1997

பிப்ரவரி

முதல் இதழ்

இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்களின் உரிமைகளை, அம்மக்களின் தொன்மையான வரலாற்றைப் பதிவு செய்வதற்குக்கூட அம்மக்களுக்கென ஓர் இதழ் இல்லை. எனவே, இம்மக்களின் பிரச்சனைகளை, அதற்கானத் தீர்வுகளை அழுத்தந்திருத்தமாகச் சுட்டிக்காட்டும் உரிமைப் பதிவேடாக ‘தலித் முரசு' திகழும். சாதி ஒழிப்பிற்கான, சமூக நீதிக்கான அரிய பணியில் அறிவுச் சுரங்கம் அம்பேத்கர், தன்மானச் சிங்கம் தந்தை பெரியார் வழிநின்று ‘தலித் முரசு' செயல்படும். இதுதான் எமது லட்சியம் இலக்கு எல்லை. ‘தலித்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா? ‘செட்யூல்டு சாதியினர்' என்றுதானே சொல்ல வேண்டும்?.... என்பன போன்ற விவாதங்களை ஓரம்கட்டிவிட்டு, இக்கட்டான இன்றைய காலகட்டத்தில் விடுதலைக்கானப் போரில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள் அனைவரும் சமூகநீதி பெற ஓரணியில் அணியமாவதே அவசியம் அவசரம். எந்த சொல்லைப் பயன்படுத்துகிறோம் என்பதை முதன்மைப்படுத்துவதை விட, எந்த அளவிற்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பற்றிக் கொண்டு, விடுதலைக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளலாம் என்பதே முக்கியம். இவ்வாறாக, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை முரசறையும் பணியில் ‘தலித் முரசு' தன் பணியைத் தொடங்க உள்ளது. இதற்கான களத்தில், தங்கள் அனைவரின் தோழமையையும் எதிர்நோக்குகிறோம்.

 – தலையங்கத்திலிருந்து, 13.02.1997

தலித் தன்னுரிமை

இந்திய ‘சுதந்திர'த்திற்கு இது பொன் விழா ஆண்டு. ஆனால் இந்நாட்டின் மக்கள் தொகையில் கால் பங்கு வகிக்கும் தலித் மக்களின் வாழ்க்கையோ பல நூற்றாண்டுகள் பின்தங்கியே உள்ளன. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளும் கூட ஒவ்வொன்றாகப் பறிபோகும் சூழல். தங்களின் உரிமைகளைப் காப்பார்களென எண்ணி, சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் தனித்தொகுதிகளில் தலித் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், இந்த உறுப்பினர்கள் தலித் பிரச்சினைகளைக் கவனிக்காமல் தாங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளுக்கும், அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆதிக்க சாதிகளுக்கும் கைப்பாவைகளாக உள்ளனர். எனவே, இரட்டை வாக்குரிமை – தனி வாக்காளர் தொகுதி பெறுவதற்கான தீவிரமான போராட்டத்தை நடத்த அனைத்து தலித் அமைப்புகளுக்கும் இம்மாநாடு (24.9.1996 அன்று நெய்வேலியில் நடைபெற்ற இரட்டை வாக்குரிமை – தனி வாக்காளர் தொகுதி கோரிக்கை மாநாடு) அறைகூவல் விடுக்கிறது.

தலித் பெண்ணியம்

பெண்ணியம் என்ற பொது போர்வைக்குள் இவ்விரு நிலைப்பட்ட வர்க்க பேதமுடைய பெண்கள் அனைவரையும் ஒரு நிலையில் வைத்துக் காண்பது என்பது எதார்த்தத்திற்கு மாறான ஒன்றாகவே படுகிறது. பெண்ணிய நிதர்சனமென்பது வர்க்க பேதத்திற்கு இடமளிக்காத ஒன்றாக இருக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில்தான் இந்திய அல்லது தமிழ்ச் சூழலில் மட்டும் தலித் பெண்ணியம் பற்றிய கருத்தாக்கம் தேவைப்படுகிறது. இத்தேவையின் அடிப்படைகள் முதலாவதாக பெண்ணியம் பற்றிய சிந்தனை நிலையிலும் படைப்பாக்க நிலையிலும் காணப்படுகின்ற முரண்பாடுகள் அல்லது சமத்துவமின்மை தலித் பெண்களுக்குரிய இடமறுப்புகள் ஆகியவற்றை இனங்காணுவது.

இரண்டாவதாக, சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் பேணுவதற்காக அவற்றிற்கெதிரான சக்திகளினின்று விடுபட்டு உரிய செயல்தளத்தைக் கட்டமைப்பது; மூன்றாவதாகப் பெண் என்ற ஓர்மைக்குள் அய்க்கியப்படுவது என தலித் பெண்ணியத்தின் இலக்குகளை வரையறுத்துக் öகாள்ளலாம்.

