையுடன் சேர்ந்து கந்தக அமிலமாக மாறுவதால் கண்களில் உள்ள நரம்பு முனைகளில் எரிச்சல் உணர்வு தூண்டப்படுகிறது. அமிலத்தின் வீரியத்தைக் குறைப்பதற்காக கண்ணீர்ச் சுரப்பிகள் இயங்கி கண்ணீரை சுரக்கின்றன. இறுதியில் கண்ணீரின் உதவியால் எரிச்சலை உண்டாக்கும் கந்தக அமிலம் வெளியேற்றப்படுகிறது.
பெருமளவில் நீரை வெங்காயத்துடன் சேர்ப்பதால் எரிச்சலூட்டும் syn-propanethial-S-oxide வாயுவைத் தவிர்க்கலாம். ஓடும் நீரில் வெங்காயத்தை வெட்டுதல், ஈரப்படுத்தி வெட்டுதல் ஆகிய நுணுக்கங்களாலும் கண்ணீர் விடாமல் வெங்காயம் வெட்டலாம்.
வெங்காயத்தின் வேர்ப்பகுதியில் எரிச்சலை உண்டுபண்ணும் வாயு அடர்த்தியாக இருப்பதால் வேர்ப்பகுதியை கடைசியாக வெட்டலாம். மிகவும் கூர்மையான கத்திகொண்டு வெங்காயத்தை வெட்டுவதால் வெங்காயத்தின் செல்களுக்கு ஏற்படும் சேதம் குறைக்கப்படுகிறது. இதனால் எரிச்சலூட்டும் வாயு வெளிப்படுதலும் குறைக்கப்படுகிறது.
சல்ஃபீனிக் அமிலம் வெளிப்படுவது Allium குடும்பத்தைச்சேர்ந்த தாவரங்களுக்குள் வேறுபடுகிறது.
ஜீன்களை செயலிழக்கச் செய்யும் உயிரி தொழில்நுட்பம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்ணீரில்லா வெங்காயம் நியூசிலாந்தில் உள்ள பயிர் மற்றும் உணவு நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விந்தை 2008 ஜனவரி 31 ம் தேதியன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
வயது ஏறஏற மூளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9 சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம். மூளையின் கன அளவு சிறியதாகிப் போவதால் மூளையின் வெண்ணிற பகுதியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல் குறைகிறது.
வயது அதிகரிப்பால் மட்டுமல்லாது, மதுகுடிப்பதாலும் கூட மூளை சிறியதாகிப் போகிறது என்கிறார்கள் அறிவியலார்கள். மிகக்குறைந்த அளவில் மதுகுடிப்பதால் இதயநோயின் பாதிப்புகள் குறைவதாகவும் ஆனால் மூளை சிறியதாகிப் போவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் Framingham Heart Study நிறுவனம் சராசரி வயது 60 ஐக்கொண்ட 1,839 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த நபர்களின் மனைவியர்கள், குழந்தைகளையும் ஆய்விற்கு இந்த நிறுவனம் உட்படுத்தியது. 1999 க்கும் 2001க்கும் இடையில் இவர்கள் அனைவரும் எம்.ஆர்.ஐ . ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு வாரமும் இவர்கள் எடுத்துக்கொள்ளும் மதுவின் அளவு, வயது, பாலினம், கல்வி, உயரம், எடை, இரத்த அழுத்தம் இவைகளின் அடிப்படையில் இதய பாதிப்புக்கான சாத்தியக்கூறுகள் அளவிடப்பட்டன.
ஆண்கள் பெண்களைவிட அதிக அளவில் மது குடிப்பவர்களாக இருந்தார்கள். குடிக்கும் மதுவின் அளவும், மூளையின் கன அளவும் எதிர்விகிதத்தில் இருந்தது. அதாவது அதிகமாக மதுகுடிப்பவர்களின் மூளை சிறியதாகப் போய்க்கொண்டிருந்தது.
பெண்கள் குறைவாக மது அருந்துபவர்களாக இருந்தும்கூட, மூளை சிறியதாகிப்போகும் தன்மை பெண்களிடம் அதிகமாக காணப்பட்டது. அவர்களுடைய சிறிய உருவம், பெண்ணுடலில் மதுவின் தாக்கம் போன்ற உடலியல் காரணங்கள் கூட இந்த முடிவிற்கு காரணமாக இருக்கலாம்.
இதிலிருந்து மிகக்குறைவான அளவில் மது குடிக்கும் பழக்கம் இருந்தாலும், மூளையின் அளவு சிறியதாகப் போய்க்கொண்டிருக்கும் என்பதுதான் உண்மை.
