நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா.... என்று கவுண்டமணி ஒரு படத்தில் கூறுவதுதான் ஆளுநரின் பேச்சைக் கேட்கும்போது நமக்கு நினைவுக்கு வருகிறது. மீண்டும் சனாதனம் பற்றி அவர் வாய் திறந்து இருக்கிறார்.  சனாதனத்தின் அடிப்படை வேதத்தில் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளதோடு சனாதனத்திற்கு அடிப்படை வேதம் தான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஒரு கேள்வி, சனாதனத்தின் கருத்து வேதத்தில் இருக்கிறது என்பதற்கு வேதத்தில் ஏதாவது சான்றுகள் இருக்கிறதா?  வேதத்தின் எந்த கருத்து சனாதனத்தில் இடம் பெற்றிருக்கிறது என்பதை ஆளுநரால் கூற முடியுமா? வேதத்தில் சனாதனம் என்ற ஒரு சொல் கூட கிடையாது என்பது ஆளுநருக்குத் தெரியுமா? இதற்கெல்லாம் அவரிடம் பதில் இல்லை. நமது பாரதம் ஏதோ ஒரு ராஜாக்களால் உருவாக்கப்பட்டது இல்லை, அது சனாதன தர்மத்தாலேயே உருவாக்கப்பட்டது என்று அவிழ்த்து விடுகிறார்.  ஒரு தர்மமே ஒரு தேசத்தை உருவாக்கி விட்டதாம், அதை நாம் நம்ப வேண்டுமாம். காதில் பூ சுத்திக் கொண்டு இருக்கிறார்.

நம்முடைய ரிஷிகளும், முனிவர்களும் சனாதனத்திற்கு அளப்பறிய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள் என்றும் அவர் பேசியிருக்கிறார். யார் இந்த முனிவர்கள், யார் இந்த ரிஷிகள், வெறும் கற்பகைக் கதாப்பாத்தரங்கள். இவர்கள் வரலாற்றுப் பாத்திரங்கள் அல்ல. கற்பனைகளால் கூறப்பட்ட கதாப்பாத்திரங்களை வரலாற்று நாயகர்களாக மாற்றுவது ஆளுநரின் வேலையா? அப்படியானால், இந்தியாவிற்கு ராஜா என்று ஒருவர் இல்லை  என்று கூறுவது உண்மையானால் இந்த பாரதத்திற்கு  ‘பாரத்’  என்று இவர்கள் ஏன் பெயர் சூட்டுகிறார்கள்?

பரதன் என்ற மன்னன் ஆட்சி காலத்தில்தான் பாரத தேசம் முழுவதும் ஒன்றாக இருந்தது எனவே இது பாரததேசம் என்று கூறி வந்தவர்கள் இப்போது மன்னர்களே இந்த நாட்டை உருவாக்கவில்லை என்று கூறுவதில் இருந்து இவர்கள் இதுவரை கூறியது எல்லாம் கற்பனையா? கட்டுக்கதையா? இதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

தமிழ்நாட்டில் சனாதனம் பற்றி ஒரு இலட்சம் கல்வெட்டுகள் இருக்கிறது என்று கூறுகிறார் ஆளுநர். இந்த ஒரு இலட்சம் கல்வெட்டுகள் இருக்கிறதா? இல்லையா? என்பது கல்வெட்டு ஆய்வாளர்களுக்கே புரியாத விஷயம். இருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கிற பல கல்வெட்டுகள் பல மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு சதுர்வேத மங்களங்களையும் நிலங்களையும் வழங்கியதையும், வரி விதிப்பில் இருந்து சலுகைகள் வழங்கியதையும் தான் குறிக்கிறது. ஆக, பார்பனர்களுக்கு கொட்டி அழுததைத் தான் இந்த கல்வெட்டுகள் கூறுகிறது. இவைகள் எல்லாம் சனாதன கல்வெட்டுகள் என்று கூறியதன் மூலம் பார்ப்பனியம் தான் சனாதனம்  என்பதை முழுமையாக ஆளுநர் ஒத்துக் கொள்கிறாரா?

இன்னொரு கதையையும் அவர் அவிழ்த்துவிட்டு இருக்கிறார். ஜி20 மாநாடு என்பது சனாதன மாநாடுதான். டெல்லியில் இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு கூடி சனாதனத்தைப் பற்றி பேசியிருக்கின்றன என்று கூறியிருக்கிறார். ஜி20 மாநாடு வெளியிட்ட பிரகடனத்தில் சனாதனம் என்ற ஒரு வார்த்தைக் கூட இடம் பெறவில்லை. ஆனால் அவைகள் சனாதனத்தைப் பேசுவதாக ஆளுநர் கூறுகிறார். சனாதனத்தை ஒழிக்கவே முடியாது என்றும் அவர் கூறுகிறார். ஒழிக்கவே முடியாத சனாதனத்திற்காக ஆளுநார் மாளிகையில் இருந்து ஏன் இவர் இப்படி கதறிக் கொண்டு இருக்க வேண்டும்? பதற வேண்டும்? உதயநிதி ஸ்டாலின் மீது ஏன் இப்படி வழக்குகளை போட வேண்டும், அவர் தலைக்கு விலை வைக்க வேண்டும்?

இவர்கள் சுற்றி வளைத்து பேசுவதெல்லாம் என்னவென்றால், இது பார்ப்பனிய நாடு, பார்ப்பனியத்திற்கு ஆதியும் கிடையாது, அந்தமும் கிடையாது, காலம் காலமாக பார்ப்பனியர்கள் தேசமாகவே இருந்து கொண்டு இருக்கிறது எனவே இரு எங்கள் நாடு என்று உரிமைக் கொண்டாடவே சனாதனம் என்ற போர்வைக்குள் இவர்கள் பதுங்கிக் கொண்டு கதைவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It