பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு உரிமை கொண்டாடப்படும் பெரியாரின் சொத்துக்கள், உண்மையிலேயே அந்நிறுவனத்துக்கு சட்டப்படியான உரிமையுள்ளவையல்ல என்று‘குடிஅரசு’ தொகுப்பு வெளியிட்டு விழாவில் கழகத்தின் வழக்கறிஞர் துரைசாமி அறிவித்தார்.
 
பெரியார் நூல்களுக்கு அறிவுசார் சொத்துரிமை கோரினார் கி.வீரமணி, இப்போது பெரியார் சொத்துகளே யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்து விட்டது. பெரியார் சொத்துகள் அறக்கட்டளைக்கு சட்டப்படி உரிமையாவதற்கு அந்த சொத்துக்களை பெரியார் அறக்கட்டளைக்கு ஒப்படைப்பதாக பத்திரம் எழுதித் தந்திருக்க வேண்டும். அப்படி பெரியார் எதையும் எழுதித் தராத நிலையில், பெரியாரின் சொத்துக்களை அறக்கட்டளைக்கு உரிமை கொண்டாட முடியாது. அந்த சொத்துக்களுக்கு பெரியார் உறவினர்கள் உரிமை கோர முடியும். அல்லது அரசு அதை எடுக்க வேண்டும். செம்மொழி மாநாட்டுக்குள் அரசு அந்த சொத்துக்களை எடுக்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று வழக்கறிஞர் துரைசாமி அறிவித்தார்.
 
வாதிடவே வராத வழக்கறிஞர்
 
• 61 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில் சுமார் 83 இடங்களில் பெரியார் பெயர் குறிப்பிடப்படுகிறது. அத்தனை இடங்களிலும்‘தந்தை பெரியார்’ என்றே நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 
• நீதிபதி சந்துரு வழங்கிய தீர்ப்பை, இலக்கியச் செறிவான தீர்ப்பு என்று நீதிபதிகள் பாராட்டியுள்ளனர்.
 
• வழக்கில் மனுதாரர் (வீரமணி) சார்பில் தன்னையும் இணைத்துக் கொண்டு தாக்கல் செய்த தஞ்சை இரத்தினகிரி மனுவை ஏற்கனவே தனி நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். அதற்கு நீதிபதி கூறிய காரணங்களை அப்படியே ஏற்கிறோம். அதற்கு மாறான கருத்துக்கு நாங்கள் தயாராக இல்லை என்று கூறிய நீதிபதிகள், ரத்தினகிரியின் கோரிக்கை மிகவும் வலுவற்ற பலவீனமானது (Slender claims) என்று குறிப்பிட்டுள்ளனர். தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்ட இரத்தின கிரி மனுவை மேல்முறையீடு செய்வதற்கான தகுதியே இல்லை என்று (do no find any merit at all) நீதிபதிகள் கூறியுள்ளனர்.
 
• மனுதாரர்கள் சார்பில் முன் வைக்கப்பட்ட அத்தனை வாதங்களையும், தொகுத்துக் கூறி, அதற்கான தங்களது பதில்களையும் நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர்.
 
• பதிப்புரிமையை எழுத்து மூலம் நூலாசிரியர் வழங்கியிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய, இரண்டு தீர்ப்புகளை நீதிபதிகள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
 
• கி. வீரமணியின் வழக்கறிஞர், தங்களுக்கு ஆதரவாக நான்கு நீதிமன்ற தீர்ப்புகளை எடுத்துக்காட்டியிருந்த அந்தத் தீர்ப்புகள் இந்த வழக்கிற்குப் பொருந்தாது என்று, உரிய காரணங்களைக் கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 
• மனுதாரார் (வீரமணி) கூறும் தொகுப்பு வேறு; பெரியார் திராவிடர் கழகத்தின் தொகுப்பு வேறு என்பதை விளக்குவதற்காக கழக சார்பில் அச்சடிக்கப்பட்ட 1925, 1926, 1930 குடிஅரசு தொகுப்புகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதைப் பரிசீலித்த நீதிபதிகள் இரண்டும் வெவ்வேறானவை என்று கூறியுள்ளதோடு, மனுதாரரின் ஒரிஜினல் தொகுப்பைத்தான் பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டது என்பதற்கு அடிப்படை முகாந்திரம் ஏதுமில்லை (there being no primafacie strong case) என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
 
• கழக சார்பில் வாதாடிய வழக்கறிஞர் துரைசாமி, கிளாடிஸ்டேனியல், மூத்த வழக்கறிஞர் ஆர். தியாகராஜன் ஆகியோர் முன் வைத்த பல வாதங்களை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
 
• கி.வீரமணியின் சார்பில் மனுதாக்கல் செய்த வழக்கறிஞர் பெயர் வீரசேகரன். நீதிபதி சொக்கலிங்கம் அவர்கள் முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவர் நேர்மையான நீதிபதி என்பதால் வழக்கை அவரிடமிருந்து மாற்ற, புதிய தந்திரத்தை மனுதாரர் அரங்கேற்றினார். நீதிபதி சொக்கலிங்கத்தின் நெருங்கிய உறவினரான வழக்கறிஞர் சண்முக சுந்தரம், வீரசேகரனுக்கு பதிலாக மாற்றப்பட்டார். நெருங்கிய உறவினர் வாதாடும் வழக்கை நீதிபதிகள் விசாரிப்பது இல்லை. அந்த மரபுப்படி, நீதிபதி சொக்கலிங்கம் வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார். வழக்கறிஞர் சண்முகசுந்தரம் என்பவர் ஒரு நாள்கூட இந்த வழக்கில் ஆஜராகவில்லை. ஆனாலும் வழக்கின் மனுவில் மட்டும் அவரது பெயரே வீரசேகரனுக்கு பதிலாக இடம் பெற்றிருந்தது. “சாணக்கியனே” இவர்களிடம் தோற்றுப் போவான்.

- பெரியார் முழக்கம் செய்தியாளர்

Pin It