எங்கள் நிலத்தில்
இது நடந்தது

ஒரு நாள்
அழுகுரல்களின்
இடி முழக்கம் கேட்டது

வெறிக்கூச்சல்கள்
மின்னல் வெட்டின

சதுக்கங்களிலும்
வீதிகளிலும் வீடுகளிலும்
தெருக்களிலும் வயல் வெளிகளிலும்
ரத்தச்சுனைகள்
திறந்தன

நிலமெங்கும்
நுரை பொங்க
ஓடியது
ரத்த ஆறு

அவர்கள்
நடுக்கமின்றி
ரத்தம் பார்க்க பழகிக் கொண்டார்கள்

பிறகு
ரத்தத்தை பார்த்துக் கொண்டே
தேநீர் பருகினார்கள்

ரத்தத்தை பார்த்துக் கொண்டே
குடித்தார்கள்
ரத்தத்தை பார்த்துக் கொண்டே
கதை பேசினார்கள்
ரத்த ஓடையருகில்
புணர்ந்தார்கள்
ரத்தத்தை மிதித்தபடி
அலுவல் பார்த்தார்கள்
ரத்தப் பெருக்கின் நடுவில்
நாற்காலி போட்டு அமர்ந்தார்கள்

பின்னர்
விருந்துக்கு தம்மை
அலங்கரித்துக் கொண்டு
உடன்பிறப்புகளே
ரத்தத்தின் ரத்தங்களே
இனமான சொந்தங்களே
என்றபடி

எங்கள் ரத்தத்தை
குடிக்கத் தொடங்கினார்கள்
நாங்கள் தீர்க்கமாய்
புரிந்து கொள்ளும்படி
மரணம்
வலியுடன்
சொன்னது –
நாங்கள் வேறு
அவர்கள் வேறு

எவன் அங்கே சொல்வது
எவள் அங்கே சொல்வது
நாமெல்லாம் தமிழர் என்று?

– அழகிய பெரியவன்

Pin It