கடந்த இதழில் வெளிவந்த இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் அவர்களின் பேட்டி இந்த இதழில் நிறைவடைகிறது

தலித் ஒற்றுமை பற்றி நீண்ட காலமாகப் பேசி வருகிறீர்கள். ஆனால், தலித் மக்களுக்கு கிடைக்கின்ற இடஒதுக்கீடு போன்றவற்றின் பலன்கள் இன்னும்கூட அருந்ததியர்களுக்குப் போய்ச் சேராமல் இருக்கிறது. இந்நிலையில், அம்மக்களுக்கான உள் இடஒதுக்கீட்டை ஏன் எதிர்க்கின்றீர்கள்?

se_ku_tamizharasan_500நான் இவர்கள் தருகின்ற இந்த வகையிலான உள் இடஒதுக்கீட்டு முறையை தொடக்கத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து வருகிறேன். இதனால் ஒரு பயனும் விளையப் போவதில்லை. நிர்வாக ரீதியாக இதைப் பேசுகிறபோதுதான் முழுமையாக விளங்கும். இருநூறு சதவிகித சுழற்சி முறையை (Rostar) வைத்தால்தான் இந்த உள் இடஒதுக்கீட்டையே கணக்கில் எடுக்க முடியும். அப்படிப் பார்த்தால், அருந்ததிய மக்களுக்கு வழங்கப்படுகிற உள் இடஒதுக்கீடு எத்தனையாவது இடத்தில் வரும்? இரண்டாவது இடத்திலிருந்தே சுழற்சி முறையை தொடங்கினாலும்கூட, அடுத்தடுத்து வருவது நாற்பதாவது, எண்பதாவது, தொண்ணூறாவது இடங்களுக்குதான் போகும். இவ்வளவு எண்ணிக்கை வேறுபாட்டில் ஏன் வர வேண்டும்? இன்னும்கூட முன்பாகவே வரலாமே!

எளிமையாகப் பார்க்கலாம். மருத்துவத் துறையில் எம்.டி., எம்.எஸ். போன்ற படிப்புகளுக்கு 5 இடங்களுக்கு மேல் இருந்தால்தான் இடஒதுக்கீடே கடைப்பிடிக்கப்படுகிறது. எவ்வளவுதான் சிறந்த திட்டங்களை அரசுகள் கொண்டு வந்தாலும்கூட, அவற்றை நடைமுறைப்படுத்துவது ஆதிக்க சக்திகள்தான். அவர்கள் இந்த எம்.டி., எம்.எஸ். படிப்புகளில் 5 இடங்கள் வராத மாதிரியே பார்த்துக் கொள்வார்கள். அப்படியே தவறி வந்துவிட்டாலும், அந்த அய்ந்து இடங்களில் தலித் மக்களுக்கு கிடைக்கிற ஓரிடத்தில் உள் இடஒதுக்கீடு என்றால், அந்த உள் ஒதுக்கீடு எந்த காலத்தில் வரும்? அதை எப்படி நடைமுறைப்படுத்த முடியும்?

சென்னையிலிருந்து திருச்சி வரையிலும் ஒரு குறிப்பிட்ட தலித் சமூகம் பெருமளவில் இருக்கிறது. நாமக்கல், கோவை, ஈரோடு முதல் சேலம் வரை ஒரு குறிப்பிட்ட தலித் சமூகம் பெருமளவில் இருக்கிறது. மதுரையிலிருந்து சில பகுதிகள் வரை ஒரு குறிப்பிட்ட சமூகம் பெருமளவில் இருக்கிறது. அப்படியெனில், அந்தப் பகுதிகளில் உள் ஒதுக்கீட்டை ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங்குவோம் என்றால், எப்படி சரியாக இருக்கும்?

