‘மதவாதம், பாசிசம் மற்றும் ஜனநாயகம்-மிகையும், உண்மையும்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தலைமை ஏற்க, நவம்பர் 6, 2008 அன்று காலை சரியாக 11.30 மணிக்கு நான் தில்லி பல்கலைக் கழகத்தின் கலைத் துறையை வந்து சேர்ந்தேன். நான் என் இருப்பிடத்தில் அமர்ந்த போது, இன்னும் சில நிமிடங்களில் என் மீது ஒரு வெட்கங்கெட்ட பாசிசத் தாக்குதல் நடைபெறப் போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. நான் அமர்ந்த உடனேயே ஒரு மாணவர் என்னிடம் பேச முற்படுவது போல் என் அருகே நெருங்கினார். ஆனால் பேசுவதற்குப் பதில், என் முகத்தில் அவர் காறி உமிழ்ந்தார். அடுத்த நொடியே வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

பார்வையாளர்களிடையேயும் வெளியிலும் விரவியிருந்த விசுவ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் கூச்சலிடவும்-நாற்காலி, மேசைகள், ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கவும் தொடங்கினர். பெரும் எண்ணிக்கையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்ததைப் பற்றிய எந்த பாதிப்புமின்றி அவர்கள் என்னை மட்டுமல்ல; ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையுமே பழிக்கத் தொடங்கினர். ஒரு நொடி நான் அதிர்ந்து போனேன். ஆனால் என் மீது உமிழ்ந்த மனிதர் முழக்கங்கள் எழுப்பத் தொடங்கியவுடன் -அவர் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கலாச்சாரத்தில் உள்ளவர் என்பதை உணர்ந்தேன். இவர்கள்தான் உஜ்ஜயினியில் பேராசிரியர் சபர்வாலை கொலை செய்தவர்கள். அண்மையில் ஒரிசாவிலும் கர்நாடகத்திலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்.

இந்தியப் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாக சொல்லிக் கொள்பவர்களின் பாசிசம் இதுதான். வன்முறைதான் இந்தியப் பண்பாட்டின் அடையாளம் என்ற தவறான செய்தியை இவர்கள் உலகுக்கு அளிக்கிறார்கள். டிசம்பர் 2001இல் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் நான் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து, 2005 இல் நான் விடுதலை செய்யப்பட்ட பிறகும் கூட, இந்த பாசிசத்தை நான் சந்தித்து வருகிறேன்.

உண்மையில் நான் குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்பட்ட பிறகான வாழ்க்கை எனக்கு மட்டுமல்ல; எனது குடும்பத்தினருக்கும் மிகக் கடினமாகவே இருக்கிறது. நான் குறி வைக்கப்பட்டிருப்பதை உணர்கிறேன். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். 2005 இல் என்னைக் கொல்ல முயற்சி நடந்தது. 6 குண்டுகள் என்னை துளைத்தன. மருத்துவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். ஆனாலும் அதிசயமாக நான் பிழைத்துக் கொண்டேன். ஓராண்டு கழித்து, என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அதன் பிறகும் பல முயற்சிகள் என் மீது நடந்தன. என்னைச் சுற்றி ஆபத்து இருப்பதை அறிவேன்.

இறுதியாக உயர் நீதிமன்றமும், பின்னர் உச்ச நீதிமன்றமும் என் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யென என்னை விடுவித்தன. சொல்லப் போனால், உயர் நீதிமன்றமும், காவல் துறையும் எனக்கு எதிராக பொய்யான சாட்சியங்களை உருவாக்கியதையும், போலி ஆவணங்கள் தயாரித்ததையும் கண்டுபிடித்துச் சொன்னது. ஆனால் தற்போது மக்கள் மனதில் ஆழப்பதிந்திருப்பது, ஊடகங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்த பிம்பமே. இது, மற்றவர்களுக்கும் பொருந்தும். அய்தராபாத்தில் உள்ள ஒரு நீதிமன்றம், சென்ற வாரம் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் கைதான ஒரு முஸ்லிம் இளைஞனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ஊடகங்கள் இதை வெளியிட எந்த அக்கறையும் காட்டவில்லை. 2003இல் நடைபெற்ற ஒரு பேருந்து குண்டு வெடிப்பு வழக்கில், கைது செய்யப்பட்ட அனைவரையும் மும்பையில் உள்ள நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் ஒருவரும் இந்த செய்தியை வெளியிடவில்லை.

நான் உளவு நிறுவனங்களை மிக நெருக்கமாக கவனித்திருக்கிறேன். அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, நான் ஓர் அரசு அலுவலகத்திலோ அல்லது ஒரு ஜனநாயக நாட்டிலோ இருப்பதாக உணர்ந்ததே இல்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் இருப்பது போன்ற உணர்வையே அது ஏற்படுத்தியது. இந்த நிறுவனங்கள் எல்லாம் முற்றிலும் மதமயமாகிப்
போயிருக்கின்றன. வேதனையான செய்தி என்னவெனில், ஊடகங்களில் திட்டமிட்டு சொருகப்பட்ட செய்திகள் நிறைய வெளிவருகின்றன. இந்த உளவு நிறுவனங்கள் பல ஊடகவியலாளர்கள் மூலம் சில கதைகளைப் பரப்புகிறார்கள். அவர்களும் அதை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறார்கள்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்திய நாட்டின் மக்கள் தங்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்க மறந்து விட்டார்கள். நான் தொடர்ந்து மக்களிடம் கேட்கிறேன். "2001 டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தைத் தாக்கியவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?' யாருக்கும் தெரியாது. யாரும் கேட்கவும் இல்லை. அதனால் இது, இந்த நொடி இது மிக மோசமாகத் தோன்றுகிறது. பாரபட்சமான, முன்தீர்மானத்துடன் கூடிய சட்டத்திட்டங்கள், ஜனநாயகத்திற்கான இடத்தை சுருக்கிக் கொண்டே வருகின்றன. ஜனநாயகத்திற்கான இடத்தை உறுதி செய்வதன் மூலம் நமது வருங்காலத் தலைமுறையினர் பயன் பெறுவதற்காக, நாம் துன்பங்களை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும்.
‘தெகல்கா' 22.11.2008

Pin It