Poverty

இரு நாகரிகங்களுக்கு (இந்திய, அய்ரோப்பிய) இடையிலான உயிர்ப்புள்ள தொடர்புதான், இரு நாகரிக நிலைகளின் ஒப்பீட்டு நோக்கில், இங்கு நிலவு கின்ற சமூக வழக்கங்கள் பலவற்றை மறு மதிப்பீடு செய்யவும், அதன் விளைவாக அவற்றுள் பலவற்றைச் சமூகக் கேடுகள் என்று உணரவும் உதவியாக அமைந்தது. வேறெந்தக் காரணிகளையும் விட, இது ஒன்றுதான் நமது நாட்டை மறுமலர்ச்சிப் பாதையில் செலுத்த உதவியுள்ளது. பிரிட்டிஷார் இங்கு வேரூன்றியிருக்கா விட்டால், ஒரே அரசு முறை, ஒரே சட்ட முறை எனும் மாபெரும் நன்மையை இந்தியா அடைந்திருக்க முடியாது.

இவை இரண்டும் நாட்டின் நலத்திற்கு வலிமை வாய்ந்த கருவிகளாகும். குறிப்பாக, இந்திய நாட்டிற்கு இவற்றின் மதிப்பு அளவிட முடியாதது. இவையே இந்திய மண்ணில் இந்திய தேசியம் வேரூன்றியதற்கான நிலையை உருவாக்கி உதவின. அவை ஆழமாக ஊடுருவி, நிலையான ஆட்சி அமைப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கின. இவை மட்டுமின்றி நாணய முறை, சாலைகள், கால்வாய்கள் இருப்புப் பாதைகள், அஞ்சல் துறை முதலான நவீன நாகரிகத்தின் சாதனங்களை இந்நாட்டுக்குத் தரத் தவறிவிட்டார்கள் என்றும் அவர்களைக் குறை கூற இயலாது.

25. இவையனைத்தும் உண்மையே. ஆனால் இதற்கு நாம் கொடுத்த விலை என்ன? பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்திய இனத்தையே சிதறடித்து, முடக்க வைக்கும் முயற்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதில் அய்யமில்லை. காலஞ்சென்ற திரு. கோகலே கூறியுள்ளது போல, ""நமது வாழ் நாள் முழுவதும் நாம் தாழ்வான சூழ்நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டி யுள்ளது. நம்மில் மிக உயர்ந்தவர்கள்கூட வளைந்து குனிய நேரிடுகிறது.'' தன்னாட்சி சமூகங்களில் இயல்பாகக் காண முடிகின்ற, மேலேற முன்னேறும் உந்துதலை இந்தியர் எவராலும் உணர முடிவதில்லை. நாட்டுக்குத் தன்னாட்சி வேண்டுமெனும் கோரிக்கைக்கு ஆதரவாக, மேலாதிக்க வகுப்பினர் வைக்கும் அறவியல் வாதங்களை நாம் ஏற்றுப் போற்ற முடியாது என்பதுடன் அவை நமக்கு வெறும் வேடிக்கையாகவே தோன்றலாம்; அவை சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்ற தன்மையுடையவையே.

Ambedkarஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு நாம் கொடுத்த விலையோ, நமது வளங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் மகத்தானது. உலகிலேயே மிக விலையுயர்ந்த அரசு எனில் அது இதுவே. இந்த வாதம் ஒருவேளை உங்களுக்கு ஏற்பில்லாததாக இருக்கலாம். இந்த நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிக் காப்பதற்காக எந்த விலையையும் கொடுக்கலாமென்று உங்களுக்குத் தோன்ற லாம். ஆனால் நீங்கள் ஒப்புக்கொள்ள மறுக்க வியலாத காரணம் (விலை) ஒன்றுண்டு; அது, இந்திய மக்களின் வறுமை நிலையாகும். உலகத்தின் எந்தவொரு பகுதியிலாவது இந்திய மக்களின் ஒப்பான வறுமை நிலையை காண முடியுமா?

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி அசைக்க முடியாமல் நிறுவப்பட்டு விட்ட 19 ஆம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டில் மட்டும் அய்ந்து முறை பஞ்சம் விளைந்து, அதனால் 10 லட்சம் மக்கள் இறந்து விட்டனர். அதன் இரண்டாம் கால் நூற்றாண்டில் இரண்டு பஞ்சங்களில் 4 லட்சம் மக்கள் மடிந்து விட்டனர். மூன்றாம் கால் நூற்றாண்டில் ஆறு பஞ்சங்களால் 50 லட்சம் மக்கள் மாண்டு விட்டதை நமது பதிவுகள் எடுத்துரைக்கின்றன. அந்நூற்றாண்டின் இறுதிக் கால் பகுதியில் நாம் காண்பது என்ன? பதினெட்டு பஞ்சங்களும் அவற்றின் விளைவாக 1 கோடியே 50 லட்சம் முதல், 2 கோடியே 60 லட்சம் வரையிலான மக்கள் மடிந்திருக்கக் கூடும் எனும் மதிப்பீடுதான். மேலும் பல மக்கள் (60 லட்சத்திற்கும் மேலாக) அரசு தந்த அற்பப் பிச்சைகளால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடியவர்கள், இக்கணக்கில் சேர்க்கப்படவில்லை.