இப்படி வழங்கினால், பூகோள ரீதியாகவே சிக்கல் வந்துவிடும். அதனால்தான் கிறித்துவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளாமல் திரும்ப அளித்தனர். கிறித்துவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் திருநெல்வேலி, கன்னியாகுமரியில் போய் அவர்களுக்கு மூன்று சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கினால், எப்படி சரியாக இருக்கும்? இதனால் குழப்பமே மிஞ்சும். நிர்வாக ரீதியாகவும், அலுவல் ரீதியாகவும் புரிந்து கொண்டே உள் ஒதுக்கீட்டைப் பற்றி பேச வேண்டும். அருந்ததிய மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அழுத்தப்பட்டிருக்கிறார்கள், கடைசிப் படிக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், அவர்களை உயர்த்துவதாக சொல்லப்படும் உள் ஒதுக்கீட்டு வழிமுறைகள் உண்மையான வழிமுறைகள் அல்ல. இத்தகைய உள் இடஒதுக்கீடுகள் காலப்போக்கில் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டையே பலவீனப்படுத்தும். கொள்கையிலும், இயக்கத்திலும்கூட பாதிப்புகளை உண்டாக்கும்.

மாற்று வழிகளாகப் பலவும் உள்ளன. அதைப் பற்றி ஆராயலாம். ஒரு சிறப்பு ஆணையை அருந்ததிய மக்களுக்காகப் போடலாம். சிறப்பு திட்டங்களைக் கொண்டு வரலாம். அருந்ததியர் மேம்பாட்டு வாரியத்தை அமைத்து செயல்பட வைக்கலாம். அந்த வாரியத்துக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கலாம். அந்தந்த பகுதிகளில் இடஒதுக்கீட்டை கண்காணிக்க சிறப்பு குழுக்களை அமைக்கலாம். இந்த உள் இடஒதுக்கீட்டினால் பயனடைந்தவர்கள் பற்றிய ஒரு பட்டியலை யும், ஏற்கனவே உள்ள முறையால் பயனடைந்தவர்களுடைய பட்டியலையும் ஓர் அறிக்கையாக தரச் சொல்லி ஆராய்ந்து பாருங்கள். இதன் உண்மை புரியும். 

பஞ்சமி நில மீட்பு, தலித் மக்களுக்கான நிதியை வேறு திட்டங்களுக்கு திருப்பி விடுதல், இன்னமும் நிரப்பப்படாத தலித் மக்களின் பணியிடங்கள், தலித் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பான திட்டம் எதுவும் இல்லாமை என்று இன்னும் நிலைமை அப்படியேதான் இருக்கிறது. இந்த அரசில் இவற்றில் எதைப் பெற்றுத் தருவதற்கு நீங்கள் முதலிடம் அளிப்பீர்கள்?

இங்கிலாந்திலுள்ள நாடாளுமன்ற மரபுகளையே நமது நாட்டிலும் பின்பற்றி வருகிறோம். அதன்படி, நூறு நாட்களுக்கு ஒரு புது அரசை விமர்சிக்கக் கூடாது என்று ஒரு மரபு இருக்கிறது. அதற்குப் பிறகு நாம் நிச்சயமாக ஓர் அரசை விமர்சிக்கலாம், கேள்விகள் கேட்கலாம்.

சிறப்பு உட்கூறு திட்டத்தை பற்றி நீங்கள் குறிப்பாகக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இத்திட்டம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது. இது அற்புதமான திட்டம்; வரவேற்புக்குரிய திட்டம். ஆனால், இதுவரையிலும் இந்தியாவில் இருக்கும் எந்த ஒரு மாநிலமும் இதை முழுமையாக அமல்படுத்தியதே இல்லை. இங்கே, யார் ஓரளவு செய்திருக்கிறார்கள் என் பதுதான் பேச்சே தவிர, யார் முழுவதுமாக செய்திருக்கிறார்கள் என்பதல்ல. ஏனென்றால், நிலைமை அப்படி ஆகிவிட்டிருக்கிறது!

