இறுதியில், நம்முடைய நண்பர்களின் மவுனம்தான் நம் நினைவுகளில் நிலைத்து நிற்கப் போகிறது; எதிரிகளின் வசைபாடல்கள் அல்ல''

-மார்ட்டின் லூதர் கிங்

முள்ளிவாய்க்காலில் போர் முடிந்து விட்டதாக சிங்கள அரசு அறிவித்து, ஒன்பது மாதங்கள் உருண்டோடி விட்டன. “சூலை 2006 இல் போர் தொடங்கிய நாள் முதல் ஏப்ரல் 2009 வரை, அய்க்கிய நாடுகள் அவையின் உள் ஆவணங்களின்படி – வான்வழித் தாக்குதல் மற்றும் கன ரக ஆயுதங்களின் பயன்பாடு காரணமாக, ஒரு நாளைக்கு 116 பேர் (1,20,060 பேர்) கொல்லப்பட்டதாக'' இலங்கையில் அமைதிக்கான அய்ரிஷ் கருத்து மன்றம் தெரிவித்துள்ளது. இப்போரில் கொல்லப்பட்ட குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் ஒன்றுமறியாத தமிழ்க் குடிமக்கள் எல்லாம் பயங்கரவாதிகளா? இந்த அட்டூழியங்களுக்கு எதிராக, இன்றுவரை என்ன செய்துவிட்டது தாய்த் தமிழ்நாடு?

உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்திலிருந்து இன்றுவரை, ஒருவர் மீது மற்றவர் உமிழும் அரசியல் வசைமொழிகள்தான் நம் செவிகளை அடைக்கின்றன. இங்குள்ள ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களால் – ஈழத்தமிழர்களுக்கு சாப்பாட்டுப் பொட்டலங்களையும், அரைகுறை தீர்மானங்களையும்தான் (அதையும் மிகத்தாமதமாகவே) வழங்க முடியும். இத்தகைய நிவாரணங்களுக்காகவும், வெற்றுத் தீர்மானங்களுக்காகவுமா அவர்கள் போராடுகிறார்கள்? அவர்களுடைய போராட்டம் விடுதலைக்கானது. ஆனால், அம்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் நிரந்தரத் தீர்வுக்காகவும் குரல் கொடுக்க, இங்குள்ள எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை. இவர்கள் கேவலம், மாநில சுயாட்சிக்கே அரை நூற்றாண்டாக மன்றாடிக் கொண்டிருப்பவர்கள்.

இருப்பினும், இங்குள்ள போராட்டக் குழுக்கள் மீண்டும் மீண்டும் – அரசியல் கட்சிகளால்தான் எதையும் சாதிக்க முடியும் என்ற மூடநம்பிக்கையிலேயே – அவர்களை ஆதரிப்பதிலும் எதிர்ப்பதிலும் பிளவுண்டு காலத்தை வீணடிக்கின்றனர். "தமிழ் ஈழம் மலர்வதை கருணாநிதிதான் முடக்கிவிட்டார்' என்ற குற்றச்சாட்டின் உள்ளீடாக, "அவரால்தான் அது சாத்தியப்படும்' என்ற பிழையான பொருளே மேலோங்கி நிற்கிறது. இத்தகு அரசியல் மாயைகளைக் கடந்து பணியாற்ற, இங்கு வெகு சிலரே எஞ்சியிருக்கின்றனர்.