– அ.குணசேகரன்

தீண்டாமை ஒழிப்பு யாரை ஏமாற்ற? புலேந்திரன் மனித உரிமை மீறலில் இந்தியா ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்'

துரோகம் இழைக்கப்பட்ட தலித் கிறித்துவர்கள் ராஜு தாமஸ் பூரியா குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துக! 

மார்ச்

ஜாதி கோலோச்சுகிறது

இந்திய ஆட்சிப் பணிகளில் (அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.) நிலவும் வர்ணாசிரம முறையையும்,இந்து சமூகத்தில் உள்ள பழமைவாதவர்ணாசிரம முறையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சாதி அமைப்பை நிறுவிய மநுதான், இந்திய ஆட்சிப் பணியின் அமைப்பு முறையையும் நிறுவினாரோ என எண்ணத் தோன்றுகிறது. மிகுந்த அதிகாரங்களைக் கொண்ட இந்திய ஆட்சிப் பணிகளில் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். மய்ய, மாநில அரசுகளின் அனைத்து உயர்பதவிகளும், அதிக வருவாய் உள்ள பதவிகளும் முற்றிலும் பார்ப்பனர்களுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளன; ஏதோ இவர்களுக்கு மட்டும்தான் இயற்கையிலேயே ஆளக்கூடிய தகுதி இருப்பதுபோல! இவர்கள் எவ்வளவுதான் தகுதியற்று இருப்பினும், தங்கள் பதவிகளில் சரிவர செயல்பட முடியாமல் தோல்வியையே

சந்தித்தாலும் இவர்கள் உயர்பதவி பெற்று மேலே செல்வதை எவரும் தடுத்துவிட முடியாது.

– அனிதா குப்தா, ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்'

சாதி மோதல்கள் ஏன்?

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இனி இரண்டாம் தரமாக நடத்தப்படுவதையும் அடிமைப்படுத்தப்படுவதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் அடையாளத்தை காத்துக் கொள்வதற்காக, ‘உயர்சாதி'யினரின் தாக்குதல்களுக்கு தற்போது தலித் மக்கள் பதிலடி கொடுக்கவும் தொடங்கியிருக்கின்றனர். இம்மக்களின் நியாயமான உரிமைகளை நிலைநாட்டுவதில் அரசின் பொறுப்பும், அதன் பங்கும் இப்போது அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் தலித் மக்கள் இச்சமூக அநீதிக்கு எதிரான போராட்டப் பயணத்தை 1810 இல் பரமக்குடியில் ஆரம்பித்தனர். இதுபோன்ற மனிதத்தன்மையற்ற செயலுக்கு எதிரான ஓர் ஒத்துழையாமை இயக்கத்தை 1858 இல்அவர்கள் ஆரம்பித்திருக்கின்றனர். ‘உயர்சாதி'யினரின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இம்மக்கள் 1930 இல் சட்டை கட்சி இயக்கம் (சட்டை அணியும் இயக்கம்) ஒன்றைத் தொடங்கினர் 1950 ஆம் ஆண்டு பொது உடைமையாளர்கள் உதவியுடன் நிலத்திற்கான போராட்டம் ஒன்றையும் தொடுத்தனர். தலித் மக்கள் சட்டை அணிந்ததற்காகத் தாக்கப்பட்டனர்! 1957 இல் இம்மானுவேல்சேகரன் கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்ச்சியானது, தலித் மக்கள் மனதில் ஓர் ஆழமான வடுவை விட்டுச் சென்றது. – உண்மை அறியும் குழு அறிக்கை

ஏப்ரல்

இந்தியா: இனவெறியின் இருப்பிடம்

இந்தியா என்றாலே அகிம்சை; அமைதியே உருவான ‘புண்ணிய' பூமி; உலகிலேயே சகிப்புத் தன்மை வாய்ந்த மதம் இந்து மதம்; இந்துக்கள் எறும்பு, காகம், குரங்கு போன்றவைகளுக்குக்கூட உணவளிக்கும் ‘மிருக' நேயமுள்ளவர்கள் (அதனால்தான் தலித் மக்கள்மீது மிருகமாய்ப் பாய்கின்றனர்) எனப் பல நூற்றாண்டுகளாக இங்கு கதைக்கப்பட்டு வருகிறது. இது, எவ்வளவு பெரிய மோசடி! 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிராக 23,148 வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. நாடாளுமன்ற மக்களவையில், மய்ய உள்துறை இணைஅணைச்சர் மக்பூல்தார் மார்ச் 4, 1997 அன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மேற்கூறிய புள்ளி விவரங்களை வெளியிட்டார். இதில், 418 கொலைகள்; 282 பாலியல் வன்கொடுமைகள்; 286 தீ வைப்புகள்; 3,244 துன்புறுத்தி காயப்படுத்துதல் போன்றவை அடங்கும். தலித் மக்களுக்கு எதிராக 1994 ஆம் ஆண்டு, 38,927 வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. 1995 ஆம் ஆண்டு, 38,494 வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. உத்திரப் பிரதேசத்தில் 1994 இல் 16,268 வன்கொடுமைகளும், 1995 இல் 14,310 வன்கொடுமைகளும் நிகழ்ந்துள்ளன.

