அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாநிலத்தில், யூனியன் கார்பைட் நிறுவனத்தால் நிறுவப்பட்ட பூச்சிக்கொல்லி உற்பத்தித் தொழிற்சாலை, தற்பொழுது "டோ' கெமிக்கல் நிறுவனத்தின் உடைமையில் உள்ளது. அந்தத் தொழிற்சாலை குறித்து 1986 அக்டோபரில் "பப்ளிக் சிடிசன்' என்னும் ஏட்டில், மார்க் டி. க்ராஸ்மன் என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்த தகவல்கள் :

bhopal_blind_340அந்தத் தொழிற்சாலையில் வாயுக் கசிவு ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, யூனியன் கார்பைட் நிறுவனத்திற்குச் சொந்தமான டிரக் வண்டி, ஒவ்வொரு நாளும் தொழிற்சாலையைச் சுற்றி நான்கு முறை ரோந்து வரும். அந்த வண்டியிலுள்ள தொழிலாளர்களின் வேலை, வழக்கத்திற்கு மாறான மணம் காற்றில் வருகிறதா என்பதை முகந்தறிதல்தான். ஒவ்வொரு ரோந்தின் போதும் அவர்கள் பத்து முறை மேலும் விரிவான ஆய்வுகளைச் செய்கிறார்கள். அதாவது, வண்டியை நிறுத்திவிட்டு, ஆழமாக மூச்சு இழுக்கிறார்கள். மனிதர்களைக் காட்டிலும் அதிக நுண்ணுணர்வுடன், நுட்பமாக வாயுக் கசிவுகளைக் கண்டறியும் கருவிகளை, அறிவியல் கருவிகள் செய்யும் தொழிற்கூடங்கள் தயாரிக்கின்றன. ஆனால், யூனியன் கார்பைட் நிறுவனமோ, தொழிலாளிகளையே மோப்ப நாய்களாக்கி விடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சுரங்கத் தொழிலாளிகள், சுரங்கங்களில் நச்சு வாயு இருக்கிறதா என்பதைக் கண் டறிய, கூண்டுகளில் அடைக்கப்பட்ட குருவி களுடன் குழிக்குள் இறங்குவார்கள். குருவி கள் இறந்தால், அங்கு நச்சு வாயு இருக்கிறது என்பது தெரிந்துவிடும். இன்றோ நவீனத் தொழிற்சாலைகளுக்கு மனிதக் குருவிகள் தேவைப்படுகின்றன!

போபால் பேரழிவுக்கு இரண்டாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது அக்கட்டுரை. தொழிலாளர்களின் உடல் நலம் குறித்த பிரச்சனையில், மூலதனம், அவர்களது தோல் வெள்ளையா, கறுப்பா என்று பார்ப்பதில்லை. அதைப் பொருத்தவரை, எல்லா தொழிலாளிகளும் மனிதக் குருவிகள்தான் என்று கூறுவதுதான் அக்கட்டுரையின் நோக்கம். ஆனால், அந்தக் கட்டுரையாளருக்குத் தெரிந்திராத பல விஷயங்கள் உள்ளன.

1. தொழிற்சாலைக்கு வெளியே, பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வாழ்கிற ஒன்றுமறியாத பொதுமக்களில் ஆயிரக்கணக்கானோரைச் சாகடித்து, இன்னும் பல தலைமுறைகளை சேர்ந்தவர்களைப் பல்லாயிரக்கணக்கில் ஊனப்படுத்தி, நிலத்தடி நீரை நச்சுப்படுத்தி, சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேடு ஏற்படுத்திய யூனியன் கார்பைட் நிறுவனமோ, அதன் இந்தியத் துணை நிறுவனமான யூனியன் கார்பைட் இந்தியா லிமிடட்டோ, 1984 டிசம்பர் 2–3 ஆம் நாள் நள்ளிரவில் போபால் தொழிற்சாலையிலிருந்த கசிந்த வாயுவின் தன்மையை இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளவில்லை.

