போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்த – ஆக்கப் பூர்வமான முறையில் தலையிட்டோ, சமநிலையில் கையாளவோ, அடைந்துவிட்ட பலன்களை முன்னிறுத்தவோ பன்னாட்டுச் செயல்பாட்டாளர்கள் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமான சண்டைநிறுத்தம் அறிவித்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 22, 2002 அன்று, இலங்கை அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் நிரந்தரப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. நார்வே சமாதானக் குழுவினர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். நிதியுதவி வழங்கி வந்த நாடுகளான அய்ரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான், நார்வே ஆகியவற்றின் இணைத் தலைமைகள் – நார்வேக்கு பக்கத் துணையாக சமாதான நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டன.

da_33"இலங்கையில் நிலவும் சிக்கலுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு தீர்வை அடைவதே'' ஒட்டுமொத்த நோக்கமாக இருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நோக்கம் – “பேச்சுவார்த்தைகளை நோக்கி முன்னேறவும், ஒரு நீடித்த தீர்வை எட்டவும், ஒரு நேர்மறையான சூழலை உருவாக்குவதே'' ஆகும். போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களை கண்காணிக்க "இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு' என்ற சுதந்திரமான குழு உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க் மற்றும் அய்ஸ்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். போரினால் கடுமையான பாதிப்புக்குள்ளான இலங்கை மக்கள் – தமிழர்களும் சரி, சிங்களர்களும் சரி – போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாகவே இருந்தனர். அவர்களைப் போலவே இலங்கையின் வணிக சமூகமும் அவர்களின் வெளிநாட்டு கூட்டாளிகளும் கூட இதனை வரவேற்றனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு சில உடனடி பலன்கள் கிடைத்தன. ஒப்பந்தத்தினால் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஆறு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருவர் மீது ஒருவர் கொண்ட நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது. அனைத்து சமூகத்தினரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டவர்களாக வாழவும், இனங்களுக்கு இடையே உறவை தொடங்கவும் புதிய அரசியல் சமூக வெளிகள் திறந்து விடப்பட்டன. யாழ்ப்பாண தீபகற்பத்திற்கான ஒரே தரை வழிப் பாதையான ஏ–9 பாதையை திறப்பதன் மூலம் வடக்கையும் தெற்கையும் மீண்டும் இணைக்க ஒப்பந்தம் உதவியது.

போர் நிறுத்தத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை கடந்து, அதன் பலன்கள் குறைந்த காலமே நிலைத்தன. போர் நிறுத்த ஒப்பந்தம் சிறிது சிறிதாக செயலற்றுப் போனது. ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஒரு கணிசமான வெற்றியை ஈட்டியிருந்த போதும், ஒட்டுமொத்த முக்கியத்துவம் தேயத் தொடங்கியது. 2005இன் பிற்பகுதியில் ஆங்காங்கே தொடங்கிய மோதல்கள் சூலை 2006க்குப் பிறகு பெரிதாயின. கடும் ராணுவ நடவடிக்கைகளின் மூலம் இலங்கை அரசு விடுதலைப் புலிகளை, கிழக்கு மாகாணத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற்றியது. பின்னர் அது தனது நடவடிக்கைகளை வடக்கு நோக்கி நகர்த்தியது.

ஒப்பந்தம் கையெழுத்தாகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு, 2007இல் பெரும் உயிர்ச் சேதங்கள், மனித உரிமை மீறல்கள், பெருமளவிலான இடப்பெயர்வுகள் என அந்தச் சூழல் – அறிவிக் கப்படாத போர் என்றே வர்ணிக்கப்பட்டது. கிழக்குப் பகுதியில் தங்கள் தாக்குதல்களை முடித்த பிறகு “கெரில்லா படைகள் நிர்வகிக்கும் பகுதிகளை'' மீட்க, வடக்குப் பகுதியை நோக்கி தனது படைகள் நகரும் என இலங்கை அரசு அறிவித்தது. சனவரி 2, 2009 அன்று போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தான் விலகிக் கொள்வதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இரண்டு தரப்பினரும்ஒப்பந்தத்தை மீறியதாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர். இதனால் ஒருவர் மீது ஒருவர் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் சூழல் வலுவற்றுப் போனது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தோல்விக்குப் பல காரணங்கள் உள்ளன. தொடர்ந்து போர் நிறுத்தத்தை மீறியதாக விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டிய அதே வேளையில், நம்பிக்கையை குலைக்கும் வகையில் இலங்கை அரசும் அதன் படைகளும் நடந்து கொண்டதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சமாதானத்தின் பங்கை அளிக்காமல் தட்டிக் கழிப்பதாகவும் இலங்கை அரசை விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டினர். கூடுதலாக, எதிர் தரப்பின் முக்கிய தனி நபர்களை குறி வைத்துக் கொன்றதாக – இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

