சனவரி

கல்விக்காக ஓர் அமைதிப் புரட்சி

திறமையுள்ள மாணவர்களையே பள்ளியில் சேர்த்துப் பயிற்றுவித்து தங்கள் பள்ளியின் பெருமையைப் பீற்றிக் கொள்ளும் பள்ளிகளுக்கு இடையில், எந்தப் பள்ளியிலும் படிப்பதற்கு அருகதையில்லை எனப் புறந்தள்ளப்பட்ட மாணவர்களை, இடையில் படிப்பினை நிறுத்திவிட்டு மீண்டும் பயில விரும்பும் மாணவர்களை, அபாரத் திறமையின்றி சராசரி திறமைக்கும் கீழே உள்ள வயது மிஞ்சிய மாணவர்களை அவர்களின் கற்கும் நிலையறிந்து அதற்கேற்ற வகையில் பயிற்றுவித்து, அவர்களை தேர்ச்சிப் பெறச் செய்யும் வித்தியாசமான பள்ளி! தென் தமிழகத்தில் தலித் மாணவ, மாணவிகளுக்கென தலித்துகளால் 1930 முதல் நடத்தப்படும் பள்ளி. தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் இருந்தும்

மாணவர்கள் வந்து தங்கி பயில 7 விடுதிகளைக் கொண்ட ஒரே பள்ளி. அதுதான் சில்லாங்குளத்தில் உள்ள முத்துக்கருப்பன் அரிசன் மேல்நிலைப்பள்ளி. – கே.எஸ்.முத்து

குஜராத் : ஆன்மிகப் பயங்கரவாதம்

யார் மீது தாக்குதல் நடத்த வேண்டுமோ அவர்கள் மீது முதலில் ரசாயனப் பவுடர்கள் தூவப்பட்டன. இதனால் எரிக்கப்பட்ட உடல்களில் வெறும் எலும்புக்கூடே மிஞ்சியது. குறிப்பாக, போலிஸ்காரர்களின் வன்முறை அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது. முஸ்லிம் பெண்களை இவர்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தியது மிகவும் கொடூரமானது. இக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 70 ஆயிரம் முஸ்லிம் அகதிகள், தங்கள் முகாம்களைத் தாங்களே உருவாக்கிக் கொண்டதாகவும், தண்ணீர் மற்றும் உணவுக்காகக்கூட குஜராத் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட வேண்டியிருந்தது என்பதும் ஆதாரங்களுடன் கூறப்பட்டுள்ளன. – அக்கறையுள்ள குடிமக்களின் தீர்ப்பாயம்

பிப்ரவரி

தலித் பொருளாதாரம்

தலித்துகளின் பொருளாதாரம் பெருகும்போதுதான் தனிநபர் வருவாய் இருமடங்காகும். தலித்துகள் பொருளாதாரத்தில் நிலை பெற தங்கள் தொழில் வாய்ப்புகளைத் தேடிப் போராட வேண்டும். அய்ந்தாவது திட்டக்குழுவின் தலித் நிதி ஒதுக்கீட்டு வரம்பு 35 ஆயிரம் கோடி. ஆனால், ஒதுக்கீடு சுமார் 1300 கோடி மட்டுமே ஆகும். அத்திட்டக் குழுவில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதைக் காட்டிலும் மிருக நலன்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டன. – நல்லான்

அதிரடிப் படையினரின் அத்துமீறல்

1992ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தமிழக – கர்நாடக அதிரடிப்படை, கடந்த காலங்களில் அரங்கேற்றிய அட்டூழியங்களை நாடே அறியும். மனித உரிமை அமைப்புகளின் ஆய்வின்படி, அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் 90 பேர், பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்கள் 60 பேர், வதை முகாம்களில் சித்ரவதைக்கு உள்ளாகி நடைபிணமாக வாழ்பவர்கள் 300க்கும் மேல். – கோ. சுகுமாரன்

அம்பேத்கரும் முஸ்லிம்களும்

டாக்டர் அம்பேத்கரின் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை' என்ற நூலை ஆதாரமாக வைத்தே தான் பேசிவருவதாக, கட்டியார் (ஆர்.எஸ்.எஸ்.) பிரச்சாரம் செய்து வருகிறார். பொய்யை நிலைநிறுத்த, தவறான தகவல்களை மக்களிடையே பரப்புவதுதான் மதவாதிகளின் வேலை. இதற்கு கட்டியாரும் விதிவிலக்கல்ல. உண்மையில், டாக்டர் அம்பேத்கர் எந்த வகையிலும் முஸ்லிம்களுக்கோ, இஸ்லாத்திற்கோ எதிரானவரல்லர். ஆனால், ஒருவரை தவறாக மேற்கோள் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், அவர் எந்தப் பொருளில் எந்தச்சூழநிலையில் அதைச் சொன்னார் என்பதை மறைத்துவிட்டு, வெறும் வரிகளை மேற்கோள் காட்டுவதன் மூலம் தங்களின் வாதத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம்.அம்பேத்கர் முஸ்லிம் விரோதியல்லர். அவர் மாபெரும் கல்வியாளர், தேர்ந்த சிந்தனையாளர். சங்பரிவார் உறுப்பினர்களைப் போல மதவெறியர் அல்லர். பாகிஸ்தான் பற்றிய அம்பேத்கரின் நூல் ஒரு சிறந்த கல்வியாளருக்குரிய பணிக்குத் தக்க சான்றாக விளங்குகிறது. – அஸ்கர் அலி இன்ஜினியர்

