உலகில் நீண்ட நெடிய தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டுள்ள மூத்த முதற்குடிகளில் ஒன்று தமிழ்க்குடி சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதை இன்று அறிஞர் பலரின் ஆய்வுகள் மெய்ப்பித்து வருகின்றன. 

உலகின் மூத்த முதன் மொழிகளில் தமிழும் ஒன்று என்பதில் இன்று எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. தமிழே உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக இருக்கக்கூடும் என்கிறார் மொழியியல் பேராசான் நோம் சாம்ஸ்கி. 

தமிழின் இலக்கியப் பழமையையும் அதன் செழுமையையும் நம்மைக் காட்டிலும் வெளிநாட்டு இலக்கிய ஆய்வாளர்களே வியந்து போற்றி வருகின்றனர். ஆதன் செவ்விலக்கியம் உலக இலக்கிய அணிவகுப்பில் முதல் வரிசையில் நின்று அழகு சேர்க்கிறது. கிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னர் தொடங்கி இன்று வரை தொடர்ச்சியான இலக்கிய மரபைக் கொண்டுள்ள மொழி தமிழ். 

வரலாற்றின் வளர்ச்சியில் தமிழினம் இன்று இரு தேசிய இனங்களாக மலர்ந்துள்ளது. ஓன்று தமிழ்த் தேசிய இனம். மற்றொன்று தமிழீழத் தேசிய இனம். ஆனால் இவை இரண்டும் இறையாண்மை உடைய நாடுகள் இல்லை. தமிழ்த் தேசிய இனத்தின் தாயமான தமிழ்நாடு இந்தியச் சிறைக்குள் அடைபட்டுச் சிதைகிறது. தமிழீழத் தேசிய இனத்தின் தாயகமான தமிழீழம் சிறிலங்காவிற்குள் சிறைபட்டுச் சீரழிகிறது. வரலாற்றுப் பெருமைகளையெல்லாம் தன்னுள் ஒருங்கே செரித்து வளர்ந்த தமிழினம் இன்று வரலாற்று முட்டுச் சந்தில் நின்று தடுமாறுகிறதோ என்ற பேரச்சம் எழுகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கோ இன்று திசைவழியில் குழப்பம்;; திசைக்கொன்றாய் இழுபடும் நிலை. ஈழத்தமிழர்களுக்கோ சரியான திசைவழியில் பயணித்தும் உலக வல்லாதிக்க வல்லூறுகளினால் வழி அடைக்கப்பட்டுக் கொத்திக் குதறப்படும் பேரவலம். நிலை தடுமாறிக் குமுறும் கொடிய நிலை. 

இன்றைய இக்கட்டான நிலையைப் புரிந்து கொள்ள இரு தேசிய இனங்களின் அண்மைக் கால அரசியல். வரலாறுகளை ஒப்பிட்டு ஆராய்வது பயன்தரும். இரண்டின் பயணமும் வேறு வேறு பாதையில் அமைந்தவை. அந்தந்த நாட்டுச் சமூக அரசியல் சூழல்களுக்கும் மாறுதல்களுக்கும் ஏற்ப அவை பயணித்தன. 

அமெரிக்க விடுதலைப் போராட்டம், வியட்னாம் விடுதலைப் போராட்டம், கிய+ப விடுதலைப் போராட்டம் என்கின்ற வரிசையில் ஈழ விடுதலைப் போராட்டமும் தன்னிகரற்றது. நிகழ்பொழுது அவ்விடுதலைப் போர்த் தேக்கநிலையை அடைந்துள்ளதெனினும், விரைவில் அத்தேக்கம் உடைந்து வெற்றி பெற்ற விடுதலை நாடுகளின் வரிசையில் அதுவும் இடம் பெறும். 

தமிழீழ விடுதலை அரசியலோடு ஒப்பிட தமிழ்நாட்டு அரசியலுக்கு எதுவும் இல்லைதான். தமிழீழ மக்களின் ஈடிணையற்ற வீரத்தோடும், ஈகத்தோடும் ஒப்பிட தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் இல்லை என்பதும் உண்மைதான் எனினும் தமிழ்நாட்டு அரசியல் ஈழ அரசியலைத் தொடர்ந்து பாதித்து வருகிறது. நேர்வகையிலும், எதிர்வகையிலும். 

