இந்தியாவின் வரலாறு, ஆரியர்களுடன் தொடங்குவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இந்த நாட்டுக்குள் நுழைந்து, இந்நாட்டைத் தங்கள் வாழ்விடமாக்கிக் கொண்டு -தங்களின் பண்பாட்டை இங்கே நிலை நாட்டினார்கள். உண்மையில், ஆரியரல்லாதாரைவிட ஆரியர்கள் உயர்ந்தவர்கள் என்ற பெருமை பேசப்பட்ட போதிலும், வரலாற்றில் குறிப்பிடும்படியாக ஆரியர்களின் அரசியல் சாதனை எதுவும் காணப்படவில்லை...

இந்தியாவின் அரசியல் வரலாறு, நாகர்கள் எனப்படும் -ஆரியரல்லாத மக்களின் எழுச்சியுடன் தொடங்குகிறது. இவர்கள் ஆற்றல் மிக்க மக்களாயிருந்தார்கள். ஆரியர்களால் இவர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. முஸ்லிம் படையெடுப்பாளர்கள், இந்து மதத்தின் புறச் சின்னங்களான கோயில்கள், மடங்கள் போன்றவற்றைத்தான் அழித்தார்கள். அவர்கள் இந்து மதத்தை வேருடன் களைந்து எறிந்து விடவில்லை. மக்களின் ஆன்மீக வாழ்க்கையை நெறிப்படுத்திய தத்துவங்களையும் -கோட்பாடுகளையும் அவர்கள் அழித்து விடவில்லை. ஆனால், பார்ப்பனியப் படையெடுப்பு அப்படிப்பட்டதல்ல.

ஒரு நூற்றாண்டுக் காலமாக பவுத்தத்தால் ஆன்மீக வாழ்க்கையின் உண்மையான தத்துவங்கள் என்று போதிக்கப்பட்டு, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வாழ்க்கை முறையாகப் பின்பற்றப்பட்டு வந்த கோட்பாடுகளை அது முற்றிலுமாக மாற்றிவிட்டது. பார்ப்பனியம் தனது படையெடுப்புகளின் மூலம் புத்த மதத்தை வேருடன் அழிப்பதற்கான அரசியல் அதிகாரத்தைப் பெற்றது: அவ்வாறே அழித்தும் விட்டது. இஸ்லாம், இந்து மதத்தை வெளியேற்றி விடவில்லை. இஸ்லாம், தான் மேற்கொண்ட பணியை ஒரு போதும் முழுமையாகச் செய்யவில்லை. ஆனால், பார்ப்பனியம் அவ்வாறு செய்தது. அது, புத்த மதத்தை வெளியேற்றிவிட்டு -அதனுடைய இடத்தில் தான் (இந்து மதம்) அமர்ந்து கொண்டது.

இந்தியாவின் பண்பாடு, வரலாறு நெடுகிலும் ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. பார்ப்பனியம், புத்த மதம், ஜைன மதம் ஆகியவையெல்லாம் வெவ்வேறு விதமான சட்டங்களே என்றும், அவற்றினிடையே அடிப்படையான முரண்பாடுகள் இருந்ததில்லை என்றும் கருதப்படுகிறது. இரண்டாவதாக, இந்திய அரசியலில் எத்தகைய போராட்டங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், அவையெல்லாம் அரசியல் போராட்டங்களே! அதாவது ஆட்சியாளர்களிடையே நடந்த போராட்டங்களே என்றும், அவற்றுக்குச் சமூக, ஆன்மீக முக்கியத்துவம் எதுவும் இல்லை என்றும் கருதப்படுகிறது.

இதுபோன்ற தவறான கருத்துக்களால்தான், இந்திய வரலாறு எந்திர ரீதியாக ஒரு வம்சத்தை அடுத்து மற்றொரு வம்சமும், ஒரு மன்னனை அடுத்து இன்னொரு மன்னன் ஆட்சிக்கு வருவதைப் பட்டியலிடுவதாகவும் எழுதப்பட்டு வந்துள்ளது. இத்தகைய மனப்பான்மையும், வரலாறு
எழுதும் முறையும் மாறுவதற்கு வழி, மறுக்க முடியாத இரண்டு உண்மைகளை ஒப்புக் கொள்வதாகும்:

1. பொதுவான இந்தியப் பண்பாடு என்று ஒன்று எப்போதும் இருந்ததில்லை என்பதையும், வரலாற்று ரீதியாக -"பார்ப்பனிய இந்தியா', "பவுத்த இந்தியா', "இந்து இந்தியா' என்று மூன்று இந்தியாக்கள் -ஒவ்வொன்றும் தனக்கெனச் சொந்தமான தனிப்பண்பாடுகளைக் கொண்டிருந்தன என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

2. முஸ்லிம் படையெடுப்புகளுக்கு முந்தைய இந்தியாவின் வரலாறு -பார்ப்பனியத்திற்கும், பவுத்தத்திற்கும் இடையே நடைபெற்ற கடுமையான போராட்டத்தின் வரலாறு என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு உண்மைகளையும் ஒப்புக் கொள்ளாதவர் எவரும், இந்தியாவின் உண்மையான வரலாற்றை, அதில் ஊடுறுவி நிற்கும் ஆழ்ந்த பொருளையும் -நோக்கத்தையும் வெளிக்கொணருகின்ற வரலாற்றை எழுத முடியாது.

டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 3. பக் : 267


Pin It