நேபாளில் பூகம்பம் ஏற்பட்டதால் உத்திரப் பிரதேசம், பீகார், தில்லியில் உள்ளப் பல வீடுகள் உடைந்து நொறுங்கி 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே போன்றுதான் 1993 இல் குஜராத்தில் பூகம்பம் தாக்கியப் பகுதியிலிருந்து 100 கிலோ மீட்டர் தள்ளியிருந்த அகமதாபாத்தில் உள்ள கட்டிடங்களும் உடைந்து நொறுங்கி ஆயிரக்கணக்கானோர் இறந்து விட்டனர்.

earthquake 400தொடச்சியாக ஜப்பானில் பூகம்பம் தாக்கி வருகிறது. ஆயினும் உயிரிழப்பு என்பது கிட்டத்தட்ட அறவேயில்லை. இது எப்படி சாத்தியம்? இதற்கு பூகம்பத்தைப் பற்றிக் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது பூமியின் உட்பகுதி பெரும்பாலும் உருகிய கூழ் நிலையிலேயே உள்ளது. கடும்வெப்பம் மிகுந்த பகுதி இது. இந்த உருகிய கூழின் மேல்பகுதி மட்டுமே இறுகிக் கெட்டியாக உள்ளது. இதுதான் பூமியின் மேற்பரப்பு. சுமார் 6,377 கிலோ மீட்டர் ஆரம் கொண்ட பூமியின் இந்த கெட்டியான மேற்பரப்பு சுமார் 50 கிலோ மீட்டர்தான். இதில்தான் கடல், செடி, கொடி, விலங்குகள், மனிதர்கள், காதல், கத்திரிக்காய் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பிரச்சனை என்னவென்றால் இந்த கெட்டியான மேலோடும் தேங்காய் ஓடு போன்று ஒன்றிணைந்து ஒரே சீராக இல்லை.

சிறுசிறு திட்டுகளாக மையக் கூழின்மேல் மிதந்து கொண்டிருக்கின்றன. உலக அளவில் சிறுசிறு திட்டுக்கள் என்று குறிப்பிட்டாலும் தனிப்பட்ட அளவில் ஒவ்வொன்றும் இராட்சசத் திட்டுகள். இவற்றைத்தான் புவியோட்டுப் பாறைகள் (Tectonic Plates) என்றழைக்கிறோம். ஒட்டுமொத்த இந்தியத் துணைக் கண்டமும் ஒரு திட்டாக உள்ளது. இதுபோன்று உலகெங்கும் மொத்தமாக 12 பெரியப் பாறையோடுகள் உள்ளன. இந்தப் பாறையோடுகள் தொடர்ந்து நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. இப்படி நகரும்போது ஒன்றையொன்று எதிரெதிராக மோதிக் கொண்டு நகர முடியாமல் மேலெழும்பும் போதுதான் பெரும் மலைத்தொடர்கள் உருவாகின்றன.

இப்படி இந்தியப் புவியோட்டுப் பாறையும், ஆசியா முழுமையையும் உள்ளடக்கிய யூரேசியப் புவியோட்டுப் பாறையும் மோதுவதால் உண்டானதுதான் இமயமலைத் தொடர். இந்த இறுக்கம் இன்னும் சற்று அதிகமானால் என்ன நடைபெறும்? இந்த புவியோட்டுப் பாறை ஒன்றின் மீது மற்றொன்று சற்று மேலெழும்பி நிற்கும். இப்படி புவியோட்டுப் பாறைகள் கொஞ்சம் மேல்-கீழ் தங்களைச் சரி செய்துகொண்டு நிற்பதுதான் பூகம்பம்.

இப்படிப் புவி மேற்பரப்பு மேலெழும்புவது அல்லது கீழே தாழ்வது சில அடிகள்தான் இருக்கும். ஆனால், ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீளத்திற்கு இதே உயரத்திற்கு சில நொடிகளில் உயர்வது அல்லது தாழ்வது என்று நடைபெறும் போதுதான் இவ்வளவு சேதங்கள், இவ்வளவு உயிரிழப்புகள்.

இதுபோன்று எந்தெந்த பகுதிகளில் புவியோட்டுப் பாறைகள் மோதி நிற்கின்றன. எந்தெந்த இடங்களில் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றெல்லாம் துல்லியமாகக் கண்டுபிடித்துள்ளனர். இப்படி பூகம்பம் தாக்க வாய்ப்புள்ளப் பகுதிகளைப் ‘பூகம்பம் தாக்கும் பகுதிகள்’ (Seismic Zone) என்று கண்டறிந்துள்ளனர். ஆனால், எப்போது பூகம்பம் ஏற்படும் என்பதைத்தான் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ”இன்று மிதமான வெப்பமும் மிதமான மழையும் நாடு முழுவதும் நிலவியது. அடுத்த செய்தி வாசிப்பு காலை 10.30 க்கு. நன்றி, வணக்கம்.” என்று செய்தி வாசிப்பவர் புன்னகையோடு விடைபெற்ற அடுத்த விநாடியே பூகம்பம் ஏற்பட்டுவிடலாம்.

ஜப்பானின் பெரும்பகுதி பூகம்பம் தாக்கக் கூடிய வரைபடத்தில் வருகிறது. இந்தியாவில் இமயமலைத்தொடர் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட இந்திய மாநிலங்களில் தில்லி, அரியானா, இராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகார் குறிப்பாக அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் பெரும் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.

ஜப்பானில் இதுபோன்றப் பகுதிகளில் கட்டிடங்களைக் கட்ட மிகவும் கராறான சட்டங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் பூகம்பத்தையும் தாங்கி நிற்கக் கூடிய கட்டிடங்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படுகிறது . எனவேதான், ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டால் உயிரிழப்பு என்பதே கிட்டதட்ட இல்லாமல் தவிர்க்கப்படுகிறது .

ஆனால் நீதியும், நியாமுமற்ற இந்திய அளும் வர்க்கத்தின் அரசியல்வாதிகள் இதைப்பற்றி எல்லாம் கொஞ்மும் கவலைப்படுவதே இல்லை. வட இந்திய மாநிலங்கள் அனைத்தும் பெரும் பூகம்பம் தாக்கும் பகுதிகள் என்ற வரிசையில் இரண்டாம் இடத்தில் வகைப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால் இங்கெல்லாம் எந்தவிதக் கட்டுபாடுமின்றி ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும் அநியாய அரசியல்வாதிகளும் இணைந்து மிகவும் தரமற்றக் கட்டிடங்களைக் கட்டி மக்களுக்கு விற்று வருகின்றனர். இந்த இலட்சணத்தில் ரியல் எஸ்டேட் துறைக்கு இப்போது இருக்கும் கொஞ்ச நஞ்சக் கட்டுப்பாடுகளையும் முழுமையாக நீக்க மோடி அரசு முயன்றுவருகிறது.

விளைவு என்னவாக இருக்கும்? பூகம்பத்தால் மட்டுமல்ல ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கூட இந்த நீதியும் நியாமுமற்ற அரசியல் வாதிகளால் இலட்சக்கணக்கானக் மக்கள் மாண்டு போய்விடுவார்கள்.

Pin It