மய்ய நீரோட்டத்திற்கு ஆட்படாத - கட்சி சாராத இயக்கங்கள் / இடதுசாரிகள் / அறிவுஜீவிகள் / செயல்வீரர்கள் / எழுத்தாளர்கள் / இலக்கியவாதிகள் ஆகியோர், மயிர் பிளக்கும் விவாதங்களே, இனப்படுகொலைகளுக்கு எதிர்வினையாற்றும் என்று நம்புகின்றனர். ஒன்றுபட்ட இலங்கையா X தனிநாடா; தமிழ்த் தேசியம் சாத்தியமா X இல்லையா; விடுதலைப் புலிகளை ஆதரிப்பதா X எதிர்ப்பதா... ஆபாச, வணிக இதழ்களின் பரபரப்பு கட்டுக்கதைகளுக்கும், "இயங்'களின் மீதான இவர்களின் சண்டைகளுக்கும் நூல் அளவு இடைவெளிதான். அவன் மலிவான செய்திகளை வியாபாரமாக்குகிறான்; இவர்கள் தங்கள் விருப்பங்களை நூல்களாக்குகிறார்கள்! தடுக்கி விழுந்தால் உண்மை அறியும் குழுவை உருவாக்குகின்றவர்கள், உலக மனித உரிமைகளை எல்லாம் தன் காலடியில் போட்டு நசுக்கியவனை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் – "இந்து ராம்'களாக செயல்பட கிஞ்சித்தும் வெட்கப்படவில்லை.

இன்றளவும் முள்வேலிகளில் அடைபட்டுக் கிடக்கும் பாதிக்கும் மேற்பட்டோர் மீள வழி என்ன? முள்வேலி முகாம்களிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டவர்கள், தங்களின் சொந்த மண்ணில் சிங்களர்கள் குடியேற்றப்பட்டுள்ள அந்நியச் சூழலில் – மீண்டும் அகதி வாழ்விலும், இடப்பெயர்வுகளாலும் சிக்கித் தவிப்பதிலிருந்து மீள வாய்ப்பிருக்கிறதா? 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உயிர்களை எப்படிக் காப்பாற்றுவது? அதிலும் குறிப்பாகப் பெண்கள் சந்திக்கும் விவரிக்கவொண்ணா பாலியல் கொடூரங்களிலிருந்து விடுவிக்க யார் இருக்கிறார்கள்? கொல்லப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி என்ன?

தீர்வுகளைச் சொல்லாமல், பிரச்சினையை மட்டும் எந்நேரமும் பேசிக் கொண்டிருப்பதில், எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. "நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற செயல்திட்டம் குறித்து, குறைந்தபட்ச பரப்புரைகூட இங்கு மேற்கொள்ளப்படவில்லை. முன்வைக்கப்படும் தீர்வுகளில் எல்லாம் குறை காண்பவர்களிடம் குறிப்பாக, தமிழகத் தலைவர்களிடமும் அறிவுஜீவிகளிடமும் வேறு என்ன தீர்வுதான் இருக்கிறது? "தமிழீழம்தான் தீர்வு' என்றோ, "அரசியல் வழிதான் தீர்வு' என்றோ, ஒற்றை வரியில் சொல்லிவிட்டு வாய்மூடி இருந்துவிட முடியாது. நடைமுறைச் சாத்தியங்களுடன் கூடிய செயல்திட்டங்களே உடனடித் தேவை.

இந்நிலையில்தான் ஈழத்தமிழர்களின் இன்னல்களைக் களையும் ஒரு முன்முயற்சியாக, "இலங்கை மீதான நிரந்தர மக்கள் தீர்ப்பாய'த்தின் டப்ளின் அறிக்கையை, தீவிர பரப்புரைக்காக முன்வைக்கிறோம். ஈழத்தமிழர்களின் விடுதலைக்கானப் போராட்டத்தில் ஓர் ஒளிக்கீற்றாக இவ்வறிக்கை திகழ்கிறது. முதன் முறையாக ஓர் உலகளாவிய அமைப்பு, இனப்படுகொலை மீதான ஒரு பொது விசாரணையை நடத்தி, ஆய்வு செய்து, வெளிப்படையாகவும் தீர்க்கமாகவும் – இலங்கை அரசின் போர்க்குற்றங்களை நிரூபித்திருக்கிறது. அவ்வரசின் மீது அதிகாரம் செலுத்தும் ஒரு தீர்ப்பாயமாக இது இல்லாமல் போகலாம். ஆனால், இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை, உலக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான முதல்படி இது. அந்நாட்டின் மீது பன்னாட்டுச் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க இதனால் வாய்ப்பு ஏற்படும்.

