அறிமுகம்

பண்டிதரின் கொடை

“விகிதாச்சார அரசியல் உரிமைகளுக்கான குரலை எழுப்பியதில், வேறு எந்த பகுதியையும் விட தமிழ்நாடு மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அந்த முக்கிய இடத்தைப் பெற்றுத்தந்தவர் பண்டிதர் அயோத்திதாசர். இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத 69 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி, பலனடைந்து வரும் தமிழ்ச்சமூகம், அந்த புரட்சிகரச் சிந்தனையாளரை சாதியக் கண்ணோட்டத்துடன், புறந்தள்ளி, நன்றிகெட்ட செயலைச் செய்து வருகிறது என்பதே இந்நூலின் அடிப்படை வாதமாகும்.''

கவுதம சன்னா, பக்கங்கள் : 92, விலை : ரூ. 50, கலகம் வெளியீட்டகம், சென்னை - 600 002

பேசி : 98845 95489

நெருப்பாய் வாழ்ந்தவன்

“முத்துக்குமார் மொட்டவிழ்ந்து நெருப்பு மலராய் விரிந்த கதையை சுருக்கமாக வரைந்துள்ளார் நூலாசிரியர். முத்துக்குமாரின் உள்ளத்துறைந்த உண்மை ஒளிக்குச் சான்றான அவரின் கவிதைகளும், அவர் ஒப்படைத்துச் சென்ற எழுத்தாயுதமாம் இறுதி மடலும், அவரைப் பற்றி ஈழப் பாவலர்கள் புதுவை ரத்தினதுரையும் காசிஆனந்தனும் எழுதிய கவிதைகளும், அவரது இறுதி மடல் குறித்து தோழர் கலைவேலு எழுதிய ஆய்வுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.''

ஆ.கலைச்செல்வன், பக்கங்கள் : 160, விலை : ரூ. 60, தமிழ்த்தேசம், சென்னை - 600 094, பேசி : 044 - 23610603

ஆனாலும் தமிழ்நாட்டைப் பாராட்டலாம்!

“மூன்று லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் செலவிடப்பட்டு போடப்பட்டுள்ள நெடுஞ்சாலைகளால், பட்டியல் இனத்தவர்க்கு என்ன முன்னேற்றம் வந்துற்றது? பல்லாயிரம் கோடிகள் செலவிடப்படும் மின் உற்பத்தி நிலையங்களால், பட்டியல் இனத்தவர்க்கு என்ன கூடுதல் சக்தி வந்து விட்டது? ரூ. 30,060 கோடி வரிச்சலுகை ஏற்றுமதியாளர்க்குத் தரப்பட்டதில் பட்டியல் இனத்தவர்க்கு என்ன ஏற்றம் வந்துவிட்டது?''

பக்கங்கள் : 128, நன்கொடை : ரூ. 50, துடி இயக்கம், சென்னை - 600 117, பேசி : 98847 92933

ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி

“உண்மையில் உலகம் பார்த்துக் கொண்டிருக்க, இலங்கை அரசானது, வேண்டுமென்றே, வெளிப்படையாக, வெட்கமின்றி எந்த அடிப்படைக் காரணமுமின்றி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை வன்னியில் படுகொலை செய்தது. இலங்கையில் வாழும் தமிழர்களைப் போல இனப்படுகொலைக்கு ஆளான மக்கள், தாங்கள் மேலும் அழிவதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி - தங்களுக்கென ஒரு சுதந்திர அரசை நிறுவுவதே.''

டப்ளின் தீர்ப்பாய தீர்ப்பு, பக்கங்கள் : 64, விலை : ரூ. 30, புதுமலர் பதிப்பகம், ஈரோடு - 638 004, பேசி : 94433 07681

திரிக்குறளும் - திருக்குறளும்

“அயோத்திதாசர் சுட்டிக்காட்டியதைப் போல் திரிக்குறளில், ஆரிய பார்ப்பன உரையாசிரியர்களால் திரிபு உரைகள் மிகுந்துள்ளன. முன்னூறுக்கும் மேற்பட்ட குறள்கள் அவர்களால் உரை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும் தமிழறிஞர்கள், ஆரியர்களின் உரைமாற்றத்தை ஆய்ந்தறிந்து, திரிக்குறளின் உண்மைப் பொருளை உலக மக்கள் அறியச் செய்ய வேண்டும், பாரோர் அறிய பரப்ப வேண்டும். அதற்கான தூண்டுகோலே இச்சிறுநூல்.''

தமிழ்மறையான், பக்கங்கள் : 132, விலை : ரூ. 75, புத்தர் அறிவுலகம், சென்னை - 600 083, பேசி : 044 - 24890347

உத்தப்புரங்களும் சாதியத்தின் அந்தப்புரங்களும்

“உத்தப்புர விவகாரம் வெடித்துக் கிளம்பிய போது, ஊடகங்கள் இரு கூறாகப் பிரிந்து நின்றன. உண்மை, நடுநிலை என்றெல்லாம் கூறிக் கொள்ளும் பல பத்திரிகைகள், ஆதிக்கச்சுவரை இடிக்கவிட மாட்டோம் என்று அடம்பிடித்து சிலர் மலையேறியபோது, அவர்களின் பின்னால் சென்று அவர்களுக்கு ஆதரவாக கொடிபிடித்தன. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை - இந்நூல் உரத்துப் பேசுகிறது.''

ப. கவிதா குமார், பக்கங்கள் : 96, விலை : ரூ. 50, கயல் வெளியீட்டகம், மதுரை - 625 002, பேசி : 94438 56163

Pin It