 ***

‘தினமணி'யின் தலையங்கம் அமெரிக்காவில் எழுதப்படுகிறதா? அல்லது ‘தினமணி' அலுவலகத்தில் எழுதப்படுகிறதா? என்று எனக்குத் தெரியவில்லை. பசுமைப் புரட்சிக்கு எதிராக இன்று கூட நிறையபேர் கடுமையான வேலை செய்கிறார்கள். ஆனால், இவர்களுடைய எல்லா உழைப்பையும் ஒரேயொரு ‘தினமணி'யின் தலையங்கம் தகர்த்துவிடும் சக்தியை அது வைத்துள்ளது. – வைகை. குமாரசாமி : ‘பசுமைப் புரட்சி பார்ப்பனர்களின் சதி'

கீழ்வெண்மணி : கம்யூனிஸ்டுகளின் தனியுடைமை கோ. சுகுமாரன் அரசு சாதியை ஒழிக்குமா? கிருத்துதாசு காந்தி

விழியிழந்த ‘விழிப்புணர்வு' யாக்கன் தலித் விடுதலையின்றி இன்னொரு விடுதலை சாத்தியமில்லை

கே.எஸ். முத்து சாதி ஒழிப்புக்கான முன்னகர்வு சூரிய தீபன்

மார்ச்

பெண்ணியம்?

மதங்களின் பொறுக்கித்தனங்களைப் பேசத் தயங்கும், கடவுள்களை எதிர்க்கத் துணியாத யாராலும் பெண்ணடிமைத்தனத்தை இம்மியளவுகூட நகர்த்திப் பார்க்க முடியாது. பெண்கள் கேள்வி கேட்பதை ஆதிக்க மனோபாவம் சுமந்த பெண்களே ஏற்றுக் கொள்வதில்லை. உடலளவில் தங்களை சுதந்திரப்படுத்திக் கொள்ளும் பெண்கள், சிந்தனை அளவில் இன்றும் குறுகிய வட்டத்துக்குள்தான் இருக்கிறார்கள். அந்த மாதிரி மேம்போக்கான பெண்ணியவாதிகளால், இன்னொரு பெண் மேலே வருவதை சகித்துக் கொள்ள முடியாது. ஆண்களைப் போல் ஆதிக்க சுதந்திரத்தில் திளைப்பதல்ல பெண்ணியம். அடிமைத்தனத்தின் சின்ன தலையிடலைக்கூட பெண்ணியம் ஏற்றுக் கொள்ளாது. தமிழக முதல்வரில் தொடங்கி உயர் பதவிகளில் இருக்கும் பல பெண்கள் ஆண்களைப் போலவே நடந்து கொள்கிறார்கள். அவர்களால் பெண் சமூகத்திற்கு மிஞ்சிமிஞ்சிப் போனால் என்ன கிடைத்துவிடும்? வீணாய்ப் போன மகளிர் காவல் நிலையங்களையும், பாலியல் உடற்கூராய்வு வகுப்புகளையும் தவிர... – செவ்வந்தி

படுகொலைக்குப் பெயர் போர்

‘படுகொலை செய்வதில் எவ்விதப் பெருமையும் இல்லை. படுகொலை செய்வதற்கு மறு பெயர் போர். அநீதியான போரில், போடப்படும் குண்டு – ஒரு தாயையும் குழந்தையையும் கொன்றுவிட்டால், அதற்குப் பெயர் தெரியாமல் நடந்த விபத்து அல்ல; அது படுகொலை. இந்த அநீதியான போரில், ஒரு பாதாளச் சாக்கடை குண்டுவைத்து தகர்க்கப்பட்டு, அதன் மூலம் ஒரு குழந்தை நோய்வாய்ப்பட்டு இறந்து போனால், அது எதிரியின் கட்டமைப்பை அழிக்கும் செயல் அல்ல; அது படுகொலை. இந்த அநீதியான போரில் குண்டு வீச்சின் மூலம் தொலைபேசி வயர்கள் பழுதடைந்ததால் அவசரத்திற்கு ‘ஆம்புலன்சை' கூப்பிட முடியாமல் ஒரு தந்தை இறந்து விட்டார் என்றால், அதற்குப் பெயர் ‘எல்லா தகவல் தொடர்பு சாதனங்களையும் கைப்பற்றி விட்டோம்' என்பதல்ல: அதற்குப் பெயர் படுகொலை. இந்த அநீதியான போரில், ஆயிரம் விவசாயிகள் தங்கள் ஊரைக் காப்பாற்ற வெட்டி வைக்கப்பட்ட குழியில் விழுந்து இறந்து விடுகிறார்கள் என்றால் அதற்குப் பெயர் வெற்றி அல்ல, அது படுகொலை.”