எப்போது போராட்டம் தொடங்குகிறது?

தீண்டாமைப் பிரச்சனை என்பது வகுப்புப் போராட்டமே. சாதி இந்துக்களுக்கும், தீண்டத்தகாத மக்களுக்குமிடையே நடைபெறும் போராட்டமேயாகும். இது ஒருவர் மற்றவருக்கு எதிராக இழைக்கும் அநீதி பற்றிய பிரச்சனை அல்ல. இது ஒரு வகுப்பு மற்றொரு வகுப்பிற்கு எதிராக இழைக்கும் அநீதியாகும். இப்போராட்டம், சமூக நிலையுடன் தொடர்புடையது. இப்போராட்டம், ஒரு வகுப்பு மற்றொரு வகுப்புடன் எவ்வாறு உறவு கொண்டிருக்க வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. பிறருடன் நீங்களும் சமம் என்ற சமத்துவத்தைக் கோரும் போது

தான் – இப்போராட்டம் தொடங்குகிறது. – டாக்டர் அம்பேத்கர்

சாதி மோதல்கள் ஓர் ஆய்வு உலக அரங்கில் தலித் பிரச்சனை ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பங்கு வேண்டும் ராம்விலாஸ் பாஸ்வான் அரசு வழக்குரைஞர்களுக்கு அநீதி எம்.பி. முரளீதரன்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அறிவுரைகள் முன்பைவிட இன்றைய காலகட்டத்தில் வெகுவாகப் பொருந்துகின்றன. அம்பேத்கர் ஒரு சீர்திருத்தச் செம்மல் மட்டுமல்லர்; அவர் ஒரு புரட்சியாளர். நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே சாதி அமைப்பு முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதை அவர் தெளிவாகக் கணித்திருந்தார். – கே. ஆர். நாராயணன் : ‘அம்பேத்கரின் அறிவுரைகளை எவரும் அலட்சியப்படுத்த முடியாது'

மே-சூன்

தலித்துகள் மீதான தாக்குதல்களை தடுப்பதெப்படி?

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சுண்டூர் என்ற இடத்தில் தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது, தலித் மக்கள் தங்களுக்கு ஆயுதங்கள் வேண்டுமெனக் கோரினர். ஆனால், இம்மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால், தலித் மக்கள் தங்கள் மீதான தாக்குதல்களிலிருந்து தப்பிக்க இயலாமல் போகிறது. எனினும், தற்பொழுது அல்லது எதிர்காலத்தில் நாம் தலித் மக்களை வலிமைமிக்கவர்களாக்க வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.

நடுத்தர தலித் வகுப்பினர், தேவையின்றி அரசின் பல அமைப்புகளைச் சார்ந்துள்ளனர். தலித் மக்களைப் பலப்படுத்த எவ்வகை முயற்சியையும் இவ்வகுப்பினர் எடுக்க முனையவில்லை. தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கு நிகழ்ந்தது, எவ்வாறு நிகழ்ந்தது என்பன போன்ற தகவல்களை ‘தேசிய ஆணையம்' போன்ற அரசால் நியமிக்கப்பட்ட அமைப்புகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றால், குற்றவாளிகள்’தண்டிக்கப்பட்டு விடுவர் என்று பரவலாகக் கருதப்படுகிறது. அரசு, இது போன்ற ஆணையங்களை ஏற்படுத்துவதன் நோக்கமே தலித் மக்களுக்கு அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மறைப்பதற்கே என்பது பலருக்கும் புரிவதில்லை.

இட ஒதுக்கீடுகளால்தான் பெரும்பாலும் தலித் நடுத்தர வகுப்பே உருவானது. அரசுப் பணியாளர்களாக இருந்து கொண்டு, தங்களின் பிள்ளைகளுக்கும் அரசுப் பணிகள் கிடைக்க இவர்கள் முனைவதால், தலித் இயக்கங்கள் இச்சமூகத்தில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த முற்படுவதை நடுத்தர வகுப்பினர் விரும்புவதில்லை. தலித் மக்கள் தங்கள் வாக்குகளை உரிய முறையில் அளிப்பதன் மூலம் மட்டுமே சமூகத்தில் மாறுதல்கள் வந்துவிடும் என்று நடுத்தர வகுப்பினர் நம்புகின்றனர். முதலமைச்சர் பதவியைப் பெறுவதாலோ, அமைச்சரவையில் பத்து இடங்களைப் பெற்றுவிடுவதாலோ தலித் எதிர்ப்பு உணர்வுகள் குறைந்து விடாது என்பதைப் பலரும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.

