அய்யப்பமாதவனின் நிசி அகவலைச் சில தடவைகள் வாசித்து முடித்தபிறகு இதிலுள்ள கவிதைகள் வழக்கமாக கவிதைகளுக்குரிய கருப்பொருள்களாகும் இயற்கையையும் பிராயத்து ஏக்க நினைவுகளையும் தவிர்த்திருக்கின்றன என்பது பிரக்ஞையில் பொறி தட்டுகிறது. (அவ்வப்போது அபூர்வமாகக் காணக் கிடைக்கும் சொற்ப மரங்கள், சோலைகள், பறவைகள் மற்றும் இயற்கை நிகழ்வுகளின் மேலும் நகரத்துச் சாலையோர மரங்களின் மேலும் அப்பிக் கொள்வதைப்போல புலம்பல்களின் புழுதி அடையாக அப்பிக்கொண்டிருக்கிறது. மாடிக்கு வரும் மழை, அலைகள் niciகிளம்புகின்றன வீடு நோக்கி, வீட்டிலிருந்து பெரிய வானம் தெரிந்துவிட்டது, மலையை உடைத்தாலென்ன, சிகரெட் ஒன்றை மூங்கில் குழலாக்கி போன்ற படிமங்களைக் கவனியுங்கள். கவிதைகளில் பிரதானமாகக் காட்சிப்படுத்தப் படும் கடல் சார்ந்த படிமங்களும் நகர வாழ்வின் நீட்சியாகவேயன்றி (கடற்கரை அருகாமையில் குடியிருப்பு, கடல்வழிச் சாலை, கடலோரச்சாலையின் நவீன உணவகம்) தனித்ததொரு பிரகிருதியாகத் தன்னைக் காட்டிக்கொள்வதில்லை. அதுபோலவே எந்தக் கவிதையிலும் பின்னோக்கியத் திரும்புதல் கிடையாது. நிகழ் கணத்தை அதன் பின்புலங்களோ தொடர்ச்சியோ இன்றி நிகழும்விதமாகவே பதிவு செய்ய இவை முற்படு கின்றன. மூலத்தின் கோடுகள் கவிதையில் எங்கிருந்து அனைத்தின் வெளி விரியத் தொடங்கியது எனத் தன்னைத்தானே கவிதை சொல்லி கேட்டுக்கொள் வதையும், கனவொன்றில் உறைந்த அபலை உள்ளிட்ட சில கவிதைகளில் சென்றுபோனவற்றின்மீதான ஏக்கத்திற்கு மாற்றாக அவற்றை மீண்டும் ஸ்தூல வடிவில் நிகழ் கணத்திற்குக் கொண்டுவரும் கனவுகளை முன்வைக்க முயற்சிப்பதையும், நீர் மூடிய மடை கவிதையில் பிரிவின் வலியை அதிகரிக்கச் செய்யும் நினைவுகளைச் சுமந்து திரியவியலாத பயத்துடன் அவற்றை ஒற்றை வரிக் குறிப்புகளால் (முந்தைய இரவுகளிலோ காத்துக்கொண்டிருந்தேன்) கொன்றுவிட எத்தனிப்பதையும் நிசி அகவல் தொகுப்பின் தொனியாக நாம் குறித்துக்கொள்ளலாம்.

பிராயத்து நினைவுகளும் பிரிவேக்கங்களும் நேரடியான இயற்கைச் சூழலுடன் தொடர்புகொண்டிராத நிலையிலும்கூடப் பிரபஞ்ச இயக்கத்தில் பொது வாகக் கலந்திருக்கும் மூதாதைகளின் நினைவலைகள் என்கிற ஊடகத்தின் மூலமாக அதன் வேறொரு முனையைத் தொட்டுக் கொண்டிருக்கும் வல்லமை கொண்டவை. இனித் திரும்பக் கிடைக்காத கடந்த காலங்களில் வாழ்பவன் தன்னைச் சுற்றி நிகழும் அக, புற வயமான மாசுபடுத்தல்களிலிருந்து விடுபட்டு உயரே எழுவது என்பது சாதாரணமாகக் காணக் கூடியதுதான். அந்த வகையில் பிராயத் தொடர்ச்சிகளையும் வம்சத் தொடர்ச்சிகளையும் கலாசாரத் தொடர்ச்சிகளையும் துறப்பதென்பது இயற்கையைத் துறப்ப தென்பதோடு தவிர்க்கவியலாத வகை யில் தொடர்புகொண்டதாயிருக்கிறது. ஆனால் ஒரு கவிஞன் எப்போதும் இத்தகைய சூழலழிவிற்குத் தன்னை ஒப்புக்கொடுக்க முன்வருவதில்லை. அவன் அவற்றிலிருந்து தன்னை மீட்டெடுத்துக்கொள்ளவே போராடுகிறான். கவித்தன்மை கொடுக்கும் நொய்மையால் பலவீனனாகிப் போனவனானத் தன்னை மீறிய அவற்றின் ஆளுமைக்குப் பலியாகியும் போகிறான். இந்தப் போராட்டத்திற்கும் சாவிற்குமிடையே அவன் தன்னளவில் சில சின்னச்சின்ன அற்புதங்களை உருவாக்க முயல்கிறான். இவை வறண்ட கனவுகளாயும், வேரற்ற அற்புதங்களாயும், துன்புறுத்தும் மனப்பிரமைகளாயும், ஒட்டவியலாத காட்சிப் படிமங்களாயும் இருக்குமென்பதைத் தெரிந்துகொண்டேயாயினும்.

