காசுமீரிகளுக்கு சுயநிர்ணய உரிமை இல்லையா? கிலானியின் சிம்மக்குரலும், இந்திய ஆளும் வர்க்கத்தின் பதற்றமும்

ஹரியத் மாநாட்டு அமைப்பின் சார்பாக ஏப்ரல் 16 அன்று சிறீநகரில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது, சையது அலி சா கிலானி, மஸரத் ஆலம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் பேசிய கிலானி -”காசுமீர் இந்தியாவின் கீரிடம், இப்பொழுது இருக்கும் நிலையே இங்கு நீடிக்க வேண்டும் என்கிறார் முதலமைச்சர் முப்தி, இலட்சக்கணக்கான மக்களைக் கொலை செய்து தனது இராணுவ பலத்தின் மூலம் மட்டுமே காசுமீரை இந்தியா தக்கவைத்துள்ளது. காசுமீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டா? இல்லையா? என்பதை முப்தி தெளிவு படுத்த வேண்டும். அதே போல காசுமீர் மக்களின் கருத்தைக் கவனத்தில் கொள்ளாமல் இந்தியாவும் - பாகிசுதானும் செய்து கொண்ட/கொள்ளும் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் நிராகரிக்கின்றோம், காசுமீரிகளுக்கு தேவை முழு விடுதலையேயன்றி , இன்றிருக்கும் இதே நிலைமையல்ல... “ என்றார்.

இதை இந்திய ஊடகங்கள் எதுவும் ஒளிபரப்பவில்லை, ஆனால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கொண்டு வந்திருந்த பாகிஸ்தானின் கொடி மட்டுமே இங்கு மீண்டும், மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. இந்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் முதலமைச்சர் முப்தி, முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா உள்ளிட்ட எல்லோரும் பாகிசுதான் கொடி கொண்டு வந்ததைத் தேச விரோத செயல் என்றார்கள். அதே சமயம் எவரும் "காசுமீர் மக்களின் கருத்தை கவனத்தில் கொள்ளாமல் இந்தியாவும் - பாகிசுதானும் செய்து கொண்ட/கொள்ளும் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்ற சையது கிலானியின் பேச்சைத் தங்களது கள்ள மௌனம் மூலம் மறைத்தனர்.

இதை சாக்காக வைத்து காசுமீர் காவல்துறை கிலானி, மஸரத் ஆலம் உள்ளிட்டோர் மீது தேச துரோகம் , தேசத்திற்கு எதிராகப் போர் தொடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் ஆலம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், கிலானி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இராணுவம், காவல்துறை உள்ளிட்ட அமைப்புகளே காசுமீரை ஆளுகின்றன என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

‘‘காசுமீரத்து அப்பாவி மக்கள் இராணுவம், காவல் துறையால் சுட்டுக்கொல்லப்படும் பொழுதும், தாக்கப்படும் பொழுதும், பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் பொழுதும் இந்த இந்திய ஊடகங்கள் எங்கே சென்றன? இன்று பாகிசுதான் கொடியைக் கொண்டு வந்துவிட்டார்கள் எனக்கூறும் ஊடகங்கள் அங்கே நாங்கள் சொன்ன கருத்தை ஏன் மறைத்தன? ஏன் வெறியை மக்களிடம் தூண்டிவிடுகின்றன? இவர்கள் செய்வது ஊடகக் காலித்தனம்’’ என்று சொல்லும் கிலானியின் கருத்தை உழைக்கும் மக்கள் ஏற்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இந்தியாவில் விவாதிக்க வேண்டிய நிலம் கையகப்படுத்துதல் சட்டம் உள்ளிட்ட பல முக்கிய செய்திகள் இருக்கும் பொழுது இராகுல் ஓய்வு எடுத்தது தான் மிக முக்கிய பிரச்சனை என்பது போன்ற தோற்றத்தை ஊடகங்கள் தொடந்து உருவாக்கின. இதன் மூலம் விவாதிக்கப்பட வேண்டிய பல முக்கிய பிரச்சனைகளை மறைத்துள்ளன. இராகுலின் ஒய்வையே காங்கிரசு கட்சியின் பேசு பொருளாக மாற்றி ஊடகங்கள் காங்கிரசுக்கு உதவின.

அதே சமயம் இராகுலின் ஓய்வு நாம் விவாதிக்க வேண்டிய, கவலைப்பட வேண்டிய ஒரு விடயமா என்றால் இல்லை. அப்புறம் ஏன் இதற்கு ஊடகங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன? ஏனென்றால் மக்களின் கவனம் முழுக்க பா.ச.க அலலது காங்கிரசிலேயே இருக்க வேண்டும், இங்கே முகிழ்த்தெழும் இடதுசாரி மாற்று அமைப்புகளைப் பற்றி ஊடகங்கள் மறந்தும் பேச மாட்டார்கள். சனநாயகத்தின் நான்காம் தூணாக செயல்பட வேண்டிய ஊடகங்களோ முற்றும் முழுதாக தங்கள் சுயத்தை இழந்து அரசின் பிரச்சார பீரங்கிகளாக மாறிவிட்டன.

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தலைநகரத்திலேயே ஒருவர் தூக்கிட்டு இறந்தார். மக்கள் வாழ்க்கை நெருக்கடியில் சிக்குண்டு இருக்கும் பொழுது மக்களுக்கு தலைமை தாங்குகிறேன் என்று சொல்லும் இராகுல் பேர்வழிகள் ஒய்வெடுக்கிறார்கள். அரசர் பரம்பரையில் ஆளப் பிறந்தவர்கள் என்ற இறுமாப்பில் இருப்பவர்களை அரசியல் களத்தில் இருந்து ஓட ஓட விரட்ட வேண்டும். அவர்களுக்கு எல்லாம் அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வுகொடுப்பதே நாட்டுக்கு நல்லது.

Pin It