– வியட்நாம் போரில் ஈடுபட்ட ஒரு படைவீரர்

ஏப்ரல்

தலித் ஒற்றுமை : ஒரு சுய விசாரணை

‘தலித்' என்றோ, தாழ்த்தப்பட்டவர் என்றோ, தமிழர் என்றோ எப்படி சொல்லிக் கொண்டாலும், சுய சாதி உணர்வுள்ள மக்கள் திரள், சாதிய விடுதலைக்காக எப்படிப் போராடுவார்கள்? அதில் என்ன நியாயம் இருக்கிறது? தனக்குக் கீழ் இருக்கும் சாதியை கொடுமைப்படுத்துவதன் மூலம்தான் ஆதிக்க சாதியினர் தமது சாதி உணர்வை வெளிப்படுத்த முடியும். அந்த அடிப்படையில் தலித்துகளிடம் வளர்த்தெடுக்கப்படும் சாதி உணர்வு, தலித்துகளுக்குள் மோதலை உருவாக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதை இந்த அறிவுவாதிகள் ஏற்க மறுத்து வருகிறார்கள். – யாக்கன்

சமூக மாற்றத்திற்கான வழி

நானும் மானுடத்தில் தலைநிமிர்ந்து நின்றவன்; நிற்கத் தகுதியுடையவன் என்ற உணர்வை ஊட்டிக் கொள்வதுதான் நமக்குத் தேவை. அந்தத் தேவையை நிறைவேற்றுவதுதான் இந்த வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வுகள். கட்டபொம்மனை ஹீரோவாக்கினாங்க, ஊமத்துரையை ஹீரோவாக்கினாங்க. ஆனால், கட்டபொம்மனை தமிழ்நாட்டின் தலைவனாக ஆக்கி வைத்திருக்கும் பொழுது, எப்படி வீரன் சுந்தரலிங்கத்தை விட்டோம்? எப்படி ஒரு மதுரை வீரனை விட்டோம்?

– கிருத்துதாசு காந்தி

ராணுவமயமாகும் சமூகம்

இந்தியா அதன் அளவுக்கு ஏற்ப, தெற்காசியாவிலேயே ராணுவத்திற்கு என அதிகளவு பணத்தைச் செலவழிக்கிறது. இந்திய ராணுவத்திற்கான அதிகாரப்பூர்வ செலவு 76 ஆயிரம் கோடி ரூபாய். வெளியில் சொல்லப்படாத செலவுகள் – ராணுவ உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட இறக்குமதிப் பொருட்களுக்கும் மானியம் கொடுப்பது போன்றவற்றைச் சேர்த்தால் – இந்திய ராணுவத்தின் பட்ஜெட் 85 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதற்கு மாறாக, ஆரம்பக் கல்விக்கு என பொது, தனியார், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து உள்பட ஒட்டுமொத்தமாக இந்தியா 35 ஆயிரம் கோடி ரூபாய்தான் செலவழிக்கிறது.

 – பிரபுல் பித்வாய்

தாய் நாடும் தந்தை நாடும் கவுதம சன்னா வைக்கம் போராட்டம் தலித்துகளுக்காகத்தான் புனித பாண்டியன் கல்விக் கூடங்களிலும் தீண்டாமை ஆசூர் ராஜ் உன்னை நான் என்றுமே கண்டதில்லை ஜோதி பாபுரே லஞ்சேவர்

சிறுதெய்வ வழிபாடு வே. மதிமாறன்

பிறப்பின் அடிப்படையில் ஒருவருக்கு மதத்தைத் தீர்மானிப்பது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. நாம் பிறந்ததும் நம்மீது மதம் திணிக்கப்படுகிறது. இது ஏன்? நான் பிறக்கும்போது எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், எனது மதம் இதுதான் என்று பிரகடனப்படுத்துகிறார்கள். இது, விவாதிக்கப்பட வேண்டும்.

– வி.பி. சிங் : ‘இடஒதுக்கீடு தலித் மக்கள் தொகைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும்'

 

ஆதித்தமிழர் பேரவையைப் பொருத்தவரை, சாதி ஒழிப்பை எல்லா வகையிலும் முதன்மைப்படுத்துகிறது. ஏனென்று சொன்னால், நமக்கு இழிவே சாதியால்தான் வந்திருக்கிறது. அந்த வகையிலே இந்து மதத்தை ஒழிக்க வேண்டும். நாங்கள் எல்லாம் ‘இந்துக்கள் அல்லர்' என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறோம்.