2. குறைந்தபட்சம் அந்த நச்சு வாயுக்கான முறிவு மருந்து "சோடியம் தியோசல்பேட்' என்னும் தகவலையாவது இந்திய நிறுவனமோ, அமெரிக்கத் "தந்தை' நிறுவனமோ உடனடியாகத் தெரிவித்திருந்தால், பல்லாயிரக்கணக்கான மக்கள் உடனடிச் சாவிலிருந்தோ, கடும் நோய்க்கு ஆளாவதிலிருந்தோ தடுக்கப்பட்டிருப்பர். இந்த உண்மைகள், இந்தியப் பெருமக்களிலும் கூட ஒரு சிலருக்கு தெரியும்.

கடந்த 63 ஆண்டுகளாக, இந்திய அரசாங்கம், காஷ்மீரில், வடகிழக்கு மாநிலங்களில் தத்தம் தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து வருவதோ, போபால் பேரழிவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு – 1984 அக்டோபர் 31 – நவம்பர் 4 இல் – டெல்லியிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் காங்கிரஸ் மதச்சார்பற்ற பாசிசவாதிகள், சீக்கியர்களை இனக்கொலை செய்ததோ ("ரத்தத்திற்கு ரத்தம்' – அதாவது ஒரு இந்திரா காந்திக்கு ஈடு பல்லாயிரம் ஒன்றுமறியாத சீக்கியர்கள்), என்றோ கொலை செய்யப்பட்ட ராஜிவ் காந்தியின் "ஆன்மா சாந்தியடைவதற்காக' கடந்த ஆண்டுகளில் சிங்களப் பேரினவாதிகளால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இனக்கொலை செய்வதை காங்கிரஸ் பாசிசம் ஊக்குவித்ததோ, ராஜிவ் – நரசிம்ம ராவ் "உபயத்தின்' காரணமாக 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து, மும்பையின் இந்துத்துவ பாசிசவாதிகளால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இனக்கொலை செய்யப்படுவதை மகாராட்டிர காங்கிரஸ் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததோ, 2002 இல் குஜராத்தில் முஸ்லிம்கள் இனக்கொலை செய்யப்படுவதற்கு நரேந்திர மோடி தலைமை தாங்கியதோ – பழம் பெரும் இந்து ஆன்மீக மரபுக்குரிய இந்தியப் பெருமக்களின் உள்ளத்தைக் குத்தியதில்லை. இந்த இனக்கொலைகளை, குறிப்பாக தொழிலுற்பத்தி சார்ந்த போபால் இனக்கொலையைக் கண்டனம் செய்து, இந்தியத் தொழில் வர்த்தக சங்கங்கள் ஏதும் இதுவரை மென்மையான கண்டனமோ, அந்தத் துயரத்திற்கு வருத்தமோ கூட தெரிவிக்கவில்லை.

பார்ப்பன – பனியா தேசியம், தனது வர்க்க நலன்களில் எச்சரிக்கையாக இருப்பதுடன், இந்துக்களின் உரிமைகளை மட்டுமே தேசியமாகவும், மதச் சிறுபான்மையினரின், தேசிய இனச் சிறுபான்மையினரின், பழங்குடி மக்களின், தலித்துகளின் விடுதலை வேட்கைகளை "தேச விரோதமாக'வும் கருதுகிறது. ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன், ஹரியானாவில், செத்துப்போன பசு மாட்டின் தோலை அறுத்ததற்காக, ஆறு தலித்துகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். மிக அண்மையில் அதே மாநிலத்தில், உடல் ஊனமுற்ற  ஒரு தலித் பெண்ணும் அவரது தந்தையும் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். ஆனால், இந்து உள்ளங்களை இவை ஒருபோதும் உறுத்தாது. அந்த மாநிலத்தின் "மதச்சார்பற்ற' காங்கிரஸ் முதலமைச்சர் ஹோடா, கலப்புத் திருமணத்தால் சமுதாயத்தில் கொந்தளிப்புகள் ஏற்படுகின்றன என்பதால், இந்து தொகுப்புச் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டு வரவேண்டும் எனக் கூறுகிறார். "மதச்சார்பற்ற' காங்கிரஸ் பாசிசவாதிகளும் இந்துத்துவ பாசிசவாதிகளும் வரையறுப்பது மட்டுமே "தேசியம்', "தேசபக்தி.'