தமிழர்களுக்கான தாயகக் குரல் ஈழத்திற்கு முன்னரே தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் கேட்டது. 1930களிலேயே தமிழ்நாடு தமிழருக்கே என்ற தந்தை பெரியாரின் முழக்கத்தின் கீழ் தமிழர்கள் ஒன்றுபடத் தொடங்கினர். 1930கள் தொடங்கி 60கள் முடிய தமிழ்த் தேசிய எழுச்சி ஏதோ ஒரு வடிவத்தில் தமிழ்நாட்டில் கொழுந்து விட்டெரிந்தது. 60களின் முடிவில் தொடங்கி எழுபதுகளில் அவ்வெழுச்சி படிப்படியாக அணையலாயிற்று. 

தமிழீழ மக்கள் எடுத்த எடுப்பிலேயே தனி ஈழக் கோரிக்கையை முன் வைக்கவில்லை. அவர்களின் போராட்டம் படிப்படியாக அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்து தமிழீழக் கோரிக்கையை வந்தடைந்தது. உண்மையில் ஈழத்தில் மொழி உணர்வும் இன உணர்வும் பற்றிப்படர தமிழ்நாடு ஒரு காரணமாய் இருந்திருக்கிறது. திராவிட இயக்கத் தலைவர்களின் எழுத்தும் பேச்சும் ஈழத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. பெரியாரும் அண்ணாவும் ஈழத்தில் மதிப்புக்குரிய தலைவர்களாய் இருந்துள்ளனர். திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஈழத் தமிழர்களிடையே தோற்றுவிக்கப்பட்டு இயங்கியும் உள்ளன. ஆதித்தனாரின் நாம் தமிழர் இயக்கமும் கூட அங்கே சலனத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஆனால் தமிழீழத் தேசியம் அங்கே பாய்ச்சலைக் கண்டபொழுது தமிழ்த் தேசியம் இங்கே சரிவைக் கண்டது. இச்சரிவுக்கான அசைவுகள் தமிழ்நாட்டில் 50களிலேயே தென்படுகின்றன. ஈழத்திலோ இக்காலகட்டத்தில், பின்னாளில் வரும் உறுதிமிகுப் போராட்டங்களுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விடுகிறது. 

தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் திராவிடமாய்த் தொடங்குகிறது. துpராவிடக் கொடியின் கீழ் தமிழ் மொழி, இன உணர்வுகளே தூண்டப்படுகின்றன. துpராவிட நாட்டுக் கோரிக்கை தமிழ் மக்களால் தமிழ்நாட்டுக் கோரிக்கையாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் நாட்டு விடுதலைக்கான ஓர் அரசியல் இயக்கமாய் திராவிடர் கழகமும் உருவாகவில்லை; பின்னர் தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகமும் கட்டமைக்கப்படவில்லை. நாட்டு விடுதலைக்கான அரசியல் கட்டுமானங்களை இரு கழகங்களும் உருவாக்கிக் கொள்ளவே இல்லை. பெரியாரின் தலைமையிலான திராவிடர் கழகம், அதன் சட்ட எரிப்பு, இந்தியக் கொடி எரிப்பு போன்ற போராட்டங்கள் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தினாலும், பெரும்பாலும் சமூகத் தளத்திலேயே இயங்கியது; ஓர் அரசியல் அழுத்த இயக்கமாய்ச் செயற்பட்டது. அதிலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகமோ தேர்தலைத் தழுவிக் கொண்டது; தேர்தல், திராவிடத்தை இந்தியத்திற்குள் கரைத்தது. 

1950, 60களில் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் நடைபெற்ற அரசியல் போராட்டங்களை ஒப்பிட்டு ஆய்ந்தால் வரலாற்றில் காணும் இருட்பகுதிகள் வெளிச்சம் பெறும். போராட்டங்களின் நோக்கம். அவை நடைபெற்றப் பாங்கு. அவற்றை வழி நடத்திய முறை ஆகியன பாய்ச்சலுக்கும், சரிவுக்குமான காரணங்களைத் தெளிவுபடுத்தும். 

