நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் முதல் பணியாக உளவுத் துறையின் அவதூறுகளை பதினைந்து நிமிடங்கள் கேட்டுவிட்டு, தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குகிறார் இந்தியப் பிரதமர். இந்நாட்டு ஊடகங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பொதுப்புத்தியை எவ்வாறு அரசின் விருப்பத்திற்கேற்ப தகவமைக்கின்றன என அடுக்கடுக்காய் நாம் இதுவரை கேட்டிராத செய்திகளை, இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிவு செய்திருக்கிறார், எஸ்.எம். முஷ்ரிப். மாலெகவ்னில் உள்ள பிகு சதுக்கத்தில் 29 செப்டம்பர் 2008 அன்று, ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். நூறு பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இது ‘சிமி' என்ற முஸ்லிம் இயக்கத்தின் சதி என அரசு உடனே அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனை பத்திரிகைகளில் படித்துவிட்டு, இதுதான் உண்மை என மக்கள் நம்பினர். ஆனால், இது போன்ற நேரங்களில் அதற்கு மேல் சிந்திக்காமல், நாம் அனைவரும் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பி விடுகிறோம். சிலர் மட்டுமே இது சார்ந்த செய்திகளை முனைப்புடன் படிக்கிறோம். அத்துடன் நம் அரசியல் முனைப்பு அணைந்து விடுகிறது.

ஆனால், இதுபோன்ற சம்பவங்களுக்குப் பிறகு இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த நகரங்களில் ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. முதலில் அரசு எந்த விசாரணையும் இன்றியே முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளின் பெயர்களை வெளியிடுகிறது. அது பெரும்பாலும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஹுஜி, சிமி என நீளும். அதன் பிறகு குண்டு வெடிப்பு நிகழ்ந்த நகரத்தில் வசிக்கும் பல முஸ்லிம் இளைஞர்களையும் கைது செய்து, விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கும். இப்படிப்பட்ட துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்காகவே, பல்வேறு சட்டங்கள் இந்நாட்டில் இயற்றப்பட்டுள்ளன.

மாலெகவ்னில் சில வழக்கங்கள் முதன் முறையாக மீறப்பட்டன. குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் கிடந்தது. அது MH 15 - 4572 எண்ணுடைய LML Freedom வண்டி. இந்த இரு சக்கர வாகனத்தை வைத்து விசாரணையை தொடங்கினார், மகாராட்டிர தீவிரவாத ஒழிப்புப் படையின் தலைவர் ஹெமந்த் கர்கரே. வண்டியின் எண்ணும், சேசிஸ் எண்ணும் மாற்றப்பட்டிருந்தது. விசாரணை அத்தனை எளிதாக இல்லை. இருப்பினும், அந்த ஊரில் உள்ள வண்டியின் விநியோகஸ்தரிடம் இருந்த ஆவணங்களை வைத்து, வண்டியின் உரிமையாளரை விசாரணைக் குழு கண்டுபிடித்தது. அது, சாத்வி பிரக்நயா தாக்குரின் (38) வண்டி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால் இவர் இந்த வழக்கில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, அந்த இரு சக்கர வாகனத்தை மனோஜ் சர்மா என்பவருக்கு விற்றதுபோல் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. மனோஜ் சர்மா, ஆர்.எஸ்.எஸ்.அய் சேர்ந்தவர். மத்தியப் பிரதேசத்தின் மோஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரைக் கொன்ற வழக்கில் இவர்தான் முக்கியக் குற்றவாளி. இதனை அடுத்து சாத்வி பிரக்ந்யா தாக்குரை தீவிர விசாரணைக்கு உட்படுத்திய போது பல உண்மைகள் வெளிவந்தன. பல பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இவர்களுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு சாத்வி பிரக்நயா தாக்குர், பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் முக்கியத் தலைவி. அதன் பிறகு அவர் வி.எச்.பி.யின் மகளிர் அமைப்பான ‘துர்கா வாகினி'யின் முன்னணித் தலைவியாக இருந்தார். மேலும் விசாரணை பல தளங்களில் தொடர்ந்தது.