இருபத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, போபால் முதன்மைக் குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அநீதியைக் "கண்டனம்' செய்யும் இந்துத்துவவாதிகள், இரண்டாண்டுத் தண்டனை வழங்கப்பட்ட சில மணி நேரத்தில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஏழு பேர்களில் ஒருவரும், போபால் பேரழிவின் போது யூனியன் கார்பைட் இந்தியா நிறுவனத்தின் செயல் தலைவராக இருந்தவரும், தற்பொழுது இந்தியாவின் மிகப்பெரும் மோட்டார் வாகனத் தொழில் உடைமையாளருமான (மஹிந்திரா அண்ட் மஹிந்திரா) கேஸுப் மகேந்திராவுக்கு பத்ம பூஷண் விருது வழங்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டது – பாஜக மத்திய அரசாங்கத்தில் இருந்த 2002ஆம் ஆண்டில்தான் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான தேசபக்தி இருக்குமானால், அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மோட்டார் வாகனங்களை இந்திய மக்கள் யாரும் வாங்கக்கூடாது என்னும் இயக்கத்தையாவது நடத்த வேண்டும்.

முற்றிலும் அரசியல் லாபத்திற்காக மட்டுமே இன்று இந்துத்துவ சக்திகள், வாரன் ஆண்டெர்சன் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையைக் குறி வைத்துத் தாக்குகின்றன என்றாலும், காங்கிரஸ் மதச்சார்பற்ற பாசிசத்தின் ஏகாதிபத்தியச் சார்பை நாம் மறந்துவிடக்கூடாது. இந்திரா காந்தி அறிவித்த உள்நாட்டு நெருக்கடி நிலையின் முப்பத்தி ஆறாவது ஆண்டு நிறைவு நாள் இந்த சூன் 26ஆம் நாள் வருவதால், அவருக்கும் அவரது வாரிசுகளுக்கும் – போபால் பேரழிவிற்கும் உள்ள தொடர்புகளை நினைவுகூர்வது அவசியம்.

1. அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட யூனியன் கார்பைட் என்னும் பன்னாட்டு நிறுவனம், "மெதில் அய்ஸோசைனேட்' வாயுவை அடிப்படையாகக் கொண்ட பூச்சிக்கொல்லி மருந்தை (செவின்) உற்பத்தி செய்வதற்கான தொழில் உரிமம் வழங்குமாறு 1970 இல் மத்திய அரசாங்கத்தின் தொழில் வளர்ச்சி அமைச்சகத்திடம் (தற்பொழுது அது தொழில் அமைச்சகம்) விண்ணப்பித்திருந்தது. ஆனால், அய்ந்து ஆண்டுக்காலம் அந்த விண்ணப்பத்தின் மீது மத்திய அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதற்கான தக்க காரணங்கள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், போபாலில் பயன்படுத்தப்படப் போகும் தொழில்நுட்பம் பாதுகாப்பானது  என்று பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை என்று 1973 ஆம் ஆண்டில், வாரன் ஆண்டர்சனே கூறியிருந்தார்.

