தமிழ்த்தேசம் நவம்பர் இதழில் தோழர் பாலகோபால் குறித்துத் தோழர் தியாகு எழுதியதைத் தொடர்ந்து தோழர் வேலிறையன் “பாலகோபால் தந்த வெளிச்சம்” எனும் தலைப்பில் எழுதிய மடல் வெளியிடப்பட்டிருந்தது. அது குறித்து சில கருத்துகளைப் பதிவு செய்தல் இந்நேரத்தில் என் கடமை என எண்ணுகிறேன்.

      ஜோதி சங்கர் - என் நெருங்கிய நண்பர். பிறப்பால் பார்ப்பனர். எம்.ஏ.,பி.எச்.டி., ஏ.எம்.இ படித்தவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சத்தியவதி அவர்களைக் காதலித்தார். சத்தியவதி மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றினார். நான் அவருக்கு உதவிச் செவிலியர்! சத்தியவதி மூலமாகவே ஜோதிசங்கர் எனக்கு அறிமுகமானார். இருவரின் காதலையும் அவர்க¼ள எனக்கு அறியத் தந்தார்கள்.

      காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர் வந்து செல்லும் அளவுக்கு செல்வாக்குப் பெற்ற பார்ப்பனக் குடும்பம் ஜோதிசங்கருடையது. பார்ப்பன நடைமுறைகளை இழை பிசகாமல் கடைப்பிடித்து வந்த குடும்பம் அது. அவர் பெற்றோர் காதலுக்கு எதிராய் நின்றனர். ஆனால் அவர்களைப் புறந்தள்ளி வீட்டைவிட்டு வெளியேறி தான் காதலித்த சத்தியவதியை மணந்தார் ஜோதிசங்கர்.

      சத்தியவதியின் தந்தையார் ஓர் ஏழைப் பாதிரியார். அவர் நேர்மையானவர், மனிதநேய மிக்கவர் என்பார் ஜோதிசங்கர்.

      ஜோதிசங்கர் எளிமையான வாழ்வை மேற்கொண்டவர். பெட்ரண்டு ரஸ்ஸல் அவர்களின் கருத்துகளைப் படித்து அதன் மூலம் நாத்திகரானவர். ரஸ்ஸலின் 72 புத்தகங்களில் 70ஐப் படித்தவர். Free thought எனும் ஆங்கில இதழின் ஆசிரியர். “அறிவு வழி” என்ற தமிழ் மாத இதழின் நிறுவனர் - ஆசிரியர். தன் சொத்து முழுவதையும் பகுத்தறிவு, சாதி ஒழிப்புக்காகவே பயன்படுத்திய நேர்மையாளர், நல்ல பண்பாளர், பூணூல் மறுத்தவர், பொதுவாழ்கையில் தூய்மையாளர். அவரால்தான் நான் நாத்திகனாகி அவரைப் போலவே உறுதியாகத் தொடர்கிறேன். அவரும் இறுதிவரை நாத்திகராகவே ஊசலாட்டமின்றி வாழ்ந்து மறைந்தார். அருகில் இருந்து அவரை உணர்ந்தவன் நான்.

      பெரியார் மீது நான் கொண்ட ஈடுபாட்டினால் திராவிடர் கழகத்தில் இணைய எண்ணினேன். ஜோதிசங்கரும் நம்மோடு திகவில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என இயல்பாகத் தோன்றியது. அதில் எனக்கு எந்த உறுத்தலும் ஏற்படவில்லை. ஜோதிசங்கர் அப்படிப்பட்ட சமரசமற்ற நாத்திகர், சாதி மறுப்புப் போராளி! இதை ஜோதிசங்கரிடம் தெரிவித்தபோது தி.க.வில் சேர நான் தயார்! ஆனால் பெரியார் அவர்கள் என்னைச் சேர்த்துக் கொள்ளமாட்டார் என்றார். காரணம் கேட்ட போது நான் பிறப்பால் பார்ப்பனன் ஆனதால் என்றார். இந்த பதில் அவரை நன்கறிந்த எனக்குக் கோபத்தை உண்டாக்கியது. இது பகுத்தறிவுக்கே முரணானது என எண்ணிய நான் ஒரு முடிவெடுத்தேன்.

