சம வயதுக் குழந்தைகள் பெற்றிருக்கும் திறமைகளை விட அதிமேன்மையான ஆற்றல்களைப் பெற்றுச் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் குழந்தைகளைத் தனித்துவக் குழந்தைகள் (Exceptional Children) என்றும் வரம் பெற்ற மீத்திறக் குழந்தைகள் (Gifted Children) என்றும் அழைக்கிறோம். ஒரு சில அசாத்தியத் திறன்களில் ஓங்கி உயர்ந்து அசாதாரணமாக விளங்கும் குழந்தைகளை மழலை மேதைகள் என்று கூறுவர். சிலர் அதிக நுண்ணறிவைப் பெற்று இருப்பார்கள். இவர்களைத் தான் மீத்திறக்குழந்தைகள் என்போம். கணிதம், ஓவியம், இசை, கலை, நினைவாற்றல், புதியன படைத்தல், செஸ் விளையாட்டு (சதுரங்கம்) போன்ற துறைகளில் அளவுக்கு அதிகமான திறமைகளை இயல்பாகவே பெற்றிருக்கும் குழந்தைகளை மழலை மேதைகள் எனலாம்.  

வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சியை மட்டுமின்றி உள்ளத்தின் வளர்ச்சியையும் குறிப்பதாகும். உடலிலுள்ள அணுக்களின் முதிர்ச்சியாலும் மரபுக் கூறுகளின் விதிப்படியும் உடல் வளர்ச்சி பெறுகிறது. ஆற்றல்களின் வளர்ச்சிக்கு மரபு மட்டுமின்றி பண்பட்ட சூழ்நிலை, கல்வி, ஊக்கம், பயிற்சி ஆகியவற்றின் துணையும் வேண்டும். குறிப்பிட்ட துறையில் அசாத்தியத்திறமை கொண்டிருப்பது “திடீரென” வெளிப்பட்டாலும் காலப்போக்கில் தான் அது முழுமை பெறுகிறது. சம வயதினருக்கு வளரும் விகிதத்தை விட இவர்களுக்கு மிக அதிகமாக வளர்ச்சியடைகிறது. முதிர்ச்சி, பயிற்சி, ஆக்கம், ஊக்கம், தூண்டுதல் ஆகியன இதில் பங்குபெறுகின்றன. இந்தக் குழந்தைகள் நுண்ணறிவிலும் திறம்படச் செய்யும் தன் செயலுக்கு விளக்கம் அளிக்கவும் தெரிந்திருப்பதோடு உள்ளொளி பெற்றவராகவும் இருப்பார்கள். மாறாக தீவிர பயிற்சியினால் மட்டுமே பெறப்பட்ட திறமை பரிணமிப்பதில்லை எனலாம்.  

கணிதத்திறமை, நினைவாற்றல், இசை ஞானம் ஆகியவற்றில் இசைத் திறமை மட்டும் பரம்பரை சார்ந்தது என்பதற்கு சான்றுகள் பல உள்ளன. நுண்ணறிவு அளவு 135லிருந்து 160 வரை உள்ளவர்களை மேதாவிகள் என்றும், 160க்கு மேல் உள்ளவர்களை அதிமேதாவிகள் என்றும் கூறுவர். ஞாபக சக்தி, கலை, ஓவியம், கணிதம், செஸ், படைப்புத்திறன் ஆகிய ஆற்றல்களை அளவிட உளச் சோதனைகள் உள்ளன. மூளை வளர்ச்சிக் குன்றியவர்களுக்கும் கற்றலில் பிரச்னை உடைய குழந்தைகளுக்கும் தனிப்பயிற்சி பள்ளிகள் இருப்பதைப்போல மழலை மேதைகளை ஊக்குவிக்கவும் பள்ளிகள் வேண்டும். 

Pin It