2. ஆனால், இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்த அய்ந்து மாதங்களுக்குப் பிறகு (31, அக்டோபர் 1975) போபாலில் அந்த நச்சு வாயுப் பூச்சிக் கொல்லியை உற்பத்தி செய்வதற்கான தொழில் உரிமம், யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சரியாக ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு (31 அக்டோபர் 1984) இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ("தெய்வம் நின்று கொல்லுமோ?). எனினும், அதற்கான காரணம் வேறு. 1970களில் மத்திய அரசாங்கத்தின் தொழில் வளர்ச்சி அமைச்சகத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்த ஆர்.கே. ஸாஹி என்பவர் (அவர் திட்டக்குழுவின் முன்னாள் துணை ஆலோசகராகவும் இருந்தார்), மேற்சொன்ன உரிமம் வழங்குவதை தொழில் வளர்ச்சி அமைச்சகம் முழுவதுமே எதிர்க்கிறது என்று கூறினார். அமெரிக்காவிலுள்ள யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தொழிற்சாலைகளிலிருந்து பழைய எந்திரங்களும் கால வழக்கொழிந்த தொழில்நுட்பமும் கொண்டு வரப்படுகின்றன என்பதை அந்த அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நன்கு அறிந்திருந்தனர். ஆயினும் விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டு, போபால் தொழிற்சாலைக்கான உரிமம் வழங்கப்பட்டது. 

3. 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் நாள் "அய்ஸோசைனேட்' உற்பத்தி தொடங்கியது என்னும் தகவலை, 1980 பிப்ரவரி 19 ஆம் நாள் மத்திய அரசாங்கத்தின் ரசாயனம், உரங்கள் அமைச்சகத்திற்குத் தெரிவித்த அந்த நிறுவனம், மத்திய தொழில் வளர்ச்சி அமைச்சகத்திற்கு 1982 நவம்பர் 12ஆம் நாளில் தான் அந்தத் தகவலைத் தெரிவித்தது. அதாவது, அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தின் காலம் 1982ஆம் ஆண்டு இறுதியுடன் முடிவடைவதால், அதனைப் புதுப்பிக்குமாறு மேற்சொன்ன அமைச்சகத்திற்கு விண்ணப்பம் அனுப்பியது. போபால் முதன்மைக் குற்றவியல் நீதிபதி மோகன் டி. திவாரியின் தீர்ப்பு கூறுகிறது: “இந்திய அரசாங்கமோ, இந்திய விஞ்ஞானிகள் குழுவோ அமெரிக்காவின் வர்ஜீனியாவிலுள்ள யூனியன் கார்பைட் நிறுவனத்தின் பூச்சிக்கொல்லித் தொழிற்சாலையைப் பார்வையிட, ஒரு போதும் அனுமதிக்கப்படவில்லை என்று தோன்றுகிறது. வர்ஜீனியாவிலும் போபாலிலும் உள்ள தொழிற்சாலைகள் இரண்டுமே ஒத்ததன்மை உடையவை என்பதற்கான ஆவணச் சான்றுகள், குற்றம் சாட்டப்பட்டவர்களால் இதுவரை இந்த நீதிமன்றத்திடம் காட்டப்படவில்லை''