– அதியமான் : ‘நான் ஜாதிகெட்டவன்'

மே

சமூக பயங்கரவாதம்

மீண்டும் ஒரு பயங்கரம் தமிழ்நாட்டில் நடந்தேறியிருக்கிறது. திண்ணியத்திலும் கவுண்டன்பட்டியிலும் தலித்துகளின் வாயில் மலத்தையும் சிறுநீரையும் திணித்த சாதி வெறியர்கள், ஏப்ரல் 10 அன்று மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில், முருகேசன் என்ற தலித்தின் வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள். மேற்கூறிய கொடுமைகளுக்கு எதிராக தலித் இயக்கங்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திய பிறகும், இக்கொடுமைகள் தொடரக் காரணம் என்ன? தமிழர்களுக்காக, திராவிடர்களுக்காக, உழைக்கும் வர்க்கங்களுக்காக கட்சி, இயக்கம் நடத்துகின்றவர்களும், இதுபோன்ற அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு சமூகநீதி இயக்கம் நடத்தும் பொது நலவாதிகளும் ஜனநாயகவாதிகளும் – தலித்துகள் மீது நடத்தப்படும் சமூக பயங்கரவாதத்தைக் கண்டிக்காததும், அதற்கெதிராக செயல்படாததும் ஒரு முக்கியக் காரணம். தலித் மக்கள் மட்டுமே இதைக் கண்டிப்பதால், இது வெறும் தலித் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. இது, ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் ஏற்பட்ட தலைக்குனிவு இல்லையா? – தலையங்கம்

தொடக்கக் கல்வியும் மேற்கல்வியும்

ஒரு சமுதாயத்தின் குறிப்பாக, வளர்ச்சி தடுக்கப்பட்ட சமுதாயத்தின் நலனில் அக்கறையுடைய அரசுகளும், நிர்வாகங்களும், சமூக சிந்தனையாளர்களும், ஆர்வலர்களும் அடிப்படைக் கல்வியோடு அமைந்து விடலாகாது. சமூகத்தில் தாழ்நிலையில் உள்ளவர்க்கு உயர் கல்வியில் மேனிலை அளிக்க வேண்டும். இது, சமத்துவக் காப்பு விதி. சமுதாயக் கூட்டு மொத்த நலனுக்கு இது ஆக்கம் செய்யும். ஆண்டாண்டு இரண்டு லட்சம் பட்டியல் சாதியினரைப் படிக்க வைத்து விட்டால், ஒரு பத்தாண்டுகளுக்குள் அவரில் பாதிப் பேராவது எதிர்காலத்தில் அரசு உதவியின்றியே, தமது பிள்ளைகளை இப்பட்டப் படிப்பிற்குச் சேர்த்துவிட முடியும். பின்னுற்ற ஓர் இனம் வளர வேண்டுமானால், உயர்கல்வியின்றி முடியாது. தொடக்கக் கல்வி பட்டியல் சாதியினருக்கு; மேலாண்மைக்கல்வி எல்லாம் சாதிப் பற்றாளர்க்கு என்ற நிலை மாற வேண்டும். – கிருத்துதாசு காந்தி

சூன்

சூலத்தை வழி மறிப்போம்

இந்தியத் துணைக் கண்டத்தின் ‘இந்து பெரும்பான்மை' தலித்துகள் இல்லையெனில் சாத்தியமில்லை. எனவே, அவர்களைத் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு. எனவேதான், மதமாற்றத் தடைச் சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வரத் துடிக்கிறார்கள். – யாக்கன்

எல்லை தாண்டிய பயங்கரம்

வாசந்தி எழுதிய ‘தினவு' என்ற சிறுகதை, ‘இந்தியா டுடே' (மே – 14, 2003) இதழில் வெளியிடப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதியைப் பற்றி எழுதப்பட்டுள்ள அந்தச் சிறுகதை, அவரை ‘குருட்டு அதிர்ஷ்ட'த்தில் பதவிக்கு வந்தவராகவும், தாக்கூர் ஒருவனின் வைப்பாட்டியாகவும் கேவலப்படுத்தியுள்ளது. இந்தக் கதையை எழுதிய

வாசந்தியும், வெளியிட்ட ‘இந்தியா டுடே'வும் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென ‘தென்னிந்திய தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பேரவை' கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

வறுமை காரணம் அல்ல

இந்தியாவில் ஒருவன் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக ஏன் பின்தங்கியிருக்கிறான்? வறுமையினால் அல்ல; சாதி ரீதியான ஊனம்தான் ஒருவனை வறுமைக்கு இட்டுச் செல்கிறது. ஒருவனுடைய வறுமைக்குக் காரணம் அவன் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியிருப்பதுதான். – பி.பி. மண்டல்

ஆதிதிராவிடர்' சொல் வரலாறு

1922ஆம் ஆண்டு தலைவர் பி.வி.எஸ். அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ‘ஆதிதிராவிடர் மகாஜன சபை'யின் ஏகமனதான முடிவின்படியும் சட்டமேலவையில் எம். சி. ராஜா அவர்கள், “ஆதி திராவிடர் என்று நாங்கள் அழைக்கப்படுவது, வரலாற்று ரீதியில் ஒதுக்கப்பட்ட மக்களின் அடையாள விளக்கத்துக்கு மிகவும் பொருத்தமானதாக விளங்குகிறது” என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்; எம். மதுரைப் பிள்ளை வழிமொழிந்து பேசினார். ஆங்கிலேய அரசால் ‘ஆதி திராவிடர்' என்ற பெயர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1927இல் Mச்ஞீணூச்ண் ஃணிஞிச்டூ அஞிt இல் தலித்துகள், ஆதிதிராவிடர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். – ஏபி. வள்ளிநாயகம்