எப்படிப் பார்த்தாலும் மதுவினால் தீமையே விளைகிறது என்பது மட்டுமே முடிவான முடிவு.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
மூளையின் இடது வலது பாகங்களை ஒருசேர பயன்படுத்தும் ஆற்றல் சாதாரண மனிதர்களைவிட வாத்தியக் கலைஞர்களுக்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
சாதாரண மனிதர்களைவிட நன்கு பயிற்சிபெற்ற வாத்தியக் கலைஞர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்களாம். திறமையான கலைஞர்கள் தமது சிந்தனைகளை பல முனைகளிலும் ஒருசேர செலுத்துவதிலும் வல்லவர்களாக இருக்கிறார்களாம். வாத்தியக் கலைஞர்கள் தொழில் ரீதியாக படைப்புத் திறனைக் கொண்டிருப்பதால் இது சாத்தியமாகிறது.
வாத்தியக் கலைஞர்கள் இசையை வெளிப்படுத்தும்போது வெவ்வேறு வரிவடிவங்களை ஒரே சமயத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி வெளிப்படுத்துவதை நாம் கவனித்திருக்கிறோம்.
இசைக்குறியீடுகளை படிப்பது என்பது இடதுபக்க பெருமூளையின் வேலை. இசைக்கலைஞர் தன்னுடைய கற்பனைத்திறனை அத்துடன் இணைத்து வாசிப்பது என்பது வலதுபக்க பெருமூளையின் வேலை.
வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் நிபுணர்கள், இந்த ஆய்வை செய்வதற்கு, எட்டு ஆண்டுகளுக்குக் குறைவில்லாமல் பயிற்சி பெற்ற இருபது மாணவர்களையும், இசைப்பயிற்சி பெறாத இருபது மாணவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். பியானோ, காற்றுக்கருவிகள், கம்பிக்கருவிகள், தோல் கருவிகள் ஆகிய வாத்தியங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களும், அனைத்து வயதுப்பிரிவினர், இருபாலர், வெவ்வேறு கல்வித் தகுதியுடைய மாணவர்களும் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.
இரண்டு நிலைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. முதல் ஆய்வில் பலவகையான வீட்டு உபயோக பொருட்கள் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டன. எழுதப்பட்ட ஒரு சொல்லும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. சொல்லுக்கும் பொருளுக்குமான தொடர்பைக் கூறுவதில் கலைஞர்கள் மற்றவர்களை விட சிறந்து விளங்கினர். அதுமட்டுமில்லாமல் வீட்டு உபயோக பொருட்களுக்கு புதுப்புது உபயோகங்களையும் இசைக்கலைஞர்கள் கூறினர்.
இரண்டாவது ஆய்வில் பொருட்களின் உபயோகம் ஒரு வார்த்தையால் தொடர்பு படுத்தப்படும்போது பெருமூளையின் முன்பகுதி ஸ்கேன் செய்யப்பட்டது. மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் ஆக்ஸிஜனேற்றத்தின் அளவு அதிகமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல், இசைக்கலைஞர்களின் அறிவுத்திறன் (IQ) அளவீடு செய்யப்பட்டபோது, மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- ரஞ்சித் லால்
- பிரிவு: புவி அறிவியல்
இந்த ஆண்டிலும் அந்த நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் பரந்த வானத்தில் எண்ணில்அடங்காத பறவைகள் பறக்கப் போகின்றன. சில ‘ங' வடிவத்தில். சில சிதறிய கூட்டமாக, சில பகலில், சில இரவில். ஆனால் அந்தப் பறவைகளுக்குத் தெரியும் எங்கே போக வேண்டும் என. பறவைகள் வலசை போகும் (இடம் பெயரும்) காலம் தொடங்கி விட்டது. இனி சீக்கிரம் ஏரிகளும், நீர்நிலைகளும், பூங்காக்களும், தோட்டங்களும், இந்தியாவில் உள்ள காடுகளும் வெளிநாட்டிலிருந்து வரும் இந்த சிறகு பயணிகளால் நிறைந்து விடும்.வலசை போதல் ஆச்சரியம் தரக்கூடிய ஒன்று ஆகும். நாம் கொஞ்சமாகத்தான் அதைப்பற்றி அறிந்து இருக்கிறோம். நம்மால் மிகச்சரியாக ஒரு மனிதனை நிலாவில் தரையிறக்கிவிட முடியும். ஆனால் ஒரு பறவை சைபீரியாவின் ஏதோ ஒரு ஏரியிலிருந்து கிளம்பி பறந்து வந்து இந்தியாவின் ஏதோ ஒரு கிராமத்து ஏரியில் தரையிறங்குவதை அறிய முடிவதில்லை. ஆமாம். பறவைகள் சூரியனையும், விண்மீன்களையும், பூமியினுடைய காந்தப் புலத்தையும், புவியீர்ப்பு விசையையும் இடம் பெயர்வதற்கு பயன்படுத்துகின்றன. மலைகளும், ஆறுகளும், கடற்கரைப் பகுதிகளும் கூட அடையாளமாக இருந்து வழிகாட்டுகின்றன. ஆனால் அந்த சின்ன மூளையில் இத்தனை விசயங்களும் எப்படி பதிந்து இருக்கின்றன என்பதுதான் வியப்பளிக்கிற ஒன்றாக இருக்கிறது.