      1971ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஒரு நாள் மாலை பெரியார் திடலில் பெரியார் பேசவிருப்பதை அறிந்தேன். ஐயாவைப் பார்த்து உங்கள் சம்பந்தமாக பேசப்பாகிறேன் என்று ஜோதிசங்கரிடம் கூறினேன். அவர் மகிழ்ச்சியாக வழியனுப்பினார்.

     திடலுக்குள் நான் சென்ற போது  அலுவலகத்தின் சன்னலோரக் கட்டிலில் அமர்ந்து படித்தபடி இருந்தார் பெரியார். அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு ஐயா உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றேன். உடனே ஐயா தன் கட்டிலில் என்னை அமரச் சொன்னார்.

     நான் ஜோதிசங்கரைப் பற்றி முழுமையாகத் தெரிவித்தேன். நானும் அவரும் கழகத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம், சேர்த்துக் கொள்வீர்களா? என்றேன். அதற்குப் பெரியார் உன்னைச் சேர்த்துக் கொள்கிறேன், உன் நண்பரைச் சேர்க்க மாட்டேன் என்றார். ஏன் என்றதற்கு பெரியார், திராவிடர் கழகத்தில் பார்ப்பனரைச் சேர்த்துக் கொண்டால் புத்தர் இயக்கத்தை அழித்ததுபோல் நம் இயக்கத்தையும் அழித்து விடுவார்கள் என்றார்.

     பார்ப்பனரல்லாதவர்கள் சாதி மதத்தை விட்டொழித்து வந்தால் சேர்த்துக் கொள்ளும் போது ஏன் ஒரு பார்ப்பனரைச் சேர்க்கக் கூடாது என்று வாதாடினேன். என் பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்த பெரியார் என்னைப் பார்த்துக் கையயடுத்துக் கும்பிட்டு என்னால் முடியாதய்யா! உன்னால் முடிந்தால் செய். அவ்வளவுதான் சொல்வேன் என்றார். அவரிடமிருந்து விடைபெறும்போது இறுதியாகப் பெரியார் சொன்னது: பார்ப்பானை நம்பாதே, அவ்வளவுதான் சொல்வேன்.

     பெரியாரைச் சந்தித்து வந்தபின் ஜோதி சங்கரிடம் நடந்தவற்றைச் சொன்னேன். சிரிப்பு மட்டுமே அவரது பதில். ஜோதி சங்கரின் தூய பொது வாழ்வை மதித்து அதனை வரித்துக் கொண்டதால் தி.க.வில் நான் சேரவேயில்லை.

     இதை முகம் மாமணி அவர்கள் தம்முடைய முகம் இதழில் நான் கண்ட பெரியார் எனும் தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னார். மேற்குறிப்பிட்ட பெரியாருடனான என் சந்திப்பையும் இன்றும் மாறாத அந்நிலைப்பாட்டையும் அதில் எழுதி இருந்தேன். முகம் மாமணி என் கருத்துக்களை மாற்றியது மட்டுமல்ல நான் எழுதாதவற்றையும் சேர்த்து வெளியிட்டார். அது என்னவென்றால் பெரியாரிடம் நான் பார்ப்பனர் குறித்துக் கொண்டிருந்த கருத்து வேறுபாட்டைப் பிறகு மாற்றிக் கொண்டு அவர் கருத்தையே சரி என உணர்ந்து ஏற்றுக் கொண்டுவிட்டதாக எழுதிவிட்டார்.

     ஜெயலலிதாவை வேறு நான் தாக்குவ தாகவும் நான் எழுதாதது அதில் இடம்பெற்றது. ஜெயலலிதா இன எதிரி என்றாலும் அந்தக் கட்டுரையில் நான் அது குறித்து எதுவும் எழுதவில்லை.