போரினால் சிதைக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்புப் பணிகளையும் மறுகட்டமைப்புப் பணிகளையும் தொடங்குவதற்கு இலங்கை அரசு தாமதப்படுத்தியதும் மக்களின் சமூக, பொருளாதார நலன்களைப் பேணத் தவறியதும் நம்பிக்கையை மேலும் குலைக்க உதவியது. முக்கியமாக, இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட "சுனாமி'க்குப் பிறகு, தமிழர்கள் தாங்கள் ஒதுக்கப்பட்டதாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும், பாகுபடுத்தப்பட்ட தாகவும் உணர்ந்தனர். அதனால் மேலும் அவநம்பிக்கையே ஏற்பட்டது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்து, அவர்களின் வாழ்நிலையை மேம்படுத்தக் கூடிய எந்த நேர்மறையான முன்னேற்றத்தையும் தடுக்க, தீவிர சிங்கள தேசியவாதிகள் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்திலிருந்தே அவர்கள் அதனை எதிர்த்து வந்திருக்கின்றனர். அன்றிலிருந்து அதை முறிக்கவும் வலுவற்றதாக ஆக்கவும் தங்களால் ஆன அனைத்தையும் செய்து வந்திருக்கின்றனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்த ஆக்கப் பூர்வமான முறையில் தலையிட்டோ, சமநிலையில் கையாளவோ, அடைந்துவிட்ட பலன்களை முன்னிறுத்தவோ பன்னாட்டுச் செயல்பாட்டாளர்கள் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவும் பிரிட்டிசாரும் பிறரும் சொல்லாலும் செயலாலும் வன்முறையை

முற்றிலுமாக கைவிடவேண்டும் என விடுதலைப் புலிகளை தொடர்ந்து வற்புறுத்தியதன் மூலம் அவர்களை வலுவிழக்கச் செய்யவும், சமாதானத்தின் பால் அவர்கள் கொண்ட அர்ப்பணிப்பை தகர்க்கவும் முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். போர் தொடங்கும் முன்பே அய்ரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்தது பெரும் தவறாகப் பார்க்கப்படுகிறது. அந்தச் செயலானது சமாதான நடவடிக்கைகள் தொடர்வதற்கு தேவையான விடுதலைப் புலிகளின் சமநிலையைக் குறைத்தது.

மேலும், வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் அவர்கள் இணைக்கப்படாததன் காரணமாக, புலிகள் நேரடியான பேச்சுவார்த்தைகளிலிருந்து விலக நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, அரசாங்க கருவூலத்தைத் தவிர வேறு எந்த ஒருங்கிணைந்த நிதியத்திற்கும் பணம் அனுப்ப முடியாது என வலியுறுத்தியதன் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளில், புனரமைப்பு மற்றும் மறு கட்ட மைப்புப் பணிகளை இணைத்து மேற்கொள்ள, ஒருங்கிணைந்த முறையாக உருவாக்கப்பட்ட "சுனாமிக்குப் பிறகான நடவடிக்கைகள் – மேலாண்மை' கட்டமைப்பை அமெரிக்கா வலுவிழக்கச் செய்தது. இலங்கை அரசு இலங்கையில் விடுதலைப் புலிகளை தடை செய்யாத நிலையில், அய்ரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங் கரவாத இயக்கங்கள் பட்டியலில் இணைத்ததன் மூலம் 2006இல் மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த 6 ஆண்டு காலம் முழுவதும் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட சுதந்திரமான, சார்பற்ற அமைப்பான போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, ஒப்பந்தத்தை மீறியதாக இரண்டு தரப்பினரையும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. சனவரி 2008இல் இலங்கை அரசு தன்னிச்சையாக ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டதன் காரணமாக, தனது நடவடிக்கைகளை அது நிறுத்திக் கொள்ளும் வரையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு, சிக்கல் நிலவிய பகுதிகளில் தனது கண்காணிப்பைத் தொடர்ந்தது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் இருந்தன. ஒன்று, போர் நிறுத்த ஒப்பந் தத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் துணை நிற்பது. இரண்டாவதாக, ஒப்பந்த மீறல்களை கண்காணித்து, அதனை விசாரித்து அறிக்கை அளிப்பது. போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு பிறகான காலத்தில், “குறிப்பிடத்தகுந்த மற்றும் கவனிக்கத்தக்க வகையில் வன்முறை குறைந்திருந்தது'' என போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு குறிப்பிடுகிறது.

சில சிறிய பின்னடைவுகளை தவிர்த்தும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தொடக்க காலத்தில் மோதல்கள் குறைந்ததும், நேரடி பேச்சுவார்த்தைகளில் முக்கிய முடிவுகள், முன்னேற்றங்கள் கண்டதுமாக போர் நிறுத்த ஒப்பந்தம் முன்னேற்றப் பாதையிலேயே சென்றது. இருப்பினும், இந்த வெற்றியானது இரு தரப்பினரின் வலு சம நிலையைப் பொருத்திருந்தது. அது தகர்க்கப்பட்ட போது, அதிலும் குறிப்பாக வாஷிங்டனில் நடந்தவற்றிற்குப் பிறகு, போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதில் பின்னடைவு ஏற்படத் தொடங்கியது. அதன் விளைவாக, புதிய மோதல்கள் நிகழந்தன. அவை வளர்ந்து ஒரு முழு போராக மாறியது. இலங்கையை மீண்டும் ஒரு கொலைக் களமாக மாற்றி விட்டது.
Pin It