ஒரு தலித், முதலமைச்சராகவோ, பிரதமராகவோ ஆட்சி புரிந்தாலும் அரசதிகாரம் என்பது, ‘உயர்சாதி'யினரிடமே தொடர்ந்து இருந்து வருகிறது. நாட்டின் ஆயுதப் படைகள், காவல்துறை, நீதிமன்றம், மக்கள் தொடர்பு அமைப்புகள், நாட்டின் பிற இயற்கை சமூக வளங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கமான ‘உயர்சாதி'யினரிடமே இருந்து வருகிறது.

இதுபோன்ற சமமற்ற நிலையில் ‘உயர் சாதி'யினர் கண்மூடித்தனமாக தலித் மக்களை எதிர்க்கின்ற சூழ்நிலையில் பரந்துபட்ட மக்கள் போராட்டங்களைக் கட்டமைப்பதே எஞ்சியுள்ள ஒரே வழியாகும். அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஆளும் ‘உயர்சாதி' வர்க்கத்தினரிடம் எவ்வித சலுகையையோ, பங்களிப்பையோ எதிர்பார்ப்பது என்பது மாயையாகவே இருக்க முடியும். அரசியலை விரும்பாத, அரசு அலுவலர்களைப் போல் இல்லாமல் பதவி ஆசையை வெறுக்கும் திறமையான, தன்னலமற்ற தலித் தலைமை உருவாக வேண்டும்.

நாம் வலிமையுடனும், ஒற்றுமையுடனும் இருந்து அரசின் எவ்வித அமைப்புகளையோ, சலுகைகளையோ சார்ந்து நிற்காமல், நம்முடைய சொந்த அமைப்புகளையே சார்ந்து இருந்தால் எவரும் ஆயுதமற்ற நம்மக்கள் மீது தாக்குதல் தொடுக்கத் துணிய மாட்டார்கள்; நமது உரிமையைப் பறிக்க எவருக்கும் துணிவு இருக்காது.

அம்பேத்கரியலின் மய்ய இழை என்பது, அவருக்கு சிலை வைப்பது, பூங்காவிற்குப் பெயர் வைப்பது, போக்குவரத்துக் கழகங்களுக்குப் பெயர் வைப்பது என்பது மட்டுமல்ல. உண்மையில், அம்பேத்கரியல் என்பதன் முழுப்பொருள் சாதி ஒழிப்பு, பார்ப்பனிய ஒழிப்பு, முதலாளித்துவ ஒழிப்பேயõகும். அம்பேத்கரியல் என்பது சாதிக்கு எதிரான பொதுவுடைமையே. ஆனால், நாம் அம்பேத்கரை சாதிச் சின்னமாக்கி விட்டோம். அவரது கொள்கைகளை சாதிக் கொள்கையாக்கி விட்டோம். இது நம்முடைய தோல்வி. அம்பேத்கரியலை சாதி வட்டத்திற்கு வெளியே எவ்வாறு எடுத்துச் செல்லப் போகிறோம்? இது குறித்து நாம் உரக்கச் சிந்திக்க வேண்டும்.

சாதித் தலைவராக உருவாவது, இந்நாட்டில் மிகவும் எளிதானது. ஆனால், பல்வேறு சாதிகளின் நம்பிக்கையையும் பெற்று, பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களையும், இன்னும் பிற மக்களையும் அரவணைத்துச் செல்வதற்கு மேன்மையான தகுதி வேண்டும். இன்னும் கூட நாட்கள் கடந்துவிடவில்லை.

நாம் ஒன்றிணைந்து உழைக்கும் தலித் மக்களின் புரட்சிகர கொள்கையான அம்பேத்கரியலின் அடிப்படையில் சமூக, அரசியல் திட்டங்களைத் தீட்டினால் சமூக அளவிலும், பொருளியல் அளவிலும் நசுக்கப்படும் அனைத்து சமூக மக்களையும் ஓரணியில் திரட்டலாம். இதன்மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் வலிமை பெறுவர். அதற்குப் பிறகு ஒடுக்கப்பட்ட இம்மக்கள் மீதான தாக்குதல் பற்றி எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

– டாக்டர் பிரேம்பதி

*** 

பன்னாட்டு நிறுவனங்கள் பார்ப்பனர்களை மட்டும்தான் பணியில் அமர்த்த இங்கு வந்துள்ளார்களா? தலித் மக்களைப் பணியில் அமர்த்துவதற்கு இல்லையா? இந்திய சாதி அமைப்பு பற்றி அந்நிறுவனங்களுக்கு என்ன அக்கறை இருக்க முடியும்? அவர்கள் பிரச்சனை திறனை அதிகரிப்பதுதான் எனில், அதை அரசு பார்த்துக் கொள்ளும். அவர்களுக்கு வேறென்ன சிக்கல் இருக்கிறது?

– எச். அனுமந்தப்பா : ‘பன்னாட்டு நிறுவனங்கள் பார்ப்பனர்களைத்தான் பணியில் அமர்த்துமா?' 

