சமீபத்திய இரண்டு அறிவிப்புகள் மாற்றுமருத்துவங்களின் மீதான தாக்குதல்களாய் அமைந்துள்ளன. (1) HIV, Hep-B, Infant Diaorrhea, Influenza ஆகிய நோய்களுக்கு (W.H.O.) உலக நல நிறுவனம் ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரைக்கவில்லை என்ற அறிவிப்பு (2) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து (இந்திய மருத்துவ முறை உட்பட) பதிவிலா மருத்துவர்களையும் அக் 1 முதல் 10 வரை கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்வது என்ற இந்திய மருத்துவர் சங்கம் (I.M.A.) தமிழ்நாடு பிரிவின் அறிவிப்பு.

முதல் அறிவிப்பு மூலம் W.H.O.ன் உண்மையான முகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. W.H.O. என்ற அமைப்பு உலகின் அனைத்து மருத்துவ முறைகளையும் பாதுகாக்கும் அமைப்பாக அல்லாமல், அலோபதியின் ஊதுகுழலாய் செயல்படுவது தொடர்கதையாய் நிகழ்வதுதான். W.H.O.வைப் பொறுத்தளவில் எந்த நோய்க்கும் இதுவரை ஹோமியோபதியை மட்டுமல்ல எந்த மாற்றுமருத்துவத்தையும் பரிந்துரைத்ததில்லை. இப்போது ஐந்து நோய்களை மட்டும் பட்டியலிட்டு மாற்றுமருத்துவங்களில் ஹோமியோபதியில் மட்டும் மருந்துகளில்லை என்பதைப் போல தோற்றம் உருவாக்குவது ஏன்? இதுதான் பிரித்தாளும் சூழ்ச்சியோ?

உலகத்திற்கு ஹோமியோபதியின் வரலாறு தெரியும். ஹோமியோபதியில் முதன் முதலாய் டாக்டர் ஹானிமன் கண்டுபிடித்த மருந்து ‘சைனா’. மலேரியா சுரத்தைக் கட்டுப்படுத்துவதில் இம்மருந்துக்கு நிகராக வேறு மருந்தில்லை. மலேரியா, இன்புளூயன்சா, சிசு வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை ஹோமியோபதி மிகச் சிறப்பாக குணப்படுத்தி வருவதற்கு பல லட்சம் நிரூபணங்கள் உள்ளன. மேலும் HIV, Hep-B போன்ற நோய்கள் குறித்து அலோபதியின் வரையறைகளும் முடிவுகளும் மாற்றுமருத்துவத் தத்துவங்களுக்கு முரணானவை. மனித குலத்தை அச்சுறுத்தும் பல நோய்களுக்கு ஹோமியோபதியில் முழுமையான தீர்வுகள் உண்டு என்பதை உலக மக்கள் தம் அனுபவங்களால் அறிந்து வருவதால்தான் ஹோமியோபதியை நம்பிக்கையோடு நாடி வரும் கூட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் I.M.A. அமைப்பானது பதிவிலா மருத்துவர்களைக் களையெடுக்கப் போகிறதாம்! ஆங்கில மருத்துவ முறையின் உள்ளார்ந்த பார்வை என்பது பிற மருத்துவமுறைகள் எல்லாமே “விஞ்ஞானப்பூர்வமற்றவை”, “போலிகள்” என்பதுதான். இன்றைய சூழலில் இந்தக் கருத்தினை உலகம் ஏற்காது என்பதால் “பட்டம், பதிவு பெறாதவர்கள் எல்லோருமே போலிகள்” என்று கூறி பதிவிலா மாற்றுமருத்துவர்களை வேட்டையாட களத்தில் இறங்குகின்றனர்.

ஆங்கில மருத்துவர்களின் நலனுக்காக உருவான சங்கத்தின் மூலம் ஆங்கில மருத்துவத்தை தவறாக, தகுதியின்றி பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு. ஆனால் இந்திய மருத்துவமுறைகளிலும் இதர மாற்று மருத்துவ முறைகளிலும் வைத்தியம் செய்வோரில் பதிவிலா மருத்துவர்கள் யார் என்று கண்டறியவும், விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் இவர்களுக்கு அனுமதியும் உரிமையும் எங்கிருந்து கிடைத்தன?