அதன் மூலம் இது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அல்ல; விடுதலையை நேசிக்கும் மக்கள் இனத்தை கொன்றொழித்த போர் என்ற உண்மை உலகத்திற்கு உறைக்கும். இதன் விளைவாக, பன்னாட்டு ஒப்பந்தங்களில் இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளபடி – தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை சாத்தியமாகும். உலக அரங்கில் உண்மைகளை உரக்கச் சொல்வதற்கான தருணமிது. அநீதிக்கு எதிராக செயல்பட, எந்த வியாக்கியானங்களும் குறுக்கே நிற்கத் தேவையில்லை. இனப்படுகொலைக்கு எதிர்வினையாற்றும் செயல்திட்டங்கள் மட்டுமே அணிவகுக்க வேண்டும். ஏனெனில், முள்ளிவாய்க்காலில் போர் முடிந்துவிடவில்லை!

"தலித் முரசு' ஈழச்சிக்கலில் முனைப்போடு களமாற்ற வேண்டிய தேவை என்ன? என்றொரு விமர்சனம், கடந்த சில ஆண்டுகளாகவே எழுந்துள்ளது.

"சாதியமும் இனவெறியே' என்பதை உலக அரங்கில் நிலைநிறுத்த, "தீண்டத்தகாத தேசம்' என்றொரு ஆவணப்படத்தை, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டர்பன் மாநாட்டில் "தலித் முரசு' வெளியிட்டது (31.8.2001); ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நாடான சூடானில் உள்ள டர்பர் மாநிலத்தில், பழங்குடி கறுப்பின மக்கள் இனவெறியால் கொல்லப்படுவது குறித்த அட்டைப்படக் கட்டுரையை "தலித் முரசு' (நவம்பர் 2004) வெளியிட்டது; சாதி என்ற இனவெறிக்கு தீர்வைச் சொல்லும் டாக்டர் அம்பேத்கரின் "சாதியை ஒழிக்கும் வழி என்ன?' என்ற அரிய நூலை தீவிர பரப்புரைக்காக (அக்டோபர் 2007) வெளியிட்டோம்; குஜராத் இனப்படுகொலையில் ஈடுபட்ட கொலையாளிகளின் வாக்குமூலங்களை தனி நூலாகவே வெளியிட்டோம் (சனவரி 2008); அதே போல, இனவெறிக்கு ஆட்படாமல் தடுக்க, மதவெறிக்கு எதிராக ஒரு சிறப்பிதழையே வெளியிட்டிருக்கிறோம் (செப்டம்பர் 2008).

அதன் தொடர்ச்சியாகவே, ஈழத்தின் வரலாற்றில், ஏன் உலக வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இனப்படுகொலையை – அம்பலப்படுத்தியும், உலக நாடுகளின் மவுனத்தைக் கண்டித்தும் வெளிவந்திருக்கும் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிடுவதற்கு – தலித் முரசின் ஓர் இதழையே அர்ப்பணித்திருக்கிறோம். உலகில் இனப்படுகொலை எங்கு நிகழ்ந்தாலும், அதற்கு எதிர்வினையாற்றுவதில் "தலித் முரசு' அக்கறையுடன் செயல்பட்டு வந்திருக்கிறது.

சுயமரியாதைக்காகவும், மனித மாண்பை மீட்டெடுப்பதற்காகவும் போராடும் தீண்டத்தகாத மக்கள், அந்த ஒரு காரணத்திற்காகவே நூற்றாண்டுகளாக இனப்படுகொலையை நாள்தோறும் சந்திக்கின்றனர். மேலும், ஈழ விடுதலைக்கான போராட்டத்தில் தலித்துகளின் பங்கு அளப்பரியது. அதே நேரத்தில், போரிலும் கடும் பாதிப்பை சந்திப்பவர்களாக தலித்துகள்தான் இருக்கின்றனர். அந்த வகையில் மட்டுமின்றி, நீதி மற்றும் மனிதநேய அடிப்படையிலும் இனப்படுகொலைக்கு எதிரான நம் செயல்பாட்டை, பிறவி முட்டாளைத் தவிர, யார் குற்றம் கண்டுவிட முடியும்?.
Pin It