கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், சிபி.எம்.எல் (மக்கள் விடுதலை) கூட்டறிக்கை:

மீண்டும் காஷ்மீர் பற்றி எரிய தொடங்கிவிட்டது. அந்த பனிப் பிரதேசத்திற்குள் கனன்று கொண்டிருக்கும் எரிமலையை இந்திய அரசால் எந்த கானல் நீரைக் கொண்டும் அணைக்க முடியவில்லை.2008, 2009, 2010 ஐ தொடர்ந்து 2016 இல் மீண்டும் கல்லெறிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் காஷ்மீரத்து மக்கள்.

கடந்த ஜூலை 8 ஆம் தேதியன்று, அனந்தநாக் மாவட்டத்தில், ஹிஜ்புல் முஹாஜீதின் இளம் தளபதி புர்ஹான் வானி (வயது 22), "மோதல்" என்ற பெயரில் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன்தான் புர்ஹான் வானி. ’பயங்கரவாதி’ என்று இந்திய அரசு சித்தரிக்க முயலும் அந்த போராளி இளைஞரின் இறுதி ஊர்வலத்திற்கு 3 இலட்சம் காஷ்மீரிகள் திரண்டு நின்றனர். அப்படி திரண்டவர்கள் மீதுதான் காஷ்மீர் காவல் துறையும், இந்திய இராணுவமும், தாக்குதல் நடத்தியுள்ளன.

காவல் துறையும், மத்திய ரிசர்வ் காவல் துறையும் அசையும் மற்றும் அசையாத சொத்துக்களைச் சேதப்படுத்தி வருகின்றனர். காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது ஆனால் பல்வேறு இடங்களில் மக்கள் அதை மீறிய வண்ணம் இருக்கின்றனர். துக்கம் அனுசரிப்பவர்கள் மீதும் போராட்டக்காரர்கள் மீதும் இந்திய ராணுவம் தற்போது மீண்டுமொரு முறை கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறையால் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் மடிந்து வருகின்றனர். கொல்வதற்கு, காயப்படுத்துவதற்கு, சித்திரவதை செய்வதற்கு,  சொத்துக்களை சேதப்படுத்துவதற்கு காவல்துறைக்கும் இராணுவத்துக்கும் முழு சுதந்திரம் இருப்பதாகவே தெரிகிறது. இதுவரை 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமுற்றோர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்.

அதில் தீவிர காயமுற்றோர் 200 பேர். இரப்பர் குண்டுகளால் தாக்கப்பட்டு காயமுற்ற 30க்கும் மேற்பட்டோர் கண் பார்வை இழந்துள்ளனர். மருத்துவமனைகளுக்குள்ளும் ஆம்புலன்சுகளுக்குள்ளும் இருந்த நோயாளிகள் மீதும் அவர்கள் உடன் இருந்தவர்கள் மீதும் ரிசர்வ் போலீஸ் படையும் காவல் துறையும் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. காஷ்மீரில் இருந்து வரும் தகவல்களின் படி இஸ்லாமாபாத் மாவட்ட மருத்துவமனை இலால்போரா ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எஸ்.எம்.ஹெச்.எஸ். மருத்துவமனை ஆகியவற்றின் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இப்படி மருத்துவமனைகளைத் தாக்குவது சர்வதேச விதி மீறலாகும்.

இதை கடந்த காலங்களிலும் காஷ்மீர் மக்கள் மீது இந்திய இராணுவம் செய்துள்ளது. அதனால் கண்டிக்கப்பட்டுள்ளது. விடுதலைக்காகப் போராடுபவர்களைப் ’பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்துவதும் அவர்களை நசுக்குவதற்கு ‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்ற இராணுவ சித்தாந்தத்தைப் பயன்படுத்துவதும் இப்போதும் தொடர்கிறது.