இக்காலகட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் மும்முனைப் போராட்டம் (1953), விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டம் (1963). இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் (1952-1963) எனப் பல போராட்டங்களை நடத்தியது. கல்லக்குடி பெயர் மாற்றப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம், நேருவுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் ஆகிய மூன்றுமே மும்முனைப் போராட்டம் என அழைக்கப்பட்டன. அவற்றில் முதல் போராட்டமும் கடைசிப் போராட்டமும் புகழ் பெற்றவை. 

டால்மியாபுரத்தைக் கல்லக்குடி எனப் பெயர் மாற்றக் கோரும் போராட்டம் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில்தான் கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்துப்படுத்ததும், சிறையில் அடைபட்டதும், இன்றுவரை அவராலும், அவரது தொண்டர்களாலும் மெய் சிலிர்த்துப் பேசப்படுவதுமானது. நேருவுக்கு எதிரான கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம், எல்லைப் போராட்டத்தை அவர் முட்டாள்தனம் என அழைத்ததற்கு எதிரானது. இப்போராட்டங்களில் அண்ணாவும், மற்றத் தலைவர்களும், தொண்டர்களும் தளைப்பட்டுச் சிறைத் தண்டனையும் பெற்றனர். குறைந்தளவிலான வன்முறையும் உயிரிழப்பும் இடம் பெற்றன. 

ஆனால் இந்தப் போராட்டங்கள் எவையும் திராவிட நாடு கோரிக்கையை முன்னெடுப்பதாக இருக்கவில்லை. மாறாக அனைத்துமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் நிகழ்ச்சி நிரலை ஒட்டியே, அதற்குட்பட்;டே நடத்தப்பட்டன. போராட்டங்கள் எல்லை மீறிச் சென்றுவிடாமல் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருப்பதில் தி.மு.க. எப்பொழுமே கவனமாக இருந்தது. அவசியமற்ற பகையையும் அணைக்க முடியாத குரோதத்தையும,; போக்க முடியாத பழியையும் உண்டாக்கிவிடாத போராட்டங்களையே தி.மு.க தேர்ந்தெடுத்தது. பின்னாளில் தன்னால் தூண்டிவிடப்பட்ட மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வேறு திசையில் செல்லத் தொடங்கியதும், அதிலிருந்து பின்வாங்கி பின்னர் அதைக் கட்டுப்படுத்தியது. இந்தப் பின்வாங்கலே தமிழரின் போராட்டப்பாதையில் பெரும் சரிவைத் தொடங்கி வைத்தது. அதற்குப் பின் நடைபெற்ற உழவர் போராட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றேயெனினும், தமிழகம் தழுவிய மக்கள் திரள் போராட்டம் எதுவும் இதுவரை நடைபெறவே இல்லை. தமிழ்நாட்டில் போராட்ட அரசியல் காணாமல் போனது. 

1950களிலும் 60களிலும் தமிழ்நாட்டில் உருவான மொழி, இன உணர்வுகள் தேர்தலை நோக்கிய பாதையில் திசை திரும்பிக் கொண்டிருக்க, ஈழத்திலோ தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கையை நோக்கி வேகமாக நகர்ந்தனர். 1948 தொடங்கியே தமிழர்கள் சிங்களப் பேரினவாதத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1948இல் மலைவாழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1956இல் கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டுமே சட்டத்திற்கு எதிரான தமிழர்கள் போராட்டம், சிங்களவரின் கொடிய இனவெறித் தாக்குதலை எதிர்கொண்டது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1961இல் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கமும் தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை வரவழைத்தது. 

1970க்குப் பின் நிலைமை மேலும் மோசமானது. 1972இல் கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் யாப்பு இலங்கையை சிறிலங்காவாக்கி ஒற்றையாட்சியை வலுப்படுத்தி, தமிழர்களை நிலையான அடிமைகளாக அறிவிக்காமல் அறிவித்தது. 1974இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழ் மாநாடு சிங்கள வன்முறைக்குத் தமிழ் உயிர்களைப் பலிகொடுத்தது. சிங்களவர்களோடு சேர்ந்து வாழும் அனைத்துப் பாதைகளும் அடைபட்ட நிலையிலேயே 1976இல் வட்டுக்கோட்டையில் தனி ஈழக் கோரிக்கைத் தீர்மானம் நிறைவேறுகிறது. இன்றுவரை அத்தீர்மானமே ஈழத் தமிழர்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காய்த் திகழ்கிறது. 

