கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்திய அரசியல் - பொருளாதாரத்தில் நன்கு அறியப்பட்ட இருவரின் கருத்துக்கள் தற்போது மிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

raghuram rajan 400முதலாவதாக அத்வானி. இவர் ஆர்எஸ்எஸ்-ன் வளர்ப்பு பிள்ளை; பாபர்மசூதி இடிப்பின் பிதாமகன். ஜின்னா பற்றி இவருடைய கருத்திற்குப்பிறகு ஆர்எஸ்எஸ் இன் நம்பிக்கையை இழந்தவர். ஒரு காலத்தில் பிரதம மந்திரி வேட்பாளராக அறியப்பட்டவர்.

‘மீண்டும் அவசர நிலை வருவதற்கான அச்சமான சூழல் இந்தியாவில் நிலவுகிறது‘ என்று ஒரு பேட்டியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது ஒரு பக்கம்.

மற்றொரு பக்கத்தில் ரகுராம் ராஜன். இந்திய ரிசர்வ் வங்கியின் சேர்மன். சுதந்திர சந்தை பொருளாதாரத்தை ஆதரிக்கும் ‘சிகாகோ பொருளியல்‘ பள்ளியைச் சேர்ந்தவர்.

அமெரிக்காவில் 2008ல் நடைபெற்ற  வீட்டுக்கடன்கள் தொடர்பான சரிவையும், அதனை ஒட்டி பல வங்கிகள் திவாலானதையும் 2005லேயே கணித்து எச்சரித்தவர்.

தற்போதுள்ள மோடி அரசாங்கத்தின் ‘இந்தியாவில் செய்வோம்‘ என்ற பொருளாதாரத் திட்டத்தை வெளிப்படையாகவே விமர்சித்தவர். மோடி அரசு ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தைக் குறைக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்தவர்.

இவரின் சமீபத்திய பேட்டியில் 1929ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பெருமந்தம் என்று பரவலாக அறியப்பட்ட பொருளாதார சரிவு போன்ற ஒரு நிலையை நோக்கி உலகப் பொருளார்தாரம் சென்று கொண்டிருக்கிறது.“ என்று தனது கவலையையும் எச்சரிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த இருவரின் கருத்துக்களுக்கும் இடையில் எவ்விதமான நேரடித் தொடர்பும் இல்லாதது போன்று முதலில் பார்த்தவுடன் தெரியலாம்.

ஆனால், 1929ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பெருமந்தத்தையும் அது உருவான காரணத்தையும், அது உலக நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும், இதன் தொடர்பிலானவையாக எழுந்த இரண்டாம் உலகப் போரையும் அதில் இறந்தவர்களின், கடும் பாதிப்புக்குள்ளான கோடிக்கணக்கான மக்களின் அவலங்களையும் ஒருமுறை பார்த்தவர்களுக்குக்கூட இந்த இருவரின் கருத்துக்களுக்கு இடையிலுள்ள வலுவான தொடர்பு பளிச்செனப் புரியும். பொருளாதார நெருக்கடிக்கும் பாசிசத்திற்கும் உள்ள உறவு குறித்து புரிந்துகொள்ள இன்னும் ஆழமாகச் செல்வோம்.