உலக தலித் மாநாடு ஆதி பவுத்தர்களாக அணிதிரள்வோம் க. சங்கர் கல்வித் திட்டம் : உலகமயம், காவிமயம், சாதிமயம் நல்லான் எஸ்.சி. / எஸ்,டி. சங்கங்களின் பங்களிப்பு மு.பா. எழிலரசு ’சாவு வந்தாதான் சமைப்போம்' கிருஷ்ணவேணி வால்டர் சிசுலு எஸ்.வி. ராஜதுரை

சூலை

பசு, பறை, தலித்

மண் என்பதை பொருள் உற்பத்திக்குரிய காரணிகளுள் ஒன்றான நிலம் என்பதாய்ப் பார்ப்பது அறிவியல். மண்ணை விடுதலைக்கான களமாகப் பார்ப்பது சமூக அறிவியல். மனிதன் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகள் அனைத்தும், மனித இனம் முழுமைக்கும் சொந்தமாக்கப்பட வேண்டும் என்றார் பேராசான் காரல் மார்க்ஸ். மனித இனத்திற்கு எதிரான சமூகத்தின் சகல அசிங்கங்களையும் துடைத்தெறிவதற்கான வடிவமாக தலித் கலை மரபை, இந்து மத எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்டமைப்போம். – தலித் க.சுப்பையா

உயிருக்கு வதை; கறிக்குத் தடை

கோயில்களில் பிச்சையிடுவதன் மூலம் தமிழகத்தில் மிகப்பெரும் ‘ஆன்மிக மறுமலர்ச்சியை' உருவாக்கிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, தான்தோன்றித்தனமாக மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது போல, பசுவதைத் தடைச் சட்டத்தை இனி வரும் சட்டமன்றக் கூட்டத்தை தொடரிலேயே கொண்டுவர மத்திய

அரசிடம் உறுதியளித்துள்ளார் என்று தெரியவருகிறது. முடிவாகி விட்ட அ.தி.மு.க. – பா.ஜ.க. தேர்தல் கூட்டணியின் பிரச்சாரத்திற்குப் பசுவதைத் தடைச் சட்டம் கண்டிப்பாகப் பயன்படும் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு காலம் பாடம் சொல்லித் தரும். – யாக்கன்

பெரியாரா எதிர்த்தார்?

பெரியார் அம்பேத்கரை தமது தலைவராக ஏற்றுக் கொண்டதுடன் நிற்கவில்லை; அவருடைய நூல்களை வெளியிட்டது மட்டுமின்றி, கூட்டங்கள் தோறும் அதை மேற்கோள் காட்டி சாதி ஒழிப்பு தத்துவங்களாக அதைப் பிரகடனம் செய்து, தலித் அல்லாதவர்களும் அண்ணலின் கொள்கைகளை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார். பார்ப்பனிய, இந்து மதக் கடவுள் புராணங்கள் எதிர்ப்பு மற்றும் பவுத்தத்திற்கு ஆதரவாக அம்பேத்கரின் கருத்துகளுக்கு செயல்வடிவம் கொடுத்தவர் பெரியார். – புனித பாண்டியன்

 ஆகஸ்ட்

வன்னிய சாதி வெறி

கண்ணகியின் வாயில் விஷத்தை ஊற்றியிருக்கின்றனர். ஊரைத் தாண்டி முந்திரிக் காட்டுக்குள் நடந்து கொண்டிருக்கும் போதே சுடுகாட்டில் எரிப்பதற்குத் தேவையான விறகுகளை அடுக்கும் பணியை வேறு சிலர் செய்திருக்கின்றனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த இளஞ்ஜோடிகளை தீ வைத்துக் கொளுத்தினார்கள். கண்ணகிக்கு பாதி உயிர் போகும் முன்பே ஊர் சுடுகாட்டிலும், முருகேசனை அதே இடத்தில் கொளுத்தினால் சாதி மரியாதை போய்விடும் என்பதால், ஊர் சுடுகாட்டைத் தள்ளி ஓடையிலும் கொளுத்தினர். கொளுத்தும்போது முருகேசன் அரை மயக்கத்தில் இருந்திருக்கிறார். இவ்வாறு சாதி பெருமை காப்பாற்றப்பட்டுள்ளது. இவ்வளவும் பையனின் சித்தப்பா அய்யாசாமியின் கண்முன்னாலேயே 8.7.2003 அன்று நடந்துள்ளது. – மாலாமகன்

போரிடும் மலையின மக்கள்

அரசமைப்புச் சட்டத்தின்படி, மலையின மக்கள் வாழும் பகுதிகளை அட்டவணைக்குட்பட்ட சுய ஆட்சிப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும். ஆனால், கேரள, மேற்கு வங்க, கர்நாடக, தமிழக அரசுகள் இதைச் செய்யவில்லை. கேரள அரசின் சுற்றுலாத்துறை விளம்பரம், கேரளாவை ‘கடவுளின் சொந்த நாடு' என்று பிரச்சாரம் செய்கிறது.

அதாவது, வனங்கள் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே; அது மலையின மக்களுக்கு அல்ல என்பது அரசின் அறிவிக்கப்படாத கொள்கை.