ஓரளவு நிறைவேற்றிய மாநிலங்கள் என்று பார்த்தால் மகாராட்டிரம், உத்திரப்பிரதேசம் (மாயõவதி வந்த பிறகு), மத்தியப் பிரதேசம் ஆகியவையே. இது முழுமையாக அமல்படுத்தப்படாமல் போனதற்கு மத்திய அரசே காரணம். யார் இதை அறிமுகப்படுத்தினார்களோ, அவர்களே இதை முழுமையாக அமல்படுத்துவதில் நாட்டம் செலுத்துவதில்லை. தேசிய அளவில் ஒரு கண்காணிப்பு குழு இல்லை. பிரதமரை தலைவராகக் கொண்டு ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டுமென்று சட்ட விதி இருக்கிறது. ஆனால், இதுவரை அப்படி ஒரு குழு அமைக் கப்படவில்லை. எனவே, இதற்கு பிரதமரும், மத்திய அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தமது பணப்புழக்கத்தில் இரண்டு சதவிகிதத்தை நலிந்த மக்களுக்காக செலவிட வேண்டும் என விதி இருக்கிறது. பொருளாதார மேம்பாட்டுக்கு உதவி செய்ய வேண்டும். 25 சதவிகித மக்களுக்கு வெறும் இரண்டு சதவிகிதம் செலவு செய்ய வேண்டும். ஆனால், இந்த 2 சதவிகிதத்தைகூட அவ்வங்கிகள் செலவிடுவதில்லை. பெரும் பணக்காரர்களுக்கு இந்த வங்கிகள் கோடி கோடியாக அள்ளிக் கொடுத்து, திரும்ப வராத கடன்களை கணக்கெடுத்துப் பார்த்தால், நலிந்த பிரிவினருக்கு செய்ய வேண்டிய 2 சதவிகித பணப்புழக்கத்தை அது மிஞ்சும்.

சிறப்பு உட்கூறு திட்டத்தில் இதுவும் ஒரு அம்சம். இதை எந்த வங்கிகளும் நடைமுறைப்படுத்துவதில்லை. மத்திய அரசும் கேட்பதில்லை. தொடக்கக் காலத்தில் சில வங்கிகள் பெட்டிக் கடை, இட்லி கடை போன்ற சிறு தொழில்களுக்கு கடனுதவி வழங்கி வந்தன. இன்று அவை சுத்தமாகவே நிறுத்தப்பட்டு விட்டன. தனியார் வங்கிகள் இன்று மேலோங்கி விட்டன. 30 சதவிகித மக்கள் ஏழைகளாக உள்ள நம் நாட்டில், இப்படி தனியார் வங்கிகள் பெருகுவது என்பது வளர்ச்சிக்கு உகந்ததல்ல. இது, சமத்துவப் பொருளாதார நிலையை ஒருநாளும் கொண்டு வராது. மாநில அரசுகளும் சிறப்பு உட்கூறு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். சென்ற ஆட்சியில் நான் இதை வலியுறுத்தினேன். இப்போதும் வலியுறுத்துவேன்.

பஞ்சமி நில மீட்பு பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்கள். இந்த அரசு நில அபகரிப்பு வழக்குகளை அதிகமாக தற்போது எடுத்து வருகிறது. பஞ்சமி நில அபகரிப்பு வழக்குகளையும் அது எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாமா? வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமா? இதில் குடியரசுக் கட்சியின் நிலைப்பாடு என்ன?