இன்னொரு கேள்வியும் இருக்கிறது. ஏன் சில பறவைகள் மட்டுமே இடம் பெயர்கின்றன. சில பறவைகள் இடம்பெயர்வதில்லை? ஏன் ஊசி வால் வாத்தும், கட்வால் பறவையும், மச்சவாய் வாத்தும் வலசை போவதில்லை? நம்ம ஊர் காகமோ, குருவியோ வலசை போகிறதா? பறவையியல் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், பறவைகள் நல்ல வாழிடத்தை தேடியே வலசை போகின்றன என்று சொல்கிறார்கள்! முக்கியமாக அவைகளுக்கு போதிய அளவு உணவு கிடைக்க வேண்டும்.
குளிர்காலங்களில் வட அய்ரோப்பாவும், மத்திய ஆசியாவும், சைபீரியாவும் பறவைகள் வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பதில்லை. அதனால் வெப்பமான இந்தியாவுக்கு அவை பறந்து வருகின்றன. பறவையியல் அறிஞர்கள் மேலும் சொல்கிறார்கள், புவியின் வடபகுதி கோடை காலங்களில் பறவைகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது என்று! எனவே அப்பகுதியே பறவைகள் தங்களின் குடும்பத்தைப் பெருக்க வசதியாக இருக்கிறது. அதனால்தான் அவை வருகின்றன. ஆனால் மச்சவாய் வாத்து மட்டும் இந்தியாவிலேயே தங்கிவிடுகிறதே அது ஏன்? அது தெரியவில்லை. சில பறவைகள் மட்டுமே திரும்பிப்போகின்றன. காரணங்களை ஊகிக்கவே முடியும்.
பெரு நாரைகளோ, கழுகுகளோ, ஒரு வாழ்த்து அட்டையின் எடையளவே இருக்கும் வார்பிலர் பறவையோ எல்லாமே தான் பறந்து வருகின்றன. கொக்குகளும், நாரைகளும், வாத்துகளும் இமய மலைக்கும் மேலே (உயிர் வளி குடுவை இல்லாமல்!) பறக்கும் வல்லமை படைத்தவைகளாகும். இவை பகலில் பறப்பவை.
இதைவிட வியப்பு என்னவென்றால் குட்டிப் பறவைகளான வார்பிலரோ, வாலாட்டிக் குருவியோ, நீலத்தாண்டை பறவையோ எப்படி பறக்கின்றன என்பது தான். இது போன்ற ஒரு பறவையை கையில் வைத்துக் கொண்டு, இது தனியாக சைபீரியாவிலிருந்து விண்மீன்களை வழி கேட்டபடியே இரவு நேரத்தில் மட்டுமே பறந்து, இங்கே எப்படி வந்து சேர்ந்தது என்று நம்மால் ஆனால் அவை அப்படித்தான் வருகின்றன. கற்பனை செய்ய முடியுமா? நிச்சயம் அது கடினம்தான்.
இந்தப் பறவைகளின் மூளைகள் பட்டாணி அளவேதான் இருக்கும்! ஆனாலும் அவை வழிதவறாமல் பறந்து வந்து விடுகின்றன. மூளை அளவுக்கும் திறனுக்கும் தொடர்பில்லை! சோகமான செய்தி என்னவென்றால் இப்பறவைகளில் பல இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததும் சுட்டு வீழ்த்தப்படுகின்றன. அத்தகைய பெரிய கடலை சாகசம் செய்வது போல பறந்து தாண்டி வந்து தரையிறங்கியதும் இப்படி கொல்லப்பட்டு விடுகின்றன. இது தவறு இல்லையா, நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை நாம் தானே பாதுகாத்து உபசரிக்க வேண்டும்?
நன்றி : "தி இந்து'
(நன்றி : தலித் முரசு அக்டோபர் 2008)