நிசி அகவல் கவிதைத் தொகுப்பை முன்வைத்து மனதினுள் திரளும் இம்மாதிரியான உணர்வுகளுக்கு நான் அர்பன் ஃபேன்டஸி என்று பெயர் கொடுக்க விரும்புகிறேன். நகர்ப்புறத்து அற்புதம் என்கிற நேரடியான மொழிபெயர்ப்பு இந்த வார்த்தைக்கு ஒருவித மான நேர்மறை அர்த்தத்தை வழங்குவதாகத் தோன்றுவதால் நகர்ப்புறத்துக் கற்பிதங்கள் என்று பொருள் கொள்வது ஓரளவிற்குப் பொருத்தமாக இருக்கலாம். எனினும் அர்பன் ஃபேன்டஸி என்கிற ஆங்கிலப் பிரயோகமே நிசி அகவல் சொல்லிச் செல்லும் உலகத்தைக் குறிக்கச் சரியான சொல்லாக இருக்குமென்று படுகிறது. அர்பன் ஃபேன்டஸி என்கிற ஒரு சொல்லாக்கத்தை உருவாக்கும்போதே அதன் எதிராச்சொல்லான ரூரல் ஃபேன்டஸி என்பதும் உருவாகி விடுகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை (கிராமப்புறத்துக் கற்பிதங் கள்?). ரூரல் ஃபேன்டஸி உருவாகும் உலகத்தில் மனிதனுக்கு எதிர்வாக பிரகிருதி அமைகிறது. மனிதனும் இயற்கை யும் நேருக்கு நேராக எதிர்கொள்ளும் உலகம் அது. பிரகிருதியின் சூட்சுமங்களை, தந்திரங்களை, சுழற்சிகளை, கொடைகளை, கோபத்தை அறிந்துகொள்ள அல்லது வெற்றிகொள்ள முயற் சிக்கும் வழியாகவே அந்த உலகத்தின் கதை சொல்லி அல்லது கவிதை சொல்லி அதன் அம்சங்களை அற்புத நிலைக்கு உயர்த்திப் பனுவல்களைப் படைக்க முற்படுகிறான். எதிர்ப்புறத்திருந்து இதை வாசிக்கும்போது, முற்றிலும் அனுபவம் சார்ந்த, பகுத்தறிவின் குறுக்கீடற்ற ரூரல் ஃபேன்டஸிகளில் இயற்கை மனிதனுக்கு வசப்படாத பேருருவாகத் தொடர்ந்து அவனை ஆட்டிப் படைப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இந்த ஆட்டுவிக்கப் படுதலை சக மனிதனிடம் பகிர்ந்துகொண்டு தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ளும் நோக்கமும் ரூரல் ஃபேன்டஸிக்கு இருக்கிறது என்பதையும். இதைத் தொடர்ந்து இங்கே இன்னொரு புரிதலும் தேவைப்படுகிறது: ரூரல் ஃபேன்டஸிக்குள் இயங்கும் மனிதக் குரல் தனக்கு எதிர்வாக பிரகிருதியையும் இணையாகச் சக மனிதனையும் வரிந்துகொள்கிறது.

