இடாலோ கால்வினோ (1923-1985)

இடாலோ கால்வினோ க்யூபாவில் வசித்து வந்த இத்தாலியப் பெற்றோர்களுக்கு 1923 இல் பிறந்தார். பெற்றோர்கள் இருவருமே தாவிரவியல் விஞ்ஞானிகளாக விளங்கி னர். இத்தாலியிலுள்ள சான் ரெமோவிற்குத் திரும்பிய குடும்பத்தினரின் வாழ்க்கை செடிகொடிகள், தோட்டங்கள் ஆகிய வற்றை மையம்கொண்டே அமைந்தது. சிறு வயதில் மரங்களில் மேல மர்ந்து புத்தகம் வாசிப்பதைக் கால்வினோ விரும்பினார். ருட்யார்ட் கிப்ளிங்கின் The jungle bookஐ சிறுவனாக இருக்கும்போதே வாசித்துவிட்டார். கால்வினோவின் ஆரம்ப கால குறு நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படும் The Baron in the trees (மரங்களில் வாழ்ந்த பிரபு) கதையில் பிரபு குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் மரங்களின் மீது பித்தாகி திடீரென ஒருநாள் மரத்தின் மீதேறி அன்றிலிருந்து தன் இறுதிநாள் வரை மரங்களிலேயே காலத்தைக் கடத்தி வனமனிதனாக உரு மாறி சாகசம் செய்கிறான்.

பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க தாவர வியல் பட்டப்படிப்பை மேற்கொண்ட கால்வினோ, பின்னர் அதைப் பாதியில் நிறுத்திவிட்டு இலக்கியம் பயின்று ஆங் கில எழுத்தாளரான ஜோசப் கான்ராடின்மீது தனது ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார்.

கால்வினோ அறிவியக்கத்தில் ஈடுபாடு கொண்ட குடும்பத்தில் பிறந்தவராதலின் Max Planck, Heisenberg மற்றும் Einstein ஆகியோரை ஆழ்ந்து பயின்றார்.

கால்வினோவின் கதையுலகம் கற்பனா அதீதத்தின் விசித்திரங்களும் விஞ்ஞானத் தின் அழகியலையும் ஒன்றோடொன்று விளையாடும் களமாக விளங்குகிறது. தொன்மம் மற்றும் விஞ்ஞான உலகங்கள் இணையும் களமாக விளங்குகிறது. இயல் பிலேயே இத்தகைய இரட்டைத் தன் மையை உடையவர் கால்வினோ. ஆத லால்தான் அவரால் கலிலியோவின் உரை நடையில் கவித்துவத்தைக் கண்டறிய முடிந்தது.

போர்ஹேயின் பிரபஞ்ச உருவாக்கச் சிந்தனை காலம் சார்ந்து இயங் கும். கால்வினோவினுடையதோ வெளி அல்லது இடம் சார்ந்து இயங்குகிறது. நிகழ்வுகள் ஒன்று மற்றொன்றாக உருமாறி அதுவும் வேறொன்றாகப் புலப்படும் பன்முகப் பரிமாணங்கள் கொண்டவையே என்னும் சரடில் பயணிக்கிறது கால்வினோ வின் கதை சொல்லல் முறை. அமெரிக்கா முழுவதும் பிரபலமாகி அவரை 21ஆம் நுற்றாண்டின் கதை சொல்லியாக அடையாளம் காட்டிய Invisible cities கதையின் நகரங்கள் ஒவ்வொன்றும் நகர்ந்து கலந்து வேறொரு நகரமாக உருமாறிக்கொண்டே போகும்.

கால்வினோவின் Cosmicomics கதைகள் பிரபஞ்சம் மற்றும் ஆதி உயிர்களின் பிறப் பையும் நடமாட்டத்தையும் காமிக்ஸ் காட்சி களாக்கி விஞ்ஞான விளக்கங்களோடு விளையாடுகின்றன. விஞ்ஞானப் புனைகதையில் cybernetics fiction வகைக் கதைகளாக கணினி மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை மையப்படுத்தி கதை மாந்தர்களையும் கதை சொல்லலையும் ஒரு computer programmeஐப்போல நடமாட விட்ட கதைகளைக் கால்வினோ படைத்துள்ளார். அவருடைய ‘The burning of the abominable house’ கதையைச் சிறந்த உதாரணமாகக் கூறலாம். கால்வினோவைத் தொடர்ந்து Umberto Ecoவும் தன்னுடைய Foucault’s Pendulum நாவலில் இத்தகைய கதை சொல்லலைப் பிரயோகித்துள்ளார்.