இன்றிலிருந்து 85 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 13 ஆம் நாள் காஷ்மீரிகள் டோக்ரா மன்னனுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த போது அம்மன்னனின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு 24 பேர் பலியானார்கள். அந்த வரலாறு மீண்டும் திரும்புகிறது. அவர்களின் விடுதலை தாகம் அடங்கவில்லை. ஆயுத போராட்டத்தைப் பார்த்திராத ஒரு புதிய தலைமுறை கற்களை ஆயுதமாக்கி துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்கின்றது. தம்மில் யாருடைய உயிரும் போகலாம் என்று தெரிந்தாலும் அவர்கள் இந்திய இராணுவத்தை எதிர்கொள்கிறார்கள். வழக்கமான பாணியில், பாகிஸ்தானில் இருந்து கற்கள் வருகின்றன என்று பிரச்சாரம் செய்ய முடியாமல் ஊடகங்கள் திணறுகின்றன.

மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறது காஷ்மீரிகளின் ‘இண்டிஃபிடா’. தென்னாப்பிரிக்காவின் எந்த இரயிலில் பயணிக்கும் போது விடுதலை உணர்வு பெற்றார் காந்தி என்று அறியப்படுகிறதோ அந்த இரயிலில் இன்றைய பிரதமர் மோடி பயணிக்கும் போதுதான் இந்திய இராணுவம் விடுதலைக்காகப் போராடும் மக்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று கொண்டிருந்தது. ஆப்பிரிக்காவில் இருந்து தில்லிக்கு வந்தப் பிரதமர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திவிட்டு காஷ்மீர் மக்களை அமைதி காக்கும்படி வேண்டுகிறார்.

எந்தப் பெரிய போராட்டப் பிரளயத்திற்குப் பின்னும் இந்திய அரசு போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தைக்குப் போனதில்லை. உறுதியளிப்பதும் பிற்போடுவதும் அதன் வழக்கமான மெத்தனம். ‘காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’, ’இது ஓர்உள்நாட்டுப் பிரச்சினை’ என்பதை இந்திய ஆளும் வர்க்க கட்சிகள், ஊடங்கங்கள் மட்டுமின்றி வட அமெரிக்கா, ஐ.நா. சபை என எல்லோரும் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், காஷ்மீரிகள் ஓய்ந்துவிடவும் இல்லை, ஓயப் போவதுமில்லை. தமிழீழ விடுதலைப் போரின் போது இலங்கையும், இந்தியாவும் உலக அரசுகளும் எப்படி நடந்து கொண்டன என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர். எனவே, இந்திய அரசு மற்றும் அதன் ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களை எம் மக்களால் புரிந்து கொள்ள முடியும். காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதென்பது நியாய உணர்ச்சி கொண்ட தமிழ் மக்கள் அனைவரின் கடமையாகும். தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் கொல்லப்படுவதற்கு முன்னான புகைப்படம் உலகத்தமிழர்களை கண்ணீரில் ஆழ்த்திய போது நம்மோடு தம்மை இணைத்து கொண்டவர்கள் காஷ்மீர் மக்கள் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் பெயரால் இந்திய ஆளும்வர்க்கம் காஷ்மீரிகளை நசுக்கிக் கொண்டிருப்பதைநாம் வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய அரசே! காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து!சிறப்பு ஆயுதப்படை சட்டங்களைத் (AFSPA) திரும்பப் பெறு! போலி மோதல் நாடக கொலைகளில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கு!

• காணாமல் போனவர்கள் குறித்த முறையான விசாரணை நடத்தி அந்த குடும்பங்களுக்கான நீதியையும் நிவாரணத்தையும் வழங்கு! - இந்திய இராணுவமே காஷ்மீரில் இருந்து வெளியேறு! காஷ்மீர் இணைப்பு உடன்படிக்கையின் போது ஐ.நா.விடம் ஒப்புக் கொண்டதற்கிணங்க காஷ்மீர் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு கண்டிடு!

“வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?” காஷ்மீரிகளுக்கும் சரி ஈழத் தமிழர்களுக்கும் சரி விடுதலையினை விரும்பும் எந்த ஒரு தேசிய மக்களினத்திற்கும் இது பொருந்தும் என்பதை நம்மை அடக்கி ஆள விரும்புபவர்களுக்கு நாங்கள் நினைவு கூற விரும்புகிறோம் என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் கு. இராமகிருஷ்ணன், தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), பெ.மணியரசன் (தமிழ்த் தேசியப் பேரியக்கம்), தி. செந்தில்குமார் (இளந்தமிழகம் இயக்கம்), பாலன் (சிபி.எம்.எல். மக்கள் விடுதலை) ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.