சூலை

மேலவளவு படுகொலை

தமிழகம் முழுவதும் தலித் தோழர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் தேவையின்றி காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு மோசமான படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதற்குக்கூட இந்த ஜனநாயக நாட்டில் உரிமை இல்லாமல் போய்விட்டது. மக்கள் மன்றங்களிலே தீர்மானங்கள் நிறைவேற்றினால் யார் மதிக்கிறார்கள்? அடிப்படை உரிமைகளுக்குகூட காலமெல்லாம் மனுபோட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதானா? ஒரு ஜனநாயக நாட்டிலே நிகழும் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு, கடை அடைப்பு என்ற அளவில் கூட நடத்த அனுமதி இல்லை எனில், வேறு எப்படி கண்டனத்தை வெளிப்படுத்துவது? தென்தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட சென்னையில் ‘சமபந்தி உணவு' சாப்பிட்டால் மட்டும் போதாது. இக்கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டமக்களின் உணர்வுகளை, ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். திராவிட இயக்க ஆட்சிகளில், ஆதி திராவிடர்களுக்கு எப்பொழுதுமே பாதுகாப்பு இருந்ததில்லை என்ற குற்றச்சாட்டை வரலாற்றில் பதிய வைக்க இந்த அரசு துணை புரியப் போகிறதா? – தலையங்கம்

ஜாதிக் கலவரங்கள் ஏன்?

ஆழமாகப் புரையோடிப் போயுள்ள சாதிய ஒடுக்குமுறையின் விளைவாகவே இத்தகைய தாக்குதல்களைக் காண வேண்டியிருக்கிறது. போக்குவரத்துக் கழகம் தொடங்குதல், டாக்டர் கிருஷ்ணசாமி கைது என்பதெல்லாம் இத்தகைய உணர்வுகள் கிளர்ந்தெழுவதற்கான காரணிகள் எனச் சொல்லலாமேயொழிய, இத்தகைய முக்கிய நிகழ்ச்சிகள் இல்லாவிடிலும் கூட, வேறு நிகழ்வுகளின் அடிப்படையில் இத்தகைய தாக்குதல்கள் தோன்றியிருக்கும் என்பதே உண்மை. தமது குழந்தைகளை ஆதிக்கச் சாதியினர் அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்த்தால், சத்துணவில் விஷம் வைத்துக் கொன்று விடுவார்களோ என்கிற அச்சத்தையும் பெண்கள் வெளிப்படுத்தினர். இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் எவ்வித வசதியுமற்ற பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள் முதலியவற்றிலேயே தங்கியுள்ளனர். – உண்மை அறியும் குழு

ஆகஸ்ட்

பொன் விழா கொண்டாட்டங்கள்

இந்த நாட்டு மக்கள் தொகையில், கால்பகுதி மக்கள் பொதுச் சாலைகளில் நடக்க முடியாது; பொதுக் கிணற்றில் நீரெடுக்க முடியாது; சிரட்டைகளில்தான் ‘டீ' குடிக்க வேண்டும்; தங்கள் சவங்களை சாலைகளில் சுமந்து செல்ல முடியாது; தங்கள் பிள்ளைகளை மற்றவர்களைப் போல படிக்க வைக்க முடியாது; அந்தப் பெண்களை யார் வேண்டுமானாலும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கலாம்; அவர்களை யார் வேண்டுமானாலும் கொலை செய்யலாம்; அவர்கள் குடிசைகளை யார் வேண்டுமானாலும் எரித்துச் சாம்பலாக்கலாம். அதைக் கேட்க அரசியல் கட்சிகள் இல்லை, பத்திரிகைகள் இல்லை, நீதிமன்றங்களும் இல்லை என்ற கேடுகெட்ட நிலை நிலவுகின்றதே இந்த நாட்டில் அதற்காக அகமகிழ்ந்து பொன்விழா கொண்டாடுவதா? – ரவிக்குமார்

நிரப்பப்படாத 10,000 பணியிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறைகளிலும், நிறுவனங்களிலும் தலித் மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டின்படி – 9,945 பதவிகள் இன்னும் நிரப்பப்படவில்லை. ‘தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கான தேசிய ஆணையம்' இது குறித்து தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து ஒன்பது மாதங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு, தலித் மக்களுக்கான நிரப்பப்படாத இடங்களை இந்த ஆண்டு சூன் 30ஆம் நாளுக்குள் சிறப்பு நியமனத்தின் மூலம் நிரப்ப வேண்டும் என ஆணையிட்டுள்ளது. ஆனால், எந்த அரசுத் துறையோ நிறுவனமோ இந்த ஆணையை நிறைவேற்றுவதற்கு கடுகளவு அக்கறையும் காட்டவில்லை.