ஆனால் ஒரு அர்பன் ஃபேன்டஸி இப்படியான கட்டமைப்பைக் கொண்ட தல்ல. அது தன்னிலிருந்து இயற்கை என்கிற எதிர்வைத் துறந்துவிட்டிருக்கிறது. அதே சமயத்தில் அது இயங்குவ தற்கான தளமாக அமைய ஏதாவது ஒரு எதிர்வு தவிர்க்கவியலாததாயும் இருக்கிறது. இந்நிலையில் அர்பன் ஃபேன்டஸி இயற்கை காலி செய்த இடத்தில் சக மனிதனைத் தனது பனுவலின் எதிர்வாகக் கற்பித்துக்கொள்கிறது. கட்டடங்கள், நவீன உணவு விடுதிகள், சாலைகள், இருண்ட தெருக்கள், சிறைச்சாலைகள் முதலான நகர்ப்புற மனித ஆக்கங்கள் பீதியையும் துக்கத்தையும் விரக்தியையும் நிரப்பும் சிதைவுற்ற கோலங்களில் பனுவல்களில் குடியேறுகின்றன. நிசி அகவலின் கவிதை சொல்லியால் சக மனிதனைப் புரிந்துகொள்ள இயலுவதில்லை, புரிந்து கொள்ளும் விருப்பமும் இல்லை, நிகழ் கணத்தில் தன்மீது உராயும் நிகழ்வுகளோடும் மனிதர்களோடும் மட்டுமே அவன் உறவு கொள்கிறான், அவர்கள் பிரிந்தபின் அவன் அந்தக் கணத்திருந்த தன்னையும் பிரிந்து வேறொரு மனிதனாக அடுத்த கணத்திற்கு நகர்ந்துடுகிறான். உயிர் மர்மம் கவிதையில் கவிதை சொல்லி பல நாட்களாகவே ஒரு பெண்ணின் வசவைக் கேட்டுக்கொண்டும் உதட்டில் துடைக்கப்படாத தக்காளி விதைகளுடனுமாக உலவுகிறான். பல நாட்களாகவே என்கிற இறுதி வரி அவனுக்கு இறந்த காலம் என்று ஒன்று இல்லை என்பதைத் தெளிவாகக் குறிக்கிறது. இருந்திருந்தால் அவன் தன் மீதான பலகாலப் பழியை எப்படியேனும் சரி செய்ய முயன்றிருப்பானே. பெண் துளி வெளியேறும் ஒரு கிளாஸ் கவிதையும் இப்படி ஒவ்வொரு கணத்திருந்தும் வெளியேறிக்கொண்டிருக்கும் பெரும் மறதியைக் குறிக்கும் கவிதைதான். அதன் இறுதி வரி இப்படி முடிகிறது: அவளில் புதைந்துவிட்டஉன்னை மீட்கத் தந்திரமேதுமில்லை தானாய் மீள்வாய். தன்னை ஒரு பெண் பருக அனுமதித்துக்கொண்டவன் திரும்ப சுயப் பிரக்ஞைக்கு, அதாவது நிகழ்விற்கு முந்தைய கடந்த காலத்திற்குப் பிரக்ஞையைத் திருப்பினால் மட்டுமே மீட்சி சாத்தியம். ஆனால் கவிதை சொல்லிக்கு அது நிகழவே போவதில்லை. காரணம் அவன் இயற்கையைத் தொலைத்துவிட்டவன். மனிதர்களும் மனிதர்களின் உருவாக்கங்களும் அவனை வெருட்டிக்கொண்டேயிருக்கின்றன. தொடர்ந்து அவற்றுக்கு ஒரு கற்பிதத் தன்மையைக் கொடுத்து அவற்றைத் தன்னுடைய சிருஷ்டிகளாக்கி வசப்படுத்திக்கொள்ள அவன் போராடுகிறான். தன்னைக் கடலலையாகக் கற்பிதம் செய்துகொள்கிறான் (நிலப் பாய்ச்சல்), சூரியன் அவன் உடலிலிருந்து உதிக்கிறது (இப்படியும் ஒரு குடில்), செத்தவர்கள் பிழைத்து எழுகிறார்கள் (மெக்டோவல் மற்றும் தோட்டா சேகர்), வெளவால்களால் கடிபடும் கடவுளைப் படைக்கிறான் (வெளவால்கள் தின்ற சிலை).

ரூரல் ஃபேன்டஸிக்குள்ளிருக்கும் மனிதனைப்போலத் தன் மன அவசங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு கேட்கும் செவிகளுள்ள மனிதத் துணை எதுவும் அவனுக்கு இல்லாதிருக்கும் நிலையில் சுயமைதுனமும் அதை நிகழ்த்திக்கொள்ள ஏதுவான இருட்டும், தனிமை யும் அவனுடைய தேவையாகவும் உலகமாகவும் ஆகிப்போகின்றன (உளவாளி, சாம்பல் உதிர் வேளை, புணர் வாழ்வு, உதட்டில் சாமம், புலரும் ரௌத்திரம் இத்யாதி). இன்னொரு பக்கம் தன்னுடைய மருட்சிகளைப் புனைவின் மூல மாக எதிர்கொள்ளப் பழக்கப்பட்டிருக்கும் அவனுடைய ஆதிமனம் இயற் கைக்குப் பதிலாகச் சக மனிதனின்மீதே விசித்திரப் புனைவுகளை ஏற்றிப் பார்க்கும் முயற்சியிலும், அதனால் உண் டாகும் குற்றவுணர்விலிருந்து தப்பித்துக்கொள்ளும் எத்தனிப்பிலும் சதா போதை யில் அமிழ்ந்துகிடக்க அவாவுகிறது. மது மூலமான போதை (உதட்டில் சாமம் உள்ளிட்ட பல கவிதைகள்), பெண்களிடம் பெறும் போதை (கனவொன்றில் உறைந்த அபலை, ஜாஸ்மின் சிகரெட்), குற்றச்செயல்களின்மூலமாகக் கிடைக்கும் போதை (ஒரு மகிமை, சிவப்பு காதல்), சுயவதை மற்றும் தற்கொலை மூலமாக உண்டாகும் போதை (சுடுநீர் குமிழிகள், மூலத்தின் கோடுகள், திருவல்லிக்கேணி பழைய தெரு, அம்சா அக்கா மல்லிகா மோகன்) என அவை பலவகைப்பட்டவையாக அவனுக்குள் அற்புதக் கற்பனைகளை உருவாக்கும் கருவிகளாக இறங்குகின்றன.