இதற்கு நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும், ஆளும் அரசின் தோழமை கட்சித் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தே பதில் சொல்ல வேண்டும். ஒரு சமூகவியலாளராக எனக்கு இதற்கான பதிலை சொல்ல வேண்டிய பொறுப்புமிருக்கிறது. பல நூறு ஆண்டுகளாக தலித் மக்கள் மீது வன்கொடுமைகள் தொடர்ந்து வருகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். பகுத்தறிவு மற்றும் இன்னபிற சித்தாந்தம் பேசுகிறவர்கள்கூட, வாயளவில்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய, இன்னும் மனதளவில் சாதி உணர்வை வெளியேற்றி விடவில்லை. இதை அனுபவப்பூர்வமாகவே நாம் உணர்ந்திருக்கிறோம். எனவே, சமூகத் தளத்தில் நீடித்திருக்கும் இச்சிக்கல்களை அரசின் கவனத்துக்கு கொண்டு போகிறபோது, அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதே இங்கு முக்கியம். அரசின் தலைவர் எப்படி இதைப் பார்க்கிறார் என்பதே முக்கியம். வன் கொடுமைகளை இன்றைய முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு போனால், உறுதியாக நடவடிக்கை எடுப்பார் என்பது உண்மை. அது எனக்கு உறுதியாகத் தெரியும்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் சுரேஷ் ராஜன் என்ற ஓர் அமைச்சர், ஜனார்த்தனன் என்ற வருவாய்த் துறை அலுவலரை ஒரு விழா மேடையிலேயே சாதி பெயரைச் சொல்லி திட்டினார் என்று புகார் பதிவாகியுள்ளது. அந்த அமைச்சர் மீது முதல் தகவல் அறிக்கையே பதிவாகியுள்ளது. இந்த வழக்கு யாரோ ஒரு வெகுசன மனிதர் மீது போடப்பட்டதல்ல. சட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பில் இருந்த ஓர் அமைச்சர் மீது போடப்பட்டது. எனவேதான் இதை உதாரணமாக சொல்கிறேன். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால், எப்படி காவல் துறையும் வழக்கும் செயல்பட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் நடந்தது என்ன? முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனின் பெயர் அந்த முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டது. புகார் அளித்த ஜனார்தனமும் ஓய்வு பெற்றுவிட்டார். இவை தவிர ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தி.மு.க. அரசு இப்படி பலதை செய்திருக்கிறது.

ஆனால், இன்று இப்படி ஒரு செயல் நடைபெற்று, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுமென்றால் நடவடிக்கை மிக உறுதியாக இருக்கும். ஒருவேளை அப்படி நடந்திருந்தால், அடுத்த நாள் அந்த அமைச்சர் தனது பதவியை இழந்திருப்பார். நான் என் அனுபவத்திலேயே இதுபோன்ற உறுதியான பல நடவடிக்கைகளைப் பார்த்திருக்கிறேன்.

பஞ்சமி நில மீட்பு பற்றி...?

பஞ்சமி நில மீட்பு என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் உள்ள தலித் கட்சிகளின் பொது கோரிக்கைகளுள் ஒன்று. பஞ்சமி நில மீட்பு ஆணையம் ஒன்று வேண்டும் என்பது நமது நீண்டநாள் கோரிக்கை.

1996 இல் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் பஞ்சமி நில மீட்பு ஆணையத்தை கொண்டு வருவதாகச் சொன்னது. ஆனால், அது அப்படி ஓர் ஆணையத்தை கொண்டு வரவேயில்லை. கடந்த முறை தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, அது தனது இறுதிக் காலத்தில், ஆட்சி முடிய இரண்டு மாதங்கள் இருந்தபோது பஞ்சமி நிலங்களை அடையாளப்படுத்தும் ஆணையம் போன்ற ஓர் அமைப்பை அவசரமாக உருவாக்கியது. இது ஒரு ஏமாற்று வேலைதான். நீதிபதி மருதமுத்து தலைமையில், இரு உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது அந்த ஆணையம். அதில் ஒரு உறுப்பினர் கருப்பன், இன்னொரு உறுப்பினர் மணிவண்ணன். இருவரும் ஓய்வு பெற்றவர்கள். இக்குழு போடப்பட்ட ஒன்றரை மாதத்திலேயே குழுவின் தலைவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இப்போது அந்த ஆணையம் இருக்கிறதா? அது தொடரப் போகிறதா? என்பதே கேள்விக்குறி.

1994 – 1995இல் வருவாய்த் துறை அமைச்சராக எஸ்.டி. சோமசுந்தரம் இருந்தபோது நான் பஞ்சமி நில மீட்பு ஆணையம் கொண்டு வரவேண்டும் என்று வலுவாகப் பேசினேன். இதைக் கொண்டு வருவதில் அரசுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல் வருகிறது என்றார் அவர்.