மிகச் சிறந்த மனித நேயராகவும் கருணையும் நிரம்பிய கால்வினோ அறிவியல் சாத னங்கள் எவ்வாறு மன நிம்மதியைக் குலைக் கும் வல்லமை படைத்தவை என்பதையும் தனது Before you say Hello, Glaciation, Petrol pump மற்றும் The last channel ஆகிய சிறு கதைகளில் பதிவுசெய்துள்ளார். இருபதாம் நூற்றாண்டில் ஆதி மனிதனைக் கதைகளின் ஊடாகக் தேடிக் கண்டறிந்த கால்வினோ 1984ஆம் ஆண்டில் தனது 61ஆம் அகவையில் இறந்தார்.

 

நீ ஹலோ சொல்வதற்குமுன்..

நீ இப்போது தொலைபேசியின் அருகில் தான் அமர்ந்திருக்கிறாய் என நம்புகி றேன். யாரேனும் உன்னை அழைக்கும் பட்சத்தில் அந்நபரிடம் உடனடியாக இணைப்பைத் துண்டிக்கச் சொல்லி விட்டு என்னுடைய அழைப்பிற்காகத் தான் காத்திருக்கிறாய். எந்தக் கணத்தி லும் என்னுடைய அழைப்பு வரும் என்பது உனக்குத் தெரியும்.

ஏற்கனவே மூன்று முறை உன் எண்ணை டயல் செய்துவிட்டேன். ஆனால் என் தொடர்பின் சமிக்ஞை மின்காந்த சுழல் பாதைகளில் சிக்கி நான் அழைக்கும் நகரிலோ அல்லது உனது நகரத்தின் ஒலி அலைவரிசைகளிலோ கலந்து மறைந்து விட்டது. இணைப்புகள் முழுவதுமாக மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கின் றன. ஐரோப்பா முழுவதும் ஐரோப் பாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டி ருக்கும் வேளையிது. உன்னிடம் விடைபெற்றுக்கொண்டு தலைகால் புரியாத அவசரத்தில் நான் இங்கு வந்து சேர்ந்து சில மணி நேரமே ஆகியிருக்கிறது. எப்போதும் போல சள்ளை பிடித்த பயணம் தான். ஒவ் வொரு முறையும் எந்திரகதியில் மயக் கத்தின் பிடியில்தான் பயணிக்கிறேன். தெருவில் காத்திருக்கும் டாக்ஸி, விமான நிலையத்தில் காத்திருக்கும் விமானம், வந்திறங்கிய நகரின் விமான நிலையத் தில் காத்திருக்கும் இன்னொரு டாக்ஸி இவற்றில் பயணித்து இதோ நான் இங்கே, உன்னிடமிருந்து பலநூறு மைல்களைக் கடந்து வந்திருக்கிறேன்.

இந்தத் தருணம் எனக்குத் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று. சற்று முன்னர்தான் உடைமைகளைக் கீழிறக்கி வைத்தேன். என் கோட்டைக் கூட இன்னும் கழட் டாமல் தொலைபேசியில் உனது நகரத் திற்கான ப்ரத்யேக குறியீட்டு எண்ணை யும் பிறகு உன்னுடைய எண்ணையும் சுழற்றுகிறேன். என்னுடைய விரலால் ஒவ்வொரு எண்ணையும் நிதானமாக வட்டத்தின் இறுதிவரைச் சுழற்றுகிறேன். என் விரல் நுனியில் பக்குவமாக குறிபார்த்து எண் களை அழுத்தும்போது அந்த அழுத்தம் தான் ஒவ்வொரு எண் பயணிக்க வேண் டிய சரியான பாதையைத் தீர்மானம் செய்து ஒவ்வொரு எண்ணும் வரிசைக் கிரமமாக உன்னையும் என்னையும் பிரிக்கும் தூரத்தைக் கடந்து உன் படுக் கையின் அருகேயுள்ள தொலைபேசி மணியை சிணுங்கச் செய்கிறது என்பது என் எண்ணம். முதல் தடவையே இந்த இயக்கம் வெற்றி பெறுவது அபூர்வமே. எவ்வ ளவு நேரம் என்னுடைய ஆள்காட்டி விரல் தன்னுடைய பணியைத் தொடர வேண்டி வரும் என்பதும், நிச்சய மின்மையோடு இந்த இருள்படிந்த சங்கைத் எனது செவி எவ்வளவு நேரம் பொருத்திக் கொண்டிருக்கும் என்பதும் எனக்கு விளங்கவில்லை.