4. போபால் நச்சு வாயு வழக்கில் அரசாங்கத் தரப்பு சாட்சிகளிலொருவராக சாட்சியமளித்தவர்களில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அறிவியலாளர் முனைவர் எஸ். வரதராஜன் முக்கியமானவர். போபால் பேரழிவு நடந்த அடுத்த நாள் அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர் குழுவொன்றுடன் அங்கு சென்ற அவர் கண்டறிந்தவை : மெதில் அய்ஸோசைனேட், கார்பன் மோனாக்øஸட் உள்ள திரவமாகும் என்றாலும், அது ஆவியாகி காற்றில் கரையக்கூடியதாகும். கார்பன் மோனாக்சைட் போஸ்ஜீனாக மாறக்கூடியது. மிகவும் நச்சுத்தன்மை கொண்ட மெதில் அய்ஸோசைனேட் திரவத்தை அன்றன்று பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பதற்குத் தேவையான அளவுக்கு மிகக் குறைந்த அளவிலேயே வைத்திருக்க வேண்டுமேயன்றி, மிகப் பெருமளவுக்கு சேமித்து வைத்திருக்கக்கூடாது. மேலும், மெதில் அய்ஸோசைனேட் தானாகவே பாலிமெர்தன்மை பெறுவதைத் தடுப்பதற்கான கருவிகள், எந்திரத் தொழிற்நுட்பங்கள் ஏதும் இந்தத் தொழிற்சாலையில் இல்லை. மெதில் அய்ஸோசைனேட் பாலிமெர்தன்மை பெறுவதால், மிகப் பெரும் வெப்பம் ஏற்பட்டு, வெடி விபத்து அபாயம் ஏற்படும். அந்தத் தொழிற்சாலையின் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட கார்பன், உருக்கு குழாய்கள் போன்றவை போஸ்ஜீன், குளோரோபார்ம் மற்றும் இதர குளோரைடு பொருள்களால் அரிப்புக்கு உள்ளாகியுள்ளன. சுருக்கமாகச் சொன்னால், அந்தத் தொழிற்சாலையின் உற்பத்தித் தொழில்நுட்ப வடிவமைப்பு முழுவதும் பழுதானது என முனைவர் எஸ். வரதராஜன் சாட்சியமளித்துள்ளார்.

bhopal_tragedy_3605. ரசாயனப் பொருள்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து வாஷிங்டனில் உள்ள "ஹெமிஸ்பியர் பப்ளிஷிங் கார்ப்பரேஷன்' என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள வெளியீடொன்றின் (Hazard Assessment of Chemicals) 5ஆம் பாகத்தில், போபாலில் யூனியன் கார்பைட் தொழிற்சாலைக்கு அருகில் நிறுவப்பட்ட அதனுடைய "ஆய்வு மற்றும் வளர்ச்சி மய்ய'த்தில் போர்களில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருள்கள் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டன என்னும் சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த மய்யமும் 1976இல் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலைக் காலத்தில்தான் நிறுவப்பட்டது. அதில் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ரசாயனப் பொருள்களின் எண்ணிக்கை 1980இல் 50 ஆகும். அது 1982இல் 500 ஆக உயர்ந்தது. 1985இல், அந்த மய்யத்தில் 5000 ரசாயனப் பொருள்களைப் பரிசோதனை செய்யப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு முக்கியக் காரணம், அமெரிக்காவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிகள் கடுமையானதாக இருந்ததால், அங்கு அந்த ரசாயனப் பொருள்களைப் பரிசோதனை செய்து பார்க்க முடியாது. ஆக, போபால் பேரழிவிற்கு முதன்மைக் குற்றவாளி இந்திரா காந்தி தான்!

6. இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலைக் காலத்தில் தரக்குறைவான தொழில்நுட்பத்துடனும் வடிவமைப்புடனும் உள்ளே நுழைந்த வாரன் ஆண்டெர்சன் இரண்டாவது குற்றவாளி. மேற்சொன்ன மெதில் அய்ஸோ சைனேட் திரவம் வாயுவாக மாறாமல் இருக்க வேண்டுமானால், அது பூஜ்யம் டிகிரிக்கு குளிர்பதனம் செய்யப்பட்டு வைத்திருக்கப்பட வேண்டும். கோடை காலத்தில் போபாலில் வெப்ப அளவு 40 டிகிரி செல்சியசைத் தாண்டும். போபாலில் உள்ள அந்தத் தொழிற்சாலையில் அந்த வாயுவை குளிர்பதனம் செய்வதற்கான ஏற்பாடுகள் ஏதும் இருக்கவில்லை. குளிர்பதனம் செய்வதற்கான செலவை மிச்சம் பிடிக்க விரும்பியது யூனியன் கார்பைட் நிறுவனம்.

