பொதுவாக, தொழிலாளர்கள் உலகத்திலும், முதலாளிகள் உலகத்திலும் பொது நலத்தன்மை பற்றிய பொறுப்பு இல்லை. முதலாளி நினைப்பதென்ன? "சம்பளத்துக்குத் தானே தொழிலாளி வேலை செய்கிறான். அவன் எப்படி நடத்தப்படுவதும் சரிதான்' என்று நினைக்கிறான். அதுபோலவே தொழிலாளியும், "சும்மாவா கூலி கொடுக்கிறான் வேலை செய்கிறோம், கூலி கொடுக்கிறான், இவனென்ன பெரியவன்?' என்று முதலாளியைப் பற்றி நினைக்கிறான். இப்படி இரண்டுபேரும் ஒருவருக்கொருவர் இந்த மாதிரிக் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பதால் தொழிலின் மீது பொறுப்பு இல்லாதவர்களாகவும், தொழிலுக்கு நல்ல பலன் கிடைக்க முடியாதபடி செய்து விடுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

முதலாளி எந்நேரமும் எப்படி இந்தத் தொழிலாளர்களுக்கு குறைவாக சம்பளம் கொடுத்து அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பது என்று திட்டம் போட்டுக்கொண்டே இருக்கிறான். அதுபோலவே தொழிலாளியும். இவன் கொடுக்கிற சம்பளத்திற்கு இந்த வேலை போதும் என்று தன் வேலையைக் குறைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருக்கிறான். இப்படி ஒருவருக்கொருவர் ஏமாற்றிக் கொள்கின்றதனால் நமக்கு என்ன என்றால், பொதுநிலையில் எவ்வளவு கஷ்டம் ஏற்படுகிறது?

பொதுத்தன்மை கெட்டுப்போவது மட்டுமல்லாமல், முதலாளியும் தொழிலாளியும் கீரியும் பாம்பும்போல எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதால் உற்பத்திக் குறைச்சலும், விலைவாசி உயர்வும் ஏற்பட்டு மக்களை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன? முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இரு சாராருக்கும் பொறுப்பும் நாணயமும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நல்லெண்ணமும் நல்லுறவும் இல்லாத வாழ்வு பெருகுவது, பொதுநலத்திற்கும் ஒழுக்க வளர்ச்சிக்கும் கேடாகும். இருசாராருமே தாங்கள் பொதுமக்களின் தர்ம கர்த்தாக்கள் என்பதாகக் கருதுவதோடு, தங்கள் தொழிலின் காரியத்தைத் தங்கள் சொந்த காரியம் போல் பொறுப்புடன் கருதும்படியான நிலை ஏற்பட வேண்டும். அப்போதுதான் நாட்டில் செழிப்பும், மக்களுக்கு திருப்தியான வாழ்வும் ஒழுக்க உயர்வும் ஏற்பட முடியும்.

சாதாரணமாக, ரயிலைக் கவிழ்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ரயில் விழுவதால் யாருக்கு என்ன நஷ்டம்? ரயில்வே பெரிய உத்தியோகஸ்தர்களில் ஒரு பார்ப்பான் அதைப்பற்றிக் கவலைப்படுவானா அல்லது வடநாட்டு ஆட்சி கவலைப்படுமா? அவனுக்கென்ன? ரயில் விழுந்தால் நம்முடைய பணத்திலிருந்து வேறு ரயில் வரவழைத்துக் கொள்கிறான். அதில் தரகு பெறுகிறான். நஷ்டத்தைச் சரிக்கட்டிக் கொள்கிறான். நமக்கு அப்படியா? எவ்வளவு பொருள் நஷ்டம்! உயிர் நஷ்டம்! பார்ப்பனர்கள் நம் உயிரைப்பற்றிக் கவலைப்படுவார்களா? அவர்களுக்கென்ன கவலை? வேண்டுமானால் விழுந்து இறந்து கிடக்கிறவர்களில் எத்தனை பேர் திவசம் பண்ணுகிறவர்கள் என்று பார்ப்பான். வண்டி வண்டியாகப் பிணம் போனாலும் பார்ப்பானுக்குத் திவசம் பண்ணுவதிலே தானே கண்!

அதோடு மட்டுமல்ல, இவ்வளவு விஞ்ஞான காலத்திலே, நாகரிக காலத்திலே சோற்றுக்காக, கூலியை உயர்த்திக் கொள்வதற்காக ரயிலைக் கவிழ்ப்பதா? "இந்த டிபாõட்மெண்டிலே இந்த மேலதிகாரி உன்னை வேலை சரியாகச் செய்யவில்லை என்று கூறித் திட்டினானா? சரி, இன்றைக்கு ராத்திரி ஒருவருக்கும் தெரியாமல் போய், அந்த மிஷினை உடைத்துவிடு' என்று தொழிலாளியைத் தூண்டிவிடுவதா? இது பொறுப்புள்ள யோக்கியன் செயல் ஆகுமா? கொஞ்சமாவது நாட்டைப் பற்றியும், பண்டத்தைப்பற்றியும், மக்களைப் பற்றியும், தொழிலைப்பற்றியும், பொது நிலையைப் பற்றியும் கவலைப்பட வேண்டாமா? இன்று ஒரு தொழிற்சங்கத்திற்கும் இந்தக் கவலை இல்லையே!

சாதாரணமாக, நெருப்புப் பிடித்துக்கொண்டால், "நெருப்பு எவ்வளவு அழகாக எரிகிறது பார், பார்! அடுத்த வீட்டுக்குத் தாவுகிறது! இன்னும் பிடிக்கிறது! அடடா அதற்குள் அணைத்துவிட்டார்களே!' என்று சத்தமிட்டு, சிறு பையன்கள் நெருப்புப் பிடித்து எரிவதைப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டும், நெருப்பு பரவுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தும், நெருப்பு அணைக்கப் படுவதைப் பார்த்துத் துக்கப்படுவது போலவும் அல்லவா சில தொழிற்சங்கங்கள் நடந்து கொள்கின்றன. சிறு பையன்கள் போல், பொறுப்பற்ற முறையிலா இவர்கள் நடந்து கொள்வது?...

இந்த நாட்டுக்கு ஏற்ற மாதிரியில் இந்த நாட்டுத் தன்மைக்கு ஏற்ற மாதிரியில் தொழிலாளர் பிரச்சனைகளை அணுகவேண்டும். மற்ற நாடுகளில் நடந்ததுபோல் இங்கும் நடத்த வேண்டும் என்பதும், அந்த முறையிலேதான் போகவேண்டும் என்பதும் அவசியமற்றதாகும். மற்ற நாட்டிலே இருக்கிற நிலைமை வேறு; இந்த நாட்டு நிலைமை வேறு. அதாவது, இந்த நாட்டில் தொழிலாளிகள் என்பவர்கள் பிறவித் தொழிலாளிகள் ஆவார்கள். இப்படிப் பிறவித் தொழிலாளியாக்கி வைத்து, அவர்களைத் தலையெடுக்க வொட்டாமல், மாற்றமடையச் செய்யாமல் பார்த்துக் கொள்கிறவர்கள் மற்றொரு சாதியார். அந்தச் சாதிதான் இன்று ஆட்சியிலும் தொழிலாளர் தலைமையிலும் இருந்து வருகிறது. இன்று தொழிலாளர் 'நலமாக' இருவரின் 'சதிதான்' இருந்துவருகிறது. – தொடரும்

(பொன்மலையில் 10.9.1952 இல் ஆற்றிய உரை)

Pin It