மிகைக் கற்பனைகளைப் பொறுத்தமட்டில் ரூரல் ஃபேன்டஸிக்கும் அர்பன் ஃபேன்டஸிக்கும் குறிப்பிடத்தக்க இன்னும் சில வித்தியாசங்களும் உண்டு. முன்னது கூட்டு நனவிலி மனத்தின் சிருஷ்டிபரமான உருவாக்கம். பின்னது தனிமைப்பட்டுப்போன உயிரின் மனப்பிறழ்வுகொள்ளும் உருவெளித் தோற்றம். முன்னது தன் கற்பனையின் மூலமாக பிரகிருதியை வெற்றிகொள்ளும் போராட் டத்தில் இருக்கிறது. பின்னது தன் பிரமைத் தோற்றங்களின் வழியே உலகமயமாதலின் பலிகடாவாகத் தன்னை மாற்றிக்கொள்கிறது. முன்னது தன்னுடைய கற்பனைகளை உண்மையென்று நம்புகிறது. எனவே அது தன்னுடைய கற்பனைகள் யதார்த்த வெளியில் கால் கொள்ள அனுமதிப்பதில்லை. பின்னது தன்னுடைய கற்பிதங்களை நம்ப மறுக்கிறது. இது தன்னைத்தானே நம்ப மறுப்பதன் நீட்சியென்றும் சொல்லலாம். எனவே அதன் கற்பனைகள் யதார்த்தத்தின் உருவகங்களாகவும் குறியீடுகளாகவுமே பனுவல்களின் இடம் பெறுகின்றன. வேறொரு வார்த்தையில் அர்பன் ஃபேன்டஸியின் சொல்லாடல்கள் அர்த்தங்களிருந்தும் ஒப்பிடல்களிலி ருந்தும் விடுபட்டுச் சுதந்திரமாக இயங்க முடியாத கனத்தைக் கால்களில் கட்டிக்கொண்டிருப்பவை. பளிங்குத் தரையில் நீள் செவ்வக வடிவில் குழியைத் தோண்டிக்கொண்டிருந்தான் தலையில் ரத்தம் வழிய என்கிற படிமம் (குருதிஓயாத ஆம்புலன்ஸ் குரல்) ஒரு மனப் பிறழ்வின் உருவகமாயன்றி நிஜமான அற்புத நிகழ்வாய் உருப்பெறுவதில்லை. இதைப் போன்றதே தோட்டம் சேகர் உயிர் பெற்று வருவதும். இதில் போதையின் நடுவே நினைவுகொள்ளும் இறந்து போன தோட்டம் சேகரின் உருவெளித் தோற்றமே அவனுடைய உயிர் பெறுத லாய்க் கவிதை சொல்லிக்குப்படுகிறது. கற்பனைக் குறியீடுகளுக்குள் முடக்கப்படும்போது அவற்றின் விளையாட்டுத் தன்மை அதைவிட்டுக் கழன்றுவிடுகிறது.

நிசி அகவல் இயற்கையை ஒழித்த ஒரு வரண்ட பனுவலாக தன்னை முன்னிறுத்திக்கொண்டிருப்பதன் மூலம் வலை களுக்குள் அகப்பட்டுக்கொண்டு திணறும் பின் நவீன உலகின் நோய்க்கூறான மனநிலையை நம் கண்முன்னே கிலியூட்டும் விதத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. தன்னை ஒரு பலிகடாவாக ஆக்கிக் கொண்டு வெளிக்கொணரும் இந்தச் செய்தியோடு எதிர்காலக் கவிதைப் பனுவல்களைப் பற்றிய அச்சத்தையும் எச்சரிக்கையையும்கூட இந்தத் தொகுப்பு தன்னுள் கொண்டுள்ளதாகவும் எனக்குத் தோன்றுகிறது.

நிசி அகவல் அய்யப்பமாதவன் வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ் 12, முதல் பிரதானசாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம்,சென்னை24 பக்கம்: 80, விலை: ரூ.60
Pin It