எனது பொறுமையின்மைக்குச் சமா தானம் கூற நான் சிறிது காலம் முன் தொலைதொடர்பு நிலையம் தனது கன்னிப் பருவத்தில் இருக்கையில் இணைப்புகளின் தொடர்ச்சியான ஆனால் பலம் குன்றிய தொடர்புக் கண்ணிகளின் இயக்கத்திற்கும் புலப் படாத போர்களைப் புலப்படாத கோட் டைகளுக்கு எதிராக நடத்தும் சாதனமாக இருந்ததையும் நினைவு கூர்கிறேன். சக மனிதர்களுடன் தொடர்புகொள்ள நினைக்கும் எனது உள்ளக் கிடக்கை ஒவ்வொன்றும் அந்நியமான மற்றும் அச்சுறுத்துகின்ற வழிகளில் குறுக்கிடப் பட்டு தாமதப் படுத்தப்பட்டு மற்றும் வடிகட்டப்பட்ட காலம் அது. இப்போதோ தானியங்கித் தொடர்பு களின் கண்ணிகள் கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கின்றன. ஒவ்வொரு சந்தா தாரரும் மற்றொருவரைத் தனது விருப் பப்படி எவரின் உதவியின்றியும் அழைக்க முடியும். இத்தகைய அதீத சுதந்திரத்திற்கு என்னு டைய நரம்புகளின் சக்தியையும், ஒரே விதமான இயக்கத்தை மீண்டும் மீண் டும் நிகழ்த்துதலையும் கால விரயத்தை யும் மன விரக்தியையும் நான் விலை யாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

தொலைபேசியின் பயன்பாட்டிற்கு அதிகக் கட்டணத்தை விலையாகக் கொடுக்க வேண்டியதாகிறது. தொலை பேசியைப் பயன்படுத்துதலுக்கும் அதிக கட்டணத்திற்கும் நேரடியான தொடர்பு இல்லை. மூன்று மாதத்திற் கொருமுறை தான் கட்டணம் கணக் கிடப்படுகிறது. ஒரு நேரடியான தொலைதூர அழைப்பு ஒட்டுமொத்த அழைப்புகளின் கட்ட ணத்திற்குள் அமிழ்ந்துவிடுகிறது. அந்த ஒட்டு மொத்த தொகையைப் பார்க்கை யில் ஏற்படும் மயக்கம் தவிர்க்க இய லாத இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் போலவே உணரப்படுகிறது. ஆக தொலைபேசி சாதனம் ஏற்படுத்திக் கொடுக்கும் வசதி நம்மை கிறங்கடித்து விடுவதால் தொடர்புகொள்வது மிக வும் கடினமான செயலாகவும் எப் போதும் இயலாததாகவும் மாறிவிட்டது. எல்லோரும் எல்லோரையும் எப்போ தெல்லாம் இயலுமோ அப்போதெல் லாம் தொடர்புகொள்ள முயல்கின்ற னர். ஆகையால் யாரும் எவரையும் தொடர்புகொள்ள இயலாமற் போகி றது.

தொடர்புச் சமிக்ஞைகள் தானி யங்கி சர்க்யூட்டுகளின் சுழற்பாதை களில் மேலும் கீழுமாக பித்துப் பிடித்த பட்டாம்பூச்சிகளைப் போலச் சிறக டித்து வட்டமிட்டு காலியாக உள்ள இணைப்புகளில் சிக்காமல் அலை வுறும் பொழுது ஒவ்வொரு சந்தாதார ரும் இது ஒரு தற்காலிகத் தடைதான் என்று எண்ணி எண்களை எரிகற்கள் போல் தொலைத்தொடர்பு நிலையம் நோக்கி வீசிக்கொண்டிருக்கிறார்கள். யதார்த்தம் என்னவெனில் மிகப் பெரும் பான்மையான அழைப்புகளில் ஒருவ ருக்கொருவர் பரிமாறிக் கொள்வதற்கு எதுவும் இருப்பதில்லை. ஆதலால் தொடர்பு கிடைக்காவிட்டாலும் கவலைப்படாதவர்கள் நிஜமாகவே சொல்வதற்கு நிறைய உள்ள சிலரின் அழைப்புகளுக்குத் தடை ஏற்படுத்தி விடுகின்றனர். உன்னிடம் சொல்வதற்கு நிறைய உண்டென நானும் பெருமை கொள்ள மாட்டேன். உன்னிடம் விடைபெற்ற சில மணி நேரங்களிலேயே உன்னைத் தொடர்புகொள்ளத் துடிப்பதால் உன் னிடம் ஏதோ முக்கியமானதைச் சொல்ல மறந்துவிட்டேன் என்பதில்லை.