ஈழத் தமிழர்கள் மீது விழுந்த ஒவ்வோர் அடியும் அவர்களை உறுதியாக்கியது. போராட்டப் பாதையே விடுதலைப் பாதை என்பதைத் தெளிவாக்கியது. அவர்களின் அரசியல் தலைமையும் அவர்களை அப்பாதையிலேயே வழி நடத்தியது. 70களுக்குப் பின் போராட்டம் இளைஞர் கைக்கு மாறியது. அதன்பின் கருவிப் போராட்டமாய் மாறி இன்று வீரஞ்செறிந்த விடுதலைப் போராய் நம்முன் விரிந்து கிடக்கிறது. 

ஆனால் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம், மேலே சுட்டிக்காட்டியவாறு, இளைஞர்களைப் போராட்டப் பாதையில் சென்று விடாமல் தடுத்து நிறுத்தியது. இதை அக்கட்சி திட்டமிட்டே செய்தது. சட்ட எரிப்புப் போராட்டம் (1950), இந்தியக் கொடி எரிப்புப் போராட்டம் (1955), இந்தியப் பட எரிப்புப் போராட்டம் (1960) ஆகிய போராட்டங்களைப் பெரியார் நடத்திய பொழுது அப்போராட்டங்களில் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் அப்பக்கம் சென்றுவிடாமல் தி.மு.க. பார்த்துக் கொண்டது. பேரியாரின் போராட்டங்கள் தேவையற்றவை என அண்ணா தம்பிக்குக் கடிதங்கள் எழுதினார். கொடி எரிப்புப் போராட்டத்திற்குப் பெரியார் பொது அழைப்பு விடுத்த போது அதை ஏற்க அண்ணா மறுத்தார். கொடி கொளுத்துவதன் மூலம் காங்கிரஸ்காரர்களுக்கும், திராவிட இயக்கத்துக்கும் நேசம் ஏற்படவே முடியாத மோசமான சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என எச்சரித்தார். 

தேர்தலின் மூலமே எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்ற பிரமையை அண்ணா இளைஞர்களுக்கு ஏற்படுத்தினார். 1957 தேர்தலில் பெற்ற வெற்றியைப் பற்றி அண்ணா மெய்சிலிர்த்து இப்படி எழுதினார்: நாம் நமது முறையையும் நெறியையும் தரம் கெடாமல் பார்த்துக் கொண்டு நமது நாட்டு மக்களின் நம்பிக்கையை மெல்ல மெல்லப் பெற்று அரசியல் கழைக்கூத்தாட்டம் நடத்தாமலும், மயிர்க்கூச்செரிய வைக்கும் செயல்களைச் செய்து காட்டாமலும், அந்த நம்பிக்கையை நமது பண்பு நிறைந்த பணியின் மூலம் பெற்று ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, அந்தப் பாரத்தைத் தாங்கிக் கொண்டு ஒரு பதினைந்து பேர் கோட்டைக்குள் நுழைந்திடத் தக்க நிலையைப் பெற்றிருக்கிறோம். இங்கே அண்ணா கழைக்கூத்தாட்டம் என்றும் மயிர்க்கூச்செரிய வைக்கும் செயல்கள் என்றும் குறிப்பிடுபவை பெரியாரின் போராட்டங்களைத்தான். 

அண்ணாவின் அறிவுரை தம்பிக்கு இப்படி அமைந்தது. தம்பி மனையில் மகிழ்ந்திரு! பேற்றோருக்கு பெருமை தேடிடு! உற்றார் உறவினரை உவகை கொள்ளச் செய்! ஊருக்கு உழைத்தலில் இன்பம் பெறு! விழி புகுந்து உன் நெஞ்சில் உறையும் உன் இனியாளைக் கண்ணெனப் போற்றிடு! கன்னல் மொழிக் குழந்தைகளைக் கற்றோராக்கு! ஈழத்து இளைஞர்கள் போர்க்களம் புக, தமிழ்நாட்டு இளைஞர்கள் புகுந்த களம் எதுவென்பது இப்பொழுது தெளிவாகிறது. 