ஆங்கில மருத்துவம் மட்டுமே பட்டங்களையும் பதிவுகளையும் 100 சதவீதம் சார்ந்து வாழக்கூடியது. மாற்றுமருத்துவங்களின் வரலாறு வேறு. உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் பட்டதாரிகளால் உருவாக்கப்பட்டவையல்ல மாற்றுமருத்துவங்கள். பட்டதாரிகளை மட்டும் நம்பி, சார்ந்து வளரக் கூடியவையல்ல மாற்றுமருத்துவங்கள். அவை நோயாளிகள் மற்றும் மக்கள் பங்கேற்போடு வளர்ந்தவை. இயற்கை மருத்துவங்கள் மூலம் பயன் அடைகிற மக்களில் ஒரு பகுதியினர் தாமாகவே அவற்றை கற்று பிறருக்கும் பயன்படுத்தி நலமளிக்க வாய்ப்புள்ள மாற்றுமருத்துவங்கள் பல உள்ளன.

மூலிகை மருத்துவம், அக்குப்பங்சர், மலர் மருத்துவம், எலக்ட்ரோபதி, காந்த சிகிச்சை போன்ற பல மருத்துவ முறைகளில் அனுபவமுள்ள பல்லாயிரக்கணக்கானவர்கள் எந்தப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறமுடியும்? எந்த கவுன்சிலில் பதிவுபெற முடியும்? இவையிரண்டும் இல்லை என்றால் இவர்கள் எல்லோரும் “போலிகள், மக்களின் உயிரோடு விளையாடுபவர்கள்” என்று பொருளா?

அரசியலில் ‘பன்மைத்துவத்தை’யும் ‘ஜனநாயகத்தை’யும் ஒழித்துக் கட்ட நினைப்பது எதேச்சாதிகாரம். அதனால் ஹிட்லர்கள், முசோலினிகள் உருவானார்கள்; அழிந்தார்கள். பன்மைத்துவத்தை... தாவரங்களில், உணவுகளில், கால்நடை வளர்ப்பில், மொழி மற்றும் பண்பாட்டில் அழிக்க நினைக்கும் அதிகாரச் செயல்களுக்கு இன்று கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

மருத்துவத் துறைக்குள் ‘பன்மைத்துவம்’ ஒழிக்கப்படவேண்டும், அலோபதியின் ‘ஒற்றைக் தத்துவமே’ கோலோச்ச வேண்டும் என்று IMA எண்ணுகிறது. மருத்துவத்துறைக்குள் அதிகாரக் குவிப்பு ஆபத்தானது. கீழிலிருந்து மேல்வரை அதிகாரமும் உரிமைகளும் பரவலாக்கப் படவேண்டும். (அலோபதி) நிபுணத்துவத்தின் கரங்களில் மொத்த அதிகாரத்தை குவிக்க விரும்புவதும், மற்ற இயற்கை முறை மருத்துவங்களை ஒழித்துக்கட்ட நினைப்பதும் ஏகபோகச் சிந்தனைகளாகும். மருத்துவத்துறைக்குள் ஜனநாயக நெறிமுறைகள் வலுவடைய வேண்டும். மாற்றுமருத்துவ அமைப்புகள் IMA அமைப்புக்கு எதிரானவை அல்ல. ஆனால் மாற்றுமருத்துவங்களில் IMA எவ்வித உரிமையுமின்றி சட்டாம்பிள்ளைத்தனமாய் அவசியமற்ற தலையீடுகள் செய்யுமானால், அவற்றை எதிர்கொள்ள அணி திரள்வதும், சட்டரீதியான நீதிகளை பெறுவதும் தவிர்க்க முடியாதவை ஆகிவிடும். மருத்துவத் துறைக்குள் ஜனநாயகம் மலர மக்கள் மன்றமும் குரலெழுப்ப வேண்டும்.

- டாக்டர் எஸ்.வெங்கடாசலம்

 

Pin It