முன்னாள் ராணுவ வீரர்களின் ஆர்.எஸ்.எஸ். பிரிவு தலைவர் ரமேஷ் உபாத்யாயாவுக்கு இருந்த தொடர்பு வெளிப்பட்டது. அவர்தான் இந்த குண்டு வெடிப்புக்கான ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தை கொடுத்தவர். சமீர் குல்கர்னி என்பவர்தான் இந்த குண்டிற்கான அடிப்படை ரசாயனங்களை கொடுத்திருந்தார். நாசிக்கில் உள்ள போன்சலா மிலிடரி பள்ளியின் முக்கியப் பொறுப்பாளரான முன்னாள் ராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னிதான், ஆர்.டி.எக்ஸ்.அய் பயன்படுத்தும் முறைகள் குறித்த பயிற்சியை அளித்திருந்தார். முன்னாள் ராணுவத் தளபதி ஷெலெஸ் ரைக்கர்தான் இந்த குண்டு வெடிப்பிற்கான மொத்த நிதி உதவியையும் செய்திருந்தார். அடுத்துதான் முக்கியத் திருப்பம் நிகழ்ந்தது. இதனை ஹெமந்த் கர்கரேயின் முக்கிய வேட்டை எனலாம்.

இந்திய ராணுவத்தைச் சேர்ந்த தளபதி பிரசாத் புரோகித் நவம்பர் 4, 2008 அன்று கைது செய்யப்பட்டார். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய ஆதரவாளர்; செயல்பாட்டாளர். அவர்தான் இந்த மாலெகான் குண்டு வெடிப்பு திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர். இதனை அவர் விசாரணையில் ஒப்புக்கொண்டார். மேலும், அவர் பல முகாம்களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பல்வேறு துணை அமைப்புகளின் முக்கியத் தொண்டர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பு சார்ந்த பயிற்சிகளை கொடுத்து வந்ததையும் விரிவாகவே ஒப்புக் கொண்டார். அவருடைய மடி கணினியில், இது தொடர்புடைய அத்தனைத் தகவல்களும் இருந்தன. பயிற்சி எடுத்துக் கொண்ட 58 பேரின் பட்டியல் என இது தொடர்பான விசாரணைக்குப் பல புதிய பரிமாணங்களை அது அளித்தது.

தளபதி பிரசாத் புரோகித்துக்கும் ரமேஷ் உபாத்யாயாவுக்கும் இடையே நடைபெற்ற கைபேசி உரையாடல்கள், குறுஞ்செய்திப் பரிமாற்றங்கள் எனப் பல புதிய சாட்சியங்கள் கிடைத்த வண்ணம் இருந்தன. அடுத்து ‘அபினவ் பாரத்'தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுதாகர் சதுர்வேதியிடம் பல துப்பாக்கிகளும், பல போலியான இந்திய ராணுவத்தினரின் அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் மிகவும் கறாராக இருந்தவர் ஹெமந்த் கர்கரே. பல அழுத்தங்கள் அவர் மீது வந்த பொழுதிலும் அசராமல் தன் மனசாட்சிப்படி உண்மையை அதன் அசல் நிறத்தில் காண வேண்டும் என்கிற அவரது திண்மம் அசைக்க முடியாததாக இருந்தது.

நரேந்திர மோடி முதல் பல ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வரை தினமும் ஹெமந்த் கர்கரேயை வசை பொழிந்தார்கள். தேச துரோகி என்றார்கள். ஆனால், அவரோ சிரித்த முகத்துடன் விசாரணையை நடத்திச் சென்றார். இந்த சூழலில் ஹெமந்த் கர்கரே, மும்பை தாக்குதல்கள் நடைபெற்ற அன்று இரவு சி.எஸ்.டி. - காமா - ரங்க்பவன் தெருவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இரண்டு முக்கிய காவல் துறை அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இந்த மூவரையும் தீவிரவாதிகள்தான் கொன்றனர் என இந்த நாடே நம்ப வைக்கப்பட்டது. இது குறித்து பலரும் அந்த நேரமே தங்கள் அய்யங்களைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில்தான் ஹெமந்த் கர்கரே கொல்லப்பட்டார் என்பதை ஆதாரங்களுடன் நிறுவும் பணியில் களம் கண்டிருக்கிறார் மகாராட்டிரத்தின் முன்னாள் காவல் துறை அய்.ஜி.யான எஸ்.எம். முஷ்ரிப். நாட்டையே உலுக்கிய தேல்ஜி பத்திர ஊழலை, இந்த நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அவர். முஷ்ரிப் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள முக்கியமான ஆங்கில நூல்தான் ‘கர்கரேயை கொன்றது யார்?' (Who killed Karkare?). நாட்டையே உலுக்குகிற ஒரு முக்கிய விஷயத்தில் அதன் மொத்தப் புரிதலையும் மாற்றி அமைக்கிற ஆற்றல், இந்நூலுக்கு இருக்கிறது என்றால் மிகையல்ல.

