எதிர்பார்த்ததுதான் நடக்கிறது; இலங்கையில் இராஜபக்சே வீழ்த்தப்பட்டு, மைத்ரிபாலா சிறிசேனா அதிபராக்கப்பட்டதன் பின்னணியைத்தான் குறிப்பிடுகிறோம். ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலையையும் அவர்களின் நியாயமான தமிழீழ கோரிக்கையையும் அப்படியே மூடி மறைத்து, இறுதிப் பயணத்துக்கு அனுப்புவதற்கு இந்த ஆட்சி மாற்றத்தைப் பயன்படுத்தக் கூடும் என்பதே உலகத் தமிழினத்துக்கு எழுந்த சந்தேகம்; இது உண்மைதான் என்பதை அரசியல் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசின் “போர்க் குற்றங்கள்” குறித்து (கவனிக்க: இனப்படுகொலை அல்ல) அய்.நா.வின் மனித உரிமைக் குழு எதிர்வரும் மார்ச் மாதம் நடக்கும் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க இருந்தது. இப்போது செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டுவிட்டது. இதை அறிவித்திருப்பவரே அய்.நா.வின் மனித உரிமைக் குழு ஆணையர் சையத் ராய் அல்ஹுசேன்தான்.

புதிய ஆட்சி இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க முன் வந்திருப்பதால், அவர்களுக்கு அதற்கான காலத்தை வழங்கிட வேண்டும் என்பதே, அவர் கூறியுள்ள காரணம், அய்.நா. மனித உரிமைக்குழுவின் இந்த அறிக்கை “போர்க் குற்றமீறல்” என்பது குறித்தே இருந்தாலும்கூட, இதற்கு சர்வதேசப் பார்வையில் மிகவும் முக்கியத்துவம் உண்டு. காரணம், ஈழத்தில் நடந்த போர்க்குற்றம் - இனப் படுகொலைகள் குறித்து அய்.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் என்று இதுவரை ஒன்றுகூட கிடையாது. (அய்.நா. முன்னாள் செயலாளர் பான்கி மூன் நியமித்த மூவர் குழு அறிக்கைகூட அய்.நா.வின் ஏற்பு பெற்ற ஆவணம் அல்ல) அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடியதாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆவணம், இப்போது முடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் இந்தியாவும் இந்த முடக்கத்துக்கு தங்கள் இசைவை வழங்கிவிட்டன என்று ‘இந்து’ ஆங்கில நாளேடு (பிப். 17, 2015) எழுதுகிறது. சிறீலங்காவின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமர வீரா, அமெரிக்க அரசு செயலாளர் ஜான்கெர்ரியை கடந்த ஜன. 8 ஆம் தேதி சந்தித்துப் பேசியிருக்கிறார். புதிய அரசு, போர்க் குற்ற விசாரணைக்கு நம்பகத்தக்க அளவில் கதவைத் திறந்திருக்கிறது என்று அமெரிக்க வெளியுறவு செயலாளரும் வெளிப்படையாகவே கூறிவிட்டார். அய்.நா. மனித உரிமைக் குழுவின் அறிக்கை ஏன் முடக்கப்பட்டது என்பதற்கான காரணம் இப்போது புரிந்திருக்கும்.

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அண்மையில் புதுடில்லி வந்திருக் கிறார். அவர் மோடியை சந்தித்த நாளில்தான் அய்.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கையும் வந்திருப்பதை, இணைத்தே பார்க்க வேண்டியிருக்கிறது.

போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணையைத் தவிர, சர்வதேச விசாரணை எதையும் தமது அரசு ஏற்காது என்று சிறிசேனா திட்டவட்டமாக அறிவித்துவிட்ட நிலையில், அதற்கு அய்.நா.வும் உடன்பட்டு விட்டதாகவே தெரிகிறது. மனித உரிமை ஆணையத் தலைவரின் இந்த அறிவிப்பு இந்த சந்தேகங்களை எழுப்புகின்றன.