என்னுடைய தற்காலிகப் பிரிவினால் பாதிக்கப்பட்ட நம் அந்நியோன்ய உறவை உடனே ஸ்தாபிக்க நான் அவசரப்படுகிறேன் என்றும் விளக்க முடியாது. அவ்வாறு ஆசை வார்த்தைகளை நான் அள்ளித் தெளித்தால் உன் முகத்தில் படரும் கேலிச் சிரிப்பையும் என்னை நீ கடுமையான குரலில் ‘பொய்யன்' என்று நிந்திப்பதையும் கற்பனை செய்ய முடிகிறது. உனக்குத் தெரியும். நான் புறப்படு வதற்கு சில நேரங்களில் நிலவும் நீண்ட மௌனம் மற்றும் இறுக்கம் ஆகிய வற்றை எப்போதும் நீ நன்கறிவாய். உன்னருகில் நானிருக்கையில் நம்மி டையே உள்ள தொலைவு எப்போதும் கடக்க இயலாததாய் உள்ளது. ஆதலால் இப்போது உன்னைத் தொடர்புகொள் ளும்போது ஏற்படும் தாமதம் சகிக்க முடியவில்லை. தொலைதூர அழைப்பினாலோ அல் லது சர்வதேச அழைப்பு என்பார்களே கண்டம் விட்டு கண்டம் அழைக்கும் போது ஏற்படும் அனுபவத்தில் மட் டுமே நாம் வழக்கமாக வரையறை செய்யும் ‘‘ஒன்றாக இருத்தல்'' அல்லது ‘‘ஒன்றிணைதல்'' என்ற நிலை ஏற்படு கிறது. இதுதான் என் பயணத்திற்கான நிஜகாரணம்.

வரைபடத்தில் உள்ள நாடுகளுக்கு நான் எப்போதும் தாவிக் கொண்டிருத்தல் ஒன்றிணைதலை நான் விரும்புவதற்கான இரகசிய நியாயப் படுத்துதல் சடங்காகும். இச்சடங்கு இல்லையேல் ஒரு பன்னாட்டு நிறுவ னத்தின் ஐரோப்பிய அலுவல்களுக் கான ஆய்வாளராகப் பணியாற்றுதலின் அன்றாட அலுவல்கள் அர்த்தமிழந்து விடும். ஒவ்வொரு நாளும் உன்னைத் தொலை பேசியில் தொடர்பு கொள்வதற்கா கவே நான் உன்னைவிட்டு விடை பெறுகி றேன். எனக்கு நீயும் உனக்கு நானும் எப்போதும் துத்தநாக ஒலி கடத்தி கம்பிகளின் இரு முனைகளை நோக்கி ஊடுருவும் மெல்லிய இழைகளில் அதிர் வொலிகளின் இயக்கமாகத் தென்படு கிறோம். கண்டங்களின் அடியாழத்தி லும் அலைகடலின் மேற்பரப்பிலும் இழையோடும் குரல்களாகவே ஒருவரை யொருவர் உணர்ந்துகொள் கிறோம். நம்மை ஒன்றிணைக்கும் இந்த கம்பி இல்லாத பட்சத்தில் நம்மிருவரின் ஸ்தூல இருப்பின் நெருக்கம் உடனடி யாக மிகச் சாதாரணமானதும் சோபை யற்றதுமாக மாறிவிடுகிறது.

நம்மிருவ ரின் உடல் அசைவுகள், வார்த்தைகள், முகபாவனைகள் நாம் பகிர்ந்துகொள் ளும் சந்தோஷம் அல்லது அரு வெறுப்பு ஆகியவை அனைத்தும் எந்திர கதியில் பொலிவிழந்து போகின்றன. இருவர் தத்தமது உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளத் தேவையான அடிப்படை உபகரணங்கள் மட்டுமே இவை. நம்மிருவரின் ஸ்தூல நெருக்கம் பிர மாதமான ஒன்றாக இருப்பினும் பிரம் மாண்டமான தொலை தொடர்பின் மின்னணு எந்திரங்களின் விசைத் தெறிப்பில் நம்மை ஒன்றிணைக்கும் அதிர்வலைகளின் உணர்ச்சிப் பெருக்கை ஒப்புநோக்கும்போது இரு உடல்களின் நெருக்கம் ஒன்றுமில்லா மல் போகிறது. தொலைத்தொடர்பு நிலையம் நம்பத் தகாததாகவும், அச்சுறுத்துவதாகவும் பலவீனமானதாகவும் செயல்படும் பட்சத்தில் நம் உணர்ச்சிகளின் வேக மும் அதிகரிக்கிறது. மூச்சு கூட விடமுடியாமல் நான் மீண் டும் வரிசையாக எண்களை சுழற்றும் போது பைசாசத்தின் சப்தங்களை மேலேயெழுப்பியபடி உள்ளது ரிசீவர். இணைப்புகளெல்லாம் முழுமையாக இயங்கிக் கொண்டிருப்பதை தொட ரும் ஒலிகள் உணர்த்துகின்றன. இது ஒரு தற்காலிக குறுக்கீடு தான் என்று நம்புகிறேன்.