தமிழ்நாட்டு அரசியலை இந்தப் பின்னணியில் புரிந்து கொண்டால்தான் தமிழ்நாட்டின் இன்றைய மந்த நிலைக்கான காரணங்கள் விளங்கும். முத்துக்குமாரின் ஒப்பற்ற ஈகம் வீணாகிப் போனது இதனால்தான், கருணாநிதியால் தமிழ்நாட்டு மக்களைத் தொடர்ந்து திசை திருப்ப முடிகிறது என்றால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிட அரசியலில் அவர்கள் மழுங்கடிக்கப்பட்டுப் போனதால்தான். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கக் கட்சிகளும், ஈழத் தமிழர்களைக் கொலைக் களத்தில் விட்டு விட்டு கூட்டணிப் பேரத்திற்குப் பாய்ந்து சென்றதற்கும் இதுவே காரணம். 

ஈழத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது. தமிழ்நாட்டில் தேர்தலை நடத்தவிட மாட்டோம் எனத் தமிழ்நாட்டுக் கட்சிகள் அறிவித்திருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். ஈழம் காப்பாற்றப்பட்டிருக்கும் கருணாநிதியையும் செயலலிதாவையும் விட்டு விடுவோம். ஓன்று துரோகத்தின் உச்சம்: இன்னொன்று தமிழனுக்கு எப்பொழுதுமே பகை. மற்ற கட்சிகள்? அவையும் கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் பின்னால் அல்லவா போய் ஒளிந்து கொண்டன? இங்குக் கருணாநிதியைக் காட்டி செயலலிதா ஆதரவு அரசியலும், செயலலிதாவைக் காட்டி கருணாநிதி ஆதரவு அரசியலும் அல்லவா நடைபெறுகிறது? தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை, வாழ்வியல் சிக்கல்களை முன்னிருத்தி எந்த அரசியலும் நடைபெறவில்லையே? கட்சிக்குள் பதவிகள், தேர்தல் மூலம் பெறும் பதவிகள் இவற்றிற்கு மேலாக கொள்கை, கோட்பாடுகளில் இளைஞர்கள் பயிற்றுவிக்கப்படவே இல்லை! 

ஆனால் எல்லாமே முடிந்துவிடவில்லை. தமிழ்த்தேசிய உணர்வும், சமூகநீதி நோக்கமும், பொதுமைக் குறிக்கோளும் கொண்ட ஈகத்திற்கு எப்பொழுதும் அணியமான ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள். இவர்கள் பெரியாரின் மரபிலிருந்து தோன்றியவர்கள்: பொதுவுடைமை இயக்கப் போராட்டங்களிலிருந்து கிளைத்தவர்கள்;: ஈழப் போராட்டத்திலிருந்து ஊக்கம் பெற்றவர்கள். இவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் பெருகி வருகிறது. இவர்களின் கையிலேயே தமிழ்நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. 

தமிழ் ஈழ மக்கள், எழுதி விளக்கி விட முடியாத கடும் நெருக்கடிக்குள் சிக்குண்டு தவிக்கிறார்கள். இலக்கக் கணக்கான மக்கள் முள்வேலிக்குள் அடைபட்டுக் கிடக்க, எஞ்சியுள்ள தமிழர்களும் படைக் கண்காணிப்பின் கீழேயே வாழும் நிலை தொடர அவர்கள் மீது இப்பொழுது ஒரு தேர்தலும் திணிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க அரசியல் சூழ்ச்சித் திட்டங்களை வகுத்தவனும், அதற்கான ஆணைகளைப் பிறப்பித்தவனுமான இராசபக்சே ஒரு புறம்: அவ்வாணைகளை ஏற்று நேரடியாகப் போர்க்களத்தில் கொலை வெறி ஆட்டம் ஆடிய சரத் பொன்சேகா இன்னொருபுறம்: இவர்களில் யாரையேனும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கத் தமிழர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். 