இந்தப் பின்னணியில் ‘போர்க்குற்ற விசாரணை’களை எதிர்நோக்கியிருக்கும் சிறீலங்கா அரசுடன் மோடி, அணுசக்தி மற்றும் இராணுவம் தொடர்பான ஒப்பந்தங்களை நிறைவேற்றிக் கொண்டு கைகுலுக்குவது தமிழினத்துக்கு இழைத்துள்ள பச்சைத் துரோகம்.

இன்னமும் தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தை விலக்குவது குறித்தோ, அவ்வப்போது சடங்குத்தனமாக பேசிவரும் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்தோ பேசாமல் வாயை இறுக மூடிக் கொண்டுவிட்டார்கள். எந்தப் பிரச்சினையுமே இல்லாத ஒரு நட்பு நாடு என்ற பார்வையோடு இந்த ஒப்பந்தங்கள் உருவாகியிருக்கின்றன.

இந்தப் பின்னணியில் வடக்கு, கிழக்கு மாகாண கவுன்சில், கடந்த பிப்.10ஆம் தேதி நிறைவேற்றியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தைக் குறிப்பிட வேண்டும். முதல்வர் சி.வி. விக்னேசுவரன் அவையில் கொண்டுவந்து நிறைவேற்றிய அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கம், சர்வதேச கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. “சிறீலங்காவில் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள், தமிழர்கள் மீது ‘இனப்படுகொலை’களையே கட்டவிழ்த்துவிட்டிருப்பதால், அய்.நா. மனித உரிமை ஆணையம் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றவாளிகளை தண்டிக்க பரிந்துரைக்க வேண்டும் என்று அந்த தீர்மானம் கூறுகிறது.

வடக்கு மாகாணத்தில் தமிழர்களால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியின் இனப்படுகொலையை உறுதி செய்யும் இந்தத் தீர்மானம்தான் உண்மையான உலகத் தமிழர்களின் ஒருமித்த குரலாகும். தமிழர்கள் குறித்து, சர்வதேச அரங்கில் “பேசும் அதிகாரம்” பெற்றிருப்பதும், வடக்கு மாகாண ஆட்சிதான். இந்தத் தீர்மானத்தை விவாதப்படுத்திவிடாமல், ‘கள்ள மவுனத்தால்’ கடந்து சென்றுவிடவே இந்திய பார்ப்பனிய ஆட்சி சதி செய்கிறது.

இந்த சூழலில் இதுவரை பல்வேறு குழப்பங்களேடு முரண்பாடுகளான கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டும் தங்களுக்குள்ளான மாறுபாடுகளை வெளிப்படுத்திக் கொண்டும் அணி பிரிந்து கிடந்த சர்வதேச தமிழர்களுக்கும் தமிழகத்தில் ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகளுக்கும் வடக்கு மாகாண கவுன்சிலின் இந்தத் தீர்மானம் ஒளி விளக்காகும்.

இந்த தீர்மானத்தை ஆயுதமாக்கி, அதை இயக்கமாக்க வேண்டியது அவசியம் என்று வற்புறுத்துகிறோம். ஏற்கெனவே மனித உரிமை மீறல்கள் குறித்து அய்.நா.வின் விசாரணையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய வடக்கு மாகாண கவுன்சில், இப்போது அடுத்த கட்டமாக, உரிய நேரத்தில் ‘இனப்படுகொலை’யை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, ‘ஒரு வரலாற்றுத் திருப்பம்’ என்றே கூற விரும்புகிறோம்.

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் அரசியல் களத்துக்கு வந்து நிற்கும் எதார்த்தத்தைப் புரிந்து அரசியல் நகர்வுகளை தொடங்க வேண்டும். அறிவு முதிர்ச்சியும் அரசியல் புரிதலுமே ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான படிக்கற்களாக இருக்க வேண்டும். கற்பனைவாத உணர்வுகளில் மூழ்கிக் கிடப்பது சுய உணர்வுக்கு தீனி போடுமே தவிர சுதந்திரத்தை மீட்டுத் தராது!

Pin It