7. போபாலிலுள்ள யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட்  நிறுவன தொழிற்சாலையின் முதல் நிர்வாக இயக்குநர் முனோஸ் என்பவர். இவர் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பதற்கு அன்றன்று தேவையான மெதில் அய்ஸோசைனேட் அளவைவிடக் கூடுதலாக சேமித்து வைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தார் ஆனால், ஒரு ரயில் எஞ்சின் அளவுக்குப் பெரிய தொட்டியில் அது சேமித்து வைக்கப்பட்டது.

8. 1981 டிசம்பர் 24 இல் அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த அஷ்ரப் கான் என்னும் தொழிலாளி, போஸ்ஜீன் கசிந்ததன் காரணமாக மாண்டு போனார். அது குறித்து ஆய்வுகள் செய்ய அமெரிக்காவிலிருந்து வந்த யூனியன் கார்பைட் அறிவியல், தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு, அங்கு 61 வகை நச்சுப் பொருள்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். ஆனால், வர்ஜீனியாவில் உள்ள தொழிற்சாலையில் இருப்பதைப் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதிலாக, யூனியன் கார்பைட் நிறுவனம், தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஆட்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், பயிற்சி நாட்களைக் குறைத்தல் போன்ற "சிக்கனச் சீரமைப்பு' நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்தத் தொழிற்சாலையின் கட்டுப்பாட்டு அறையில் ஒரே ஒரு ஆப்பரேட்டர் மட்டுமே வேலை செய்து வந்தார். எழுபதற்கும் மேற்பட்ட மிகப் பழைய வகை பேனல்கள், இண்டிகேட்டர்கள், கண்ட்ரோலர்கள் ஆகியவற்றை அவர் ஒருவர் மட்டுமே கண்காணிக்க வேண்டியிருந்தது.

மேலும், தொழிற்சாலையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த ஆப்பரேட்டர்கள், தங்களுக்குத் தெரியாத அந்நிய மொழியான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கையேடுகளின் துணை கொண்டே அங்கிருந்த கருவிகளையும் எந்திரங்களையும் இயக்கவும், கட்டுப்பாட்டு அறையைப் பராமரிக்கவும் வேண்டியிருந்தது.

9. இந்தப் பேரழிவுக்குப் பொறுப்பேற்க வேண்டிய மூன்றாவது குற்றவாளி ராஜிவ் காந்தி. வாரன் ஆண்டெர்சன் அமெரிக்காவிற்குத் தப்பியோடியதற்கான முழுப் பொறுப்பும் ராஜிவ்காந்திக்கு உரியதுதான். மத்தியப் பிரதேச முதலமைச்சரோ, தலைமைச் செயலாளரோ, சி.பி.அய். இயக்குநரோ, விமானப் போக்குவரத்துத் துறையோ, வெளி விவகாரத் துறையோ அனைத்தும் இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்திக்குக் கீழ்ப்பட்டவர்கள்தான். தற்பொழுது பகிரங்கமாக்கப்பட்டுள்ள சி.அய்.ஏ. ஆவணங்கள் (declassified documents) ராஜிவ் காந்தியின் ஆணையின் பேரிலேயே ஆண்டெர்சன், விடுவிக்கப்பட்டதாகக் கூறுகின்றன. போபாலிலிருந்து தனி விமானத்தில் புது டெல்லி சென்ற ஆண்டெர்சன் குடியரசுத் தலைவர் ஜியானி ஜெயில் சிங்கை சந்தித்த பிறகே அமெரிக்காவிற்குப் புறப்பட்டார்.