தமிழர் பக்கத்திலும் பிளவுகள் தோன்றத் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே எதிரிகள் பக்கம் ஓடிவிட்ட துரோகிகள் ஒரு பக்கம். புதிதாகத் தோன்றும் துரோகிகள் இன்னொரு பக்கம். ஈழத் தமிழர்கள் நின்று நிதானித்துச் செயல்பட வேண்டிய காலகட்டம் இதுவே. இன்று ஈழத்தமிழன் எடுத்து வைக்கும்; ஒவ்வோர் அடியும் முகாமையானது: எதிர்காலத்தைத் தீர்மானிக்க வல்லது. 

தேர்தலில் பங்கேற்பதையும், புறக்கணிப்பதையும் ஈழத் தமிழர்கள்தாம் தீர்மானிக்க வேண்டும். இன்றைய சிக்கல்களுக்கான தீர்வும், தொலை நோக்கில் பயனும் விளைவிக்கக்கூடிய முடிவை எடுக்க வேண்டும். ஓன்றே ஒன்றை அவர்களுக்கு அறிவுரையாக அன்று, கருத்தாக முன் வைக்கலாம். இப்போதைய விதிவிலக்கான சூழலைக்கருதி, இறுதியாகப் பார்த்தால் இது சிங்களர்களுக்கான சிங்கள அதிபரைத் தெரிந்தெடுக்கும் தேர்தல் - இதைப் புறக்கணித்துவிடலாம். இப்போதைய விதிவிலக்கான சூழலைக் கருதி, தேர்தலில் பங்கேற்பதாக இருந்தால் தனித்து நிற்பதைக் காட்டிலும் சிங்கள இடதுசாரி வேட்பாளரான விக்கிரமபாகு கருணாரத்னேவை ஆதரிக்கலாம். அவர் தமிழர் தாயகத்தையும், தமிழர் தன் தீர்வு உரிமையையும் ஆதரித்துக் குரல் கொடுக்கிறார். போர்க்காலத்தில் தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் அவருடையது. அய்ம்பதுக்கு மேற்பட்ட நாடுகளின் தொழிலாளர் அமைப்புகளை ஒன்று திரட்டிப் போர் நிறுத்தத்திற்குத் தீர்மானம் நிறைவேற்றச் செய்ததில் அவர் பெரும் பங்கு வகித்தார். அவர் தேர்தலில் உறுதியாக வெற்றி பெறப் போவதில்லை. ஆனால் அவரை ஆதரிப்பதன் மூலம் எதிர் காலத்தில் சிங்களப் பாட்டாளி வர்க்கத்துடன் கைகோக்கும் வாய்ப்புகள் பெருகும். அது அடுத்த ஈழப் போராட்டத்திற்குத் துணை சேர்க்கும். 

ஓன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். ஈழத் தமிழர்கள் மேலே விவரித்த தமிழ்நாட்டு அரசியலை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தமிழ்நாட்டுப் பதவி அரசியல்காரர்களை நம்பி ஏமாந்தது போதும். இங்குள்ள தமிழ்த் தேசிய ஆற்றல்களுடன்தான் கை கோர்க்க வேண்டும். இவ்வாற்றல்கள்தான் ஈழத்தமிழர்க்கு இறுதிவரை துணை நிற்கும். 

அவ்வாறே தமிழ்த் தேசிய ஆற்றல்களும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய வல்லாதிக்கத்திற்கு நெருக்கடி கொடுக்காமல் ஈழ விடுதலைக்கு உதவ முடியாது. அந்நெருக்கடியைத் தமிழ்த்தேச விடுதலையை முன்னெடுப்பதன் மூலமே தரமுடியும். இரு தமிழ்த் தேசிய இனங்களும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலமே தங்களுக்கான தாயகங்களை அடைய முடியும். ஒன்றிணைந்தால் முட்டுச் சந்துகள் உடைபடும்! முன்னேற்றப் பாதைக்கு வழி கிடைக்கும்! 

- கலைவேலு

Pin It