தேசிய நிலப்பதிவு சட்டம் என்று ஒன்று இருக்கிறது. இதன்படி ஒரு நிலத்தின் பதிவு ஏழுமுறை மாறி மாறிப் போயிருந்தால், அந்த நிலத்தின் மூலத்தன்மை போய்விடுகிறது. நிலத்தை வாங்கிய ஏழாவது ஆள், உண்மைத் தன்மையை அறியாமல் நான் வாங்கிவிட்டேன், எனவே குற்றாவாளி நான் இல்லை; எனக்கு முன்பு வாங்கிய ஆறு பேர்தான் என்றால் சட்டம் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்பதே அந்த நிலப் பதிவு சட்டத்தின் தனித்தன்மை. நிலத்தை வாங்கும் ஒருவரால் தனக்கு முந்தைய உரிமையாளர்களின் பெயரில் இருந்த அத்தனை தாய் பத்திரங்களையும் நிச்சயம் பார்க்க முடியாது. அதுவும் பஞ்சமி நிலங்களுக்குரிய 1892 லிருந்து இன்று வரையிலான பத்திரப் பதிவு ஆவணங்களை ஒருசேரப் பார்ப்பது என்பது மிகக் கடினம். இதுதான் எதார்த்தத்தில் பஞ்சமி நில மீட்புக்கு தடையாக இருக்கிறது.

நான் அப்போதைய விவாதத்தில் சொன்னேன். ஒரு பொருள் எத்தனை முறை எத்தனை பேரால் திருடப்பட்டிருந்தாலும், திருட்டு திருட்டுதான். சமூகச் சூழலால் விழைந்த தவறுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். பறி கொடுத்தவர்கள் நாங்கள். மீட்டுத் தர வேண்டியது அரசு. எனவே, அரசுதான் இச்சிக்கலைத் தீர்க்க ஒரு வழி காண வேண்டும் என்று சொன்னேன். அப்போது எஸ்.டி.எஸ். அவர்களே பதிவுத் துறைக்கும் அமைச்சராக இருந்தார். அவருக்கு பஞ்சமி நில மீட்பில் ஆர்வம் இருந்தாலும் சட்டச் சிக்கல் இருக்கிறதே என்பதில் தயக்கம் இருந்தது. இ ந்த செய்திகளெல்லாம் பஞ்சமி நில மீட்பு குறித்த நமது அரங்குகளில் பேசப்படாத செய்திகள்.

அதற்கு பிறகுதான் எஸ்.டி.எஸ். அவர்களால் முன்மொழியப்பட்டு ஒரு திட்டம் உருவானது. ஒரு தலித் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கினால் பாதித் தொகையை அரசு மானியமாகத் தர வேண்டும் என்று. இத்திட்டத்தை 2002இல் இன்றைய முதல்வர் ஆட்சிக்கு வந்தபோது நடைமுறைக்குக் கொண்டு வந்தார்கள். அடுத்த ஆட்சியில் போதிய நிதி எதையும் ஒதுக்காமல் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலே ஓரளவிற்கு பஞ்சமி நிலச் சிக்கலுக்கு மாற்றாக பலன் கிடைக்கும். இப்போது மீண்டும் அம்மையார் முதல்வராகியுள்ளார். எனவே, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தச் சொல்லி நான் சட்டமன்றத்தில் கோரிக்கை வைப்பேன். மேலும், பஞ்சமி நில மீட்பு கோரிக்கையும் தொடரும்.

இந்த அய்ந்து ஆண்டுகளுக்கான உங்களின் தனி செயல்திட்டம் ஏதாவது உள்ளதா?

இதுவரை நாம் பேசியது அனைத்துமே செயல்திட்டங்கள்தான்! 234 பேர் கொண்ட அவையில் நான் ஒருவன் மட்டும்தான். ஒருவனாக இருந்தாலும் பலகாலமாக பாதிக்கப்பட்ட வெகுமக்களுக்கான கொள்கை அடிப்படையிலானதோர் பிரதிநிதி. அவர்களின் நலனுக்கும், உரிமைக்கும், வளத்திற்கும் எவ்வளவு அழுத்தமான நலத்திட்டங்களைப் பெற முடியுமோ அவற்றையெல்லாம் அந்தந்த சந்தர்ப்பங்களில் கேட்டுப் பெறுவேன். இதுதான் எனது செயல்திட்டம்.