அரைகுறையாகக் கேட் கின்ற சிதறுண்ட சப்தங்கள் எண்கள் இணைப்பின் அருகாமையில் சென்று விட்டனவா என்று எண்ணத் தோன்று கிறது. மீண்டும் கருணையற்ற இருட் டின் நிசப்தம் அல்லது சூனியத்தின் பிடியில் நான் மாட்டிக் கொள்கிறேன். எங்கென்று சுட்டவியலாத சர்க்யூட்டு களின் சுழல் பாதைகளின் புள்ளியொன் றில் என் அழைப்பு கலந்து காணாமற் போய் விட்டது. தேசத்தின் அலை பரப்பு பாதை களையோ அல்லது நகரை விட்டுக் கூட நகரவியலாத எண்களை மீண்டும் நான் மெல்லச் சுழற்றுகிறேன். சில தேசங் கள் அழைப்பு தனது பாதி தூரத்தைக் கடந்துவிட்டதற்கான அடையாளமாக ஒரு சிறப்பு சப்தத்தை உபயோகிக்கின் றன. சில கணங்கள் மட்டுமே நீடிக்கக் கூடிய ஒரு இசைக்கோவை ஒலிக்கவிட் டால் நீங்கள் பிற எண்களைத் தொடத் தேவையில்லை. இணைப்பு காலியாகும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். அழைப்பு இயங்கத் தொடங்கியவுடன் ஒலிக்கும் ஒரு குறிப்பு ஒலிக்கப் பிறகு இணைப்பு சூனிய நிலைக்குத் தள்ளப் படும். எதிர்பாராதவிதமாக அது மீண் டும் இயங்கத் தொடங்கலாம். ஆகை யால் எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது.

எண்ணின் இறுதி இலக்கம் வரைச் சுழற்றிவிட்டு அமைதியாகக் காத்திருக்க வேண்டியது தான். இயங்கிக்கொண்டிருக்கும் இணைப்பு திடீரென்று பாதியில் இனி நீங்கள் காத்திருந்து பயனில்லை என்று குறி சொன்னாலும் பரவாயில்லை. உடனே ரிசீவரை வைத்துவிட்டு அர்த்தமற்ற காத்திருத்தலுக்கு ஆளாகாமல் மீண்டும் டயல் செய்ய ஆரம்பிப்பேன். என்னுடைய அழைப்பின் சமிக்ஞை இப்போது எதனுடன் போராடிக் கொண்டிருக்கிறது? இந்நகரத்தில் அழைப்புகளுக்கான வரிசையில் காத்தி ருக்கிறதா? அல்லது ஒழுங்குபடுத்தப் பட்டு பிற தொலைத்தொடர்பு நிலை யங்களை நோக்கிச் சென்றுவிட்டதா அல்லது நேரடியாக உனது நகரத்தின் தொலை தொடர்பு நிலையத்திற்குள் எத்தடையுமின்றி எவ்வாறு ஒரு ஈ சிலந்தி வலைக்குள் சிக்கிவிட்டதோ அவ்வாறு உனது அணுகவியலாத தொலை பேசிக்குள் நுழைந்துவிட்டதோ? தோல்வியை ஏற்றுக்கொண்டு ரீசிவரை வைத்துவிடுவதா அல்லது எனது இணைப்பிற்கான அடையாள ஒலிக் காக அது குறிபார்த்துச் செல்லும் அம்பு போல உனது தொலைபேசி மணியை இன்னும் சில கணங்களில் சிணுங்கச் செய்வதற்குக் காத்திருக்கவா? இதோ சர்க்யூட்டின் சுழற்பாதைகளின் மௌனத்தின் வாயிலாகத்தான் நான் உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.

நம்மிருவரின் குரல்களும் இறுதியாக கம்பிகளில் இணையும்போது அர்த்த மற்ற சுவாரசியமற்ற சம்பாஷணை தான் உருவாகும் என்பதை நன்கறி வேன். தந்திக் கம்பியின் முனைகளில் நாமிரு வரும் இணையும்போது நமது உரை யாடல் சள்ளை பிடித்ததாகவும் உப்புச் சப்பின்றிதான் அமையும் என்பதை நான் நன்கறிவேன். உன்னிடம் ஏதேனும் சொல்வதற்கா கவோ அல்லது என்னிடம் நீ ஏதேனும் சொல்வாய் என்று எதிர்பார்த்தோ நான் உன்னை அழைக்கவில்லை. நாம் ஏன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள விரும்புகிறோம் தெரியுமா? இத்தகைய தொலைதூர அழைப்பு களில், புதைக்கப்பட்ட துத்தநாகக் கம்பிகளிடையே நாம் ஒருவரையொரு வர் தேடுதலில், சுழன்று பாயும் விசை களின் தெறிப்பு நுனியில், இந்த நிசப்த தேடுதலில் மற்றும் பதில் குரலுக்கான காத்திருப்பால் மட்டுமே அந்த முதல் அழைப்பின் நீட்சியைத் தொடர முடி யும்: ஆமாம், அந்த முதல் அழைப்பின் அலறல்.