– கவுதம சக்திவேல்

திருத்தப்பட வேண்டிய சட்டம்

பட்டியல் சாதியினரைப் பாகுபடுத்தும் கூறுகெட்ட கூறு உண்டென்றால், பட்டியல் சாதியினருக்கு நோவு தரும் நுணங்கிய சட்டம் உண்டென்றால் பட்டியல் சாதியினரை பரிதவிக்கவிடும் போக்கற்ற பிரிவு உண்டென்றால், அது அரசமைப்பு ஆணை 1950 தான்.No Person who professes a religion different from Hinduism shall be deemed to be a SC. இது திருத்தப்பட்டே ஆகவேண்டும் என்பதே பட்டியல் சாதியினத்தவரின் ஒருமித்த ஓங்காரமாக இருக்கிறது. இன்று இந்திய மண்ணை சேறளைந்து கசக்கிக் கொண்டிருக்கும் மதவாதப் பேய்ச்சண்டைக்கு பட்டியல் சாதியினரும் பலியாகாமல் காக்கப்பட வேண்டுமென்றால் இந்தச் சட்டம் திருத்தப்பட்டே ஆகவேண்டும். – கிருத்துதாசு காந்தி

இந்தியாவில் இன்று காணப்படும் அனைத்து சொத்துகளும், இயற்கை வளங்களும் தலித்துகளின் வியர்வையாலும் ரத்தத்தாலும் விளைந்ததுதானே! தலித்துகளின் வியர்வையும் ரத்தமும் இல்லாத ஏதாவது இந்தியாவில் இருக்கிறதா? 5,000 ஆண்டுகளாக அவர்கள் எல்லாவற்றையும் தயாரித்திருக்கிறார்கள் ரோமின் அடிமைகளைப்போல, ஸ்பார்டகஸ் போல! – புரட்சிப் பாடகர் கத்தார் : ‘நக்சலைட்டுகள் ஆட்சிக்கு வந்தாலும் ஜாதி இருக்கும்'

அன்புபொன்னோவியம் இரங்கல் குடியரசு அவசர நிலையும் சங்பரிவாரும் அரவிந்த் ராஜகோபால் தலித் மக்கள் தனித்துப் போராடவேண்டுமா? அழகிய பெரியவன் தேவை சாதி ஒழிப்புச் சட்டம் கிருத்துதாசு காந்தி இந்துத்துவப் பேராசிரியர்கள் சூரியதீபன்

செப்டம்பர்

மானங்கெட்ட பத்திரிகைகள்

வேட்டி கட்டிய ஓர் அரசியல் தலைவர் ‘பைஜாமா' போட்டுக் கொண்டால் அது முதல் பக்கச் செய்தியாகிறது. அமைச்சர் ஒருவர் காரில் செல்லாமல் சற்றுத் தொலைவு நடந்து சென்றால் அது புகைப்படத்துடன் கூடிய செய்தியாகிறது. கைது செய்யப்படும் நடிகைகளை நீதிமன்ற விசாரணைக்கு முன்பே ‘விபச்சாரி'கள் என்று இழிவுபடுத்திவிட்டு, அவர்களின் வண்ணமிகு புகைப்படங்களை முன் அட்டையில் வெளியிட்டு காசு சம்பாதிக்கவும் வெட்கப்படுவதில்லை, இந்த மானங்கெட்ட பத்திரிகைகள்.

ஆனால், தலித்துகள் செய்திகளில் வரவேண்டும் எனில் ஒன்று, அவர்கள் பிணமாக வேண்டும்; குறைந்தபட்சம் கை கால்கள் வெட்டப்பட்டு ஊனமாக வேண்டும் அல்லது இச்சமூகத்துப் பெண்கள் மானமிழக்க வேண்டும்.

அப்போது அதைப் பரபரப்புச் செய்தியாக்கி, இன்னும் கொஞ்சம் மானமிழக்க வைப்பார்கள். இன்றைக்கு வாரம் இருமுறை வெளியிடப்படும் ‘தமிழ்ப் பத்திரிகை'கள், வேறு ஏதும் செய்திகள் கிடைக்காவிட்டால் தலித்துகள் மீதான வன்கொடுமைகளை இப்படித்தான் செய்தியாக்குகின்றன. – தலையங்கம்

இந்து வழிபாட்டை ஒழிப்பது

எந்த ஒரு கொள்கையும் திரளான மக்களால் தம் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படும்போதுதான் அது உயிர் வாழ்கிறது. அம்பேத்கரை ஏற்றுக்கொள்ளும் அனைத்துப்பிரிவு மக்களும் குறிப்பாக அவரைத் தம் வழிகாட்டியாகக் கொள்ளும் தலித் இயக்கங்களும் இந்து மதத்தை ஒழிப்பதற்கு அம்பேத்கர் முன்மொழிந்த செயல்திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதிலோ, அவற்றை நடைமுறைப்படுத்துவதிலோ உரிய அக்கறை காட்டுவதில்லை. அம்பேத்கரை நேசிக்கும் தலித் மக்கள், இந்து கடவுளர்களையும் நேசிக்கிறார்கள்; சடங்கு சம்பிரதாயங்களையும் பின்பற்றுகிறார்கள். இந்து வழிபாட்டை மறுக்க வேண்டும், இந்து அடையாளங்களைத் துறக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் வழிகாட்டுதல் மக்கள் மத்தியில், குறிப்பாக தலித் மக்கள் மத்தியில் தீவிரமாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். தலித் மக்களும், பிற ஒடுக்கப்பட்ட சாதி மக்களும் எழுந்து நின்று “நாங்கள் இந்துக்கள் அல்லர்” என்று ஒரே குரலில் முழங்கத் தொடங்கும்போதுதான் ஆர்.எஸ்.எஸ்.இன் இத்தகைய புரட்டு வேலைகள் நடைமுறையில் முறியடிக்கப்படும். – ஆனந்த் டெல்டும்டே