அம்பேத்கருக்குப் பிறகு, இந்திய அளவில் ஒரு தலித் தலைமை இல்லை. சந்தர்ப்பவாத அடிப்படையில் எல்லா தலித் கட்சிகளும் சிதறி சிதைந்து கிடக்கின்றன. இது, அம்பேத்கரியத்தின் தேக்கமா?

இதற்கு ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியாது. பல கூறுகள் விடையாக இருக்க முடியும். பாபாசாகேப் அம்பேத்கரின் காலம் வேறு. அடிமை இந்தியாவும், சுதந்திர இந்தியாவும் சந்தித்துக் கொண்ட காலம் அது. அவர் அந்த காலத்தின் கொடை. அவர் அந்தச் சூழலில் உருவானார், படித்தார், வெற்றி கண்டார். அவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், தலித் மக்களுக்கு இந்த அளவிற்குக்கூட உரிமைகளும், பாதுகாப்பும் கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறிதான். அவரால் கிடைத்த உரிமைகளையே நம்மால் பாதுகாக்க முடியவில்லை. அந்த நிலையில் நாம் இன்று இருக்கிறோம். அவற்றை மேம்படுத்துவது என்பது இரண்டாவது நிலை. சொல்லப்போனால், அவர் உருவாக்கித் தந்த உரிமைகளையே நாம் இழந்து கொண்டிருக்கிறோம். அவற்றை மேம்படுத்தவில்லை. இரண்டாவது படிக்கு போகவேயில்லை. முதல்படியே பழுதாகிக் கிடக்கிறது.

இது வேறு கால கட்டம். அவர் இருந்த காலத்திலேயே அவரின் தலைமையை உடைக்க காங்கிரஸ் சதி செய்தது. பாபு ஜெகஜீவன் ராமை கொண்டு வந்தது. தற்காலிக அமைச்சரவையில், தலித் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதிகள் வேண்டும் என அம்பேத்கர் வலியுறுத்திக் கொண்டிருந்தபோதே, ஜெகஜீவன்ராமை காங்கிரஸ் நியமித்துவிட்டது அல்லவா? அந்தச் சூழல் அவர் உறுதியை குலைத்தது அல்லவா? பூனா ஒப்பந்தம்கூட அப்படித்தானே. ஆனால், அந்த சரிவையும்கூட தமது மக்களின் நலனுக்காகவே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

தலித் சமூகம் பெரும் அரசியல் சக்தியாக ஒன்றிணையாதபடி இங்கே பிரித்தாளும் போக்கு காலந்தோறும் நடக்கிறது. நிலப்பிரப்புத்துவ சமூகத்தில் இருந்த இம்மாதிரியான போக்குகள் முதலாளிய சமூகத்திலும் தொடர்கின்றன. இக்காரணத்தால்தான் ஒரு பெரும் தலைவர் தலித்துகளுக்கு என உருவாகவில்லை. இவர்கள் உருவாக விடவில்லை எனலாம். ஆனால், அம்பேத்கரின் கொள்கைகளை யும், கோட்பாடுகளையும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. இந்தியா முழுவதும் அவருக்கு எண்ணற்ற சிலைகள் இருக்கின்றன. அவர் பெயரை தாங்கிய குடியிருப்புகளும், ஊர்களும் உள்ளன. எங்கெல்லாம் தலித்துகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் பாபாசாகேப் அவர்களின் பெயரால் கபாடி குழு, சிலம்பாட்டக் குழு, மல்யுத்தக் குழு, உடற்பயிற்சிக் கூடங்கள், கேரம் குழு என இருக்கின்றன. இது, இந்தியாவில் வேறு எந்த தலைவர்களுக்கும் இல்லாத சிறப்பு. ஆனால், அம்பேத்கரின் பெயரால் ஒரே குடையின் கீழ் தலித் மக்களைத் திரட்டும் தலைவர்களோ, அதற்கான சமூகச் சூழலோ இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த நிலை வருத்தத்துக்குரியது. காலத்தின் கட்டாயம் இருந்தால் ஒருவேளை இம்மக்களை ஒற்றுமைப்படுத்துகிற காலம் இந்தியாவில் வரலாம். அப்போது இம்மக்களுக்கு முழு விடுதலை வரலாம்.