அடிப்படையில் முஷ்ரிப் ஒரு எழுத்தாளர் அல்ல. காலமெல்லாம் அவர் ஓர் அரசு நிர்வாகியாகவே பணியாற்றியவர். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், துணிச்சலுடன் இத்தகைய பெரும் நூலை ஆவணமாக்கியிருப்பது நமக்கு பெரும் வியப்பை அளிக்கிறது. நூல் நெடுகிலும் ஆசிரியர் மனதில் இழையோடும் ஒருவித பதற்றத்தையும், அச்சத்தையும் உணரமுடிகிறது. இந்திய அதிகார வர்க்கம் மற்றும் உளவுத் துறைக்கு இருக்கும் மட்டற்ற அதிகாரம், அவரை அச்சுறுத்துகிறது. அதனாலேயே பல இடங்களில் இந்நூலின் ஆவணங்களை தொகுக்கும்போது, சில பார்வைகளை அழுத்தமாக முன் வைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் ஆசிரியர் மவுனமாகவே இருக்கிறார். இந்நூலுக்குள் இருக்கும் ஆவணங்களை அடிப்படையாக வைத்து, மேலும் பல ஆய்வுகளை செய்யவும், பல நூல்களை எழுதவும் இடம் இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் பத்து ஆண்டுகளில், இந்தியாவின் உளவுத்துறையை பார்ப்பனர்கள் கைப்பற்றி விட்டனர். இன்றுவரை பார்ப்பனர்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் எந்தெந்த வழிகளில் எல்லாம் இந்த நாட்டில் பிரிவினையை விதைத்து, சிறுபான்மையினரை அடிமைகளாக மாற்றி, இங்கு ஓர் இந்து ராஷ்டிரத்தை நிறுவ முயன்று வருகின்றனர் என்பதை நூலாசிரியர் மிகுந்த ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

2006 இல் மும்பை - நாந்டேட் குண்டு வெடிப்புகள், 2007இல் உத்திரப்பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் தொடர்குண்டு வெடிப்புகள், 2008 இல் மாலெகவ்னில் என இந்தியாவின் பல பகுதிகளில் வெடிக்கும் குண்டுகள் எல்லாம் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டு வைத்து விட்டு, பழியை முஸ்லிம் அமைப்புகள் மீது சுமத்தி விடுகிறது என்பதை ஆதாரங்களுடன் பத்திரிகை செய்திகள் ஊடாக, விவரணைகளுடன் அசாத்தியமாக நிறுவுகிறார் முஷ்ரிப்.

இந்தியாவில் உளவுத்துறையும், ஊடகங்களும் பார்ப்பனர்களால் வழி நடத்தப்படுகின்றன என்கிறார் முஷ்ரிப். அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில், அந்த தாக்குதல்களை அமெரிக்க அரசின் உளவுத் துறையான சி.அய்.ஏ. செய்ததது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்கவும், எண்ணெய் வளத்தை அபகரிக்கவும், அமெரிக்காவிற்கு ஒரு தொடக்கப்புள்ளி தேவையாக இருந்தது. அதற்காகத்தான் அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை செய்தது என ராணுவ ஆய்வாளர்கள் பலரும் ஆதாரங்களுடன் தெரிவித்து வருகின்றனர்.

அதைப் போலவே மும்பை தாக்குதலைப் பற்றி பல அய்யங்களை முஷ்ரிப் இந்த நூலில் எழுப்புகிறார். அவருடைய சந்தேகங்கள் மிக முக்கியமானவை. தீவிர ஆய்வுகளை கோருபவை. சி.எஸ்.டி. ரயில் நிலையத்தில் இருந்த 16 சி.சி.டி.வி. காமிராக்கள் எப்படி ஒரே நேரத்தில் செயலிழந்தன? கிடைத்த சில பதிவுகளைக் கூட அழித்தவர்கள் யார்? தாக்குதல் தொடுத்தவர்கள் எப்படி சரளமாக மராத்திய மொழியில் பேசினார்கள் என அடுக்கடுக்காய் சந்தேகங்கள் எழும்பிய வண்ணம் உள்ளன.