அக்டோபர்

பறையர்களின் ஜாதிவெறி

தலித்துகள் மீது பிற்படுத்தப்பட்ட மக்கள் வன்கொடுமைகளை இழைக்கும்போது, ‘பார்ப்பனர்களா நம்மைத் தாக்குகிறார்கள்? பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் நம் முதன்மை எதிரிகள்” என்று அடையாளம் காட்டுகிறார்கள். இன்றைக்கு அதே கோணத்தில் அருந்ததியர்கள், “எங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் பள்ளர்களும் பறையர்களுமே முதன்மை எதிரிகள்” என்று சொல்லும்போது மட்டும் அதை மறுத்து,’நமக்குள் ஏன் பாகுபாடுகள்; இதைக் கூர்மைப் படுத்த வேண்டாம்; ஒற்றுமையை வலியுறுத்துவோம்' என்று சொல்வது எந்த வகையில் சரி?

‘சாதி இந்துக்களை விசாரணைக்குள்ளாக்கும் தலித் தலைவர்களும், அறிவுஜீவிகளும் எங்கே போனார்கள்?” கேட்கிறார்கள் அருந்ததியர்கள். இது குறித்து கரடிச்சித்தூர் பறையர்கள், “எங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது” என்று கூறி பேச மறுத்து காத்த அமைதியும், தலித் தலைவர்கள், செயல் வீரர்கள் மற்றும் அறிவுஜீவிகள் காக்கும் அமைதியும் ஒன்றுதானா? – ஆசிரியர்

 ***

விலங்குகளாய் மனிதர்கள் மனிதர்களாய் பசுக்கள் அழகிய பெரியவன் பொது சிவில் சட்டம்: திரிபும் மறுப்பும் குடிஅரசு இஸ்ரேலியப் பிரதமர் செய்த படுகொலைகள் ஜான் செரியன் பறைத் தொழில் செய்வோம் ஆறுமுகம் பெண்கள் மீதான வன்முறை: தடுக்க புது முயற்சி ஓவியா

விவசாயிகள், தங்கள் நிலத்தில் உழைக்கும் உரிமையாளர்கள் கோர வேண்டும். மீனவர்கள் கடலின் மீதான உரிமையைப் பெற வேண்டும். மலையின மக்கள் காடுகளின் மீதான உரிமையைப் பெற வேண்டும். இதுதான் உண்மையான ஜனநாயக சித்தாந்தமாக இருக்க முடியும். – சி.கே. ஜானு : ‘சுய ஆட்சிக்கான உரிமை வேண்டும்'

தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம், தலித்துகள் படிக்கக்கூடாது என்ற கொடுமைகளுக்குப் பதில் சொல்லும் வகையில் அமைதியான புரட்சியை மிஷினரிகள் செய்தனர். தொடக்கூடாது என்று சொன்னவர்களையெல்லாம் தொட்டுப்பார்க்கக்கூடிய கம்பவுண்டர்களாகவும், நர்சுகளாகவும், டாக்டர்களாகவும் மிஷினரிகள் ஆக்கினார்கள்.

 – அய். இளங்கோவன் : ‘மிஷினரிகள் செய்த அமைதிப் புரட்சி'

நவம்பர்

தலித்து ஆதிக்கம்

ஒவ்வொரு தலித்தையும் ஓர் இந்து அல்லாதவனாக, ஒரு சாதியற்றவனாக, ஒரு சமத்துவ மனிதனாக மாற்றுவதே தலித் இயக்கங்களின் முதன்மையான பணியாகக் கொள்ள வேண்டிய தருணம் இது. பறையர்களுக்கு உள்ளிருக்கும் முரண்கள், சக்கிலியர், பள்ளர் ஆகியோருக்கு இருக்கும் முரண்கள் என்பதெல்லாம் இந்துத்துவத்தின் ஆழமான வேர்ப்பாய்ச்சலின் வெற்றி.