– ராதா வெங்கடேசன், ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்'

நாங்களும் தொழிலாளர்களே

வீட்டுவேலை தொழிலாளர்களை இழிவாகச் சித்தரிக்கும் நகைச்சுவை, துணுக்குகள், கேலிச் சித்திரங்கள் மற்றும் இவற்றை வெளியிடும் பத்திரிகைகளைத் தடை செய்ய வேண்டும். – எம்.ஏ. காளிதாஸ்

எதற்காகப் பொன்விழாக் கொண்டாட்டங்கள்? ரவிக்குமார் வடமாவட்டங்களிலும் தலித் மக்கள் மீதான

தாக்குதல்கள் தொடங்கியுள்ளன பெ. சந்திரகேசன் சமூக நீதியை நிலைநாட்டி மக்களின் உரிமைகளுக்கு சட்டவடிவம்

அளித்த அம்பேத்கர் கே.ஆர். நாராயணன் கோவிலுக்குள் நுழைந்த தலித் பெண் நிர்வாணப்படுத்தப்பட்டார்

புத்தருக்குப் பிறகு அம்பேத்கர் – பெரியார் சிந்தனைகள்தான் நிலைத்து நிற்கும் கி. வீரமணி

செப்.-அக்.

ஒப்பாரி ஓலங்கள் சேரிக்கு மட்டுமில்லை!

ஆழம் தெரியாமல் காலை விடுவது – அசட்டுத் துணிச்சல். ஆனால், ஆழம் தெரிந்தும், ஆபத்தை உணர்ந்தும் உயிருக்கு அஞ்சாமல் – உரிமைக்குப் போராடுவது என்பது, ஒரு விடுதலைப் போராளிக்கே உரிய வீரஞ்செறிந்த துணிச்சல்!

அரசின் செயலற்றத் தனத்தையும், ஆதிக்கச் சாதி வெறியர்களின் காட்டுமிராண்டித் தனத்தையும் ஆழமாய் அறிந்த நிலையில், ‘தன்னை அரசு காப்பாற்றும்' என்ற மூட நம்பிக்கையோடு அந்த முடிவெடுக்கவில்லை முருகேசன். தன் தலையே போனாலும், மக்களின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற துணிவோடு களம் குதித்த மாவீரன்தான் மேலவளவு முருகேசன்.

அய்ந்தாண்டுகளுக்கு முன்பு, இதே கொலைவெறி கும்பல்தான் சென்னகரம்பட்டி அம்மாசி, வேலு ஆகியோரின் கழுத்தை அறுத்து குருதி குடித்தது. அன்றைக்கும் அரசு வேடிக்கைப் பார்த்ததே தவிர, முன்கூட்டியே தடுத்து நிறுத்த முன்வரவில்லை. மேலவளவுக்கு மிக அருகில் உள்ள சென்ன கரம்பட்டியில் நடந்த நிலவுரிமைப் போராட்டத்தின் வீரவரலாறை நேரில் கண்டவன்தான் மேலவளவு முருகேசன்.

அடுக்கடுக்கான அடக்குமுறைகள் வந்தபோதும் அம்மாசி, வேலு தலைகள் உருண்ட போதும், நில உரிமையை நிலை நாட்ட நெஞ்சுறுதி குலையாமல் நிமிர்ந்து நின்று போராடும் சென்னகரம்பட்டி மக்களைப் போல், மேலவளவிலும் அரசியல் உரிமையை நிலைநாட்ட – அத்து மீறிப் போராடவே ஆர்ப்பரித்து எழுந்தான் முருகேசன்.

மேலவளவு ஊராட்சி தனித் தொகுதி என்று அறிவிப்பு வந்தவுடன் ஊர் மந்தையிலே கூட்டம். ‘பறப்பய எவனும் தேர்தல்ல நிக்கக் கூடாது; மீறினா தலை இருக்காது' – இப்படி அந்தக் கூட்டத்தில் தீர்மானம் போட்டனர் ஆதிக்கச் சாதியினர். கூட்டத்திலே கலந்து கொண்ட தலித் மக்களை மிரட்டி, கும்பிட்டு காலில் விழ வைத்தனர். இதையறிந்து கொதிப்புற்ற முருகேசன் மற்றும் இளைஞர்கள், கொலை மிரட்டலுக்கும் அஞ்சாமல் சாதிச் சட்டத்தை மீறுவது என்கிற முடிவுக்கு வந்தனர்.

உயிரை விட்டாலும் கவலையில்லை; உரிமையைவிட மாட்டோம் என்கிற உறுதியோடு வேட்புமனுவை தாக்கல் செய்தனர், முருகேசன் உட்பட சில இளைஞர்கள். அதே மதுரை மாவட்டத்தில் மேலும் அய்ந்து இடங்களில், சாதி வெறியர்களின் கொலை மிரட்டலுக்கு வேட்பு மனுவே தாக்கல் செய்ய முன்வராத நிலையில், மேலவளவில் மட்டும் பொங்கி எழுந்தனர். அதுவும் ‘சென்னகரம்பட்டியில் கழுத்தறுத்தது போல் அறுப்போம்' என்று சாதி வெறியர்கள் மிரட்டியும் துளியும் அஞ்சாமல் துணிவாய் எழுந்தனர்.