கலை இலக்கியத் தளங்களில் ஏன் தலித் அமைப்புகள் அக்கறை காட்டுவதில்லை? யார் யாருக்கோ விருதுகளைக் கொடுத்து கொண்டாடுகின்ற தலித் அமைப்புகள், தலித் சமூகத்தின் விடுதலைக்காக எழுதுகிறவர்களை ஏன் கண்டுகொள்வதில்லை?

தலித் சமூகம் கலை இலக்கியங்களோடு மிகவும் தொடர்புடையது. உலக அளவில்கூட கருப்பர்களே இத்துறைகளில் கோலோச்சுகின்றனர். உழைக்கும் மக்களின் இயல்பான வெளிப்பாட்டு வடிவங்கள்தான் விளையாட்டு, இசை, கலை வடிவங்கள். இதை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாது. மேல்தட்டு மக்கள் உருவாக்கும் கலை இலக்கிய வடிவங்கள் ரசிப்பதற்காகவும், அவர்கள் நினைக் கின்ற ஒன்றை உருவாக்குவதற்காகவும் வடிவெடுப்பவை. நான் எப்போதுமே நமது விடுதலைக்கு பாடுபடும் கலை வடிவங்களை யும், கலைஞர்களையும் ஆதரித்தே வந்திருக்கிறேன். நமது பாரம்பரிய இசை வடிவமான பறையிசையை ஏன் நாம் அய்.நா. அவையில் வாசிக்கக் கூடாது? ஏன் நாதஸ்வரத்தையும் இன்ன பிற கருவிகளையும் மட்டுமே அங்கு கொண்டு போய் வாசிக்க வேண்டும் என்று ஒருமுறை நான் கேட்டேன். நான் முரண்பட்ட கருத்து சொன்னதாக சில மூத்த தலித் தலைவர்கள் இதற்காக கோபித்துக் கொண்டனர். 1986இல் சட்டமன்றத்திலேயே இதைப் பேசினேன். தலைவர் இளையபெருமாள், டாக்டர் சேப்பன் போன்றோரெல்லாம் என்னை கண்டித்தனர்.

பாவாணர்கூட சொல்வார், பறையிசைதான் உலகின் முதல் சேர்ந்திசை என்று. பறையிசையின் கருவிகளைக் கொண்டு தனி வாசிப்பு செய்ய முடியாது. கூட்டிசைதான் சிறப்பாக இருக்கும். இதற்கு எழுதப்படாத இசைக்குறிப்புதான் உள்ளது. இக்குறிப்பு அக்கலைஞனின் மூளையில் உள்ளது. சேர்ந்திசையை உருவாக்கிய தலித் சமூகம் பண்பாடு மிக்க சமூகமாக ஆதியிலேயே இருந்திருக்க வேண்டும். பாபாசாகேப் சொன்னதுபோல, இம்மக்கள் கையாள்வதாலேயே இக்கலை இலக்கிய வடிவங்கள் இழிவாகப் பிறரால் கருதப்படுகின்றன. ஆனால், இக்கலைகள் பொது தளத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்காக நாங்கள் குரல் கொடுப்போம். தமது உழைப்பில் இச்சமூகத்திலிருந்து உயர்ந்திருக்கிற இசைக் கலைஞர்களையும், விளையாட்டு வீரர்களையும், உங்களைப் போன்ற எழுத்தாளர்களையும் நாங்கள் பாராட்டுவோம். 

சந்திப்பு : அழகிய பெரியவன், ஜோதிபாசு, சுபாகரன்

Pin It