பெரியோர்களே! இவற்றுக்கெல்லாம் காரணம் என்னவென்று நீங்கள் கருதுகிறீர்கள்? தெளிவாகக் கூறுவதெனில், பிரிட்டிஷ் அரசு இங்கு திட்டமிட்டுக் கடைப்பிடித்த கொள்கைகள்தான் காரணம். இந்த நாட்டில் தொழிலையும் வணிகத்தையும் வளர விடாமல் நசுக்கி யொடுக்குவதே பிரிட்டிஷ் அரசின் கொள்கையாக இருந்து வந்தது. இது, வெறும் ஊகத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் குற்றச்சாட்டு அன்று. இந்தியா எப்பொழுதுமே பிரிட்டிஷ் பண்டங்களுக்குத் திறந்த சந்தையாகத்தான் விளங்க வேண்டும் என்பது, பிரிட்டிஷாரால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட கொள்கையாகும்.

இந்தியாவை நெடுங்காலத்திற்கு ஏழ்மை பூமியாய் ஆழ்த்தி வைத்திருந்தது இந்தக் கொள்கைதான். இவ்வாறு திட்டமிட்டு ஏழ்மையாக்கப்பட்ட நிலையில் மிகவும் அதிகமான துன்பங்கள் சுமத்தப்பட்ட மக்கள் யார்? வேளாண்மைத் தொழிலாளர்களில் பாதிப் பேருக்கு மேல், ஓர் அரையாண்டு இறுதியிலிருந்து மறு அரையாண்டு இறுதிவரை, முழு உணவு என்றால் என்ன என்பதையே அறிந்திராதவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் மிகப் பெரும் பகுதியினர் தாழ்த்தப்பட்ட மக்களே என்பதைத் துணிந்து கூறுவேன். அவர்களது மிக மோசமான ஏழ்மை நிலையே அவர்களை எளிதில் பஞ்சங்களுக்குப் பலியாக்கிவிடும். பஞ்சங்களில் பலியானவர்களில் பெரும்பாலானோர் இம்மக்களே. இவர்கள் உங்கள் மக்களெனில், இவர்கள் நலனில் உங்களுக்கு அக்கறை இருக்குமெனில், நெஞ்சைப் பிளக்கும் இவ்வுண்மைகளின்பால் நீங்கள் கண் மூடியிருந்துவிட முடியாது.

இவற்றையெல்லாம் மறந்துவிட்டு, மேம்பட்ட சாலைகளைத் தந்தார்கள்; அறிவியல் அடிப்படையில் கால்வாய் வெட்டினார்கள்; இருப்புப் பாதை அமைத்தார்கள்; மலிவான அஞ்சல் முறை ஏற்படுத்தினார்கள்; மின்னல் வேகத் தந்தி முறை தந்தார்கள்; நாணயத்தை நிலைப்படுத்தினார்கள்; எடைகள், அளவீடுகளை முறைப்படுத்தினார்கள்; இறையியல், புவியியல், வானவியல், மருத்துவம் முதலிய துறைகளில் கருத்துக்களை நன்கு திருத்தினார்கள்; நாட்டுப் பூசல்களை ஒழித்தார்கள் என்றெல்லாம் ஆட்சியாளர்களின் புகழ்பாடிக் கொண்டே இருந்துவிட முடியாது.

சட்டம் ஒழுங்கைப் பேணி நிலை நிறுத்துதல் பாராட்டுதற்குரியதுதான். ஆனால் பெரியோர்களே! சட்டம் ஒழுங்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட, நாட்டு மக்கள் அனைவரின் வாழ்க்கைக்கும் போதாது. இதைவிடத் தேவையானது உணவு அல்லவா? மாற்றவொண்ணாத வாழ்க்கை நியதிக்கேற்ப, நாட்டின் பொருளா தார வளத்தை மேம்படுத்தி, அதன் வாயிலாகத் தங்கள் பொருளாதார வாழ்வையும் வளம் ஊட்டி மேம்படுத்தவல்ல அரசாங்கமே தேவை என்ற கோரிக்கையை தாழ்த்தப்பட்ட மக்களும் முன்வைக்கத் தூண்டுகிறது.

