உலகளாவிய மனித இனங்களில் செழுமையான வளமையான மொழியையும், செம்மாந்த தனித்ததொரு பண்பாட்டையும் கொண்டது நம் தமிழ் இனம். தனிவுடைமை வழித் தோன்றிய முதலாளியமும், அதன் சுரண்டலும், அதற்காக அது தொடுத்துவரும் அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் உலகு தழுவி மனித குலம் எதிர்கொண்டு வருகிறது. என்றாலும், இந்தப் பொதுவானதோடு சேர்ந்து குறிப்பானதாக சாதியும் அதன் படிநிலைக் குரூரங்களும், நம் தமிழ் இனம் உள்ளிட்ட பிற இந்திய ஒன்றிய இனங்களுக்கும் விதிக்கப்பட்ட கூடுதல் வன்கொடுமையாகும்.

நாம் மொழியால் இனத்தால் தமிழர்கள். நம்மின மக்களின் விடுதலைக்காய் நாம் களமாடும் மண் இந்தத் தமிழ் மண். எனவே, நாம் நம் நிலத்தில் வலுவாகக் காலூன்றி நின்றுகொண்டு, நம்மின மக்களின் விடுதலைக்காய்ப் போராடி வெல்வதோடு, நமது போராட்ட ஒருமைப்பாட்டுக் கரங்களை விரியத் திறந்து, எங்கெல்லாம் மானுடம் காயப்படுகிறதோ, துன்பப்படுகிறதோ, அடக்கி ஒடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அனைவரையும் ஆறத் தழுவி அணைத்துக் கொண்டு, உலகு தழுவிய மனித குல விடுதலைக்காய் களமாட வேண்டியவர்கள் நாம்.

நம் தமிழ் மண்ணில் எழுந்த எழுகின்ற அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என அனைத்திற்கும் பல இணை அமைப்புகள், துணை அமைப்புகள் உள்ளன. மாணவர், இளைஞர், பெண்கள், உழவர், தொழிலாளி என அனைத்திற்கும் தனித்த இயக்கங்கள் உள்ளது போலவே கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புகளும் உள்ளன. வரலாற்றில் இடதுசாரிகள், செங்கொடி இயக்கத்தினர் என்று மட்டுமல்ல வலதுசாரிப் பிற்போக்குவாதக் கட்சிகளுக்கும், பாசிச அமைப்புகளுக்கும் கூட கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கங்கள் அமைப்புகள் உள்ளன.

அதன்வழியில் புதிதாய்த் துவக்கப்பட்ட கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புதான் மக்கள் விடுதலைப் பண்பாட்டுப் பேரியக்கம். ஏற்கெனவே நிறைய கலை இலக்கிய அமைப்புகளும்... பண்பாட்டு இயங்கங்களும் களமாடி வருகிற சூழலில் மக்கள் விடுதலை பண்பாட்டுப் பேரியக்கம் என்கிற புதியதொரு அமைப்பு எதற்கு?

உண்மைதான். ஏற்கெனவே இங்கு களமாடி வருகிற கலை இலக்கிய அமைப்புகளும்... பண்பாட்டு இயக்கங்களும் வலதுசாரி பிற்போக்குப் பாசிச சக்திகளின் கருத்தியலுக்கு, முன்வைப்புகளுக்கு, அவர்கள் முன்வைக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிர்க் குரல் கொடுத்து எதிர்வினையாற்றுபவர்கள்தாம். மறுக்கவியலாது.

ஆனால் நாமோ நமக்கான புதிய நிகழ்ச்சி நிரலை, மக்கள் விடுதலைக்கான நிகழ்ச்சி நிரலைக் புதிதாய்க் கட்டமைப்பவர்கள். மக்கள் விடுதலைக்கான ஒரு மாற்றுப் பண்பாட்டுச் சூழலைக் கட்டி எழுப்புபவர்கள். அதனை கலை இலக்கிய வடிவங்களிலும், மாற்றுப் பண்பாட்டுக் கொண்டாட்டங்களை முன்மொழிந்து மாற்றுப் பண்பாட்டுத் திருவிழாக்களை மக்கள் விடுதலைக்கான நிகழ்ச்சி நிரலாக்குபவர்கள். இதனைச் சாத்தியப்படுத்த நாம் உருவாக்கியுள்ள அமைப்பே மக்கள் விடுதலை பண்பாட்டுப் பேரியக்கம்.

எத்தனை காலம்தான் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு நாம் எதிர்வினையாற்றுவது. இனி நாம் புதிய மக்கள் விடுதலைக் களங்களுக்கான நிகழ்ச்சி நிரலைக் கட்டமைப்போம். இனி நமது நிரலுக்கு எதிரிகள் எதிர்வினை தொடுக்கட்டும்.

வாருங்கள் நண்பர்களே. நமக்கான செயல்திட்டத்தை நாம் வகுப்போம். புதிய மாற்றுப் பண்பாட்டுச் சூழலைக் கட்டமைப்போம். மக்கள் விடுதலையைச் சாத்தியப்படுத்துவோம். கலையால், இலக்கியத்தால், மின்னணுக் காட்சி ஊடகத்தால் மக்கள் விடுதலைக்கான மாற்றுப் பண்பாட்டை முன்மொழிந்து, அதை மக்கள் விடுதலைக்கான நிகழ்ச்சி நிரலாக்குவோம்.

பறையிசையை முதன்மையாய்க் கொண்ட பிற நவீன இசைக்கருவிகள் இசைக்கத் தெரிந்த இசைக் கலைஞர்களே... மக்கள் விடுதலைப் பாடல்களால்... நாடகங்களால்... பாடத் தெரிந்த, நடிக்கத் தெரிந்த, நெறியாள்கை செய்யத் தெரிந்த நிகழ்த்து கலைஞர்களே... ஓவியம், கதை, கவிதை, கட்டுரை, புதினம் என இயற் தமிழ்ப் படைப்பாளிகளே... நவீன தொழில்நுட்ப மின்னணு ஊடகக் கலைஞர்களே... வாருங்கள். ஒன்றிணைவோம். நம் கனவு... தாகம்... இலக்கு... இவைகளைச் சாத்தியப்படுத்த இயக்கமாய் மட்டுமல்ல. பேரியக்கமாய்த் திரள்வோம்.

மக்கள் விடுதலை பண்பாட்டுப் பேரியக்கத்தின் தாகம்... இலக்கு... சாதி ஒழிந்த தன்னாட்சி கொண்ட நிகரமைத் (சோசலிசத்) தமிழ்நாடு.

Pin It