இணைந்திருந்த தம்பதிகளின் பாதங்களுக்கிடையே ஏற்பட்ட கண் டங்களின் முதல் விரிசலில், அலை கடல் அவர்களைப் பிரிப்பதற்காகப் பொங்கி எழுந்தபோது, இருவரும் இரு துருவங்களின் நுனியில் ஒருவர் ஒரு கரையிலும் மற்றொருவர் இன் னொரு கரையிலும் தள்ளப்பட்டபின் அத்தம் பதிகள் தங்களது அறை கூவலின் அழைப் பின் ஒலியால் தங்களை இணைக்கும் ஒரு சப்தங்களின் பாலத்தை தீர்மானிக்க முயலும்போது கடலின் கர்ஜனை அவர் களது நம்பிக் கையை விழுங்கிவிட்டது. தொலைவு என்பது அப்போதிலிருந்தே, ஒவ்வொரு காதல் கதையின் கண்ணி களை இணைக்கும் நூலிழையாக இயங்கி வருகிறது. உயிரினங்களின் எத்தகைய உறவுகளையும் இணைக் கிறது. அதிகாலைக் காற்றினூடே பறவைகள் தங்களது கட்புலனாகாத பாதைகளைத் தொலைவின் வெளியில் தான் அமைக்கின்றன. நாமும் பூமியின் இரத்த நாளங்களில் மின் சக்தியைப் பாய்ச்சி சமிக்ஞைகளைத் தொடர்பு கொள்வதற்காகப் பரப்புகிறோம்.

மனிதர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்கிற வாதை யினால் மட்டுமே ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள விழைகின்றனர் என் பதை அறிந்துகொள்ள ஒரே வழிதான் இது. நான் உன்னிடம் சொல்லப் போவதை விட பறவைகள் நமக்குள் அதிகம் சொல்லப் போவதில்லைதான். ஒவ் வொரு எண்ணையும் தடுமாறிக் கொண்டே நான் சுழற்றும் போது ஒரு சுழற்சி மற்றொன்றைவிட அதிர்ஷ்டகர மானதாக அமைந்து உன் தொலைபேசி மணியைச் சிணுங்கச் செய்யுமென்ற அவாவில் எண்களை டயல் செய் கிறேன். பறவைகளின் கூச்சலில் செவிடாகிப் போன காட்டைப்போல நமது தொலைத் தொடர்பு மைய கிரகம் மனிதர்கள் தொடரும் உரையாடல்களில் அல்லது தொடர எத்தனிக்கும் உரையாடல்களில் தொலைபேசியின் கூக்குரலில், இடை யில் அறுபட்டத் தொடர்பின் ஏக்கமான ஒலியில், சமிக்ஞைகளின் சுழற்சியில், சப்தங்கள் மற்றும் கிறீச் ஒலிகளால் நிறைந்திருக்கிறது. இவற்றின் உச்சக் கட்டம் யாதெனில் பறவைகளின் முணு முணுப்பைப் போன்ற பிரபஞ்சமய ஒலியலைகள். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சுய இருப்பை யாரேனும் ஒருவருக்கு அடையாளம் தெரிவிக்க வேண்டும் என்கிற அடிப்படைக் கிளர்ச்சியின் கிளை பிரிதல்களே.

தொலை தொடர்பின் கண்ணிகளைத் தவிர அழைப்பவரும் அவருக்கு பதிலளிப்பவரும் கற்பனையே என்ற பயம் கூட எழுகின்றது. மீண்டும் தவறான நகரக் குறியீட் டெண்ணைப் பயன்படுத்திவிட்டேன். இணைப்புகளின் ஆழத்திலிருந்து ஒரு பறவையின் ஒலியும், பிறருடைய உரையாடல்கள் பகுதிகளாகவும், அந் நிய மொழியில் பதிவு செய்யப்பட்ட ‘‘நீங்கள் தொடர்புகொள்ளும் எண் இப்போது உபயோகத்தில் இல்லை'' என்ற அறிவிப்பையும் கேட்கிறேன். நீயும் இதே நேரத்தில் என்னைத் தொடர்புகொள்ள முயல்வதால் இரு வரும் கரடுமுரடான இருட்டுப்பாதை களில் அலைகிறோமோ என்று எண் ணுகிறேன். நீ கேட்டுக் கொண்டிருக் கும்பொழுது பேசுவதைவிட இப்போது அதிகம் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ரிசீவரை அதனி டத்தில் வைத்து தொலைபேசி எண் ணின் அடையாளத்தை அழிக்கையில் நான் பேசியதையும் சிந்தித்ததையும் ஒரு வித மயக்கத்தில் அழித்துவிடுகிறேன். இத்தகைய எதிர்ப்பார்ப்பு மிகுந்த பதற் றமான ஒருவரையொருவர் தேடும் வேட்கையே வாழ்வின் தொடக்கத்தை யும் முடிவையும் தாங்கிச் செல்கிறது.