அரசியல் உரிமைப் போராட்டத்தில் வென்றனர் மேலவளவு தலித் மக்கள்; படுதோல்வி அடைந்தனர் ஆதிக்கச் சாதியினர்.

அந்த நாள் – சூன் 30. மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து வீடு திரும்பினார் முருகேசன் – தன் தோழர்களுடன். மரணம் சூழ்ந்துவிட்டது. ஆனாலும் மனம் தளரவில்லை. சென்னகரம்பட்டியில் செய்தது போலப் பதுங்கியிருந்து வழி மறிக்கின்றது – கொலை வெறிக் கும்பல். நெஞ்சுறுதியோடு, நிலை குலையாமல் – திருப்பித் தாக்குவதற்குத் தயாராகின்றது முருகேசனின் படை.

பயங்கர ஆயுதங்களுடன் பகைக் கும்பல், கொலைவெறிக் கூச்சலோடு அய்ம்பதுக்கும் மேற்பட்டவர்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர். முருகேசனைக் குறி வைத்து கொலைக்கும்பல் தாக்கியது. யாரும் தப்பித்து ஓட முயலவில்லை. முடிந்தவரை ஒன்பதும் பேரும் திருப்பித் தாக்கினர். அதில், சாதி வெறியர்கள் பலர் படுகாயமுற்றனர்; இருவர் ரத்தச் சகதியில் சரிந்தனர். அதனால் ஆத்திரம் தலைக்கேறிய அந்தக் கும்பல் முருகேசனோடு வந்த அனைவரையும் மூர்க்கத்தனமாய் தாறுமாறாய் வெட்டியது.

தலித் மக்களின் அரசியல் உரிமைக்கானப் போர்க்களத்தில் முருகேசன் உட்பட ஆறு பேர் வீரமரணத்தைத் தழுவுகின்றனர். முருகேசன் தலையைத் துண்டித்து – தனியே எடுத்துக் கொண்டு ஓடியது அந்தக் காட்டுமிராண்டிக் கும்பல். முருகேசனின் கழுத்திலிருந்து குபுகுபுவெனக் கொப்பளித்து வந்த குறுதியைத் தொட்டு, அந்தக் கொலைக் கும்பலின் ஆயுதங்கள் எழுதின – ‘மேலவளவு முருகேசன் ஒரு மாவீரன்'!

அந்த மாவீரனின் மரணம்

ஒரு சேரிப்புயலாய் சீறி எழுந்தது.

விடுதலை வெறியோடு சுற்றிச்

சுழன்றடிக்கும் சேரிப் புயல் –

ஒரு நாள் வரம்பு மீறும்;

வரலாறு மாறும்!

ஒப்பாரி ஓலங்கள் சேரிக்கு மட்டுமே சொந்தமில்லை!

– திருமாவளவன்

அம்பேத்கர் அவர்களின் முழக்கமும், வீரமும், அறிவும் நிறைந்த தீர்மானம் – பொது மக்களால் எவ்வளவுதான் வெறுக்கப்பட்டபோதும், அவர் எவ்வளவுதான் தூற்றப்பட்டபோதும் அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள இந்துக்களில் பார்ப்பனரல்லாத மக்களாகிய 100 க்கு 97 சதவிகிதமுள்ள 24 கோடி ‘இந்து' மக்களின் விடுதலைக்கும் அருமருந்தாகப் போகின்றது.

– பெரியார் : ‘குடி அரசு' இதழில் 20.10.1935

நவம்பர்

வெட்கக்கேடு!

அரசியலுக்குச் சென்றால்தான் பல பிரச்சனைகளையும் பல்வேறு கோணங்களில் அணுக முடியும்; சமுதாயத்திற்கு உண்மையான தொண்டாற்ற முடியும் என்றெல்லாம் தத்துவ விளக்கம் கூறியவர்கள், இன்றைக்குத் தங்களின் அடிப்படைக் கொள்கையான பகுத்தறிவு, சமூக நீதி, சாதி ஒழிப்பு போன்றவற்றை எல்லாம் காற்றிலே பறக்கவிட்டு விட்டு ஒரு ஜாதித் தலைவருக்கு ‘குரு பூஜை' நடத்த வரிசையில் நின்று கொண்டுள்ளனர். எவ்வளவு பெரிய அவலம் தலைக்குனிவு! பேருந்துகளில் தலைவர்கள் பெயர் இருப்பதால்தான் சாதிக் கலவரங்கள் ஏற்படுகின்றன எனக் கூறி, அவற்றை எல்லாம் இரவோடு இரவாக நீக்கிய கலைஞர் அரசு, இதற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது? ‘தமிழகம் முழுவதையும் சமத்துவபுரமாக ஆக்க வேண்டும் என்பதே இந்த அரசின்லட்சியம்' என சூளுரைக்கும் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், ஒரு ஜாதித் தலைவருக்கு அரசு சார்பில் விழா எடுக்க எந்த அடிப்படையில் அனுமதிக்கிறார்? சமத்துவபுரங்கள் ‘தேவர் ஜெயந்தி' யையும் உள்ளடக்கியதா? என்று கேட்க விரும்புகிறோம்!