– அழகிய பெரியவன்

தலித்துகளின் வியர்வையைக் குடிக்கிறது

சென்னை புதுவை கிழக்குக் கடற்கரைச் சாலையின் ஈரக்காற்றில் பயணம் செய்வோரின் சுற்றுலாப் பார்வையில் வானத்து வெண்மேகங்களும், உப்பள மேடுகளும் புவிப்பரப்பின் நேர்க்கோட்டில் பக்கிங்காம் கால்வாயின் மீது பூத்துக் கிடக்கும் அதிசயத்தைக் காண முடியும். பக்கிங்காம் கால்வாயானது, ஆந்திர மாநிலத்தின ஓங்கூருக்கு அருகில் உள்ள பெத்தகஞ்சில் உற்பத்தியாகி, குளோரைடுகளின் நன்னீரைச் சுமந்து மரக்காணத்தில் வந்து முடிவடைகிறது என்கிற வரலாற்றைப் புவியியல் பாடத்தில் படித்திருக்கலாம். ஆனால் கோவளம், செய்யூர், சூணாம்பேடு, மரக்காணம், பரங்கிப் பேட்டை, கடலூர் எனப் பரந்து விரிந்து கிடக்கும் உப்பளங்களில் கை, கால்கள் உருக்கப்பட்டு, முதுகுகளால் வாழ்க்கை நடத்தும் அடித்தட்டு மக்களின் உப்பரித்த வரலாற்றை எந்தப் பாடத்திலும் உச்சரித்திருக்க முடியாது. நம்முடைய கல்வி முறை அப்படி. – அன்புசெல்வம்

தலித் மக்களின் மாற்று நவீனம்

தலித் விடுதலை என்பது ஒரு வாழ்க்கை முறை. மறுக்கப்பட்ட வாய்ப்புகளைப் பெற அன்றாடம் நடத்தப்படும் போராட்டங்களால் மேம்படும் தலித் மக்களின் வாழ்க்கை முறை அது. சமூக, அரசியல் தளங்களில் நடத்தப்படும் போராட்டங்கள் பொருளியல் தளங்களிலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு உரிமைப் போராட்டமும், தலித் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டை உறுதி செய்ய வேண்டும். அது ஒன்றே மாற்று நவீனத்திற்கான எதிர்காலத்தைப் பெற்றவர்களாக தலித் மக்களை உருவாக்கும் – யாக்கன்

டிசம்பர்

பொடா' : அதிகாரத்தின் ஆயுதம்

யார் மீது என்ன நோக்கத்திற்கு ‘பொடா' சட்டம் ஏவப்பட்டுள்ளது என்பதைக் காட்டிலும், ‘அடக்குமுறைச் சட்டமான ‘பொடா' நீக்கப்பட வேண்டும்; ’பொடா'வில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்' என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக எழ வேண்டும். இதுதான் அடக்குமுறையை ஏவி கிட்டத்தட்ட பாசிச அரசு போல் செயல்படும் அ.தி.மு.க. அரசுக்குப் பாடம் புகட்டுவதாக அமையும். இந்துத்துவ அரசியலை முன்னிறுத்தி ரத்தம் குடிக்கும் பா.ஜ.க. அரசுக்கு முடிவுகட்டுவதாகும். இதைவிடுத்து அமைதி காப்பது, அடக்குமுறைக்கு வலுசேர்ப்பதாகவே அமையும். – கோ. சுகுமாரன்

தெளியட்டும் திரையுலக போதை!

ஒடுக்குமுறையை செய்து கொண்டிருப்பவர்கள் ஒரு நாளும் வீரர்களாக மாறியதாக வரலாறு கிடையாது. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், எத்தனைப் படத்தில் இந்த நாட்டிலே இந்த அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவர்களை தலித் சகோதரர்களை – நீங்கள் கதாநாயகர்களாகக் காட்டியிருக்கிறீர்கள்? மாஞ்சோலையில் நான்கு ஆண்டுகள் போராட்டம் நடந்தது.

என்ன போராட்டம் என்பதையாவது கவனிப்பதற்கு உங்களுக்கு மனசாட்சி இருந்ததா? தாமிரபரணியில் போராடி 18 பேர் உயிர்த்தியாகம் செய்தார்களே, அவர்கள் எல்லாம் உங்களுக்கு கதாநாயகர்களாகத் தெரியவில்லையா? பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிடாதே, போட்டியிட்டால் நீ அந்த நாற்காலியில் அமர அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்தார்கள். அதையும் மீறி மேலவளவு முருகேசன் போட்டியிட்டார். வெற்றி பெற்றார். அவர் அந்த நாற்காலியில் அமர்வதற்கு முன்பு வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார்.

ஒடுக்குமுறையை ஆதரிப்பவர்களையும், கொடுமைக்காரர்களையும், காலங்காலமாக குற்றம் புரிபவர்களையும் அரிவாள் தூக்கி விட்டார்கள் என்ற காரணத்தினால் வீரன் என்று சொல்கிறீர்களே, இது எந்த விதத்தில் நியாயம்?

 – டாக்டர் கிருஷ்ணசாமி

நாம் எல்லோரையும் பொதுவுடைமைவாதிகளாக உருவாக்குவது, ஒரு சமூக மாற்றத்தை உருவாக்குவது என்றால், புத்தரை நாம் இன்னமும் நிறைய உள்வாங்கி வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. இப்போது எல்லாருமே அவரை கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிற மனிதனாகத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். – பொ. ரத்தினம் : ‘விடுதலை உணர்வாளர்கள் தியாகம் மட்டுமே செய்வார்கள்'

Pin It