ரிசீவரில் அவதானிக்கும் செவிகளில் உணர்ச்சிகளின் மின்சாரப் பாய்ச்சலும் காதல் மற்றும் வெறுப்பின் கொந்த ளிப்பும் குவிமையப்படுத்தப்படுகிறது. ஒரு பெரிய நிதி நிறுவன அதிகாரியாகக் காலத்தைக் கணக்கிட்டுச் செலவு செய் யும் பொறுப்புள்ள எனக்கு இவற்றை மேம்போக்காக அன்றித் தீவிரமாக அனுபவிக்க வாய்ப்பிருந்ததில்லை. நாளின் இந்தக் குறிப்பிட்ட பொழுதில் இணைப்பு கிடைக்க வழியில்லை தான். நான் முயற்சியை நிறுத்திவிடுவது நல்லது. ஆனால் உன்னுடன் தொடர்பு கொண்டு பேச முயல்வதை நிறுத்தி விட்டால் தொலைபேசியை முற்றிலும் வேறு விதமான கருவியாக என்னில் வேறு ஒரு பகுதியைப் பிரதிபலிக்கும் சாதனமாக பிற பயன்பாடுகளுக்காக அணுக வேண்டி வரும். அலுவல் சம்பந் தமான தொடர் கூட்டங்களை உறுதி செய்யும் பணி இருப்பதால் என்னை உன்னுடன் இணைக்கும் மனோமய மான உள்முக சர்க்யூட்டில் அலுவலக ஆய்வுகள் தொடர்பான இணைப்பைப் பொருத்த வேண்டியிருக்கும். தொலைபேசியை அல்ல என்னையே நான் வேறு விதமாக மாற்றி அமைத்துக் கொண்டு தொலைபேசியை வேறு விதமாக அணுக வேண்டி வரும். இறுதியாக நான் ஒரு தடவை முயற்சி செய்கிறேன்.

மீண்டும் உன்னுடைய பெயரை, முகத்தை, உன்னையே ஆக்கி ரமித்துக்கொண்டுள்ள எண்களின் வரி சையை டயல் செய்கிறேன். இணைப்பு கிடைத்தால் நல்லது, இல்லையேல் நிறுத்திவிடுவேன். அதற்கிடையில் நான் உன்னிடம் சொல்லப்போவதில்லை யென்று தீர்மானம் செய்துள்ள விஷயங் களை எண்ணிக்கொண்டே போகிறேன். உன்னிடமில்லாது தொலைபேசியை நோக்கி நான் உரைக்கும் வார்த்தைகள் அவை. தொலைபேசியின் வாயிலாக எனக்கும் உனக்கும் நீடிக்கும் உறவு அல்லது உன்னை மையப்படுத்தி தொலைபேசியிடம் நான் கொள்ளும் உறவு பற்றி எண்ணுகிறேன். தொலைதூரத்தில் எந்திர இயக்கங் களின் சுழற்சி. அவற்றினூடே என் எண் ணங்களும் சுழல்கின்றன. தொலைதூர அழைப்பிற்கு பதிலுரைக்கும் முகங் களைக் காண்கிறேன். விதவிதமான குரல்களின் அதிர்வுகள், வகைவகை யான பாவனைகள், மனோ நிலைகள். ஆனால் தொலைதூரத்திலிருந்து அழைக் கும் எனது ஏக்கத்திற்குப் பதிலுரைக் கும் என் இலட்சியக் காதலியின் முகம் மட் டும் இன்னும் தென்படவேயில்லை.     

என் மனம் குழப்பங்களின் கூடாரமாகி விட்டது: ஆன்ட்வெர்ப் அல்லது ஸீரிச் அல்லது ஹாம்பர்க்கைச் சேர்ந்த முகங்கள், பெயர்கள், குரல்கள் ஆகியவை கலந்து விடுகின்றன. ஒரு எண்ணை விட மற்றொரு எண்ணிலிருந்து எனக்கு எதுவும் அதிகம் கிடைக்கப் போவ தில்லை, ஆனால் இது நான் ஆன்ட்வெர்ப் அல்லது ஸீரிச் அல்லது ஹாம்பர்க் ஆகிய நகரங்களை அல்லது எது உனது நகரமோ அதனுடன் தொடர்புகொள்வதை நிறுத்தப்போவ தில்லை. எண்களை ஒரு மணி நேர மாகப் பித்து பிடித்த நிலையில் சுழற்று வதால் உனது நகரத்தின் பெயரைக் கூட மறந்துவிட்டேன். சில விஷயங்களை என்னுடைய குரல் உன்னை அடையாவிட்டாலும் உன்னி டம் தெரிவிக்க விரும்புகிறேன். நீ ஆன்ட்வெர்ப், ஸீரிச் மற்றும் ஹாம்பர்க் ஆகிய மூன்று நகரங்களில் எங்கிருந்தா லும் எனக்குக் கவலையில்லை.