இந்த தாக்குதல்கள் கர்கரேயை கொல்வதற்காகவே திட்டமிடப்பட்டனவா? என்று கூட, நமக்கு இந்நூலை வாசிக்கையில் சந்தேகம் எழுகிறது. ஆர்.எஸ்.எஸ். இன் 45 ஆயிரம் கிளைகள் மற்றும் 44 ஆயிரம் ‘ஷாகா'க்களில் நடக்கும் வன்முறைப் பயிற்சிகளை எல்லாம் கணக்கில் கொண்டால், இம்மண்ணில் தீவிரவாதத்தை வளர்க்கும் இந்து அமைப்புகளின் மீது தீவிர கண்காணிப்பை செலுத்த வேண்டும். ஆனால் உளவுத்துறையே அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பல மாநிலங்களில் காவல் துறை, சமூக நலத்துறை எனப் பல முக்கிய அரசுத்துறைகளில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஊடுருவி வரும் செய்தி, கடந்த 15 ஆண்டுகளாக நம் காதில் வந்து விழுந்த வண்ணம் உள்ளன.

இந்நூலை வாசித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு செய்தி, இந்த புத்தகம் கோருகிற புரிதலுடன் நிகழ்ந்தது. பிப்ரவரி 24, 2010 அன்று சூரத் நகரத்தின் மாநில காவல் துறை தீவிரவாத தாக்குதல் நடந்தால், நம் படைகள் அதனை எதிர்கொள்ள இயலுமா என ஒத்திகை நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தது. பொதுவாக ஒத்திகை நிகழ்வு என்றால், ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டாலும் அதில் எந்த வித வெடிபொருளையும் நிரப்ப மாட்டார்கள். ஆனால் அன்று நிகழ்ந்த அந்த ஒத்திகையின் போது, சூரத் நகர உதவி காவல் துறை ஆணையர் சுபாஷ் சதுர்வேதி என்பவர், அந்த ஒத்திகையில் பங்கு பெற்ற தீவிரவாத ஒழிப்புப் படையின் ஆய்வாளர் சாபிரிலி சையத் என்பவரை, இரண்டு முறை தனது துப்பாக்கியால் சுட்டார். பெரிய ஊடகப் பதிவுகள் கூட இல்லாமல், அது ஒரு விபத்து என பிரச்சனை முடிக்கப்பட்டுவிட்டது. இந்த துப்பாக்கிச் சூடு பல முக்கிய கேள்விகளை எழுப்புகிறது.

டிசம்பர் 2008 கோத்ரா இனப்படுகொலையில், இந்து அமைப்புகளும் மோடியின் மாநில அரசும் எவ்வாரெல்லாம் செயல்பட்டார்கள் என்பதை ‘தெகல்கா' புலனாய்வுப் பதிவுகள் அம்பலப்படுத்தின. அதனைத் தொடர்ந்து மாலெகான் புலனாய்வின்போது, கர்கரே மீண்டும் புதிய கோணங்களில் சங்பரிவாரை தோலுரித்துக் காட்டினார். நாந்டேட், மாலெகான், ‘தெகல்கா' என இந்த செய்திகள், ஊடகங்களில் தொடர்ந்து புழங்கிய காலகட்டத்தில்தான் ‘இந்து தீவிரவாதம்' என்ற சொல்லாடலின் பயன்பாடு தொடங்கியது. ஆங்கில அச்சு ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்கள், இச்சொல்லாடலை அழுத்தமாகப் பயன்படுத்தத் தொடங்கின. இந்த வார்த்தைப் பயன்பாடுதான்-இந்து சங்பரிவாரை கொதிநிலைக்கு இட்டுச் சென்றது. பலநாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுத்தானே தீருவான்! இந்த நிலையில் அவர்களது முதல் இலக்கு மாலெகான் விசாரணையை தடுத்து நிறுத்துவதாக இருந்தது. அதற்காக, எல்லாவித செயல்பாடுகளிலும் அவர்கள் களமிறங்கத் துணிந்தனர்.

நூலை வாசிக்கையில் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட தில்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் கிலானியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. அவர் ஒரு முறை தனது கட்டுரை ஒன்றில் இப்படி எழுதினார்: ‘‘நான் உளவுத்துறையை, அதன் நடவடிக்கைகளை மிக நெருங்கி இருந்தே பார்த்திருக்கிறேன். அவர்களுடன் அமர்ந்து உரையாடும் பொழுது, நான் ஓர் அரசு அலுவலகத்தில் இருக்கும் உணர்வே எனக்கு ஏற்பட்டதில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருப்பதைப் போலவே உணர்ந்திருக்கிறேன்.'' 
- அ.முத்துக்கிருஷ்ணன்
- அ.முத்துக்கிருஷ்ணன்
Pin It