மக்களின் வறுமை நிலைக்கு உற்பத்திக் குறைவே காரணம் என்றும், அதற்குக் காரணம் ஏற்றத்தாழ்வுகளுடன் செல்வ வளம் பகிர்ந்து கொள்ளப்படாதது அல்லவா என்றும் உங்களில் சிலர் கேட்கக்கூடும். இந்நாட்டு ஏழை மக்கள் பெரும்பாலானோர் அரும்பாடுபட்டுச் சம்பாதிக்கும் அற்பக் கூலித் தொகை களில், இந்நாட்டு நிலக்கிழார்கள் மற்றும் முதலாளிகளின் கொத்திப் பிடுங்கும் கொள்கைகளோடு ஒப்பிடுகையில், இந்நாட்டு மக்களால் ஆங்கிலேயருக்கு அனுப்பப்படும் ஆண்டுக் கப்பம் மிகச் சிறிதே என்பதை ஏற்றுக் கொள்பவர்களில் நான் முதல் வரிசையில் இருப்பேன். ஆனால், நிலக்கிழார்கள், முதலாளிகள் ஆகியோரின் கடும் பிடியிலிருந்து பிரிட்டிஷ் அரசு உங்களை விடுவிக்குமென்று நீங்கள் எதிர்பார்ப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பேராசிரியர் டைசி கூறுவது போல, எந்தவொரு வலிமைமிக்க அரசும்கூட, இரு கடுமையான வரம்புகளால் கட்டுண்டிருக்கும் என்பதை மறக்கலாகாது.

முதலாவதாக, ஆட்சியமைப்பில் இடம் பிடித்துள்ளோர் யார் என்பதையொட்டி அவர்களது மனப்பான்மை, நலன்கள், நோக்கங்கள் ஆகியவற்றையொட்டிய அக வரம்புகள்; பிரிட்டிஷ் அரசு இந்திய சமூகத்தில் செயல்படும் சக்திகளுக்குப் பரிவு காட்டாமல் அவர்களுடைய குறிக்கோள், கல்வி, தன்னாட்சி ஆகியவற்றுக்கு எதிராக இருக்கிறது எனில், இச்சலுகைகளைத் தர அவர்களால் இய லாது என்பது காரணமன்று. இவை அவ்வாட்சியின் தன்மை, குறிக்கோள், நலன் ஆகியவற்றுக்கு எதிராக இருப்பதே காரணம். ஆட்சிக்குத் தடையாயிருக்கும் இரண்டாவது வரம்பு புற எதிர்ப்பே.

இந்திய சமூகத்தை அழித்துத் தின்னும் சமூகக் கேடுகளை அகற்றக் கோருவதன் அவசியத்தை அரசு உணராமலா இருக்கிறது? நிலக்கிழார்கள் ஏழை மக்களைக் கசக்கிப் பிழிவதை இந்திய அரசு அறியாமலா இருக்கிறது? முதலாளிகள் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைக்கான கூலியும், ஒழுங்கான பணிச் சூழலையும் அளிக்கவில்லை என்பது, அரசுக்குத் தெரியாதா என்ன? தெரிந்தும் இத்தீமைகள் எதையும் அகற்றுவதற்கு அரசு துணியவில்லையே ஏன்? இதற்கான சட்ட அதிகாரம் அரசிடம் இல்லையா? காரணம் அதுவல்ல. நாட்டின் சமூக வாழ்வில் தற்பொழுது நிலவும் சமூக, பொருளியல் நெறிமுறைகளில் குறுக்கிட்டு மாற்றங்களை விளைவிக்க முற்பட்டால், அதற்குக் கடுமையான சமூக எதிர்ப்பு கிளம்பும் என்று அரசு அஞ்சுவதே உண்மையான காரணம். இப்படிப்பட்டதொரு அரசால் யாருக்கு என்ன நன்மை இருக்க முடியும்? இப்படி இருவகைப் பின் னடைவுகளால் கட்டுண்ட அரசுக்கு, மக்களுக்கு நல்லது செய்யும் பணிகளில் ஈடுபடுவது அரிதே.

இந்நாட்டு மக்களின் நலனில் முழுமையான அக்கறை கொண்டுள்ள – மக்களின் கையில் அதிகாரம் கிடைக்கும் அரசு மட்டுமே நமக்கு தேவை. எந்தக் கட்டத்தில் கீழ்ப்படிவது நின்று, எதிர்ப்பு தொடங்கும் என்பதை அறிந்து, மக்களுக்குத் தேவைப்படும் சமூக, பொருளாதார சீர்திருத்தங்களை அவற்றின் அவசரத் தேவையுணர்ந்து அஞ்சாமல் செயல்படுத்தும் உறுதி வாய்ந்தவர்கள் கையில் அதிகாரம் கிடைக்கும் ஓர் அரசே நமது தேவை. இத்தகையதொரு செயல்பாட்டு நிலையை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து நாம் ஒருபோதும் எதிர்பார்க்க இயலாது. இதை மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களின் அரசாலேயே செய்ய முடியும் என்பது உறுதி. அத்தகைய அரசு, தன்னாட்சியுள்ள அரசு ஒன்றுதான்.

– தொடரும்