ராஜிவ் ஆட்சிக் காலத்தில் மூன்று ஆண்டு களை எடுத்துக் கொண்டது சி.பி.அய். – யூனியன் கார்பைட் நிறுவனத்தின் மீது வழக்குத் தாக்கல் செய்ய! ராஜிவ்காந்தி இன்னும் ஒரு படி முன் சென்று 1985 இல் "போபால் வாயுக் கசிவுப் பேரழிவுச் சட்டம்' (Bhopal Gas Leak Disaster Act) இயற்றச் செய்தார். "போபால் நச்சு வாயுவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களால் மிகப் பெரும் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடை எதிர்த்து நிற்க முடியாது. எனவே, அவர்கள் பெற வேண்டிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதற்காக அவர்கள் சார்பில் மத்திய அரசாங்கமே சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்' என்று கூறி, பாதிக்கப்பட்ட மக்கள் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதிமன்றங்களில் நேரடியாக வழக்குத் தொடர்வதைச் சாத்தியமற்றதாக்கியது, ராஜிவ்காந்தி அரசாங்கம். வெளிநாட்டு மூல தனம் தங்குதடையின்றி இந்தியாவிற்குள் நுழைவதற்காக பத்தாயிரம், இருபதாயிரம் மனிதக் குருவிகளைப் பலி கொடுப்பது அவருக்கு குற்றமாகப் படவில்லை. அந்தக் குருவிகள் தின்பதற்கான அரிசிக் குருணைகளாக யூனியன் கார்பைட் நிறுவனம், இழப்பீட்டுத் தொகையாக 470 மில்லியன் டாலர் கொடுத்தாலே போதும் என்று ஒப்புக்கொண்டார் ராஜிவ் காந்தி.

10. வாரன் ஆண்டெர்சன் ராஜ மரியாதையோடு டெல்லிக்கு அனுப்ப, ராஜிவ் காந்திக்கு உடந்தையாக இருந்த முன்னாள் மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங், நான்காவது குற்றவாளி. போபால் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு "உதவி செய்ய' அர்ஜுன் சிங் அமைத்த "அறக்கட்டளை'க்கு யூனியன் கார்பைட் நிதி வழங்கியுள்ளதாம்.

11. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அகமதி, அய்ந்தாவது குற்றவாளி. பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற யூனியன் கார்பைட் தொழிற்சாலை நிர்வாகிகள் மீது குறைந்த அளவு பத்தாண்டுச் சிறை தண்டனை வழங்க வழி வகுக்கும் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவின் 304(பி)இன் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கை, இரண்டே இரண்டாண்டு சிறைத் தண்டனை மட்டுமே வழங்கும் பிரிவு 304(ஏ)வின் கீழான வழக்காக மாற்றியதுடன் நிற்காமல், போபால் முதன்மைக் குற்றவியல் நீதிபதி திவாரியின் தீர்ப்பைக் கண்டனம் செய்தவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், “நான் பயணம் செய்து கொண்டிருக்கும் காரின் டிரைவர் யார் மீதாவது காரை ஏற்றிவிட்டால், என் மீதா வழக்குத் தொடர்வது?'' என்னும் மாபெரும் அறவியலையும் போதித்திருக்கிறார்.

12.  2006 – 2007 இல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக இருந்த கமல்நாத், யூனியன் கார்பைட் நிறுவனத்தை விலைக்கு வாங்கித் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ள அமெரிக்க நிறுவனமான "டோ' கெமிக்கல்ஸ், எவ்விதக் குற்ற உணர்வும் இல்லாமல் இந்தியாவில் முதலீடு செய்வதற்காக அதன் மீது கடுமையான நிபந்தனைகள் விதிக்கக்கூடாது என வழக்காடினார். எனவே, அவர் ஏழாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட வேண்டும்.

13. திட்டக் குழுவின் துணைத் தலைவர் மோண்டெக் சிங் அஹ்லுவாலியா, 2006 – 2007 இல் போபால் நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக பேசுவதை விடுத்து, அங்குள்ள தொழிற்சாலையில் இன்னுமுள்ள நச்சுக் கழிவுகளை அகற்றும்படி "டோ' கெமிகல்ஸ் நிறுவனத்தை நிர்பந்திக்கக்கூடாது என வாதாடினார். அவர் எட்டாவது குற்றவாளி.

14. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்கள் அவை உறுப்பினர் அபிஷேக் சிங்வி, டோ கெமிக்கல் நிறுவனத்தின் சட்ட ஆலோச கராக இருந்து கொழுத்த சன்மானம் பெற்றதுடன், போபால் நச்சு வாயுவால் ஏற்பட்ட பேரழிவுக்கு அந்த நிறுவனத்தைப் பொறுப்பாக்கக் கூடாது என்று 2007 இல் மன்மோகன் சிங்கிற்கு தனது லெட்டர் ஹெட்டில் கடிதம் எழுதினார். எனவே, அவரை ஒன்பதாவது குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்.

15. போபால் பேரழிவு நடந்த போது, இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்துவரும், ஆண்டெர்சன் தப்பியோட உதவியவருமான எம்.கே. ரஸ்கோத்ரா பத்தாவது குற்றாவாளி.

16. “போபால் தொழிற்சாலையிலுள்ள நச்சுக் கழிவுப் பொருளை என் கையில் எடுத்துப் பார்த்தேன். ஆனால், நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.  எனக்கு இருமல் வரவில்லை. அந்தத் துயரச் சம்பவம் ஏற்பட்டு 25 ஆண்டுகளாகின்றன. அதை மறந்துவிட்டு ஆக வேண்டிய வேலைகளைப் பார்ப்போம்.'' – 2009இல் இந்த மணிமொழிகளை உதிர்த்தவர், மத்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். இவர் பதினொன்றாவது குற்றவாளி.

17. 1985இல் நியூயார்க் நீதிமன்றத்தில் வாரன் ஆண்டெர்சனையும் யூனியன் கார்பைட் நிறுவனத்தையும் அமெரிக்க நீதிமன்றங்களில் விசாரணை செய்ய வேண்டியதில்லை. இந்திய நீதிமன்றங்களுக்கே போதுமான தகுதி உள்ளது என வழக்காடிய பிரபல வழக்குரைஞர் நானி அர்தேஷிர் பல்கிவாலா, பன்னிரெண்டாவது குற்றவாளி.

18. அமெரிக்காவில் இந்தியத் தூதரக இருந்த காலத்தில், போபால் நச்சு வாயுவுக்கு இரையானவர்கள் பற்றிப் பேசாமல், "டோ' கெமிக்கல் நிறுவனத்தின் அருமை பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்த ரோனென் சென், பதின்மூன்றாவது குற்றவாளி

இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் – முதல் தகவல் அறிக்கையிலும் குற்றப் பத்திரிகையிலும் சேர்க்கப்பட. முக்கியமான இன்னொருவரை மறந்துவிட்டோம். 'India Loves Bush' என்னும் புகழ் பெற்ற வார்த்தைகளை இரண்டாண்டுகளுக்கு முன்பு கூறியவர்; பத்து நாட்களுக்கு முன் “காஷ்மீரின் மனித உரிமை மீறல்களை அனுமதிக்க மாட்டோம்'' என்று கூறியவர்; போபால் தீர்ப்புக்குப் பிறகு நச்சுவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, கார்ப்பரேட் நலன்களைக் காக்கும் ப. சிதம்பரம், கமல் நாத், மு.க. அழகிரி முதலானோர் கொண்ட குழுவை அமைத்துள்ள மாபெரும் மனிதநேயர் மன்மோகன் சிங்; இந்தியாவின் உண்மையான பிரதமர் சோனியா காந்தி; இவர்களை விசாரணை செய்ய ஒரு சிறப்பு நீதி மன்றம் தேவை.

தண்டகாரண்யத்தில் இருப்பது போன்ற கனவு. அதனால்தான் குற்றவாளிகள் பட்டியல், சிறப்பு நீதிமன்றம் என்னும் கற்பனாவாதங்களில் மெய்மறந்து போக வேண்டியதாயிற்று.      

 

Pin It