– தலையங்கம்

மேலவளவு பாடம்

இந்தியாவில் மக்களாட்சி என்பது ஆதிக்கச் சாதியினரின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவே பயன்படுகிறது. கிராம அளவிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலும் உண்மை ஜனநாயகம் தழைக்க முற்படும்போது வன்முறையும், ரத்தக்களறியும்தலைதூக்குகின்றன. நம்முன் உள்ள கேள்வி என்னவெனில், ‘சுதந்திர'த்திற்குப்பிறகு கிராமங்களில் என்ன வகையான சமூக, அரசியல் கல்வி அளிக்கப்படுகிறது? ஒருபுறம், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தங்களின் உரிமைகளுக்காகவும் இயல்பாகவே கிளர்ந்தெழுகின்றனர். ஆனால், மறுபுறம் ஆதிக்க சாதியினருக்கு ஜனநாயகம், சமூக நீதி மற்றும் சமத்துவம் பற்றி சொல்லப்படவில்லை.

லீலாவதி படுகொலைக்குப் பிறகு, சி.பி.அய். (எம்)கட்சி, முழு மூச்சாகப் பணியில் இறங்கி, அந்தப் பகுதியில் தன்னுடைய செல்வாக்கை மேலும் நிலைப்படுத்திக் கொண்டது லீலாவதி குடும்பத்தினருக்கு அரசியல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் உதவி புரிந்தது. இப்பிரச்சினை குறித்து பெருமளவில் பிரச்சாரம் செய்தது. ஆனால், இதே போன்றதொரு செயல், மேலவளவைப் பொருத்த அளவில் முற்றிலுமாக இல்லையே ஏன்?

– ஜார்ஜ் மேத்யூ

 டிசம்பர்

தலித் பெண்ணியம்

தலித் பெண்ணியம் என்று தனியாக ஒன்று தேவைதான். ஏனெனில், தலித் பெண்ணின் பிரச்சினைகள் தனித்துவமானவை. இந்தப் பிரச்சினைகள், அவர் பெண்ணாக இருப்பதனால் மட்டும் தோன்றியவை அல்ல; அவர் தலித் பெண்ணாக இருப்பதால் ஏற்பட்டவை. தலித் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எல்லாம் அவர்கள் பெண்களாக இருப்பதால் மட்டுமே ஏற்பட்ட பிரச்சினைகளா? இல்லை. தலித் பெண்களின் பிரச்சினை = பெண்களின் பிரச்சினை + தலித்தாக இருப்பதால் ஏற்படும் பிரச்சினை. தலித் என்னும் அடையாளமும் பெண் என்னும் அடையாளமும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. ஆணாதிக்கம் என்பது, ஒரு தலித் பெண்ணுக்கும் மேல் சாதிப் பெண்ணுக்கும் ஒரே போன்று இல்லை. – அ. மார்க்ஸ்

சிந்தனையை மழுங்கடிக்கும் இதழ்கள்

தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளின் அண்மைக்கால போக்குகள் மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கின்றன. பத்திரிகைகளுக்கு என உள்ள தரத்தையும் தகுதியையும் அவை இழந்து வருகின்றன என்றால் மிகையாகாது. ஒரு பத்திரிகையின் பணி என்ன? அவை எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட்டு, மக்களின் நலன்களில் அக்கறை கொள்ள வேண்டும் என்பது போன்ற அடிப்படைப் பணிகளைக்கூட கைவிட்டுவிட்டு தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு வருகின்றன. இது, தமிழ்ப் பத்திரிகை உலகில் ஒரு பெரும் வெற்றிடத்தையே எதிர்காலத்தில் ஏற்படுத்திவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. – நெடுஞ்செழியன்

உயர்திரு. மனிதனே!

உயர்திரு. மனிதனே! / மசூதியை இடித்த மாதிரி /

மனசுகளை இடிக்க வேண்டாம் / ரத்தம் நாறும் / ஆயுதங்களை கீழே போடுவோம் / வியர்வை ஊறும் / கைகளோடு நம் காயங்களுக்குக் / கட்டுப் போடுவோம்! – பிரபு

சிறுபான்மை இன மக்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கீடு குடிபெயரும் உரிமைகூட மறுக்கப்படுகிறது

ரவிக்குமார் சாதி தடையாக உள்ளது ராம்விலாஸ் பாஸ்வான்

 ‘இந்தியா டுடே' வருங்காலத் தமிழகத்தைச் சீரழிக்கும் நெடுஞ்செழியன் அழிக்கப்பட்ட அடையாளங்களின் மிச்சங்கள் கவுதம சன்னா புரட்சிக்கு தடை எது? டாக்டர் அம்பேத்கர்

Pin It