எனது அலுவல்கள் முடிந்த பின் ஏதாவதொரு நகரத்தில் உன்னுடன் இரவைக் கழிப்பது நமது உறவின் தவிர்க்க இயலாத அபத்த குணாதிசயம் என்பேன். வழக்கமான ஊடல் கூடல்கள், மீண் டும் ஊற்றெடுக்கும் பழைய தாபங்கள். எந்த நகரத்திலும் மற்றும் நான் தொலை பேசியில் தொடர்புகொள்ளும் எந்த பெண்ணுடனும் நான் உன்னுடன் நிகழ்த்துகின்ற சடங்கினைத் திரும்ப நிகழ்த்துகின்றேன். உன்னுடைய நகரத்திற்கு நான் வந்து சேர்ந்த உடனே அல்லது எனது வரவை நீ அறியும் முன்னரே நான் பித்த வேகத்துடன் கோடெபொர்க் அல்லது பிலாபோ அல்லது மார்ஸெயில் ஆகிய நகரங்களில் எனக்குரியவர்களின் எண் களைச் சுழற்ற ஆரம்பித்து விடுவேன். மூன்று நகரங்களில் ஏதொன்றில் இருந் தாலும் உள்ளுர் இணைப்பிலேயே இலகுவாக அந்த எண்ணைத் தொடர்பு கொள்ள முடியும் (இப்போது எங்கி ருக்கிறேன் என்பதை நினைவுகூர இயல வில்லை). ஆனால் வேறு எந்த எண்ணு டனும்; இப்போது தொடர்புகொள்ள விரும்பவில்லை. இப்போது நான் உன் னுடன் மட்டுமே பேச விரும்புகிறேன். இதைத்தான் நான் உன்னிடம் நான் பேசுவது இப்போது கேட்காததால் தெரிவிக்க விரும்புகிறேன்.

இப்போது ஒரு மணி நேரமாக சில எண்களை மீண் டும் மீண்டும் சுழற்றுகிறேன். கஸப்லான்கா, சலோனிகா, வாடுஸ் ஆகிய நகரங்களிலும் உன் இடத்தைப் போலத் தொடர்புகொள்ள இயல வில்லை. மன்னிக்கவும், நீங்கள் அனைவரும் என்னுடைய இணைப் பிற்காக முட்டிமோதிக் காத்துக்கொண் டிருக்கிறீர்களென நன்கறிவேன். சேவை இப்போது மிக மோசமான நிலைக்கு போகிறது. ‘‘ஹலோ'' என்ற குரலை நான் கேட்ட உடனேயே நான் உங்களில் யாருடைய இணைப்பு கிடைத்து விட்டது என்று கவனமாக அடையாளம் கண்டு பேச வேண்டும். உங்கள் எண்களில் யாருடையதை இறுதியாகச் சுழற்றினேன் என்பதை அவதானித்துப் பேச வேண்டும். உங்களுடைய குரல்களை இனிமேலும் என்னால் அடையாளம் காண இய லுமா? ரொம்ப நேரமாக நிசப்தத்துட னேயே உறவாடிக்கொண்டிருக்கிறேன்.

உங்களில் எவருடைய தொலைபேசி யும் எனக்கு பதிலுரைக்காமல் போனால் நான் உங்களுக்குச் சொல்ல விரும்பவது யாதெனில் இந்த பிரபஞ்சத்தின் தொலைத் தொடர்பு சேவை முழுவதையும் என்னு டையதாக மாற்றிக்கொள்ள விழை கிறேன். காதல் தாபத்தின் தொடர்பு களை அலையவிடுகிறேன் எனக்குள் இழுக்க விரும்புகிறேன். இச்சாதனத்தை என் உடலின் ஓர் அங்கமாகப் பொருத்திக் கொண்டு இப்பூமியையே அணைத்துக் கிளர்ச்சியடைய விரும்புகிறேன். நான் ஏறக்குறைய என் ஆசையை நிறை வேற்றும் வேளை நெருங்கிவிட்டது.

உங்கள் தொலைபேசி அருகில் காத்தி ருங்கள். உங்களுக்கும்தான், நீங்கள் கியோட்டோ, சா போலோ, அல்லது ரியாத் என எங்கிருந்தாலும்… துரதிர்ஷ்டவசமாக ரிசீவரை நான் கீழே வைத்தாலும் திரும்ப எடுத்தாலும் திடும் என வீசினாலும் இணைப்புகள் முழு வதுமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒலியை மட்டுமே கேட்கிறேன். இப்போது பாருங்கள், எனக்கு எது வுமே கேட்கவில்லை. நான் அனைத்து இணைப்புகளிலிருந்தும் துண்டிக்கப் பட்டதாக நினைத்திருப்பீர்கள். அனை வரும் அமைதியாக இருங்கள். இது ஒரு தற்காலிகத் தடை மட்டுமே. தயவு செய்து காத்திருங்கள்.

மொழிபெயர்ப்பும் குறிப்பும்

கணேஷ்ராம்

Pin It