     இவற்றுக்குப்பின் நான் இது குறித்து முகம் மாமணி அவர்களை நேரில் சந்தித்துக் கேட்ட பொழுது உன்னைப் பார்ப்பானு டைய ஆள் என்று சொல்லி விடுவார்கள் என்றார். அது பற்றி எனக்குக் கவலையில்லை; என் கருத்துதான் எனக்கு முக்கியம் என்றேன். அப்பொழுதும் அவர் என் கருத்தை வெளியிடாமலேயே விட்டு விட்டார்.

     சில நாள் கழித்து சபையர் திரையரங்கு எதிரில் முகம் மாமணியை சந்திக்க நேர்ந்தது. நான் கண்ட பெரியாரைத் தொகுத்து மலராக வெளியிட இருக்கிறேன். அவ்விழாவில் உன்னைச் சிறப்பிக்க இருக்கிறேன். உன் கட்டுரையையும் அதில் சேர்க்க இருக்கிறேன் என்றார். நான் சொன்னேன்: “நான் எழுதிக் கொடுத்ததை சிறிதும் மாற்றாமல் அப்படியே என்றால் வெளியிடுங்கள்.இல்லையயனில் வேண்டாம்.”  அது முடியாது என்றார் முகம் மாமணி.

     இதை இங்கு நான் குறிப்பிடக் காரணம்... 1971க்குப் பிறகான இத்தனை ஆண்டுகளில் இன்று தமிழ்த் தேசியச் சமூக நீதிக் கருத்தியலைப் பற்றி இருக்கிறேன். இன்றும் அன்று நான் கொண்ட அந்தக் கருத்தில் உறுதியோடு இருக்கிறேன். அறிவியல் வழிப்பட்டும் இதுவே சரி என்பதில் எனக்கு மாற்றமே இல்லை.

     பெரியாரே என் தேசியத் தந்தை. அவர் தந்த தமிழ்நாடு தமிழருக்கே! என்ற முழக்கமே என் உயிர்க் கொள்கை. இன விடுதலைக்காகவும், சமூக நீதிக்காகவும் மூத்திரச் சட்டியோடு மேடையேறிய காலம்வரை அவரின் உழைப்பு, தன்னிழப்பு, உறுதி அனைத்தையும் இன்றும் மதித்து நேசிக்கிறேன். பார்ப்பனர்களை சேர்க்கக் கூடாது என்று எங்கள் பெரியாரே சொல்லியிருந்தாலும் அதுவும் ஒரு வகைத்  தீண்டாமைதான்.

     பார்ப்பனர் ஆனாலும் பார்ப்பனரல்லாதவர் ஆனாலும் சாதியத்தை இறுகப் பிடித்தால், தீண்டாமையை நடைமுறைப்படுத்தினால் அல்லது ஆதரித்தால் அவர்கள் நம் எதிரியே. தாழ்த்தப்பட்ட மக்களை வன்கொடுமைக்கு ஆளாக்குகிறவர்கள் யார் என்றாலும் அவர்கள் பழி தீர்க்கப்பட்டால் மிகச் சரி என்பேன்.

     தென்னாப்பிரிக்காவில் வெள்ளை இன வெறிக்கெதிராக நெல்சன் மண்டேலா தலைமையில் கறுப்பர்கள் அணி திரண்டனர். அவர் தன்னுடைய அமைப்பில் வெள்ளையர்களையும் இணைத்துக்  கொண்டார். அவர் சிறைப்பட்டிருந்த காலங்களில் வெள்ளை அரசுக்கெதிராக கறுப்பின மக்க¼ளாடு இணைந்து வெள்ளையர்களும் போராடினார்கள்.

     வெள்ளை இனவெறியை எதிர்த்தழிக்காமல் கறுப்பின மக்களின் விடுதலை சாத்தியமில்லை. பார்ப்பனியத்தை எதிர்க்காமல் சாதி ஒழிப்பும் சாத்தியமில்லை. ஒடுக்குகிற தரப்பிலும் சனநாயக சக்திகள் இருப்பார்கள் என்பதை மறுப்பது, வேலிறையன் சொல்வது போல் சமூக இயங்கியலுக்கு எதிரானதே.

- நாத்திகன் கேசவன்

Pin It